நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 31, 2019

ஏழூர் தரிசனம் 4

திருச்சோற்றுத்துறை திருவேதிகுடியில் பல்லக்குகளைத் தரிசனம் செய்வதற்குச் செல்வோர்களாலும்

திருச்சோற்றுத்துறை திருவேதிகுடியில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு
திருக்கண்டியூருக்குச் செல்வோர்களாலும் அந்தச் சாலை பரபரப்பாக இருந்தது...

இதற்கிடையில் - வயதானவர்களை ஏற்றிக் கொண்டு ஏழூர் தரிசனம் செய்விக்கும் ஆட்டோக்களும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தன...

பொழுது விடிந்ததில் இருந்து வரிசையாக பல்லக்குகள் வந்து - தங்கி - புறப்படும் வரை இந்த வட்டத்திலுள்ள எல்லாக் கோயில்களும் நடை திறந்தேயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...

திருவேதிகுடியிலிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கெல்லாம் திருக்கண்டியூர் வீரட்டத்தை அடைந்து விட்டோம்...


சப்த ஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது திருத்தலம்...

இவற்றுள் மேற்கு நோக்கிய திருக்கோயில் இது மட்டுமே...

கடன் வறுமை நீக்கும் ஐந்து திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம்...

பிரமனின் ஆணவம் அழியும்படிக்கு
ஐந்தாவதாக இருந்த சிரம் அரியப்பட்டதால்
ஈசனின் அட்ட வீரட்ட தலங்களுள் இத்தலமும் ஒன்றாகின்றது...

கண்டியூர் வீரட்டத்திற்கு எதிர்புறம் சற்றே தென்புறமாக
திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்...

திருக்கண்டியூர் வீரட்டத்தில் -
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 13,14,15 ஆகிய மூன்று நாட்களிலும் மாலை நேரச் சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்வது கண்கொள்ளாக் காட்சி...

ஆனாலும் -
விரிவாக்கம் என்ற பெயரில் சாலையின் மட்டம் உயர்த்தப்படுவதும் எதிர்புறம் தேவையற்ற ஆக்ரமிப்புகளும் பிரச்னைகளாகின்றன...


வெளிச் சுற்றும் உள் சுற்றுமாக சற்று பெரியகோயில்...

கருவறையில் ஸ்ரீ பிரம்மசிரக்கண்டீஸ்வரராக விளங்கும் இறைவனைத் தரிசிக்க நீண்ட வரிசையில் அன்பர்கள் காத்துக் கிடந்தனர்...

அடியாரொடு அடியாராக நின்று சிவதரிசனம் செய்து விட்டு
சந்நிதியின் வடபுறமாக துர்கையின் கோட்டத்துக்கு அருகில்
புன்னகை தவழ வீற்றிருக்கும் நான்முகனையும் தேவி சரஸ்வதியையும்
தரிசனம் செய்தோம்...


கருவறையின் பின்புறம் திருச்சுற்று மண்டபத்தில் நடுவில் அபூர்வமான கலைப்படைப்பாக அமர்ந்தநிலையில் மாதொருபாகன்...


இப்போது யாரும் அருகில் நெருங்க முடியாதபடிக்கு கம்பித் தடுப்பு வைத்திருக்கின்றார்கள்...திருச்சுற்றில் வலம் வந்து வெளிப்புறம் ஸ்ரீமங்களாம்பிகையின் தரிசனம்...


ஸ்ரீமங்களாம்பிகை 
வெளியூர்களிலிருந்து சப்தஸ்தான தரிசனத்துக்கென்று வந்திருக்கும் சிவனடியார்கள் தேவார பாராயணம் செய்து கொண்டிருந்தனர்...

திருவேதிகுடியிலிருந்து மாலை நேரத்தில்
இங்கு வந்து சேரும் மாப்பிள்ளை பெண்ணுக்கு
சித்ரான்னம் நிவேதனம் செய்வது குறிப்பிடத்தக்கது...


இங்கிருந்து நந்தீசனின் பல்லக்கு புறப்படும்போது
கட்டுசோறு கட்டிக் கொடுத்து அனுப்புவது மரபு...

கண்குளிரத் தரிசனம் கண்டபின் அங்கிருந்து திருப்பூந்துருத்தியை நோக்கிப் புறப்பட்டோம்...

சப்த ஸ்தானத்தன்று கண்டியூரில் எடுக்கப்பட்ட படங்கள்
ஒழுங்கு செய்யப்பட்டபோது எங்கே சென்று மறைந்து கொண்டனவோ தெரியவில்லை...

அதனால் முன்பு எடுக்கப்பட்ட படங்களைப் பதிவு செய்துள்ளேன்..

இத்துடன் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் படங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன... அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் 
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் 
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே...(4/93)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

சனி, மார்ச் 30, 2019

ஏழூர் தரிசனம் 3

திருச்சோற்றுத்துறைக்கு செல்லும் வழியில் -

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள வீரமாங்குடியின் பெருஞ்சிறப்பு
அங்குள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்..

- என்றும்,

அன்னை மிகுந்த வரப்ரசாதி... ஆலயத்து வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்காமல் அனுப்பவே மாட்டாள்...

அத்தனை கருணை உடையவள்...

- என்றும், 

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்....

அன்னை வீரமாங்குடி மகாமாரியம்மனைத் தரிசித்து விட்டு மேலே பயணத்தைத் தொடர்வோம்...


வீரமாங்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில்..
சில ஆண்டுகளுக்கு முன் திருவேதிகுடி சென்றபொழுது இந்த மாரியம்மன் கோயிலுக்கும் சென்றேன்...

மதிய நேரம்... திருக்கோயில் அன்ன தானத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்கிக் கொண்டிந்தார்கள்..

நான் சென்ற நேரம் சீட்டு முடிந்து விட்டது.. அவ்வளவு தான்...
ஆனாலும் நான் பசித்திருந்தேன்...

சரி.. நாம் அம்மனைத் தரிசிப்போம் - என்று மூலத்தானத்தில் அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது மிகச் சரியாக ஒருவர் அழைத்தார்..

வாங்க... வாங்க... - என்று...

என்னிடம் சீட்டு இல்லையே!.. - என்றேன்..

சீட்டு இல்லை...ன்னா என்ன?.. சாப்பாடு இருக்கிறதே!... - என்றார்..

வயதான அம்மா ஒருவர் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து
தலைவாழை இலையை இட்டு - வயிறார சாப்பிடுப்பா!... - என்று அன்னத்தைப் பரிமாறிய போது கண்களில் நீர் வந்தது...

இது தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பந்தம் என்பதும் புரிந்தது...

அதன் பிறகு - இப்போது தான் இரண்டாவது தடவையாக மகமாயியைத் தரிசிக்கச் செல்கிறேன்...

வீரமாங்குடி சாலையில் ஓரத்திலேயே திருக்கோயில்..
கோயிலுக்கு வடபுறமாக குடமுருட்டி ஆறு...

கோயிலுக்கு முன்பாக கருப்பசாமி சந்நிதி...
மண்டபத்தில் அலங்காரக் குதிரைகள்...
கோயிலின் மூலஸ்தானத்தில் அலங்கார ரூபிணியாய் ஸ்ரீ மாரியம்மன்..

சந்நிதிகளில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ வீரனார்..

இந்த வட்டாரத்தின் மக்களுக்கு மிக நெருக்கமானவள் வீரமாங்குடி மாரியம்மன்...

பிள்ளை வரம் கேட்பதும் - பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வந்து தொட்டிலில் இடுவதும், முடி இறக்கி காது குத்துவதும் - 

வருடம் முழுதும் கோலாகலமாகவே இருக்கும்...

இப்போது சப்த ஸ்தானமும் சேர்ந்து கொண்டதால் கோயிலுக்குள் சரியான கூட்டம்...

மனங்குளிர மாரியம்மனைத் தரிசித்து விட்டு பிரகாரத்திற்கு வந்தால்

ஆங்காங்கே விருந்து உபசரிப்புகள்...

சடாரென ஒரு இளைஞன் - இங்கே வந்து உட்காருங்க!.... - என்று கையைப் பிடித்து அழைத்து அமரவைத்தான்..

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், துவையல், ஊறுகாய் - என,  மனசும் வயிறும் ஒருசேரக் குளிர்ந்தன..

அங்கே திருச்சோற்றுத்துறையில் சாப்பிடாத குறை இங்கே தீர்ந்தது...

அம்பாளை மனங்குளிர வணங்கிவிட்டுப் புறப்பட்டோம்...

திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவேதிகுடிக்கு சிற்றுந்துகள் செல்லும்படியான ஒற்றைத் தார்ச்சாலை..

சப்த ஸ்தானத்தின் நான்காவது திருத்தலம்...
கல்யாணத் தடை நீக்கும் திருத்தலம் இது.. ஞானசம்பந்தப் பெருமான் ஆணையிட்டு அருளிய திருப்பதிகம் இத்தலத்துக்குரியது... 

நந்தியம்பெருமான் திருக்கல்யாணத்தின் போது வேத மந்த்ர விசேஷங்களை திருவேதிகுடியினர் கவனித்துக் கொண்டதாக ஐதீகம்...

ஐயன் வேதபுரீஸ்வரும் - மங்கையர்க்கரசி அம்பிகையும் ஆரோகணிக்கும் பல்லக்கு தயாராகிக் கொண்டிருந்தது...
மூலஸ்தானத்திற்குள் சரியான நெரிசல்.. மூங்கில் அடைப்புகள் இருந்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்...


வலப்புறம் செவி சாய்த்தவராக
ஸ்ரீவேத விநாயகப்பெருமான்  

ஐயனைக் கண்ணாரக் கண்டு வணங்கிவிட்டு
திருச்சுற்றில் வலம் வந்தோம்..சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருக்குடமுழுக்கு நடைபெற்றது..
ஆனாலும் கருவறை விமானம் முழுதும் செடிகள் முளைத்துக் கிடக்கின்றன...


திருச்சுற்றில் 108 சிவலிங்க பிரதிஷ்டை.. 


மூலஸ்தானத்தின் மேற்குப் புறமாக திருச்சுற்றில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.. அருகில் பால ஆஞ்சநேய மூர்த்தி..


மேற்குத் திருக்கோட்டத்தில் 
இடம் வலம் மாறியிருக்கும் மாதொரு பாகனைத் தரிசிக்கலாம்..
கலைநயம் மிக்க படைப்பினை மூடர்கள் சிதைத்திருக்கின்றனர்...


ஸ்ரீ மங்கையர்க்கரசி
அம்பிகையின் சந்நிதி கோயிலுக்கு வெளியே தனியாக உள்ளது...

நிறைவாக தரிசனம் செய்து விட்டு
திருக்கண்டியூர் வீரட்டத்தை நோக்கிப் புறப்பட்டோம்...


ஸ்ரீ வேதபுரீஸ்வரர் 
மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீறன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங் கமழுந் திருவேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்தாடுதுமே..(4/90)
-: திருநாவுக்கரசர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

வெள்ளி, மார்ச் 29, 2019

ஏழூர் தரிசனம் 2

2018 மே மாதம் முதல் நாள்...

சித்திரை மாதத்தின் விசாகம்..அன்றைய தினம் சப்த ஸ்தானம்...

சப்த ஸ்தான நாளன்று -
திருச்சோற்றுத்துறையைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை...


திருச்சோற்றுத்துறையை மட்டும் தரிசனம் செய்ய வேண்டும்.. மற்ற தலங்களைப் பிற்கு பார்த்துக் கொள்ளலாம் - என்று நினைத்திருந்தேன்...

இந்த சப்த ஸ்தான தலங்களுள் -
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம் ஆகிய தலங்களைத் தவிர - மற்ற தலங்களை முன்பே தரிசித்திருக்கிறேன்...

அதன்படி நான் - என் மகனுடன்
தஞ்சையிலிருந்து புறப்பட்டபோது உச்சிப் பொழுது...

ஸ்கூட்டி திருச்சோற்றுத் துறையை நோக்கி விரைந்தது..

ஏகப்பட்ட வாகனங்கள் திருஐயாற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன...

தஞ்சையின் வடதிசையில் திருக்கண்டியூர் திருக்கோயிலுக்கு முன்பாக
வலப்புறமாகப் பிரிந்த சாலையில் பெருந்திரளான மக்கள்...

எல்லாருடைய முகங்களிலும் -
பல்லாக்கு எப்போ வருமாம்?... என்ற வினா தான்...

கண்டியூரிலிருந்து மூன்று கி.மீ., தொலைவில் வீரமாங்குடி...
அங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் திருச்சோற்றுத்துறை..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வீரமாங்குடி வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன...

ஆனாலும் அருகிருக்கும் திருச்சோற்றுத்துறையின் மீது என்ன கோபமோ தெரியவில்லை...

இன்று வரை திருச்சோற்றுத்துறை வரைக்கும் நகரப் பேருந்து இயக்கப்படவில்லை...

ஆனால்,
கும்பகோணத்திலிருந்து ஒரு பேருந்து இந்த சாலையில் வந்து கண்டியூரைக் கடந்து திருக்காட்டுப்பள்ளி வரை செல்வதாகச் சொல்கிறார்கள்...

நாற்பதாண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில் அரசு பேருந்து இயங்கத் தொடங்கியபோது சோழன் உங்கள் தோழன் என்று சொல்லப்பட்டது..

உண்மையில் அந்த வார்த்தை -

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விளங்கிய
தங்கத் தமிழ்ச் சோழர்களுக்கு அந்த வார்த்தைகள் பொருந்துமே அன்றி -

1970 களில் தமிழக அரசு ஆரம்பித்து வைத்த தகர டப்பா சோழர்களுக்குப் பொருந்தாது என்பது தெளிவு...

சரி.. அது போகட்டும்... நாம் திருச்சோற்றுத்துறையை நோக்கிச் செல்வோம்...

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள வீரமாங்குடியின் பெருஞ்சிறப்பு
அங்குள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்...

அன்னை மிகுந்த வரப்ரசாதி... ஆலயத்து வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்காமல் அனுப்பவே மாட்டாள்...

அத்தனை கருணை உடையவள்....

அவளது திருக்கோயிலை வணங்கியபடியே திருச்சோற்றுத்துறையை நோக்கி விரைந்தோம்...

பெயருக்குத் தான் விரைந்தோம் என்பதே தவிர அந்தச் சாலை முழுதும் மக்கள் வெள்ளம்....

இவர்கள் திருசோற்றுத்துறையில் தரிசனம் செய்து விட்டு திருக்கண்டியூரை நோக்கிச் செல்கிறார்கள்...

வெப்பம் மிகுந்திருந்த அந்த வேளையில் சாலை முழுதும் தண்ணீரால் நனைக்கப்பட்டு - அதுவும் சட்டென்று உலர்ந்து விடாதபடிக்கு வைக்கோல் பரப்பட்டிருந்தது...

மெதுவாக அந்தக் கூட்டத்தினுள் ஊர்ந்தது ஸ்கூட்டி..

இதோ திருச்சோற்றுத் துறை...
சப்த ஸ்தானத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம்...

நந்தீசனின் திருக்கல்யாணத்தின் போது கல்யாண விருந்து உபசரிப்பினை -  திருச்சோற்றுத்துறையினர் ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்...

எப்போதோ ஒரு காலத்தில் பெரும்பஞ்சம் வந்துற்றபோது
எளியவர் ஒருவர் மக்களுக்கு அன்னதானம் செய்ய ஆசைப்பட்டார்...

சுயநலமில்லாத அவரது ஆசை நிறைவேறும் வண்ணம்
வாழை மடுவில் ஈசன் தோன்றி அட்சய பாத்திரம் வழங்கியதாக தலப்...

ஆங்காங்கே சிறுவர்களும் பெண்களும் பெரியவர்களும் மலர்ந்த முகத்துடன் இங்க வாங்க... வண்டியை இப்படிப் போடுங்க.. - என்று அழைத்துக் கொண்டு இருந்தார்கள்....

தோட்டம் துரவுகளின் வேலிகளைப் பிய்த்துப் போட்டு விட்டு வழிச் செல்வோர் சற்று இருந்து ஓய்வு எடுக்கும்படிக்கு பந்தல்கள்...

வேறு தலங்களில் இரு சக்கர வாகனங்கள் நுழைந்தாலே மடக்கிப் பிடித்து வகை வகையான வழிகளில் வசூல் வேட்டை நடக்கும்...

ஆனால் - அப்படி ஏதும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

நாங்கள் வீட்டிலேயே சாப்பிட்டிருந்ததால் - அன்ன தானப் பந்தல்களில் நுழைய வில்லை...

ஸ்கூட்டியை வீடொன்றின் ஓரமாக நிறுத்தி விட்டு சிவ தரிசனம் செய்திட விரைந்தோம்..

மிக அழகான திருக்கோயில்..புதிதாகக் கொடிமரம்.. பொலிவுடன் இருந்தது...

திருவாசலைக் கடந்ததுமே முன் மண்டபத்தில் தனிச்சந்நிதியில் அழகான முருகன்...

முருகனுக்குச் சிறப்பான அலங்காரம்..

புகைப்படம் எடுக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்..

எனினும், யாரும் படம் எடுத்து விடாதபடிக்கு அரண் போல இளம் அர்ச்சகர்கள் பலர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்...

சந்நிதியில் எம்பெருமான் தொலையாச் செல்வராக அட்சயபுரீஸ்வராக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்...

என்ன சொல்வது?... எம்பெருமானின் தரிசனத்தில் மெய் மறந்திருந்தோம்...

பக்தர்கள் வருகை அதிகரிக்கவே மூங்கில் தடுப்புகளுக்குள் அவசரப்படுத்தப் பட்டோம்...

ஐயனின் தரிசனம் கண்டபின் திருச்சுற்றில் வலம் வந்து
மூலஸ்தானத்தின் தென்புறமாக தனிச்சந்நிதியாக விளங்கும்
அம்பிகையின் திருக்கோயிலை அடைந்தோம்...

ஸ்ரீ அன்னபூரணி அம்பிகை கிழக்குத் திருமுகம்... நின்ற திருக்கோலம்...

சந்தனக்காப்பு அலங்காரத்தில் பேரழகாகத் திகழ்ந்து கொண்டிருந்தாள் அம்பிகை...

அனைவருக்கும் அன்ன விசாரம் தீர்த்து அருள்வாய்.. தாயே!...
- என்று மனதார வேண்டிக் கொண்டு வலம் செய்தோம்...

திருச்சுற்றில்
ஸ்ரீ ஷோடச லிங்கம்
திருமூலஸ்தானம் 

வெயில் தகித்துக் கொண்டிருக்க - பிரகாரம் தவிர்த்த மண்டபங்கள் முழுதும் திரளாக மக்கள் நிழலுக்கு ஒதுங்கியிருந்தனர்....

மக்கள் கூட்டத்தின் இடையே பெரும்பாலும் படம் எடுப்பதில்லை..

அம்பிகையின் விமானம் 
குளிரக் குளிர நீர் மோர் 
திருக்கோயிலில் ஒரு சில இடங்களில் மட்டும் படங்கள் எடுத்துக் கொண்டு கொடிமரத்தருகில் வணக்கம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்...

ஸ்கூட்டி விடப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக இருந்தது...

வீட்டுக்குப் போகலாம் ... - என்ற எண்ணத்துடன் - ஸ்கூட்டியை நகர்த்திய போது மகன் கேட்டான்...

எல்லாக் கோயில்களுக்கும் போவோமா... அப்பா!..

மகன் வாயிலாக - எம்பெருமான் அழைக்கிறான்...

எங்களை வழி நடத்துபவன் அவனல்லவோ!...

அதன்படி அடுத்த சில விநாடிகளில் 
எங்களது ஸ்கூட்டி திருவேதிகுடியை நோக்கி விரைந்தது...


நன்றி - சிவனடியார் திருக்கூட்டம்..
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின்றானே
காலங்கள் ஊழி கண்டிருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே
வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருசோற்றுத்துறையுளானே
திகழொளியே சிவனே உன் அபயம் நானே..(6/44)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

புதன், மார்ச் 27, 2019

ஏழூர் தரிசனம் 1

சோழமண்டலத்தில் ஆண்டு தோறும் சிறப்புற நிகழும் திருவிழாக்களுள் மிக முக்கியமானது - திருஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழா..

சப்த ஸ்தானப்பெருவிழா சித்ரா பௌர்ணமியை அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று நிகழ்வது.

பங்குனியில் திருமழபாடியில் நிகழ்ந்த ஸ்ரீ நந்தியம்பெருமான் திருமணத்தின் தொடர்ச்சியாக நிகழ்வது...

நந்தீசன் திருமணத்தைத் தரிசிக்க வந்த ஏனைய முனிவர்கள் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தத்தம் ஊர்களுக்கு வந்தருளுமாறு அழைத்ததாகவும் -

அதன் பொருட்டு செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரும் அன்னை அறம் வளர்த்த நாயகியும் - புதுமணத் தம்பதிகளைத் தாமே அழைத்து வருவதாக வாக்களித்ததாக ஐதீகம்...

ஸ்ரீ நந்தீசன் - சுயம்பிரகாஷிணி தேவி  
புதுமணத் தம்பதிகளைத் தனியே அனுப்ப மனமில்லை போலிருக்கிறது - ஐயனுக்கும் அம்பிகைக்கும்...

திருஐயாற்றில் சித்திரைத் திருவிழா முடிந்த கையோடு -
சித்திரை விசாகத்தன்று -  விடியற்காலையில் ஸ்வாமியும் அம்பிகையும் வெட்டி வேர் பல்லக்கிலும் நந்தீசனும்  சுயம்பிரகாஷிணி தேவியும் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளி திருஐயாற்றின் நான்கு வீதிகளிலும் வலம் வருவர்..

அதையடுத்து - காவிரியின் பூசப் படித்துறை மண்டபத்தில் வீற்றிருந்து
கட்டளைதாரர் மண்டகப்படி உபசாரங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து திருப்பழனத்துக்குப் புறப்படுவர்...

திருப்பழனத்தில் ஸ்ரீ ஆபத்சகாய மூர்த்தி - ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகையுடன் ஊர்மக்கள் எதிர்கொண்டழைப்பர்...

அங்கே மாலை மரியாதைகளை ஏற்று கொண்டு அங்கிருந்து திருச்சோற்றுத் துறைக்குப் புறப்படுவர்...

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி  
திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகள் திருச்சோற்றுத்துறைக்கு எழுந்தருள மதியம் ஆகிவிடும்...

காவிரியைக் கடந்த நிலையில் திருச்சோற்றுத் துறை 
ஸ்ரீ ஓதவனேஸ்வரரும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையும் எதிர் கொண்டு அழைப்பர்..

அங்கே தான் வீட்டுக்கு வீடு கல்யாண விருந்து...

தமிழகத்தில் எந்தத் திருவிழாவிலும் காணப்படாத அற்புதம் இது..

திருச்சோற்றுத் துறையில் அவரவர் பொருளாதார நிலைக்கு அவரவர் வீடும் கல்யாணக் கோலம் பூண்டிருக்கும்...

பல்லக்குகளுடன் நடந்து வரும் பக்தர்களை -  தங்கள் இல்லத்தில் உணவு உண்பதற்கு வருமாறு அழைக்கும் பாசத்துக்கு நிகர் வேறு ஏதுமில்லை...

திருச்சோற்றுத் துறையிலிருந்து திருவேதிக்குடிக்குப் புறப்படும்போது
திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத்துறை பல்லக்கும் புறப்படும்...

திருவேதிகுடியில் - ஸ்ரீ வேதபுரீஸ்வரரும் ஸ்ரீ மங்கையர்க்கரசி அம்பிகையும் எதிர்கொண்டழைத்து மாலை மரியாதை ஆராதனைகள் நிகழும்...

அங்கிருந்து திருக்கண்டியூருக்குப் புறப்படும்போது
திருஐயாறு திருப்பழனம் மற்றும் திருச்சோற்றுத்துறை பல்லக்குகளுடன்
திருவேதிகுடி பல்லக்கும் புறப்படும்...

திருக்கண்டியூரில் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரரும் ஸ்ரீ மங்களாம்பிகையும்
வரவேற்க அங்கே மகத்தான கோலாகலம்...

அங்கே மாப்பிள்ளை பெண்ணுக்கு கட்டுசோறு உபசாரம் பிரசித்தம்...

அதன் பின் அங்கிருந்து
திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை மற்றும் திருவேதிகுடி பல்லக்குகளுடன் திருக்கண்டியூர் பல்லக்கும் புறப்படும்...

முன்னிரவுப் பொழுதில் திருப்பூந்துருத்தியை நெருங்க -
ஸ்ரீபுஷ்பவன நாதரும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பிகையும் எதிர்கொள்வர்..

இங்கே பல்லக்கில் வரும் மூர்த்திகளுக்கு புதிய மாலைகளுடன் அலங்காரம் செய்யப்படும்... ஆராதனை தரிசனத்துக்குப் பின் புறப்படும் போது -


திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி மற்றும் திருக்கண்டியூர் பல்லக்குகளுடன் திருப்பூந்துருத்தி பல்லக்கும் புறப்படும்...

குடமுருட்டி ஆற்றில் பெரிய அளவில் வாணவேடிக்கை நிகழ
திருநெய்த்தானம் ஸ்ரீ நெய்யாடியப்பர் - ஸ்ரீ பாலாம்பிகை வரவேற்பு அளிப்பர்..

அங்கே சிறப்பான ஆராதனைக்குப் பிறகு புறப்படும் வேளையில்

திருஐயாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், மற்றும் திருப்பூந்துருத்தி பல்லக்குகளுடன் திருநெய்த்தானத்தின் பல்லக்கும் புறப்படும்...

ஆறு ஊர் பல்லக்குகளும் (திருவையாற்றுடன் ஏழூர்) திருஐயாற்றை நெருங்கும்போது பொழுது விடிந்திருக்கும் ...

கீழைக் கோபுர வாசலில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் பதுமை மாலையிட எல்லா மூர்த்திகளுக்கும் புஷ்பாஞ்சலியுடன் மகா தீப ஆராதனை நிகழும்..

அந்த வேளையில் ஐயாறப்பரின் பல்லக்கு பண்டரங்கக்கூத்து நிகழ்த்தும்..

பண்டரங்கக் கூத்து நிகழ்த்தியபடியே ஸ்வாமியின் மூலஸ்தான ப்ரவேசம்..

அத்துடன் ஏனைய திருத்தலங்களின் மூர்த்திகள் தத்தம் திருக்கோயில்களுக்கு
புறப்படுவர்....

ஸ்ரீ ஐயாறப்பரும் அம்பிகையும் 
இது தான் சப்தஸ்தானப் பெருவிழா...

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்ற ஆனந்தத் திருவிழா..

ராஜராஜ சோழ மாமன்னனின் பெருந்தேவியாகிய உலகமாதேவியார் தான்
இத்திருவிழாவினைத் தொடங்கி வைத்ததாக சொல்லப்படுகின்றது...

ஆயிரம் ஆண்டுகளாக எவ்வித தடங்கலும் இன்றி
இத்திருவிழா நடைபெறுவதே இதன் சிறப்பு...

ஆனால் - இப்போது பற்பல மாற்றங்கள்... திருப்பழனத்திலிருந்து திருசோற்றுத் துறைக்கு பல்லக்குகள் வரும்போதே மதியப் பொழுதைக் கடந்து விடுகின்றது...

எல்லாப் பல்லக்குகளும் இரவைக் கடந்து திருஐயாற்றை நெருங்கும்போது உச்சிப் பொழுதைக் கடந்து விடுகின்றது...

இதற்கெல்லாம் பற்பலக் காரணங்கள்...

இத்தகைய திருவிழாவை இந்த ஆண்டு தரிசிக்கும் பேறு கிடைத்தது...

இதனைத் தளத்தில் பகிர்ந்து கொள்ள வெகு தாமதம் ஆகி விட்டது...

இன்னும் இரு வாரங்களில் தமிழ்ப் புத்தாண்டு பிறந்து விடும்...
அடுத்த சப்தஸ்தானமும் நெருங்கி விட்டது...

இனி அடுத்தடுத்த பதிவுகளில் - சப்தஸ்தான தரிசனம் நிகழும்..


இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கைதன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயறனாரே.. (4/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, மார்ச் 23, 2019

உத்திர தரிசனம்..

சென்ற வாரத்தில் -
எங்களது அருஞ்சுனை காத்த ஐயனார் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் கொடியேற்றத்தைப் பற்றி எழுதியிருந்தேன்..

உத்திர நாளன்று திருக்கோயிலில் நிகழ்ந்த வைபவங்களுள்
சில திருக்காட்சிகள் இன்றைய பதிவில்...


கனவினிலும் நினைவினிலும் துணைபுரியும் சாமி..
கைதொழுத பேர்களுக்குக் கைகொடுக்கும் சாமி..
நீதி நெஞ்சில் நின்றிருக்க அருள் புரியும் சாமி..
வீதிவலம் வந்தருளி வரங்கொடுக்கும் சாமி...வாழ்வில் நலம் எல்லாமும் தந்தருளும் சாமி..
வந்து வாசல் நின்றார்க்கு வழி அருளும் சாமி..
வாழ்க மனை என்று தினம் வாழ்த்துகின்ற சாமி..
வளர்சுனையைக் காத்தருளும் வள்ளல் எங்கசாமி..

ஸ்ரீ ஐயனார் வீதி உலா 


குற்றங்குறை நேராமல் பார்த்தருளும் சாமி
கும்பிடுவோர் குலங்காத்து விளக்கேற்றும் சாமி
குங்குமமும் சந்தனமும் தந்தருளும் சாமி
குற்றமில்லா நெஞ்சகத்தில் முகங்காட்டும் சாமி...

திருநீற்று மங்கலத்தில் திகழ்ந்திருக்கும் சாமி
தேவருக்கும் தேவனென நின்றருளும் சாமி...
அருஞ்சுனையின் கரைகாத்து அருளுகின்ற சாமி..
அடிமலர்கள் எந்நாளும் போற்றுகின்றோம் சாமி...

அருஞ்சுனை காத்த ஐயனே போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், மார்ச் 21, 2019

பங்குனிச் சேர்த்தி

அன்று - ஆயில்யம்!..
சோழ வளநாட்டின் உறையூருக்கு
உலக நாயகன் - உலகளந்த நாயகன் வருகின்றான்!..

அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரையைக் கடந்து வருகிறான்!.. - என்றால்....

இதைத்தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!..

அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...

திரு அரங்கன் 
பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..
அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!.

வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது.

நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!..

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  - அம்மா மண்டபம் வழியாக  காவிரியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார்.

வருகிறார்.. வருகிறார்.. இதோ வந்து விட்டார்!..
வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

வாங்க.. மாப்பிள்ள!.. வாங்க!.. - என்று சிறப்பான வரவேற்பு...
ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!..

ஸ்ரீரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது...

ஆயிற்று.. ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!..

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார்... அன்னம் போல தாயார் மெல்ல வருகிறாள்..

கண்கள் கசிகின்றன காதலால்,

நலம்.. நலமறிய ஆவல்!.. - என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் .

அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ...

இந்த நாணம் என்ற ஒன்று இருக்கின்றதே!.. அது தடுக்கின்றது!.. 

ஆயிரமாய்க் கூடியிருக்கும் பிள்ளைகளின் முன்பாகவா!..

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆனந்தம்... அத்துடன் ஆதங்கம்..

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - உறையூர் 
என்ன இது!.. இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!..

குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் வலியாக  அல்லவா இருக்கின்றது - குண்டுங்குழியுமாக!.. அன்றைக்குக்கூட வழி நடையாய் ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!..

- என்று மொழிந்த ஸ்வாமியை, மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள் - கமலவல்லி...

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்...

மாதவனின் கழுத்திலிருந்த மாலையை மதுசூதனக் காமினி கமலவல்லி அணிந்து கொள்கிறாள்... 

அவளது கழுத்திலிருந்த மாலையை அணிந்து கொண்டு அரங்கன் ஆனந்திக்கின்றான்.

யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்,
விரலிலிருந்த கணையாழியைத் தன் அன்பின் அடையாளமாக அணிவிக்கின்றான் அரங்கன்..

கார்மேகனும் கமலவல்லியும்

இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட..  -  அன்னை இப்படி ஆனந்திக்க,
'உனது பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?... - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய்க் கொண்டிருந்தது.

கண்டு கொள்!.. - எனக் கண்டதால் மனம் நிறைந்தது...
உண்டு கொள்!.. -  என உவந்ததால் உயிரும் இனித்தது.

இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்தரைக்கு மேல்!..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

உன் பங்கு நான்.. என் பங்கு நீ.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி...
போய் வரவா!..பூமகளே!?...

ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!.. வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள்!...

கமலவல்லி மூலஸ்தானத்திற்குத் திரும்ப -
ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!..

அதற்கு முன்னரே,  அரங்கன் இருப்பது உறையூரில் என்று -
தூபம் இடப்பட்டது -  அரங்கநாயகி சந்நிதியில்!..

எங்கு செல்வது!..  - அழகிய மணவாளனின் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்!..

நேராக கண்ணாடி மண்டம் .. அதுதான் சரி.. அங்கே ஓய்வு!.

அதன்பிறகு,  வையாளியில் ஆரோகணித்து - ஸ்ரீரங்கன் சித்திரை வீதியில் சுற்றிக் களித்திருந்த போது ,  எதிர் வந்து நின்றது - உத்திரம்!..

ஆஹா!.. அரங்க நாயகியின் திருநட்சத்திரம்!..
அவளைக் காண வேண்டுமே!..

இப்படி இவன் நினைத்தாலும்  -
அவள் இவனைக் காண வேண்டுமே  - என்பது தான் பிரதான நோக்கம்!..

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!.

கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி!..
அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!..
என்ன செய்வது?...

திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..

அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் - 
..நான் கூட பார்த்தேனே!..

கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து -
அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,

அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - படார் என்று!..

பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட கருணை காட்டப்படவில்லை!..

அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..

இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..

- ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..

ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!..

பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!...

ஏன்.. அவங்க வீட்டுப்  பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..

சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...

அரங்கன் திகைத்தான்...

என்ன சொல்கின்றான் இவன்!..  என்னிடமா.. தப்பு!..

அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது...
உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!..
தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!..

என்ன சொல்கின்றாள்.. ஆர்வத்துடன் உற்றுக் கேட்டான்!..

அதென்ன.. திருமார்பு எங்கும் கீறலாமே!.. 
திருஅதரங்கள் அதீதமாய் வெளுத்தும் திருநேத்ரங்கள்  சிவந்தும் கிடக்கின்றதாமே!..
கார்மேகனின் கருங் குழற்கற்றைகள் கலைந்து காணச் சகிக்க வில்லையாமே!..

அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..

உடன் இருக்கும் உளவாளி யார்?..

இதெல்லாம் யார் உனக்குச் சொன்னது?..

யாரும் தனியா வந்து சொல்லணுமாக்கும்?.. அதான் ஊரே பார்த்து ரசிக்கின்றதே!..

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?..
நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. 

எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை..
உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..

உறையூரோ.. மறையூரோ!..  உன் உள்ளம் தானே -
நான் உவந்து உறையும் ஊர்!.

ஆகா.. இந்தக் கள்ளம் எல்லாம் வேண்டாம்..
நீர் அங்கேயே போய் இருந்து கொள்ளும்!..

வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என -   அன்பின் விழுது என -  அரங்கனின் மேல் வந்து விழுந்தன...

நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது...

பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் காய்களையும் பழங்களையும் எடுத்து வீசியது கூட பரவாயில்லை..

திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!.. 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..

அரங்கன் பரிதவித்துப் போனான்!..

அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது.   உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்! அவருக்கு மனசு தாங்கவில்லை.

நம்மாழ்வார்
அரங்கனைக் காணவேண்டி அல்லவோ அண்டபகிரண்டமும் - காத்துக் கிடக்கின்றது...

அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!..

அரங்கனுக்கா இந்த நிலை!..
ஆராவமுதனுக்கா இந்த நிலை?..

விறுவிறு - என நடந்து,  பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

பத்மினி நீ.. பத்ம தள வாசினி நீ.. பத்மநாப பத்னி நீ!..
ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!..
கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!..
ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!..
நீ இன்றி அவனில்லை!.. அவனின்றி நீ இல்லை!..
அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?..
இது நியாயமா?.. அம்மா?..

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட,
உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!..
அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. 

கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத் தெரியாதா!..
சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால்பழங்கூட கொள்ளாமல்,
உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்.. 

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.. ஆனால்
தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் உறங்காமல் மயங்கி இருப்பதைப் பார்!..

உன் பத்ம விழிகளைக் கொண்டு பரந்தாமனைப் பார்!...

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...

இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலைன்னு!..
கணையாழி போனாப்  போறது!.. நீங்க வாங்க!..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கநாயகி திருவாய் மலர்ந்தாள் -

இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ?..
சரியான பைத்தியம்!...

அரங்கன் புன்னகைத்தான்!..  அரங்கநாயகி புன்னகைத்தாள்!..

ஆழ்வாரும் புன்னகைத்தார்...
அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..

அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..

அன்பினில் குழைந்த அக்கார அடிசில்
அமிழ்தினும் இனிதாக நிவேதனம் ஆகின்றது.

அரங்கனும் அரங்கநாயகியும்
அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மல்லிகைப் பந்தலின் கீழ், சேர்த்தி மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர்..

அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

* * *

திருஅரங்கத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒரு வைபவம் தான் அது..

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார்.

இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று -  18 முறை விடிய விடிய திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள்.

திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம்.  திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. உறையூரில் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள் - மீண்டும்!..

உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..

பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம்.
மங்கல மாவிலைத் தோரணங்கள் மகிழ்ந்தாடும் சித்திரை வீதியில்
திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றான்.

மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜ அவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

* * * 
அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..

அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!.. அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தானே மட்டையடி!.. 


அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும்  அரங்க நாயகி விரலிலும், 
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..

* * * 

இன்று பங்குனி உத்திரம்.
அவரவர் சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது  நிவேதனம் செய்வது மரபு.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு - சில திருத்தங்களுடன் மீண்டும்!..

அரங்கனின் நினைவே ஆனந்தம்!..  

அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..
ஃஃஃ