நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 27, 2018

அன்பின் ஆரூரர் 2

கடந்த சனிக்கிழமை (21/7) ஆடிச் சுவாதி...

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தமது நண்பர் ஸ்ரீ சேரமான் பெருமாளுடன்
திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய நாள்..

திருச்சோற்றுத்துறை
சகல சிவாலயங்களிலும் இவ்வைபவம்
இயன்றவரை சிறப்பாக கொண்டாடப்பெற்றது....

நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற
அந்த வைபவக் காட்சிகள் இன்றைய பதிவில் - தங்களுக்காக!...

படங்களை வழங்கியோர்
சிவனடியார் உழவாரத் திருக்கூட்டம்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...

இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரர் அருளிய திருப்பதிகப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன...

திருச்சோற்றுத்துறை 
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94)

திரு ஐயாறு 
திருக்குடந்தை 
திருச்சிராப்பள்ளி 
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயாஎம் பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. (7/27)

திரு மயிலை 
மதுரையம்பதி
சேரமான் பெருமாள் - மதுரை 
திரு அண்ணாமலை 
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29)

திருநாட்டியத்தான்குடி 
காட்சி கொடுத்த நாயகர்., திருநாட்டியத்தான்குடி..
கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே பலகற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார் தம்முடைய நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நான் உமக்கல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ..(7/15)

திரு ஆரூர் 
திரு ஆரூர்
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரனை மறக்கலுமாமே!..(7/59) 

சுந்தரர் - கொடுங்கோளூர் 
சேரமான் பெருமாள்
கொடுங்கோளூர்
திரு அஞ்சைக்களம்
ஸ்ரீ சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்ட திருத்தலம்..

நொடித்தான்மலை எனப்படும் திருக்கயிலாய மாமலை 
இந்திரன் மால்பிரமன் எழிலார் தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவனாரென எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்தான்மலை உத்தமனே..(7/100)
-: சுந்தரர் :-

சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

திங்கள், ஜூலை 23, 2018

திருக்காளத்தி தரிசனம்

திருமலைப் பயணத்தின் மூன்றாம் நாளும்
திருமலையில் இரண்டாம் நாளுமாகிய
வெள்ளிக் கிழமையின் மாலைப் பொழுது...

சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் -
ஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...

திருமலை பேருந்து நிலையத்திலிருந்து -
திருப்பதியை வந்தடைந்து விட்டோம்...

அன்று பிரதோஷம்...
எங்கள் இலக்கு - திருக்காளத்தி...

திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து
திருக்காளத்திக்குப் புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது...

திருக்கோயிலுக்கு முன்பாகவே
கடைவீதியில் இறக்கி விட்டார்கள்...

சாலையெங்கும் பரவலாக ஜல்லிக் கற்கள்...

23 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்காளத்தி தரிசனம்...

கோயிலுக்கு வழியைக் கேட்டுக் கொண்டு வந்தடைந்தோம்...

வழியெங்கும் கடைக்காரர்களின் கூக்குரல்...

திருக்காளத்தியிலும் கோயில் வளாகத்தில் படங்களெடுக்கத் தடை...

பொருள்களை வைத்துச் செல்வதற்கு கட்டணம்...
கட்டணம் அதிகம் என்று தோன்றியது...

பொருள்களை அங்கே வைத்து விட்டு திருக்கோயிலுக்குள் நடந்தோம்...

திருக்கோயிலின் வரப்ரசாதி - ஸ்ரீ பாதாள விநாயகர்...

ஆனால், சந்நிதி அடைக்கப்பட்டிருந்தது...
மறுநாள் காலையில் தான் திறக்கப்படும் என்றார்கள்...

திருக்கோயிலுக்குள் செல்வதற்கு இடுக்கு முடுக்காக கம்பித் தடுப்புகள்..

அவற்றுள் புகுந்து -
ஸ்ரீ அதிகார நந்தியம்பெருமானை வணங்கியபடி தொடர்ந்து நடந்தோம்...

தங்கக் கொடிமரத்தைக் கடந்து -

இதோ - எம்பெருமானின் திருமூலத்தானம்...

திருத்தலம் - திருக்காளத்தி


இறைவன் - திருக்காளத்தி நாதன்
அம்பிகை - வண்டாருங்குழலாள்

தலவிருட்சம் - மகிழமரம்
தீர்த்தம் - பொன்முகலி (ஸ்வர்ணமுகி) ஆறு..

சந்தமார் அகிலொடு சாதித் தேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் 
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே..(3/36) 
-: திருஞானசம்பந்தர் :-

சிலந்தியும் நாகமும் யானையும் வழிபட்ட திருத்தலம் - திருக்காளத்தி..

ஐம்பூதங்களுள் - வாயு தலமாகப் புகழப்படுவது...
திருக்கோயில் மேற்கு நோக்கி விளங்குகின்றது

வேடுவராகிய திண்ணப்பர் 
நாளாறில் கண்ணப்ப நாயனாராகி 
சிவதரிசனம் பெற்றதும்

எண்ணற்ற அருளாளர்களால்
போற்றி வணங்கப்பெற்றதும் ஆகிய திருத்தலம்...

மூலத்தானம் முழுதும் திருவிளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது...

திகட்டாத தேனமுதாக -
கண் நிறைந்த தரிசனம்....

இத்திருத்தலத்தில் திருநீறு வழங்கப்படுவதில்லை என்கிறார்கள்..
திருச்சுற்றில் சங்கு தீர்த்தம் வழங்கப்பட்டது...

ஈசனின் சந்நிதிக்கு வலப்புறமாக திருச்சுற்று மண்டபத்தில்
பதினாறு வயது மதிக்கக்கதாக ஐந்தரை அடியளவில்
வில்லைத் தாங்கிய வண்ணமாக காலில் செருப்புடன்
திரு கண்ணப்ப நாயனார்...

கண்ணப்ப நாயனார் காட்டிய அன்புக்கும் பக்திக்கும் ஈடு ஒன்றில்லை!...
அதனால் தான் -


கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்கருணைச் 
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ!..

- என்று கசிந்துருகுகின்றார் மாணிக்கவாசகர்...

கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்து
தலை வைத்து வணங்கினோம்...

திருமலையில் மீனின் மீதமர்ந்த
ஐயப்பன் கோலம் பற்றிச் சொல்லியிருந்தேன்...

அதே போல இங்கும் ஒரு சிற்பம்...

திருச்சுற்று மண்டபத்தில் கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலைக்கு
முன்பாக இருக்கும் தூணில் காணப்படுகின்றது....


நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காண் அவனென் கண்ணுளானே..(6/8) 
-: திருநாவுக்கரசர் :-

திருச்சுற்றில் நடக்கும்போது
தமிழகத்துத் திருக்கோயிலில் இருப்பது போன்ற உணர்வு...

கலைநயமிக்க தூண்களுடன் கூடிய விசாலமான மண்டபங்கள்...
அழகழகான சிற்பங்கள்...

இத்தலத்தில் நவக்ரஹங்கள் இல்லை..
ஆனாலும், சனைச்சரனின் திருவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது...

காளத்தியின் கடைத்தெருவில் வாங்கிய
உதிரிப் பூக்களை திருச்சுற்றில் விளங்கும்
தெய்வத் திருமேனிகளின் திருவடிகளில் சாத்தி வழிபட்டோம்...

திருச்சுற்றில் வலம் வந்து அம்பாள் சந்நிதியை அடைந்தோம்...


ஸ்ரீ ஞானப் பூங்கோதையாள்
அவ்வேளையில் திருச்சுற்றில் எழுந்தருளியிருந்தாள்..

அளவில் பெரியதான நிலைக் கண்ணாடியின் முன்பாக
தேவியின் திருவடிவத்தினை எழுந்தருளச் செய்து
சோடஷ உபசாரங்களுடன் மகா தீபஆராதனை நிகழ்ந்தது...

அம்பிகையின் சந்நிதியிலும்
அற்புத தரிசனம் அருளப் பெற்றது....

திருச்சுற்று வலம் செய்து வெளியே வந்தோம்..

இங்கே அர்த்த ஜாம பூஜை நிகழ்வதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது...

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்தோம்...

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள்..
ஒன்பது மணிக்கெல்லாம் ஊரடங்கி இருந்தது...

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு
கோயில் வாசலில் தலை சாய்த்துப் படுத்தோம்...

எங்களைப் போல இன்னும் பலர்...
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர்.. 

காரணம் கொசுக்கடி...

திருமலையுடன் ஒப்பிடுகையில்
காளத்தியின் சுற்றுப்புற சுத்தம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை...

பொழுது விடிந்தது...
அன்றைய தினம் தமிழ் வருடப் பிறப்பு...

அருகிருந்த குளியலறையில் குளித்து முடித்து விட்டு
சிவ தரிசனத்திற்கு ஆயத்தமானோம்...

நாகம் வழிபட்ட தலம் என்பதுடன்
ராகு கேது வணங்கிய தலம் எனவும் ஐதீகம்...

எனவே,
விடியற்காலையிலேயே -
ராகு கேது பரிகார பூஜைகள் தொடங்கி விட்டன...

அந்த அதிகாலைப் பொழுதில்
ஸ்ரீ பாதாள விநாயகர் தரிசனம்...

நாற்பதடி பள்ளத்தினுள் அமர்ந்திருக்கின்றார் ஸ்ரீ விநாயகர்...

ஸ்ரீ விநாயகப் பெருமானின் பீடமும்
ஸ்வர்ணமுகி ஆற்றின் படுமையும் ஒரே மட்டம்...

அதாவது ஆற்றின் மட்டத்திலிருந்து கோயிலின் உயரம் நாற்பதடி...

ஸ்ரீ பாதாள விநாயகர் கோயிலின் வாசல் மிகக் குறுகியது..
உள்ளிறங்கும் படிக்கட்டுகளும் மிகக் குறுகலானவை....

கீழே இறங்கியோர் மேலேறி வந்தபின்னர் தான்  
மேலும் சிலர் இறங்கி தரிசனம் செய்ய இயலும்.... 

ஆனாலும், வழக்கம் போல - மக்கள் பொறுமையின்றி
முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்...

குறுகிய வாசல் வழியாக உட்புகுந்து -
அதனினும் குறுகிய படிகளின் வழியாக உள்ளிறங்கி
விநாயகப் பெருமானை தரிசித்தோம்...

அங்கிருந்து மேலே ஏறுவதற்குள்ளாக
விடாப்பிடியாக வேறு சிலர் கீழிறங்கினார்கள்...

புரிதலற்ற ஜனங்களை மேலே விரட்டிய பின்னரே
எங்களால் மேலேற முடிந்தது..

விநாயக தரிசனம் செய்தபின்
திருக்காளத்தி நாதனையும் ஞானப்பூங்கோதையாளையும்
மீண்டும் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தோம்...

தமிழ்ப் புத்தாண்டு நாள்.. ஆயினும்,
பரிகாரம் தேடி வந்தவர்களைத் தவிர்த்து
பெரிதாகக் கூட்டமில்லை...

திருக்கோயிலிலிருந்து வெளியேறும்போது
கொடிமரத்தின் அருகில் - அருள்தரும் ரோமரிஷி சந்நிதி!....

பல்வேறு தலங்களிலும் எதிர்பாராத விதமாக
எதிர் கொண்டு திருக்காட்சி தருபவர் ரோமரிஷி..

மனதார அவரை வணங்கி மகிழ்ந்தோம்...

நுண்ணலை பேசிகள் முற்றாக செயலிழந்திருந்தன...
எனவே, எந்த ஒரு படமும் எடுக்க முடியவில்லை...

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்ததும்
தேவஸ்தானத்தின் பேருந்து வந்து நின்றது...

திருக்கோயிலுக்கும் காளத்தி ரயில் நிலையத்திற்கும் இடையே
எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்களுக்காக இயக்கப்படுகின்றது...

அதிலே பயணித்து
திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் இறங்கிக் கொண்டோம்...

சில நிமிடங்களில் திருப்பதி செல்லும் பேருந்து...
ஒரு மணி நேரத்திற்குள் திருப்பதிக்கு வந்து விட்டோம்...

சாலையோரத்தில் உணவகங்கள்..
சூடான இட்லி, தோசை, தக்காளி, கார சட்னி வகையறாக்கள்..

வா.. வா.. என்றன... அப்புறம் என்ன!...

பசியாறல் தான்!...


செண்டாடும் விடையாய் சிவனேயென் செழுங்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே..(7/26) 
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
ஃஃஃ

சனி, ஜூலை 21, 2018

அன்பின் ஆரூரர் 1

இன்று ஆடிச் சுவாதி...

வன் தொண்டர் என்று புகழப்பெற்ற
நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்...

சுந்தரருடன் அவரது நண்பராகிய
சேரமான் பெருமாளும் திருக்கயிலாய மாமலையில் சிவகதி எய்தினார் என்பது திருக்குறிப்பு...

நேற்று மதியத்திலிருந்து
சுவாதி நட்சத்திரம் பயின்று வருகின்றது..

இதை அனுசரித்து நேற்றும் இன்றுமாக
ஆரூரர் குருபூசை நிகழ்கின்றது...

திரு ஆரூரிலும் திருநாவலூரிலும் நிகழ்வுறும் பெருவிழாவின் சில காட்சிகள்
இன்றைய பதிவில்...

நிகழ்வுகளை வழங்கியோர்
சிவனடியார் உழவாரத்திருக்கூட்டம்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியார் திருக்கல்யாண வைபவம் திரு ஆரூரில்...ஸ்ரீ சுந்தரர் ஸ்ரீ பரவை நாச்சியார் திருக்கல்யாணம்திருநாவலூர் வைபவங்கள் 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திரு ஆரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கதியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே..
- சுந்தரர் -

ஆரூரர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், ஜூலை 19, 2018

நீதியே துயிலெழாய்...

கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்...

இப்படியும் கூட இருக்கின்றனவா?..
இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று!...

எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாது போயிற்று?...


அந்தப் பெண் குழந்தையைச் சிதைத்த பதினேழு பேர்களுள்
ஒருவன் கூடவா நல்ல சோறு தின்னவில்லை?...

அந்தப் பாவிகளுள் ஒருவன் சொல்லியிருக்கின்றான் -
ஹாசினியைப் போல இந்தப் பெண்ணையும் தீர்த்துக் கட்ட முயன்றோம்!.. - என்று...

ஹாசினியைக் கொன்றவன் இந்நேரம் சாம்பலாகி இருந்தால்
இந்தப் பாவிகளுக்கு கொஞ்சமாவது மனம் நடுங்கியிருக்கும்...


தலைநகரில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையை மறந்திருக்க மாட்டோம்...

நிர்பயாவுக்கு அதிகபட்ச கொடுமையைச் செய்தவன் - 18 வயது ஆகாதவன்... 

இந்தப் பாவிதான் உள்ளுறுப்புகளைச் சிதைத்து வெளியே இழுத்துப் போட்டவன் என்று ஊடகங்கள் பேசின...

ஆயினும்,

அவனுக்குக் கடுந்தண்டனை கொடுக்க இயலாது என்று விடுவித்தது சட்டம்... 

இப்போது அவன் எங்கோ சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்...

நிர்பயாவைச் சீரழித்து சிதைத்த மாபாவிகள்
மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலாவது

இந்தப் பாவிகளின் நெஞ்சம் வெகுவாக நடுங்கியிருக்கும்...

ஆனால்,
நிர்பயா வழக்கில் அந்த இளங்குற்றவாளியை
சீதனத்துடன் வழியனுப்பி வைத்த நாடாயிற்றே - நம்முடையது!..

இன்னும் ஒரு சாரார் சொல்லுகின்றனர் -
அரபு நாட்டின் சட்ட திட்டங்கள் மேலானவை - என்று...

1450 ஆண்டுகளாகத்தான் அவையெல்லாம்....
சில மாதங்களுக்கு முன் கூட -
அங்கே குற்றவாளியின் தலைவெட்டப்பட்டது...

அப்படியானால் இன்னும் மனிதன்
திருந்தவில்லை என்பதே பொருள்...

முதல் தலைவெட்டினைக் கண்டு நடுங்கிய மனிதன்
எப்போது அந்த அச்சத்திலிருந்து நீங்கினானோ
அப்போதே நீதியும் நேர்மையும் தளர்ந்து விட்டன...

இதெல்லாம் இப்படியிருக்க
நம்முடைய பாரதத்தின் நீதிநெறி முறை எப்படிப்பட்டது!?...

இதோ சில சான்றுகள்...


காசி மன்னனின் மகனைக் கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்டு இப்போது கொலைக்களத்தில் நிற்கிறாளே...
இவள் எனது மனைவி...

ஆனாலும்.. நான் நீதி தவறேன்...

மன்னனின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது
மயானக் காவலாளியாகிய எனது கடமை!..
நீதிநெறியிலிருந்து ஒருநாளும் தவற மாட்டேன்!..

- என்று தன் மனைவியின் மீதே வாளை ஓச்சியவர் 
ஸ்ரீ ஹரிச்சந்த்ர மஹாராஜா!..
***

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்...

உயர்நிலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்...
வழக்கில் நால்வர் சிறை பிடிக்கப்பட்டனர்...

தீர விசாரிக்கப்பட்டது...

பாண்டவர்களுள் மூத்தவராகிய தர்மபுத்திரர் தீர்ப்பை வழங்கினார்..
அதன்படி -

பொருளுக்காகக் கொலையைச் செய்தவன் - சூத்திரன்...
மன்னிப்புடன் விடுவிக்கப்பட்டான்..

கொலைக்குப் பொருளுதவி செய்தவன் - வைசியன்..
தலை மழிக்கப்பட்டு கரும்புள்ளி செம்புள்ளியுடன் நாடு கடத்தப்பட்டான்...

கொலையாளிக்குப் பாதுகாப்பு தருவதாகச் சொன்னவன் - க்ஷத்திரியன்..
கொலைக் களத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டான்...

கொலைக்கான உத்தியை வகுத்துத் தந்தவன் - வேதியன்..
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டான்...
***
அவ்வளவு ஏன்!..

பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் இவனே!.. 
- என்ற குற்றச்சாட்டின் பேரில்
விசாரணை நடத்தப்படா விட்டாலும் 
பூம்புகாரின் கோவலனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு - மரணம்!...
***

உஜ்ஜையினி மாநகரிலும் இதே போல ஒன்று..

அரசே!.. அரண்மனையில் களவு போன நகைகள் இந்த ஆளின் கழுத்தில் கிடந்தன..

அப்படியா... கழுவில் ஏற்று!...

தீர்ப்பு சொன்னவர் - பர்த்துருஹரி மகாராஜா....

குற்றவாளியாய் நின்றவர் பட்டினத்தடிகள்...

அன்றைக்கு பூம்புகாரில் வைரத்தூண் நாட்டி வணிகம் செய்தாரே - அவர்!..

பட்டினத்தடிகளைக் கழுவேற்றும் போது 
கழுமரம் பற்றி எரிந்து சாம்பலாகப் போனதும்

பர்த்துருஹரி மகாராஜா திருவோடு ஏந்தி 
தெருவோடு போனதும் தனிக்கதை...
***
மாநகர் மதுரையில் -
அர்த்த ராத்திரியில் ஒரு வீட்டின் கதவை
சந்தேகத்தின் பேரில் தட்டி விட்டான் - அவன்!..

அவன் - இரவில் ஊர்க்காவல் வந்த பாண்டிய மன்னன்..

அப்படித் தட்டிய பிழைக்காக -
தனது முன்கையைத் தானே வெட்டிக் கொண்டான்...

அவனைப் பொற்கைப் பாண்டியன் என்கின்றது வரலாறு...
*** 

கொள்ளையர்களைப் பிடிக்கக் கடமைப்பட்டவன்
அவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டான்!..

- என்று பொய்யுரைக்கப்பட்டதால்,
அதே மதுரையில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டது சோழ நாட்டு வீரனுக்கு!..

அவனே இன்றைக்கு மதுரை வீர ஸ்வாமி!...
***


சாதாரண திருட்டுக் குற்றங்களுக்கே
மரண தண்டனை - எனில்
செங்கோன்மையா.. கொடுங்கோன்மையா!..

எல்லாவற்றுக்கும் மேலாக -
திரு ஆரூர் மாடவீதியில் பசுங்கன்று ஒன்று
தேரில் அடிபட்டு மாண்டு போனது....

அந்தத் தேரை ஓட்டி வந்தவன் அரசிளங்குமரன்...

நடந்ததைக் கண்டவர்கள் பற்பலர்..

அடே... மூடனே!.. 
மாட்டைக் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டாமா?..
இப்படியா தெருவில் அலைய விடுவது!...

இளவரசே.. நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் .. இளவரசர் வாழ்க!..

வாழ்க.. வாழ்க!..

மாட்டுக்குரியவனும் வாழ்க.. - என்று சத்தம் போட்டுவிட்டு,
 விதியே!.. - என்று வீட்டுக்குப் போனான்...

ஆனால்,
கன்றை இழந்த பசு போய் நின்ற இடமோ அரசனின் மாளிகை...

நின்றதோடு அல்லாமல்
அங்கே தொங்கிக் கொண்டிருந்த வெங்கல மணியைப் பற்றியிழுத்தது...

ஒருநாளும் இல்லாத திருநாளாக -
ஆராய்ச்சி மணி ஒலிப்பதைக் கேட்டு ஊரே அதிர்ச்சியுடன் திரண்டு வந்தது...

மாட்டுக்குரியவனும் அந்தக் கூட்டத்திலிருந்தான்..

அரண்மனையின் வாயிலருகில் கண்ணீரும் கம்பலையுமாய்ப் பசு!...

மன்னன் நேரிடையாக விசாரித்தான்...

அது ஒன்னுமில்லீங்க மகராசா!...
மாட வீதியில நம்ம சின்னராசா தேர்ல... போனாருங்களா!..
அப்போ ஒரு கன்னுக்குட்டி குறுக்கால ஓடி விழுந்துச்சுங்களா!
உசிரு போய்டுச்சுங்க... அது ஒரு நோஞ்சான் கன்னுக்குட்டிங்க!..

செத்துப் போன கன்னுக்குட்டி இந்த மாட்டோடதுங்க!...
அதுக்கோசரம் இந்த மாடு மணியப் புடிச்சு இழுத்துப் போட்டுடுச்சுங்க!..
அறிவு கெட்ட மாடுங்க இது... மகாராசா மன்னிக்கோணும்!..
இந்தா.. இப்பவே மாட்டை வெரட்டி விட்டுறோம்!... 
டேய்.. சின்னான்!.. உம் மாட்டப் பத்திக்கிட்டுப் போடா!..

நில்லுங்கள்!... - அரசனின் குரலுக்குக் கட்டுப்பட்டது கூட்டம்..

நான் தீர்ப்பு வழங்க வேண்டும்!..

தீர்ப்பா!.. - அதிர்ச்சியுடன் அதிசயித்தனர் மக்கள்...

ஏதோ ஒரு வராகன் ரெண்டு வராகன் கொடுத்தா 
வாங்கிட்டுக்கிட்டுப் போய்டுவான் - சின்னான்!.. இதுக்குப் போயி!..

ஏன்?.. சின்னான் வீட்டு கன்றுக்கு வாழும் உரிமையில்லையா ஆரூரில்!..
அது களிப்புடன் ஓடி விளையாட இடமில்லையா இந்தத் திருஆரூரில்!...

திருஆரூரின் மக்கள் திகைத்தனர்...

அமைச்சரே!.. குற்றவாளியைக் கிடத்தித் தேரை அவன் மீது நடத்துங்கள்!...

வேண்டாம்..வேண்டாம்!.. - கதறித் துடித்தனர் மக்கள்...

இவன் இளவரசன்.. எமக்கு அன்பானவன்.. 
இவனே எமக்கு அரணும் ஆனவன்!..
- என்ற நம்பிக்கை வரவேண்டாமா உங்களுக்கெல்லாம்!...

இவனது இன்றைய செயலைக் கண்டு
நாளைய உலகம் அஞ்சி நடுங்காதா?...
இவனது தேரின் மணிகள் ஆடும் போதெல்லாம்
உங்களது இதயமும் சேர்ந்தாடி நடுங்குமே!..

மக்கள் மீது ஏற்றுவானோ... மாக்கள் மீது ஏற்றுவானோ..
என்றெல்லாம் உங்கள் மனம் பதறித் துடிக்குமே...
அந்தப் பாவத்தை நான் எங்கே சென்று தொலைப்பேன்!...
எம் முன்னோர் தம் செங்கோல் வளைவதற்கு விடுவேன் அல்லேன்!..

வழி விட்டு நில்லுங்கள்.. இது அரச கட்டளை!..

அதற்கு முன்னும் பின்னும் நடக்காத வண்ணமாக
தனது மகனைக் கிடத்தி அவன் மீது தேரை நடத்தி
நீதியை நிலைநாட்டினான் - மனுநீதிச் சோழன்!...

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்!..

- என்று, இந்நிகழ்வினை
கற்புக்கரசியின் திருமொழியாக இயம்புகின்றார் இளங்கோவடிகள்...

இப்படியெல்லாம் -
நீதி நிலைநாட்டப்பட்டிருக்கின்ற திருநாடு நம்முடையது...

இத்தகைய நாட்டைப் பிடிக்க வந்தோர் -
நாடு காக்க முனைந்த நல்லோரை நடுத்தெருவில் தூக்கிலிட்டுக் கொன்றனர்..

செங்கிஸ்கான், அலாவுதீன் கில்ஜி முதற்கொண்டு
பின்வந்த டல்ஹவுஸி, பானர்மென் - எனப் பலரை அடையாளம் காட்டலாம்....

அந்த ஈனர்களைக் கடந்து
தர்மத்தின் வழி நடப்பது நம்முடைய நாடு...

இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் அவலங்களாகிய இந்த அற்பர்கள் அனைவரையும் நீதியின் வழி நின்று கொன்றொழிப்பதே சாலச் சிறந்தது...

நம்முடைய கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைப்பதற்கு மாற்றார் தலைப்பட்டனர்...

அதைக் கண்டு -
நம்மவர்களில் ஒரு சிலர் கை கொட்டிக் களித்தனர்.. 
அந்தக் கயவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்...

தாய்வழிக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் - 
நாம் விலக்கி வைத்ததன் விளைவுகளே இவை...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைக் கட்டதனோடு நேர்...

- எனும் அமுத மொழியைப் பின்பற்றி
தாமதிக்காமல் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்..

பொறுத்துக் கொள்ள முடியாத கொடுஞ்செயல்களைச் செய்யும்
கொடூரர்களை மிருகங்கள் என்று சொல்வதே மிகப் பெரிய பாவம்...

மிருகங்கள் எவ்வளவோ மேலானவை!..

இந்தப் பாவிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையால்
மற்ற கயவர்கள் தாமாகவே தமது மரணத்தைத் தழுவிக் கொள்ளவேண்டும்!..

ஆனால், அப்படியெல்லாம் பேராசைப்படமுடியுமா - நம்நாட்டில்!...

பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தை மனம் தெளியவேண்டும்...
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும்...
அதற்கு நாமெல்லாரும் வேண்டிக் கொள்வோம்..

ஓம் 
சக்தி சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

ஞாயிறு, ஜூலை 15, 2018

படிக்காத மேதை


அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. 
இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. 
நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது... ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்..
நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. 
கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. 
பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. 
நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு தான் இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. 
நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?..
இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - 
காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார்.. 
- என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது.... அதன் பின்  நாட்டில் - 
நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.


பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், 
கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..

தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 

சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.


கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 

பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

பெற்ற தாய் உடல் நலம் குன்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்தார்.

அவருடன் பயணித்தவர் திரு. பழ. நெடுமாறன்..

வீட்டில் படுத்த படுக்கையாயிருந்த அன்னையைக் கண்டார்.

இதுவே இறுதி சந்திப்பு என்று தாய் மனதில் தோன்றுகின்றது. மகனுக்கும் அவ்வாறே..

மனதைக் கல்லாக்கிக் கொண்டார். அருகிருந்த தங்கையிடம் பேசினார்..

உறவினர்களிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு புறப்பட யத்தனித்தார்.

மகனை ஆவலுடன் நோக்குகின்றன தாயின் கண்கள்..

சாப்பிட்டானோ - இல்லையோ.. ஏந்தலா இருக்கானே!..

பரிதவித்தது - தாயின் மனம்..

உலர்ந்திருந்த உதடுகள் பிரிந்தன..

சாப்பிட்டுப் போ.. ராசா!..

அந்த நேரத்தில், என்ன நினைத்தாரோ - எங்கள் ஐயா!..

கல்லான மனமும் கரைந்தது..

சரி.. - என்ற முகக் குறிப்பைக் கண்ட தாயின் முகத்தில் ஆனந்தப் பிரகாசம்..

எங்க அண்ணாச்சிக்கு சோறு போட்டு எவ்வளோ நாளாச்சு!..

தங்கை நாகம்மையின் மனம் பாசத்தில் பொங்கி வழிந்தது..

மகன் உண்ணுவதைக் கண்ட தாயின் மனம் இறும்பூதெய்தியது..

தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார் - மகன்..

விருதுநகரிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்டது - கார்.

காரினுள் மௌனம்.. அதைக் கலைத்தார் நெடுமாறன்.

ஐயா.. நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை வருடங்கள் இருக்கும்!?..

என்ன.. ஒரு.. முப்பது வருஷம் இருக்கும்!..

அமைதியாக பதில் வந்தது - பெருந்தலைவரிடமிருந்து..

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..


அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *