நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 17, 2014

ஆனந்தம் தரும் ஆடி

தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதம் எனும் சிறப்புக்குரியது ஆடி.

வருடத்தின் நான்காவது மாதம். சூரியன் கடக ராசியில் பிரவேசிக்க  கர்க்கடக மாதம் எனப்படுகின்றது.

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவைதான். எனினும் ஆடி மாதம் தனிச் சிறப்புடையது.


 தை முதல் ஆனி வரை வடக்கிலிருந்து தெற்காக இருந்த சூரியனின் பயணம் - ஆடி முதல் மார்கழி வரை சூரியனின் பயணம் தெற்கிலிருந்து வடக்காக இருக்கும் என்பார்கள்.

சூரியன் எங்கே இடம் மாறுகின்றான்!... நீள் வட்டப்பாதையில் சுழலும் பூமியின் சுழற்சியல்லவோ மாறுபாடு அடைகின்றது!...

காலக் கணக்கில் தேவர்களுக்கு மாலை நேரம் தொடங்குவதாக ஐதீகம்.

ஆடி முதல் மார்கழி வரை தேவர்களுக்கு இரவுப் பொழுதாகிய தட்சிணாயனம் என குறிக்கப்படுகின்றது. 

இந்த ஆடி மாதத்தில் தான் எத்தனை எத்தனை சந்தோஷமான வைபவங்கள்!..

தனித்துவமாக  - நம் வீடு முதல் கோயில் வரை!..

ஆடிமாதம் அம்பிகைக்கு உகந்த மாதமாக அனுசரிக்கப்படுகின்றது. ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் புதிய வளையல்களை அம்மனுக்கு சாற்றி சிறப்பாக வழிபடுகின்றனர்.  

கன்னியர்கள் ஆடியில் அம்பிகையை மனதார வழிபட்டால்  - நல்ல மணாளன் அமைவான் என்பதும்,

சுமங்கலிகள் அம்பிகையை வணங்கி வழிபட்டால் - இல்லறம் சிறக்கும். மாங்கல்ய பலம் பெருகும். குடும்பம் விளங்கும் என்பது  நம்பிக்கை.


அம்பிகையின் ரூப லாவண்யம் -   ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ மகமாயி, ஸ்ரீ பத்ரகாளி எனும் திருக்கோலங்கள். 

ஆகையால், அம்பிகையின் சந்நிதிகளில் - வேப்பிலை ஆடை, எலுமிச்சை மாலை சூட்டி - மாவிளக்கு ஏற்றி கூழ் நிவேதனம் செய்து குறை தீரப்பெறுவது கண்கூடு.
கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். - See more at: http://www.election.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3015&Cat=3#sthash.DchyUknV.dpuf
கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். - See more at: http://www.election.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3015&Cat=3#sthash.DchyUknV.dpuf

கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். - See more at: http://www.election.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3015&Cat=3#sthash.DchyUknV.dpuf

அம்பிகையைக் குறித்து ஏற்கும் விரதங்களும் செய்யப்படும் பூஜைகளும் முழுமையாக நம்மை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தக்கூடியவை!.. 

ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆலயங்களில் நிகழ்த்தப்படும் குத்து விளக்கு பூஜைகள் சிறப்பானவை. 

பசுமையான வேப்பிலையும் பொன்னிறமான எலுமிச்சையும்  நோய் தீர்ப்பன மட்டுமல்ல!.  தொல்வினைகளைத் தீர்த்து வைக்கக் கூடியன.

கண்கண்ட சாட்சியாக மாரியம்மனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவன.


குடும்பத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  - கன்னியாக அல்லது சுமங்கலியாக இறைவனடி சேர்ந்தாரை - தெய்வமாகப் பாவித்து  புடவை எடுத்து வைத்து மங்கல அணிமணிகளுடன் பொங்கல் நிவேதனம் செய்து வணங்குவது ஆடி வெள்ளிக் கிழமைகளில்!..

தவிர - வீட்டு சாமி கும்பிடுவது என்று வேட்டி துண்டுடன் நிறைந்த அன்னம் பாலித்தும்  ஆடி வெள்ளிக் கிழமைகளில் வணங்குவர்.

சிலர் அசைவ உணவு படைப்பது வழிபடுவதும் உண்டு

முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களை நிறைவேற்றி அவர்களிடம் நல்லாசிகளைப் பெறுவதற்கு ஆடி அமாவாசை உகந்த நாள்..  

அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்தது - ஐயாற்றில்!..

ஆடி அமாவாசை அன்று - திருஐயாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் திருக் கயிலாய தரிசனம் சிறப்பாக நடைபெறுகின்றது.


ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகக் கொண்டாடப்பட்டாலும்  - அந்த சிவகாமி பெற்றெடுத்த செல்வனுக்கு சீரும் சிறப்புமாக கார்த்திகை கொண்டாடப்படுவது ஆடியில்!..

எட்டுக்குடி, எண்கண், குன்றக்குடி  - முதலான திருத்தலங்களில் காவடி ஏந்தி வந்து கந்தன் காலடியைச் சேவிப்பவர்கள் ஆயிரம் ஆயிரம்!..


நதியைத் தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் நாள் ஆடிப் பெருக்கு எனும்  மங்கல விழா - ஆடி மாதத்தின் சிகரம்!..

ஆடிப் பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது  சீர்வரிசை    கொணர்ந்து  - கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார். 

அம்பிகை கோமதி என - புன்னை வனத்தில்  தவமிருக்க, எல்லாம் வல்ல பரம்பொருள் -   சங்கர நாராயணன் எனத் திருக்கோலம் காட்டியருளியது  - ஆடி மாதத்தில்!...


 வேணுவனமாகிய நெல்லையில் - அன்னை காந்திமதி  - சீர்மிகு வளைகாப்பு கொள்வதும் ஆடியில்!... காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் மங்கல வைபவம் நிகழும்.

மாமதுரையில்  ஆடி மாதத்தின் ஆயில்யம் முதல் பத்து நாட்களுக்கு முளைக் கொட்டு உற்சவம். கொடியேற்றம் கொள்பவள் மீனாக்ஷி மட்டுமே!..

இராமேஸ்வரத்தில் ஸ்ரீதர்மசம்வர்த்தனி  ஆடிப்பூர உற்சவத்தில் நாளும் ஒரு வாகனத்தில் நகர்வலம் வருகின்றனள்..

திருஆரூரில் கமலாம்பிகையும்
நாகையில் நீலாயதாக்ஷி அம்பிகையும்
திருக்கருகாவூரில் கர்ப்ப ரக்ஷாம்பிகையும்
திருமயிலையில் கற்பகவல்லியும்  - சந்தனக்காப்பு அலங்காரத்தில் திகழ்வது - ஆடிப்பூர நன்னாளில்!..

மேல்மருவத்தூரில் ஆடிப்பூரம் மிகப்பெரிய விழாவாக நிகழ்கின்றது.

சகல சிவாலயங்களிலும் அம்பிகைக்கு - மஞ்சள் காப்பு , குங்குமக் காப்பு, சந்தனக் காப்பு - என அலங்கரித்து வஸ்திரங்களும் வளையல்களும் சாத்தி மகிழ்வர்.


காதலாகிக் கசிந்து  -  கண்ணன் என் காதலன் என - தமிழை ஆண்டருளிய  -  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  -  அவதரித்தது  ஆடியில்!.. 

ஆண்டாள் - அருந்தமிழை ஆண்டாள்!. அரங்கனையும் ஆண்டாள்!..
வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் மகவாகத் தோன்றியவள் ஆண்டாள்!..
ஆடிப்பூரம்  - ஆண்டாளின் அவதாரத்தினால் பெருமை கொண்டது.

புதிதாக இல்லறம் ஏற்ற தம்பதியருக்கு - கொஞ்சம் கொண்டாட்டமும், நிறைய திண்டாட்டமும் ஆன மாதம்  - ஆடி!...

வளமையாக பொங்கிப் பெருகி வரும் நதி தீரங்களில் - ஆடிப்பெருக்கு என- மங்கலச் சடங்குகளை நிகழ்த்தி - குதுகலிப்பது ஆடியில்!...

மனம் நிறைந்த மகிழ்ச்சியில் - குலக்கொழுந்து தழைத்து ஜனிக்க - கொடும் வெயிற்காலமான சித்திரை உகந்தது அல்ல - என்று, அன்றில் பறவைகள் என ஆனந்த வானில் பறந்து திளைக்கும் அவர்களை -  அவர்களின் நலன் கருதி - பிரித்து வைப்பதும் ஆடியில் தான்!..

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல 
மாதவம் செய்திட வேண்டுமம்மா!..

பெண்மை சிறப்பிக்கப்படும் மாதம் - ஆடி மாதம்!..
குடும்பம் ஒரு கோயிலாகும் மாதம்  - ஆடி மாதம்!..


எங்கெங்கு காணினும் சக்தியடா!. 
என்று பாவேந்தர்  சிறப்பித்த பெண்மையை - 
சீர் தந்து போற்றும் மாதம் - ஆடி மாதம்!..

நம் இல்லங்களில் நம்முடன் வளைய வரும் 
மங்கலச் செல்வங்களாகிய - 
தாய், சகோதரி, மனைவி, மகள், அடுத்த வீட்டுப்பெண்கள் என
எல்லாரையும் சிறப்பிக்கும் மாதம் - ஆடி மாதம்!..

பெண் இல்லையானால் உலகம் எப்படியிருந்திருக்கும்?...
உலகம் என்ன - இந்தப் பிரபஞ்சமே இருந்திருக்காது!..

பெண்ணிற் பெருந்தக்க யாவுள!..
* * *

12 கருத்துகள்:

 1. ஆடி வந்தது! தேடிப் பிடித்து பல செய்திகள்! ஆடி என்றாலே பெண்களுக்கு ஆன்மீக மாதம்தான்! அதனைச் சிறப்பாகச் சொன்னீர்கள்1 எனது ஆடி மாத வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 2. ஆடியின் தனிச்சிறப்பு அறிந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான விளக்கம்... ஆடி மாத சிறப்புகள் அனைத்தும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 4. ஆடி மாதசிறப்பு பதிவு மிக அருமை.
  ஆடி கூழ் தேடி குடி என்பார்கள்.
  எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சிவதுர்க்கை அம்மனுக்கு ஆடி செவ்வாய் கிழமை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அலங்காரம், ஒரு செவ்வாய்க் கிழமை கூழ் செய்து அம்மனுக்கு படைத்து பின் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வோம்.
  பெண்ணின் சிறப்பை அழகாய் சொன்னீர்கள்.
  நன்றி சார்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 5. படங்கள் எல்லாம் மிக அருமையான தேர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   எல்லாம் இணையத்தில் பெற்றவை.
   அவளே தான் கொடுக்கின்றாள்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 6. ஆடியில் அம்மன் பெயரால் ஏழைகளுக்குக் கூழ் ஊற்றுவது கண்டதுண்டு. ஆடி மாதத்தில் சிறப்பு தள்ளுபடிக்கு என்ன காரணம்.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆடித் தள்ளுபடி என்ற கூச்சல் அவ்வளவாகக் கிடையாது. நம்மவர்கள் பெரும்பாலும் ஆடியில் ஜவுளி & நகைகள் வாங்க மாட்டார்கள் .

   கடைக் காரர்களின் கல்லா காய்ந்து போய்க் கிடந்தது. வியாபார உத்தியாக எதையோ கிளப்பி விட்டு - மக்கள் மடை மாற்றப் பட்டனர்.. இன்னும் விவரம் வரும் பதிவுகளில்!...

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..