நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 05, 2014

மார்கழிப் பனியில் - 21

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 21. 


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் 
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் வலி தொலைந்து உன் வாசற்கண் 
ஆற்றாது வந்துன் அடி பணியுமா போலே 
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப்பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 9 - 10

ஸ்ரீ பர்வத வர்த்தனி - ஸ்ரீ ராமநாத ஸ்வாமி
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். - 9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். - 10

திருச்சிற்றம்பலம்

ஆலய தரிசனம்

திரு புள்ளபூதங்குடி


மூலவர் - ஸ்ரீவல்வில் ராமன், 
தாயார் - பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) . 
புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தலவிருட்சம் - புன்னை.
தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம் க்ருத்ர புஷ்கரணி
விமானம் - சோபன விமானம். 
ப்ரத்யக்ஷம் -  க்ருத்ரராஜன், திருமங்கை ஆழ்வார்.
மங்களாசாஸனம் - திருமங்கை ஆழ்வார்.

ஸ்ரீமத் இராமாயணம் ஆரண்ய காண்டத்தில் - பூதபுரி க்ஷேத்ரம் 
என்று குறிப்பிடப்படும் திவ்ய தேசம்.

பிரம்மாண்ட புராணமும் பத்ம புராணமும், இந்த - திவ்ய தேசத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாகத் திருக்குறிப்பு.

மாபெரும் சிவபக்தன் ஜடாயு.

( ஜடாயுவைப் பற்றிய முந்தைய பதிவு )

சூரியனின் தேர்ச் சாரதியான அருணனின் இரு புத்திரர்களுள் - இளையவன் ஜடாயு. மூத்தவன் சம்பாதி. பறவைகளுக்கு எல்லாம் அரசர்கள் எனும் தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்கியவர்கள். 

இவர்களுடைய சிவ பூஜையினை திருஞான சம்பந்தப் பெருமான் வெகுவாகப் புகழ்ந்துரைக்கின்றார். வெண்மணலே சிவமாகப் பூஜித்தவர்கள் (2/43) என்று சிறப்பிக்கப்படுகின்றனர். 

இவர்கள் வழிபட்ட திருத்தலமே - புள்ளிருக்குவேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோயில்.

ஒருநாள் -  ஓய்ந்திருந்த பொழுதில்  - சூர்ய மண்டலத்தில் பிரவேசிக்க ஆசை கொண்டு  மேலே மேலே பறக்க  - ஒரு கட்டத்தில் வெப்பம் தாளாமல் ஜடாயுவின் சிறகுகள் கருகின. 

அது கண்டு மனம் துடித்த சம்பாதி தனது இளவலைக் காக்கும் பொருட்டு தன் சிறகுகளை குடை போல  விரித்தபடி ஜடாயுவுக்கு மேலே பறந்தான். 

அந்தோ - பரிதாபம்!.. 

தான் தன் சிறகுகளை இழந்து பூமியில் விழுந்தான். அவன் பால் இரக்கம் கொண்ட சூரியன் - ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் - ஸ்ரீராம அவதார காலத்தில் - அவரது நாம உச்சாடனம் கேட்கும் வேளையில் சிறகுகள் மீண்டும் முளைக்கும் என வரங்கொடுத்தான். 

சிறகுகளை இழந்த சம்பாதி தென்கோடியில் மகேந்திர பர்வதத்தில் வீழ்ந்து கிடக்க, ஜடாயு - தண்டகாரண்யத்தில் - வனவாசம் வந்திருந்த ஸ்ரீராம சீதா தம்பதியருடன் அளவளாவி இருந்தான். 

தசரதனின் அன்புக்குப் பாத்திரனான ஜடாயு - ஸ்ரீராமனிடம் வாஞ்சையுடன் இருந்ததில் வியப்பில்லை தானே!.. 


இந்த சூழ்நிலையில் காலம் வகுத்த வகையாக - ஆகாய மார்க்கமாக - வஞ்சக இராவணன் அன்னை ஜானகியை கவர்ந்து செல்லுங்கால் - இராவணனுடன் போராடி - அவனது சந்திரஹாச வாளால் தாக்கப்பட்டு சிறகிழந்து வீழ்ந்தான்.

அவ்வழியே  - ஜானகியைத் தேடி வந்த ஸ்ரீராமனிடம் இராவணன் கடத்திச் சென்ற விவரத்தினைக் கூறி விட்டு, ஸ்ரீராம பிரானின்  மடியிலேயே உயிர் துறந்தான்.  


தந்தை தசரதனுக்குச் செய்யாத இறுதிக் கடன்களை - ஸ்ரீராம பிரான்,  ஜடாயுவுக்குச் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

அதன்படி - வைணவத்தில் குறிப்பிடப்படும் தலங்கள் இரண்டு. அவை - திருப்புட்குழி. மற்றொன்று - திருபுள்ளபூதங்குடி.

கிரியைகள் செய்தபோது - ஸ்ரீராமனுக்கு உதவியாக சீதைக்குப் பதிலாக - பூமாதேவி பிரத்யட்சமாகியதாகவும் பூமாதேவியின் துணையுடன் ஸ்ரீராமன் ஜடாயுவுக்கு  கிரியைகளை நிறைவேற்றியதாகவும் ஐதீகம்.

செயற்கரிய செய்த ஜடாயுவுக்கு - ஸ்ரீ ராம பிரான்  மோட்சமளித்தார்.

ஸ்ரீவல்வில் ராமன் சயனத்திருக்கோலம் - புள்ளபூதங்குடி

அதன்பின், ஸ்ரீ ராம பிரான் - களைப்பு தீரும் வகையில் சயனம் கொண்டதாகவும் அந்த நிலையிலேயே - பின்னாளில் திருக்கோயில் அமைந்ததாக திவ்யதேச வரலாறு கூறுகின்றது.

மூலஸ்தானத்தில் பெருமானுடன் பூமாதேவி அமர்ந்திருக்கின்றனள்.பின்னொரு சமயம் க்ருத்ர ராஜன் என்னும் மன்னனுக்கு பெருமாள் தரிசனம் தரவே - அகமகிழ்ந்த மன்னன் திருக்கோயிலை எழுப்பி ஆராதனை செய்து உய்வடைந்தான். க்ருத்ர ராஜன் பெயரில் புஷ்கரணியும் உள்ளது.

இவ்வழியே சென்ற திருமங்கை ஆழ்வாரை அழைத்து சதுர் புஜங்களுடன் திவ்ய தரிசனம் அளித்தாராம் பெருமாள். 

பெருமானைக் கண்குளிரக் கண்ட திருமங்கையாழ்வார் - திருப்பாசுரங்களைப்  பாடி மகிழ்ந்தார்.

ஆழ்வாருக்குப் பிரத்யட்சமாகிய கோலத்திலேயே - சதுர்புஜங்களுடன் - ஸ்ரீஉற்சவ மூர்த்தி திகழ்கின்றார்.

108 திவ்யதேசங்களில் ஸ்ரீராமன் சயனத் திருக்கோலம் கொண்டிருப்பது இங்கே மட்டும் தான்!.. 


சீதையைத் தேடி வந்த ஸ்ரீராமன் ஜடாயுவுக்கு இறுதிக் கடன்களைச் செய்து மோட்சம் அளித்த நிகழ்வினை - 

தனமருவு வைதேகி பிரியலுற்றுத் 
தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்தேற்றி
- என்று குலசேகர ஆழ்வார் குறிப்பிடுவதன் மூலமும் அறியலாம்.

தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார ஸ்தலமாகிய திருமண்டங்குடி இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருக்கோயிலை சிறப்பாக நிர்வகிப்பது  - ஸ்ரீ அஹோபில மடம். . 

ஸ்ரீ அஹோபில மடம் 19வது ஜீயர் ஸ்வாமிகளின் பிருந்தாவனம் இங்கே உள்ளது.

கும்பகோணத்திலிருந்து 11கி.மீ தொலைவிலுள்ளது - புள்ளபூதங்குடி.

சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் சாலையில், சுவாமிமலை ஆதனூர் கிராமங்களை அடுத்து புள்ளபூதங்குடி.

ஆதனூர் - ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில்  - ஸ்ரீவல்வில் ராமன் திருக்கோயில் உள்ளது. 

மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் 
நெய்யார் பாலோடமுது செய்த நேமி அங்கை மாயன் இடம் 
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்றணையும்
பொய்யாநாவில் மறையாளர் புள்ளம் பூதங்குடிதானே!..
திருமங்கை ஆழ்வார் (5/1/1)

ஓம் ஹரி ஓம்

20 கருத்துகள்:

 1. திரு புள்ளபூதங்குடி அருமை அறிந்தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும்
   இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. திரு புள்ளபூதங்குடி பற்றிய அறியாத தகவல்களுக்கும், சிறப்புகளுக்கும் நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. Thanks a lot
  so heartening i sing this in raag sahana and sindhu bhairavi
  subbu thatha
  www.menakasury.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும்
   இசை வடிவிற்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. அறியாத தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 5. இப்படியெல்லாம் இருக்கிறதென இப்போதாவது அறியக்கிடைத்ததே..
  உங்கள் பதிவால்! அகம் மகிழ்கிறேன் ஐயா!

  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகைக்கும்
   இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 6. படத்தேர்வுகளும்ம் பதிவும் வழக்கம்போல அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
   பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 7. ஸ்ரீவல்வில் ராமன் திருக்கோயில் பற்றி
  சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து
   பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 8. ராமன் சயனித்த திருக்கோலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து
   கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 9. சிறப்பான பகிர்வு ஐயா...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்.
   தங்களின் வருகையும்
   கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 10. அருமையான திருவுருவப் படங்களுடன் விபரங்கள் அருமை ஜடாயுவின் விபரங்களும் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி
  நன்றி....! தொடர வாழத்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் இனிய
   கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..