நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 30, 2014

நிலவு வந்த நேரம்

இன்று தை அமாவாசை.

கிட்டத்தட்ட  210 ஆண்டுகளுக்கு முன், இதே  - தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

 அதே சமயம் அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


''..என்னவாம்!?..''

''.. நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..''

''..யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..''

''..அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..''

''..யார் கிட்டே!..''

''..மகராஜாவிடம்!..''

''..என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..''

''..தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்..''

''.. ம்!..''

''..கோயிலுக்கு வந்தவர் .. கோயில்ல நம்ம சுப்ரமணியம் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..''

''..அடடே!!..''


''..நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. ராஜாவே அவரைப் பார்த்து, குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி பௌர்ணமின்னு உளறிட்டார்!..''

''..அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. ''

''..அப்பறம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

இவரும்.. வரும் போய்யா.. சர்தான்.. அப்படின்னுட்டார்...''

''..ராஜா கடுப்பாயிட்டார். இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லேன்னா.. உன்னைய அடுப்புல போட்டு வறுத்துடுவேன்னுட்டார்.. ''

''..ஐயையோ!..''

''.. அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. ''


''..அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..''

''..யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீயே சொல்லு!..''

''..அதுவும் சரிதான்!...''

''..அதுவும் இல்லாம.. கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து நீ அம்பாள் மாதிரி இருக்கேன்னு சொன்னாக் கூட பரவாயில்லே!..  நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..''

''..வரும் தான்.. ஆனாலும் பாவங்க.. நம்ம குருக்கள்!.. ''

''..நீங்க வேறே...  ராஜாக்கிட்டேயே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லையே!.. ''

''..அப்படியா!..''


''..என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அதனால தான் இப்ப சிக்கல்ல சிக்கி ஊஞ்சல்ல ஆடப்போறார்..''

''..சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..''

''..முடிவா.. அதை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு சொல்லிட்டு இருக்கார். கீழே நெருப்பை உண்டாக்கி மேலே ஊஞ்சல் தொங்க விட்டிருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. ''

''..நெருப்பு மேலே பாட்டா!?.. ''

''..ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்,  ....''

''..இதெல்லாம் நமக்குப் புரியாதுங்க.. தெளிவா சொல்லுங்க..''

''..ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. ''

''..புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..''


''..யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..''

''..அப்போ.. சாமி கும்பிட இல்லையா?.. ''

''..அதுக்கெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..''

''..அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..''

''..ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...''

''..ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... அப்ப முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..'' 

''..இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி.. ''

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

''..கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள ... அட ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலவு இருக்குறப்ப!...''

''..நிலவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..''

''..என்ன உளர்றே!.. இவ்வளவு வெளிச்சம் நிலவு இல்லேன்னா எப்படி வரும்!?.. ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. அது .. வானத்து.. மேலே!..''

''..என்னா அதிசயமா இருக்கு!.. நம்பவே முடியலயே!.. இப்படியும் நடக்குமா!.. ''

''..நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..''

''..  இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியலயே...''


''..கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..''

''..அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..''

''..நாம தான் தப்பு கணக்கு போட்டுவிட்டோம்.. அங்கே பார்.. ராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..''

''..இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே... ''

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

''..பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..''

''..என்னய்யா.. கண்ணுல ... ''

''..ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. உங்க கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. ''

''..நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்..''

''..உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'' 

''..நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..''


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

''..கேட்டீங்களா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. ''

''..வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..''

''..எனக்குந்தான்!..''

அபிராம பட்டர் வாழ்க!.. வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!.. வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!.. வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-

சேர்மன் ஸ்வாமிகள்

 தை அமாவாசை

சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. 

இதனால் - தை மாதத்தின்  அமாவாசை மிகவும் விசேஷமானது.


இறந்த பின்னும் - வாழ்வு தொடர்கிறது என்பது நமது சமய நம்பிக்கை. 

எனவே - முன்னோர்கள் நற்கதி அடையவும், அவர்களின் நல்லாசி வேண்டியும் சந்ததியினர் தர்ப்பணம் செய்கின்றனர்.

திதி நாட்களில்  செய்யும் வழிபாட்டை - அவர்கள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

அமாவாசையில்  - கடற்கரை, ஆறு, திருக்குளங்கள்  இவற்றால் புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.


இறப்புக்கு பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் - பிதுர் கடனை முறையாக சிரத்தையுடன் - அக்கறையுடன் செய்ய வேண்டும் என்பர். 

இதனை வைதீக முறைப்படி என்றில்லாமல் அவரவர் குல வழக்கப்படி  செய்யலாம்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாட்டினை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்களிடம்  வழங்குபவன் சூரியன். அதனால் தான் சூரியனுக்கு பிதுர்காரகன் என்று பெயர்.

பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த குணமுடைய காகத்திற்கு ஒருபிடி உணவிடுவதன் மூலம் தேவதைகளின் நல்லாசியைப் பெற முடியும். 

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீரை அள்ளி விடுவது) மிகுந்த நன்மை தரும்.


புண்ணிய தீர்த்தங்களில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பரிபூரணமாக பெறமுடியும்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது.

மணிகர்ணிகை தீர்த்தம்
இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் - கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி - புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். 

இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர். 

தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். 

வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரையும் சிறப்புடையது.

கன்னியாகுமரி, உவரி, ராமேஸ்வரம், தாமிரபரணிக் கரையில் பாபநாசம் மற்றும் காவிரியின் கரையில் - பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம், திருவையாறு  - இத்தலங்களில் எல்லாம் பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும்.


தை அமாவாசை தினத்தன்று - ராமேஸ்வரத்தில்  ஸ்ரீதர்மசம்வர்த்தனி அம்பாள் சமேதரராக  ஸ்ரீ ராமநாத ஸ்வாமி,  அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரைக்கு எழுந்தருளி  புனித நீராடல் நடைபெறும். 

திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அன்னை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் திருக்கோயில்  ஜோதி மயமாக விளங்கும்.

ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள்

திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் ராமசாமி நாடார் அவர்களுக்கும் சிவனணைந்தாள் அம்மாளுக்கும் இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம். 

வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம்  - இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.

அது முதற்கொண்டு ஏழை எளியோர் தம் துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின்  நாட்டம் சென்றது.

அவரால் நலம் பெற்றவர்கள் அவரை அன்புடன் அருணாசலம் ஸ்வாமிகள் என்றழைத்தனர்.


அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி - அன்றைய ஆங்கிலேய அரசு,

1906  செப்டம்பர் ஐந்தாம் நாள் - ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமகவே முன் வந்து வழங்கியது. 

அது முதற்கொண்டு -  ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார். 

மக்கள் பணியினை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள். தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார். 

தனது வாழ்வு பூரணமாகும் நாளையும் அதன்பிறகு செய்ய வேண்டியதையும் தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார். 

சேர்மன் பதவியினை   1908  ஜூலை  27 அன்று திரும்ப ஒப்படைத்தார். தான் முன்பே கூறியிருந்தபடி -  ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு பூரணம் எய்தினார்.


ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின்  தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது.

ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை - நம்பிவரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார். 

ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. 

எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு தை அமாவாசை தினத்தை ஒட்டி - ஜனவரி 21 அன்று திருக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பத்தாம் நாளாகிய இன்று - மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் மாலை விலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலமும் இரவு சிவப்பு சாத்தி - கற்பகப் பொன் சப்பரத்தில் தரிசனம்.

பதினோராம் திருவிழா நாளை - வெள்ளிக்கிழமை (ஜன. 31)

அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம். காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் பிற்பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம்.

மாலையில் ஏரல் முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி. இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேர்தல்.


பன்னிரண்டாம் நாள் திருவிழாவாக  சனிக்கிழமை (பிப்.1) காலையில் தாமிர வருணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறை நீராடலும்,

பிற்பகல் 12.30 மணிக்கு மகாஅன்னதானமும் நிகழும்.

இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.

திருவிழாவினை முன்னிட்டு தென் மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. 

திருவிழா ஏற்பாடுகளை  பரம்பரை அறங்காவலர் அ.ரா.க.கருத்தப்பாண்டியன் நாடார் அவர்கள் செய்து வருகின்றார்.

குருவே சரணம்.
சிவாய திருச்சிற்றம்பலம்

செவ்வாய், ஜனவரி 28, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 13

கானகத்தில் காரணன்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

ஞாயிறு, ஜனவரி 26, 2014

வாழ்க பாரதம்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!.. 
 

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!.. 

 
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந் நாடே  - அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந் நாடே  - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந் நாடே  -இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை 
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று வணங்கேனோ!..  
  

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!..

 

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா!.. 

 
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா!..


களையிழந்த நாட்டிலே முன்போலே
களி சிறக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போலே
விழியினால் விளக்குவாய் வா வா வா!.. 


வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்முகத்தினாய் வா வா வா!..
 

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 
ஒருபெ ருஞ்செயல் செய்குவாய் வா வா வா!..
- மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்.


வந்தேமாதரம்!.. வந்தேமாதரம்!..
வந்தேமாதரம்!..

வியாழன், ஜனவரி 23, 2014

உவரியில் தேரோட்டம்

புகழ் பெற்ற ஸ்ரீஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்  தேரோட்டம் ஜனவரி பதினேழாம் தேதி கோலாகலமாக நடந்தது. 

கடற்கரையில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சிவ தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள  கிராமம் உவரி.

இங்குதான் புகழ் பெற்ற சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.


சிவபெருமான் சுயம்புலிங்கமாகத் தோன்றியருளிய திருத்தலம் - உவரி. 

தென் தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இத்திருக் கோயில் விளங்கி வருகின்றது.


மேலும் - மார்கழி மாதத்தின் எல்லா நாட்களிலும் காலையில் சூரியனின் இளங்கதிர்கள்  கருவறையில் படரும் பெருஞ்சிறப்பினை உடையது  - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் - ஆண்டுதோறும் சிறப்புடன் நிகழும் தைத்திருவிழா கடந்த - ஜனவரி ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அன்று காலை ஆறு மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க துவஜாரோகணம் நிகழ்ந்தது.


முன்னதாக அதிகாலை மூன்று மணியளவில் திருநடை திறக்கப்பட்டது. நித்ய வழிபாடுகளுக்குப் பின் மங்கல வாத்யங்களுடன் - யானை மீது  கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது.

யதாஸ்தானத்திலிருந்து ஸ்வாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகையுடன் அலங்கார மண்டபம் எழுந்தருளினார். பதினோரு வகையான அபிஷேக ஆராதனைகளுடன் உதய மார்த்தாண்ட பூஜை செய்விக்கப்பட்டது.


தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா, உச்சி காலபூஜை, சிறப்பு அபிஷேகம்.  மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் சுவாமி இந்திர விமானத்தில் ரதவீதிகளில் எழுந்தருளினார்.

தைத்திருவிழா ஜனவரி ஒன்பது முதல் ஜனவரி பதினெட்டாம் தேதி வரை வெகு சிறப்பாக நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 8.30 மணிக்கு விநாயகர் வீதி உலா.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி சந்திரசேகரர்  மனோன்மணி அம்பிகை சமேதராக -

வெட்டி வேர் சப்பரம் மற்றும் கஜ வாகனம், அன்ன வாகனம், இந்திர விமானம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், கைலாய பர்வதம் - என, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருளினர்.

ஒன்பதாம் திருநாள் - பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமை காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை. உதய மார்த்தாண்ட பூஜை.

திருக்கோயிலில் இருந்து சுவாமி - அம்பிகையுடன் மேளதாளம் முழங்க  தேருக்கு புறப்பாடு செய்தனர்.

திருத்தேரில் ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

காலை 7.50 மணியளவில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டவுடன் - 7.55 மணி அளவில் பக்த கோஷங்கள் முழங்க பெரிய திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

அப்போது வானில் கருடன்கள் வட்டமிட்டதைக் கண்டு பக்கர்கள் ஆனந்த முழக்கமிட்டனர்.

ஹரஹர கோஷங்களுடன்  திருத்தேர் இழுக்கப்பட்டது.

ரத வீதிகளில் வலம் வந்த தேரை பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி  திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது.

வங்கக்கடல் ஒரு புறமும்  பக்தர்கள் வெள்ளம் ஒருபுறமுமாக திருத்தேர் அசைந்து வந்த காட்சி, கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. 

நன்றி - தினத்தந்தி
கடற்கரையில் தேரோடும் அழகை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து குவிந்தனர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

வழக்கம் போல தைப்பூச விழாவையொட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், பெட்டியில் கடலில் இருந்து மண் எடுத்து சுமந்து வந்து கரையில் கொட்டி, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினார்கள்.

குலதெய்வமாக வழிபடும் அன்பர்களுடன் - நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரளான பக்தர்களும்   கலந்து கொண்டனர்.
 
திருத்தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்த வாரி. உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை, ராக்கால பூஜை, இரவு ஒரு மணிக்கு ஸ்வாமி – அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினர். 

ஸ்ரீ விநாயகர் திருக்கோயில்
பத்தாம் திருநாள்  - ஜனவரி 18  - காலை விநாயகர் வீதி உலாவும் ,  திருவிளக்கு பூஜையும் - தெப்ப உற்சவமும்.

சுவாமி, அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தது. 

பதினோராம் திருநாள்  பஞ்சமூர்த்திகள் வீதி உலா. உற்சவ சாந்தி, சுவாமி அம்பிகை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா இனிதே நிறைவேறியது.

விழா நாட்களில் - தேவார திருவாசக பாராயணங்களும், அன்னதானமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சமய சொற்பொழிவுகளும்  நிகழ்ந்தன.

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்
பக்தர்களின் வசதிக்காக - நெல்லை, திருச்செந்தூர்,  நாகர்கோவில், திசையன் விளை - நகர்களிலிருந்து உவரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

திருவிழாவின் ஏற்பாடுகளை - திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் திரு. ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன், செயலாளர் திரு.தர்மலிங்க உடையார், ராஜகோபுர திருப்பணி குழுவின் தலைவர் திரு.முருகேசன், செயலாளர் திரு.வெள்ளையா நாடார், திரு.பொருளாளர் செண்பகவேல் நாடார் மற்றும் முக்கியஸ்தர்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.  

என் அன்பு மகளின் திருமணத்திற்கான முதல் அழைப்பாக - குலதெய்வத்தின் திருக்கோயிலில் முறைப்படி அழைப்பிதழ் வைத்திருக்கின்றனர். அத்துடன்,

திருவிழா நிகழ்வுகளும் ஆனந்த தரிசனம்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

சனி, ஜனவரி 18, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 12
கானகம் ஏகினான்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

வெள்ளி, ஜனவரி 17, 2014

அருட் பெருஞ்ஜோதி

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.  

ஆறுபடை வீடுகள் அன்றி மற்றுமுள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள பக்தர் அநேகர். 


ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் ஏற்று - பழனிக்கு பாதயாத்திரை சென்று   தைப்பூச நாளில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

தைப்பூசத்தன்று  -  காவடியுடன்  முருகனைத் தரிசிப்பதே பிறவிப் பயன் எனக் கருதும்  பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் - உலகம் முழுதும்!..

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலிலும் மலேஷியாவில்  - தண்ணீர்மலை, பத்துமலை எனும் திருத்தலங்களில் உள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக நிகழும். சீனர்கள் கூட முருகனை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம். 


பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வந்து முருகப் பெருமானை  தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பத்து  நாட்கள் நடைபெறும் தைப்பூச  விழாவில் - கடந்த நாட்களில் ஸ்ரீமுத்துக்குமாரசாமி காலையிலும் மாலையிலும் தந்த பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை - என பல்வேறு  வாகனங்களில்  திருவீதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வியாழன்று முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜனவரி17) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெறுகிறது. 

இதில்  கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் பழனியம்பதியில் குழுமியுள்ளனர். 


திருத்தேரில் பவனி வருகின்றான் திருமுருகன். - வடிவேல் முருகன்!.. 

கந்தனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் - 

அவனிடம் ஏதாவது கேட்கலாம்!.. 
அவன் கொடுப்பான்!.. 
அவனிடம் கேட்டுப் பெறலாம்!.. 

வாட்டம் தீர்க என்று  - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
வள்ளி தேவயானையுடன் வருகின்றான்  - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..

ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!.. 

எனில் - என்ன கேட்பது!.. 

இதோ ஒரு ஞான விண்ணப்பம்!..

1823 அக்டோபர் ஐந்தாம் நாள்  - சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் - ராமையா சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவரும் ,

வளரும் பருவத்திலேயே - இறை நாட்டம் விளைந்து, தொடர்ந்த பக்தியினால் வடிவேலவனை - நிலைக் கண்ணாடியில் தரிசனம் கண்டவரும்,


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  - என்று ஞானப்பயிர் வளர்த்தவரும்,

''..பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி, அவற்றின் பசி தீர்ப்பதே - புண்ணியம். பசிப்பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு  ஈடானது என்று எந்தப் புண்ணியத்தைச் சொல்லமுடியும்?..  ஜீவ காருண்யமே - மோட்சத்தினை அளிக்க வல்லது!..''  - என்று உபதேசித்தவரும் - ஆன,

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் - நம் பொருட்டு அருளிய திருப்பாடல்!..

முருகப் பெருமானிடம் கேட்டுப் பெறுவதற்கு - 
இவைகளை விடவும்  வேறு உளவோ!..

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவ மணி 
சண்முகத் தெய்வமணியே!..

வள்ளலார் சுவாமிகள் - தாம் எழுப்பிய - மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், 1874ல்  ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு  சித்தியடைந்து ஒளி வடிவாகினார்.


வள்ளலார் சித்தியடைந்த நாள் - 
புனர்பூசமும் பூசமும் கூடிய - தைப்பூசம்.

அருட்பெரும் ஜோதி!.. அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!.. 

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 11
சதி வலை..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

வியாழன், ஜனவரி 16, 2014

ஐயப்ப தரிசனம்

ஸ்ரீசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளைப் பற்றி அறியாதார் யார்!..

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக ஸ்ரீசபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 2013 நவம்பர்  15 அன்று திருநடை திறக்கப்பட்டது.


அந்த அளவில் - துளசி மாலை அணிந்து நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி தாங்கி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து மகிழ்ந்தனர்.

தங்க அங்கியும் - மண்டல பூஜையும்.

ஐயப்பனின் திருமேனியில் அணிவிப்பதற்காக  426 பவுன் எடை கொண்ட தங்க அங்கியினை - திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973 ஆம் ஆண்டு காணிக்கையாக வழங்கினார்.

இந்த அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாளிலும் மண்டல பூஜை நாளிலும் ஸ்வாமியின் திருமேனியை அலங்கரித்திருக்கும் . இதன்படி -

ஆரண்முளா ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயிலிலிருந்து டிசம்பர் - 22 அன்று பக்தர்களின் தரிசனத்திற்குப்பின் காலை 7 மணியளவில் புறப்பட்ட தங்க அங்கி - டிசம்பர் 25 - பகல் 2 மணி அளவில் பம்பை வந்தடைந்தது.

தங்க அங்கியை வரவேற்று மரியாதை அளித்த பின்னர், பம்பை கணபதி கோயிலின் முன், பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்பட்டது. 

மாலை 3.30 மணி அளவில்  தங்க அங்கி மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டு சபரிமலையை நோக்கிப் புறப்பட்டது. ஐயப்பா சேவா சங்கத்தினர்  தங்க அங்கியை தலைச் சுமையாக தூக்கி வந்தனர்.


மாலை 5.40 மணியளவில் சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 6.15 மணிக்கு, கோயிலின் பதினெட்டாம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பெற்று -  திரு நடை அடைத்தனர்.  

பின்னர், திருநடை திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தபோது  தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.  

டிசம்பர் 26 அன்று மண்டல பூஜை நடைபெற்றது.

விபூதி தரித்து ருத்ராட்ச மாலைகளுடன் கூடிய திருக்கோலங்கொண்டு  யோக நிஷ்டையில் ஸ்ரீ ஸ்வாமி வீற்றிருக்க - இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

திரு ஆபரணமும் மகர ஜோதியும்

மகர விளக்கு பூஜைக்காக - 2013 டிசம்பர் 30 அன்று  திருநடை திறக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இருமுடி சுமந்து வந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்வெய்தினர்.


பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய் காட்சி தரும் ஐயப்பனைக் காண வேண்டி  பெரிய பாதை வழியாகவும் பாரம்பரிய நடைபாதை வழியாகவும், புல்மேடு வழியாகவும்  - பக்தர்கள் திரண்டனர்.


மகர ஜோதி தரிசன நாளான மகர சங்கராந்தி தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே - தை முதல் நாள் நெருங்கிய வேளையில் - 

அபிஷேகம் செய்தபின்  - சபரிமலையில் இருந்து ஜோதி தரிசனம் காண வேண்டி ஆயிரக் கணக்கான பக்தர்கள் - ஆங்காங்கே இடம் பிடித்து விரி அமைத்து முகாமிட்டு பஜனைப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தவாறு இருந்தனர்.

திருஆபரண பெட்டி ஊர்வலம்.

முன்னதாக - ஜனவரி 11 அன்று அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்த சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது. 

இதனைத் தொடர்ந்து - பந்தளத்தில் இருந்து திரு ஆபரணப்பெட்டி புறப்பட்டது.

மகர விளக்கு பூஜையின்போது ஸ்வாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க  ஆபரணங்கள், ஜனவரி 12 - ஞாயிறன்று காலை 8 மணி அளவில் பந்தளம் அரண்மனையிலிருந்து -  பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயில் மேல்சாந்தி தலைமையில், ஸ்ரீசாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு,

திருக்கோயிலுக்கு  பல்லக்கில் அழைத்து வரப்பட்ட பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா  அவர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பூஜைகளில் - துறை தொடர்பான கேரள அரசு அதிகாரிகளும் திரளான ஐயப்ப பக்தர்களும்  கலந்து கொண்டனர்.


மதியம் ஒரு மணிக்கு பூஜைகள் நிறைவுற்றதும் - திருவாபரண பெட்டிகள் ஸ்ரீசாஸ்தா கோவிலில் இருந்து  சபரிமலையை நோக்கி சரண கோஷம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டன.இந்த ஊர்வலம் - எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக 14 - ஆம் தேதி செவ்வாய் பிற்பகல் பம்பையை வந்தடைந்தது. 

பம்பை விருந்து - பம்பை விளக்கு.

ஸ்வாமி ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் முக்கியமானவை - பம்பை விளக்கும் பாரம்பரிய அன்ன தானமும். 

திங்கட்கிழமை  மாலை பக்தர்கள் தங்கள் கொண்டு வந்துள்ள அரிசி மற்றும் சமையல் பொருட்களைக் கொண்டு பம்பை நதிக்கரையில் சமையல் செய்து, ஐயனுக்கு படைத்து பஜனைப் பாடல்கள் பாடி வழிபட்டு ஏனைய பக்தர்களுக்கு வழங்கி தாங்களும் உண்டு மகிழ்வது - பம்பை விருந்து.

மாலை நேரத்தில் -   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  மூங்கிலால் ஆன சிறு தேரில் விளக்குகள் ஏற்றி - அதை,

பம்பையில் மிதக்க விட்டு மகிழ்வார்கள். இதுவே பம்பை விளக்கு வழிபாடு.

மகர சங்ரம பூஜை

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 12 ஞாயிறு அன்று சுத்திகிரியை பூஜையும்,   திங்கள் அன்று உச்ச பூஜைக்கு பின்னர் ஐயப்பன் கோவிலில் பிம்ப சுத்தி பூஜையும் நடத்தப்பட்டது.

இதன்படி - உச்ச பூஜை பகல் 11.45 முதல்  12.45 வரை  நடைபெற்றது. 

மகர விளக்கின் முன்னோடியாக நடைபெறும் மகர சங்ரம பூஜை - செவ்வாய் பகல் 1.14 மணிக்கு நடத்தப்பட்டது. 


சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் முகூர்த்த வேளையில் ஸ்ரீஐயப்பனுக்கு  நடத்தப்படும் பூஜையே - மகர சங்ரம பூஜை.

இந்த பூஜையில் - சிறப்பு அபிஷேகமாக,

திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து - கவடியார் கொட்டாரம் கன்னி ஐயப்ப பக்தர்களால் கொண்டு வரப்பட்ட நெய் மட்டுமே - ஐயப்பனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு சரங்குத்திக்கு வந்து சேர்ந்த திருவாபரணங்கள் முறைப்படி வரவேற்கப்பட்டன. 

தொடர்ந்து - மாலை 6.30 மணியளவில்  சந்நிதானம் வந்தடைந்த  பெட்டிகளில்  இரண்டு பெட்டிகள் ஸ்ரீ மாளிகைப்புரத்திற்குச் சென்றன. பதினெட்டாம் படி கடந்து மேலே வந்த திருஆபரணப் பெட்டியை தந்திரியும் மேல்சாந்தியும் பெற்றுக் கொண்டு நடை அடைத்தனர்.


தொடர்ந்து திருவாபரணங்கள் ஸ்வாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு திருநடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. 

தீபாராதனை  முடிந்த, சிறு பொழுதில், பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் பிரகாசித்தது.

தொடர்ந்து, மகரஜோதி மூன்று முறை காட்சியளித்தது.


மகரஜோதியை - லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்,
சாமியே சரணம் ஐயப்பா!.. என்ற ஆரவார கோஷத்துடன் -  தரிசித்தனர்.

சந்நிதானம் மட்டுமின்றி பாண்டித்தாவளம், நீலிமலை உச்சி, மரக்கூட்டம், சபரி பீடம், அப்பாச்சி மேடு ஆகிய இடங்களில் இருந்தும் மகர ஜோதியைக் கண்டு மகிழ்ந்தனர்.

அன்று இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

படி பூஜை

இன்று முதல் மூன்று நாட்கள் (ஜனவரி 16 -18 வரை)  -  படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள்  நடைபெறுகின்றன. 

மாலை வேளையில் சந்நிதானத்தில் தீபாராதனைக்கு பின்னர் - சிறப்பு வாய்ந்த படிபூஜை .  பதினெட்டு படிகளிலும் பட்டு வஸ்திரம் விரிக்கப்பட்டு பூக்களாலும் மாலைகளாலும்  அலங்கரிக்கப்படும்.


திருப்படிகளின் இருபுறமும் ஒளிரும் திருவிளக்குகள் திகழ, படிபூஜை நிகழும்.

இதைத் தரிசிக்க வேண்டி சபரிமலையில் -  பதினெட்டாம் திருப்படிகளின் முன் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள்.
 
மேலும், ஜனவரி 18 அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகமும், 19 அன்று மாளிகைப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜையும் நடைபெற இருக்கிறது. 

அன்றைய தினம் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஜனவரி 20 - காலையில் பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா  அவர்கள் - ஸ்ரீஐயப்பன் சந்நிதியில் ஏகாந்த தரிசனம் செய்வார். 

அதன் பின்னர் ஐயப்பன் திருக்கோயிலின் நடை அடைக்கப்படும்

மீண்டும்  மாசி மாத பூஜைக்காக  பிப்ரவரி 12 அன்று மாலை 5.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு,   ஐந்து  நாட்கள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

இந்த வருடம் - பாரம்பரிய நடைபாதை வழியினில் ஆங்காங்கே  வனவிலங்குகள் தென்பட்டதால் - இரவு நேரத்தில் மலையேறுவதைத் தவிர்க்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


எல்லாவற்றையும் கடந்து ஐயனே சரணம் என்று வந்த பக்தி வெள்ளத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை நிறையவே திணறியிருக்கின்றது. 

சரங்குத்தியிலிருந்து பம்பை வரை  - எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மலைச் சரிவில் பக்தர்கள் - பரிதவிப்புடன் காத்திருக்கும்படி ஆனது.


கொடிய காட்டு மிருகங்கள் நிறைந்த வனத்தின் வழியே இன்னல்களையும் இடையூறுகளையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் - கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை  என்ற முழக்கத்துடன் நடந்து - 

சபரி பீடத்தினைக் கடந்து பதினெட்டாம் படிகளைக் கண்ட மாத்திரத்தில் -  நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து எழுமே - ஒரு விம்மல்!..

அத்தோடு  - துன்பங்களும் தொல்லைகளும் தொலைந்து போயிருக்கும்.

பதினெட்டுப் படிகளையும் கடந்து  - ஐயனின் சந்நிதி!.. 
ஸ்ரீ ஹரிஹர சுதனின் திவ்ய தரிசனம்!..

அதுவரையிலும் - 
ஐயனிடம் அதைக் கேட்க வேண்டும்  
இதைக் கேட்க வேண்டும் 
என்று ஆவலுற்றுத் திரிந்த மனம் 
அமைதியில் ஆழ்ந்து கிடக்கும்!.. 

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் 
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல!..

ஐயன் அருள் உண்டு என்றும் பயமில்லை!.. 
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..