நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 03, 2015

மாதரசி யமுனாம்பாள்

யமுனாம்பாள்!..

மகாராணியாக இருந்தும் மக்களுடன் கலந்த மாதரசி!..

ஸ்ரீ யமுனாம்பாள்
பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த - (இரண்டாம்) சரபோஜி மன்னரின் மனைவியார் தான் யமுனாம்பாள்!..

மகாராணியார் யமுனா பாய் என்றும் அறியப்படுபவர்..

இவருக்கு - குழந்தைப் பேறு வாய்க்கவில்லை..

இதனால் - மனம் வருந்திய மன்னர் - சமய வழிபாடுகளில் பரிகாரம் தேடினார்..

அந்த காலக்கட்டத்தில் - திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் அனுக்கிரஹம் வேண்டி அவரை நேரில் சென்று தரிசிக்கின்றார்..

கால சூழ்நிலைகள் கூடிவந்த வேளையில் காசியிலிருந்து சிவலிங்கம் கொணர்ந்து -

நீராடுமங்கலம் எனப்பட்ட ( இன்று - நீடாமங்கலம்) கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத ஸ்வாமிக்கு ஆலயம் ஒன்றை எழுப்புகின்றார்..

இந்த நீராடுமங்கலத்தில் தான் வெண்ணாற்றின் தென் கரையில் இருந்து பாமணி ஆறும் கோரை ஆறும் பிரிகின்றன.

இயற்கை எழிலும் பசுமை வளமும் நிறைந்த நீராடுமங்கலத்திலேயே - அரச மாளிகை எழுப்பி மகாராணி யமுனாம்பாளுடன் வசிக்கின்றார்.

மகாராணியாரின் மணிவயிறு வாய்க்கின்றது..

ஆனாலும் ஊழ்வினை எதிர்வந்து நிற்கின்றது..

பிரசவ வேளையில் - தாயையும் சேயையும் காக்க இயலாது தவிக்கின்றனர் - மருத்துவர்கள்..

வேதனையான அந்த சூழ்நிலையிலும் -

இனி இந்த மண்ணில் சுகப்பிரசவம் நிகழும். தாய் சேய் உயிரைக் காத்து நிற்பேன்.. அதோ அந்த மாமரத்தில் ஐக்கியமாகி மக்களுடன் மக்களாக காலங்களைக் கடந்தும் வாழ்ந்திருப்பேன்!..

- என்று உடனிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறியவராக - தன்னுயிர் நீத்தார்..

அரண்மனைத் தோட்டத்தின் மாமரத்தில் மகாராணியார் ஐக்கியமானார்.

அதன் பின் - அவரது நினைவு போற்றப்பட்டது..

அந்த மாமரம் பல்லாண்டுகளாக மக்களின் வழிபாட்டில் இருந்து வருகின்றது..

இன்னும் - இந்த மண்ணில் சுகப்பிரசவம் தான்..

யமுனாம்பாள் சுகப்பிரசவத்திற்கு துணை நிற்கின்றார்!.. -  என்பதால்
சமய வேறுபாடுகள் ஏதுமின்றி - யமுனாம்பாளை வேண்டிக் கொள்கின்றனர்.

யமுனாம்பாள் - அவர்களே தாயாக நின்று இந்த ஊர் பெண்களை பிரசவத்தின் போது காத்தருள்வதாக நம்பிக்கை..

நீடாமங்கலத்தின் எல்லையில் - 
பிரசவத்தின் போது துர்மரணம் நிகழ்வதில்லை..

விதி வலியது - என்று இருக்குமேயானால் - அது வேறெங்கோ நிகழ்கின்றது.

பிறந்த குழந்தைகளை - யமுனாம்பாள் சந்நிதியின் முன்னால் கிடத்தி -நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்..

காலங்கள் மாறின..


மகாராணியாக இருந்தும் மக்களுடன் வாழ்ந்து தெய்வத்துடன் ஐக்கியமாகிய யமுனாம்பாளுக்கு கோயில் ஒன்று எழுப்பப்பட்டது.

பின்னாளில் வந்த மராட்டிய மன்னர்களுக்கு - வழிபடு தெய்வமானார் யமுனாம்பாள்.

ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி - நீடாமங்கலம்
சரபோஜி மன்னர் ராம நாம தீட்சை பெற்றிருந்தார் எனக்கொண்டு - 1761-ல் மன்னர் பிரதாப சிம்மன் - நீடாமங்கலத்தில் ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி திருக்கோயிலை எழுப்பினார்.

நீடாமங்கலத்தின் ஒரு பகுதி சர்வமான்யம் எனப்பட்டது.

பிரதாபசிம்மன் காலத்தில் தான் யமுனாம்பாள் புரம் என்று வழங்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் -
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் வரை அரசர் தங்கிச் செல்வதற்கான சத்திரங்கள் பலவும் எழுப்பப்பட்டன.

இராமேஸ்வரம் செல்லும் பொதுமக்களுக்கும் சத்திரங்கள் அமைக்கப்பட்டன.

அப்படி எழுப்பப்பட்ட - பொது சத்திரங்களுள் பலவும் சமூக விரோதிகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டன.. அழிக்கப்பட்டன.


ஒரத்தநாட்டிலும் நீடாமங்கலத்திலும் திருவையாற்றிலும் சில சத்திரங்கள் - காலத்தின் மீதமாக - இன்றும் இருக்கின்றன..

மிக அழகான சிற்ப வேலைகளுடன் கூடிய கருங்கல் மண்டபங்களாக அந்த சத்திரங்கள் விளங்குகின்றன.

சில காரணங்களுக்காக -  திருக்கோயில்களில் காணப்படும் மோக நிலைச் சிற்பங்கள் இந்த சத்திரத்தின் மண்டபங்களிலும் காணக் கிடைக்கின்றன.

சிற்பங்கள் என்றால் - அவை ஆறடி உயரத்தில் அமைந்தவை அல்ல!..

நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபத்தின் முகப்பில் - அடித்தளத்தில் - பத்ம வரிசைக்கு மேலாக - கிட்டத்தட்ட முக்கால் அடி உயரமுடையவை..

இவை - இல்லற நிலைகளைக் காட்டுவதால் - வெகுண்டெழுந்தனர் சிலர்!..

கையில் கிடைத்ததைக் கொண்டு சிற்பங்களைச் சிதைத்து விட்டனர்..

சிதைத்தவர்களுக்கு இல்லறம் பிடிக்காதோ - என்னவோ!?..

சிதைத்தவர்கள் - தங்கள் வம்சத்தைத் தழைக்கச் செய்யாமலேயே -
சிதைக்குப் போய்ச் சேர்ந்தார்களோ - என்னவோ!?..

இந்த சத்திரத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. 

ஆனால் - இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை..

நீடாமங்கலத்தின் கிழக்குப்பகுதியில் யமுனாம்பாள் கோயில் திகழ்கின்றது.

நெல் அளக்கும் படியினை ஏந்திய திருக்கோலத்தில் மாதரசி யமுனாம்பாளின் திருக்கோலம் திருக்கோயிலினுள் திகழ்கின்றது.

ஆனாலும் - 1972-ல் வீசிய பெரும் புயலில் மாமரம் சாய்ந்து விழுந்து - காலகதி அடைந்து விட்டது.

ஆயினும், நன்றி மறவாத மக்கள் -  மாமரத்தின் வேர்ப்பகுதியில் கவசம் இட்டு வழிபட்டு நிற்கின்றனர்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷமாக இருக்கும்.. 

தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை - ஏக தின உற்சவமாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தலை சாய்த்து உறங்கும் மண்ணில் - தாய் மடியாய் இருந்து மக்களைக் காப்பவர் மகாராணி யமுனாம்பாள்!..

என் பிள்ளைகள் இருவருமே - தாய்க்கு மிகுந்த வேதனையைக் கொடுத்துப் பிறந்தவர்கள்.. 

இரண்டாவது பிரசவத்தின் போது - ஏதாவது ஒரு உயிரைத் தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லி விட்டார்கள்!..

கலங்கித் தவித்த - அந்த வேளையில் சுகப் பிரசவத்திற்கு வழிகாட்டி -
எங்கள் கூடவே இருந்து காத்து ரட்க்ஷித்த தாய் - யமுனாம்பாள்!..


தஞ்சையிலிருந்து 30 கி.மீ., தொலைவிலுள்ளது - நீடாமங்கலம்.

இன்றைய - திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய ஊர்களுள் ஒன்று..

நீடாமங்கலம் - யமுனாம்பாள் புரம் எனவும் வழங்கப்பட்டது..

தஞ்சை - திருவாரூர் மாவட்டங்களில் யமுனாம்பாள் புரம் என வேறு ஊர் எதுவும் கிடையாது.
  
நீடாமங்கலத்திலுள்ள யமுனாம்பாள் சத்திரமும் - மீதமிருக்கும் சில சத்திரங்களும் தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் சத்திரம் நிர்வாகம் எனும் தனி அமைப்பின் கீழ் உள்ளன.


இன்றைய (3/ஜூலை) வலைச்சரத் தொகுப்பின் கடைசியில் -

நீடாமங்கலம் அருகே என்று குறிப்பிடப்பட்டு செய்தி ஒன்று சொல்லப் பட்டிருக்கின்றது..

பிழையான தகவல் கண்டு மனம் மிகவும் வாடியது.

அதன் விளைவே - இந்தப் பதிவு!..

வலைச்சரத்தின் செய்தித் தொகுப்பில் -

யார் இந்த யமுனாம்பாள் என்ற நூல் ஒன்று கிடைத்தது - என்றும்,
நீங்கள் நினைத்தது போலவே தான் - என்றும்,
யூகம் - என்றும் குறிக்கப்படுகின்றது.

அவர்களுக்குக் கிடைத்த நூல் என்ன சொல்கின்றதோ - எனக்குத் தெரியாது..

அந்த நூல் - என்ன வேண்டுமென்றாலும் சொல்லி விட்டுப் போகட்டும்!..


யமுனாம்பாள் மகாராணி.. மக்களால் வழிபடப்படும் மாதரசி!..

பதில் இடம் பெற்றுள்ள படங்கள் Facebook- ல் இருந்து பெறப்பட்டவை.

நீடாமங்கலத்தில் இருந்த காலத்தில் - பல இடங்களிலும் சுற்றித் திரிந்தாலும் படங்கள் எடுக்கத் தோன்றவில்லை..

இனி தாயகம் திரும்பும் வேளையில் -
தன்னைத் தரிசிக்கவும் ஏற்றமிகு செய்திகளை வழங்கவும் -
அன்னை யமுனாம்பாள் அருள் புரிவாராக!..

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவர் 
மகாராணி யமுனாம்பாள்!.. 

பலநூறு குடும்பங்களைக் காத்து நிற்பவர்..

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
அனைவரையும் அவர் தாங்கி நிற்பார்!..

மாதரசி யமுனாம்பாள் மலரடிகள் போற்றி!..
திருச்சிற்றம்பலம்.. 
* * *

16 கருத்துகள்:

 1. நீடாமங்கலத்தின் யமுனாம்பாள் கோயில் பற்றிய அறியாத சிறப்பு தகவல்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகை மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

   நீக்கு
 3. வணக்கம்,
  மனங்களின் நம்பிக்கை வெல்லும், தாங்கள் சொல்லும் நடையின் அழகில் தான் நான் பக்தியின் பால் ஈர்க்கப்படுவேனோ,
  அறியாத தகவல்கள் அறியத்தந்தீர்,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் இனிய தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  ஆலயம் பற்றிய சிறப்பான தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி...நேரம் இருப்பின் வாருங்கள் ஐயா நம்ம பக்கம்.
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சருகான வாழ்க்கை:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. யமுனாம்பாள் கோவில் அறியாதது.....அறியக் கொடுத்தீர்கள் ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இது புதிய தகவல் ஐயா! அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! விவரணம் வழக்கம் போல் தங்களது நடையில் அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. படித்துள்ளேன். சென்றதில்லை. தங்கள் பகிர்வு அப்பயணத்திற்கு வலிகோலியுள்ளது. நன்றி.
  புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
  http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி. சக பதிவர், நண்பர் ”வீடுதிரும்பல்” மோகன்குமார் இந்த ஊரைச் சேர்ந்தவர் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   திரு..மோகன் குமார் அவர்கள் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் என்றறிந்து மகிழ்ச்சி..

   தங்கள் வருகைக்கும் மகிழ்ச்சி..
   மேலதிக செய்திக்கு நன்றி..

   நீக்கு