நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 28, 2014

மார்கழிக் கோலம் 13

குறளமுதம்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (096)

நலன் தரும் நல்ல சொற்களைப் பேசுவதால்
பாவங்கள் தேய்ந்து அறம் பெருகி வளரும்.

நலன் தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் 
நாராயணா எனும் நாமம்!.. 

நலங்கொள் நாமம் நம சிவாயவே!..
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 13


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *
ஆலய தரிசனம்
திருவெள்ளியங்குடி


மூலவர் - க்ஷீராப்தி நாதன், கோலவில்லி ராமன்
தாயார் - மரகதவல்லி
உற்சவர் - சிருங்கார சுந்தரன்


ஸ்ரீவிமானம் - புஷ்கலாவர்த்த விமானம்
கிழக்கு முகமாக புஜங்க சயனத் திருக்கோலம்.
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சுக்ர தீர்த்தம்.
தலவிருட்சம் - செவ்வாழை.

பிரத்யட்க்ஷம் - பிரம்மன், இந்திரன், சுக்ரன்
மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார்

மகாபலியின் மீது - சுக்ராச்சார்யாருக்கு கோபம் வந்தாலும் அவனை எண்ணிப் பரிதவித்தார்.

வந்திருப்பவன் மாயக் கள்ளன் அல்லவா!.. இதைச் சொன்னாலும் இந்த அரக்கன் கேளாச் செவியனாக இருக்கின்றானே!?.. வாமனன் கேட்டபடி தானம் கொடுத்து விட்டால் அதன் பிறகு என்னவெல்லாம் நடக்குமோ!?.. இதை எப்படியாகிலும் தடுத்தே ஆக வேண்டும்!.. - என்று முனைப்பாக சிந்தித்தார்.

இதோ ஆயிற்று. வேத மந்திரங்களைச் சொல்லியபடி மாவலியும் அவன் மனையாளும் - வந்திருக்கும் வாமனன் மனம் மகிழும்படி - தானம் தருவதற்கு ஆயத்தமாகி விட்டனர். 

ஒரு துளி நீர் விழுந்தாலும் போதும். அத்தனையும் சரியாகப் போய்விடும். இனியும் தாமதிக்கக் கூடாது - என எண்ணிய சுக்ராச்சார்யார், சட்டென ஒரு வண்டாக உருமாறி தாரை வார்க்கும் கிண்டிக்குள் விழுந்தார்.

கிண்டியின் தாரையை அழுத்தமாக அடைத்துக் கொண்டது வண்டு!..

நடந்தது புரியாமல் - திகைத்தான் மாவலி - நீர் வரவில்லையே?.. - என்று.

எல்லாம் அறிந்திருந்த எம்பெருமான் - புன்னகைத்தான். யாகசாலையில் கிடந்த தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து கிண்டியிலிருந்து நீர் வழியும் தாரைக்குள் குத்தினான். 

சுருக்!.. என குத்தப்பட்டதால் சுக்ராச்சார்யார், வெடுக்.. எனப் பாய்ந்து வெளியே வந்து விழுந்தார்.

எந்தவிதக் குறையுமின்றி வாமனன் கேட்ட மூன்றடி மண்ணைத் தானமாகத் தந்தான் மாவலி!.. 

ஈரடியால் மண்ணையும் விண்ணையும் அளந்த பரந்தாமன் மூன்றாவது அடி வைப்பதற்குத் தன் தலையையே தந்து இறவாப் புகழ் கொண்டான்.

ஆனால், அசுரகுரு சுக்ராச்சார்யாருக்கோ - வலக்கண் பறிபோனதுடன் தானத்தைத் தடுத்த தகாத செயலால் தீராப் பழியும் வந்து சேர்ந்தது.

அனைத்தையும் அவன் நடத்தி வைக்கும் போது -  இடையில் புகுந்த தனது மடைமையை எண்ணி வருந்தினார்.

தனது பிழைக்கு வருந்திய அசுரகுரு - ஹரிபரந்தாமனையே சரணடைந்தார்..

ஹரிபரந்தாமனும் சுக்ராச்சார்யாரின் தவத்துக்கு இரங்கி - பழுதான கண்ணில் பார்வை கொடுத்து அருளினன்.


நவக்கிரக மண்டலத்தில் வெள்ளி எனப்படும் சுக்ராச்சார்யார் தவமிருந்ததால் - வெள்ளியங்குடி என்றானது. பார்க்கவ க்ஷேத்ரம் எனவும் வழங்கப்படும்.

மூலஸ்தானத்தில் - எம்பெருமான் ஆதிசேஷன் மீது கிடந்த திருக்கோலத்தில் சுதை மூர்த்தியாகத் திகழ்கின்றான்.


பெருமானைத் தரிசிக்க வந்த தேவ தச்சனான மயன் - இலங்காதிபதி இராவணனை வென்ற திருக்கோலத்தினைக் காட்டியருளுமாறு வேண்டிக் கொண்டான். 

மயனின் பொருட்டு - தனது சங்கு சக்கரங்களைக் கருடனிடம் கொடுத்துவிட்டு ஸ்ரீதேவி பூதேவி அருகிருக்க - ஸ்ரீகோலவில்லி ராமனாக திருக்காட்சி நல்கினான்.


கருடனும் பெருமாளிடமிருந்து பெற்ற சங்கு சக்ரங்களுடன் திகழ்கின்றான்.

அனைத்து வைபவங்களும் சிறப்புற நிகழ்கின்றன.

மூலஸ்தானத்தில் திகழும் அணையா விளக்கு - சுக்ரன் என்பதாக ஐதீகம்.

கும்பகோணத்திலிருந்து வெள்ளியங்குடிக்கு நகர பேருந்து இயங்குகின்றது. ஆயினும் பேருந்து வசதி குறைவு. சோழபுரத்திலிருந்து ஐந்து கி.மீ., ஆட்டோவில் செல்லலாம்.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்.

பார்வையிழந்த சுக்ரன் இத்தலத்தில் பார்வை பெற்றதால் - பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வேண்டிக் கொள்வதற்கு சிறந்த தலம்.

காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கடல ரக்கர்தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீ ழ்ந் தனவுண்டு மண்டி
சேற்றிடைக் கயல்களுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளியங்குடி அதுவே!..(1343)
திருமங்கைஆழ்வார் - பெரியதிருமொழி/நான்காம் பத்து/பத்தாம் திருமொழி.

மார்கழியின் இளங்காலைப் பொழுதில் 
ஸ்ரீகோலவில்லி ராமனைத் தியானிப்போம்.

புறக் கண்களொடு அகக் கண்களும் திறக்க அருள் புரிவான்!..
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 12


ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருக்கொள்ளம்புதூர்இறைவன் - வில்வவனேஸ்வரர்
அம்பிகை - சௌந்தரநாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

தலப்பெருமை

காவிரியின் தென்கரையில் உள்ள பஞ்ச ஆரண்யங்களுள் ஐந்தாவது வனம். வில்வ வனம் - என்ற சிறப்பினை உடையது.

வில்வத்தின் மறுபெயர் கூவிளம் என்பதாகும்.


அதனையொட்டி கூவிளம் புதூர் என வழங்கப்பட்டு காலப்போக்கில் கொள்ளம் புதூர் என்று ஆயிற்று.

பாண்டிய நாட்டில் சைவ சமயத்தைத் தழைக்கச் செய்த ஞானசம்பந்தப் பெருமான் சோழவளநாட்டிற்கு எழுந்தருளினார்.

அப்போது அகத்தியர், வசிஷ்டர், காசியபர் முதலான தவயோகிகள் வழிபட்ட திருத்தலமாகிய கூவிளம் புதூரைத் தரிசிக்க விழைந்தார்.

ஸ்வாமிகள் வருகை தந்த நேரம் முன்னிரவுப் பொழுது. மழைக்காலம் வேறு. 

முள்ளியாறு எனப்பட்ட அகத்திய காவிரியில் ஆற்று வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. 

அங்கும் இங்குமாக ஓடம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள் - சூழ்நிலைக்கு அஞ்சி - ஓடத்துறையில் கட்டிப் போட்டு விட்டு அவரவர் வீட்டுக்குப் போய் விட்டனர்.

சலசலக்கும் ஆற்றின் ஓசையை அன்றி வேறு அரவமின்றிக் கிடந்தது ஓடத்துறை. 

ஓடக்காரர் இல்லாமல் அக்கரைக்குச் செல்வது எப்படி!?..

உடன் வந்த அடியார்கள் திகைத்தனர். 
சம்பந்தப்பெருமானோ - சிவனருளைச் சிந்தித்தபடி புன்னகைத்தார்.

ஒரு ஓடத்தில் வந்திருந்தோரை ஏறிக்கொள்ளுமாறு சொல்லி விட்டு தாமும் ஏறிக் கொண்டார். ஓடக் கயிற்றை அவிழ்த்து விடும்படி அடியார்களுக்குப் பணித்தார். 

பெருமானின் வாக்கினை சிரமேற்கொண்ட அடியார்களும் அவ்வண்ணமே செய்தனர். 

வெள்ளப் பெருக்குடன் வேகமாகப் பாய்கின்றது முள்ளியாறு. 

அடியார்களோ - அக்கரையில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லவேண்டும். 

இனி என்ன நடக்கும்!..

சம்பந்தப்பெருமானின் திருக்கரங்களில் இருந்த பொற்றாளங்கள் முழங்கின!.. காந்தார பஞ்சமத்தில் திருப்பதிகம் பிறந்தது.

கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையால் தொழ
நல்கு மாறருள் நம்பனே!..

அந்த அளவில்,  ஓட்டுவார் யாருமின்றி ஆற்றின் குறுக்காக - ஓடம் செல்லத் தொடங்கியது.

நீரைக் கிழித்துக் கொண்டு - திருப்பதிக ஓலை எதிர் சென்ற அதிசயத்தை பாண்டிய நாட்டின் திருஏடகத்தில் கண்டு மெய்சிலிர்த்த அடியார்கள் - 

இன்று சோழ வளநாட்டில் ஆற்று வெள்ளத்தின் குறுக்காக ஓடம் - அதுவும் ஓட்டுவார் இன்றிச் செல்வதைக் கண்டு அதிசயித்தனர்..

ஹரஹர.. மகாதேவா!.. - என வியந்து வாழ்த்தொலி எழுப்பினர்.

திருப்பதிகத்தின் ஒவ்வொன்றாக மலர்கின்றன. ஓடம் அசைந்தாடியபடி அக்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. 

அவ்வேளையில், வெள்ளப் பெருக்கைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஊரார் 
ஆற்றின் குறுக்காக ஓட்டுவார் இன்றி ஓடம் வருவதைக் கண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரித்தனர். 

ஓடம் கரைசேர்ந்த வேளையில் எங்கும் பிரகாசமாகப் பேரொளி!..


கயிலாயத்திருக்காட்சி!. சிவகணங்கள் மங்கல கோஷங்களை எழுப்பினர்.

வானில் ரிஷபாரூடராக அம்மையப்பன்!.. 

அப்போது தான் கரையில் கூடியிருந்த மக்கள் - வந்திருப்பவர் திருஞான சம்பந்தப் பெருமான் - என உணர்ந்து ,

என்ன புண்ணியம் செய்தனம்!.. என்று அம்மையப்பனையும் சம்பந்தப் பெருமானையும் வணங்கி வழிபட்டு நின்றனர்.

அன்று நிகழ்ந்த அற்புதம் - இன்றும் ஓடத் திருவிழாவாக ஐப்பசி அமாவாசை தினத்திற்கு அடுத்தநாள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

விநாயகப்பெருமான் சிவபூஜை செய்த சிறப்பினை உடையது இத்திருத்தலம்.
அர்ச்சுனன் - காண்டீப தீர்த்தத்தினை உண்டாக்கி வழிபட்டிருக்கின்றனன்.

ஐந்து நிலைகளைஉடைய கம்பீரமான ராஜகோபுரம். அழகான திருக்கோயில் 

விநாயகரின் திருப்பெயர் - பொய்யாத விநாயகர்.

அம்பிகை பெயருக்கேற்றபடி - சௌந்தர்ய நாயகியாக விளங்குகின்றாள்.

திருக்கருகாவூர் - முல்லை வனம் - உஷத் கால தரிசனம்
அவளிவநல்லூர் - வன்னி வனம் - காலை சந்தி தரிசனம்
ஹரித்வார மங்கலம் - பாதிரி வனம் - உச்சி கால தரிசனம்
ஆலங்குடி - பூளை வனம் - அந்திக் காப்பு தரிசனம்

- என்ற வரிசையில்,

கொள்ளம்புதூர் - வில்வ வனம் - அர்த்த ஜாம தரிசனம் சிறப்புடையது.

பிறவி எனும் பெருவெள்ளத்தைக் கடக்க பேரருள் புரிவர்
சௌந்தர்ய நாயகியும் வில்வாரண்யேஸ்வரனும்!..

ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையால் தொழ
நல்கு மாறருள் நம்பனே!.. ( 3/6)
திருஞானசம்பந்தர். 

திருச்சிற்றம்பலம்.
* * *

14 கருத்துகள்:

 1. நலம் தரும் நல்லச் சொற்களையே பேசுவோம்
  அருமையான வார்த்தைகள் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 2. குறளோடு ஒவ்வொரு பகிர்வும் அற்புதம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 3. வணக்கம் ஐயா!..

  தங்களின் இவ்வரிய பணியை என்னவெனச் சொல்வது!..
  தேட வேண்டிய அவசியமே இல்லாது
  நாடிக் கொண்டுவந்து தந்துள்ளீர்கள்!..

  அதை நாம் கண்டு பலன் பெறுதலே பேறுதான்..
  அற்புதம் ஐயா இன்றைய பதிவும்!

  தொடர்ந்திங்கு வந்து படித்திட முடியாது இடையிடையே
  கால நேரம் கைவராமற் போகிறது வருத்தமே!..

  தொடருங்கள் உங்கள் பணியை!.. நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   வாழ்க நலம்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 4. அனைத்தும் எமக்கு புதிதான விசயங்கள் நண்பரே நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 5. வெள்ளியங்குடி , கொள்ளம்புதூர் கோவில்களை மீண்டும் உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன்.
  மிக அருமையாக எழுதுகிறீர்கள். புராண வரலாறுகளை.
  நன்றி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வாழ்க நலம்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 6. அன்புள்ள ஐயா.

  வணக்கம். தங்களின் தொடர்க் கட்டுரைகள் மிகவும் பயனானவை. இக்காலத்தின் மிக அவசியமான ஒன்றாக அது எனக்குப் படுகிறது. என்னுடைய சிறிய கருத்து என்னவெனில் இப்படியான கட்டுரைகளை அந்தந்த ஆன்றோர் மொழிநடையை விடுதது உங்களின் நடையில் எளிமையாக சொல்ல முடியாதா? முடியும் உங்களால். ஏனென்றால் இதனைப் படிக்கும் வாசகர்கள் தஙகளின் குழந்தைகளையும படிக்க வைப்பதற்குரிய வழியாக அது நீளும் என்பது என்னுடைய கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களைப் பதிவில் கண்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது.

   திருமுறைகளைப் படித்து - அவற்றைச் சிந்திப்பதால் -
   அந்த அடியொற்றியே எழுதுகின்றேன்..

   தங்களது கருத்துரையை ஏற்றுக் கொள்கின்றேன்..
   நல்லோர்களின் அறிவுரை என்னை வழி நடத்துமாக!..
   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஆலய தரிசனங்கள் அருமை...
  அழகான படங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..