நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 31, 2019

ஐயாறடைகின்ற போது..

இன்றைக்கு ஆடி அமாவாசை...

அத்துடன் - 
அப்பர் பெருமான் திரு ஐயாற்றில் திருக்கயிலாய தரிசனம் கண்ட நாள்..

நமது தமிழ்ச்செல்வியும் அவளது கணவர் செந்தில்நாதனும்
அவர்களுடன் தாமரைச்செல்வியும் திருஐயாற்றுக்கு கயிலாய தரிசனம் காண்பதற்கு வந்திருக்கின்றார்கள்...

நாமும் அவர்களுடன் பயணிப்போம்!...



செல்வி!.. தாமரை கையைப் பிடித்து அழைத்து வா.. கூட்டம் நெரிசலா இருக்கு!.. தாமரை நீயும் கவனமா வாம்மா!..

சரிங்க.. அத்தான்!..

ஏங்க.. நீங்க காலைல.. வந்தீங்களே...
அப்போ இவ்வளவு கூட்டம் இருந்ததா?..

சரியாப் போச்சு!... பூசப் படித்துறையில கால் வைக்க முடியலே... அமாவாசை தர்ப்பணத்துக்கு வந்தவங்க பாதிப்பேர் இன்னேரம் வீட்டுக்குப் போயிருப்பாங்க!.. அதான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கு..

ஏன்.. அத்தான்!... அமாவாசை தர்ப்பணம்..ன்னா திருவையாத்துல மட்டும் ஏன் இவ்வளவு கூட்டங் கூடுது?..


காசிக்கு சமமான ஆறு ஸ்தலங்கள்..ல திருவையாறும் ஒன்னு... அதுவுமில்லாம.. அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் கிடைத்ததும் இங்கே தான்!.. அதனால தான் இங்கே காவிரியில முழுகி தர்ப்பணம் செய்றதை புண்ணியமா நினைக்கிறாங்க!..

என்னென்ன தலங்கள்...ன்னு சொல்லுங்களேன்!..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரி மாயூரம் அர்ஜூனம்
சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ரே ஸமான ஷட்..

அப்படின்னு ஸ்லோகம்..

திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம் - ஆக, ஆறு ஸ்தலங்கள்..

அத்தான்.. நல்ல விவரமாத் தான் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!..

எல்லாம் அங்கே இங்கேன்னு படிச்சதுதான்.. 

ஏங்க.. பூசப் படித்துறைக்குப் போய்ட்டு வரலாமா?..

கூட்டம் ஏகத்துக்கும் இருக்கே செல்வி!... தாமரையை வேற அழைச்சிக்கிட்டு கஷ்டப்படுத்தனுமா?..

அக்கா.. எனக்கொன்னும் பிரச்னை இல்லை!.. வாங்க போகலாம்!..

இதுதாம்மா பூசப் படித்துறை.. புஷ்ய மண்டபம்..ன்னும் சொல்லுவாங்க.. எல்லா திருவிழா சமயத்திலயும் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் இந்த மண்டபத்தில எழுந்தருள்வாங்க... இந்த பக்கத்தில இருக்கிற மண்டபங்கள்...ல தான் திதி கொடுக்கிறது தர்ப்பணம் பண்றதெல்லாம் நடக்கும்..

ஓ!...

அப்படியே மெதுவா இறங்கி காவிரிய கும்பிட்டுட்டு வாங்க!... 
கோயிலுக்கு உள்ளே சீக்கிரம் போயிடனும்... அப்பதான் சாமி பார்க்க
வசதியா இருக்கும்!...

தாமரை... அக்கா கையை பிடிச்சுக்கம்மா!...

இதுதான் தெற்கு கோபுர வாசல்.. யமனை விரட்டிய ஆட்கொண்டார் சந்நிதி.. இவரை கும்பிட்டுக்கோங்க... யமபயம் இருக்காது..எதிர்பாராத அடிதடி, விபத்து இதெல்லாம் ஏற்படாது!...

இதென்ன அத்தான்.. கேணியில இருந்து புகை வருது?..

அது கேணி இல்லேம்மா.. குங்கிலியக் குண்டம்!..

அப்படின்னா?..

திருக்கடவூர்ல கலயன்.. ன்னு ஒரு சிவபக்தர் வாழ்ந்தார்.. அவருக்கு சிவாலயங்கள்..ல குங்கிலிய தூபமிடுவது இஷ்டமான ஒன்று.. அவர் ஏற்படுத்திய குண்டம் தான் இது.. 

அவர் தனது சிவப்பணியினால் சிறப்பு பெற்றவர்.. குங்கிலியக் கலய நாயனார்.. அப்படின்னு சிறப்பு.. அவர் ஏற்றி வைத்த குண்டம் காலகாலமா புகைந்து கொண்டிருக்கின்றது..

ஏன் அத்தான்.. மழைக் காலங்கள்....லயும் இந்தக் குண்டம் புகையுமா?..

மழைக் காலத்துல மேலே பந்தல் போட்டு இருப்பாங்க!..
அதனால மழையினால பாதிப்பு இருக்காது...
குங்கிலியம் போட்டுட்டு கோயிலுக்குள்ளே போவோம்!..

தாமரை.. இப்போ நாம இருப்பது நான்காம் பிரகாரம்.. இந்த கோயிலுக்கு வெளி வீதியைச் சேர்த்து ஐந்து பிரகாரம்.. இதற்குள்ளே மூன்று கோயில்கள்.. மூலஸ்தானம்.. வடகயிலாயம்.. தென் கயிலாயம்..

அதோ தென்மேற்கு பக்கமா தெரியுதே..அந்தக் கோயில் தான்
அப்பர் ஸ்வாமிக்கு தரிசனம் கிடைத்த தென் கயிலாயம்..
வடக்கு பிரகாரத்தில வட கயிலாயம்..ன்னு ஒரு கோயில்..
ராஜராஜ சோழனுடைய மனைவியான உலகமாதேவி கட்டியிருக்காங்க!..

தென்கயிலாயம் தரிசனம் செய்யத் தான் இவ்வளவு கூட்டமும்!... மூலஸ்தானம் எல்லாம் கூட்ட நெரிசல் குறைந்தால் தான் பார்க்க முடியும்..


திருநாவுக்கரசருக்கு கயிலாய தரிசனம் என்பது என்ன வரலாறு அத்தான்?..

காளஹஸ்தி தரிசனம் முடிந்ததும் அங்கேயிருந்து திருக்கோகர்ணத்தைத் தரிசித்தார்.. அப்படியே வடநாட்டிலுள்ள தலங்களையும் தரிசிக்க ஆவலானது.. அத்தோடு கயிலாய மாமலையையும் தரிசிக்க முடிவெடுத்தார்..

வயதான காலத்தில் உடன் வந்தவர்களை மறுத்து விட்டு ஸ்வாமிகள் தன்னந்தனியராக நடந்தார்...

..... ..... .....

கயிலாய மாமலையில் ஏறும் போது மிகவும் சிரமத்துக்கு ஆளானார்.. கால்கள் தேய்ந்து போயின.. கைகளை ஊன்றி தவழ்ந்து சென்றார்.. முழங்கால்களும் தேய்ந்து முறிந்தன.. அதன்பிறகு ஊர்ந்தபடியே மலைச் சரிவில் பயணித்தார்..

என்ன கஷ்டம்!.. என்ன கஷ்டம்!.. இருந்தாலும் வயதான பெரியவருக்கு தான் எவ்வளவு தைரியம்!..

தாமரை.. ஏம்மா.. கண்ணு கலங்குது!..

இதோ இருக்கிற தஞ்சாவூர்..ல இருந்து திருவையாறு வர்றதுக்குள்ள.. நாம நொந்து நூலாகிப் போறோம்!.. கடுமையான பனிமலையில தன்னந்தனியா வயசான காலத்தில அதுவும் ஊர்ந்தபடியே போனாங்களே... எல்லாம் நமக்காகத் தானே.. அவ்வளவு கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டாங்க...

தாமரை.. அப்பர் ஸ்வாமிகளுக்கு முன்னே.. காரைக்காலம்மையாரும் இப்படித் தான் கயிலாய மலையில கஷ்டப்பட்டு தலையை ஊன்றிப் போனாங்க!.

ஆமாம் அக்கா!.. அவங்க வரலாற்றைப் படிக்கிறப்பவும் கேக்கிறப்பவும் கண்ணீர் வருமே!..

அதுக்கு அப்புறம்.. அப்பர் ஸ்வாமிகள்.. மானசரோருவ ஏரிக் கரைக்கு வந்துட்டாங்க.. அதுக்கு மேலே அவங்களா..ல நகரக்கூட முடியலே.. இருந்தாலும் மனமுருகிப் பதிகம் பாடினார் - ஸ்வாமிகள்..

திருக்கயிலாய மாமலை 
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி  
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி!..

அப்போ.. ஈஸ்வரன் துறவியா உருமாறி வந்தார்..

ஐயா..  இதுக்கு மேலே போறதுக்கு 
உங்க உடம்பு ஒத்துக்காது..
வந்த வழியே திரும்பிப் போய்டுங்க!.

- அப்படின்னு ஒரு வெடிகுண்டைப் போட்டார்..

அதெல்லாம் முடியாது.. கயிலை தரிசனம் செய்யாம இங்கேருந்து போக மாட்டேன்!...


- அப்படின்னு விடாப்பிடியா இருந்தார் திருநாவுக்கரசர்....

பக்தனோட மன உறுதி பரமனுக்கு சந்தோஷமா இருந்தது..

நீ வந்து என்ன - என்னைத் தரிசனம் செய்றது?..
நானே வந்து உனக்கு தரிசனம் தர்றேன்!..

- அப்படின்னு முடிவு செஞ்சார் - ஈஸ்வரன்....

ஐயா.. இதோ இந்த தடாகத்தில மூழ்குங்க.. நீங்க நினைச்ச மாதிரி சிவ தரிசனம் காணலாம்..


- அப்படின்னு சொன்னார்..

அதைக் கேட்ட அப்பர் ஸ்வாமியும் அந்த ஏரியில இறங்கி தண்ணீரில் மூழ்கினார்.. அப்பர் ஸ்வாமி எழுந்தபோது காட்சி கொடுத்த இடம் தான் திருவையாறு..

சிவனும் சக்தியும் இந்த உலகத்தில உள்ள உயிர்த் திரளா ஆனந்தத் திருக்காட்சி கொடுத்தாங்க.. யானையாக, பசுவாக, மானாக, கிளியாக புறாவாக, கோழியாக, பன்றியாக - இப்படி சகல உயிர்கள்..லயும் சிவ சக்தி தரிசனம் கண்டார் அப்பர் ஸ்வாமிகள்..

அதனால தான் கண்டறியாதன கண்டேன்!.. ந்னு பாடி உருகினார்..

அந்தத் திருப்பதிகத்தில இருந்து ரெண்டு பாட்டைத் தான் பாடுங்களேன்..

ரெண்டு என்ன?.. மூனு பாடலே பாடுகிறேன்!...

காதல் மடப்பிடியோடும் களிறு 
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் ஐயாற டைகின்றபோது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

பேடையொடாடிச் சேவல்
பிறையிளங் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிள, பூங்குயிலாலும் ஐயாறடைகின்ற போது
சிறையிளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

பேடையொடாடும் நாரை 
பேடை மயிலொடுங் கூடி 
ஏடு மதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்
காடொடு நாடுமலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..

ஆகா.. தித்திக்கும் தேவாரம்... அற்புதம்.. அருமை!..

தாமரை.. அதோ.. சாமி புறப்பாடு ஆயிற்று!.. 


எம்பெருமானே!.. ஐயாறப்பா.. தாயே.. அறம் வளர்த்த நாயகி!.. 
எல்லாரையும் நல்லா வைக்கணும் சாமி!..

ஐயாறு அகலாத செம்பொற்சோதீ!..
ஐயாறா.. ஐயாறா.. சரணம். சரணம்!..

காவாய் கனகத் திரளே போற்றி..
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..


தொடர்ந்து பெரு முழக்கமாக சிவகண வாத்தியங்கள் அதிர்கின்றன..

ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியின் திருமுன்பாக அப்பர் பெருமான்!.

ஏக காலத்தில்
ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகிக்கும்
அப்பர் பெருமானுக்கும் மகா தீபாராதனை நிகழ்கின்றது... 

அடியார்கள் கண்களில் எல்லாம் ஆனந்தக் கண்ணீர்..
தாமரையும் செல்வியும் செந்தில் நாதனும் மெய்மறந்து நிற்கின்றனர்..

அப்பர் கண்ட கயிலாய தரிசனம் அடியவர்களுக்கும் ஆயிற்று..
அப்படியே அத்திருக்காட்சி நமக்கும் ஆயிற்று...

அந்த அளவில் - அடியவர் குழாம் ஐயாறு அகலாத செம்பொற்சோதியின் திருமூலஸ்தானத்தை நோக்கி நகர்கின்றது..

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38)
-: அப்பர் ஸ்வாமிகள் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூலை 30, 2019

கருணை முகங்கள் ஓராறு

கடந்த வெள்ளி மலர் பதிவில் முருகப் பெருமானைப் பற்றியும் கார்த்திகைப் பெண்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்த போது -

அன்பின் ஸ்ரீராம் அவர்களும் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களும் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்...

அப்போதே இந்தப் பாடலைப் பதிவில் வழங்குதற்கு ஆவல் கொண்டேன்..

அதை அடுத்த நிகழ்வாக இந்தப் பாடலை
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்து இருந்தார்கள்...


கார்த்திகேயன் என்பது முருகப்பெருமானுடைய திருப்பெயர்களுள் ஒன்று..

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பது பொருளாகும்..

வான் மகிழ வந்த அறுமுகச் செவ்வேளைச்
சரவணத்தில் வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களின் திருப்பெயர்கள் -

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி,
வர்த்தயேந்தி, அம்பா, துலா.. - என்பதாகும்..

கங்கைக் கரையின் சரவணத்தில் முருகப்பெருமான் தோன்றியதால்
பெருமானின் - காங்கேயன் என்ற திருப்பெயரும் வழங்கப்படுகின்றது.....

கந்தன் கருணை என்ற திரைப்படத்தின் பாடல் இது..

கவியரசரின் பாடலுக்கு இசை - திரை இசைத்திலகம் K.V. மகாதேவன்..
பாடலைப் பாடியிருப்பவர்கள் - 
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, A.P. கோமளா மற்றும் ஜமுனாராணி..

இனியதொரு பாடலை
மீண்டும் வழங்கும் முகமாக இன்றைய பதிவில் 
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வருகின்றான்...


ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்..

காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க..
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க..


ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்..

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று..
தண்ணிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று..

பால் மணமும் பூ மனமும் பதிந்த முகம் ஒன்று..
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று..

வேல் வடிவில் கண் இரண்டு விளங்கும் முகம் ஒன்று..
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று..

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்!....


கந்தா போற்றி.. கடம்பா போற்றி..
கார்த்திகை மைந்தா போற்றி.... போற்றி..

ஃஃஃ

வெள்ளி, ஜூலை 26, 2019

வெள்ளி மலர் 2

தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தின் சிறப்புகளில் மற்றொன்று!..

இந்த மாதத்தின் கிருத்திகை...

வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும்
முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. திதிகளில் ஆறாவது சஷ்டி...

கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தின் அம்சம் தேவ மங்கையர் அறுவர்... 

திருமுருகனைத் தோற்றுவித்தபோது சிவபெருமானுடைய திருமுகங்கள் - ஆறு...


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

இப்படி உலகம் உய்ய வேண்டி -
திருமுருகன் உதிப்பதற்கு  - பரம் பொருளாகிய சிவபெருமான்
தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின...
அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட -
கங்கை அவற்றை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கிய ஐயன் -
நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்...


சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள்.

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரியின் குமரன்.

கந்தனை வாரி அணைத்து திருத்தனபாரங்களில் சுரந்த அமுதினை -
அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சுவித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்..
-: கந்த புராணம் :-

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வணங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 -:கந்தபுராணம்  - சரவணப்படலம் :-

" கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன் என அழைக்கப்படுவான்...

நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும்
அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!.." 

- என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்.. - என்பது கச்சியப்ப சிவாச்சார்யரின் திருவாக்கு!..

இத்தனை சிறப்புடையது  கார்த்திகை விரதம்...

ஸ்ரீ தேவகுஞ்சரி மணாளன் 
கார்த்திகை விரதத்தினை அனுசரிப்போர் -
முதல் நாள் இரவில் ஏதும் உண்ணாதிருந்து கந்தனின் நினைவுகளுடன் துயின்று - கிருத்திகை நட்சத்திரத்தன்று விடியற்காலையில் எழுந்து நீராடி தூய உடையினை உடுத்து - திருநீறு தரித்து திருக்கோயிலில் சென்று வணங்கி வழிபட்டு - 

தண்ணீர் மட்டும் அருந்தி இயன்றவரை திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் செய்வதும் முருக மந்திரங்களைத் தியானம் செய்து  

மாலையில் மீண்டும் நீராடி நித்ய வழிபாடுகளைச் செய்தபின் எளிய உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வர்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனை, அர்ச்சனைகளில் பங்கு கொள்வதும் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதும்  சிறப்புடையன. 

திருச்செந்தில் நாதன்
முருகனின் அருள் பெறுதற்கு எளிய விரதங்கள் ஏற்றவை. 

தன்னுடலைத் தானே வருத்திக் கொள்ளும்படிக்கு
எந்த ஒரு குறிப்பும் மக்களுக்கு அளிக்கப்படவில்லை!.. 

கந்தனின் அருளைப் பெறுவதற்கு
அவனை சரணடைதலே பெரியோர்கள் நமக்குக் காட்டியவழி..  

பழனியம்பதியின் பாலகுமாரன் 
தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின்
முதல் மாதமான ஆடி பிரதோஷ நேரமாகக் கருதப்படுகின்றது. 

எனவே  - ஆடி மாதம்  விளக்கேற்றும் பொழுது என்றாகின்றது .


எந்தனை ஆளும் ஏரகச் செல்வன்
எனவே தான்  - ஆடி மாத வழிபாடுகளும்
ஆடிக் கிருத்திகையும்  சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 


தணிகை மலைச் செல்வன் 
அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் திருச்சந்நிதிகளிலும்
ஆடிக் கிருத்திகை சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது...

குன்று தோறாடும் குமரவேலன்
அறவழி நின்றால்  - அறுமுகனின் அருள் பெறலாம்!..
- என்பதே திருக்குறிப்பு.


அறம் செய்றது.. - என்றால் எப்படி?...

மலையைப் புரட்டிப் போட்டு
கடலில் கழுவி எடுக்கின்ற மாதிரி இருக்குமோ!..

அதெல்லாம் இல்லை..

அறம் செய்ய விரும்புவதே பெரிய அறம்...

வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் !.. 

- என்பது கந்தர் அலங்காரம். 

அது என்ன நொய்யின் பிளவு!?..

ஒரு அரிசி இருபாதியாக உடைந்தால் அது நொய் எனப்படும். 
அந்த நொய் இரு பிளவாக ஆனால் - அது குறு நொய்!.. 

திரண்ட செல்வத்திலிருந்து அந்த குறு நொய்யின் அளவாவது அற்றார்க்கும் அலந்தார்க்கும் உதவுங்கள் என்பது அருணகிரியாரின் அருள்வாக்கு!..



வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
குகனுண்டு குறைவில்லை மனமே..
குகனுண்டு குறைவில்லை மனமே!..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்!..
* * *

திங்கள், ஜூலை 22, 2019

அழகு.. அழகு 7

என்றென்றும் அழகு!.. 

நந்தி... வெளியே போய் விளையாடலாமா!... 
அம்மா என்றால் அன்பு.. 
அம்மா... நா எங்கிருக்கேன்!?
வாழப்பூ உடம்புக்கு நல்லதாமே... 
உங்களுக்கு கொஞ்சம் வேணுமா!.. 
எங்களுக்கு ரேசன் கார்டு கெடைக்குமா!.. 
ஒன்னு எடுத்தா இன்னொன்னு இலவசம் 
என்னாது... காலைல பல்லு தேய்க்கணுமா!... 
இன்னும் பெட் காஃபி வரலையே!..
இதற்கு முந்தைய அழகு.. அழகு 6 பதிவினை இங்கே காணலாம்...

படங்கள் எல்லாம் FB ல் கிடைத்தவை...


எங்கும் அழகு.. எல்லாம் அழகு..

வாழ்க நலம்..
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 19, 2019

வெள்ளி மலர் 1

இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை..

இன்றைய தரிசனம் -
புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!..

தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று..

தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில்....

சில ஆண்டுகளுக்கு முன்
திருக்கோயிலின் தெற்காக நெடுஞ்சாலையைத் தவிர்த்து
கண்ணுக்கெட்டியவரை பசுமையான வயல்வெளி தான்..

திருக்கோயிலின் மேற்காக தஞ்சை மாநகர் கீழவாசல் கரம்பை வரைக்கும்
சமுத்திரம் எனப்பட்ட மிகப்பெரிய ஏரி தான்...

இன்றைக்கு வயல் வெளிகள் எல்லாம்
அட்டைப் பெட்டியை ஒத்த வீடுகளாகிப் போயின...

சமுத்திரம் ஏரியையும் சிறு குட்டையைப் போல சுருக்கி விட்டனர்...

தஞ்சாவூரில் இருந்து கோயில்வெண்ணி (25 கி.மீ.,) வரைக்கும்
சாலையின் இருபுறமும் நூற்றுக் கணக்கான நிழல் மரங்கள்...

நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பேரில்
அத்தனை மரங்களையும் வெட்டித் தள்ளி விட்டார்கள்...

காலக் கொடுமையடி தாயே... காலக் கொடுமையடி!..
என்றபடிக்கு - ஆலய தரிசனம் செய்ய வாருங்கள்... 


தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி மகாராஜா (1680) மாதந் தோறும் சமயபுரத்திற்குச்  சென்று அம்மனைத் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 

அப்படி ஒரு முறை அவர் அங்கு சென்றபோது இரவு பூஜை முடிந்து விட்டது. 

ஆலய நடையையும் அடைத்து விட்டனர். 

திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்து நடை சாத்திவிட்டால் அடுத்த நாள் உதயத்தில்தான் திறக்க வேண்டும் என்பது விதி. 

அதன்படி, மறுநாள் காலை தரிசிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் -  அங்கேயே பரிவாரங்களுடன் தங்கிவிட்டார்.

தூக்கத்தில் விளைந்த கனவில் - அம்மன் தோன்றினாள்..

தலைநகர் தஞ்சைக்கு அருகில் கிழக்குத் திசையில் தழைத்திருக்கும் புன்னை வனத்தினுள் - புற்றுக்குள் மறைந்திருக்கின்றேன். என்னை அங்கேயே கண்டு கொள்!.. 

- என்று கூறி அருளினாள் .  

தூக்கம் கலைந்து எழுந்த மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  

அன்னை கூறிய இடத்தினை மனதில் இருத்திக் கொண்டார்.. அதிகாலையில் சமயபுரத்தாளைத் தரிசித்து வணங்கிய பின் தலைநகர் திரும்பினார்.

வந்ததும் முதல் வேலையாக - திறமையான ஆட்களுடன்
தஞ்சைக்குக் கிழக்கே இருந்த வனாந்தரத்திற்குச் சென்றார் மன்னர்.. 

அன்னை கூறிய இடத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, 

அழகே வடிவான சின்னஞ்சிறு பெண் ஒருத்தி
தலைவாரி பூச்சூடியவளாக, சர்வ அலங்கார பூஷிதையாக  -
குதிரையில் அமர்ந்திருந்த மன்னனின் முன் வந்து நின்றாள்.

..யாரம்மா.. நீ!. இந்தக் காட்டில் தன்னந்தனியளாக என்ன செய்கின்றாய்?..'' 
- என்று மன்னன் கேட்க - அதற்கு அந்தப்பெண் , 

என்னைத் தேடி நீ வந்தாய்!.. உன்னைத் தேடி நான் வந்தேன்!..

- என்று புன்னகைத்தாள்..

திகைப்படைந்த மன்னனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தவளாக  
வேம்பின் கீழிருந்த புற்றுக்குள் ஒளி வடிவமாக கலந்து விட்டாள். 

மன்னனுக்கு புல்லரித்தது.  

''அன்னையே வந்து முகங்காட்டினாள்..'' 
- என, பூமியில் விழுந்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினர் மக்கள்.. 

புற்றின் மீது குடில் அமைக்கப்பட்டது...
மஞ்சளும் மலர்களும் தூவப்பட்டன... 

அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன.. 

அன்னையின் தவநிலைக்கு இடையூறு ஏற்படாதபடி,
மக்கள் வந்து வணங்கும் வண்ணம் அந்த புன்னை வனத்தினுள்
பாதையும் அமைக்கப்பட்டது. 

புற்றுருவாய் எழுந்த அன்னையைக் கண்டு கைதொழுத மக்கள்
''..கமாயீ..'' - என்று பெருங்குரலெடுத்து அழைத்து மகிழ்ந்தனர். 

அவளை அண்டினோர் தம் அல்லல் எல்லாம் அழிந்ததனால் புன்னைவனம் - புன்னை நல்லூர் என்றானது. 

அச்சமயத்தில்  மகாஞானியும் சித்த புருஷரும்  அவதூதருமான 
மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் காசியம்பதியில் இருந்து
தஞ்சை மாநகருக்கு எழுந்தருளியிருந்தார்.  

அவரைப் பணிந்து வணங்கிய மன்னன் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க,   மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் புன்னை வனத்துக்கு விஜயம் செய்தார்.  

புவனம் காக்க என்று வந்தவள் புன்னை வனத்துப் புற்றினுள்
பூர்ண கலைகளுடன் பொலிந்திருப்பதை உணர்ந்த ஸ்ரீ ப்ரம்மேந்திரர்
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் அம்மனை ஆவாகணம்  செய்து முடித்தார். 

அந்தத் திருமேனி தான்
இப்போது புன்னைநல்லூர் ஆலயத்தில் திகழ்வது.. 


அதன் பின் வேறொரு சம்பவம்..

தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவின் (1728-1735) புதல்வி
பெரியம்மையால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தாள்.  

துயரம் மிகுந்த மன்னன் அன்னையின் சந்நிதியில் நின்று அழுது தொழுதபடி 

''..என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!.. என் அன்னையே!'' 
-என்று தன் அன்பு மகளுடன் அங்கேயே தங்கிவிட்டான்..  

நாட்கள் பலவாகின.

பார்வையிழந்த மகளுக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டுமென -
அல்லும் பகலும் அன்னையைத் தொழுது நின்றான்..

அன்னையைச் சரணடைந்த மன்னன் மகிழும்படியான நேரமும் வந்தது.

வழக்கம் போலவே - 

சின்னஞ்சிறு பெண் போல, சிற்றாடை இடையுடுத்தவளாய்
சிவகங்கைக் குளக் கரையிலிருந்து - ஸ்ரீதுர்கையை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்.  

இளவரசியின் உடல் முழுதும் வேப்பிலையால் வருடி,
திருநீறு பூசி விட்டாள். 

''..கண்களைத் திற!..''  - என்றாள்... 

''..என்னம்மா.. கண்ணிழந்த என்னைக்
கண்களைத் திறக்கச் சொல்கின்றாயே!.'' 

என இளவரசி கதறி அழுதாள்... வந்திருப்பது யாரென்று அறியாததால்!..

''..உன் அம்மா தான் வந்திருக்கின்றேன்!..
கண்களைத் திறந்து என்னைப் பார்!..'' 

- என்றாள் உலகநாயகி!.. 

திடுக்கிட்டு அரசகுமாரி கண் விழிக்க -
மின்னலைப் போல் மூலத்தானத்தினுள் கலந்தாள் அன்னை. 

பாதாதி கேசமும் புல்லரிக்க
அன்னையின் மலரடிகளில் விழுந்து வணங்கினர் அனைவரும்.

அம்பிகையின் அருளைக் கண்டு வியந்த மன்னன் -
தன் மகளுக்குப் பார்வை கிடைத்த நன்றியறிதலுடன் -
அம்பிகையின் குடிலை சிறிய கோயிலாக எழுப்பிக் கட்டினார். 

அந்தக் கோயில் தான் காலப்போக்கில் விஸ்தாரமான கட்டுமானங்களுடன் பெரிய கோயிலாக மாறியது. 

சரபோஜி மன்னர்  தன் ஆட்சிக் காலத்தில் - மகா  மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய திருமதில் - இவற்றை எழுப்பி   பெரும் திருப்பணி செய்தார்.

பின்னர் மூன்றாவது திருச்சுற்றும்,  உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் ராணி காமாட்சியம்பா எழுப்பி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவை.  


என்னிடம் வந்த பிறகு உனக்கு என்ன குறை என்பதைப் போல -
ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்றாள் அம்பாள்.

மூலஸ்தான அம்பாளின் திருமேனி புற்றுமண் ஆனதால் -
அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு 48 நாட்கள் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் திருக்காப்பு நடைபெறும். 

அச்சமயம் மூலஸ்தானத்தைத் திரையிட்டு மறைத்து விடுவார்கள்.  

அம்பாளை வெண் திரையில் சித்திரமாக வரைந்திருப்பர்..

அந்த சித்ர ரூபிணிக்கே 48 நாட்களுக்கு அர்ச்சனைகள் நிகழும். 

தைலக்காப்பின் போது அம்பாளுக்கு  உக்ரம் அதிகமாகும்.அதைத் தவிர்க்க தயிர் பள்ளயம், இளநீர், நீர்மோர், பானகம் வைத்து நிவேத்தியம் நடைபெறும். 


இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது. 

இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.

மூலத்தானத்தின் தென்புறம் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கைக்கும்  உற்சவ மூர்த்திக்கும் தான்  நித்ய அபிஷேகம் நடைபெறுகிறது. 

கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். 

தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலை தேவியருடன் 
ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.
பேச்சியம்மன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி ஆகியோர் ஒருங்கே உறையும்  சந்நிதி   கொடிமரத்திற்கு தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. 

இங்கே உள்ள தொட்டிலில் பிறந்த குழந்தைகளை இட்டு பேச்சியம்மனிடம் திருநீறு வாங்கிக் கொள்வது பெரும் பேறாகும்.

மூன்றாம் திருச்சுற்றில் கோசாலையும் மாவிளக்கு ஏற்றும் தீபநாச்சியார் மேடையும் வேப்பமரத்தடியில் பெரிய புற்றும் சில பரிவார மூர்த்திகளும் புன்னை மரமும் விளங்குகின்றன.

பூச்சொரிதல்
பைரவ உபாசகராகிய -
பாடகச்சேரி மகான் தவத்திரு இராமலிங்க சுவாமிகள்  இத்திருத்தலத்தில் பலகாலம் இருந்திருக்கின்றார்கள். 


தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.  இங்கே  குறைவிலாத அன்னதானம் செய்ததுடன் திருப்பணிகளையும் செய்துள்ளார். 

சுவாமிகளுடைய திருமேனி வெளித் திருச்சுற்றில் மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறம் சுதை வடிவமாகத் திகழ்கின்றது.

திருக்கோயிலுக்குத் தென்புறமாக ஸ்ரீகல்யாணசுந்தரி சமேத
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.


மாரியம்மன் கோயிலின் பின்புறம் சற்று அருகிலேயே -
சாளக்ராம ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலும் அமைந்துள்ளது..

ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் ஏது குறை!..

ஓம் சக்தி ஓம்..
* * *