நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 29, 2017

செவிப்பூ

சூர்ப்ப கர்ணாய நம:
அகன்ற காதுகளை உடையவனே போற்றி!.. 

- என்பது ஸ்ரீ விநாயகருக்குரிய தோத்திரங்களுள் ஒன்று..

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும் ..

- என்பது கந்த சஷ்டி கவசத்தின் வரிகள்..

உமையாளிடம் ஞானப்பால் அருந்திய சம்பந்தப் பெருமான்
தனது முதல் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே -

தோடுடைய செவியன்!.. 
- என்று இறைவனை அடையாளங்காட்டுகின்றார்..

இது ஈசன் உமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்..

குறிப்பாக - குழை , தோடு என்னும் ஆபரணங்கள் மகளிர்க்கு உரியவை..

ஈசனை அடையாளங் காட்டும் போதெல்லாம்
சிவசக்தி ஐக்கிய வடிவமாகவே சான்றோர்கள் அடையாளங்காட்டுகின்றனர்...

காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்!.. 
- என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

குண்டலங் குழைதிகழ் குழைக் காதனே!.. -
- என,   சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும்
அம்மையப்பனின் திருக்கோலத்தைக் காட்டுகின்றார்..

குண்டலக் காதி!..  - என்று அம்பிகையைக் குறித்தருள்பவர் திருமூலர்..கனங்குழை மாதர்!..  - என்பது திருக்குறள்...

நவதிருப்பதிகளுள் ஒன்றான தென் திருப்பேரையில் ஸ்ரீ ஹரிபரந்தாமனின் திருப்பெயர் - மகர நெடுங்குழைக் காதர்..
உடனுறையும் தாயாரின் திருப்பெயர் - குழைக்காது வல்லி..

அவ்வளவு ஏன்!..
அபிராமவல்லியைத் துதிக்கும் போது -

அம்மா!..
நின்னுடைய திருத்தன பாரங்களில் திகழும்
முத்து மாலைகளையும் (அணி தரளக் கொப்பும்)
செவிகளில் பேரழகுடன் ஒளிரும்
வயிரத் தோடுகளையும் (வயிரக் குழையும்)
என்னுடைய சிந்தனையிலே எழுதி வைத்தேன்!..

- என்று பாடுகின்ற அபிராமபட்டர் -

அன்று கயிலாயருக்கு இமவான் அளித்த கனங்குழையே!..

- என்று, அம்பிகையை கனங்குழை என்று குறிக்கின்றார்...

அதுமட்டுமா!..

மூங்கிலைப் போன்ற திருத்தோள்களில் திகழும் கொன்றை மாலையானது 
காதுகளில் உள்ள குழைகளைத் தழுவி நிற்கின்ற வண்ணம்
அம்பிகை திருக்காட்சி நல்குகின்றாள்!..

- என்று புகழ்ந்துரைக்கின்றார்.

அபிராமி அந்தாதியின் நூறாவது திருப்பாடல் 
மிகப் பெரிய தத்துவத்தினை உள்ளடக்கியது...

அந்த ஒரு திருப்பாடலுக்கே பல பதிவுகளைத் தரவேண்டும்..
அவற்றை வேறொரு இனியவேளையில் சிந்திக்கலாம்...


HaleBedu - Karnataka
இத்தகைய ஆபரணச் சிறப்புடன் குறிக்கப்படுவது - காது..

இளநங்கையர் தம் காதுகளில் அணியும் ஆபரணங்களுள்
தோடு, குழை, தொங்கல், தண்டட்டி - என்பன நாமறிந்தவை...

தண்டட்டி தான் - லோலாக்கு என்றும் பாம்படம் என்றும் சொல்லப்படுவது..

பெண்களுக்கான காதணிகள் என்று பதினாறு பெயர்களைத் தருகின்றது - விக்கி பீடியா..

இளங்காளையர் தம் காதுகளுக்கான ஆபரணங்கள் 
கடுக்கன், குண்டலம் - என்பன மட்டுமே...

குழந்தை பிறந்ததும் நல்லதொரு நாளில் -
உறவுகள் உடனிருக்க காதுகளுக்கு பொன் அணிவிப்பது நமது கலாச்சாரம்.. 

சமய சடங்குகள் சிலவற்றின் போது
தியான - உச்சாடன மந்திரங்களைக் காதினில் ஓதுவது மரபு...

எவராவது இடக்கு மடக்காகப் பேசும்போது -
எனக்கு ஏற்கனவே காது குத்தியாகி விட்டது!..  - என்று மடக்குவது வழக்கம்..

அன்பு மிகுந்த வேளைகளில் கணவனும் மனைவியும்
ரகசியம் பரிமாறிக் கொள்வதை - காது கடித்தல் என்றே குறிக்கின்றனர்..

இளங்காதலர்களிடம் இது - அதாவது,
உண்மையாகவே காதைக் கடித்தல் அதிகமாக உண்டு!..
- என்று அங்கும் இங்குமாக சில பட்சிகள் சொல்லுகின்றன!...

இத்தனை சிறப்புகளை உடைய காதுகள்
இன்றைய நாட்களில் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன!?..

இன்றைய நாட்களில் பராமரிக்கப்படுவது இருக்கட்டும்!..

அன்றைய நாட்களில்?...

எவ்விதமான புறத் தொந்தரவுகளும் இல்லாத அன்றைய காலகட்டத்தில்
மனிதனின் எல்லா அவயவங்களும் கூடுமானவரைக்கும் சரியாகவே இருந்தன...

குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அவருக்கு!..- என்றல்லாம் சொல்வார்கள்..

நிதானமான அனுபவபூர்வமான வைத்திய முறைகள் மக்களுக்குக் கிடைத்தன...

வீடுகளிலும் அஞ்சறைப் பெட்டிக்குள்ளேயே அருமருந்துகள் இருந்தன..

இருப்பினும் -
வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு!..
- என்ற சொல்வழக்கும் மக்களிடையே பிரசித்தம்..

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்..

இவை நான்கும் மக்கள் நலம் பேணின... அப்படியும் உடல் கோளாறு என்றால் வேம்பின் எண்ணெய் இவற்றோடு சேர்ந்து கொண்டது...

மழைக் காலம் தவிர்த்த மற்ற மாதங்களில்
வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தனர்...

பள்ளி நாட்களில் - வெள்ளிக் கிழமைகளில்
எண்ணெய் குளித்த பெண் பிள்ளைகள் புத்தகங்களுடன் வரும் அழகே அழகு!..

பாவாடை தாவணியும் ஜிமிக்கி கம்மலும்!.. - ஆகா.. ஆகா!..

பிள்ளையார் கோயில் வாசலில்
இதற்காகவே விடலைகள் காத்துக் கிடப்பார்கள்...

அப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது
எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி ஆறவைத்து
காதுகளில் சில சொட்டுகள் விடுவார்கள்..

இது நம்முடைய வைத்திய முறைகள் காட்டிய வழி..

காதில் வேறு ஏதும் பிரச்னை என்றால் -
மூலிகைச் சாறு சில சொட்டுகளை விடுவார்கள்..

அது என்ன மருந்து என்று கேட்டால் -
பேர் சொல்லாதது!.. - என்று சொல்லி விடுவார்கள்..

காலங்கள் மாறி வந்த சூழ்நிலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உள்பட பல வழக்கங்கள் முற்றிலும் நின்றே போயின...

ஒரு சில இடங்களில் கையாண்ட முறையினால் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்..

ஆனால் - முற்றிலும் தவறு என்று நிரூபணம் செய்வதற்கு முனைந்தது நவீன மருத்துவம்...

ஊடகங்களும் அதற்கு ஜால்ரா அடித்தன..

விளைவு - தெருவுக்கு நாலு மருந்தகங்கள்.. வீட்டுக்கு வீடு நோயாளிகள்...

அது கிடக்கட்டும்.. காதைப் பற்றி ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறீர்!...

- என, கவிப்புயல் கர்ர்ர்ர்ர்ர்.........ரிப்பது........... கர்ஜிப்பது கேட்கிறது!..

இதோ வந்து விட்டேன்....
ஏனென்றால் இந்தப் பதிவே கவிப்புயலுக்காகத் தான்!...

என்னது!.. கவிப்புயலுக்காகவா!?..

ஆமாம்.. கடைசியில் ஏனென்று சொல்லுகிறேன்!..


காதும் காது மடலும் அழகென்றால் அதை மேலும்
அழகு படுத்த பற்பல அணிகலன்களை அணிந்து கொண்டனர்...

அவையெல்லாம் புற அழகு என்றாலும் காதுகளின் உள் அழகு அபூர்வமானது..

காதினுள் இயற்கையாகவே மெழுகு (Ear Wax) சுரக்கின்றது...
அது காதினை சுத்தப்படுத்துவதற்காக - என்கின்றனர் - மருத்துவர்கள்..

காதுகளின் உள்ளே உள்ள மெழுகு - குறும்பி எனப்படும்..

காதுக்குள் சில துளி எண்ணெய் விடுவதால்
காதினுள் இருக்கும் மெழுகு சற்றே இளகி வரும்..

ஒவ்வொருவருடைய உடல் சூட்டுக்கும் ஏற்றார்போல
காதினுள்ளே உள்ள மெழுகின் தன்மை மாறுபடும்...

காதினுள் மெழுகு இளகி வெளியே வரும் போது
அதுவாகவே உலர்ந்து உதிர்ந்து விடும்..

காது மெழுகு எடுப்பதற்காகவே வழுவழுப்பாக வெள்ளியில்
மெல்லிய கம்பி ஒன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும்...

அது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்லவில்லை...
அதை முறையாகப் பயன்படுத்தினால் பிரச்னை இல்லை...

இதில் ஏறுக்குமாறாக -
கோழிமுடி, ஈர்க்கு, ஆணி, பென்சில், காகிதம், கம்பி, கடப்பாரை -
இவற்றைக் காதில் விட்டுக் குடைந்து - தன் காதுக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டவர் பலர்..

அபூர்வமாக - ஒருவருக்கொருவர் கைகலப்பில் காதை இழந்த கதைகளும் உள்ளன...

காலங்கள் மாறின..

கிரிக்கெட் கேட்கிறேன்!.. - என்று, காதருகில் பாக்கெட் ரேடியோவை வைத்துக் கொண்டதனால் காதை இழந்தவர்கள் பலர்..

காதுக்குள் மெழுகு - குறும்பி - இறுகிப் போவதால் ஏற்படும் நமைச்சலைத் தடுப்பதற்காக நாகரிக மக்களால் பஞ்சு குச்சியைக் கொண்டு காது குடையும் பழக்கமும் தொடங்கப்பட்டது..

குடிசைத் தொழில் என்ற பேரில் இந்த குச்சிகள் ( Swabs) லட்சக்கணக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன..

இவை ஆபத்தானவை என்று டாக்டர்கள் சொல்லியும் கேட்பாரில்லை...

பல வீடுகளில் மாதாந்திர மளிகை சாமான் பட்டியலில்
நிரந்தர இடம் பிடித்து விட்டன - காது குடையும் குச்சிகள்..

அடுத்து வந்த நாட்களில் நவீன நுண்ணலை பேசிகளின் வருகையினால் பாக்கெட் ரேடியோக்கள் தொலைந்தன..

நுண்ணலை பேசிகளின் பயன்பாடு மேலதிகமாகிவிட்ட காலகட்டத்தில் -
காதையும் கவனத்தையும் இழந்ததோடல்லாமல் வாழ்க்கையையே இழப்பவர்களையும் கண்டு கொண்டிருக்கின்றோம்..

காதுகளின் உட்புறம் மிக மிக மென்மையானவை..

அவற்றுள் முக்கியமானது செவிப்பறை (Ear Drum)..

அது கிழிந்து போனால் அதன்பின் காது - கேட்காது...

பிறந்த குழந்தை காதுகளின் வழியாக சப்தத்தை உணர்வதால் தான்
பேசுவதற்கு ஆரம்பிக்கின்றன...

உடலில் கடைசியாகத் தூங்கி முதலில் விழிப்பவை காதுகளே!..


புறச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று அமைப்பாக இருக்கின்றது - காது..

காது மடலில் இருந்து செவிப்பறை வரை புறச் செவி..


வெளியுலகில் ஏற்படும் ஒலி செவிப்பறையை அடையும்போது
உட்செவியில் உள்ள மிக மெல்லிய எலும்புகளான
பட்டை எலும்பு, சுற்றெலும்பு, அங்கவடி எலும்பு ஆகியன அதிர்கின்றன..

இதனால் நடுச்செவியிலுள்ள திரவம் அசைகின்றது..
இதைத் தொடர்ந்து செவி நரம்பு தூண்டப்பட்டு மூளை ஒலியை உணர்கின்றது..

செவிப்பறை கிழிந்து போனால் -
செவித் திறன் முற்றிலுமாக பாதிப்படைகின்றது...

செவித் திறன் பாதிப்படைவதற்கு
முக்கியமாகக் குறிப்பிடப்படும் சில காரணிகள்...

சத்துக் குறைவு மற்றும் சுகாதார சீர்கேடுகள்..

பாக்டீரியா தொற்று, ஓயாத சளித் தொல்லை அதனால் காதின் உட்புறம் பாதிக்கப்பட்டு சீழ் பிடித்தல்.. தவிர மெழுகு அடைப்பு.. 

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு காதைத் தோண்டுவது..

முன்பு சொல்லப்பட்ட
கோழிமுடி, ஈர்க்கு, ஆணி, பென்சில், காகிதம், கம்பி, கடப்பாரை - வகையறாக்கள்..

அதீத ஒலி மாசு..

80 - 85 டெசிபல் தான் இயல்பான ஒலியளவு என்கின்றனர் மருத்துவர்கள்..
இதற்கு மேலான ஒலி அதிர்வுகளையே நாம் தினமும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் - 

காதுகளை விட்டுப் பிரியாத ஒலி பெருக்கிகளுடன்!..


காதுகளின் அருமை பெருமைகளை உணர்தல் வேண்டும்..
இன்றைய நாட்களில் காதுகளுக்கான அதிகப்பட்ச ஹிம்சை - ஒலி மாசு...

காணும் இடம் எங்கும் -
படித்திருந்தும் பயனிலராக Head Phone உடன் 
வயது வித்தியாசமின்றி அலைகின்றனர் மக்கள்...


அது ஆபத்தானது என்று சொல்லியும் உணர்வார்களில்லை..
தூக்கத்தில் கூட கழற்றிப் போடுவதில்லை!.. - என்றால் என்ன செய்வது?..

காதுகளைப் பேணுதல் வேண்டும்..


முதற்கட்டமாக HEAD PHONE களைக் கழற்றி எறிவது.. 


கண்டவற்றையும் காதினுள் நுழைத்துத் குடைவதைத் தவிர்ப்பது..
சத்துள்ள உணவுகளை உண்டு உடல் நலனைப் பேணிக் காப்பது..

பாரம்பர்யப் பாம்படம்
நான் இவற்றை எல்லாம் கடைப்பிடித்து வருகின்றேன்..

விமானப் பயணங்களின்போது வழங்கப்படும் HEAD PHONE களைக் கூட உபயோகிப்பதில்லை..

தூக்கம் அல்லது -
விமானத்தை வருடி விடும் மேகங்களை வேடிக்கை பார்ப்பது..

இருகாதுகளையும் கவனிக்காமல் விட்டால்
அவை இருக்கும்.. அவற்றால் பயன் இருக்காது...

இப்படியாகிய சூழ்நிலையில் நம்ம ஏரியா தளத்தில் -
மதிப்புக்குரிய கவிப்புயல் வழங்கிய கருத்துரை ஒன்றிற்காகவே இந்தப் பதிவு..
  

யார் காதுகளிலாவது போட்டு விட வேண்டும்!.
- என்று, பல மாதங்களுக்கு முன்பாகத் தொகுத்து வைத்திருந்த பதிவு..

நல்ல வேளை..
கவிப்புயலின் கருத்துரையினால் 
கனவு நிறைவேறியது...
மனமார்ந்த நன்றி..

இன்னும் நிறைய சொல்லலாம்.. 
அவையெல்லாம் பின்னொரு வேளையில்!..
***

கேள்வி அறிவினை செவிச் செல்வம்!..
- என்றுரைக்கின்றார் வள்ளுவப்பெருமான்...

அத்தகைய செல்வத்திற்கு அடிப்படையானவை செவிகள்..

அச்செவிகளும் நல்லோர் தம் 
சொற்களால் துளைக்கப்படவேண்டுமே அன்றி
வேறொன்றால் அல்ல!..

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி..(418)

வாழ்க நலம்..
***

திங்கள், நவம்பர் 27, 2017

கார்த்திகைத் திங்கள் 2

கார்த்திகையின் முதல் திங்கள் அன்று
திருஆலம் பொழில் சிவாலயத்தைத் தரிசனம் செய்தோம்..

கார்த்திகையின் இரண்டாம் திங்களாகிய இன்றும்
வழக்கம் போல சிவாலய தரிசனம்..

இன்றைய திருக்கோயில் -  திருக்காட்டுப்பள்ளி..

நாற்புறமும் நெல் வயல்களால் சூழப்பட்டுள்ள ஊர்...
தஞ்சை மாவட்டத்தின் அழகான ஊர்களுள் திருக்காட்டுப்பள்ளியும் ஒன்று..

திருத்தலங்களின் தொகுப்பின்படி -
காவிரியின் தென்கரைத் தலம் என சொல்லப்படுவது..

மயிலாடுதுறை - திருவெண்காட்டிற்கு அருகிலும்
திருக்காட்டுப்பள்ளி - என, ஒரு திருத்தலம்...

அதுவும் பதிகம் பெற்ற திருக்கோயில்..
அது காவிரியின் வடகரைத் தலம்..

அடியார்கள் திருப்பதிகத் திருத்தலங்களைக் குறிப்பிடும் வேளையில்
காவிரியின் வடகரையிலுள்ள திருத்தலத்தை கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனவும்
காவிரியின் தென்கரையிலுள்ள திருத்தலத்தை மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனவும்
வழங்குகின்றார்கள்..

என்றாலும் -
இவ்வூர்கள் இரண்டும் சாதாரணமாகத் திருக்காட்டுப்பள்ளி என்றே அறியப்படுகின்றன...

திருத்தலம்
திருக்காட்டுப்பள்ளி

நன்றி - உழவாரம் சிவனடியார்
நன்றி - உழவாரம் சிவனடியார்
இறைவன் - ஸ்ரீ ஆரண்யசுந்தரர், ஸ்ரீஅக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்ய நாயகி 
தீர்த்தம் - காவிரி, அக்னி தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம், வன்னி

நான்முகன், சூரியன் மற்றும் அக்னி தேவன் வழிபட்ட திருத்தலம்.. உரோமரிஷி இங்கே தவமிருந்து இறைதரிசனம் பெற்றுள்ளார்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
திருஞானசம்பந்தப் பெருமானும் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்..

திருத்தலம் மிகப் பழைமையானது... ஆனால் கோயிலின் கட்டுமானம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தெரிகின்றது..நெடிதுயர்ந்து விளங்கும் ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கியவாறு திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...


கொடிமரம்.. கொடிமர விநாயகர்..

தரிசனம் செய்தபடி ஸ்வாமி சந்நிதிக்குள் நுழையும் போதே
வடபுறமாக அம்பிகை சௌந்தர்யநாயகியின் சந்நிதி..

திருக்கோயிலின் தலைவாசலில் இருந்து -
நாலடி அளவுக்குத் தாழ்வாக இருக்கின்றது - கருவறை..

இதுவே ஆதியில் இருந்த அமைப்பாக இருக்கலாம்...


திருக்கோயிலின் அருகில் காவிரி ஆறு..

பின்னாளில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் திருக்கோயிலின் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என யூகிக்க முடிகின்றது...

மூலத்தானத்தின் எதிரில் நந்தியம்பெருமான்..

கருவறையில் மின்னும் தீபங்களின் ஒளியில்
சிவமூர்த்தியைத் தரிசனம் செய்கின்றோம்..

உடலில் வெம்மையினால் நோய்கள் குறைவதற்கு வணங்க வேண்டிய திருத்தலம் என்று அறியப்படுகின்றது..

அதுமட்டுமல்ல -
உள்ளத்தில் விளையும் வெம்மை குறைவதற்கும்
ஈசன் எம்பெருமான் திருவருள் புரிகின்றார் - இங்கே!...


திருச்சுற்றில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி..
விசேஷமான திருக்கோலம் என்று தகவல் குறிப்பு அருகில் உள்ளது..


இங்கே யோக குருவாக இரண்டு திருக்கரங்களுடன்
சின்முத்திரை காட்டிய வண்ணம்
ஜடாமுடியில் சூரிய சந்திரர்களுடன் மகர கண்டி
தரித்த திருக்கோலத்தில் திகழ்கின்றார்...


வடக்குத் திருக்கோட்டத்தில் ஸ்ரீ துர்காம்பிகை...
துன்பம் தீர்க்கும் அம்பிகையைத் தொழுது வணங்குகின்றோம்..

திருச்சுற்றில் வலமாக வந்து மீண்டும் அர்த்த மண்டபம்...

நவக்கிரக மண்டலத்தில்
சூரியனை நோக்கியவாறு ஏனைய மூர்த்திகள்..

வடபுறமாக நடராஜ சபை.. திருப்பள்ளியறை..
ஸ்ரீ காலபைரவரர்.. ஸ்வாமியைத் தரிசனம் செய்து கொள்கின்றோம்..

சற்றே நகர்ந்து வெளித்திருச்சுற்று,, பரந்து விளங்குகின்றது..


கன்னி மூலையில் ஸ்ரீ விநாயகர் சந்நிதி..
ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் கல்யாண முருகன்..

உரோம மகரிஷி
ஸ்ரீ பூதேவி ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி..
உரோம மகரிஷி சிவ வழிபாடு செய்யும் திருக்கோலம்..
நந்தியும் உடனிருக்கின்றார்..

கஜலக்ஷ்மியும் சரஸ்வதியும் திருச்சுற்றில் விளங்குகின்றனர்..  

வடக்குத் திருச்சுற்றில் தென்னை மரங்களுடன்
தலவிருட்சமான வில்வமரம் விளங்குகின்றது..

வலம் வந்து வணங்கியபடி வெளியே வந்து
அம்பிகை ஸ்ரீ சௌந்தர்யநாயகியின் சந்நிதியில் தரிசனம் செய்கின்றோம்..

முன்மண்டபம் நிறைந்த தூண்களுடன் விளங்குகின்றது..

அம்பிகை சந்நிதி விமானம்மூன்றாவது திருச்சுற்று விசாலமாக விளங்குகின்றது...

தீபங்களை ஏற்றுவதற்காக தனியாக மண்டபம் ஒன்றினை
பெரிய அளவில் அமைத்திருக்கின்றார்கள்..


தென்புறமாக கன்னி மூலையில் -
விநாயகர் சந்நிதியுடன் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி...

படர்ந்திருக்கும் புல்வெளியில் நடந்தவாறு திருக்கோயிலை வலம் வந்து
கொடி மரத்தினருகில் வீழ்ந்து வணங்கி எழுகின்றோம்...

மாலை வேளை பூஜைகள் மங்கலகரமாக நிகழ்ந்தன.. உபயதாரர்கள்
பொங்கலும் புளியோதரையும் பாலும் பிரசாதமாக வழங்கினர்...

மனம் நிறைவான தரிசனம்..
மாலை வேளையில் கருமேகங்கள் திரண்டு நின்றன..

ஐயன் அக்னீஸ்வரனும் அம்பிகை சௌந்தர்ய நாயகியும்
அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டிய வண்ணம்
திருக்கோயிலிலிருந்து புறப்பட்டோம்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருக்காட்டுப்பள்ளிக்கு அடிக்கடி நகரப் பேருந்துகள் இயங்குகின்றன...

கல்லணைக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்கின்றன...

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து
வடக்குப் புறமாக நோக்கினால் சற்று தூரத்தில் திருக்கோயில்...

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கல்லணை 17 கி.மீ.,

வழியில் பஞ்ச ரங்கத் தலங்களுள் ஒன்றான அப்பாலரங்கம் திவ்யதேசம்..

திருப்பேர் நகர் என்பது பழைமையான திருப்பெயர்..
இன்றைக்குக் கோவிலடி எனப்படும் இத்திருவூரில்
அப்பக்குடத்தான் - என, பெருமாள் பள்ளி கொண்டிருக்கின்றார்...

சிவாலயங்களும் திவ்யதேசங்களுமாக
காவிரியாள் பசுமையில் திளைத்துக் கொண்டிருக்கின்றாள்..
***
நன்றி - உழவாரம்
வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக் 
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே..(3/29)

செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்றில்லையே..(3/29)
-: திருஞானசம்பந்தர் :-

அடும்பும் கொன்றையும்வன்னியும் மத்தமுந்
துடும்புல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பினார்க்கோர் உறுதுணை ஆகுமே..(5/84)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

சனி, நவம்பர் 25, 2017

கனலில் கலந்த கனல் 2

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை 
தெருவினிலே விழலாமா..
தெருவினிலே விழுந்தாலும் 
வேறோர் கை தொடலாமா?..
*** 
 1303 - ல் மகாராணி ஸ்ரீமதி பத்மினி கனலுடன் கலந்தாள்..

இன்றளவும் ராஜபுதனத்து மக்கள் ஸ்ரீமதி பத்மினியைக் கற்புக்கரசியாக இதயத்தில் கொண்டு அவரைப் பற்றி எழுதியும் பாடியும் உருகுகின்றனர்..

ஆயினும் -
மகாராணி ஸ்ரீமதி பத்மினியின் தீக்குளிப்பு நடந்த
ஏறத்தாழ இருநூற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின்

மாலிக் முகம்மது ஜெயாசி (Malik Muhammad Jayasi) என்னும் சூபி கவிஞர்
ராணி பத்மினியைப் பற்றி மக்கள் பாடும் பாடல்களைக் கேட்கிறார்..

அவருடைய மனம் நெகிழ்கின்றது..

மகாராணி பத்மினியின் வரலாற்றை -
பத்மாவத் - எனும் பெயரில் நெடுங்கவிதையாக -
அவாதி (Awadhi) எனும் மொழியில் 1540 ல் வரைந்தளிக்கின்றார்...

பத்மாவதி எனப்படுகின்ற மகாராணி ஸ்ரீமதி பத்மினியைப் பற்றிய
முழு கவிதைத் தொகுப்பு இது ஒன்று தான் என்றும் சொல்லப்படுகின்றது..


சித்தோர்க் கோட்டையில் நிகழ்ந்த துயரங்களுக்குப் பிறகு
இயல்பு நிலைக்குத் திரும்பிய நாட்டு மக்கள்
கோட்டையின் மேற்குக் கரையில் கோமுகி குளக்கரையில்
மகாராணி ஸ்ரீமதி பத்மினியின் நினைவாக
கோயில் ஒன்றினை அமைத்து போற்றி வழிபட்டனர்..

இன்றும் அந்தக் கோயில் அங்கே உள்ளது..

யுனெஸ்கோ உலக பாரம்பர்ய சின்னங்களுள் ஒன்றாக
சித்தூர்க் கோட்டையை  அறிவித்துள்ளது

கோட்டையிலுள்ள விஜய ஸ்தம்பம்

சித்தோர்கர் கோட்டையும் கோமுகி குளமும்

ராணி பத்மினியின் மாளிகை (புனரமைக்கப்பட்டது)
ராணி ஸ்ரீமதி பத்மினி தீக்குளித்த குண்டம்
அரண்மனையிலிருந்து செல்லும் ரகசிய வழி
1857 ல் வரையப்பட்ட ஓவியம்
சித்தூர் கோட்டையில் அக்னியில் கலந்த -
கற்புக்கரசிகளைக் கொண்டாடும் விதமாக சொல்லப்படும் தகவல் இது -

ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் -
ஒரு கடிதத்தை எழுதி அதை மூடியபின்
அதன் மீது 74½ என்று எழுதி விட்டால்
அதனை அனுமதியின்றித் திறப்பவன்
74500 - பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகின்றான்!..
- என்ற நடைமுறை இருந்ததாக விக்கிபீடியா சொல்கின்றது...

வழிபடும் தெய்வமாக ஸ்ரீமதி ராணி பத்மினி
அந்த அளவிற்கு சித்தூர் மகாராணி ஸ்ரீமதி பத்மினிக்கும்
அவருடன் உயிர்த் தியாகம் செய்த பெண்களுக்கும்
அன்றைய சமுதாயம் சிறப்பிடம் அளித்திருக்கின்றது.!..

- என்றால் வேறென்ன சொல்வது!..

சித்தூர் கோட்டையில் நடந்த இந்த தீக்குளிப்பு ஒன்று மட்டும் தானா!...

சரித்திரம் வேறு சில நிகழ்வுகளையும் காட்டுகின்றது..

அவற்றுள் ஒன்று சித்தூர் நிகழ்வுக்கு முந்தையது..

அதுவே ஆதாரங்களின் அடிப்படையில் முதலாவது என்று கருதப்படுகின்றது..

தில்லையையும் ஆஜ்மீரையும் தலைநகராகக் கொண்டு
ஆட்சி செய்தவன் - ப்ருத்விராஜ் சௌகான்!..


இவனுடைய காதலி பேரழகி சம்யுக்தா!..
இவள் கன்னோசி மன்னன் ஜயச்சந்திரனின் மகள்...

ஜயச்சந்திரனுக்கு பிருத்வி ராஜனைப் பிடிக்கவில்லை..
எனவே மகளின் காதலை நிராகரித்து சுயம்வரம் நிச்சயித்தான்..

சுயம்வர மண்டபத்தின் வாசலில் பிருத்வி ராஜனைப் போலொரு
பதுமையை காவலுக்கு வைத்து அவனை அவமதித்தான்..

ஆனால் -
ஜயச்சந்திரனின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு
தானே பதுமையாக நின்றான் - பிருத்வி ராஜன்..

இந்தச் செய்தி ரகசியமாக சம்யுக்தாவிற்குச் சென்றது...

காதல் சிறகினைக் காற்றினில் விரித்தாள்..


காவலாக நின்ற காதலனின் கழுத்தில் மாலையினை அணிவித்தாள்..

காதல் கிளிகள் குதிரையில் ஏறிப் பறந்தன..

அதிர்ந்து நின்ற ஜயச்சந்திரன் -
மகளின் மாங்கல்யத்தைப் பற்றிய கவலையில்லாமல் -
அன்றே நாள் குறித்தான் மருமகனின் முடிவுக்கு...

அதனால் தான் மாற்றான் முன் மண்டியிட்டு உளவு கூறினான்..
அன்பு மகளின் மங்கலத்தை அரக்கனாகி அழித்தான்..

1191 - ல் பிருத்வி ராஜனுடன் நடத்திய போரில் புறமுதுகிட்டு ஓடினான் -
கோரி முகம்மது.. 

இந்துஸ்தானத்தைக் கைப்பற்றும் வெறி அவனுள் திரும்பவும் மூண்டெழுந்தது..

1193 - 1194 - ல்
ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆட்களைக் கொண்ட பெரும் படையுடன் கோரி முகம்மது வந்தபோது அவனிடம் மருமகனைக் காட்டிக் கொடுத்தான் -
கன்னோசி மன்னன் ஜயச்சந்திரன்..

ராஜபுதனத்தின் தலைவர்கள்
நூற்றைம்பது பேர் பிருத்வி ராஜனுக்குத் தோள் கொடுத்தபோதும்
ஒதுங்கி நின்று உளவு சொல்லிய ஜயச்சந்திரனால் வீழ்ந்தான் பிருதிவி ராஜன்...

பிருத்வி ராஜனைச் சிறைப் பிடித்த கோரி முகம்மது
பிருத்வி ராஜனின் கண்களைக் குருடாக்கியதுடன்
சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றிருக்கின்றான்...

இதனையறிந்த மகாராணி ஸ்ரீமதி சம்யுக்தா 
அரண்மனைப் பெண்களுடன் அக்னியில் கலந்தாள்..

இச்சம்பவம் 1194 ல் நடந்துள்ளது..

மருமகன் என்றும் பாராமல்
காட்டிக் கொடுத்த ஜயச்சந்திரன் மட்டும் நிம்மதியாக வாழ்ந்தானா?..

அவனும் அந்த கோரி முகம்மதுவின் கையாலேயே அழிந்தான்.. 

இதற்குப் பிறகு 1303 ல் மகாராணி ஸ்ரீமதி பத்மினி..

சித்தூர் நிகழ்வுக்குப் பின் - அடுத்த சில மாதங்களில்
ஜெய்சால்மேர் கோட்டையை முற்றுகையிட்டிருக்கின்றான் - அலாவுதீன் கில்ஜி..

ஏழு மாத முற்றுகைக்குப் பின் ஜெய்சால்மேர் கோட்டை வீழ்ந்த நிலையில் அங்கே அக்னியில் கலந்தவர்களளின் எண்ணிக்கை 24,000..

இதன் பிறகு - 1528 மார்ச் மாதம் எட்டாம் நாள்
சித்தூர் கோட்டையில் மன்னன் ராணா சங்காவின் வீழ்ச்சிக்குப் பின் மகாராணி ஸ்ரீமதி கர்ணாவதி  செந்தழலுடன் கலந்தாள்..

இதற்குக் காரணமாக இருந்தவன் குஜராத் பகதூர் ஷா..

சித்தூர் கோட்டையில் நிகழ்ந்த மூன்றாவது நிகழ்வு இது..

செப்டம்பர் 1597 ல் முற்றுகையிடப்பட்டது..
பல மாதங்களாகியும் முடியவில்லை.. சித்தூர் அரசு வீழவில்லை..

இறுதியாக 1568 பிப்ரவரி 22 அன்று பீரங்கிகளால் தாக்கப்பட்டது...

உடைபட்ட கோட்டைக் கதவுகளின் வழியாக உள்ளே சென்று பார்க்கையில்
வீரமகளிர் வெந்தணலுக்குள் வேள்விப் பொருளாகி இருந்தனர்...

இதற்குக் காரணகர்த்தா -
இந்துக்களுடன் மண உறவு கொண்டிருந்த ஜலால் உத் தீன் முகம்மத் அக்பர்..


அந்நியனின் கைகளுக்கு அக்னியே மேல்!.. என்று
தம்மைத் தாமே தீக்குள் இட்டுக் கொண்டதீபங்கள்..

தீக்குள் வீழ்ந்த தாமரைகளைப் பற்றிய
வரலாறு இவ்வளவு தான் என்றில்லை..

கணக்குக்கு வந்தவை இவைதான்..
கைக்கு வராதவை எத்தனை எத்தனையோ!..


ஒரு கொடியில் ஒருமுறைதான்
மலரும் மலரல்லவா...
ஒரு மனதில் ஒருமுறைதான்
வளரும் உறவல்லவா!..

பொற்புடைய மங்கையரின் கற்புநிறை மனதை
காவியமாக்கிய கவியரசரின் காவிய வரிகள் அவை..

அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே
மாற்றானின் நிழல் கூட - தம் மீது படுவதைத்
தாங்கிக் கொள்ளமுடிவதில்லை பாரதத்தின் மங்கையரால்!..

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே..
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே!..
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே..
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே!..

உத்தமப் பெண்களின் நாடி நரம்புகளில் எல்லாம்
ரத்தத்துடன் கலந்து ஓடுவது இந்த எண்ணம் தான்!..

எதை வேண்டுமாயினும் முற்றுகையிடலாம்.. முறியடிக்கலாம்..
இந்த எண்ணத்தை மட்டும் முறியடித்தார் இல்லை!..

நீரில் பூத்த தாமரையாய்ப் பெண்கள்..
எனினும் - கற்பெனும் திண்மையில்
செந்தீக்குள் செந்தாமரையாய்!..
***

இன்றைய பதிவிலும் இணையத்தில் திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்..

சில தினங்களுக்கு முன் அன்பின் GMB ஐயா அவர்களுடைய 
கலாச்சாரமா சரித்திரமா - எனும் பதிவின் விளைவு தான் -

கனலில் கலந்த கனல் - எனும் பதிவுகள்...

அங்கே கருத்துரையில் மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள்
சித்தூர் கோட்டையைக் கண்டு வந்த தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள்..

எனக்கும் அங்கேயெல்லாம் சென்று காணவேண்டும் என்ற ஆவல் உண்டு..

முந்தைய பதிவில்
மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்கள் ராணி பத்மினியின் வரலாற்றைப் பள்ளியில் படித்த நினைவுகளைப் பதிவு செய்திருந்தார்கள்..

நானும் அப்படியே..
எங்கள் வரலாற்று ஆசிரியர்கள் இந்த நிகழ்வுகளைக் கண் கலங்க நடத்திய நாட்கள் எல்லாம் இன்னும் பசுமையாக உள்ளன..

நூலகத்தில் இந்த வரலாற்றை வாசித்த நாட்களும் நெஞ்சில் நிழலாடுகின்றன..

அன்றைக்கு இந்த அளவிற்குத் துல்லியமாகக் கிடைக்கவில்லையே - தவிர,
என்னை வழிநடத்தியவை இந்த வரலாறுகளே!..

பெண்கள் நமது கண்கள்.. பேணிக் காத்தல் வேண்டும்!.. - என்னும் உணர்வினை ஊட்டி வளர்த்தவை இத்தகைய வரலாறுகள் எனும்போது
பெருமிதமாகவும் இருக்கின்றது..

ஓம் சக்தி ஓம்..
*** 

புதன், நவம்பர் 22, 2017

கனலில் கலந்த கனல் 1

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது!..
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளம் உனைச் சேராது!..
***

ஆனால்,
அந்த உடலைக் கூட
மாற்றான் கண்களுக்குக் காண்பிக்காமல்
அக்னிக் கொழுந்துகளுக்குள்
குழம்பாக்கிக் கொண்டாள் - மாதரசி ராணி பத்மினி!..

அவள் மட்டுமல்ல..
அவளைப் போல் ஆயிரமாயிரம்..
அரசி முதல் அந்தப்புரச் சேவகி வரைக்கும்!..

அந்த ஆரணங்குகளின் திருவடித் தாமரைகள்
அடியனின் தலையின் மேல்!..எழுபத்து நான்காயிரத்து
நானூற்று தொண்ணூற்றொன்பது
திருமேனிகளுக்குக் கீழாக -

ராணி பத்மினியின் பொன்னுடல்!..

ஆம்.. எழுபத்து நான்காயிரத்து ஐநூறு மாதரசிகள்!..

புண்ணிய பாரதத்தின் வடமேற்கு எல்லையான ராஜஸ்தானத்தில்
எழுநூற்றுச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது!..

இந்நிகழ்வு நடந்தாகச் சொல்லப்படுவது - 
1303 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில்!..

ராஜஸ்தானம் என்றாலும் அதற்குள் பற்பல நாடுகள்..
அவற்றுள் வலிமை மிக்கதாக விளங்கிய நாடு மேவார்...

போர் தொடங்கிய பத்து நாட்களுக்குள்
இந்த கோர சம்பவம் நடந்து முடிந்திருக்கின்றது..

இத்தகைய கோரம் நிகழ்வதற்குக் காரணம் - மாற்றானின் படையெடுப்பு..

படையெடுக்கும் யாருக்கும் -
அந்நாட்டை அடிமைப்படுத்தி
அதனை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதும்
அதன் செல்வங்களைக் கைப்பற்றுவதும் தான் நோக்கமாக இருக்கும்..

இங்கேயும் அப்படித்தான்.. ஆனால்,
நோக்கம் பொன் அல்ல.. பொருள் அல்ல!..

பெண்.. அழகே உருவான மங்கை..
அதுவும் இன்னொருவனின் மனைவி!..

இத்தகைய கயமையுடன் வந்தவன் - அலாவுதீன் கில்ஜி!..

இவன் தான் -

தில்லியை 1290 முதல் 1296 வரை ஆட்சி செய்த கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தானும் தனது மாமனும் ஆகிய ஜலாலுதீன் பைரூஸ் கில்ஜியை வஞ்சகத்தால் போட்டுத் தள்ளி விட்டு ஆட்சியைப் பிடித்தவன்..

24 பிப்ரவரி 1296 அன்று
பன்னிரு ஜோதி லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகிய சோமநாதபுரம் 
ஸ்ரீசோமேஸ்வரர் திருக்கோயிலைத் தகர்த்து எறிந்தவன்..

பின்னும் வெறி அடங்காதவனாக
அடுத்த சில மாதங்களில் - துவாரகாபுரியில் விளங்கிய
ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோயிலையும் தரைமட்டமாக்கியவன்..

அத்தோடு நில்லாமல் -
குஜராத் மன்னன் இரண்டாம் கர்ணதேவனை வீழ்த்திய பின் 
நிர்க்கதியாக நின்ற பட்டத்தரசி கமலாதேவியைக் கவர்ந்து சென்று
மத மாற்றம் செய்து திருமணம் என்ற பேரில் நாசம் செய்தவன்..

மகாராணி கமலாதேவியை சிறை பிடித்த வேளையில் -
உடனிருந்த அந்தப்புர சேவகனையும் இழுத்துக் கொண்டு போனார்கள்..

அவனது பெயர் - சந்த்ராம்..

ஆணாக இருந்தும் ஆண் தன்மையற்றவன் சந்த்ராம்...
சந்த்ராமின் அழகைக் கண்டு மயங்கினான் - கில்ஜி..

விளைவு!?..

அவனையும் மதமாற்றம் செய்தான்..
அவனுக்கும் புதுப் பெயர் ஒன்றை வைத்தான்..

அந்தப் பெயர் - மாலிக் கபூர்..

அந்தப்புர நங்கையர் பலர் இருந்தும்
மாலிக் கபூரையும் மலர்ப் படுக்கையில் தள்ளியவன் - கில்ஜி!..

அலாவுதீன் கில்ஜி மீண்டும் வெறி கொண்டு 
ரந்தம்பூர் எனும் ராஜபுத்திர நாட்டின் மீது படையெடுத்தான்..

வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவும் நேரத்தில்
மன்னன் அமிர்தேவனின் மந்திரிகள் நாட்டைக் காட்டிக் கொடுத்தனர்..

வீழ்ந்தான் அமிர்தேவன்.. 
அவனது ராணியும் தன் மானம் காக்க தீக்குளித்து மாண்டாள்..

தில்லி சுல்தானாக அமர்ந்த ஏழாண்டுகளுக்குள்
எத்தனை எத்தனையோ கொடுமைகளை அரங்கேற்றி
குருதியில் குளித்து எழுந்த குரூரன் - கில்ஜி..

இத்தனை நடந்தும் வெறி அடங்காதவனாக
மீண்டும் படை திரட்டிக் கொண்டு சென்றான்..

ராஜபுத்திர நாடுகளுக்குள் வெல்ல முடியாதபடிக்கு
பெரும் கோட்டையுடன் விளங்கிய நாடு - மேவார்...

இந்நாட்டின் கோட்டை சித்தோர்கர் (Chittorgarh).. 
சித்தூர் கோட்டை எனவும் சொல்லப்படும்..

படை நடத்திச் சென்றதன் நோக்கம் - மேவாரைக் கைப்பற்றுவதல்ல..

அந்த நாட்டின் மகாராணி பத்மினியைக் கவர்ந்திட வேண்டும்!..

மேவார் நாட்டின் அரசன் ரத்தன் சிங்..

ரத்தன் சிங்கின் மனைவி தான் பத்மினி..பத்மாவதி என்றும் பெயர் கொண்ட
ராணி பத்மினி ஈடு இணையற்ற பேரழகி!...

ஆயிரம் தாமரைகள் கூடி நின்றாலும்
அவளுடைய அழகுக்கு நிகர் அவளே!..

இந்த விஷயத்தை அப்படி இப்படியாகக் கேள்விப்பட்ட கில்ஜி
கிறுகிறுத்துப் போனான்...

மேவார் நாட்டை நோக்கி
அலாவுதீன் கில்ஜி தனது படையை நடத்திய நாள் - 28 ஜனவரி 1303..

மேவார் நாட்டின் சித்தோர்கர் கோட்டை முற்றுகையிடப்பட்டது..

சில நாட்களிலேயே தெரிந்து போனது -
இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்கமுடியாதென்று...

நம்பிக்கையான ஒருவனைத் தூதனாக அனுப்பினான்..

நட்பு நாடி வருகின்றேன்..
இந்நாட்டின் மகாராணியை ஒருமுறை பார்க்க வேண்டும்!.. - என்று..

முற்றுகை நீடிப்பதை விரும்பாத மன்னன்
கில்ஜியின் வார்த்தைகளை நம்பி விட்டான்.. இருப்பினும் -

எங்கள் மரபின்படி - அந்நிய ஆடவர் முன்பாக பெண்கள் வரமாட்டார்கள்..
எனவே நிலைக்கண்ணாடி ஒன்றில் ராணியைக் காணலாம்.. - என்று செய்தி அனுப்பினான்..

அதற்கு உடன்பட்ட கில்ஜி இரண்டு வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்தான்..

கில்ஜியை அன்புடன் வரவேற்றான் - மன்னன்.. 

சற்று நேரத்தில் நிலைக் கண்ணாடியில் 
முக மறைப்புடன் தென்பட்டாள் - ராணி பத்மினி...அந்த சில விநாடிகளுக்குள் கில்ஜி மனதில் வேறொன்றைக் கணக்கிட்டான்..

நல்லது நண்பரே.. நான் உங்கள் அரண்மனைக்கு வந்ததைப் போல
தாங்களும் எனது பாசறைக்கு வந்து சிறப்பிக்க வேண்டும்!..

வஞ்சகமறியாத மன்னன் கில்ஜியுடன் அவனது பாசறைக்குச் சென்றான்...

கபடமே உருவான கில்ஜி - மன்னனைச் சிறைப் பிடித்து காவலில் வைத்தான்..
அத்துடன் அரண்மனைக்கும் சேதி ஒன்றினை அனுப்பினான்..

மன்னனை விடுவிக்க வேண்டும் எனில்
ராணி பத்மினி உடனடியாக இங்கே வரவேண்டும்.. 
இல்லையேல் நடப்பதே வேறு!.. - என்று...

அந்த ஓலையைக் கண்டதும் 
அரண்மனையிலிருந்து ஒரு ஓலை கில்ஜிக்குச் சென்றது..

மன்னனைக் காக்கும் பொருட்டு மகாராணியார் 
தனது சேடிப் பெண்கள் புடை சூழ - எழுபது பல்லக்குகளில்
ஆரோகணித்து நாளை காலையில் - அவ்விடம் வருவார்கள்!..
நிபந்தனையின்படி மன்னனை விடுவிக்க வேண்டும்!...

ஓலையினைக் கண்டதும் தேன் குடித்த மாதிரி இருந்தது - கில்ஜிக்கு..

எவ்வித சோதனையும் இன்றி - கோட்டையிலிருந்து வரும்
பல்லக்குகளை உள்ளே அனுமதிக்க ஆணையிட்டான்.. 

மறுநாள் காலையில் - சித்தூர் கோட்டையிலிருந்து புறப்பட்ட
எழுபது பல்லக்குகளும் கில்ஜியின் பாசறையை அடைந்தன..

உற்சாகம் மிகுத்துக் கிடந்த கில்ஜியை அந்த செய்தி ஈட்டியைப் போல தாக்கியது..

எதிர்பார்த்தபடி பல்லக்குகளில் பெண்கள் எவரும் வரவில்லை..
கை தேர்ந்த மாவீரர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து 
சிறையில் இருந்த மன்னனை மீட்டுக் கொண்டு சென்று விட்டார்கள்...

தடுக்க முயன்ற கைகலப்பில் இருதரப்பிலும் உயிர்ச் சேதம்..
ஆனாலும் மன்னனை மறுபடியும் பிடிக்க முடியவில்லை...

பைத்தியம் பிடித்த குரங்கைத் தேள் கொட்டியது என்பார்கள்..

அந்த நிலைக்கு ஆளானான் அலாவுதீன் கில்ஜி... 

கொலை வெறியுடன் கொடூரத் தாக்குதலில் இறங்கினான்...

அடுத்த சில நாட்களில் கோட்டையின் நீர்நிலைகள் உட்பட
பல பகுதிகளையும் பாழாக்கினான்...

அறநெறி ஒன்றினையே கைக்கொண்டிருந்த 
பாரதத்தின் ராஜபுத்திரர்கள் - 
மூர்க்கர்களின் கொடூரத்தின் முன்பாகத் தடுமாறினார்கள்..

இனியும் தாக்குப் பிடிக்க முடியாது எனத் தோன்றியது...

வருவதை எதிர்கொள்ளத் துணிந்தனர்...

ஜௌஹர் எனும் தீக்குளிப்பு விழா எடுக்கப்பட்டது..அன்று மாலை கோட்டையிலிருந்த பெண்கள் மங்கல நீராடி -
மஞ்சள் குங்குமம் மாலையுடன் புத்தாடை அணிந்தார்கள்..

மாதா ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடும் 
மகிழ்ச்சியுமாகக் கழிந்தது - முழு இரவும்..

விடியற்காலை நேரம்...

ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடு செய்த பின் 
அங்கிருந்த விளக்கிலிருந்து திரி ஒன்று எடுக்கப்பட்டு
அக்னிக் குண்டத்திற்குள் இடப்பட்டது..

கற்பூரம் குங்கிலியம் மாஞ்சருகு முதலான பொருட்களால் நிரப்பட்டிருந்த குண்டம் கனன்று எழுந்தது...

பூரண பொற்கும்பம் தாங்கியவளாக 
மகராணி ஸ்ரீமதி பத்மினி முன் நடந்து குண்டத்தினுள் கலந்தாள்..மகராணி ஸ்ரீமதி பத்மினியைத் தொடர்ந்து ரத்தன் சிங்கின் 
இளைய ராணியான நாகமதி அக்னியில் இறங்கினாள்..

அவர்களைத் தொடர்ந்து -
ஆரவாரத்துடன் தீக்குள் இறங்கியவர்கள் பல்லாயிரம் பேர்...

பொழுது விடிந்து விட்டது...

சிவப்பு ஆடையுடன் வெளிப்பட்ட வீரர்கள்
துளசி தீர்த்தத்தை அருந்தினர்..
அக்னி குண்டத்தில் கரிந்து கிடந்த சாம்பலை 
நெற்றியில் பூசிக் கொண்டனர்...

ஜெய் பவானீ!..

வீர முழக்கத்தினால் கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன..
பெரிய வெடி சப்தத்துடன் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன...

முடிந்த மட்டும் தங்களது வாளால் எதிரிகளைத் துண்டாடினர்..
இயலாத நிலையில் தங்களது கழுத்தையே வாளுக்கு இரையாக்கினர்..

ஒற்றையாகப் போராடிக் கொண்டிருந்த 
மன்னனின் வாளும் இறுதியாக வீழ்ந்தது...

காற்றில் பெரும் புகையும் நிண வாடையும் பரவி நின்றது..

நிலைமையை யூகித்துக் கொண்ட கில்ஜி 
அரண்மனையின் உள்ளே ஓடினான்..

ராணி பத்மினியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும்!.. - என்று.. 

அவனைத் தொடர்ந்து அவனுடைய முரட்டுக் கும்பலும் ஓடியது..

தீக்கங்குகளுடன் கனன்று கொண்டிருந்தது அக்னிக் குண்டம்..

செந்நிறத் தீச்சுவாலைகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தன..

பொன் வெள்ளி தாமிரம் முதலானவை உருகிக் கிடக்க - முத்து ரத்தினம் மாணிக்க வைர வைடூரியங்கள் வெடித்துச் சிதறிக் கிடந்தன...

அவற்றையும் மீறியதாக -
இரத்தமும் நிணமும் எலும்பும் சதையும் 
வெந்து குழைந்து வழியெங்கும் வழிந்து கிடந்தன..

தவறி விட்டேன்.. அழகு ஓவியத்தைத் தவற விட்டேன்..
என்ன ஒரு மரபு.. என்ன ஒரு மானம்.. என்ன ஒரு கலாச்சாரம்!..
அடங்க மாட்டேன்.. இதை அழிக்காமல் அடங்க மாட்டேன்!..

ஆக்ரோஷத்துடன் கத்தினான்...

வன்மமும் குரோதமும் பொங்கிப் பீறிட்டெழுந்தது..
தன் கையினால் தன் கையினையே குத்திக் கொண்டான்...

அவனைத் தொடர்ந்து வந்த 
கும்பலும் அவனைப் போலவே கத்தியது..
  ஆனாலும் அந்த எண்ணம் பலித்ததா!?..

அலாவுதீன் கில்ஜியும்
அவனைத் தொடர்ந்த ஆயிரம் ஆயிரமும்
பின்னும் ஆங்கில ஐரோப்பிய வல்லூறுகளும்
பலவகைகளிலும் முயன்று கொண்டு தான் இருக்கின்றன..

பாரதத்தின் கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைத்து சீரழித்து விடவேண்டுமென்று!..

அவ்வப்போது ஆங்காங்கே சரிவுகள் ஏற்பட்டு சிதைந்தாலும்
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அமீபாவினைப் போல
பாரத மண்ணின் கலையும் கலாச்சாரமும் தங்களைத் தாங்களே
பொலிவுடன் புதுப்பித்துக் கொள்கின்றன...

இந்தப் பதிவின் தகவல்கள் 
விக்கி பீடியாவில் பெறப்பட்டவைஎங்கிருந்தோ ஒற்றை விளக்கின் ஒளி தெரிகின்றது..
நல்ல மனம் செல்வதற்கான வழி புரிகின்றது..

ஓம் சக்தி ஓம்.. 
***