நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2018

வருவாய்.. வருவாய்..


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா..
வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா..


உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா
உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா..
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா..


இணைவாய் எனதா வியிலே கண்ணா
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா...
கணைவா யசுரர் தலைகள் சிதற
கடையூ ழியிலே படையோ டெழுவாய்...


எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே...
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே!..
-: மகாகவி பாரதியார் :-
***


கண்ணா வருக..
மணிவண்ணா வருக...

நின் அருளே எங்கும் செல்வமாய் நிறைய
சிவமாய் வருக... எங்கள் தவமாய் வருக...
ஸ்ரீ க்ருஷ்ண... ஸ்ரீ க்ருஷ்ண.. ஸ்ரீ க்ருஷ்ணா சரணம்...

ஓம் ஹரி ஓம்...
ஃஃஃ

புதன், ஆகஸ்ட் 29, 2018

ஆரு ஐயா நீ... ..

ஆயா... நீ அழ வேண்டாம்!...
ஆரும் இல்லை உனக்கு என்று
அழவேண்டாம் ஆயா நீ...
ஆதரவா நான் இருக்கேன்..
ஆயா நீ அழவேண்டாம்!...

ஆரு ஐயா நீ!..

நான் பாட்டுக்குக் காட்டுக்குள்ள கிடந்தேன்...
பாழாப் போன மனுசனுங்க காட்டையும் கரட்டையும் 
அழிச்சுப் போட்டுட்டானுங்க...

வீடும் இல்லாம காடும் இல்லாம -
இந்த ஊருக்குள்ள தெருத்தெருவா சுத்திக்கிட்டு இருக்கேன்...
ஆயா உன்னைப் பார்த்தேனா... பாவமா இருந்திச்சு... அதான் வந்தேன்...

நீ மட்டும் ஒத்தையிலயா வந்தே?...

நாங்க பலபேரு குழந்தை குட்டிங்களோட வந்தோம்...

திங்கிறதுக்கு ஒன்னும் கிடைக்கலை...
யாராவது திங்கக் கொடுப்பாங்க...ன்னு பார்த்தா
ஒருத்தனும் ஒன்னும் கொடுக்க மாட்டேங்குறானுங்க...

நாயை அவுத்து விடுறானுங்க...
கம்பை எடுத்து வீசுறானுங்க...
கல்லை விட்டு எறியறானுங்க...
காரை விட்டு ஏத்துறானுங்க...

வாயில்லா ஜீவன்...ன்னா அவ்வளவு கேவலமா?...
நேத்து கூட ரெண்டு பேரு கார்...ல அடிபட்டுட்டானுங்க...

அப்டியும் இப்டியுமா பயந்து ஓடுனதுல..
நாங்கல்லாம் பிரிஞ்சுட்டோம்...

மிருக ஜாதி இருக்குற காட்டுக்குள்ள 
இஷ்டத்துக்கும் திரிஞ்சுக்கிட்டு இருந்தோம்...

மனுச ஜாதி இருக்குற நாட்டுக்குள்ள 
கஷ்டத்துக்கு கஷ்டம்... பயந்துகிட்டு இருக்கோம்...

எங்களால சனங்களுக்கு எடைஞ்சலா இருக்குதாம்...
அதுனால புடிச்சு வேற எங்கயாவது உட்டுடுங்க...
இல்லாட்டி போட்டுத் தள்ளிடுங்க...ன்னு சொல்லியிருக்கானுங்க...
எங்களுக்கு ஈவு எரக்கம் காட்ட யாருமேயில்லை...

இங்க தான் மனுசன மனுசன் அடிச்சுத் திங்கறானே!...
ஒங்களுக்கு எவன் எரக்கம் காட்டப் போறான்!?...
அந்தப் பக்கமா வாழப்பழம் இருக்கு ..
ரெண்டு எடுத்து சாப்பிடு!..

வேணாம்.. ஆயா!... 
பாவம்... நீயே வேகாத வெயில்...ல ஏவாரம் பண்ணிக்கிட்டு இருக்கே!..

இதுல என்ன ராசா இருக்கு?... பாவப்பட்ட ஜீவன்... நீ சாப்பிடு....
நேத்து எவனோ ரவுடிப் பசங்க ரெண்டு சீப்பு பழத்தைத் தூக்கிக்கிட்டுப் போயிட்டானுங்க...
நான் என்னா பண்ணுவேன்.. அந்த காளியாயி மகமாயி கேக்க மாட்டேங்குதே..

கேக்கும் ஆயா... கேக்கும்.. காளி மகமாயி கண்டிப்பா கேக்கும்!...

என்னமோ.... சாமி மாதிரி வாக்கு சொல்றே... நல்லா இரு...
அது சரி.. நீ எங்கேயும் போகாம எங்கூடயே இருந்திடேன்!...

நல்ல கதையா இருக்கு போ!...

ஏன் சாமீ?..

வாயில்லா ஜீவனுக்கு இம்சை கொடுக்கறே...
என்னைய வெச்சு நீ ஏவாரம் பண்றே... ன்னு... -
எவனாவது ஆபீசர் வந்து உன்னைய புடிச்சுக்கிட்டுப் போயிடுவான்!...

அப்பிடி வேற இருக்குதா!?..

ஒலகம் தெரியாத ஆயாவா இருக்கிறியே நீ!..

ஆமாடா.. ராசா.. ஒலகம் தெரியாமத் தான் இருந்துட்டேன்... அதனால தான்
நாலு புள்ளைங்களப் பெத்தும் நடுத்தெருவில ஓடுது எம் பொழப்பு!...

பாவம் ஆயா நீ!.. ஒரு பயலும் கஞ்சி ஊத்தலையா?...

மகுடி அவுளுங்க கிட்டே இருக்கு.... இஷ்டத்துக்கு ஊதுறாளுங்க!..
இவனுங்க பல்லு போன பாம்பு மாதிரி ஆடிக்கிட்டு இருக்கானுங்க!..

கடைசி பய தான் காப்பாத்துறான்...
அவன் மார்க்கெட்டுல மூட்டை எடுத்துப் போடறான்...
மார்க்கெட்டுக்கு அந்தப் பக்கம் அவன் பொண்டாட்டி..
இந்தப் பக்கம் நான்.. பச்சை மொளகா அது இது... ன்னு 
கூறு கட்டி வித்துக்கிட்டு இருக்கோம்!...

இதெல்லாம் சனங்க வந்து வாங்குறாங்க தானே!...

அதை ஏன் கேக்குறே?... அந்தக் கொடுமைய!..
ஐஸ் பொட்டி அலங்காரம் எல்லாம் வெச்சி 
அங்கே ஒரு கோடீஸ்வரன் 
கத்திரிக்கா கடை வெச்சிருக்கானாம்... 

அந்தக் கடைக்குப் போயி வாங்குனாத்தான் கவுரதையாம்...
சனங்க மினுக்கிக்கிட்டு அங்கே போவுதுங்க!...
சொன்ன காசை கொடுத்துட்டு வருதுங்க!...

இங்கே வந்தா 
ஒரு ரூவாய்க்கு தர்றியா...
எட்டணாவுக்குத் தர்றியா...
சும்மாத் தர்றியா...ன்னு மல்லுக்கு நிக்குதுங்க!...

முடிஞ்ச வரைக்கும் இதெல்லாம் வித்துப்புட்டு 
வீட்டுக்குப் போனாத் தான் நமக்கு ஒரு வாய் கஞ்சி...

அடடா... உனக்கே இம்புட்டு கஷ்டம்...
இதுல என்னையும் உங்கூட இருக்கச் சொல்றியே!..

ஏதோ எனக்கு ரெண்டு வாய் சோறு.... ன்னா
அதுல உனக்கு ஒரு வாய் ஊட்ட மாட்டேனா!... 

ஆயா... நீ விக்கிறது பச்ச மொளகா, பூண்டு இஞ்சி.... ன்னாலும்
பேச்சு ஒவ்வொன்னும் பலாச் சுளையா இருக்கு!...

சரி... ஆயா... நாங் கிளம்பறேன்...
எங்கூட்டம் எல்லாம் எங்கே அலையுதுங்களோ?..
தேடிக் கண்டு புடிக்கோணும்!...

தேடிக் கண்டு புடிச்சு மறுபடியும் காட்டுக்கே போய்டுவியா?..

காடு எங்கே இருக்கு... அதைத்தான் அழிச்சிப் போட்டுட்டானுங்களே...
இந்த ஊருக்குள்ள தான் அங்கே இங்கே..ன்னு பொழுதை ஓட்டணும்!...

அப்போ நல்லதா போச்சு...
பொண்டாட்டி புள்ளைங்கள அழைச்சுக்கிட்டு வா...
கெடைக்கிறத சாப்புட்டுட்டு சந்தோசமா இருக்கலாம்!...

சரி.. ஆயா... நான் போய்ட்டு வர்றேன்!...

சரி.. ராசா.. நல்லபடியா போய்ட்டு வா!...
*****

பதிவின் முதலில் உள்ள படம் Fb - ல் வந்தது..
வானரமும் பாட்டியும் ஒருவருக்கொருவர் காட்டும்
அன்பினை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது.. 
***** 
ஏ.. கடவுளே.. பகவானே..
ஏழை பாழைங்கள காப்பாத்துங்க.. சாமீ!..

*****
ஏழையின் குரலை
ஏற்றருளுங்கள் ஈசனே!...
ஃஃஃ

திங்கள், ஆகஸ்ட் 27, 2018

பவித்ரோத்ஸவம்

சில தினங்களுக்கு முன் (25/ஆகஸ்ட்)
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
தன்னுடைய ஆன்மிக பயணம் எனும் தளத்தில்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!..
பவித்ரோத்ஸவம் - பூச்சாண்டி சேவை!...

என்னும் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்...

அந்தப் பதிவினை -


அந்தப் பதிவினில் சொல்லப்பட்டிருந்த தகவல்கள் மிக மிக மகிழ்ச்சியளித்தன...

ஜேஷ்டாபிஷேகம் - பற்றி ஓரளவு அறிந்திருக்கின்றோம்...

ஸ்ரீ நம்பெருமாள் - திருஅரங்கம்.

ஆனால்,
இந்த பவித்ரோத்ஸவம் - என்று
செய்தி வரும் போதெல்லாம் ஒன்றும் புரியாது...

பட்டு நூல் கொண்டு ஆன - மாலைகளுடன்
ஸ்ரீ நம்பெருமாளின் படங்களை எங்காவது பார்க்கும்போது
மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்...

இது ஏன்!.... பட்டு நூல் மாலை ஸ்வாமிக்கு!?...

மனம் வழக்கம் போல வியப்படையும்...
அத்துடன் களைத்துப் போகும்...

ஏனெனில்- இங்கே யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது!?..

ஆனாலும் ,

நம்பெருமாள் அதனையும் தெரிந்து கொள்ளச் செய்தான் -
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் வழங்கிய பதிவின் மூலமாக!...

மறுநாள் - (26 ஆகஸ்ட்)
கையிலிருந்த நுண்ணலைபேசியை
குடைந்து கொண்டிருந்த வேளையில் ஆனந்த அதிர்ச்சி...

Facebook ல்
அரங்கனின் அன்பர்களால்
நம்பெருமாளின் பவித்ரோத்ஸவம்
ஐந்தாம் திருநாள் புறப்பாடு காணொளி வெளியிடப்பட்டிருந்தது...

ஆகா!.. பவித்ரம்.. பவித்ரோத்ஸவம்!.. - என, மனம் ஆனந்தக் கூத்தாடியது...

அரங்கனின் அடியார்கள் -
திவ்ய தரிசனம் - எனும் பெயரில்
திவ்ய தேசங்கள் பலவற்றிலும் நிகழும்
மகத்தான வைபவங்களின் திருக்காட்சிகளை
பலரும் அறியத் தந்து கொண்டிருக்கின்றனர்...

அரங்கனின் அடியார் தமக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!

யான் பெற்ற இன்பமாக
அந்தக் காணொளியினையும் காட்சிகளையும்
இன்றைய பதிவினில் தந்துள்ளேன்....


பவித்ர மாலையுடன்
பரமனின் திருக்கோலங்கள்..

ஸ்ரீ கோதண்டராமர் - திருப்பதி
கண்ணார்க் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர்த் தொழும் வேங்கட மாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே!.. (1038)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள்
வானமாமலை
ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திருஅல்லிக்கேணிக் கண்டேனே.. (1069)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி - ராஜ மன்னார்குடி
ஸ்ரீ தலசயனப்பெருமாள் - திருக்கடல்மல்லை
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என்நாயகனே.. (1100)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் - திருவதிகை
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றா முன்துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள்தந்திடு என்எந்தை பிரானே..(1549)
-: திருமங்கையாழ்வார் :-

ஸ்ரீ அரங்கநாதன்
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனையான் கண்டது தென்னரங்கத்தே.. (1406)
-: திருமங்கையாழ்வார் :-
***
அடியார் அனைவரையும் 
அரங்கன் 
ஆதரித்தருள்வானாக!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

சனி, ஆகஸ்ட் 25, 2018

ஓங்கி உலகளந்த...

வேண்டும்..

நிறைய வேண்டும்... 

செல்வம் நிறைய வேண்டும்...

அதுவும் நீங்காத செல்வமாய் நிறைய வேண்டும்...

அதற்கு பசுக்களும் காளைகளும் வேண்டும்!...

பெருந்திறலுடைய காளைகள் .. இவற்றோடு,
பெருந்திருவுடைய பசுக்கள்...

பெருந்திருவுடைய பசுக்கள் என்றால் - வடிவத்திலா!...

வடிவத்தில் அல்ல... வள்ளல் தன்மையில்!..

தன்னைப் புரப்பவன் 
தனது பருத்த மடியின் காம்பினைப் பற்றிய அந்த நொடியில் -  

கன்றுக்கென ஒரு துளியும் தான் வைத்துக் கொள்ளாமல்
அவன் பற்றியிருக்கும் குடத்தினை நிறைத்துத் தரும் 
வள்ளல் தன்மையில் வழுவாத பெரும் பசுக்கள்!...

ஆகா.. அவ்வளவு தானா!...

இன்னும் இருக்கின்றதே...

பூங்குவளையின் இதழ்களினூடாகப் புகுந்த வண்டு 
அதனுள் துளிர்த்திருக்கும் தேனை மாந்தித் திளைத்து
எழுந்து பறந்திட மனமின்றி தூங்கிக் கிடக்கின்றதே - 
அத்தன்மையான வன வளம்!...

ஆகா!...

இன்னும் கேள்... 

ஓங்குபெருஞ் செந்நெற் கழனி!... 
அக்கழனிக்குள் காலளவுக்குத் தெள்ளிய நீர்... 
அதற்குள் இரை தேடி உழக்கித் திரியும் கயற் கூட்டம்!...
இத்தன்மையான வயல் வளம்!...

ஓ!...
இத்தனைக்கும் மாரி வளம் வேண்டுமல்லவா!..

ஆமாம்...
ஒரு மாரி அல்ல..
இரு மாரி அல்ல!..
திங்கள் தோறும் தீங்கில்லாத மும்மாரி!...

அத்தகைய மழைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?...

மரங்களை வெட்ட மாட்டோம்..
காடு கரைகளை அழிக்க மாட்டோம்.. - என,
விரதம் மேற்கொள்ள வேண்டும்!...

அது பாவை நோன்பு எனப்படும் காத்யாயனி விரதம்...

காத்யாயனி ஆனவள் ஸ்ரீதுர்காபரமேஸ்வரி...
அவளை ஆன்றோர் நந்தினி என்றும் போற்றுவர்..

ஏனெனில் அவள் நந்தகோபனின் இல்லத்தில் உதித்ததனால்!..

இந்த நந்தினியை - துர்காபரமேஸ்வரி - எனும் காத்யாயனியை நந்தகோபன் தன் குமாரனின் பேர் பாடிப் பரவ வேண்டும்!...

அவன் உத்தமன்...

உலகளந்த உத்தமன்.. அதுவும் ஓங்கி உலகளந்த உத்தமன்!...

ஓங்கி உலகளந்த உத்தமனாகிய, அவன் தான் - 
வாமனனாக வந்து மாவலியின் யாகசாலையில்
மூன்றடி மண் கேட்டு இரந்து நின்றவன்!...

ஓங்கி உலகளந்த உத்தமன் வாமனனாகத் தோன்றிய நாள் இன்று!...

ஆவணி மாதத்தின் திரு ஓணம்!...


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!...

ஆண்டாளும் ஆழ்வார்களும் பாடியருளிய 
திருப்பாசுரங்களில் மட்டுமல்லாது

தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருப்புகழிலும் கூட,
மாவலியிடம் மண் கேட்டு - ஓங்கி உலகளந்த புகழ் பரவிக் கிடக்கின்றது....

ஸ்ரீஹரிபரந்தாமன் மாவலியிடம் வந்து மண் கேட்கும் அளவுக்கு அவன் செய்த புண்ணியம் தான் என்ன!...

இதோ - அதனை அப்பர் பெருமான் குறித்தருள்கின்றார்...


நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.. (4/49)

சிவாலயத்தின் தீபத்தைத் தூண்டி விட்ட புண்ணியம்!...

அந்த புண்ணியத்தைச் செய்தது ஒரு எலி!...

அதுவும் பக்தியால் அல்ல... பசியால்!...

பசிக்கு இரை தேடி வந்த எலி -
நெய்யினைத் தீண்டுவதாக அங்கிருந்த தீபத்தைத் தூண்டி விட்டது...

அதனால் தீபம் கனிந்து சுடர் விளங்கியது..

அதன் பொருட்டு மகிழ்வெய்திய எம்பெருமான்
மாவலி எனும் மன்னனாகப் பிறக்க வரமளித்தான்...

இந்த மாவலியிடம் மூன்றடி கேட்டு 
வாமனனாக வந்த ஸ்ரீஹரிபரந்தாமன்
மாவலியின் புண்ணியத்தால் 
அவனது தலையில் திருவடியை வைத்து
பாதாள லோகத்துக்கு அதிபதியாக ஆக்கி வைத்தான்..

வைகுந்தத்தின் திருக்காவலர்களாகிய 
ஜய, விஜயர் - சனகாதி முனிவர்கள் இட்ட சாபம் தீர்வதற்கு
ஹிரண்யன், ஹிரண்யாட்சன் - என, பிறப்பெடுத்ததுவும்
ஹிரண்யனின் மகனாக ஸ்ரீ ப்ரகலாதன் தோன்றியதுவும்
இந்த மாவலியின் குலத்தில் தான்!...

இப்படி - மாவலியை ஆட்கொண்டருளிய
வாமனப் பெருமான் திரு அவதாரமுற்ற நாள்
ஆவணித் திருவோணம்..
***

இன்றைய பதிவில்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
திருமங்கையாழ்வார் 
அருளிச் செய்த திருப்பாசுரங்கள்...


ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவையாறும் இசைகளேழும்
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும்
காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே.. (1178)

கண்டவர்தம் மனம்மகிழ மாவைதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளும் எல்லாம்
அளந்தபிரான் அமருமிடம் வளங்கொள் பொழிலயலே
அண்டமுறும் முழவொலியும் வண்டினங்கள் ஒலியும்
அருமறையின் ஒலியும்மட வார்சிலம்பின் ஒலியும்
அண்டமுறு மலைகடலின் ஒலிதிகழு நாங்கூர் அரிமேய
விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே.. (1242)


வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடியினை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கைநன் நடுவுள் செம்பொன் செய்கோயிலினுள்ளே
உயர்மணி மகுடம் சூடிநின்றானைக் கண்டு உய்ந்தொழிந்தேனே.. (1271)

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்பொல்லாத
குறளுருவாய்ப் பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி அதனுள் புக்கு மண்ணகலம்
குறையிரந்த மைந்தன் கண்டீர்
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றி அம்பலத்தென் செங்கண்மாலே.. (1184)


மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலிதொ லைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையிரந்தாய்
துண்ணெண மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களைகணீயே.. (1299)

ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ் குயில்கள் அரியரி என்றவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே.. (1344)


தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்துதோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன்கொண்ட மூவாவுருவினன் அம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.. (1722)

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடுங் கொண்டு
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத்து அணிமலர்ப் பீடத்து அலைபுனல் இலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரியசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே.. (1752)
-: திருமங்கையாழ்வார் :-
***

குருநாதராகிய 
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
திருத்தோற்றமுள்ள நன்னாள் - இன்று...

25 ஆகஸ்ட் 1906
குருநாதர் மலரடிகள் போற்றி.. போற்றி..
***

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய:
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

மலரின் மேவு திருவே..



காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு!.. 

வாஸ்தவத்தில் இருக்கிறவள் ஒரு பராசக்திதான்!.. 
அவள்தான் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த விதமாக
அநுக்ரஹம் செய்து பக்குவத்தைத் தரவேண்டுமோ - 
அப்படிச் செய்வதற்காக

மஹாலக்ஷ்மியாக 
ஸரஸ்வதியாக 
ஞானாம்பிகையாக வருகின்றாள். 

ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வந்து விட்டால் போதும். 
அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். 

இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம். 
அதுவே மஹாலக்ஷ்மி!

ஸ்ரீ ரங்கநாயகி, திருஅரங்கம்
நிலைத்த செல்வங்களைப் பெறுதற்கும் 
பெற்ற செல்வங்கள் நிலைப்பதற்கும் ஆகிய
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி..

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரம்ஹ ஸ்வரூபிணி 
யசோ தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே

தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே 
தான்யம் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே  

வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே 
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூபிணி 
அஸ்வாம் ச கோகுலம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 

ஸ்ரீ பத்மாவதி, திருச்சானூர்
சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ர பெளத்ர ப்ரதாயினி 
புத்ராந் தேஹி தனம் தேஹி  ஸர்வகாமாம் ச  தேஹிமே 

ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி 
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ஹ வித்யா ஸ்வரூபிணி 
வித்யாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 

தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து சர்வ தாரித்ரிய நாசினி 
தனம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம் ச  தேஹிமே 


மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே 
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மே சதா 

ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே 


மலரின் மேவு திருவே - நின்மேல்
மையல் பொங்கி நின்றேன்
நிலவு செய்யும் முகமும் காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் தெய்வ
களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்!..

கமலமேவு திருவே நின்மேல்
காதலாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே பெற்றோர்
கோடி இன்பமுற்றார்
அமரர் போல வாழ்வேன் என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமய வெற்பின் மோத நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்!..


செல்வம் எட்டும் எய்தி - நின்னால்
செம்மை ஏறி வாழ்வேன்
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி
எல்லை யற்ற சுவையே - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்!..
-: மகாகவி பாரதியார் :-


இன்று ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்...

அனைத்து 
மங்கலங்களையும் அருள்பவளே!..  
மஹாலக்ஷ்மி.. 
உன்னைச் சரணடைகின்றேன்!.. 

சுமங்கலியே.. 
சுபம் வழங்கியருள்க!.. 
செந்தாமரைத் திருவே.. 
செல்வங்களை வழங்கியருள்க!.. 

திருவே.. திருவிளக்கே!.. 
உன் திருவடிகளுக்கு வணக்கம்!..

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
***