நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 09, 2015

ஈர நிலம்

கலங்குகின்றது மனம்..

பச்சிளம் பாலகனை - பீர் குடிக்க வைத்த செய்தியின் வலி ஆறுவதற்குள் - அடுத்த அதிர்ச்சி..


நேற்று முன் தினம் -

கோவை - தனியார் பள்ளி ஒன்றில் மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவி - தனது தோழியருடன் வகுப்பிலிருந்து வெளியேறி - மது அருந்தி விட்டு சாலையில் ரகளை செய்திருக்கின்றார்.

பதினாறு வயதுடைய மாணவியின் - இந்தச் செயலால் - தமிழகம் அதிர்ந்திருக்கின்றது.

நேற்று காலையில் இணையத்தில் இந்த செய்தியை படித்ததும் ஒன்றுமே புரியவில்லை..

எங்கே சென்று கொண்டிருக்கின்றது நாடு!..

மனசாட்சியின்றி பணப்பெட்டியை நிரப்புவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது!..

சக நண்பர்கள் மது வாங்கி வந்திருக்கின்றனர்.. அதை அருந்திய பின்னரே - சாலையில் ரகளை..

மாணவ மாணவியர்க்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது?..

உடன் வந்த எவரும் -  தமது தோழி மது அருந்துவதைத் தடுக்கவில்லையே ஏன்?..

மது அருந்திய தோழியின் பெற்றோருக்கு -
எந்த வகையிலாவது - உடனிருந்தவர்கள் தகவல் தெரிவித்திருக்கலாமே!..

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற் பொருட்டு..

- எனும் திருக்குறள் நினைவுக்கு வரவில்லை போலும்!..


இன்றைய சூழ்நிலையில் -
இளம் பருவத்தினர் எதை நோக்கி நகர்த்தப்படுகின்றனர்?..

இந்த மாணவி - இப்படி சாலையில் ரகளை செய்ததற்கு என்ன காரணம்?..

ஒருவழியாக பெண் போலீசார் விரைந்து வந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வந்து - துடியலூர் காவல் நிலையத்தில் சேர்த்திருக்கின்றனர்..

மகளின் நிலை கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெற்றோர் - கதறியழ,

எதிர்கால நலன் கருதி - வீட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றாள்.

இத்துடன் அங்கே - விஷயம் முடிந்துள்ளது.

மேலும் - கோவை அருகே -

தனியார் பள்ளி ஒன்றில் இடைவேளையின் போது செல்போனில் ஆபாசப் படம் பார்த்த மாணவியர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்..

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்க்கும் அளவுக்கு - மாணவியரின் தேவை என்ன?..

எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் - இந்த மாதிரி செய்திருப்பார்கள்?..

இவர்களுடைய அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்?...

அடுத்தது - சிவகங்கை அருகில் - கீழப்பூங்குடி.,

இங்கே - பள்ளி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் - ஆபாச படங்களை செல்போனில் பதிவு செய்து கொடுத்த குற்றத்திற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கின்றான்..

இவன் -

கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவன்..

மாணவர்களைத் தன்னுடன் பிறந்தவர்களாக நினைத்திருந்தால் -
இந்த மாதிரி பதிவு செய்து கொடுத்திருப்பானா!?..

இள நெஞ்சங்களில் நஞ்சினை விதைத்த - இந்தப் பாவியை என்ன செய்தால் தகும்!..

அடுத்தது - விழுப்புரம் மாவட்டத்தில்..

துர்கா.. நான்கு வயது குழந்தை..

இந்தக் குழந்தையுடன் விளையாட வருபவள் - வீட்டிற்கு அருகிலுள்ள சிறுமி. பத்தாம் வகுப்பு படிப்பவள்..

ஒருவாரத்திற்கு முன்பு - துர்காவின் வீட்டுக்கு விளையாட வந்தபோது - அங்கிருந்து பத்து ரூபாய் திருடியிருக்கின்றாள்..

இதைக் கண்ட குழந்தை - தன் தாயிடம் சொல்லி விட்டது.

பணத்தைத் திருடிய பெண் கண்டிக்கப்பட்டிருக்கின்றாள்..

இதனால் கோபமுற்ற அந்த மாணவி - கடந்த திங்கட்கிழமையன்று - தன்னைக் காட்டிக் கொடுத்த குழந்தையைத் தூக்கிச் சென்று கிணற்றில் போட்டு விட்டாள்..

கிணற்று நீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது..

பத்தாம் வகுப்பு மாணவிக்குத் திருடுவது தவறென்று புரியவில்லை..

அதையும் மீறி - பச்சிளங்குழந்தையைக் கொல்வது குற்றம் என்பதும் தெரியவில்லை..

வளரும் பருவத்தில் அப்படியென்ன கொலைவெறி!..


தனி மனித ஒழுக்கம் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கின்றது..

நல்லொழுக்கம் என்பது கேலிப் பொருளாகிக் கொண்டிருக்கின்றது!..

இதற்கெல்லாம் இதுவே - முக்கிய காரணம்..

உடையவன் பார்க்காத பயிர் ஒருமுழம் கட்டை!.. - என்பார்கள்..

பிள்ளைகளைப் பெற்றோர் கவனித்து வழி நடத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமாகின்றது..

நாடு மோசமான சூழ்நிலையில் இருக்கின்றது..

மதுக்கடைகளில் ஆண்கள் தங்கள் வாழ்வினைத் தொலைக்கின்றார்கள் என்றால் -

வஞ்சனையும் சூதும் - ஓலமும் ஒப்பாரியும் - நிரம்பித் ததும்பும் தொலைக் காட்சித் தொடர்களில் பெண்களின் நேரம் கழிந்து கொண்டிருக்கின்றது..

பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் - இன்றைய தொலைக்காட்சித் தொடர்களிலும் இடம் பெறுகின்றனவாம்..

மதுவுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டியது அவசியமாகின்றது..

ஒவ்வொரு பெற்றோரும் - தம் பிள்ளைகளைக் கண்காணித்து - நல்வழியில் நடத்த வேண்டியது தலையாய கடமையாகின்றது..


நல்லறிவும் நல்லொழுக்கமும் பேணிக் காக்கப்படவேண்டும்..

இளையோரும் தம் நெஞ்சில் நல்லவைகளுக்கு அன்றி வேறெதற்கும் இடங்கொடாது - தம்மைத் தற்காத்துக் கொள்ளுதல் வேண்டும்..


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.. (202)  

- எனும் திருக்குறளைத் தம் சிந்தையில் கொள்ளவேண்டும்..

பரந்து விரிந்த இந்தப் பூமியில் - நல்ல விஷயங்கள் மட்டுமே நம்மை முன்னேற்றுபவை என்பதை உணரவேண்டும்.

வளரிளம் பருவத்தினரை - பச்சை மண் - என்பார்கள்..

எதைச் சொன்னாலும், பசுமரத்தாணி போல் - மனதில் பதியக்கூடிய பருவம்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?.. - என்பது சொல்வழக்கு..

மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும் -
போட்ட விதை என்ன என்று மரம் வளர்ந்து காட்டாதோ!..
- என்றுரைப்பார் கவியரசர் கண்ணதாசன்..

எதை விதைத்தாலும் முளைத்துக் கொள்ளும்.. ஆனாலும்,
விதைக்கப்பட வேண்டியவை - நல்ல விதைகளே!..

இளையோர் நெஞ்சம் - ஈர நிலம்!..

அதில் நல்லனவற்றை விதைப்பதற்குத் 
தகுதியுடையோருள் தலைசிறந்தவர்கள்

பெற்றோர் எனும் உழவர்களே!..

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்..(131)

மண் பயனுற வேண்டும்..
* * *

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் ஜி..

   யார் வீட்டுப் பிள்ளைகளாக இருந்தாலும் - கெடுவது சமுதாயம் தானே..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. இச்செய்திகளை முகநூலில் பார்த்து அதிர்ந்தேன். குழந்தை என்று பாராமல் என்ன ஒரு மனநிலை அந்த பசங்களுக்கு...

  காதல் தோல்வி சிறுமி குடித்து .....

  உடையவன் பார்க்காத பயிர் ஒரு முழம் கட்டை.....ஆம் உண்மைதான்.

  அவரவர் கடமைகளை ஏனோ தானோ என செய்கின்றனர்....பள்ளி, சாராயக்கடை

  மது விலக்கு வந்தால் நன்றாக இருக்கும்...

  செல் போன் பல வசதி....அது பல தொல்லைகளை கொடுக்கிறது, கெடுக்கிறது....கலிமுத்திடுத்து...வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மக்கள் நலமுடன் வாழ்வதற்கு - மதுவிலக்கு வரவேண்டும்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. கலாச்சார சீரழிவு அதிகமாகிக் கொண்டு வருவது மிகவும் வேதனை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   பிள்ளைகள் கெடுவதற்கு முன் பெற்றோர் கண்காணித்து திருத்த வேண்டும்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. ஈர நிலத்தில் பார்த்தீனிய விஷச் செடி முளைப்பதைத் தடுக்க வேண்டிய பொறுப்பை அரசு உணர்ந்தால் நல்லது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   விஷச் செடியை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதே அரசு தான்..
   கேளாச் செவியும் பாரா முகமுமாக இருக்கின்றது..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. பள்ளிகள் எல்லாம் மதிப்பெண் தொழிற்சாலைகளாக மாறியதால் வந்த இடர் இது. மகிழ்வோடு கற்க வேண்டியவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள், படி படி படி என்பதைத் தவிர வேறு வார்த்தைகளையே கேட்க இயலாத சூழல்
  இந்நிலை மாற வேண்டும் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   பல நூறு மாணவர்களைத் திறம்பட உருவாக்கும் - தங்களின் வேதனை புரிகின்றது - ஐயா!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. வணக்கம்,
  யார் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை,
  பெற்றோர் பள்ளியையும் பள்ளி பெற்றோரையும்,
  இது எதையும் கண்டுக்கொள்ளாத அரசையும்,,,,,,,,
  இன்று மாணவர்களுக்கு தக் குருவிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, அன்றெல்லாம் பக்தி தான்டி ஒருவித அன்பு பாசம் குருவிடம் இருந்தது, இவையெல்லாம் மாறி இன்று இயந்திரம் போல் ஆனாது, அதனால் இவையும் சாதாரன விசயங்கள் ஆகின,
  எங்கு திரும்பினாலும் இதே செய்திகள் மனம் வேதனைப் படத்தான் முடியுது,
  தங்கள் பதிவு அதனைக் காட்டுகிறது.
  பகிர்வுக்கு நன்றி,
  சரியாகும் என நம்புவோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இன்றைய சூழல் - தங்கள் கருத்தில் தெளிவாக வெளிப்படுகின்றது..
   சரியாக வேண்டும்.. அதுதான் சமூகத்திற்கு நல்லது..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 7. பதிவிட்டசெய்திகள் வேதனை தருகின்றன. மதுவுக்கு எதிராகப் பெண்கள் மதுக்கடைகளை அடித்து நொறுக்குவதும் செய்திகள் வருகிறதுநல்ல பயிர்கள் ஊடே களைகளும் இருக்கிறது. ஆனால் களைகளே நல்ல செடிகள் வளர விடாமல் செய்யவும் வாய்ப்புண்டு, ஆதங்கம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தாங்கள் கூறுவது போல - பல இடங்களிலும் பெண்கள் மதுக் கடைகளுக்கு எதிராக போராடுகின்றார்கள்..

   பயிரைக் காக்க வேண்டும்.. களைகள் அழிக்கப்படவேண்டியவை..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

   நீக்கு
 8. இந்த செய்திகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   வளரும் சமுதாயத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமோ - என்று கவலையாக இருக்கின்றது..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 9. வேதனையாக நிகழ்வினை தங்கள் நடையில் பகிர்ந்துள்ளீர்கள். கலி காலம் என்று இதைத்தான் சொல்வார்களோ? முன்பெல்லாம் சுய கட்டுப்பாடு என்பது இளைஞர்களிடம் இருந்தது. தற்போது அது முற்றிலுமாக இருப்பதில்லை. பெரியவர்களும் உரிய முறையில் பிள்ளைகளைக் கண்காணிப்பதில்லை. இதுவே இவ்வாறான தவறுகளுக்குக் காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   இளைஞர்களின் மனோநிலையைத் தெளிவாக கூறியிருக்கின்றீர்கள்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 10. இப்படி ஒரு தொகுப்பைப் படிக்கும்போது மனம் பதறுகிறது!! இந்த சூழலில் ஆசிரியர்கள் பங்கு வெகுவாக கூடியிருக்கிறது. ஆனால் ஆசிரியரும், பெற்றோரும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை அய்யா:(((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களின் கூற்று உண்மையே..
   எவரும் பொறுப்பினை உணர்ந்ததாகத் தெரியவில்லை..

   தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 11. ஐயா! முதலில், இது போன்று குழந்தைகள் நடந்து கொள்வதற்குக் காரணம், முதலில் பெற்றோர், பின்னர் பள்ளி/ஆசிரியர்கள் தான்.

  எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலெ...அவன்/அவள் நல்லவனா/ளா வதும், தீயவனா/ளாவதும் அன்னை/பெற்றோர் வளர்ப்பினிலே....

  எத்தனை வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுடன் நட்புறவோடு பேசுகின்றனர்? நேரம் செலவழிக்கின்றனர்? எத்தனைப் பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படுகின்றன? கிறித்தவப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.

  பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழித்தெழ வேண்டிய நேரம் ஐயா. தொழில் நுட்பம் நல்லது செய்தாலும், பெற்றோர் குழந்தைகளுக்கு அதை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதைப் பற்றிய நல்ல கருத்துகளை நட்புடன் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் போது நல்ல கதைகளைச் சொல்லி, இறை உணர்வை ஊட்டி, நல்லொழுக்க கதைகளைச் சொல்லி, பஞ்சதந்திரக் கதைகள் சொல்லி, நிலவைக் காட்டி ரசிக்கச் சொல்லி, இயற்கையைக் காட்டி, மரம் செடிகொடிகளைம் பறவைகளைக் காட்டி அவற்றைப் பெற்றோரும் ரசித்து குழந்தைகளையும் ரசிக்க வைத்து இயற்கையோடு ஒன்றி வளரச் செய்து, விளையாட்டுகளில் ஈடுபட வைத்து என்று அவர்களோடு ஒன்றி நட்புடன் வாழ்ந்தால் குழந்தைகள் தவறு செய்வது என்பதே இருக்காது ஐயா. அப்படியே தவறு செய்தாலும், அவர்களை அன்புடன் வழி நடத்தவும் முடியும். ஆனால் இப்பொதெல்லாம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி மிகவும் அதிகமாகி வருகின்றது. குழந்தைகள் தனி அறையில் கதவை மூடிக் கொண்டு அவர்கள் தங்கள் தனிமை என்று சொல்லி அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று கூட தெரியாமல் பெற்றோர்கள்...ம்ம்ம் என்ன சொல்ல என்று தெரியவில்லை ஐயா...மனம் வேதனையடைகின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   மிக நீண்ட கருத்துரை..
   தெளிவான ஆக்கபூர்வமான சிந்தனைகள்..
   நாம் வளர்ந்ததும் இப்படித்தான் - நிச்சயமாக..

   எனது தங்கை தம்பிகள் வளர்ந்ததை நான் பார்த்திருக்கின்றேன்..
   இயற்கைச் சூழலில் சிற்றுயிர்களுடன் நாங்கள் வளர்ந்த விதம் - கண் முன்னே நிற்கின்றது..

   உலர்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றோமே தவிர - பச்சை மரத்தை வெட்டியதாக நினைவே இல்லை..

   சக மனிதர்களுடன் நேசம்.. பெரும்பாலும் - இரவு நேரங்களில் நிலாச்சோறு..

   பிரச்னைகள் இருந்தாலும் உற்றார் உறவினருடன் ததும்பும் பாசம்.

   அன்பில் பிரியாத கூட்டுக் குடும்பம்..

   மிக பலவான நல்லனுபவங்களை இன்றைய சமுதாயம் இழந்து விட்டார்கள்..

   காலம் தான் நல்ல பதில் கூற வேண்டும்..

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 12. தங்களின் இந்த பதிவை படிக்கும் போது வேதனையை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும்..

   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 13. மது குடிப்பது நாகரிகம் என்பது போல் நம் சமூகம் நினைக்க ஆரம்பித்துவிட்டது. பெண்களும் ஆண்களுக்கிணையாக குடிக்கத் துவங்கியுள்ளனர். மது குடிக்கும் காட்சிகள் இல்லாத சினிமா இல்லை என்றாகிவிட்டது. நடக்கும் நிகழ்வுகள் சமூகச் சீரழிவினைக் காட்டுவதாகத் தாம் உள்ளன. உங்கள் வேதனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி சார்! புலம்புவதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய இயலும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   என்ன செய்வது.. வளரும் தலைமுறையினர் - நல்வழியில் செல்வது அரிதாகின்றது.. நல்லொழுக்கம் பேணப்படவில்லை..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

   நீக்கு