நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 31, 2015

சக்தி தரிசனம் - 3

தவமும் தவமுடையார்க்கே ஆகும்!..

- என்றார் திருவள்ளுவப்பெருமான்..

மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்!..

என்றார் தமிழ் மூதாட்டி..

தவமாய்த் தவமிருந்து பெறுதற்கரிய செல்வத்தினை - பெற்றாள் அவள்!..
- எனில் எத்தகைய தவத்தினை அவள் இயற்றியிருக்க வேண்டும்!..

அதுவும், மேலைத் தவமும் தவத்தின் பயனும் கூட வந்திருந்தது போலும்..


ஒரு காலத்தில் இமயமலையின் அரசன் இமவானின் மகளாக அம்பிகை பிறந்திருந்தாள்.. அவன் மடியில் தவழ்ந்திருந்தாள்.. .

அப்போது அவளுடைய திருப்பெயர் உமா பார்வதி..

இமவானும் அவனது இல்லத்தரசி மேனையும் - சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள் - அவளை!..

வளர்ந்து வருங்காலத்தில் - ஒருநாள்,

நான் தவம் செய்து சிவத்தினை அடைவேன்!.. என்றாள்..

அன்பு மகளே!.. தவம் என்றால் என்னவென்று அறிவாயோ நீ!.. அது மிகவும் கடுமையானது.. மனப்பூர்வமான பக்தியும் மகேசனின் அருளைக் கூட்டுமே!..

அந்தவழி மானிடர்க்கு!.. நான் தவள்.. மாத்தவள்!.. - என்றுரைத்தாள்.

அங்ஙனமாயின் அதுவே சிவம் காட்டும் வழியாகட்டும்!..  என மொழிந்தனர்..

அதன்பின் - இமயகிரி ராஜ தனயை - தவமாய்த் தவமிருந்தாள்..

பசிக்கு ஆதரவாக ஒரு இலையைக் கூட உண்ணாமல்
தாகத்திற்குத் துணையாக ஒரு துளி நீரைக் கூட அருந்தாமல்
இமயத்தின் கடுங்குளிருக்கு எதிராக ஒரு சால்வையைக் கூட அணியாமல் -

உமையாள் இயற்றிய தவம் மிகக் கடுமையானது.

அதனால் தான் அவள் -  அபர்ணா எனப்பட்டாள்..

யோகியரும் ஞானியரும் கூடி நின்று போற்றி வணங்கினர்


நல்லதொரு நாளில் - சிவப்பரம் பொருளுடன் திருமணக்கோலங்கொண்டாள்..

அதன்பின் வேறொரு சந்தர்ப்பத்தில் - ஈசன் எம்பெருமானின் திருக்கோலம் ஒன்றினைத் தரிசிக்க விழைந்த அம்பிகை - தவக்கோலங்கொண்டாள்..

அன்றைக்காவது அப்பன் அம்மை என -  இமவானும் மேனையும்.. குற்றேவலுக்கு உற்ற தோழியரும் அருகிருந்தனர்..

ஆனால் - இன்றைக்கோ - அம்பிகையின் அருகில் யாருமே இல்லை!..

தானாய் தோன்றினள் தற்பரை - தாமிரபரணியின் வடகரையில்!..

அந்த புன்னை வனத்தில் ஒன்று பலவாய் - பாம்புகள்..

இவைகளும் தங்களுக்குள் ஓயாமல் சீறிக் கொண்டிருந்தன.

இவற்றுக்குத் தலைமையாக சங்கன் எனவும் பதுமன் எனவும் இரு நாகங்கள்..

இவற்றுக்கிடையே என்ன பிரச்னை!?..

சங்கன் - சிவபெருமானை முதற்பொருளாகவும்,
பத்மன் - ஹரிபரந்தாமனை  முதற்பொருளாகவும் வழிபட்டுக் கொண்டிருக்க -

அவற்றுக்கிடையே தகராறு - ஹரனே உயந்தவர்.. இல்லை.. இல்லை.. ஹரியே உயர்ந்தவர் - என்று!..

சிற்றுயிர்களின் அன்பினைக் கண்டு மனம் இரங்கினர் - ஹரியும் ஹரனும்..

ஹரியே ஹரன்!.. ஹரனே ஹரி!.. தம்முள் பேதம் எதுவும் இல்லை!.. - என உரைத்தனர்..

அந்த பொழுதில் நாகங்களுக்கு ஆறுதல் கிடைத்தது என்றாலும் அடுத்த பொழுதில் - மீண்டும் அடிதடி ஆரம்பமாயிற்று..

அதைக் கண்ட முனிவர்கள் சினத்துடன்,

ஒற்றைச் சொல்லால் உண்மை உரைக்கப்பட்டும் உணர்ந்து கொள்ளாத மூர்க்கத்தினால் - சிவ விஷ்ணு பேதம் உண்டு என - புன்மை புகன்ற உங்கள் நாக்கு இருகூறாக பிளவுபட்டுப் போகட்டும்!..

- என சாபம் கொடுத்தனர்.

அதிலிருந்து தான் பாம்புகள் அனைத்தும் பிளவுபட்ட நாவுடன் அலைகின்றன.

இவைகளுக்கு சாப விமோசனம் வேண்டுமே!..

நாகங்களும் மனம் வருந்தின.. தங்கள் பிழையை உணர்ந்தன..

அந்த வேளையில் தான் பரமேஸ்வரியாகிய உமாபார்வதி - அந்தப் புன்னை வனத்தினுள் தவமிருக்க வந்தாள்..

அம்பிகையின் தவநிலையைக் கண்டு அவளுக்கு ஆதரவாக தேவ கன்னியர் பசுக்களாக உருமாறி வந்து சூழ்ந்து நின்றனர்..

அம்பிகை - புன்னை வனத்தில் தவம் மேற்கொண்டது ஆடி மாதத்தில்..
அங்கே ஒன்பது நாட்கள் கடுந்தவமிருந்ததாக ஐதீகம்..

பத்தாம் நாள்.. பௌர்ணமி..

உள்ளக்கிழியில் உரு எழுதிக் காத்திருந்தாள் - அம்பிகை..

எதை எண்ணிக் காத்திருந்தாள் - அம்பிகை?..

அண்ணலும் அண்ணனும் ஏக உருவில் வந்து அருள் தர வேண்டும்!..
சங்கர நாராயணத் திருக்கோலத்தினைத் தரிசிக்க வேண்டும்!..

அம்பிகையின் ஆவல் - ஆடி மாதத்தின் பௌர்ணமி நாளில் நிறைவேறியது..

சந்த்ரோதய வேளையில் - அண்டபகிரண்டமும் அதுவரை கண்டிராத அற்புதத் திருக்கோலத்தினைத் தரிசித்தனள் அம்பிகை..


தேவர்களும் முனிவர்களும் பொன்மலர்களைப் பொழிந்து வணங்கினர்..

நின் தவங்கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் வேண்டுவன கேள்.. தேவி!..

யான் பெற்ற பேறாக.. தேவரீர் - இந்தப் புன்னை வனத்தினுள் எழுந்தருள வேண்டும்.. ஏங்கி இளைத்து வருவோர் தம் எண்ணங்கள் நல்ல வண்ணமாக ஈடேற வேண்டும்.. சிற்றுயிர்களாகிய நாகங்கள் சீர் பெறவேண்டும்!..

வேண்டிக் கேட்டு நின்றாள் - வேத வேதாந்தங்களைக் கடந்த நின்மலி..

ஆகும்.. அவ்வண்ணமே ஆகும். ஆனாலும் -  திருக்கோலத்தினை உரைத்த பின்னும் நாகங்கள் பேதங்கொண்டு பிதற்றித் திரிந்ததனால் - நாக்கு பிளவு பட்டது.  கடையூழி வரைக்கும் உழன்று கிடக்கும் நாகங்களின் நிலை கண்டு உலகோர் திருந்தட்டும்..

ஆயினும் நாகங்களை யாம் ஆட்கொண்டோம்!. அவை கிடந்த புற்றுமண் இங்கே பிரசாதமாகி நலம் நல்கும்!..

அம்பிகை மனம் மகிழ்ந்தாள்.. வலம் வந்து வணங்கினாள்..

சங்கர நாராயணராகப் பொலிந்த எம்பெருமான் சங்கரலிங்க வடிவு கொண்டு திகழ்ந்தனன்..

அம்பிகை அகம் மகிழ்ந்து - ஆங்கெழுந்த ஜோதியுள் கலந்து சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபினியாக திருக்காட்சி நல்கினள்..

பசுக்களுடன் கூடியிருந்தமையால் - ஆவுடை நாயகி எனப்பட்டாள்..

பின்னும் - பசுக்கள் தம் சிந்தையில் வைத்து அம்பிகையை பூஜித்ததால் -
கோமதியாள் எனவும் புகழப்பட்டாள்..

நாகங்கள் உண்மையை உணர்ந்தன.. திருக்குளம் ஒன்றினை அமைத்தன.
அதில் நீரெடுத்து தேவதேவியரை நீராட்டி மனம் மகிழ்ந்தன..

அன்றிலிருந்து திருத்தலம் - சங்கர நாராயணர் திருக்கோயில் எனப்பட்டது.

இன்றைக்கு - சங்கரன்கோயில் என சிறப்புறு தலமாக விளங்குகின்றது..

திருநெல்வேலிச் சீமையின் புகழ்மிகும் திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..


திருத்தலம் - சங்கரன்கோயில்

இறைவன் - ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான்
இறைவி - ஸ்ரீகோமதி அம்பாள்
தலவிருட்சம் - புன்னை
தீர்த்தம் - நாகசுனை எனும் திருக்குளம்.

ஈசன் எம்பெருமான் - வலப்புறம் -  கங்கை, பிறைநிலவு, ஜடாமுடி.
திருக்கரத்தில் மழுவும் திருமார்பில் ருத்ராட்ச மாலையும் திகழ்கின்றன.  அரையில் புலித் தோலாடை இலங்குகின்றது.

அருகில் - சங்கன் சேவை செய்கின்றான்..

பெருமானின் இடப்புறம் - நாராயண வடிவம்.. திருமுடியில் கிரீடம்.
திருக்கரத்தில் சங்கும் திருமார்பில் துளசி மாலையும் திகழ்கின்றன.   அரையில் பீதாம்பரம் இலங்குகின்றது.

அருகில் - பத்மன் சேவை செய்கின்றான்..

காலை உஷத் கால பூஜையில் துளசி தீர்த்தமும் அதற்கடுத்த பூஜைகளில் திருநீறும் வழங்கப்படுகின்றன..

திருக்கோயிலில் மகத்தானது - புற்று மண் பிரசாதம்..

இந்த புற்று மண் சகல விஷக்கடிகளையும் தீர்க்கின்றது என்பது ஐதீகம்.. 

பௌர்ணமியைப் பத்தாம் நாளாகக் கொண்டு ஆடித் தபசு எனும் வைபவம் நிகழ்கின்றது..


கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் - நாளும் ஒரு திருக்கோலம் கொண்டு அன்னை வீதி வலம் வந்தருளினள்..

ஆடித் தவசு திருக்காட்சிக்கு முந்தைய நாள் காலையில் முளைப்பாரி.. அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பிகை வீதியுலா..

முளைப்பாரிக்கு முதல்நாளில் - கோமதி தேரேறி வந்தாள்..

அம்பாளுக்குரிய வைபவம் என்பதால் அவள் மட்டுமே வீதிவலம்..
அன்றிரவு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் வீதியுலா..

பௌர்ணமியை அனுசரித்து நிகழும் திருவிழாவில் -
முளைப்பாரிக்கு அடுத்த நாள் ஆடித் தவசு திருக்காட்சி..


இவ்வண்ணமாக - நேற்று வியாழக்கிழமை மாலை ஆடித் தவசு திருக்காட்சி கோலாகலமாக நிகழ்ந்தது..

மாலை ஆறு மணியளவில் - ஸ்வாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி - கோமதி அன்னைக்குத் திருக்காட்சி அருளினார்..

அதன்பின் - இரவு ஒன்பது மணியளவில் எம்பெருமான் சங்கரலிங்க ஸ்வாமியாக யானை வாகனத்தில் எழுந்தருளி - மீண்டும் அம்பிகைக்குத் திருக்காட்சி நல்கினார்..

ஆயிரமாயிரம் பக்தர்கள் திருக்காட்சி கண்டு மகிழ்ந்தனர்..

தென்பாண்டிச் சீமையில் ஊர்கள் தோறும் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழும் பெயர்களுள் குறிப்பிடத்தக்கவை -

சங்கரலிங்கம் - கோமதி

ஆடித்தவசு வைபவத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை எனில் விழாவின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்..

வீட்டின் சுற்றுப்புறங்களில் பாம்புகள் புழங்கினால் - திருக்கோயிலின் புற்று மண் பாதுகாப்பு ஆகின்றது. புற்று மண்ணைத் தூவினால் வீட்டைச் சுற்றித் திரியும் பாம்புகள் அகன்று போகின்றன..

நாக சுனை தீர்த்தத்தில் உப்பையும் சர்க்கரையையும் வீசினால் - கஷ்டங்களும் கவலைகளும் தீர்கின்றன..

அம்பாள் சந்நிதி எதிரே ஸ்ரீசக்கரக் குழி உள்ளது. இங்கே அமர்ந்து அம்மனை வழிபட மன நோயும் கவலையும் குழப்பமும் தீர்கின்றன..


மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்றிருக்கும் சங்கரன் கோயில் - சிறப்பான திருத்தலம் ஆகும்..

தேவாரத் திருப்பதிகங்கள் இத்திருத்தலத்திற்கு என எதுவும் இல்லை.
எனினும் ஏதோ ஒரு திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை..

ஈசனின் வாம பாகத்தில் அம்பிகை குடி கொண்டிருப்பது போலவே, நாராயணனும் குடிகொண்டுள்ள திருக்கோலத்தை - திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப்பெருமானும் பலவாறாகப் புகழ்கின்றனர்..

மறிகடல் வண்ணன் பாகா!.. (4/62) - என்று மதுரையம்பதியிலும்

மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி!. (4/22) - என்று தில்லையிலும்

குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்!.. (6/81) என்று திருக்கோடிகாவிலும்

சிவபெருமானின் சங்கர நாராயணத் திருக்கோலத்தினைப் போற்றுகின்றார் அப்பர் ஸ்வாமிகள்..

பாதியா உடல் கொண்டது மாலையே!.. (3/115) - என்று மாமதுரையிலும்

மாலும் ஓர் பாகம் உடையார்!.. (2/67) - என்று பெரும்புலியூரிலும் ஞானசம்பந்தப் பெருமான் சங்கர நாராயணத் திருக்கோலத்தைப் புகழ்கின்றார்..

ஈசனுக்கு இடப்புறம் ஹரிபரந்தாமன் எனில் -
பரந்தாமனின் வலப்புறம் ஈசன் எம்பெருமான் தானே!..

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து.. (1186) என்றும்

மலைமங்கை தன் பங்கனை பங்கினில் வைத்து உகந்தான்!.. (1640) என்றும் திருமங்கை ஆழ்வார் புகழ்கின்றார்...


தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)

- என்று பேயாழ்வார் சங்கர நாராயண திருக்கோலத்தைப் போற்றுகின்றார்..

இதே போல -

அரன்நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்தி
உரைநூல் மறைஉறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
உருவம் எரிகார்மேனி ஒன்று.. (2086)

மிகத் தெளிவாக பொய்கை ஆழ்வார் சங்கர நாராயண திருக்கோலத்தை  நமக்குக் காட்டுகின்றார்..

ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளியாகிய இன்று

சங்கர நாராயணத் திருக்கோலத்தை 
தரிசனம் செய்து வைக்கின்றாள்..
சகல உயிர்களுக்கும் தாயாகி நிற்கும் 
தயாபரி ஸ்ரீ கோமதி..

ஓம் சக்தி ஓம் 
* * * 

புதன், ஜூலை 29, 2015

இனியொரு முறை...

நெஞ்சம் இன்னும் அமைதி பெறவில்லை..

நேற்று முதல் நிம்மதியான உறக்கமும் இல்லை..

அரிது.. அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!.. - என்றார் ஔவையார்..

அப்படிப் பிறந்தாலும் ,

அப்துல் கலாம் அவர்களைப் போல் வாழ்வது அரிது..


சென்று வருக.. ஐயா.. சென்று வருக!..
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் ஸ்ரீ ஜன்பால்சிங் -  தனது Facebook - பக்கத்தில் - கலாம் அவர்களின் கடைசி நிமிடங்களைப் பதிவிட்டுள்ளார்..

அதிலிருந்து ஒரு பகுதி..

ஜூன் 27.

குவாஹாத்திக்கு ஒன்றாக விமானத்தில் புறப்பட்டபோது பகல் மணி 12.


டாக்டர் கலாம் அவர்கள் 1-ஏ , எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்தார்.. அவர் அடர் நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்.

நல்ல நிறம்!.. என, அவரிடம் - அவரது ஆடையைச் சுட்டிக் காட்டி சொன்னேன்.

அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை - அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நேரம் என்று!..


அப்துல் கலாம் அவர்களுடன் - ஸ்ரீஜன்பால் சிங்
விமானத்தில் இரண்டரை மணி நேரப் பயணம்..
அதன் பின் அங்கிருந்து ஷில்லாங் - ஐ. ஐ. எம். நோக்கி - காரில் மீண்டும் இரண்டரை மணி நேரப் பயணம்..


விமானம், கார் - என பயணமே ஐந்து மணி நேரத்தை விழுங்கி விட்டது. ஆனாலும் - பயணத்தின் போது நிறைய பேசினோம்..

பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.. 

அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. 

அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ. ஐ. எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு -

வாழ்வதற்கு உகந்த பூமி..

பஞ்சாப் சம்பவத்தையும் அவர்  பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம் அவர்கள் - 

மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்தப் பூமியை வாழ்வதற்குத் தகுதி அற்றதாக மாற்றி வருகின்றன.

வன்முறையும் சுற்றுச்சூழல் மாசும் சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் முப்பதாண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்..

இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் எதிர்காலம் உங்கள் கைகளிலே இருக்கின்றது - என்றார்.

அதற்கு அடுத்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியானது.


அவரது பண்பாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு..

எங்கள் வாகனத்திற்குப் பாதுகாப்பாக ஆறு வாகனங்கள் வந்தன. 
நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம்.

எங்களுக்கும் முன்னதாகச் சென்ற ஜிப்ஸி வாகனத்தில் மூவர் இருந்தனர். இருவர் அமர்ந்திருக்க ஒருவர் நின்றபடியே பயணித்தார். 

ஒருமணி நேரப் பயணம்.. 

அவர் ஏன் நின்று கொண்டே வருகிறார்?.. அவர் சோர்ந்து விடுவார். அவருக்குத் தண்டனை போல் இருக்கின்றதே.. ஏதாவது செய்யுங்கள்.. ஒயர்லெஸ்ஸில் தகவல் அனுப்பி அவரை உட்காரச் சொல்லுங்கள்... 

- என, கலாம் அவர்கள் என்னிடம் கூறினார்.

நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன்.. ஆனால் கலாம் அவர்கள் சமாதானம் அடையவில்லை. 

ரேடியோ கருவி மூலமாக தகவல் அனுப்ப முயன்றோம். 
அது சரிப்பட்டு வரவில்லை.. 

அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தின் போது ஷில்லாங் சென்றதும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!... - என மூன்று முறையாவது கூறியிருப்பார்..

ஷில்லாங் சென்றதும் அந்த வீரரைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்துச் சென்றேன்..

பாதுகாப்பு படை வீரருக்கு நன்றி
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம் அவர்கள் - சோர்வாக இருக்கின்றாயா?.. ஏதாவது சாப்பிடுகின்றாயா?.. எனக்கேட்டார்.

எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி விட்டது. அதற்காக நான் வருந்துகின்றேன்!.. - என்றார்..

அதைக்கேட்டு வியந்த - அந்த வீரர் ,
சார்.. உங்களுக்காக நான் ஆறு மணி நேரம் கூட நிற்பேன் !.. என்றார்..

அதன்பிறகு கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம். 

அவர் எப்போதுமே குறித்த நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர்.  மாணவர்களைக் காக்க வைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்..

அவருக்காக ஒலிபெருக்கியைச் சரி செய்து -கருத்தரங்கு குறித்து சுருக்கமாகக் குறிப்பு வழங்கினேன்.. 

மேடையில் ஏறி இரண்டு நிமிடங்களே பேசியிருப்பார்.. நீண்ட இடைவெளி.. 

நான் அவரைப் பார்க்க - அவர் கீழே சரிந்தார். நாங்கள் அவரைத் தூக்கினோம். 

மருத்துவர்கள் விரைந்து வந்தனர். 
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். 

ஒரு கையால் அவரது தலையைத் தாங்கியிருந்தேன்.. 

பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசி பார்வையை என்றென்றைக்கும் மறக்க இயலாது. 

எனது கையை இறுகப் பற்றி - என் விரல்களைத் தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டார்.. 

அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது.. அவர் எதுவும் பேசவில்லை.. 
வலியை சிறிதும் காட்டவில்லை.. அவரது கண்களில் ஞானஒளி வீசியது.

ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் மருத்துமனையை அடைந்திருந்தோம்.

ஆனால் - அப்போதே ஏவுகணை நாயகன் விண்ணில் பறந்திருந்தார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

எனது மூத்த நண்பருக்கு எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன்..

உங்கள் நினைவுகள் என்னை விட்டு நீங்காது. அடுத்த பிறவியில் சந்திப்போம்.

Facebook-ல் வந்ததை ஓரளவு சுருக்கமாக பகிர்ந்துள்ளேன்..
* * *
சகோதரருடன் கலாம் அவர்கள்
அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கினை சொந்த ஊரில் நடத்தப்பட வேண்டுமென - அவரது சகோதரர் குடும்பத்தினரும் உறவினர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அந்த அளவில் - அப்துல் கலாம் அவர்களின் பூத உடலைச் சுமந்து கொண்டு தலைநகரிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் புறப்பட்ட தனி விமானம் - பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது..

தமிழக அரசின் சார்பில் மாநில ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்..

அஞ்சலிக்குப் பின் - அப்துல் கலாம் அவர்களின் பூதவுடலைச் சுமந்து கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் ராமேஸ்வரம் நோக்கிப் பறந்தது.

புன்னகை ததும்ப இன்முகம் காட்டிச் சென்ற தங்கமகன் பூமாலைகளுடன் சடலமாக வந்து இறங்கிய கொடுமையை எண்ணிக் கண்ணீர் வடித்து நிற்கும் மக்களின் அஞ்சலிக்காக - அப்துல் கலாம் அவர்களின் பொன்னுடல் - 

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மைதானத்தில் இரவு எட்டு மணி வரைக்கும் வைக்கப்பட்டிருக்கும்..

அதன் பின் - கலாம் அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

நாளை (27) காலை எட்டு மணியளவில் - அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா - பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைக்குப் பின்,
ராமேஸ்வரம் - தங்கச்சி மடம் சாலையில் உள்ள அரசு நிலத்தில் நல்லடக்கம் நடைபெறுகின்றது..

பொக்ரான் குண்டு வெடிப்பு
குடியரசுத் தலைவராக பவனி
சாலையோர உணவகத்தில் எளிய உணவு

கோடிக்கணக்கான மக்களின் கண்ணிலும் கருத்திலும் கலந்திருந்த அப்துல் கலாம் அவர்கள் -

தாய் மண்ணில் - தாயின் மடியில் அடைக்கலம் ஆகின்றார்..


பொன்னுடல் நீங்கி புகழுடல் ஆனது..

மண்ணிலிருந்து மாமனிதர் மறைந்தாலும் 
கண்ணிலிருந்தும் கருத்திலிருந்தும் 
எண்ணங்களிலிருந்தும் மறைவதேயில்லை..
எழுச்சிமிகும் பாரதத்தின் இளையோர் மத்தியில் 
அவர் என்றென்றும் திகழ்ந்திருப்பார் - 
அக்னிச் சிறகுகள் கொண்ட அன்பின் பறவையாக!..

என்றும் தங்கள் நல்லாசிகளுடன்!..
இனியொரு முறை.. இனியொரு முறை..
இப்படியொரு பண்பாளரைக் காண இயலுமா!?..
கண்ணுக்கெட்டிய தொலைவிற்கும் தெரியவில்லை!..

வையம் உள்ளளவும் புகழ் கொண்டு வாழ்வார்!..
* * *

செவ்வாய், ஜூலை 28, 2015

அமைதியைத் தேடி

அக்னிச் சிறகுகளை விரித்தபடி 
அந்தப் பறவை - அமைதியைத் தேடி - பறந்து விட்டது..


நம்ப முடியவில்லை..

கண்ணால் செய்திகளைப் பார்த்தும் கூட மனம் நம்ப மறுக்கின்றது..

இவர் தமக்கும் மரணம் உண்டா!.. - என்று மறுகுகின்றது..நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி.. 
பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர்.. 

அதையெல்லாம் விட - தாய் நாட்டின் பெருமையை - 
மாற்றாரும் வியந்து நோக்கும்படிச் செய்த வித்தகர்..

மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானார். 

பாரதத் தாய் - தனது தவப்புதல்வனை இழந்து பேச மொழியின்றி தவிக்கின்றாள்..

இனி - இப்படியொரு புதல்வனை என்று காண்பளோ!..அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். 

அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் - பலனின்றி உயிர் பிரிந்தது.. 

ஏழு நாட்களுக்கு நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

வாழும் காலத்தில் புகழுடன் வாழ்ந்தவர்..எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்!.. - என்றார்!..

தன்னுடைய இயல்பான எளிமையினால் - அன்பான மொழியினால்,
காலங்களைக் கடந்து - வானமும் வையமும் உள்ள அளவிற்கு நிலைத்திருக்கும் வாழ்க்கை அவருடையது..


கனவு காணுங்கள்.. 
அந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்!..

இளைஞர்களின் இதயங்களில் பதிந்த பொன்னெழுத்துக்கள் அவருடையவை..

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் (1981) பத்ம விபூஷன் (1990) பாரத ரத்னா (1997) - ஆகியன இவரால் பெருமை கொண்டன..

இன்னும் பற்பல விருதுகளும் இவரைத் தேடிவந்து - சிறப்பு பெற்றன

எளிய - மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்..
தன் விடாமுயற்சியால் - சிகரங்களைத் தொட்டவர்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!..
- என்பதற்குக் கண்கண்ட அடையாளம் - மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள்..

நாட்டின் முதற்குடிமகன் என்ற பெருமை அவரைத் தேடி வந்தது..

பதவிக் காலம் முடிந்த பிறகு - நான்கைந்து பெட்டிகளுடன் - ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியவர்..

அப்படிப்பட்ட ஒருவரை - அப்போதுதான் பாரதம் கண்டு வியந்தது..


அரசியலில் ஈடுபட்டதில்லை - அவர்..

ஆனாலும், அவர் தமக்கு ஆகவில்லை என்பதற்காக - பொங்கிப் புழுங்கினர் அரசியல்வாதிகள்!..

வாழ்ந்து முடித்த பிறகும் நினைவில் நிற்கும் வாழ்க்கை அவருடையது..

வானமும் வையமும் உள்ள அளவிற்கு பாரத மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்..மொழி கடந்து இனம் கடந்து - 
பெரியவர் - சிறியவர், படித்தோர் - பாமரர் என்றில்லாமல் -
பாரத மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இறுதி மூச்சு வரை அயராது மக்கள் பணியாற்றியவர்.

இந்த நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்தவர்.

வளரும் பிள்ளைகளிடமும் மாணவச் செல்வங்களிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர்.

அவ்வண்ணமாக - 
மாணவர்களிடம் பேசிக்கிட்டு இருக்கும்போதே புகழுடம்பு எய்தினார்..

இத்தகைய மரணம் இறையருள் பெற்றவர்க்கே வாய்க்கும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பெருமை..பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் திருப்பெயர் 
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

அவரது ஆன்மா - இறைநிழலில் 
அமைதியடைய வேண்டுகின்றேன்.. 
* * * 

ஞாயிறு, ஜூலை 26, 2015

வழித்துணை வராஹி

அன்னை.

அவளிடமிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது.

அவளே அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி!.. 

உயிர்கள் உய்வடைய வேண்டுமென்று அவளே கருக்கொண்டாள்!. 

பின்னர் -  அவளே அனைத்துமாக உருக்கொண்டாள்!.

''..பூத்தவளே!.. புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே!..'' -

என்பது அபிராமி பட்டரின் திருவாக்கு!...

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்தகோடி!...


அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் ஒன்றுதான் - ஸ்ரீவராஹி.

அம்பிகையை வழிபடுதற்கு நவராத்திரி நாட்கள்  மிகச்சிறந்தவை என்பர்.

அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே!..

எனினும் -  அமாவாசை அடுத்த ஒன்பது நாட்களும் சிறப்பானவை என்று ஒரு திருக்குறிப்பு உண்டு.  அந்த வகையில்  -

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் - சிறப்பானவை. 

ஆனால் - நாம் இல்லத்தில் கொண்டாடுவது சாரதா நவராத்திரியைத் தான்.

இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது.

இந்த ஆஷாட நவராத்திரியின் நாயகி - ஸ்ரீ வராஹி!..

அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் ஸ்ரீவராஹி..

தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள்.

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியாகத் திகழும் வராஹி - 
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்தில் இருந்து தோன்றியவள்..  

சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி.

அதனாலேயே - பச்சைப் பசுமைக்கு அதிபதியானவள்..    

வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

ஆதியில் இருந்தே விவசாயம் தான் ஆதாரத்தொழிலாக விளங்குவது. 

''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்பார் வள்ளுவப் பெருமான்!..

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..

வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?.. - என்றார் கவியரசர்..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதார தெய்வம்!..  

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம். உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  -

ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனும்  - ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில் -

அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரிய கோயிலில் தான் - ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு - இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

ஆஷாட நவராத்திரி நாட்களிலும் நடுநாயகமாகத் திகழும் ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - மிகச் சிறப்பான நாள்.

வேளாண்மைக்கு உரியதான ஏர் மற்றும் தொழிலுக்கு உரியதான உலக்கை இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின் திருக்கரங்களில் விளங்குகின்றன!..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் உண்டு.  

ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளுக்குத் தலைவி இவளே!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..

நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி.

ஸ்ரீவராஹியின் துணை கொண்டே -   குமரி முதல் நர்மதை வரை அரும்பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம். 

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை என வருபவள் ஸ்ரீ வராஹி!..

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி அல்லது மல்லிகை கொண்டு அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம்.

தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!.

தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!.

வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

சங்கு, சக்கரம், ஏர், உலக்கை (முசலம்), அங்குசம், பாசம் தாங்கிய திருக் கரங்களுடன் திகழும் ஸ்ரீ வராஹி அபயமும் வரதமும் அருள்பவள்.. 
இழிகுணத்தினை உடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிக்கும் உலக்கை (முசலம்) மற்றும் ஏழு படைக்கலன்களைத் தாங்கிய வராகி,

தங்கள் துன்பங்கள் தீர வேண்டும் என - தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றென்றும் ஓங்கி விளங்குகின்றாள் - என்பது திருமூலரின் திருவாக்கு!..

''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''

என்று புகழ்பவர் - அபிராமபட்டர்!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..

அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு - ஆனி 32 (ஜூலை 16) வியாழன்று காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது.

இன்றைய பதிவில் - ஆஷாட நவராத்திரி வைபவத்தின் சில நிகழ்வுகள்..

இத்திருவிழாவின் முதல் நாள் தொட்டு -

இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், சந்தனம் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்பட்டாள்...

அடுத்தடுத்த நாட்களில்  -

தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும், அலங்கரிக்கப்பட்டு வெண்ணெய் அலங்காரம் கொண்டும் திகழ்ந்தாள்.

ஊஞ்சலில் ஸ்ரீ வராஹி
கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொண்ட வராஹி அன்னைக்கு இன்று பூச்சொரிதல்!..

இன்று மாலை - கோலாகலமாக  திருவீதி எழுந்தருள்கின்றாள்.

நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய முழக்கங்களுடன் -

அலங்கார ரதத்தில் எழுந்தருளி - ராஜவீதிகளில் பவனி கண்டருள்கின்றனள். 

விழா நாட்களின் காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..

தொடர்ந்து - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.

மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவாறு நிகழ்ந்துள்ளன..

அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.

இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 


சென்ற ஆண்டு - இவளே முன் நின்று என் அன்பு மகளின் திருமண வைபவத்தை நடத்திக் கொடுத்தாள்..

சில மாதங்களுக்கு முன் - நல்லதொரு நாளின் இனிய பொழுதில் -

குடும்பத்தில் புதிய வரவான பேத்தி - செல்வி வர்ஷிதா சிவபாலனுடன்,

ஸ்ரீவராஹியின் திருப்பாதங்களில் புதுப்பட்டு சமர்ப்பித்து, அபிஷேக அலங்கார ஆராதனை - என, நன்றிக்கடன் செலுத்தி நின்றோம்..

அம்பிகைக்கு செலுத்தும் நன்றிக்கடன் இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றா!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் தவம்!..

இயன்ற போதிலெல்லாம், வீட்டில் - நெல் அல்லது பச்சைப்பயிறு கொண்டு கோலமிட்டு, நெய் விளக்கேற்றி வைத்து,

அதிக இனிப்புடன் கூடிய (பாயாசம்,கேசரி, ஜிலேபி போன்ற) பட்சணத்தினை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

யான் பெற்ற பேற்றினை அனைவரும் பெறுங்கள்!..

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வழித்துணை ஆகவும் வருவாள்!..
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வராஹி வாழ்க.. வாழ்க!..
* * *