நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 01, 2015

அன்னமிட்ட கைகள்

எதை எடுத்தாலும் பத்து ரூபா!.. எதை எடுத்தாலும் பத்து ரூபா!..

திருவிழாக் கூட்டத்தின் இரைச்சலிலும் அந்தக் குரல் தெளிவாகக் கேட்டது.


அதோ.. அதோ.. அந்தக் குஞ்சம் தான்!.. அதை எடுங்க.. அப்படியே.. அந்த ஊதா கலர் ரிப்பன்.. அதையும் எடுங்க!..

லெக்கின்ஸுக்கு ஆதரவா பெண்கள் கிளம்பியிருக்கும் இந்த வேளையில் - ஊதா கலர் ரிப்பனையும் குஞ்சத்தையும் காசு கொடுத்து வாங்குவது யார்!..

வேறு யார்!.. நம்ம தாமரை தான்!..

ஒத்தைச் சடையும் குஞ்சமும் ஊதாக் கலர் ரிப்பனும் - அப்படியே கொள்ளை அழகுதான்!.. துபாய்..ல இருந்து அவர் வரப்போறார்.. இல்லையா.. அதான்!..

யாரது?.. ஆஆ.. அக்காவ்!..

ஆனந்தத்தால் விழிகள் விரிய - கைகளைப் பற்றிக் கொண்டாள் தாமரை..

இங்கே உங்களைப் பார்ப்பேன்...ன்னு நெனைக்கவேயில்ல.. அக்கா!..

நானுந்தான்.. நெனைக்கலே.. அதுசரி.. நீ எப்ப வந்தாய்.. காரைக்காலுக்கு!..

நான் ரெண்டு நாளைக்கு முன்னாலேயே வந்து விட்டேன்.. எங்க சின்னம்மா வீடு இங்கே தானே.. சரி.. உங்க கூட அத்தானும் பசங்களும் வரலையா?..

வந்திருக்கின்றார்கள்.. அங்கே கோயில்ல பட்டிமன்றம் கேட்டுக்கிட்டு இருக்காங்க.. நான் இங்கே கடைத் தெருவை வேடிக்கை பார்க்க வந்தேன்!..

ஆயிரந்தான் இருந்தாலும் - இந்த மாதிரி திருவிழாக் கடையில ஏதாவது வாங்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு!..

நாம ரெண்டு பேரும் - பெண்கள் தினத்தன்றைக்கு சந்தித்தோம்.. இல்லையா..

ஆமாம்.. அதற்குப் பிறகு இங்கே காரைக்கால் மாங்கனித் திருவிழாவில்!..

இது.. இந்தத் திருவிழா கூட ஒரு பெண்ணுக்காத் தான்.. காரைக்கால் அம்மையார்..ன்னு ஊரே கூடி நின்னு அவங்களைத் தானே கும்பிடுகின்றது!..

யக்கா!.. வேற என்னக்கா வேணும்!?.. - கடைக்காரர் நினைவூட்டினார்..

இதிலயே இன்னொரு செட் கொடுங்க.. அப்படியே.. அந்த வளையல்!..

அதெல்லாம் யாருக்கு?..

பாப்பாவுக்குத் தான்!..

பாப்பாவுக்கா.. அவங்க ஸ்கூல்ல தான் - பூ கூட வைத்துக் கொள்ளக் கூடாது.. ன்னு சொல்றாங்களே!...

அது கிடக்கட்டும்.. வீட்டில இருக்கிறப்போ - சடை குஞ்சம் ரிப்பன் - நீங்க வேண்டாம்..ன்னு சொல்லப் போறீங்களா... பெண் பிள்ளைகளே அழகு!.. அந்த அழகுக்கு அழகுதானே.. இதெல்லாம்...

ஆனாலும் - இப்படிப்பட்ட அழகையெல்லாம் வேண்டாம்..ன்னு - ஒரே நொடியில தூக்கி எறிஞ்சவங்க தானே - காரைக்கால் அம்மையார்!..

ஆமால்ல!... அக்கா.. அக்கா.. அந்த கதையச் சொல்லுங்க அக்கா!..

இரும்மா.. காசைக் கொடுத்துட்டு வர்றேன்!..

இல்ல.. நான் தர்றேன்.. அக்கா!..

அட... யார் கொடுத்தா என்ன தாமரை!..

அக்கா.. அக்கா.. நகருங்க!.. கிடா மாடு மாதிரி உரசிக்கிட்டு வர்றானுங்க!..

என்ன சென்மங்களோ.. இதுங்க எல்லாம்!.. இந்த சிக்கல் எல்லாம் வேண்டாம்.. ன்னு தான் அந்தக் காலத்திலயே - எலும்பைத் தவிர எல்லாத்தையும் உதறித் தள்ளினாங்க.. அந்த அம்மா புனிதவதி!..

அக்கா.. அக்கா.. சொல்லுங்க அக்கா!.. காரைக்கால் அம்மையாரை - ஏன் புனிதவதின்னு.. சொல்றாங்க?..

வாம்மா.. இப்படி ஓரமா உட்காருவோம்!... காரைக்கால் அம்மையாரோட இயற்பெயரே புனிதவதி தான்!.. பெயருக்கேற்றபடியே புனிதமாகிட்டாங்க!..

அப்படியா... ஆச்சர்யந்தான்!..

ஆயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முன்னால - இந்த காரைக்கால் பெரிய துறைமுக நகரம்.. இந்த ஊரில் நல்லபடியாக வணிகம் செய்தவர் தனதத்தர்.
பெரிய செல்வந்தர். சிறந்த சிவபக்தர்.. அவரோட மனைவி தர்மவதி!..

ம்!...

வர்றவங்களுக்கு எல்லாம் வயிறார சாப்பாடு போடுவது இவங்களோட பழக்கம். இவங்களோட மகள் தான் புனிதவதி. செல்வத்திருமகள். கேட்கவேண்டுமா.. சீரும் சிறப்புமாக மகளை வளர்த்தார்கள்.

ம்!..

பெண்ணுக்குக் கல்வி அவசியம் என்று, அந்தக் காலத்திலேயே - புனிதவதியை நல்லமுறையில் படிக்க வைத்தார் - தனதத்தர்.

புனிதவதியும் நல்லபடியா படிச்சாங்க.. நல்லறிவு நல்லொழுக்கம்..ன்னு - தங்கக் குடம் போல இருந்தாங்க..

ம்!..

ஒன்று.. இரண்டு..ன்னு பதினாறு வருஷங்கள்.. பெற்ற மகளை கல்யாண கோலத்தில் பார்க்க ஆசை.. சொல்லி வைத்தமாதிரி - நாகப்பட்டினத்தில் இருந்து ஒரு வரன்.

நம்ம.. நாகப்பட்டினந்தான் அவங்களுக்கு புகுந்த வீடா!..

பெருவணிகரான நிதிபதி என்பவர் - புனிதவதியைப் பற்றிக் கேள்விப்பட்டு -  தன்னுடைய மகனாகிய பரமதத்தனுக்கு, மணமுடித்து வைக்க விரும்பினார். 

பெரியவர்கள்  கூடிப் பேசினார்கள்.  புனிதவதிக்கும் பரமதத்தனுக்கும் நல்லபடியாக கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

இருதரப்பிலும் எண்ணி மாளாத - பெருஞ்செல்வம்!.. 

அவங்க கல்யாணத்தன்று ஏழைகளுக்கு செய்த தர்மமே கணக்கில் அடங்காது - அப்படின்னு சேக்கிழார் சொல்றார்..ன்னா .. எப்படியிருந்திருக்கும்!..

சேக்கிழாரா.. யார்!?.. நம்ம தமிழ் ஐயா அவங்களா?..

ஏய்!.. சேக்கிழார் தெரியாதா?.. அவர் தானே பெரிய புராணம் எழுதியவர்!.. 

அக்கா.. நான் இந்த புராணம் புராதனம் இதிலெல்லாம் கொஞ்சம் மண்டு!..

கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது.. புதுப்பொண்ணு புருஷன் வீட்டுக்குப் புறப்படணும். தனதத்தருக்கு ரொம்பவே வருத்தம் - மகளைப் பிரிய வேணுமே.. ன்னு!.. நேரா பரமதத்தன் கிட்டே போனார்..

மாப்பிள்ளை!.. மகளைப் பிரிந்து எங்களால ஒரு விநாடி கூட இருக்கமுடியாது. இங்கேயே உங்களுக்கு வசதி எல்லாம் செய்து தருகின்றேன்.. தனி மாளிகை தருகின்றேன்.. இங்கிருந்தே வாணிகம் செய்யுங்கள்..  நீங்களும் புனிதாவும் சந்தோஷமாக வாழ்வதை நாங்கள் கண்ணாரக் காண வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள்!.. - அப்படின்னார்...

பெரியவரோட கண்ணீரைக் கண்டதும் பரமதத்தனுக்கு மனம் இளகி விட்டது.

சம்பந்திகள் இதைக் கேட்டனர். அவர்களும் மனப்பூர்வமாக சம்மதித்தனர்.
ஒரு நல்ல நாளில் புதுமணமக்கள் இருவருக்கும் தனிக்குடித்தனம் ஆயிற்று.

நல்ல அப்பா.. நல்ல அம்மா.. அவங்க!.. இல்லையா அக்கா!..

புனிதவதியும் பரமதத்தனும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினர். ஒருநாள் மதியம் . தன் வேலையாளிடம் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்து விட்டார் பரமதத்தன்.

அந்த நேரம் பார்த்து வீட்டுவாசலில் துறவி ஒருவர் பிச்சைக்கு என்று வந்தார்.

அவரைக் கண்டு மனம் இளகியது புனிதவதிக்கு. அவரை வீட்டுக்குள் கூப்பிட்டு  தலை வாழையிலையில் தயிர் சோறு போட்டு புருஷன் கொடுத்து விட்ட மாம்பழத்தில் ஒன்றை நறுக்கி வைத்தார்கள்.


பெரியவர் வயிறார சாப்பிட்டார். அன்னமிட்ட வீடு ஆனந்தமா இருக்கணும்.. ன்னு வாழ்த்தி விட்டு போனார்..

சற்றைக்கெல்லாம் வீட்டுக்கு வந்த புருஷன் - கைகால் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தார். புனிதவதியும் அருகிருந்து பரிமாறினார்கள். மீதமிருந்த மற்றொரு பழத்தையும் துண்டுகளாய் அறுத்து வைத்தார்கள். 

மாம்பழத்தைச் சாப்பிட்ட பரமதத்தனுக்கு மகிழ்ச்சி.. 

புனிதா.. அந்த இன்னொன்றையும் கொண்டு வா.. அப்படின்னார்..

புனிதவதிக்கு திடுக்கென்றிருந்தது.. அதைத்தான் சிவனடியார்க்கு அமுது படைத்தாயிற்றே!.. என்ன செய்வாங்க பாவம்!?..

என்னக்கா.. ஆச்சு!.. - தாமரையின் முகத்தில் கவலை படர்ந்திருந்தது..

பூஜையறைக்குள்ளே போய் - சிக்கல் தீர வேண்டும் என வேண்டி நின்றார்கள்..  

அந்த நேரம் - ஈசனின் திருவிளையாடலாக - புனிதவதியின் கையில் ஒரு மாம்பழம் கிடைத்தது..   ஏன் .. எப்படி..ன்னு யோசிக்காமல் உடனே - பழத்தை நறுக்கி கணவனிடம் கொடுத்தார்கள்..

அதையும் தின்று தீர்த்த பரமதத்தனுக்கு அதிர்ச்சி..

புனிதா!.. ஒருகிளையின் இருகனிகளில் வெவ்வேறு சுவை இருக்குமா.. ன்னு கேட்டார்.

அப்படியெல்லாம் இருக்காதே!.. - ந்னு புனிதவதி சொன்னாங்க..

இருக்கிறதே.. முதலில் உண்ட கனிக்கும் இப்போது உண்ட கனிக்கும் சுவையில் வேறுபாடு இருக்கிறதே!.. - புனிதவதியை உற்றுப் பார்த்தார்.

இதற்குமேல் மறைக்கக் கூடாதுன்னு - நடந்ததைச் சொன்னாங்க புனிதவதி.

இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமா!.. அப்படியானால் - இன்னும் ஒரு பழத்தை நான் பார்க்கும்படியாக வரவழைத்துக் காட்டு.. என்றார் பரமதத்தன்..

அங்கேயே - ஈஸ்வரனை தியானம் செய்து நின்றார் புனிதவதி. 

நொடிப் பொழுதில் அவர் கையில் மற்றொரு மாம்பழம்.. 


அதைக் கண்ட பரமதத்தன் பயந்து விட்டார். தான் பெற்ற பழத்தைக் கணவரின் கையில் கொடுத்தார் - புனிதவதி.

பரமதத்தன் - நடுங்கிக் கொண்டே அந்தப் பழத்தை வாங்கினார். 

அவ்வளவு தான் அந்தப் பழம் அவரது கையில் இருந்து மறைந்து போயிற்று.. சப்த நாடியும் ஒடுங்கிப் போனது பரமதத்தனுக்கு..

ஏன் அக்கா..  அந்தப் பழம் காணாமல் போனது?..

பார்க்கத்தானே பழம் கேட்டார்.. அதான்.. பார்த்ததும் மறைந்து போயிற்று..

அப்புறம் என்ன ஆயிற்று அக்கா?..

அஞ்சி நடுங்கிய பரமதத்தன் - தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!.. என - தனக்குள் தானாக முடிவு செய்து கொண்டார்.

அடுத்த சிலநாட்களில் வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து வேண்டிய பொருளுடன் மதுரைக்குப் போய்விட்டார்.

நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என.

வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயம்!.. - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.

அங்கும் இங்கும் சென்று வாணிகம் செய்வோர் வந்து சொன்னார்கள் - பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தியை!...

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றாரும் உறவினரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே போனார்கள்.  

ஊர் எல்லையில் தங்கிக் கொண்டு தகவல் அனுப்பினார்கள். 

செய்தி அறிந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் மகளுடனும் ஓடோடி வந்து எதிர்கொண்டு வரவேற்றார். 

''..தம்முடைய  கருணையால் நலமுடன் வாழ்கின்றேன். என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...'' 

- அப்படின்னு சொல்லி புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார்.

இதனைக் கண்ட அத்தனை பேரும் நடுநடுங்கிப் போயினர். பின்னே!...

மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....

அதிர்ச்சி அடைந்த அவர்கள் மனம் தெளியும்படி,  அன்றைக்கு நடந்த மாங்கனி அதிசயத்தை விவரித்தார்.

மானுடம் தாங்கி, பெண் என வந்த பெருந்தெய்வம். ஆதலின் பணிந்தேன்  அவர் பொற்பாதம்!.. - என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.


கணவனின் செயல் கண்டு மிகுந்த வேதனையடைந்து மனம் கலங்கித் தவித்த புனிதவதியார் - 

''தன் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் தனக்கு எதற்கு?.. அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக!.'' 

- என்று சொல்லியபடியே - தன் பேரழகை தானாகவே நீத்தார்.

எவரும் விரும்பாத -  பேய் உருவினை வேண்டிப் பெற்றார்.

அழகே உருவாக திருமகளைப் போல இருந்த புனிதவதியார் - எலும்பும் தோலுமான கோர வடிவத்தை விரும்பிப் பெற்றார். 

''..காண்பதெல்லாம் என்ன!..'' - என வியந்து நின்றார்கள் அனைவரும். 

அன்பு மகளின் கோலங்கண்டு ஆற்ற மாட்டாமல் அழுது கண்ணீர் வடித்தனர் தாய் தந்தையர்.

திருவருள் கூடி வந்தது!.. - என, அவர்களைத் தேற்றினார் - புனிதவதியார்.

இறைவனிடம் உருகி நாளும் பொழுதும் - மனம் ஒன்றி இருந்த அம்மையார் திருக்கயிலாய தரிசனம் பெற வேண்டி - வடக்கு நோக்கி நடந்தார்.

காலங்கள் சென்றன . திருக்கயிலாய மாமலையினை நெருங்கிய வேளையில் வழியெங்கும் சிவலிங்கங்களாகத் தோன்றின. 

திருமலையில் கால் பதிக்க அஞ்சி - தலையைத் தரையில் வைத்து கைகளால் ஊர்ந்து சென்றார்.

ஐயனின் உடனிருந்து அனைத்தையும் நடத்தும் பாகம் பிரியாதவளாகிய பராசக்தி - ஏதும் அறியாதவளைப் போல - இறைவனை நோக்கி,

..பெருமானே தலையினால் நம்மை நோக்கி ஊர்ந்துவரும் இவர் யார்?.. - எனக் கேட்டாள்.

சிவபெருமானும்,  ''..அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்!..''  எனக் கூறி,

''..அம்மையே... வருக!..'' - என இன்முகத்துடன் அழைத்தருளினார். 

''..அப்பா!..'' என்றபடி  இறைவனையும் இறைவியையும் தொழுது அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினார் புனிதவதியார்.

இறைவன் அவரை நோக்கி, ''..நீ நம்மிடம் வேண்டுவது என்ன?...'' எனக் கேட்க,


இறவாத இன்பஅன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீயாடும்போது உன்னடியின்கீழ் இருக்கஎன்றார்.. (60)

அவ்வண்ணமே நல்கிய பெருமான்,  ''..ரத்ன சபை எனும் திருஆலங்காட்டில் யாம் அருளும் திருக்கூத்தினைக் கண்டு  இன்புறுக!..'' - என அருளினார். 


கயிலாய நாதனின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காரைக்காலம்மையார் - பேய்கள் ஆடிக்களிக்கும் ஆலங்காட்டின் மயானத்தில்  ஐயனின் ஆடலைக் கண்டு மகிழக் காத்திருந்தார்.  

அங்கே குழுமியிருந்த - முன்னைப் பேய்களிடம்  - தன்னை காரைக்கால் பேய் எனக் கூறிக் கொண்டார்.

அற்புதத் திருஅந்தாதிதிருஇரட்டை மணிமாலை - எனும் பாமாலைகளைக் கொண்டு ஈசனைத் துதித்தார்.

நாளும் கோளும் கூடிய நல்வேளை. பங்குனி மாத சுவாதி!.. 

காரைக்கால் அம்மையார் பொருட்டு - தேவரும் மூவரும் காணற்கரிய திருநடனத்தை ஐயனும் அம்பிகையும்  நிகழ்த்தினர். 

ஐயனின் திருநடனத்தை காரைக்காலம்மையார் கண்டு இன்புற்று, செந்தமிழால் பாடித் துதித்தார். அந்நிலையில்  -

ஐயனின் திருவடித் தாமரையின் கீழ் சிவநிலையினைப் பெற்றார்..

இன்றும் திருக்கோயில்களில் அறுபத்து மூவர் எனும் அடியார்களுக்குள் அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பவர் - காரைக்கால் அம்மையார் ஒருவர் தானே!..

என்ன.. தாமரை!.. ஏம்மா.. கண்ணெல்லாம் கலங்கியிருக்கு!?..

கோடீஸ்வரனுக்கு மகளாகப் பிறந்தும் கோடீஸ்வரனுக்கு மனைவியாக இருந்தும் - கடைசில மயானத்தில வாழ்க்கை.. ஒருபிடி சோற்றுக்கு பிரச்னை!.. பெண்ணாகப் பிறந்தாலே வேதனை தானா?.. அக்கா!?..

தாமரையின் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது..

ஆனாலும், பரமதத்தன் செஞ்சது தப்பு தானே.. அக்கா!..

தனக்கான வழியை தேடிக்கிட்டு தான் ஒவ்வொரு ஆத்மாவும் பூமிக்கு வருது.. அன்றைக்கு நடந்ததை இன்றைக்கு விவாதம் செய்ய நாம் யாரம்மா!..

இதைப் பற்றி ஒருநாளைக்கு பேசணும்.. அக்கா!..

இன்னொரு சமயம் பேசிக் கொள்ளலாம்.. தாமரை!..

இருந்தாலும் என் மனசு கேட்கலை.. அக்கா!.. - தாமரை விம்மினாள்..


அதோ.. ஜனங்கள் - மாம்பழங்களை வாரி இறைக்கிறார்கள்.. வா.. வா.. நாமும் பழங்களைப் பிடிப்போம்!..

அக்கா.. அக்கா.. இதோ ஒரு பழம்!..

அப்படியா!.. அடுத்த வருஷம் தொட்டில் தான்!...

போங்க அக்கா!.. உங்களும் தான் ஒரு பழம் கிடைத்து விட்டதே!.. உங்க வீட்டிலும் தொட்டிலா?..

பைத்தியம்!.. இல்லறம் நல்லறமாகி செழிக்கும்.. அப்படி ஒரு ஐதீகம்!..

ஆனந்தம் அலை அலையாய்த் தவழ்ந்திட - பவழக் கால் சப்பரத்தில் வீதிவலம் வரும் ஸ்ரீபிக்ஷாடனரை நோக்கிக் கரங்குவித்து வணங்கினர். 
* * *


புனிதவதியாரின் புகழைப் போற்றும் வண்ணமாக - காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஜுன்/29 அன்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

நேற்று (ஜூன்/30) காலையில் புனிதவதியாருக்கு தீர்த்தக் கரையில் திருமுழுக்கு நிகழ்ந்தது.

பரமதத்தன் குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருள - .
பகல் பத்து மணியளவில் புனிதவதியார் - பரமதத்தன் திருக்கல்யாணம்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடி திருக்கல்யாணம் கண்டனர்.

இரவு முத்து சிவிகையில் - மணமக்கள் திருவீதியுலா எழுந்தருளினர்.

இன்று (ஜூலை/1) அதிகாலை பிக்ஷாடனர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை.

பரமதத்தன் காசுக்கடை மண்டபத்தில் இருந்து இரு மாங்கனிகளை தனது இல்லத்திற்கு கொடுத்து அனுப்பும் வைபவம் நிகழும்.


பின்னர் பிக்ஷாடனர் வெள்ளை சாற்றி திருவீதி எழுந்தருள புனிதவதியார் ஸ்வாமியை எதிர்கொண்டு அழைத்து அமுது படைக்கும் நிகழ்ச்சி.

மங்கல வாத்யங்கள் முழங்க  திருமுறை  வேத பாராயணத்துடன், பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளும் ஸ்ரீபிக்ஷாடனருக்கு - நேர்ந்து கொண்டவர்கள் பட்டுத் துண்டும் மாம்பழமும் படைப்பார்கள்.

பிக்ஷாடனர் வீதிவலம் வரும்போது தான் - ஸ்வாமியைத் தொடர்ந்து வரும் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும்.

கூடைகூடையாக மாம்பழங்களை இறைப்பர்.


திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் சிறப்புற நிகழ்கின்றது.

பின் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன்  - புனிதவதியார் பேயுரு வேண்டிப் பெற்று கயிலாயம் செல்லும் வைபவம் சிறப்புடன் நிகழும்.

மாங்கனித் திருவிழாவின் சிகரமாக -  மறுநாள் (ஜூலை/2)  அதிகாலையில்  சாலையில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில்  தீவட்டி வெளிச்சத்தில் பேய் வடிவுடன் அம்மையார் வரும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும்.

அச்சமயம் பெருமாள் கோவில் எதிரில் கைலாயநாதனும் உமையம்மையும் அம்மையார்க்கு திருக்காட்சி நல்குவர்.

காரைக்கால் அம்மையார் நமக்குக் காட்டிய வழியில்
அகமும் முகமும் மலர அனைவரையும் உபசரித்து - 

இறைவா!.. உன்னை என்றும் மறவாதிருக்க வரம் தருக!.. 
என வேண்டித் தொழுவோம்!.. 

மற்ற அனைத்தையும் ஐயன் அவன் பார்த்துக் கொள்வான்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

22 கருத்துகள்:

 1. தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் எங்களை காரைக்கால் அம்மையாரைப் பார்க்க அழைத்துச் செல்கிறீர்கள் என நினைத்தேன். அவ்வாறே நடந்தது. சிவபெருமானே அம்மா என்ற பெருமைக்குரியவரைப் பற்றிய பகிர்விற்கு நன்றி. ஒரு முறை மாங்கனித் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நானும் மாம்பழத் திருவிழாவினை தரிசித்திருக்கின்றேன்..மேலதிக செய்திகளைத் தந்ததற்கு நன்றி..

   நீக்கு
 2. Aya vanakam povenamei nan naalil amayarium, iesanaium pakithien sirapai sirapaga thoguthu irukega. oa

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சுவாரஸ்யமாக... மிகவும் அழகிய பதிவு ஐயா... ரசித்தேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி..

   ஊரில் அனைவரும் நலந்தானே!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. மாங்னித் திருவிழா கேள்விப் பட்டி இருக்கிறேன்..செல்ல வேண்டும் என ஆவல் பார்க்கலாம்....நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் விருப்பம் நிறைவேற வேண்டுகின்றேன்..
   வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 6. என்னதான் கதை படித்தாலும் தஞ்சையம்பதியார் சொல்வது போலாகுமா.? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 7. நிகழ்ச்சிகளை தாங்கள் கோர்த்து எழுதும் விதமே அலாதிதான்
  அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. வணக்கம்,
  தாங்கள் சொல்லும் விதம் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. தகவல்கள் பல அறிந்தேன்.

  மாங்கனிகள் வீசுவது பற்றி இப்போது தான் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. மாங்கனித் திருவிழா முதல் நிறையத் தகவல்களைத் தந்திருக்கும் கடடுரை ஐயா... அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. மாங்கனி திருவிழா மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு