நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 31, 2023

ஆடித் தவம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 15
திங்கட்கிழமை


இன்று
திருநெல்வேலி - 
சங்கரன்கோயிலில்  
ஸ்ரீ கோமதி அம்மன் 
ஆடித் தவத் திருக்கோலம்..

ஸ்ரீ சங்கர நாராயணர்  
- என, எம்பெருமான்
திருக்காட்சி 
நல்கிய திருநாள்..

அருளாளர் திருநோக்கில் 
சங்கர நாராயணர் 
திருக்கோலம் பற்றிய 
திருப்பாடல்கள்..


அரன் நாரணன் நாமம்  ஆன்விடை புள்ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்புஅளிப்பு  கையதுவேல் நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று.. 2086
-: பொய்கையாழ்வார் :-

தாழ்சடையும் நீள்முடியும்  ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும்  திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. 2344
-: பேயாழ்வார் :-


இடம் மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை வடமால் 
இடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான் இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கெழில் நலஞ்சேர் குடமால் இடம் வலம் கொக்கரை யாம் எங்கள் கூத்தனுக்கே..
-: பொன்வண்ணத்து அந்தாதி :-
(சேரமான் பெருமாள் நாயனார்


மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென்று ஏத்தும் நம் பரன் வைகும் நகர் போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயில் ஆடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே.. 1/91/2

செய்யருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த் தேன்
கையருகே கனிவாழை ஈன்று கானல் எல்லாம் கமழ் காட்டுப் பள்ளி
பையருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பணை யான் பணைத் தோளி பாகம்
மெய்யருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே..

மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார் வேதம் உடைய நிமலர்
கண்ணுமோர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே..
-: திருஞானசம்பந்தர் :-


ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணன் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே..


பையரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னிச்
மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே.. 4/22/4

எரியலாது உருவம் இல்லை ஏறு அலாது ஏறல் இல்லை
கரியலால் போர்வை இல்லை காண் தகு சோதியார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்றேத்தும்
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே.. 4/40/5
-: திருநாவுக்கரசர் :-


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூலை 30, 2023

அமுதத் தமிழ்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 14
 ஞாயிற்றுக்கிழமை


அமுதத் தமிழ்

கடந்த வியாழனன்று எபியில் - அன்பின் ஸ்ரீராம் அவர்கள் வெளியிட்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் அது பற்றிய கருத்துரைகளையும் கண்ட பின் - ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தப் பாடலைத் தேடினேன்.. 
 
கரந்தைக் கவியரசு
கரந்தைக் கவியரசு அரங்க வெங்கடாசலம் பிள்ளை அவர்களுடையதாகிய அந்தப் பாடல் - 1911 எனும் கால கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்..

தேடலின் போது
மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களது பதிவைக் காட்டியது கூகுள்.. உடன் தொலைபேசி வழி அவருடன் அன்பின் நலன்  விசாரிப்பு.. அதன் பின், 

கரந்தைக் கவியரசு அவர்களது பாடலின் பொருள் எழுத முயன்றேன்.. 

பாடல் முழுதும் இனிய தமிழ் வார்த்தைகள்..
ஆயினும் அக்கட் புலம், ஆனாத - இரண்டிற்கும் புரியவில்லை..

கட்செவி என்பது பாம்பின் பெயர்.. அதன் வழியே - கட்புலம் என்றால் கண்கள் என்பது புலனாயிற்று..

அடுத்து - ஆனாத என்பதற்கு திவ்யத் திருப்பாசுரம் வழி காட்டிற்று..

அளவில்லாத - என்ற பொருளை கைக்கொண்டு என்னளவில் உரை செய்திருக்கின்றேன்...

எந்த ஒரு ஆரியச்  சொல்லையும் சொல்லாத நெறியில் - நிறையாகிய இப்பாடல் எமதென்று
கொள்ளப்படாதது குறைதான்!..

என் செய்வோம் இதற்கு..
நின்றுவளர் நெடுந்தமிழை 
நெஞ்சகத்தில் கொள்வதொன்றே 
இலக்கு!..

கரந்தைக் கவியரசு அவர்களது  திரு உருவப் படத்திற்கும் மேல் விவரங்களுக்கும் நன்றி : (இணைப்பு)

வாழ்க தமிழ்!.
**

வானார்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே..
மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே..

தேனார்ந்த தீஞ்சுனை சால் திருமாலின் குன்றம்
தென்குமரி ஆயிடை நற் செங்கோல் கொள் செல்வி..

கானார்ந்த தேனே கற்கண்டே நற்கனியே கண்ணே கண்மணியே அக் கட்புலம் சேர் தேவி..

ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே..
அம்மே நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே!..
**
பாடலை இயற்றியவர
கரந்தைக் கவியரசு 
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
கரந்தை - தஞ்சாவூர்..


வானுயர்ந்து
விளங்கும் பொதிகை மலையில் தோன்றி வளர்கின்ற நிலவு போன்றவளே!..

பெருமை மிக்க  மூவேந்தர்களின்  மடியில் வளர்ந்த செல்வ மகளே!..

தேன் ததும்புகின்ற மலர்களால் இனித்திருக்கும் சுனைகள் நிறைந்திருக்கின்ற குன்றமாகிய திரு வேங்கட மலைக்கும் தென்கடல் குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில்  செங்கோல் செலுத்தி ஆள்கின்ற அருட்செல்வியே!..

காட்டு மலர்களில் வழிகின்ற தேன் ஆனவளே!.. 

கற்கண்டு போல சொற்கொண்டு பொலிபவளே!..
நலந் தருகின்ற கனி எனக் கனிந்தவளே!.. 

கண்ணாக கண்ணின் மணியாக மலர்பவளே!. கண்மணிக்குள் அறிவெனும் ஒளியாக ஒளிர்கின்ற தேவியானவளே!..

குறைவில்லாத கடல் என, நல்லறிவு பொங்கும் நூல்களை
அளவற்ற வண்ணம்
அளித்தருளும் அமிழ்தானவளே!.. 

நினது பெருமைகளை 
முழுதாகச் சொல்லுதல் 
யாருக்கும் எளிதல்ல அம்மா!..
**

 வாழ்க தமிழ்
தமிழ் வாழ்க!..
***

சனி, ஜூலை 29, 2023

சங்கர நாராயணர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 13
சனிக்கிழமை


நாகங்களாகிய சங்கன், பத்மன் ஆகியோர் அன்னை உமையவளின் பக்தர்கள்.  இவர்களுக்குள் ஒரு சச்சரவு ஏற்பட்டது. 

இந்த உலகில் சிவபெருமானே உயர்ந்தவர்  என சங்கனும், திருமாலே மேலானவர் என்று பத்மனும் விவாதிக்கத் தொடங்கினர். இதில் தீர்வு காண இயலாத இருவரும் வேறுவழியின்றி அம்பிகையை வணங்கி - தமது ஐயம் தீர்க்கும்படிக் கேட்டுக் கொண்டனர்.

அன்னையும்
ஹரியும் ஹரனும் ஒருவரே!.. - என்பதை அனைவருக்கும் நிரூபிக்கும் வழி என்ன என்று சிவபெருமானிடமே கேட்டாள்..
 
தம்முள் பெரியவர் யார்?.. - என்ற சந்தேகத்திற்கு பூவுலகின் புன்னை வனத்தில்  தவம் இயற்றினால், அங்கே காட்சி தந்து உன் சந்தேகம் தீர்ப்போம்.. - என்று வழிகாட்டினார் ஈசன்.

அதன்படி  புன்னைவனத்தில்  தவமிருந்தாள் அன்னை ..
ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னாளில் அம்பிகைக்குச் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தார் இறைவன். 

அரியும் சிவனும் ஒன்றே என உலகிற்கு உணர்த்தப்பட்டது..

இதன் பிறகும் தெளிவடையாமல்  சங்கனும் பத்மனும் சச்சரவில் ஈடுபட்டதால் அவர்களது நாக்கு இரு பிளவாகிப் போனது - என்பதும் உணரத்தக்கது..


அன்னை தவமிருந்த புன்னை வனமே - சங்கரன் கோவில்..

சங்கரநாராயண தரிசனம் காண்பதற்காக அம்பிகை  மேற்கொண்ட  தவம் குறித்த விழாவே ஆடித் தபசு..

ஆடித்தபசு பதினொன்றாம் திருநாளில் (31/7/23) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. 

அன்று காலை ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நிகழ்த்தி பரிவட்டம் சாத்துவர்..

நண்பகலில்  தவக்கோலம் கொண்டு தங்கச்சப்பரத்தில்
கோமதி அம்மன் தெற்கு ரத வீதி மண்டகப்படியில் எழுந்தருள, அன்று மாலைப் பொழுதில்    
சங்கர நாராயண ஸ்வாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி நல்கும் ஈசன் நள்ளிரவில் யானை வாகனத்தில்  சங்கரலிங்க ஸ்வாமியாக  காட்சிக் கொடுத்தருள்வார்..
 
ஐப்பசியில் திருக்கல்யாண விழாவும் கொண்டாடப் படுகின்றது ..

திருக்கோயிலில் கிடைக்கும் புற்று மண் பிரசாதம் தோல் நோய்களுக்கும்  விஷக் கடிகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது..

இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து , குங்குமம் இட்டுக் கொண்டால் நோய்களும் தீவினைகளும் குறையும் என்பது நம்பிக்கை..

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமியையும், 
ஸ்ரீ கோமதி அம்மனையும் சிந்தித்து அனைத்து நலன்களையும் எய்துவோம்...


ஸ்ரீ சங்கரநாராயணன் எனும் மாலொரு பாகன் திருக்கோலம் தேவாரத்தில் பல பாடல்களில் போற்றப்படுகின்றது..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 28, 2023

ஆடி வெள்ளி 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 12
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ பிரஹந்நாயகி தஞ்சை
அபிராமி பட்டர்
அருளிச்செய்த
திருப்பாடல்கள்

ஸ்ரீ வாராஹி - தஞ்சை
சந்திர சடாதரி முகுந்த சோதரி! துங்க சலசு
     லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
     சுலட்சணி சாற்ற ருங் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை
     செக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
     அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
     கௌமாரி உத் துங்க கல்யாணி புட்ப அத்திராம் புய
     பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேதஒலி வளர்
     திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே.. 2
-: திருப்பதிகம் :-


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

ஸ்ரீ முத்து மாரியம்மன் தஞ்சை
கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி பண்ணியது உன் இரு பதாம் புயத்தில்
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12
-: அபிராமி அந்தாதி :-
**

 என்கின்றார் பட்டர்.. அம்பிகையின் நாமங்களே கற்பதற்கு உரியவை.. அவைகளே  கரையேற்றுபவை..
அம்பாளின் திருநாமங்களைச் சொல்லுவதே அருந்தவம்..
அதற்கு மேல் வேறொரு வேண்டுதலும் வேண்டுமோ!..
**

நமது அன்புக்குரிய ஓவியர் திரு.மாருதி அவர்கள் (86) நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.. அவரது ஆன்மா 
சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்..
**

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி
ஓம்
***

வியாழன், ஜூலை 27, 2023

இயற்கை..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 11
   வியாழக்கிழமை


எங்கு திரும்பினாலும்
இயற்கை.. இயற்கை என்ற கூக்குரல்..

ஏதோ இயற்கையை இவர்கள் தான் வாழ வைப்பது போல!

இயற்கையாய் விளைந்த காய்களில் பழங்களில் - என்று மருத்துவர் யாராவது பேச ஆரம்பித்தால் போதும்!..

அங்காடிகளில் உள்ளவற்றின் விலைகளை எல்லாம் ஏற்றி வைத்து விடுகின்றனர்..

அதன்பிறகு
விலை ஏற்றத்துக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டு அந்த நிலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்


இருந்தாலும்
இயற்கையாய் விளைந்த காய்களில் பழங்களில் -
உடல் நலன் காக்கும் நுண்ணூட்டச் சத்து எனும் மகத்துவம் நிறைந்தே உள்ளது..

இன்னும் நீரிழிவு புற்றுநோய் முதலானவற்றை  எதிர்க்கும் ஆற்றலும் அதிகமாகவே உள்ளது..


நமது நாட்டின் பழங்கள்
நோய் எதிர்ப்பாற்றலை உடையவை..

அவற்றில் நிறைந்துள்ள சத்துகளால்  கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன..

அதிகமான நார் சத்துக்களை உடைய கீரை, மாவுச் சத்துள்ள கிழங்குகளை சமைத்து பக்குவம் செய்து சாப்பிடுவதே சிறந்தது.. 

அவிக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது என்று தற்போது சிலர் கிளம்பி இருக்கின்றனர்..

கீரை கிழங்கு முதலானவை சரியாக வேகாதிருப்பின் அவற்றால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம்..

வெந்து கெட்டது முருங்கை.
வேகாமல் கெட்டது அகத்தி..
 - என்றொரு பழமொழி உண்டு..

முருங்கை கீரை நல்லது என்றாலும் அதில் பித்தவாயு என்ற ஒன்று இருக்கின்றதாம். அதனால் சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.. - என்கின்றார் சித்த மருத்துவர் ஒருவர்..

அகத்திக் கீரை நல்லது என்றாலும் சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது அகத்திக்கீரை எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

எனினும்
இயற்கைக்கு இயற்கையே பகை - என்பதையும் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.. 

வெண்டை,  வெள்ளரி, வெங்காயம், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி இவை அப்படியே சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் காய்கள்..

தக்காளி இப்போதைக்கு இல்லை எனினும் என்றாவது ஒருநாள் ஏழைக்குக் கிட்டும்..

சுரைக்காய், வெண் பூசணி இவற்றின் சாற்றினை  அருந்தும் பழக்கமும் இப்போது
மக்களிடம் அதிகரித்து வருகின்றது..

காய்களை சற்றே ஆவியில் வேக வைத்துப் பிறகு சாப்பிடுவது தான் நல்லது. 

பச்சைப்பயறு, கொண்டைக் கடலை போன்ற  தானியங்களை முளைகட்டி  உண்ணலாம்..

முளை கட்டிய தானியங்களில் அதிகப்படியான புரதங்களும் ஊட்டச் சத்துகளும் இருப்பதாக  சொல்லப்படுகின்றது. முளைகட்டிய தானியங்களுடன் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு நல்லது.. 

வெள்ளரிப் பிஞ்சு, காரட்,  முட்டைக்கோஸ் இவற்றின் துருவலை சாப்பாட்டிற்கு முன்னும் 
உள்ளூர் வாழைப்பழம்  -  ஒன்றை உணவுக்குப் பின்னும் சாப்பிடுவது  நல்லது...


வயல் வெளிகளில் தச்சுக் கூடங்களில் இரும்புப் பட்டறைகளில் கட்டுமானப் பணிகளில் - இதர தனியார் நிறுவனங்களில் நித்ய ஜீவனம் - உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பொதுவாக ஜீரணப் பிரச்னைகள்  இருப்பதே இல்லை..

அவர்களுக்கு சாப்பிடப் பசிக்கும்.. சாப்பிட்டாலும் செரிக்கும்..

இப்படியானவர்களைத தகர்ப்பதற்காக வந்தவையே - மது, புகையிலை, குட்கா, மைதா, பரோட்டா - போன்றவை..

அரசுப்பணி என்று அமர்ந்தவர்களுக்கு கடைசி வரைக்கும் நிரந்தர வருமானம் என்றாலும் உள்ளுக்குள் ஆயிரம் குத்து வெட்டு.. 

எப்படியோ அறுபது சதவீதம் நேர்மையாகப் பணியாற்றி முடித்து விட்டு ஓய்வு பெறும்போது - பணப் பயன்களுடன் அலுவலகப் பணி அளித்த பலவகை நோய்களும் கூடவே வெகுமதியாக வருகின்றன.. 

உயிர் வாழ்வதற்காக வேறு விதங்களில்  
உணவு முறை மாற்றங்களைக் கடைப்பிடித்தாலும்,

 நன்றி
நவீன பொருளாதார முன்னேற்றத் திட்டங்களால் நாளுக்கு நாள் வேளாண்மை நிலப்பரப்பு குறைக்கப் படுகின்றது.. 

வேளாண் பணிகளைச் செய்வதற்கு மனம் உவந்து ஆட்கள் வருவதும் இல்லை..


இன்னபிற காரணங்களாலும்
உணவுப் பொருட்களின் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன..


தேடுவார் அற்றுக் கிடந்த சிறு தானியங்களின் விலையை இன்று கேட்டாலே அயர்ச்சி ஏற்படுகின்றது..

ஆறடி என்று நிர்ணயமானது வாழ்க்கை.. 

இதை உணர்ந்து கொள்ளாத பலர் தமது வாழ்வில் தலைக்கு மேல் ஏகப்பட்ட உயரத்துக்கு காசு பணம் தங்கம் வைரம் என்று சேர்த்து வைத்திருக்கின்றனர்.. 

இப்படி சேர்த்து
வைத்திருப்பவர்களுக்கு  -  காலம் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் இவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்பதைத் தவிர, வேறு எவ்விதக் கவலையும் கிடையாது.ஆனால், என்னைப் போல - அதோ அவரைப் போல - வயதான காலத்தில் எவ்வித வருவாயும் அற்ற ஏழையர் ஏது செய்ய இயலும்?..

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?.. என்றொரு பழமொழி உண்டு..


அதைப் போல நீரிழிவுடன் வேறு பொருளாதாரப் பிரச்சினையும் ஏற்பட்ட பிறகு சிறு தானியங்களுக்கு ஆசைப்படலாமா?.. என்றிருக்கின்றது.. 

இங்கே - பொது வழங்கல் முறையில் கோதுமை கூட கொடுக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இம்மண்ணில், 
கிளைக்குக் கிளை தாவித் திரிகின்ற அணில் முதற் கொண்டு கோயில் வாசல் கிழட்டு ஆனை வரைக்கும் நல்ல படியாக நீடூழி வாழ வேண்டும் என்பதுவே ஆசையாக இருக்கின்றது.. 

அதற்கு முதல்படி - 
நோய் நொடி உடற் கோளாறுகள் இல்லாமல் இருப்பது..

இப்படியான வரத்தை
அனைவருக்கும் அருள வேண்டும் என
இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

புதன், ஜூலை 26, 2023

ஆடிச் சுவாதி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 10
புதன் கிழமை


திருக்கயிலாய மாமலையின் பனித் திரளில் இருந்து சிவபெருமானது பார்வையினால் தோன்றியவர் சுந்தரர்..

ஈசனுக்கு அருகில் திருநீற்று மடல் தாங்கியிருந்தவர் சுந்தரர்..


தேவியின் பணிப் பெண்களாகிய கமலினி அநிந்திதா எனும் தேவ மங்கையர் கயிலாயத்தின் நந்தவனத்தில் மலர் கொய்தபோது
கண் இமைப்பொழுது அவர்களைக் கண்டு நோக்கியதால  புவியில் பிறக்கும்படி நேரிட்டது..

இறைவன் அருளாணையின்படி
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திரு ஆரூரில் பரவை நாச்சியாரை மணம் கொண்டு,


நாச்சியாரின் திரு மாளிகையிலேயே எழுந்தருளி
திரு ஆரூரில்  உறைந்தருளும் தியாகேசப் பெருமானை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார்..

அந்த வேளையில்
திருநாட்டியத்தான்குடி தலத்தில் வாழ்ந்து வந்த  கோட்புலியார் - இவர் முன்பொரு சமயத்தில் போர்த் தொழில் உடையவர் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அருட்திறத்தைக் கேள்வியுற்று -

திரு ஆரூருக்கு வந்து ஸ்வாமிகளை வணங்கித் தொழுது தம்முடைய ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு பணிவுடன் 
அழைக்கின்றார்.  

சுந்தரரும் இசைவு கொள்ள கோட்புலியார் மகிழ்வுடன் தமது இல்லத்திற்கு விடைபெற்றுச் செல்கின்றார். 

சில தினங்களில் வன்தொண்டர் ஆரூரிலிருந்து புறப்பட்டுத் திரு நாட்டியத்தான்குடி தலத்தினை அடைகின்றார். 

எம்பெருமான் - இத்தலத்தில்
ரத்னபுரீஸ்வரர், மாணிக்கவண்ணர் - எனும் திரு நாமங்கள் கொண்டு அன்னை ஸ்ரீ மங்களாம்பிகையுடன் அருள் பாலிக்கின்றார்..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் வருகையை ஊர் மக்களுக்கு அறிவித்த கோட்புலியார்  தமது இல்லத்தையும் வீதியினையும் நல்ல முறையில் அலங்கரிக்கின்றார்..

ஊரின் எல்லையில் தம்பிரான் தோழரைக் கண்டு மனமகிழ்ந்து மேள தாள சிவ கோஷங்களுடன் வரவேற்று தம் மனைக்கு அழைத்துச் செல்கின்றார்.. 

ஸ்வாமிகளை தங்கப் பலகையில் எழுந்தருளச் செய்து,  திருப்பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்து சிவானந்தம் கொள்கின்றார். 

ஸ்வாமிகளுக்குத் திருவமுது செய்விக்கின்றார். 
தம்முடைய புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் அழைத்து சுந்தரரைப் பணியச் செய்கின்றார்.. 

அத்துடன்,
" அடியவனின் புதல்வியராகிய இவர்களைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு அருள வேண்டும்.. "- என்று விண்ணப்பமும் செய்து கொள்கின்றார்.      

அது கேட்ட சுந்தரர், பெருங் கருணையுடன் அம்மங்கையர் இருவரையும் தம்முடைய புதல்விகளாக அறிவித்து -  ஏற்றுக் கொண்டு இரும்பூது எய்துகின்றார்.. 

சிங்கடி, வனப்பகை இருவரையும் - தம் மடிமேல் இருத்தி ஆசி கூறி அருள்கின்றார்..

பின்னர் அனைவருடனும்  திருக்கோயிலுக்குச் சென்று, ஈசன் எம்பெருமானைக் கண்ணார தரிசித்து  திருப்பதிகம் பாடித் துதித்தார்..

திருப்பதிகத்தின் 
நிறைவில் கோட்புலி நாயனாரைச் சிறப்பித்துப் பாடி - தம்மைச் சிங்கடியப்பன் என்று குறித்து மகிழ்கின்றார் சுந்தரர்..

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற 
கொடிறன் கோட்புலி சென்னி 
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான்குடி 
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடியப்பன் 
திரு ஆரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின் தொண்டீர் 
பாடநும் பாவம் பற்றறுமே.. (7/15/10)


அதன்பின் -
மேலை வினையின் பயனாக திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு அன்பு கொண்டு -  உனை விட்டு நீங்க மாட்டேன்.. - என, சூளுரை செய்து கொடுத்து அவருடன் வாழ்ந்தார்.. 

சில மாதங்களில் ஆரூர் காண்பதற்கு ஆவல் மீதூற - தாம் செய்து கொடுத்த சூளுரையை மீறி ஒற்றியூரின் எல்லையைக் கடந்தபோது இரு கண்களிலும் பார்வையைப் பறி கொடுத்தார்.. 

காஞ்சியில் காமாட்சி அன்னையின் திருவருளால் வலக் கண்ணைப் பெற்ற சுந்தரர் ஆரூரில் இடக் கண்ணையும் பெறுகின்றார்..

சுந்தரரின் செயலால் மனம் வருந்தியிருந்த பரவை நாச்சியாரின் மனைக்கு தூது சென்றனன் பரமன்..

அச்சமயம் 
ஆரூர் பூங்கோயிலில் திருத்தொண்டர் தொகையைப் பாடுகின்றார்..


குண்டையூர் கிழார் அளித்த நெல் மூட்டைகள் ஈசன் அருளால் நெல் மலைகள் ஆகின்றன..  

அந்த நெல் மலையை சிவ பூத கணங்களைக் கொண்டு ஆரூரின் மனைதோறும் நிறைத்தவர் சுந்தரர்..


அவிநாசி தலத்தில் முதலை விழுங்கிய பாலகனை மீட்டு அளித்தவர்..

மலைநாட்டின் திரு அஞ்சைக் களத்தில் சுந்தரர் இருந்த போது காலம் கனிந்தது..
 
ஐராவணம் எனும் வெள்ளை யானையை  எம்பெருமான் கருணையுடன் அனுப்பி வைத்தார்..


நிறை தேகத்துடன்  வெள்ளை யானையில் ஆரோகணித்து
தனது தோழராகிய சேரமான் பெருமாளுடன் திருக்கயிலாய மாமலைக்கு ஏகினார் சுந்தரர்..

திருக்கயிலாயத்தின் தோர்ண வாயிலில், 
" உமக்கு இப்போது அழைப்பில்லையே!.. " - என, பூத கணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் சேரமான் பெருமாள்..

சுந்தரர் அம்மையப்பனைத் தரிசித்து தமது தோழராகிய சேரமான் பெருமாளுக்கும் திருக்காட்சி நல்குமாறு விண்ணப்பித்துக் கொண்டார்.. 

சுந்தரர் தம் பிரார்த்தனையின் பேரில் அம்மையப்பனைத் தரிசித்த சேரமான் பெருமாள் திருக் கயிலாய ஞான உலா பாடித் துதித்தார்..


சுந்தரரின் திருக் கயிலாயத் திருப்பதிகத்தினை வருணனும் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலாவினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் பூவுலகிற்கு கொண்டு வந்து சேர்த்ததாக சிவ மரபு..

இப்பூமியில் பதினெட்டு ஆண்டுகளே வாழ்ந்து ஈசன் தமக்களித்த செல்வங்களைப் பிறர்க்கே அளித்து -  செயற்கரிய செயல்கள் பல செய்தவர் சுந்தரர்..

சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்கள் மூவாயிரத்து எண்ணூறு.. நமக்கு  கிடைக்கப் பெற்றவை நூறு திருப்பதிகங்கள் மட்டுமே.. 

அவற்றுள் ஏழு திருப்பதிகங்களில் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், ஒன்பது திருப்பதிகங்களில்  வனப்பகையப்பன் என்றும் குறித்து மகிழ்கின்றார்.. 


சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
திருக்கயிலாயத்திற்கு ஏகிய 
ஆடிச் சுவாதி இன்று..
**

சேரமான் பெருமாள் நாயனார் போற்றி..
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

செவ்வாய், ஜூலை 25, 2023

திருக்கயிலை 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 9
செவ்வாய்க்கிழமை


திருக்கயிலாயம்


தேவாரப் பாடல் பெற்ற  வட நாட்டுத் தலம். 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  - என, மூவராலும் பதிகம் பெற்றிருக்கின்ற்து..

பாரதத்தின் புனிதத் தலம்..
சிவ வழிபாட்டில் உள்ள மக்களின் புனிதத் தலமாக மட்டுமல்ல.ஆதி திபெத்தியர்க்கும் சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும்  புனிதத் தலமாகத் திகழ்கின்றது..

திருக்கயிலை மாமலையைத் தரிசித்தவர்கள் - காரைக்கால் அம்மையார், அப்பர் பெருமான், சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார்
பெருமிழலைக் குறும்பர் நாயனார். ஒளவையார்..

சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா  - இன்னும் சில நதிகள் இந்த மலையில் தான் உற்பத்தியாகின்றன.. 

ஐம்பத்திரண்டு கிமீ., சுற்றளவு கொண்டது கயிலாய மலை..

இங்கிருக்கும் நீர்நிலை மானசரோருவம் - மானசரோவர் ஏரி.. பிரம்மதேவரின் மனதில் இருந்து உருவானது..

பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானோடு சேர்ந்து வந்து தேவர்களும், முனிவர்களும் இந்த ஏரியில்  நீராடுவதாக நம்பிக்கை..

மானசரோவர் ஏரியில் வாழும் அன்னப் பறவைகள் பாலையும் நீரையும் பகுத்து அருந்தும் தன்மை உடையன என்று சொல்லப்படுகின்றது.. 

உலகின் மிக உயரத்தில் இருக்கும்  நன்னீர் ஏரி இது ஒன்றே!.. - என்ற புகழை உடையது..

இதுவரை கயிலாய மலையில் யாரும் 
ஏறியது இல்லை..

1926 ல் ஹக் ரட்லஜ் என்பவன் கைலாயத்தின் வடக்கு முகமாக ஏறுவதற்கு முனைந்த போது முயற்சியைக் கைவிட நேர்ந்தது.. 1936 ல்  ஹெர்பர்ட் டைச்சி என்பவனும் இதில் தோற்றுப் போனான்..

இலங்கை வேந்தன் ராவணனே கயிலாயத்தில் தனது  வீர தீர பராக்கிரமத்தைக் காட்டுதற்கு முனைந்து மலையின் கீழ் சிக்கிச் சீரழிந்தான் என்று இருக்கையில் மானிடப் பதர்கள் எம்மாத்திரம்!?..

" கைலாஷ் பரிக்ரமா " எனும் கிரி வலத்தின் போது, ​​கயிலாய மலையின் மையத்தில் இருந்து பிரார்த்தனைகளும் கோஷங்களும் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கின்றனர்.. 
சில வேளைகளில் பிரபஞ்சப் பேரொலிகளும் இயங்குகின்றன..

திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 6638 மீட்டர்
(21778 அடி).. இதில் 1800 மீட்டர் (6000 அடி) செங்குத்து என்று கணக்கிடப்பட்டுள்ளது..


இந்த மலையில்  ஒளிந்துள்ள மர்மங்களைக் 
கண்டறிவது என்பது இயலாது.. 

உண்மையைக் கண்டறிகின்றேன் - என்று பலர் புறப்பட்டு உயிரை விட்டதாகவும் சொல்லப்படுகின்றது..

" பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும் " - என்றொரு சொல் வழக்கு திபெத் மக்களிடம்..

பாவங்கள் அற்ற மனிதனுக்கு இப்படியான எண்ணங்கள் வராது என்பதே உண்மை..

தஞ்சை தட்சிணமேரு

புற்றரவு பற்றியகை நெற்றியது 
மற்றொருக ணொற்றைவிடையன்
செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
ணற்றுணைவ னுற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு 
குற்றமில தெற்றெனவினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி 
பெற்றகயி லாயமலையே.. 3/68/2
-: திருஞானசம்பந்தர் :-

பண்ணின் இசையாக
நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..6/55/7
-: திருநாவுக்கரசர் :-


மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள் புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே.. 7/100/3
- : சுந்தரர் :-

ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி!..
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 24, 2023

திருக்கயிலை 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 8
திங்கட்கிழமை

இன்று
திருக்கயிலாய
தரிசனம்


நன்றி
Nepal Mountain Guides
** 

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6/55/7
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***