நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 15, 2017

என்றும் இமயம்

படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும்..

இது தான் முதல் நடவடிக்கை..


தான் பெறாத கல்வியை எனது மக்கள் பெற வேண்டும்.. அறியாமை எனும் இருள் அகல வேண்டும்.. வறுமை அதனால் நீங்க வேண்டும்...

இல்லாமை என்னும் இருளில் மக்கள் சிக்கிக் கிடக்கும்போது அறிவு ஒளியூட்டும் பள்ளிகளை மூடுவதா?..

எனும் உயரிய சிந்தனை மலர்ந்தது -
தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த ஏழைப்பங்காளரின் நெஞ்சில்..


அதன் விளைவாக -
அதற்கு முந்தைய ஆட்சியாளரால் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளும் திறக்கப்பட்டன..

அவை போதாதென்று மேலும் பதினாலாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன..

முதல் திட்ட முடிவில் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை - 21,500..

இரண்டாவது திட்ட காலத்தில் - 26,750..

வெகு விரைவில் முப்பதாயிரத்தையும் தாண்டியது..

ஆரம்பப் பள்ளிகளுக்கு வந்த மாணவர் தொகை முதல் திட்ட முடிவில் 25 லட்சம்..

இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 லட்சம்..

கல்வியின் சிறப்பை உணராத மக்கள் குழந்தைகள கல்லாத மூடராக்கி வரும் தீமைகளைக் கண்டு வெகுண்டார்.. கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார்..

பல்லாயிரக் கணக்கான பள்ளிகளின் மூலம் லட்சோப லட்சம் குழந்தைகளின் வாழ்வில் கல்வியறிவு எனும் ஒளியேற்றப்பட்டது..

இருந்தும் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவில்லையே!.. அது ஏன்?.. -  என, சிந்தித்த போது - மூலகாரணம் கண்டறியப்பட்டது..

அதற்கான பரிகாரமும் தேடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..

ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் ஏழை எப்படித் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்?..

ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஆசை - தாய் தந்தையர்க்கு ஏற்படுமே - என்ற எண்ணத்தால் விளைந்ததே - மதிய உணவுத் திட்டம்..

மதிய உணவுத் திட்டம் மேலும் பல்லாயிரம் சிறார்கள் பள்ளிக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது..

பள்ளிகளைக் கட்டுவதும் ஆசிரியர்களை நியமிப்பதும்  பகல் உணவு  வழங்குவதும் ஏதோ சர்க்கார் செய்ய வேண்டிய வேலை.. அதில் நமக்கென்ன இருக்கின்றது!.. - என்ற மனநிலையில் இருந்த மக்களை -

கல்வி இயக்கத்துடன் இணைத்த பெருமையும் அவருக்கே உரியது..

தமிழகம் முழுவதும் பள்ளி வளர்ச்சிக்கென 133 மாநாடுகளை நடத்தி மக்களை கல்விப் பணியுடன் இணைத்ததால் கிடைத்த நன்கொடை 6. 47 கோடி..

அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் சிலேட்டு முதலியன வழங்கப்பட்டன...

குழந்தைகளின் மனதில் ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு ஏற்படக்கூடாது.. இதைத் தடுக்க வேண்டும்!..

அந்த உயரிய சிந்தனையின் விளைவு தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு  சீருடை..

இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் வண்ண வண்ண சீருடைகளில் சிறகடித்து வலம் வருவதற்கு காமராஜர் அவர்களின் உயரிய எண்ணங்களே காரணம்..

1960 ஆம் ஆண்டில்வருடாந்திர வருமானம் ரூ 1200 எனில் அவர்தம் பிள்ளைகளுக்கு பதினொன்றாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்த காமராஜர் -

1962 - 63 ல் வருமான வரம்பினை 1500 என திருத்தினார்..

பலதரப்பட்ட மக்களுடன் அரசு பதிவு பெறா ஊழியர்களும் கடை நிலை ஊழியர்களும் பள்ளி இறுதி வகுப்பு வரை தம் பிள்ளைகளுக்கு கல்விச் சலுகை பெற்றனர்..

இதன் விளைவாக உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருள் இலவசக் கல்வி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள் நூற்றுக்கு பதினேழு பேர் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டது..


காவிரி டெல்டா, கீழ் பவானி, மணிமுத்தாறு, வைகை, அமராவதி, சாத்தனூர், புள்ளம்பாடி, வீடூர், பரம்பிக்குளம், ஆளியாறு - எனும் நீர்ப்பாசனத் திட்டங்களால் விவசாயம் வளர்ச்சி கண்டது..

காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 150 லட்சம் ஏக்கர்..

இதில் 56 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலையான பாசன வசதி பெற்றவை...

நெய்வேலி நிலக்கரி, அம்பத்தூர், ஆவடி, கிண்டி, திருவெறும்பூர், பொன்மலை - என தொழிற்பேட்டைகள்.. பற்பல தொழிற்சாலைகள்..

சென்னை துறைமுக மேம்பாடு மற்றும் அனல் முன்நிலையம், குந்தா நீர் மின் திட்டம் - என,

தமிழகம் ஒளி மயமாகியது காமராஜர் ஆட்சியில்!..


- புள்ளி விவரங்கள் -
திரு. முருக தனுஷ்கோடி அவர்களின்
காமராஜ் ஒரு சரித்திரம்
---

அப்படியிருந்தும் -
அந்த மாசற்ற மாணிக்கத்தையும் வீழ்த்தி
தன் முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்டது - தமிழினம்!..

ஆனாலும் 
இமயம் என்றுமே இமயம் தான்!..

பெருந்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க!.. 
***  

20 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  உலகம் அழியும்வரை இந்த மாமேதையை யாரும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   உண்மையைச் சொன்னீர்கள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி,, நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ஏழைப்பங்காளன், எளிமையின் இலக்கணம் காமராஜர் நினைவைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   எளிமையின் இலக்கணம் - காமராஜர்..
   தங்கள் வருகையும் மருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இவரை மிஞ்சிய பெருந்தலைவர் யார் உள்ளார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   காமராஜரை மிஞ்சிய தலைவர் எவருமில்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப்பற்றி மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அற்புத மனிதர்.... இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இன்று இல்லவே இல்லை என்று சொல்லலாம்....

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   காமராஜரைப் போன்ற தலைவர்கள் இன்றில்லை என்பதே உண்மை..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. காமராஜரின் பதில்.
  கேள்வி: கைக்கெடிகாரம்கூட இல்லாமல் இருக்கீங்களே?
  பதில்: எனக்கெதுக்கு கைக்கெடிகாரம். யாரைக் கேட்டாலும் மணி சொல்லிட்டுப்போறாங்க.
  கேள்வி: முதல் மந்திரியாக இருந்தபோது வந்த சம்பளத்தை என்ன செய்தீங்க?
  பதில்: காங்கிரஸ் வேலையா தில்லிக்குப் போகணும்னா நானே பிளைட் டிக்கெட் வாங்கிக்கொள்வேன். தாயாருக்கு நூறு நூற்றைம்பது செலவுக்குக் கொடுப்பேன். அப்புறம் எங்கிட்ட ஏது பணம்?
  கேள்வி: காமராஜ் திட்டம்னு, நீங்க ஏன் பதவியிலேர்ந்து விலகினீங்க?
  பதில்: நாம செய்யறது நல்லதா கெட்டதான்னு பதவியிலே இருந்துகொண்டு பார்த்தால் தெரியாது. பதவியைவிட்டு விலகினால்தான் தெரியும். கோபுரத்தின் உள்ளே இருந்துகொண்டு அண்ணாந்து பார்ப்பதைவிட, அதைவிட்டு தூரத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தால் கரெக்ட் பெர்ஸ்பெக்டிவ் தெரியுமல்லவா?
  கேள்வி: பதவியிலிருந்தபோது உங்களை நிறைய பேர் பார்க்க வந்திருப்பார்களே, சலுகைலாம் கேட்டிருப்பாங்களே அவங்களுக்கு ஏதாவது செஞ்சீங்களா?
  பதில்: எங்கிட்ட வருவாங்க. பேசுவாங்க. சலுகை கேட்பாங்க. ஊருக்குப் பொதுவா இருந்தா செய்வேன். தனிப்படா சலுகை எப்படிச் செய்யமுடியும்? முடியாதுன்னு சொல்லுவேன். போகாம தயங்கித் தயங்கி நின்னா, அடுத்த ஆளை வரச்சொல்ல மணியடிச்சுடுவேன்.

  ஒருதடவை, பஸ் முதலாளிகள் வந்து, பஸ் தொழிலில் லாபம் இல்லை. நஷ்டமா இருக்கு. அதுனால வரியைக் குறைக்கணும்னு காமராஜைக் கேட்கிறார்கள். அதுக்கு காமராஜர், 'ரொம்பச் சரி. நஷ்டம்னு சொல்றீங்க. ஒத்துக்கறேன். அப்புறம் எதுக்கு மேலும் மேலும் ரூட் கேட்கறீங்க. நஷ்டத்துல ஓடற தொழிலுக்கு ஏன் போட்டி போடறீங்க' என்று கேட்டு பிரச்சனையைத் தீர்த்தார்.இதுபோல் கோயமுத்தூரில், சில பணக்காரர்கள் மொத்தமாக 20 லட்சம் போட்டு, அரசு மீதிப் பணமான 80 லட்சம் தந்தால் மருத்துவக் கல்லூரி நடத்துகிறோம் என்று சொன்னதற்கு, அரசுக்கு 80 லட்சம் கொடுக்க முடியும்னா, கூட 20 லட்சம் கொடுக்கறது கஷ்டமா? சர்க்காரே 1 கோடி போட்டு சர்க்கார் கல்லூரியாகவே நடத்தலாமே. நீங்க எதுக்கு நடத்தணும்? உங்க வீட்டுக்கு வர விருந்தாளி, உங்க வீட்டுச் செலவுலே 10ல ஒரு பங்கு கொடுத்துவிட்டு உங்க வீட்டு நிர்வாகத்தை நடத்தக்கேட்டால் சம்மதிப்பீங்களா என்று கேட்டார்.

  காமராஜரிடம், சொந்தமாக வீடு, பேனா, கைக்கெடிகாரம் போன்ற எதுவுமே கிடையாது. அவர் கடைசி வரையில், அசைவம் சாப்பிடணும் என்று ஆசை வந்தால், ஒரு முட்டை சாப்பிடுவார். தன் வாழ்க்கைத் தரத்தை எப்போதும் உயர்த்திக்கொள்ளாதவர் அவர். தன் தாயார்,
  'நீ முதலமைச்சராக ஆனபின், வீட்டுக்கு நிறையபேர் வராங்க,அவங்களுக்கு கலர் கொடுக்க வேண்டியிருக்கு, கூட கொஞ்சம் பணம் அனுப்பு என்று சொன்னதற்கு, வந்தவங்களுக்கு தண்ணி தந்தாப் பத்தாதா, எங்கிட்ட காசு இல்லை என்று சொன்னவர் அவர். இதைப்போல் நிறைய எழுதலாம்.

  காமராஜரின் வரலாறைப் பாடமாக வைத்தால், படிக்கும் மாணவர்களில் சில சதவிகிதத்தினர், நல்ல குடிமக்களாக வளர்வதற்கு வாய்ப்பு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் இது ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்போது மீண்டும் தங்களின் பின்னூட்டம் மூலம் வாசிக்கும் போதுமனது நெகிழ்ந்துவிட்டது. எப்படிப்பட்ட மனிதர். நீங்கள் சொல்லியிருப்பது போல் காமராஜரின் வரலாறைப் பாடமாக வைத்தால் படிக்கும் மாணவர்களில் சில சதவிகிதத்தினரேனும் நல்ல குடிமக்களாக வளர்வதர்கு வாய்ப்புண்டு....

   அப்போ நல்ல தலைவராக இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லையோ நெல்லை....அப்படியாகிவிட்டதோ நமது நாடும், தமிழ்நாடும்? வேதனைதான் இல்லையா...

   கீதா

   நீக்கு
  2. அன்பின் நெல்லைத் தமிழன்..

   காலையில் தங்கள் கருத்தை வாசித்துக் கருத்துரையிடும் வேளையில் மின்சாரம் ஓடிப் போனது..

   மிக அற்புதமான செய்திகளுடன் தங்களுடைய கருத்துரை - ஒரு பதிவாகவே!..

   காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடமாக வைத்தால் படிக்கும் மாணவர்களில் சில சதவிகிதத்தினரேனும் நல்ல குடிமக்களாக வளர்வதற்கு வாய்ப்புண்டு!..

   உண்மைதான்..

   ஆனாலும் இதுவரைக்கும் வைக்கவில்லை..

   அப்படியெல்லாம் வைத்து விட்டால் - வளரும் சமுதாயம் உயரிய சிந்தனை உடையதாகி விட்டால் - இவர்களாக் கல்லா கட்ட முடியாதே!..

   மேலதிக தகவல்கள வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

   நீக்கு
  3. அன்பின் கீதா அவர்களுக்கு..

   மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இன்றைக்குக் கிடையாது..

   ஆட்டு மந்தைகள் தாமாகவே படுகளத்திற்குச் செல்வதைப் போலத்தான்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. பதிவு அருமை ஐயா/ சகோ இவரை போன்ற மனிதர்கள் வாழ்ந்த தமிழ்நாடு என்று மார்தட்டிக் கொள்ளத்தான் முடீகிறது இப்போதைய நிலையை எண்ணீனால்...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மாமனிதர் அவர்.. அதைச் செய்தேன்.. இதைச் செய்தேன் என்றெல்லாம் அவர் பேசி விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை.. ஆனால்,

   சில தினங்களுக்கு முன்னால் அவருடைய சிலைக்கு மாலையணிவித்து விட்டு அதை ஊடகங்களில் பரப்பி மகிழ்ந்தவர்களை என்னென்று சொல்வது!..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..