நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 09, 2019

வரந்தரும் வரதன் 2

ஒன்றுக்கு இரண்டு என்பார்கள்...

அது மிகச் சரியாக எனது விஷயத்தில் பொருந்தி இருக்கின்றது...

நாற்பதாண்டுகளுக்குப் பின் புஷ்கரணியில் இருந்து
அத்திவரதன் வெளிவர இருக்கின்றார் என்று சென்ற ஆண்டிலிருந்தே 
சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

காஞ்சியில் இப்படியொரு அபூர்வம் இருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பே
கேள்விப்பட்டுள்ளேன்...

அத்தி வரதனைத் தரிசிக்க நமக்கு வாய்ப்பில்லை.. - என,
அமைதியாகி விட்ட நிலையில் 

நமக்கு இயன்ற வகையில் அத்திவரதனை ஆராதிப்போமே.. என்று
கைக்குக் கிடைத்த படங்களைக் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டேன்...

அந்நியப் படையெடுப்புகளினால்
நமது பாரதம் அடைந்த இன்னல்களும் இழப்புகளும் அளப்பரியவை...

உண்மையைப் பூசி மெழுகி -
ஊடகங்கள் அப்படியும் இப்படியுமாக
செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்த வேளையில்
நானறிந்த தமிழ் கொண்டு அத்திவரதனுக்கு ஒரு பாமாலை புனைந்தேன்.. 


சரி.. இப்போதைக்கு இத்துடன் இருக்கட்டும் என்றிருந்த வேளையில்
அன்பின் நெல்லை அவர்கள் அத்திவரதனைப் பற்றி இரண்டு பதிவுகளை வழங்கினார்...

அதென்ன நீயாக நினைப்பது... இத்துடன் இருக்கட்டும் என்று!..
இதோ நான் தருகிறேன் இன்னும் இரண்டு!.. பதிவில் ஏற்று!..
- என்று அத்தி வரதனே என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்...

அந்த வகையில் அத்திவரதனை ஆற்றுப்படுத்தி
நமக்கெல்லாம் நெல்லை அவர்கள் தரிசனம் செய்விக்கின்றார்...


தேவியருடன் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்  
அத்தி வரதன் வாழ்க..
அருள் பொழியும் பெருந்தேவி பெயர் வாழ்க...
திரு வளரும் கச்சிப்பதி வாழ்க..
அவன் அன்பினில் உறையும்
அடியார் குழாமும் வாழ்க.. வாழ்க!.. 

வாருங்கள்... நெல்லையின் கை பிடித்தபடியே செல்வோம்..
ஃஃஃ


விருந்தினர் பக்கம் - 8
ஸ்ரீ அத்தி வரதன் தரிசனம்..

வரிசை ஓரளவு வேகமாகவே சென்றது. இரண்டு வரிசை. நான் வலதுபுற வரிசையில் நின்றேன் (சிறிது வேகமாக அது செல்வதுபோல் தோன்றியதால்). இதைத் தவிர என் வலது பக்கத்தில் இன்னொரு வழி இருந்தது.

கொஞ்சம் வயதானவர்கள், வீல் சேரில் நடத்திக்கூட்டிக்கொண்டுபோகும்படியாக. அதுவும் தவிர, இந்த இரு வரிசையில் இருந்தவர்கள், சிறிது சிரமத்துக்குள்ளானால் (குழந்தைகளோடு இருப்பவர்கள்), அவர்களையும் இடையில் இந்த வரிசையில் அனுமதித்துக்கொண்டிருந்தார்கள்.


9:20க்கு அத்திவரதரைச் சேவித்தேன்.  வரிசையின் நீளம் சுமார் 600 மீட்டர் இருக்கலாம்.  9:30க்கு வெளியே வந்துவிட்டேன். இருந்தாலும் இந்தச் சேவை எனக்குத் திருப்தி தரவில்லை. 

பாதம், கையில் இருந்த கதைபோன்ற ஆயுதம், பிறகு முகம் பார்ப்பதற்குள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மூலவரை தரிசிக்க பெரிய கியூ. அதில் நின்றால் 3-4 மணி நேரமாகும் மூலவரைச் சேவிக்க. அதனால் திரும்ப கோவிலைச் சுற்றி நடந்து வந்து, செருப்பை விட்ட இடத்தில் செருப்பை எடுத்துக்கொண்டு, மற்ற கோவில்களுக்குச் சென்றேன்.

நான் சென்ற கோவில்கள், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம், அங்கு இருக்கும் வைணவ திவ்யதேசப் பெருமாள் கள்வனார்.  பிறகு உலகளந்த பெருமாள் கோவிலில், நான்கு வைணவ திவ்யதேசப் பெருமாள் தரிசனம். 

பிறகு காஞ்சி சங்கர மடம் சென்று, பரமாச்சாரியார், புதுப் பெரியவாளின் அதிஷ்டான தரிசனம். அங்கு சிறிது நேரம் இருந்து, திருமஞ்சனம், அலங்காரம் இவற்றைக் கண்டு களித்தேன்.

காஞ்சீபுரத்தில் 12 மணிக்கு மேல், மாலை 4 மணி வரை, அனேகமாக எல்லாக் கோவில்களின் நடை சாத்தப்பட்டுவிடும்.

மதியம் 12:30 மணிவாக்கில், மீண்டும் வரதராஜர் ஆலயம் வந்து, செருப்பை வெளியே விட்டுவிட்டு வரிசையில் நுழைந்தேன். அப்போது இன்னும் அதிகமான கூட்டம் இருந்தது.

இந்த முறை கவனமாக இடது வரிசையில் நுழைந்துகொண்டேன், அது இன்னும் மெதுவாக நகர்ந்தபோதிலும். கிட்டத்தட்ட 1 ½ மணி நேரம் வரிசையில் நின்றபிறகு, மிக அருமையான அத்திவரதர் சேவை வாய்த்தது - கண்குளிரக் காணும்படியாக..

அவ்வளவாக இந்த முறை உடனே திருப்பப்படவில்லை.

2:15  மணிக்கு வெளியே வந்து வெயிலில் நடந்து, சென்னைக்கு பஸ்ஸில் போவதா அல்லது திரும்பவும் இரயிலிலேயே பயணிப்பதா என்று யோசித்து, பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்ஸில் சென்றேன் (அதே 10 ரூபாய் பஸ்தான்).

குழப்பத்தில் சென்னைக்கு வேறு ஒரு பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று சொன்னதால் இன்னொரு பேருந்தில் பயணம் என்று 1 மணி நேரத்துக்குமேல் வீணாக்கி கடைசியில் இரயில் நிலையத்துக்கு வந்து, 4:30 மணி இரயிலைப் பிடித்து 7 மணிக்கு கிண்டி வந்து சேர்ந்தேன். வீடு வந்து சேர இரவு 7:45 ஆகிவிட்டது.

பேருந்து ஏற்பாடு, வரிசைக்கான ஏற்பாடுகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரின் பணி போன்றவை மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டியவை. பாதை முழுவதும் மணல் போடப்பட்டிருந்தது.

மேலே கூரை அமைக்கப்பட்டிருந்தது. அவசரத்துக்கு மருத்துவ அறைகளும், வரிசையில் 30 அடிகளுக்கு ஒரு இடத்தில் தண்ணீரும், அதனைக் கொடுக்க ஆர்வலர்களும், ஒவ்வொரு இடத்திலும் காவலர்கள் அன்போடு பக்தர்களை நடத்தியதும், ரொம்ப முடியாமல் இருந்தவர்களை வீல் சேர் வரிசையில் அனுமதித்ததும் மிகவும் மனமகிழ்ச்சியைத் தந்தது.  

அவசரப்படும் மக்கள், நெருக்கியடிக்க நினைப்பவர்கள் அனைவரையும் அவர்களால் முடிந்த அளவு ஒழுங்குபடுத்தினர்.அத்திவரதர் மண்டபத்தின் முன்பு, புகைப்படம் எடுக்க கண்டிப்பாக மறுத்துவிட்டனர். இதற்குக் காரணம், அந்தக் கூட்டத்தில் புகைப்படம் எடுக்க நினைத்தால் அனைவருக்கும் தொந்தரவு மட்டுமல்ல, அத்திவரதரை தரிசனம் செய்வது மிகவும் சிரமமாகிவிடும்.  காவல்துறையினரின் பணி மிகவும் பாராட்டும்படி இருந்தது.

செருப்புகளை விட்ட இடத்தில் திரும்பவும் செருப்புகளை எடுக்கச் செல்ல, மதிய நேரத்தில் கஷ்டமாக இருந்தது. சுடுகின்ற தார்ச்சாலை, இரு புறங்களிலும் திடீர்க்கடைகள், கடைகளைச் சூழும் மக்கள், 20 அடிச் சாலையில் இருபுறமும் வர நினைக்கும் பேருந்துகள் என்று அந்த இடம் சிரமத்தைக் கொடுத்தது.

அதனால் தரிசிக்க நினைப்பவர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு, முடிந்தவரை அனுப்பி செருப்புகளைக் கொண்டுதரச் சொல்வது, மற்றவர்கள் நிழலில் காத்திருப்பது நல்லது.

மொத்தத்தில் அத்திவரதரை தரிசித்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது. அதனைப் படங்களோடு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

அவன் அருள் இருந்தால், அத்திவரதரின் நின்ற சேவைக்கும் செல்லலாம் என்பது என் எண்ணம்.


என்னெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் – முன்னம்சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்
(பூதத்தாழ்வார் திருப்பாசுரம்)

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

25 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  காஞ்சியில் ஏற்பாடுகள் சிறப்புற செய்யப்பட்டிருக்கின்றன என்று அறிய மகிழ்ச்சி. புகைப்படத்தடை பாராட்டப்பட வேண்டியது. அதிலேயே நேரம் செலவாகும்.

  பதிலளிநீக்கு
 2. செருப்பு வைக்க ஏற்பாடு வேறு எதுவும் செய்ய முடியாதா? உள்ளே நுழையும் இடமும் வெளியே வரும் இடமும் வெவ்வேறா? ஏன் இந்த அலைச்சல்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சமயத்தில் 10,000 பேர்கள் வருகிறார்கள் (நாள் முழுவதும் தோராயமாக 50,000... வார இறுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகம்). இவர்களுக்கு செருப்பு வைக்க, எடுக்க ஏற்பாடுகள் செய்வது, அதுவும் 48 நாட்கள் நிகழ்வுக்காக, மிகவும் கடினம். ஆனால் செருப்பை வரிசை ஆரம்பத்தின் வெளியிலேயே போட்டுவிட்டுச் சென்று பிறகு எடுத்துக்கொள்கிறார்கள்.

   உள்ளே நுழையுமிடமும், வெளியே செல்லுமிடமும் ஒரே கோபுர வாசலாக இருந்தால், சமாளிக்க முடியாது. நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு நடக்கும். இவர்கள் செய்திருந்த ஏற்பாடு சரிதான்.

   ஒன்றே ஒன்று செய்திருக்கலாம். செருப்பை எல்லோரும் விடும் அந்த வீதியில், சிறு கடைகள் இல்லாமல் செய்து, ஒரு ஓரத்தில் சிறிய பந்தலாவது போட்டிருக்கலாம். அது செலவில்லாதது, மிகவும் உபயோகமானது.

   நீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு துரை,
   நீங்கள் வரதனை நினைத்த வேளையில்
   உங்களுக்கு அருள் புரிந்துவிட்டார் அந்தப் பேரருளாளர்.

   அருமையாக முகமன் கூறியிருக்கிறீர்கள்.
   தேடி வந்து அருளும் தெய்வத்தின் மகிமையை என்ன என்று சொல்வது. நன்றியும் வாழ்த்துகளும் மா.

   நீக்கு
  2. வல்லிம்மா...உங்கள் பின்னூட்டம்,

   தேடி வரும் கண்களுக்குள் ஓடிவரும் ஸ்வாமி
   திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் ஸ்வாமி

   என்ற பாடலை நினைவுபடுத்திவிட்டது.

   நீக்கு
 4. தங்களுக்கு இந்த பாக்கியம் கிட்டியதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு முரளிமா. இத்தனை சிரமங்களுக்கு இடையில் அத்திவரதனின்
   அருள் உங்களை ஆட்கொண்டது.
   படங்களில் சிந்தும் அந்தக் கம்பீர அழகை என்ன வென்று சொல்வது.
   ஒரு தடவைக்கு இரு தடவையாக
   உங்களை அழைத்து என்னைக்காண் என்று அழைத்திருக்கிறாரே.

   நின்ற கோலமும் வாய்க்கட்டும். முதல் நாளே போய்விடுங்கள்.
   பிம்மாலை வரிசையில் நின்று விடலாம்.
   அந்தக் கண்ணழகைக் காலம் முழுவதும் பருகலாம்.
   வரதனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். சொல்லி அழைத்துச் சென்ற உங்களுக்கு என் மனப் பூர்வமான ஆசிகள்.

   நீக்கு
  2. நன்றி கில்லர்ஜி.. வரலாற்றின் சாட்சியான அத்திவரதர் தரிசனம் எல்லோருக்கும் வாய்க்கவேண்டும்.

   நான் இருந்த வரிசையில் (மதியம்..ரொம்ப கூட்டம்), என்னருகில் ஒரு வைணவர் அவரது குடும்பத்தோடு நின்றுகொண்டிருந்தார். இன்னொருவர், ஏன் இப்படி கஷ்டப்படறீங்க என்று கேட்டதற்கு அவர், 'நான் காஞ்சீபுரம்தான். நிறையபேரைத் தெரியும். அதை வைத்து ஸ்பெஷல் வரிசையில் நிற்க மனம் இல்லை. அதனால் குடும்பத்தோடு இந்த வரிசையில் நிற்கிறேன்' என்றார். அது என் மனம் கவர்ந்தது.

   நம்மால் மிகவும் முடியாத நிலையைத் தவிர, மற்ற ஆன்மாக்களைவிட நான் பெரியவன், எனக்கு முன்னுரிமை வேண்டும் என்று கேட்பதே, இறை தரிசனத்தில் சரியான செயல் இல்லை அல்லவா?

   நீக்கு
  3. வல்லிம்மா. உங்கள் பின்னூட்டம், ஆசிகள் என்னை நெகிழ வைத்துவிட்டது.

   எனக்கும் ஆசைதான்..நின்ற கோலம் சேவிக்க... அவன் அருள் வேண்டுமே.

   இதற்கிடையில் என் மகள் (பரீட்சைக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறாள்), அதிகாலை அழைத்துப்போக முடியுமா என்று கேட்டாள். அதனைச் செயல்படுத்திவிட்டுத்தான் பெங்களூர் செல்லவேணும்.

   நீக்கு
 5. துரை செல்வராஜு சார்... அறிமுக உரை மிக அருமை. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்ததற்கும் கருத்தெழுதிதற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   நீக்கு
 7. அத்தி வரதன் வழி நடத்துகிறார் !
  அருமை அறிமுக உரை.

  தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு நாடி வந்து வரம் கொடுக்கும் வரதராஜன்
  வந்தார் வந்தார் வந்தாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   அத்திவரதன் நம்மை வழிநடத்தட்டும்.

   நீக்கு
 8. அருமையான பயணம் அனுபவம்.
  இரண்டு தடவை வரதனை தரிசனம் செய்து விட்டது மகிழ்ச்சி.

  புன்னகை தவழும் முகத்தில் நிலைத்த கண்கள் பாத தரிசனம் செய்யும் முன்பாக நகர சொல்லி விட்டார்களோ என்று நினைத்தேன்.

  பாதாதி கேசம் முதல் சொல்வது போல் முதலில் திருவடி தரிசனம், அதன் பின் முக தரிசனம் அருமை. பாத தரிசனம் பாபவிமோசனம். நிறைய கோவில்களில் இப்போது பெருமாளின் (நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளின் ) பாத தரிசனத்தை மனகண்ணில் தான் காண வேண்டும்.
  முன்னால் உற்சவரை வைத்து விடுகிறார்கள். பாதம் தெரிய மாட்டேன் என்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் முதலில் பாத தரிசனம்தான் செய்வேன். பிறகு முக தரிசனம்.

   திருவடி தரிசனம், நாம் அவனுக்கு அடிமை என்பதைக் காட்டும். அதுவே அவனுக்கு நம்மேல் கருணை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.

   நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். பல கோவில்களில் பாதத்தை மறைத்துவிடுகிறார்கள். திருப்பதியிலும் வாரம் ஒரு நாள், சில மணி நேரங்கள்தான் 'நிஜ பாத தரிசனம்'. சில கோவில்களில் அவர்களே, பாத தரிசனம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள்.

   நீக்கு
 9. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் போதாது. அவன் அருளும் வேண்டும். அதனால் தான் உங்களுக்கு இரு முறை அத்திவரதர் தரிசனம் கொடுத்திருக்கார். பொதுவாகக் குறைகளே இம்மாதிரி நிகழ்வுகளில் தெரியவரும். ஆனால் நீங்கள் சின்னஞ்சிறு குறைகளைத் தவிரப் பெரும்பாலும் நல்ல முறையிலேயே அனைவரும் தரிசனம் செய்ய உதவினார்கள் எனச் சொல்லி இருப்பது மன நிறைவைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி கீசா மேடம்...

   குறைகள் என்று சொல்ல ஆரம்பித்தால் அதற்கு எங்கும் எதிலும் முடிவே இருக்காது. நிறைய கோவில்களிலும் (அலர்மேல் மங்கைத் தாயார் கோவிலிலும்) கிடைக்கும் சில நொடிகளில் இறை உருவுக்குக் குறுக்கே பட்டாச்சார்யார் போவது, மறைத்துக்கொண்டு நிற்பது என்றெல்லாம் நடக்கும். மனதுக்கு எரிச்சலா இருக்கும், ஆனால் இன்று நமக்கு வாய்த்தது அப்படித்தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

   ஆனாலும் எனக்கு பெரிய குறைகள் தென்படவில்லை. மற்றவர்கள் குறையாகச் சொல்வதிலும் உடன்பாடில்லை. திருப்பதியில் அது ஒவ்வொரு நாள் நிகழ்வு, நிலையானது. ஆனால் இங்கு 48 நாட்கள்தான், அதிலும் 10 நாட்கள் வி.ஐ.பி தரிசனம் என்று கெடுபிடியாகிவிடும். முடிந்த அளவு நன்றாகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

   நான் அங்கே அமைத்திருந்த மருத்துவ முகாமில், ஷுகர் செக் செய்யும் வசதி உண்டா என்று கேட்டேன். அவர்கள் அவசியத் தேவைக்கான மருந்துகள் மட்டுமே வைத்திருக்கிறோம் என்றார்கள்.

   நிச்சயமாக காவலர்கள் (சம அளவில் பெண்களும், ஆண்களும், அனைவரும் ஓரளவு இளைய வயது) நன்றாக பக்தர்களிடம் இன்முகத்தோடு நடந்துகொண்டார்கள்.

   நீக்கு
  2. உண்மையே. முரளி மா. அந்த நொடிகளில் சினத்தில் நேரம் போகக்கூடாது.
   என்னைக் கேட்டால் அர்ச்சகருக்கு ஒரு கட்டம் கட்டி அதிலிருந்து பூஜை செய்தால் போதும் என்று சொல்ல வேண்டும்.
   நிறைகளே நிறையட்டும்.அத்திவரதன் மழை கொண்டு வருவாராம்.
   மழை வந்து நெஞ்சமும் நிலமும் குளிரட்டும்.
   தங்கள் மகள் நல்ல படி பரிட்சை எழுதட்டும்.
   அலைச்சல் தான் சென்னைக்கும் பங்களூருக்கும்.

   நீக்கு
  3. வல்லிம்மா... நேற்றைக்கு ஒரு காணொளி (அத்திவரதர் சன்னிதியில்) வந்தது. அதில் பட்டாச்சார்யார் முழுவதும் மறைத்திருக்கிறார், இன்னொரு பட்டர் பெருமாளுக்கு ஹாரத்தி காண்பிக்கும்போது. அப்போ வெளியிலேர்ந்து ஒரு குரல் கேட்கிறது "மறைக்காதடா..தள்ளிப்போ" என்று.

   நீக்கு
 10. துரையின் அருமையான முன்னுரையுடன் கூடிய பதிவு அருமை! நெல்லை அழகாய்ப் பகிர்ந்திருக்கிறார் அதை மிக அழகாய் முன் மொழிந்திருக்கிறார் துரை! அத்தி வரதர் குறித்த அவர் கருத்துக்களும் அருமையானவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜு சார் நல்ல முன்னுரையை இரண்டாம் பகுதிக்கு வழங்கியிருக்கிறார்.

   எனக்கு உடனே பகிரிந்துகொள்ளணும் என்று தோன்றியதால் அவருக்கு அனுப்பினேன். அவரும் இயைந்து வெளியிட்டார்.

   நன்றி.

   நீக்கு
 11. மிக மகிழ்ச்சி ....

  முக நூலில் ஒரு பதிவில் ஒரு வயதான பாட்டி முதியோர் வரிசையில் செல்லாமல் பொது சேவையில் வந்தார்களாம்...

  ஏன் பாட்டி அதில் போலாமே ன்னு ஒருவர் கேட்டதற்கு 40 வருடம் கழித்து வரும் வரதரை 4 மணி நேரம் நின்று பார்க்க கூடாதா...பரவாயில்லை நான் இதிலியே நிற்கிறேன் என்றாகளாம்...

  இவர்களை போன்ற பக்தர்களை காண வரதரும் காத்திருப்பார் என
  வாசிக்கவும் தான் எத்தனை கூட்டம் இருந்தாலும் நின்று அவனை சேவிக்க வேண்டும் என்னும் ஆவல் வந்தது ...

  இது போல உங்கள் பதிவும் பெருமாளை காணும் எண்ணத்தை அதிக படுத்துகிறது ...

  ஸ்ரீமன் நாராயணா

  பதிலளிநீக்கு