நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 30, 2014

சூடிக் கொடுத்த கோதை

திங்கட்கிழமை (ஜூலை/28). மாலை நேரம்.

திருஅரங்கத்தில் கோலாகலம்.

பட்டுப்புடவை, பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், மாலைகள், கற்கண்டு, பழவகைகள்,  பேரீச்சம்பழம் - என இருபது தட்டுகளில் மங்கலப்பொருட்கள்!..

திருஅரங்கனின் சார்பாக - திருக்கோயிலின் ஸ்ரீரங்க விலாஸ மண்டபத்தில் இருந்து மேளதாளத்துடன் அனுப்பி வைக்கப்பட்டன.

எங்கே!?... 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு!?..

யாருக்கு!?..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கும் ரங்கமன்னாருக்கும் கருடாழ்வானுக்கும்!..


இன்று - புதன் கிழமை. ஆடிப்பூரம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் அல்லவா!..

அதை முன்னிட்டுத் தான் இந்த வஸ்திர மரியாதை!..

ஆடிப்பூர தேரோட்டத்தின் போது - ஆண்டாள் இந்த மங்கலங்களுடன் தேரேறி திருநாள் காண்பாள். 

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் வஸ்திர மரியாதை எனப்படும் மங்களப் பொருள்கள் பரிவர்த்தனை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்தின்போது  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள், வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பி வைக்க -

அவ்வண்ணமே - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் கோயிலிருந்து மங்கலப் பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைப்பர்.

இதேபோல -

சித்ரா பௌர்ணமிக்கு ஸ்ரீகள்ளழகர் சூடிக் கொள்வதற்கு ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கலப் பொருட்கள் இங்கிருந்து மதுரை செல்லும்.

இதற்கு சீதனமாக இருமுறை சித்ரா பௌர்ணமிக்கும், ஆடிப்பூரத்திற்கும் ஸ்ரீஆண்டாளுக்கு கள்ளழகர் சூடிக் களைந்த மாலையும்  பரிவட்டமும் வரும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் திருவிழாவிற்காக ஜூலை/22 கொடியேற்றம் நடந்தது.


முதல் நாளில் இருந்தே - ஆண்டாளும் வடபெருங் கோயிலுடையானும் -.

பதினாறு கால் சப்பரம், தங்கப்பல்லக்கு, தந்தப்பல்லக்கு, கோவர்த்தன கிரி , ஹனும வாகனம், சேஷ வாகனம் - என  திருவீதி எழுந்தருளினர்.

ஜூலை/26 - ஐந்தாம் திருநாளன்று சிறப்பு மிக்க ஐந்து கருட சேவை.

பெரியாழ்வார் அன்ன வாகனத்தில் முன் செல்ல  ரங்கமன்னார் கருட வாகனத்திலும் ஆண்டாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து - பெரிய பெருமாள், சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீநிவாஸப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் - தனித்தனியே கருட வாகனங்களில் ஆரோகணித்து சேவை சாதித்தனர்.

ஜூலை/28 ஏழாம் திருநாளன்று சயன சேவை!.. 


ஆண்டாள் மடியில் அனந்தன் தலைசாய்த்த சயனத் திருக்கோல வைபவம் கோலாகலமாக நிகழ்ந்தது.

இன்று ஆடிப்பூரத் தேரோட்டம்!..

கலியுகாதி 98.  நள வருடம் - ஆடிமாதம். சுக்லபட்சம் எனும் வளர்பிறையின் சதுர்த்தசி திதி. பூர நட்சத்திரம் கூடிய நன்னாள். செவ்வாய்க் கிழமை.


ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையானின் திருத்துழாய் வனத்தில் - பூமாதேவி - குழந்தையாய் திருஅவதாரம் செய்தாள்.

அவளைக் கண்டெடுத்து உச்சி முகந்தவர் விஷ்ணு சித்தர்.
இவரே பின்னாளில் பெரியாழ்வார் எனப்பட்டார்.

குழந்தைக்குக் கோதை எனத் திருப்பெயர் சூட்டிக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். கோதையும்  - கண்ணன் மேல் கருத்தும் காதலுமாக வளர்ந்தாள்.

வடபத்ர சாயிக்கு என - தந்தையார் தொடுத்த மாலைகளை - தான் அணிந்து அழகு பார்த்துக் களித்தாள். அரங்கனின் அன்பெனும் வாரிதியில் நீந்திக் குளித்தாள்.


மாதவனுக்கெனத் தொடுத்த மாலையை மகள் அணிந்து களைவதைக் கண்டு ஆழ்வார் அதிர்ந்தார். சினந்தார். முகம் சிவந்தார். அதனை அனந்தனுக்கு அளிக்கப் பயந்தார்.

அனந்தனோ - கோதை சூடிக் களைந்த மாலையைத் தான் உகந்தான். 

சூடிக் களைந்த மாலையைக் கேட்டு - உலகளந்த வேளையில் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு ஒற்றைக் காலில் நின்றதைப் போல இப்போதும் நின்றான்!..

அன்று முதல் கோதை - தோளில் பூமாலையை சூடிக் கொடுத்தாள். அத்துடன் செந்தமிழில்  பாமாலையும்  பாடிக் கொடுத்தாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்!..

- என்று, பாவை நோன்பின் நோக்கத்தை வலியுறுத்தி ஊருக்காகப் பாடினாள்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..

- என்று, மாரி பெய்து மண் செழிக்க வேண்டி  உலகுக்காக வாடினாள்.

கருப்பூரம் நாறுமோ!.. கமலப்பூ நாறுமோ!..
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ!..
மருப்பொசித்த மாதவன்றன் வாய்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!..

- என்று தனக்காக பாஞ்சசன்னியத்திடம் கேட்டாள்.

மகள் கேட்டதை தந்தையும் கேட்டார்.

என்னம்மா.. சேதி!?.. என்று மகளிடமே கேட்டார். 

ஆண்டாள் நாயகியாகி நாரணனை அடையத் துடிக்கின்ற நிலையில் -

மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்!..

- என்று தீர்க்கமாகச் சொல்லி விடுகின்றாள். 

இஃது எங்ஙனம் கை கூடும்?.. - என்று  ஆழ்வார் அயர்ந்த வேளையில் அரங்கன் அவரது கனவில் தோன்றி -

கோதையைக் கோயிலுக்கு அழைத்து வருக. அவளை யாம் ஏற்போம்!.. - என அருளினன்.

அவ்வேளையில் கோதை நாயகியும் - மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றுவதாக - கனாக் கண்டாள்..

அவ்வண்ணம் தான் - கனாக் கண்டதை தோழிக்கு உரைப்பதாக திருப்பாசுரம் அருளினாள்.


வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!..

ஆண்டாள் அருளிய திருப்பாசுரத்தினை பக்தியுடன் பாராயணம் செய்யும் கன்னியர்க்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும் என்பதும் நன்மக்கட்பேறு வாய்க்கும் என்பதும் நிதர்சனம்.


ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலை முப்பது எனும்  திருப் பாசுரங்களே திருப்பாவை!..

நாச்சியார் அருளிய திருமொழிப் பாசுரங்கள் வரலாற்றுச் சிறப்புக்குரியவை.  

அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை. தமிழரின் வழிபாட்டு நெறிகளையும் வாழ்வியல் முறைகளையும் நம்முன் காட்டுபவை. 

தனது கனவினை உரைத்து அருளிய திருப்பாட்டுகள் அன்றைய தமிழரின்  திருமண முறைக்கு அற்புதமான எடுத்துக்காட்டுகளாவன. 

இளங்காலைப் பொழுதில் ஆய்ச்சியர் தயிர் கடைகின்ற வேளையில் - 

நோன்பு நோற்க வேண்டி, ஆய்ப்பாடியின் செல்வச்சிறுமிகள் - வீடு வீடாகச் சென்று தோழிகளைத் துயில் எழுப்புதல் - தான் பெற்ற இன்பத்தினை இவ்வையகமும் பெறவேண்டும் எனும் தகைமையினைக் காட்டுகின்றது. 

மண்ணும் மனிதமும் இன்ன பிற உயிர்களும் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்குத் திங்கள் மும்மாரி பொழிய வேண்டும் - எனக் கேட்கும் பண்பினில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் சிகரம் என உயர்ந்து நிற்கின்றாள்.

அதனால் அன்றோ -


அவள் குடியிருக்கும் கோபுரம் தமிழக அரசின் முத்திரையானது.

அன்னவள் - ஆடிப் பூரத்தன்று கோலாகலமாகத் தேரோட்டம் காணுகின்றாள்.

வானில் காரோட்டம் மிக வேண்டும். மழை பொழிந்து ஆற்றில் நீரோட்டம் நிறைய வேண்டும். அது கொண்டு ஏரோட்டம் தழைக்க வேண்டும். சீரோட்டம் அதுவாகி தரணியெங்கும் செழிக்க வேண்டும். 

தேரோட்டம் காணும் தெய்வமகள் பெயர் போற்றி
பாரெல்லாம் துதிக்க வேண்டும்!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் வாழ்க!..

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
* * *

செவ்வாய், ஜூலை 29, 2014

கனந்தரும் காந்திமதி

அன்று அகத்தியர் அமர்ந்து அருந்தமிழ் வளர்த்து அருளாட்சி செய்த பொதிகை மலை தொட்டு - 

விடுதலை வேட்கையின் மூலக்கனல் மூண்டெழுந்து அந்நியனுக்கு எதிராக கப்பல் ஓட்டிய கீழைக் கடல் வரைக்கும்,  

எத்தனை எத்தனையோ - வரலாற்றுத் தடங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் புண்ணிய பூமி!..

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் - எனும் ஐந்து வகைகளையும் தன்னகத்தே கொண்ட பெருநிலப் பரப்பு!..


பொருணை எனும் தாமிரபரணி - விளையாடிக் களிக்கும் தென்பாண்டித் திருநாட்டின் திலகம்!..

பேர் கொண்ட சிறப்பெல்லாம் - ஊர் கொண்டு நிற்கும் திருநெல்வேலி!.

இங்கே - சீர் கொண்டு நிற்கும் திருக்கோயில் -

ஸ்ரீ காந்திமதியம்மை உடனாகிய ஸ்ரீநெல்லையப்பர் திருக்கோயில்!..

அண்ட பகிரண்டம்  முழுதும் தாமுடைய வள்ளல் - தன்னை  வேணுவனம் எனப்பட்ட மூங்கில் காட்டினுள் வெளிப்படுத்திக்கொண்ட திருத்தலம்..

தன்னைச் சுற்றி நிறைய முளைகளுடன் வளர்வது - மூங்கில்.

மூங்கிலைப் போல நாமும் சுற்றமும் சொந்தமும் முசியாமல் வாழ வேண்டும் என்று -

மூங்கில் முளையில் -  மூலவன் வெளிப்பட்ட அற்புதத் திருத்தலம்.

தாமிரபரணி - அகத்தியர் அருவி - கல்யாணதீர்த்தம்.
மூர்த்தி தீர்த்தம் விருட்சம் - என,  மகத்துவமும் மருத்துவமும் பொருந்திய சிறப்பான திருத்தலம் - திருநெல்வேலி!..

பெருமானின் பஞ்ச சபைகள் - ரத்னசபை , பொன்னம்பலம், வெள்ளியம்பலம் , தாமிர சபை, சித்ர சபை - என்பன.

இவற்றுள் நான்காவதான தாமிரசபை - நெல்லை!..

தனக்கென வாழாது - பிறர்க்கென வாழ்ந்த உத்தமனின் பொருட்டு வெயிலில் உலர்ந்து கொண்டிருந்த நெல்லுக்கு நீரால் வேலியிட்டுக் காத்து தருளிய ஈசனின் திருப்பெயர் இங்கே  -  நெல்லையப்பர்.  

வேணு எனப்பட்ட மூங்கில் வனத்தில் மூங்கில் முளைகளின் ஊடாகத் தோன்றியதால் - வேணுவனநாதர். 


மலர்ந்த முகத்தாள். மலர் கொண்ட திருக்கரத்தாள்!. வடிவுடை நாயகி!.. 

அப்பனுடன் அன்னை ஒளி கொண்டு நின்றதால், அவள் - காந்திமதி!..

உலக உயிர்கள் உய்வடையும் பொருட்டு கம்பை நதிக் கரையிலும் காவிரிக் கரையிலும் அறம் வளர்த்ததைப் போல தாமிரபரணிக் கரையிலும்  அம்பிகை அறம் வளர்த்தனள் என்பது தல புராணம். 

அத்துடன் - எம்பெருமானை மணங்கொண்டு அகத்திய முனிவருக்கு திருக் கல்யாண கோலம் காட்டிய திருத்தலம்.

திருக்கோயிலின் உள்ளேயே - திருமூலத்தானத்தில் அருகில் - பள்ளி கொண்ட பெருமாள்!.. பெருமாளின் திருமார்பில் சிவலிங்கப் பதக்கம் இலங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் - உச்சி கால பூஜையை அம்பாளே நிகழ்த்துவதாக ஐதீகம் . 


அதன் அடிப்படையில், அம்மன் சந்நிதியின் அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க பலவகையான நிவேத்ய சித்ரான்னங்களுடன் ஸ்வாமி சந்நிதிக்கு வந்து - நெல்லையப்பருக்கு நிவேதனம் செய்வர். 

ஸ்வாமிக்கு நிவேதனம் செய்தபின் - அம்பாள் சந்நிதியில்  பூஜை நிகழ்கின்றது.

மூண்டெழும் வினை தீர்க்கும்  - முக்குறுணிப் பிள்ளையார். அழகு மயிலேறி வரும் ஆனந்த முருகன்.

ஈசனின் வலப்புறம் காந்திமதி அன்னையின் திருக்கோயில். அருகில் நீராழி மண்டபத்துடன் கூடிய பொற்றாமரைக் குளம்!..

கலைநயம் மிக்க சிற்பங்கள்!..
நெடுந்தூண்கள் நிறைந்த பிரகாரங்கள்!..
இணையில்லா அற்புதமாக ஏழிசைத் தூண்கள்!..
- என, தென் தமிழகத்தின் கலைப் பொக்கிஷமாகத் திகழும் திருக் கோயில்!..

இசைத் தூண்கள்
எண்ணரும் சிறப்புகளுடன் கூடிய திருக்கோயிலில் ஆனிப்பெருந் திருவிழா  ஜூலை முதல் வாரத்தில்  சீரும் சிறப்புமாக நிகழ்ந்தது.

காந்திமதி அம்மையும் நெல்லையப்பரும் திருவிழா நாட்களில் -

தங்கச் சப்பரம், வெள்ளிச் சப்பரம், வெள்ளி கற்பக விருட்சம்,  வெள்ளிக் கமலம், தங்க பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம்,  வெள்ளிக் காமதேனு வாகனம்  வெள்ளி ரிஷப வாகனம், தங்க கயிலாய பர்வதம், தங்கக்கிளி வாகனம் - இவற்றில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர்.

திருவிழாவின் ஒன்பதாம் நாளில் பெருந்தேர் கண்டருளினர்.

அதன் பின் -  ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு,

ஜூலை/21 திங்களன்று அம்மன் சந்நிதியில் துவஜஸ்தம்பத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவின் நான்காம் நாள் (ஜூலை/24) வியாழன்று மதியம் மூலஸ்தானத்தில் காந்திமதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன.

பின்னர் - ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவநாயகிக்கு   வளைகாப்பு வைபவம் நிகழ்ந்தது.

இந்த மண்டபத்தில் தான் -  ஐப்பசி மாதம் திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலம் கொண்டருள்வர். 

பல ஊர்களில் இருந்தும் திரளாக வந்திருந்த இளம்பெண்கள் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டனர். அனைவருக்கும் தேவி பிரசாதமாக குங்குமம் , மஞ்சள் சரடு மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டன,

அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய காந்திமதி ரதவீதிகளில் வலம் வந்தருளினள்.


உலகேழும் பெற்ற உமையவளுக்கு வளைகாப்பு!..

பூத்தவள் - புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவள். பின் கரந்தவள். கறைக் கண்டனுக்கும் மூத்தவள். என்றும் மூவா முகுந்தற்கு இளையவள். 

மாத்தவம் உடைய மாதங்கி. மங்கையர்க்கு அரசி!.. 
மரகதவல்லி!..  இவளுக்கன்றோ மடி நிரப்பும் வைபவம்!..

பத்தாம் திருநாளான புதன்கிழமை (ஜூலை/30) இரவு ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைகட்டுத் திருநாள் நடைபெறும்.

காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வர, முளைகட்டிய பயறு மற்றும் பட்சணங்கள் கொண்டு அம்பிகைக்கு மடி நிரப்பும் வைபவம் மங்கலகரமாக நடைபெறும்.

விழாவினை ஒட்டி நாள்தோறும் சந்நிதியில் சோடச உபசாரத்துடன்  மகா தீபாராதனை நடைபெறும்.

தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்களுக்கு அடுத்தபடியான  35 அடி உயரமும் 450 டன் எடையும் கொண்ட பெரிய தேரினை உடையது - நெல்லையப்பர் கோயில்!..

இந்த ஆண்டு நிகழ்ந்த தேரோட்டத்துக்கு வயது 510.


ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று திருஐயாறு தரிசனம் கண்டோம்.,
இரண்டாம் செவ்வாய் இன்று.  இறையருளால் திருநெல்வேலி தரிசனம்.

வாழும் வையகத்தில் ஒரு தாழ்வுறா வண்ணம் -
வாஞ்சையுடன் காப்பவள் காந்திமதி!.

வறுமைக் கோடு எனத் தொகுத்தவர் வகுத்தாலும் -
வறுமையாற் கேடு எதையும் அடையாவண்ணம் காப்பவள் காந்திமதி!.

இல்லறம் நல்லறம் ஆகும்படிக்கு அனைத்தும் அருள்பவள் காந்திமதி!..

தாமிரபரணியில் - தைப்பூச தீர்த்தவாரி நிகழும் தீர்த்தக் கட்டங்களுள் ஒன்று சிந்து பூந்துறை.  எனில் - தேன் சிந்து பூந்துறை!..

மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய திருநெல்வேலி ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலி!..  - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு.

 
பைங்கண்வா ளரவணை அவனொடு பனிமல ரோனுங்காணாது
அங்கணா அருளென அவரவர் முறைமுறை இறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
!..(3/92)
திருஞானசம்பந்தர்.

சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே  நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!..
(28)

அபிராம பட்டர். 

ஓம் சக்தி ஓம்!..
காந்திமதி அம்மையே சரணம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

ஞாயிறு, ஜூலை 27, 2014

ஸ்ரீவக்ர காளி

திருவக்கரை. 

ஸ்ரீகாளி உவந்து உறையும் திருத்தலங்களுள் ஒன்று. 

முன்னொரு காலத்தில்  - தாரகன் எனும் அரக்கன் விண்ணுக்கும் மண்ணுக்கும் பற்பல கொடுமைகளை அசுரர் குல வழக்கப்படி - செய்து கொண்டிருக்க, 

அஞ்சி நடுங்கிய உயிர்க் குலங்கள் எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைச் சரணடைந்தன.


ஒரு சமயம் - தட்சன் நடத்திய  யக்ஞத்தை அழிக்க வேண்டி பெருமானின் திருமேனியில் இருந்து ஸ்ரீ வீரபத்ரர் வெளிப்பட,

அம்பிகையின் கோபம் ஸ்ரீ பத்ர காளி என வெளிப்பட்டது. 

யாகம் அழிக்கப்பட்டதும் - ஸ்ரீ வீரபத்ரருடன் ஒடுங்கினாள்  ஸ்ரீ பத்ரகாளி. 
ஸ்ரீ வீரபத்ரர் - சிவபெருமானின் திருமேனியினுள் ஒடுங்கி சாந்தம் கொண்டார்.

அன்று தன்னுள் ஒடுங்கிய ஸ்ரீ பத்ரகாளியை - மீண்டும் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.

இந்த வைபவத்தினை அப்பர் பெருமானும் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும், மாணிக்க வாசகப் பெருமானும் திருமூலரும் - குறிப்பிடுகின்றனர்.

வல்லை வரு காளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ
கொல் என விடுத்தருள் புரிந்த சிவன்!..
(3/69)

என்று திருக்காளத்தித் திருப்பதிகத்திலும் ,

சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் 
துஞ்ச வெஞ்சினக் காளியைத் தருஞ்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் 
சித்தி பெற்றவரே!.. (3/110) 

என்று சீர்காழித் திருப்பதிகத்திலும் திருஞானசம்பந்தர் புகழ்கின்றார்.

ஸ்ரீ பத்ரகாளிதான் - ஐயனின் தாண்டவங்களுக்கு ஆதரவாக அமைகின்றனள். 

திருஆலங்காட்டிலும், தில்லை வனத்திலும் - ஐயன் காளியுடன் ஆடிய நடனத்தை அறியாதார் யார்!.. 

ஸ்ரீ பத்ரகாளி வழிபாடு மிகப் பழைமையானது.

தன் கணவன் - பழி சுமத்தப்பட்டு கொலைக்களத்தில் வீழ்த்தப்பட்டான் என்பதை அறிந்து கொதித்தெழுந்த கண்ணகி -

நீதி கேட்டு நெடுஞ்செழியனின் அவைக்கு வருகின்றனள். 

கண்ணகியின் வருகையை வாயிற்காவலன் - அரசனுக்கு அறிவிக்கும் போது,

தாருகன் பேருரங்கிழித்த பெண்ணும் அல்லள்!.. - என்று கூறுவதாக இளங்கோவடிகள்  இயம்புகின்றார்.

அத்தகைய ஸ்ரீ காளி பற்பல காலத்தும்  நன்மைகளைக் காத்து - தீமைகளைச் சாய்ப்பதற்குத் தோன்றியருள்வதாக புராணங்கள் பேசுகின்றன.  

அவ்விதமே - வக்ரன் எனும் அசுரனின் வன்கொடுமையை அழித்து ஒழித்த போது - ஸ்ரீவக்ரகாளி எனப் புகழப்பட்டாள்.

வக்ராசுரனை வதம் செய்தபின் அவள் அமர்ந்த திருத்தலம் - திருவக்கரை எனப்பட்டது.


பைதற் பிணக்குழைக் காளி - என அப்பர் பெருமான் வர்ணிக்கும் திருக் கோலம். 

வலது திருச்செவியில்  தெளிவாக விளங்குகின்றது சிசு . 
இது மகிஷாசுரனின் மனைவியின் கர்ப்பத்தில் தங்கிய மாய சிசு. 

இதனை ஸ்ரீ பேச்சியம்மன் தன் திருக்கரத்தினால் நீக்கி - அன்னை காளியிடம் கொடுக்க - அன்னை தன் காதணியாக அணிந்து கொண்டாள்.

குழற்கற்றைகள் அக்னி ஜூவாலைகளாக பரந்து விரிந்திருக்கின்றன. 
எட்டுத் திருக்கரங்களுடன் முண்டமாலை அணிந்த திருக்கோலம்.
ப்ரயோகச் சக்கரம். ஓங்கிய வாளும் ஊன்றிய சூலமும் அச்சம் தீர்க்கின்றன.
கபாலமும் மணிகள் பொருந்திய கேடயமும் வில்லும் ஏந்தியிருக்கின்றனள். 

நடராஜப் பெருமானின் குஞ்சித பாதம் குறிக்கும் பொருளாக - 
ஸ்ரீவக்ரகாளி - தன் இடது திருவடியினைச் சுட்டிக் காட்டுகின்றனள்.

பௌர்ணமி ஜோதி தரிசனம்
பௌர்ணமி நடுஇரவிலும் அமாவாசை நடுப்பகலிலும் ஜோதி தரிசனம்.  
சந்நதியின் முன்மண்டபத்தின் மேல் ஜோதி ஏற்றப்படுகின்றது. 
ஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். 
திருக்கோயிலின் அருகில் -  மயானம் ஒன்று அமைந்துள்ளது.

அன்னை அமர்ந்திருக்கும் திருவக்கரை -  தேவாரத் திருத்தலமாகும்.

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடியுள்ளார். அப்பர் சுவாமிகள் பல பதிகங்களிலும் திருவக்கரையைப் புகழ்கின்றார்.

இறைவன் - ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர்.
அம்பிகை - அமிர்தேஸ்வரி.
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.
தலவிருட்சம் - வில்வம்.

இறைவன் - சத்யோஜாதம், வாமதேவம், அகோரம் - எனும் மூன்று திருமுகங்களுடன் பொலிகின்றனன்.

உள்திருச்சுற்றில் குண்டலிமுனிவரின் ஜீவசமாதியுள்ளது. வக்ராசுரன் ஸ்தாபித்து வணங்கிய சிவலிங்கமும் இங்கே விளங்குகின்றது.

திருக்கோயிலினுள் ஸ்ரீ வரதராஜப்பெருமாளின் சந்நிதியும் விளங்குகின்றது பெருமாளின் திருக்கரத்தில் ப்ரயோக சக்கரம் திகழ்கின்றது.

ராகு கிரகத்தின் அதிபதி ஸ்ரீகாளி என்பதாலும், சனைச்சரன் இங்கே வக்ர சனி என  விளங்குவதாலும் அன்பர்கள் தேடி வந்து வழிபடுகின்றனர்.

வக்ரகாளியம்மனுக்கு விசேஷமாக சந்தனக் காப்பு அலங்காரம் நிகழ்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவக்ரகாளியம்மனை தரிசனம் செய்தபோது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தேன்.

அன்றைய தினம் அன்னை சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்தாள். பக்தர் நெருக்கடி இல்லாமல் ஏகாந்தமாக இருந்தது - அவள் சந்நிதி.  

சிறுபொழுது அமர்ந்து அவளது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

நிவேத்யம் செய்த பால் எனக் கொடுத்தார் - இளம் பெண் ஒருவர். அப்போது அவருடைய விழிகள் அஞ்ச வேண்டாம் என்றன. 

வக்ரகாளியிடம் நேரில் பேசியதைப் போல் - மனம் பரவசமானது.

எழுந்து - குருக்களிடம் சிறிது சந்தனம் கேட்டேன்.  வக்ர காளியின் திருமேனியிலிருந்து - எலுமிச்சம் பழம் அளவுக்கு - எடுத்துக் கொடுத்தார்.

விரைவில் ஒரு மாறுதல்!..

ஸ்ரீகாளி தந்த வரப்ரசாதம் தான் - இப்போதைய குவைத் வாழ்க்கை!..

யாதுமாகி நின்றாய் காளி!.. என்றார் மகாகவி பாரதியார்.

என்றும் அவளை மறப்பதற்கில்லை!.. 
சமயத்தில் -  அவளை நான் மறந்தாலும் 
அவள் என்னை மறப்பதேயில்லை!..

ஓம் சக்தி ஓம்!..
ஸ்ரீவக்ர காளி சரணம்!..
* * *

சனி, ஜூலை 26, 2014

கயிலாய தரிசனம்

குவப்பெருந் தடக்கை வேடன் ஆகிய திண்ணன் - 

கொடுஞ் சிலையுடன்  இறைச்சிப் பாரந்தாங்கி வந்து, தூய வாய்க் கலசம் ஆட்டியதுடன் உவப்புடன் குருதி சோர ஒரு கண்ணைப் பெயர்த்து வைத்து  - தவத்தினும் பெரியதாய்த் தவம் இயற்றி - கண்ணப்பன் என்றானது இங்கே அல்லவோ!..

அப்பர் பெருமான் ஆனந்த வாரிதியில் ஆழ்ந்தார். காளத்தியானைக் கைகூப்பித் தொழுதார்.


மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே!..
(6/8)

திருக்காளத்தி மலையில் சிவதரிசனம் கண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் - தொடர்ந்து நடந்து திருக்கோகரணம் வந்தடைந்தார்.

கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே!..
(6/49)

திருக்கோகரணத்தில் - ஆத்மலிங்கேஸ்வரனைத் தரிசித்த ஸ்வாமிகள் -


பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே!..
(4/58)

ஸ்ரீசைலம் எனும் திருப்பருப்பத மலையில் மல்லிகார்ஜுன பெருமானைக் கண்டு வணங்கினார்.

ஆயினும் அவர் ஆவல் தீரவில்லை. பயணம் தொடர்ந்தது.

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் முதன்மையாக விளங்கும் வாரணாசி வந்தடைந்தார்.

ஆயிரமாமுகத்தினோடு விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி மக்களுக்கு நலஞ்செய்யும் கங்கையைக் கண்டு களிப்பெய்தினார். வழி நடந்த களைப்பு தீர நீராடினார்.


கங்கையின் கரையில் கருணை கடலாகத் திகழும் காசிநாதனைக் கண்குளிரத் தரிசித்தார்.

அங்கிருந்தபடியே - திருக்கயிலாயம் சென்று கயிலாய நாதனைத் தரிசிக்க விழைந்தார். 

உடனிருந்தவர்கள் அதிர்ந்தனர்.

''..ஸ்வாமி.. தங்களுக்குத் துணையாக நாங்களும்  வருகின்றோம்!..'' - என்றனர்.

சுவாமிகள் அதை மறுத்தார்.

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுந் தாங்குதல் 
என்கடன் பணி செய்து கிடப்பதே!.. (5/19)

எனும் திருப்பாடலை நினைவு கூர்ந்தார். 

தளரும் நிலையில் தாங்கிக் கொள்வான் தலைவன்!.. அஞ்சவேண்டாம்!.. வள்ளல் வருவான் - வழித்துணையாக!..

அடியார்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு - பயணத்தைத் தொடர்ந்தார். 

திருக்கேதாரம் (1882)
கெளரி குண்டம், திருக்கேதாரம், இந்திர நீலபருப்பதம் முதலான திருத் தலங்களைத் தரிசித்தார். உள்ளம் பேரானந்தப் பெருவெள்ளத்தில் நீந்திக் களித்தாலும்  - சுவாமிகளின் உடல் நிலையோ தளர்வுற்று இருந்தது. 

ஆயினும் தளராத மனத்தினராய் - 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்!..

- என்று உறுதி பூண்டார். திருப்பதிகங்கள் அவர் திருநாவினின்று மலர்ந்தன.

எவ்விடத்தும் தங்காது நடந்தார்., நடந்தார்,. நடந்து கொண்டேயிருந்தார்.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

உண்ணவும் இல்லை. ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை!.. விளைவு!.. 

நடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. அதனால் என்ன என்று கைகளை ஊன்றிச் சென்றார்.  கைகளும் தேய்ந்தன. 

பகல் இரவு என்று கருதாது, கயிலை நோக்கிச் சென்ற சுவாமிகளின் மன உறுதியைக் கண்ட -  வன விலங்குகள் அஞ்சி வழி விட்டு விலகிச் சென்றன. 

கொடிய நஞ்சுடைய நாகங்கள் -  ஒளிரும் மணிகளை உமிழ்ந்து - இரவில் வழிகாட்டி - தம் வினைகளைத் தீர்த்துக் கொண்டன. 

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

கைகளும் பயனற்றுப் போக - நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்து சிதற,  எலும்புகளும் முறிந்தன.  

நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது. 

கயிலை மாமலையே  - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா!.. உருகிற்று!.. 

வேதியர் என உருக் கொண்டு நாவுக்கரசரை அணுகிற்று.

''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்?..''  - என வினவிற்று!..

''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில்  வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்!..'' - என்றார் அப்பர்.



''..தேவர்களுக்கே அரிதானது கயிலை!.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே!.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல!.. எனவே
இங்கிருந்து மீண்டு செல்வீராக!..'' - என்றார் தவயோகி என வந்த பரம்பொருள்.

''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்!..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்!..

தன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஆதியும் அந்தமும் இல்லாது  ஜோதியாய் நின்ற சிவப் பரம்பொருள் பெருமிதம் கொண்டது.

''நாவுக்கரசரே!.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக!..'' - என மொழிந்து மறைந்தார். 

நாவுக்கரசரா!?.. அது அதிகை வீரட்டானத்தில் ஐயன் அருளியதாயிற்றே!.. அப்பெயரை யான் மறந்தும் வெகு நாளாயிற்றே!..  இங்கே அதை அறிந்து அழைத்தவர்  யாராயிருக்கக்கூடும்?..  - திகைத்தார் ஸ்வாமிகள்.

அந்த அளவில் வந்தது இறை என்றுணர்ந்து  அகமகிழ்ந்தார். 

கயிலை மலைச் சாரலில் இருந்த பொய்கையில் மூழ்கினார் அப்பர் பெருமான்.


தீர்த்தத்திலிருந்து எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது பஞ்சநதீஸ்வரம். 

அப்போது-  திருக்கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது!..

கணபதி, கந்தன், திருமால், நான்முகன் -  சூழ்ந்திருக்கக் கண்டார்.

இந்திரன் முதலான தேவர்களுடன் அசுரர்கள், சித்தர்கள், மகரிஷிகள், வித்யாதரர்கள் , கின்னரர்கள், யட்சர்கள்,  நாகர்கள் - என  அனைவரும்  திரண்டு நின்று வணங்கிடக் கண்டார். 

கங்காதேவி மங்கல நீர் வார்க்க - சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றிட - 

தேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசை என எங்கும் எதிரொலிப்பதைக் கேட்டார்.

இறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கிட, 


வெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.  

அந்த அளவில் -

அம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.

நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார். 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

காதல் மடப்பிடியோடுங் களிறு
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து
நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..
(4/3)


திருநாவுக்கரசு சுவாமிகள்  பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார். 

''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார்?.  எவரும் இலர்!..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணத்தில்!...

அப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். 

அவ்வண்ணமே - இன்று (ஜூலை/26) திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்கின்றது.

திருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். 

இங்கு வந்து தரிசனம் செய்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம். 

நாமும் சென்று தரிசிப்போம்!..

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தைப் பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலையில்  - திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நிகழ்வுறும்.


ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும். 

அடியார்களாகிய நம் பொருட்டு  - ஐயனும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருளி - வலம் வந்து வரந்தருகின்றனர். 

கயிலாய நாதனைக் கண்டு தரிசிப்போம்!..  
கண் கொண்ட பயனைப் பெறுவோம்!..
 
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்!.
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!.
''சிவாய திருச்சிற்றம்பலம்!..''
* * *

வெள்ளி, ஜூலை 25, 2014

தேவி தரிசனம் - 2

தேவர்களுக்கு இரவுப் பொழுதாகிய தட்சிணாயத்தின் முதல் மாதம் ஆடி.  

சந்தியா வேளை. நித்ய பிரதோஷம் எனப்படும் விளக்கேற்றும் நேரம் .

அந்த நேரத்தில் தன தான்யங்கள் வீட்டிற்குள் வருவதைத்தான் எவரும் விரும்புவர். எக்காரணம் கொண்டும் விளக்கேற்றும் வேளையில் - உப்பு எண்ணெய், சுண்ணாம்பு முதலான பொருட்களைத் தரவே மாட்டார்கள். 

மிகக் கூடிய அவசியம் , அவசரம் என்றால் மட்டுமே - பணம் பெட்டியை விட்டு வெளியே வரும்!.. அதற்கும் கூட ஒரு நாழிகைப் பொழுது (24 நிமிடங்கள்) கணக்கிடுபவர்களும் உண்டு.

இந்த அடிப்படையில் தான் அயணத்தின் பிரதோஷ நேரமாகிய ஆடியில் நமது தேவை தவிர்த்த மற்ற எதற்கும் கைப் பொருளைக் கரைக்காமல் - இறுகப் பிடித்துக் கொண்டார்கள்.

மாமதுரை ஸ்ரீ மீனாட்சி
தேவ கார்யங்களுக்கான மாதம் ஆனபடியால் - வீட்டில் திருமண மங்கலங்கள் ஆவணியில் தான்!..

ஆனால்,  தற்காலத்தில் - நம்மைச் சுற்றி ஆடித் தள்ளுபடி எனக் கூச்சல்கள்.. 

நம் கண்ணை, நாமே - நம் விரலால் குத்திக் கொள்ள  - வியாபார தந்திரம்.

ஆடி மாதத்தின் வெள்ளிக் கிழமைகளில்  அம்மன் சந்நிதிகளில் - நிறை மங்கல வைபவங்கள் நிகழும்.

மாயையில் மூழ்கி விடாமல் நம்மைக் காப்பவை - அம்பிகையின் திருவடிகள்..
அந்த வகையில் இன்று ஆடி இரண்டாவது வெள்ளி!..

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..

- எனத் துதித்த அபிராம  பட்டர் நமக்கு வழங்கிய திருப்பதிகங்கள் இரண்டினுள் ஒன்றினை சென்ற வாரம் கண்டோம்!..

இந்த வாரம் - இரண்டாவது திருப்பதிகம்..
ஒருமுறை பாராயணம் செய்தாலே - 
பொருள் விளங்கும்!.. பொருளும் விளங்கும்!..

அபிராமபட்டர் அருளிய
ஸ்ரீ அபிராமி திருப்பதிகம்!..

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம் நால்வாய் 
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு!..


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
மணி மிடறும்  மிக்க சதுர்பெருகு துங்க பாசாங்குசம்
இலங்கு கர தலமும்  விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ்சேவடியை நாளும்
புகழ்ந்துமே - போற்றி என வாழ்த்த  விடை மேல்
மங்களம் மிகுந்தநின் பதியுடன்வந்து  அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (1)

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சல
சுலோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி!
சுலட்க்ஷணி! சாற்றரும் கருணாகரி!
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோதரி! அமலை!
செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி!
அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி!
கௌமாரி! உத் துங்க கல்யாணி! புஷ்ப அஸ்திராம்புய
பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி!
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (2)

வாச மலர் மருஅளக பாரமும்  தண் கிரண மதி முகமும்
அயில் விழிகளும்  வள்ள நிகர் முலையும்  மான் நடையும்
நகை மொழிகளும்  வளமுடன் கண்டு  மின்னார்
பாச பந்தத்திடை  மனம் கலங்கித்  தினம் பல வழியும்
எண்ணி  எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல்
மாயப்ர பஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு  வீணாக  நாய் போலத் திரிந்து அலைவது
அல்லால்  உன்றன் அம்புயப் போது எனும் செம்பதம்
துதியாத அசடன் மேல் கருணை வருமோ?
மாசிலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ
சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (3)

ஸ்ரீமட்டுவார்குழலி - திருச்சி
நன்று என்று  தீது என்று நவிலும் இவ்விரண்டனுள்
நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்
நானுமே அவ்விதம் நாடினேன்  நாடினாலும்
இன்று என்று சொல்லாமல்  நினது திருஉள்ளமது இரங்கி
அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்
மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து  என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி!
விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!
மன்றல் மிகு நந்தன வனங்களில்  சிறை அளி முரல
வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (4)

ஒரு நாள்  இரண்டு நாள் அல்ல  நான் உலகத்து
உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்
தீராத இன்னல் கொண்டு  உள்ளம் தளர்ந்து  மிகவும்
அரு நாண் இயற்றிட்ட வில் போல் இருக்கும் இவ்
அடிமைபால் கருணை கூர்ந்து  இங்கு அஞ்சேல் எனச் சொல்லி
ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது  நிமிடத்தில் இவ்வகில
புவனத்தையும் இயற்றி  அருளும் திறம் கொண்ட நீ
ஏழையேன் இன்னல் தீர்த்து  அருளல் அரிதோ?
வரு நாவலூரர் முதலோர் பரவும்  இனிய புகழ் வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (5)

எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
ஏறிட்டு ஒறுக்க  அந்தோ! எவ்விதம் உளம் சகித்து
உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணி எள்ளளவு சுகமானது ஒரு நாளினும் நான்
அனுபவித்த தில்லை  நாடெலாம் அறியும்  இது கேட்பது ஏன்?
நின் உள்ளமும் நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன்
ஆனாலும்  நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து
எனது புன்மையை அகற்றி அருள்வாய்
மண்ணவர்கள்  விண்ணவர்கள் நித்தமும் பரவும்
இசைவளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (6)

ஸ்ரீ வராஹி - தஞ்சை
 தெரிந்தோ  அலாது தெரியாமலோ இவ் அடிமை
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
கணக்காக வையாது  நின் திரு உளம் இரங்கி  மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது  நல்வரம்அளித்துப்  பாதுகாத்து அருள் செய்ய
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன்  போதன்  மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி!
புராதனி! புராணி! திரி புவனேசுவரி!
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி! எழில்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (7)

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா
வேண்டினும்  மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொல்லாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
பிஞ்சு நெஞ்சதனில் பொறாமை தரியாமலும்  வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளி அவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத்  தமியேனுக்கு
அருள் புரிந்து  சர்வ காலமும் எனைக் காத்து
அருள வேண்டினேன்  சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (8)

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்
அவர்கள் கேட்டு  இவ் இன்னல் தீர்த்து  உள்ளத்து இரங்கி
நன்மைகள் செயவும்  எள் அளவும் முடியாது  நின்
உன்னத  மருவும் கடைக்கண் அருள் சிறிது செயின்  உதவாத
நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்
அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து
முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளிதில் வந்து
சடுதியிற் காத்து  ரட்சித்தது ஓர்ந்து
வனச நிகர் நின் பாதம் நம்பினேன்  வந்து அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (9)

கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கன தண்ட
வெம் பாசமும்  கைக் கொண்டு  சண்ட மாகாலன் முன் எதிர்க்க
மார்க்கண்டன் வெகுண்டு நோக்க
திருநீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில்
அன்பு கொண்டு  அருச்சனை செய  ஈசன்  அவ்விலிங்கம் பிளப்ப
நின்னொடு தோன்றி யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெருநீல மலைஎன  நிலத்தில் அவன் விழப்
பிறங்கு தாளால் உதைத்துப் பேசுமுனி மைந்தனுக்கு அருள்
செய்தது  உனதரிய பேரருளின் வண்ணம் அலவோ?
வருநீல மட மாதர் விழியன்ன  மலர் வாவி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (10)

ஸ்ரீ அபிராமவல்லி
சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனயை!
மாதேவி! நின்னைச் சத்யமாய்  நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி  மிகவும்
அகிலமதில் நோய் இன்மை  கல்வி  தன தானியம்
அழகு  புகழ்  பெருமை  இளமை  அறிவு  சந்தானம்  வலி
துணிவு  வாழ்நாள்  வெற்றி  ஆகு நல்லூழ்  நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி  நீ சுகானந்த
வாழ்வு அளிப்பாய்  சுகிர்த குணசாலி! பரிபாலி!
அநுகூலி! திரிசூலி! மங்கள விசாலி!
மகவு நான்  நீ தாய்  அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (11)

ஓம் சக்தி ஓம்!..
அபிராமவல்லி சரணம்!..

வியாழன், ஜூலை 24, 2014

கங்கை கொண்ட சோழன்

பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன் -  என்று இந்த மாமன்னனின்  கல்வெட்டுகள் புகழ்கின்றன. 

மும்முடிச்சோழன் என்றும் சிவபாத சேகரன் எனவும் சிறப்பிக்கப்பட்ட தந்தையின் திருக்கரங்களினால் - யுவராஜா பட்டம் பெற்று அருகிருந்து ஆட்சியின் நுணுக்கங்களைப் பயின்றவன்.

ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய - பேரரசின் மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தவன். 

அகண்ட பாரதத்தில் - மிகச்சிறந்த கப்பல் படையினை உடையவன். 
கடல் வழியே படை நடத்தி - வெற்றி கண்ட பேரரசன்.

கடல் கடந்தும் களங்கண்டு வெற்றி கொண்ட வேங்கை!..

ராஜேந்திர சோழன்!..


ராஜராஜ சோழன் சிவனடி சேர்ந்த பின், சோழ பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு - கி.பி.1014. 

மாமன்னன் ராஜேந்திரனின் ஆட்சிக் காலத்தின் ஆயிரமாவது ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது.

தந்தையின் கையால் - இளவரசனாக முடிசூட்டப்பட்ட பின், 1012-ல் சத்யாஸ்ரயனை எதிர்த்து துங்கபத்ரை நதியை முதன் முறையாகக் கடந்து படை நடத்தினான் - ராஜேந்திர சோழன்!.. 

தன் மகன் பதினாறடி பாய்வதற்குத் தயாராகி விட்டதை அறிந்த மாமன்னன் ராஜராஜன் மகனை வாரி அணைத்து மகிழ்ந்தான்.

இளவரசனாக இருந்த பொழுதே மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 

படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தி - வேங்கி,கலிங்கம்,கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றினான். சேரனை நாட்டை விட்டு ஓடும்படிச் செய்தான். தெலுங்கரையும் இராஷ்டிரகூடரையும் வென்றான்.


இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றான்.  முழுமையாகக் கைப்பற்றி - தன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை  வடக்கே கங்கைக் கரை வரை விரிவாக்கினான்.  

பின்னர் கடாரத்தை வென்று அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி அதனையும் கடந்து ஸ்ரீவிஜய அரசைத் தோற்கடித்தான்.

கி.பி. 1018ல் ஈழ மண்டலத்தின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது.

அந்தப் போரில் தான் - பெரும் பாட்டனார் ஆன பராந்தக சோழரின் காலம் தொட்டு - கனவாக இருந்த பாண்டியரின் இரத்ன வாளும் முத்து மாலையும் கைப்பற்றப்பட்டன.

ராஜராஜ சோழன் - ஈழ மண்டலத்தில் ஏற்றிய புலிக்கொடி பூரிப்புடன் பறந்தது.

இதை சிங்களரின் மஹாவம்சம் எனும் வரலாறும் ஒத்துக் கொள்கின்றது.

அதே ஆண்டில் - தமது ஆட்சிக்கு உட்பட்ட  பாண்டிய, சேர பகுதிகளில் - சோழர்க்கு எதிராக நடத்தப்பட்ட கலகங்கள் அடக்கப்பட்டது.


சோழர்தம் பெரும்படை மன்னனின்  தலைமையில் தெற்கில் இருந்து கோதாவரி நதியைக் கடந்து கலிங்கத்தின் வழியாக கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது - 1019-ல்.

வங்கத்தின் மன்னன் மகிபாலனை வென்று கங்கையிலிருந்து நீர் எடுத்தது - இந்த போரில் தான்!..

இந்தப் பயணம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதன் பின் -

மேலைச் சாளுக்கியரை நோக்கிக் கவனத்தைத் திருப்பிய ஆண்டு - 1021.

பங்காளிச் சண்டை தொடங்கியது மேலைச் சாளுக்கியருக்கும் கீழைச் சாளுக்கியருக்கும்!..

மாமன்னர் ராஜராஜ சோழனின் மருமகன் விமலாதித்தன்.

தன் சகோதரியின் (விமலாதித்தன் - குந்தவை) மகனான ராஜராஜ நரேந்திரனுக்குத் தன் மகள் அம்மங்கா தேவியை மணமுடித்துக் கொடுத்தான்.

மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலைசாளுக்கியன் ஜெயசிம்மனையும் விஜயாதித்தனையும்முற்றாகத் தொலைத்தது - 1035ல்.

இரட்டபாடி நாடு எனப்பட்ட மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது.

மேலை சாளுக்கியர்களையும் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பின் மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான்.

விஜயாலய சோழன்  (கி.பி.848) ஏற்றிய புலிக்கொடி  - 

வங்காளம் (பங்களாதேஷ்), பர்மா (மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, 
கடாரம் (மலேஷியாவின் கெடா) , மலேஷியா (சிங்கப்பூர்), 
ஸ்ரீவிஜய ராஜ்யங்களான ஜாவா, சுமத்ரா, பாலி (இந்தோனேஷியா) 
அந்தமான் நிக்கோபார்  லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் - 

எனக் கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்தது - ராஜேந்திர சோழனின் காலத்தில்!..

(நன்றி - விக்கிபீடியா. வரலாற்றுத் தொகுப்பில் உதவி)

வங்காளத்தை சோழ பேரரசுடன் இணைத்த ராஜேந்திர சோழன் கங்கையில் நீரெடுத்த வெற்றியை சிறப்பிக்க, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி தன் ஆட்சியை அங்கிருந்து நடத்தினான்.


தந்தை எழுப்பிய ராஜராஜேஸ்வரத்தின்  வடிவமைப்புடன் கங்கை கொண்ட சோழேஸ்வரம் எனும் கோயில் ஒன்றையும் உருவாக்கினான் ராஜேந்திர சோழன்.

கங்கை கொண்ட சோழேஸ்வரரைப்  போற்றி - கருவூர்த் தேவர் பாடியுள்ளார்.

தலைநகரில் உருவாக்கிய சோழ கங்கம் எனும் ஏரியில் கங்கை நீரை வார்த்தான்.

கருங்கற்களைக் கொண்ட நிலையான பெருங்கோயிலை இறைவனுக்கு என எழுப்பினாலும், தந்தையைப் போலவே -  அரண்மனையை  செங்கற்களால் கட்டிக் கொண்டான்!..

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் ஐந்து கி.மீ தூரத்தில்- அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் காணப்படுகின்றன.

அந்த இடம் இன்றைக்கு மாளிகை மேடு எனப்படுகின்றது.

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகர் எனத் திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரம் - இன்றைக்கு அரியலூர் மாவட்டத்தில், ஒரு சிறுகிராமம்.

பல தேசங்களை தனக்கு கீழாகக் கொண்டு அதிக ஆண்டுகள் தலைநகராக இருந்த ஊர் அது. 


மாடமாளிகைகளுடனும் கூடகோபுரங்களுடனும் - 

ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், குலோத்துங்க சோழன் திருமதில்.,

சோழ கேரளாந்தகன் திருவாயில், வேம்புக்குடி வாசல்.,

ராஜராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, குலோத்துங்க சோழன் பெருவழி.,  

- என எண்ணற்ற திருமதில்கள், வாயில்கள், வீதிகள் நிறைந்த அற்புதமான தலைநகராக விளங்கியது - கங்கை கொண்ட சோழபுரம்!..

ஆனால், இன்றைக்கு அங்கே காணக் கிடைப்பவை- இடிந்த சுவர்களும், மண் மேடுகளும் புதர்களும்!..

மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு,  சோழ நாட்டின் மீது படையெடுத்த பாண்டியர் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அப்போது தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளானது. 

ஆனாலும், அங்கே இன்னும் கம்பீரத்துடன் விளங்குவது - ராஜேந்திர சோழன் எழுப்பிய பெரிய கோயில்!.. 



விவசாயமும் வணிகமும் கணிதமும் மருத்துவமும் சித்திரமும் சிற்பமும் இசையும் நாட்டியமும்  கலையும் கட்டுமானமும் உச்சத்தை தொட்டிருந்தது சோழர்களின் காலத்தில் தான்!..

கடல் கடந்தும் பறந்தது சோழர் தம் புலிக்கொடி!..

சோழர்களுடைய சாதனைகளுக்கும் கடல்கடந்து பெற்ற வெற்றிகளுக்கும்  தஞ்சை - கரந்தைச் செப்பேடுகளும் திருவாலங்காட்டு செப்பேடுகளும் ஆனை மங்கலச் செப்பேடுகளும் ஆதாரமாகத் திகழ்கின்றன. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இருந்து  30 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டேரி எனும்  கிராமம். இதற்கு அருகில் பிரமதேசம் என்னும் ஊர். 

எண்பதாவது வயதில் ராஜேந்திர சோழன் - சுற்றுப்பயணமாக  வந்த போது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். பிரம தேசத்தில் பள்ளிப்படைக் கோயில் ஒன்று உள்ளது.





ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் - ஆடித் திருவாதிரை எனக் கணக்கிட்டு உள்ளனர். ( முன்பு மார்கழித் திருவாதிரை என கூறப்பட்டது) 

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா - இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் வெகு சிறப்பாக (ஜூலை24 /25) நடைபெற உள்ளது.


இவ்விழாவை  Indian National Trust for Art & Cultural Heritage  (INTACH) மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆகியன வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கலந்து கொள்கின்றனர்.

ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெருவுடையார் கோயிலைச் சுற்றி ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

இங்கிருந்து மஹாதீபம் ஏற்றப்பட்டு - தீபச்சுடர் மாநகர் முழுவதும் தொடர் ஓட்டமாகி கங்கை கொண்டசோழபுரத்திற்கு  எடுத்துச் செல்லப்படுகிறது.

தீபச்சுடரை எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.

தொடர் ஓட்டத்தை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.N.சுப்பையன்.,IAS., அவர்கள் துவக்கி வைக்கின்றார். தீபச்சுடரைப் பின் தொடர்ந்து, ஆயிரம் மோட்டார் சைக்கிள்களில் அணி வகுத்து செல்கின்றனர்.

விழா ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கோமகன்
விழா ஏற்பாடுகளை  INTACH மைய அமைப்பாளரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா போன்ஸ்லே அவர்களும் விழா ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கோமகன் (கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்), மற்றும் அதன் நிர்வாகிகளும் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர்.

இராஜேந்திரசோழனின்பிறந்த நாளான ஆடி ஆதிரை விழாவை ஜூலை 25 அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை நேரடி ஒலி பரப்பு செய்ய தூர்தர்ஷனுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ராஜேந்திர சோழன் - பட்டமேற்ற தஞ்சை, சிற்றன்னை பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படையான பட்டீஸ்வரம், திருஆரூர் மற்றும் சிவகதி அடைந்த பிரம தேசம் ஆகிய தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன.

மாமன்னன் ராஜேந்திர சோழனை ஒரு கணம் சிந்தையில் வைத்துப் போற்றுவோம்.

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோழேச்சரத் தானே!..
கருவூர்த் தேவர். 


மாமன்னன் ராஜேந்திர சோழன் புகழ் வாழ்க!.. வளர்க!..
* * *