படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும்..
இது தான் முதல் நடவடிக்கை..
தான் பெறாத கல்வியை எனது மக்கள் பெற வேண்டும்.. அறியாமை எனும் இருள் அகல வேண்டும்.. வறுமை அதனால் நீங்க வேண்டும்...
இல்லாமை என்னும் இருளில் மக்கள் சிக்கிக் கிடக்கும்போது அறிவு ஒளியூட்டும் பள்ளிகளை மூடுவதா?..
எனும் உயரிய சிந்தனை மலர்ந்தது -
தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த ஏழைப்பங்காளரின் நெஞ்சில்..
அதன் விளைவாக -
அதற்கு முந்தைய ஆட்சியாளரால் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளும் திறக்கப்பட்டன..
அவை போதாதென்று மேலும் பதினாலாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன..
முதல் திட்ட முடிவில் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை - 21,500..
இரண்டாவது திட்ட காலத்தில் - 26,750..
வெகு விரைவில் முப்பதாயிரத்தையும் தாண்டியது..
ஆரம்பப் பள்ளிகளுக்கு வந்த மாணவர் தொகை முதல் திட்ட முடிவில் 25 லட்சம்..
இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 லட்சம்..
கல்வியின் சிறப்பை உணராத மக்கள் குழந்தைகள கல்லாத மூடராக்கி வரும் தீமைகளைக் கண்டு வெகுண்டார்.. கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார்..
பல்லாயிரக் கணக்கான பள்ளிகளின் மூலம் லட்சோப லட்சம் குழந்தைகளின் வாழ்வில் கல்வியறிவு எனும் ஒளியேற்றப்பட்டது..
இருந்தும் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவில்லையே!.. அது ஏன்?.. - என, சிந்தித்த போது - மூலகாரணம் கண்டறியப்பட்டது..
அதற்கான பரிகாரமும் தேடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..
ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் ஏழை எப்படித் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்?..
ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஆசை - தாய் தந்தையர்க்கு ஏற்படுமே - என்ற எண்ணத்தால் விளைந்ததே - மதிய உணவுத் திட்டம்..
மதிய உணவுத் திட்டம் மேலும் பல்லாயிரம் சிறார்கள் பள்ளிக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது..
பள்ளிகளைக் கட்டுவதும் ஆசிரியர்களை நியமிப்பதும் பகல் உணவு வழங்குவதும் ஏதோ சர்க்கார் செய்ய வேண்டிய வேலை.. அதில் நமக்கென்ன இருக்கின்றது!.. - என்ற மனநிலையில் இருந்த மக்களை -
கல்வி இயக்கத்துடன் இணைத்த பெருமையும் அவருக்கே உரியது..
தமிழகம் முழுவதும் பள்ளி வளர்ச்சிக்கென 133 மாநாடுகளை நடத்தி மக்களை கல்விப் பணியுடன் இணைத்ததால் கிடைத்த நன்கொடை 6. 47 கோடி..
அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் சிலேட்டு முதலியன வழங்கப்பட்டன...
குழந்தைகளின் மனதில் ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு ஏற்படக்கூடாது.. இதைத் தடுக்க வேண்டும்!..
அந்த உயரிய சிந்தனையின் விளைவு தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு சீருடை..
இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் வண்ண வண்ண சீருடைகளில் சிறகடித்து வலம் வருவதற்கு காமராஜர் அவர்களின் உயரிய எண்ணங்களே காரணம்..
1960 ஆம் ஆண்டில்வருடாந்திர வருமானம் ரூ 1200 எனில் அவர்தம் பிள்ளைகளுக்கு பதினொன்றாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்த காமராஜர் -
1962 - 63 ல் வருமான வரம்பினை 1500 என திருத்தினார்..
பலதரப்பட்ட மக்களுடன் அரசு பதிவு பெறா ஊழியர்களும் கடை நிலை ஊழியர்களும் பள்ளி இறுதி வகுப்பு வரை தம் பிள்ளைகளுக்கு கல்விச் சலுகை பெற்றனர்..
இதன் விளைவாக உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருள் இலவசக் கல்வி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள் நூற்றுக்கு பதினேழு பேர் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டது..
காவிரி டெல்டா, கீழ் பவானி, மணிமுத்தாறு, வைகை, அமராவதி, சாத்தனூர், புள்ளம்பாடி, வீடூர், பரம்பிக்குளம், ஆளியாறு - எனும் நீர்ப்பாசனத் திட்டங்களால் விவசாயம் வளர்ச்சி கண்டது..
காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 150 லட்சம் ஏக்கர்..
இதில் 56 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலையான பாசன வசதி பெற்றவை...
நெய்வேலி நிலக்கரி, அம்பத்தூர், ஆவடி, கிண்டி, திருவெறும்பூர், பொன்மலை - என தொழிற்பேட்டைகள்.. பற்பல தொழிற்சாலைகள்..
சென்னை துறைமுக மேம்பாடு மற்றும் அனல் முன்நிலையம், குந்தா நீர் மின் திட்டம் - என,
தமிழகம் ஒளி மயமாகியது காமராஜர் ஆட்சியில்!..
- புள்ளி விவரங்கள் -
திரு. முருக தனுஷ்கோடி அவர்களின்
காமராஜ் ஒரு சரித்திரம்
---
அப்படியிருந்தும் -
அந்த மாசற்ற மாணிக்கத்தையும் வீழ்த்தி
தன் முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்டது - தமிழினம்!..
ஆனாலும்
இமயம் என்றுமே இமயம் தான்!..
பெருந்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க!..
***