நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 29, 2024

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 17
வியாழக்கிழமை


பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக இருந்திருக்கின்றேன்..

அந்த வகையில்
ஆலிவ்  எண்ணெய் பழக்கப்பட்ட ஒன்று.. மிகவும் பிடித்தமான ஒன்று..

அந்த அளவில் தான் ஆலிவ் எண்ணெய் பற்றிய பதிவும்..

அங்கே பணி செய்த எனக்கு அங்குள்ள உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகள்  தெரியும்...


சமையலுக்கான பொருட்களையும் சமைத்த உணவுகளையும் எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி நன்றாகத் தெரியும்..

ஆப்பிளில் இருந்து ஆட்டுக்கறி வரை எதுவானாலும் பலவித பரிசோதனைகளைக் கடந்தே சமையல் கூடத்திற்கு வந்து சேர வேண்டும்...

அவற்றைப் பற்றி வேறொரு சமயத்தில் பேசுவோம்..

அரபு நாட்டின் அளவுக்கு தரத்தை நிர்ணயிப்பதில் இங்கே - பற்பல நடைமுறை சிக்கல்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்..

பொய்யும் புளுகுமான இன்றைய பொது  நடைமுறையில் நல்ல உணவுகளைப் பற்றி சிறு குறிப்புகள் - விழிப்புணர்வு. - என்ற அளவில் தான் எனது பதிவுகள்.. 

மற்றெந்த தயாரிப்புகளையும் பதிவின் வாயிலாக முன்னிலைப் படுத்துவது இல்லை.. 

நானறிந்தவற்றுடன்  பொதுவான விவரங்களையும் சேகரித்துத் தொகுத்து பதிவில் வழங்கிக் கொண்டிருக்கின்றேன்..

உடல் நிலையில் சிற்சில பிரச்னைகள் என்றாலும் பொழுது நல்லபடியாக இருக்கின்றது.. காரணம் தங்களது அன்பும் ஆதரவும்..

காலம் முழுவும் அலுவலகப் பணி செய்து விட்டு இப்போது ஓய்ந்திருக்க  இயலாது.. எனக்குத் தெரிந்தது எல்லாம் எழுதுவது ஒன்று தான்.. 

அதனாலேயே தமிழைப் பற்றிக் கொண்டிருக்கின்றேன்..

தருமபுர ஆதீனத்தின் தேவாரத் திருமுறைகளில்  தேடுவதில் பொழுது செல்கின்றது.. 

இவ்வாறு தான்
விக்கியின் தகவல் தொகுப்புகளிலும்...

விரல்களில் சற்று வலி -  தளர்வு என்பதால் தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இப்போது வருகின்ற பதிவுகள் எல்லாம் தட்டுத் தடுமாறி செய்யப்படுபவை தான்..

கணினியை விட்டு வெளியேறி ஐந்து வருடங்கள் ஆகின்றன.. எனது வேலைகள் எல்லாமே கைத்தலபேசியில் தான்..

பதிவுகளுக்கு வருகின்ற நண்பர்களது கருத்திற்கு பதிலளிக்க இயலாத குற்ற உணர்ச்சியும் என்னுள் இருக்கின்றது..

அந்தப் பிழைக்காக மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்..

இயற்கை உணவு என்ற வரிசையில் பொதுவான குறிப்புகளைத் தான் தருகின்றேன்..

இந்த நிறுவனத்தின் செக்கு எண்ணெய் தான் சிறந்தது என்கிற மாதிரி  - நான் எதுவும் செல்வதில்லை.. எழுதுவதில்லை..

வீட்டின் அருகில் பசும் பால கிடைக்கின்றது.. அடைக்கப்பட்ட  பால் வாங்குவதில்லை... 

கீழவாசல் கடைத்தெருவில் ஊத்துக்குளி வெண்ணெய் தினசரி வருகை.. வாங்கி உருக்கிக் கொண்டால் கலப்படமற்ற - நெய்!.. 

பல ஆண்டுகள் பழக்கப்பட்ட எண்ணெய் மண்டி.. அங்கே தான் நல்லெண்ணெயும் பிறவும்.. 

தற்போது  ஏற்பட்டுள்ள ஒவ்வாமையால் நான் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதில்லை..

மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி எல்லாமே எங்களது தயாரிப்பு தான்..  
விளம்பரத்தில் ஆடல் பாடல்களைப் பார்த்து விட்டு - அந்த மயக்கத்துடன் கடைகளில் மசாலாப் பொடி எதுவுமே வாங்குவதில்லை... 

நியாய விலைக் கடையில் கோதுமை கிடைக்காமல் போகும் போது வெளியில் வாங்கி அரைத்துக் கொள்கின்றோம்..

மைதாவின் சேர்க்கையில் லொட்டு லொசுக்கு என்று எதுவும் செய்வது கிடையாது..

புலால் உணவில் இருந்து விலகி ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன... 

வெளியில் செல்கின்ற போது தேநீர் என்றால் சிவநெறி அல்லாத டீக்கடைக்குள் நுழைவதே இல்லை..

பெரு நகரங்களில் இதெல்லாம் மிகவும் சிரமம்..

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று..
- கவியரசரின் பொன்னான வரிகள்..

நமக்காக நம் கையால் செய்வது நன்று - என்று சொல்லப்பட்டாலும் -
வாய்ப்பும் வசதியும் கூடி வந்தால் தான் எல்லாமே!..

சமீபத்திய பதிவுகளில்  குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்..

தஞ்சாவூர் பொடியன்

இன்று போல்
என்றும் தங்களது அன்பினையும் ஆதரவினையும் நல்கிட வேண்டும் - என, கேட்டுக் கொள்கின்றேன்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

சிவாய திருச்சிற்றம்பலம்..
***

புதன், பிப்ரவரி 28, 2024

எண் திசை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 16
புதன்கிழமை


கங்கையைச் சடையுள் வைத்தார் 
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
ஐயன் ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-
**
மனதின் நினைவு அடுக்கில் இருந்து 
இந்தப் பதிவைத் தருவதில் மகிழ்ச்சி..

திசைகள் என்று குறிக்கப்பட்டவை அண்டப் பிரபஞ்ச வெளியின் ஆச்சர்யம்..

அதைப் பற்றிய ஞானம் நம்மவர்களுக்கு இயல்பாகவே இருந்தது.. 

அண்டப்பெருவெளி பற்றிய அறிவினை யாரோ வந்து தான் சொல்லித் தந்ததாக - இன்றைக்கு ஒரு பக்கத்தில்  உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்..

எட்டுத் திசைகளுக்கும் பெயர் சூட்டி அங்கே அதிபதிகளை நியமித்த மரபு நம்முடையதே..

நேர் வடக்கில் இருக்கின்றது துருவ நட்சத்திரம்..

வானில் என்றும் அழியாத துருவ நட்சத்திரமாகத் திகழ்பவர்  துருவ மகராஜன்.. அவரது கதை தெரியும் தானே!..

அக்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்வோர்  துருவ நட்சத்திரத்தைக் கொண்டே இரவில் திசையறிந்தனர்.. 

வட புலத்தின் காந்த சக்தியை நம்மவர்கள் அறிந்திருந்தனர்.. இதன் அடிப்படையில் தான் - திசை காட்டும் கருவி உருவாகியது..

நமது காரியங்கள் ஒவ்வொன்றும் திசைகளைக் கொண்டு தான்..


மாயனாய் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய்த்
தேயமாய்த் திசை எட்டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் தோளி பாகர் இலங்கு மேல் தளியனாரே.. 4/43/6
-: திருநாவுக்கரசர் :-

காலையில் எழுந்ததும் முகம் துலக்கிய பின் வணங்க வேண்டிய திசை கிழக்கு.. கிழக்கில் சூர்யோதயத்தை நமஸ்கரித்தால் தெய்வசக்திகளையும்  வணங்கியதாக அர்த்தம்..

பெற்றோர்களையும் பெரியோர்களையும்  கிழக்கு முகமாக நிறுத்தி நாம் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.. அல்லது மேற்கு முகமாக மண்டியிட்டு வணங்க வேண்டும்.. கிழக்கே கால் நீட்டக் கூடாது..

மாங்கல்ய தாரணத்தின் திசை கிழக்கு.. மங்கல மணவறை அமைப்பதிலும் பற்பல நியதிகள்.. மணமேடையில் காலணிகளுக்கு அனுமதியில்லை.. இன்றைக்கு அப்படி இல்லை..

மஞ்சள் முகமே வருக..
மங்கல விளக்கே வ்ருக.. -
என்றது தமிழ்.. ஆனால்,

மணமகளே -  மஞ்சள் முகத்துடன் வருவதில்லை..
மணமகனும் முகத்தை மழிப்பதில்லை..  ஏதோ போய்க் கொண்டே இருக்கின்றது.. 

இதிலே
நீ வேற ஏண்டா உளறிக் கொண்டு இருக்கின்றாய்!.. - என்கின்றீர்களா.. அதுவும் சரி தான்..


குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை  அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே!.. 890
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

மேற்கே அமர்ந்து கிழக்கு முகமாகப் படிப்பதும் வடக்கு முகமாகத் தியானிப்பதும் சாலச் சிறந்தது..

இந்திர திசையில் மாக்கோலமிட்டு மலரிட்டு விளக்கேற்றி பொழுதினை வரவேற்பது இந்துக்களின் மரபு..

வேளாண்மையில் நாற்றங்கால் முதலான பணிகளையும் மகசூல் அறுவடையையும் ஈசானியம் எனும் தென்மேற்கில் இருந்து ஆரம்பிப்பர்.. 

மனையில் ஈசானிய திசையில் குப்பை கூளம் சேராமல் பார்த்துக் கொள்வர்..

வீட்டுக்குள் சமையலறை ஆக்னேயம் எனும் தென் கிழக்கில் அடுப்பு அமைத்து கிழக்கு முகமாக நின்றோ இருந்தோ சமைப்பர்..

நெற்குதிர், பணப்பெட்டி இவைகளை நிருதி எனும் வடமேற்கில் அமைத்து மூல முதல்வன் கல்விக்கும் செல்வத்திற்கும் அதிபதியாகிய கணபதியை அங்கே விளங்கச் செய்வர்..

இந்திர திசைக்கு நேர் எதிரே மேற்கில் வருண திசையில் நீர்ப்பிடிப்பை நிறுத்தி - வட மேற்கு எனும் வாயு மூலையில்  மற்ற  குப்பைகளுக்காக ஒதுக்குவர்.. 


குபேர திசை எனும் வடக்கில் பண விவரங்களைப் பொதிந்து ஈசானியம் நோக்கி பிரார்த்திக்க செல்வங்களை அடையலாம்..

எண்திசைகளின் குவியமான பிரம்மரந்திரத்தில் (நடு வீட்டில்) நிறை விளக்கு ஏற்றி வைப்பது தொன்மரபு..  

பழைய வீடுகளில் பிரம்மரந்திரம் எனும் நடு வீட்டில் முற்றம் அமைத்திருப்பர் என்பதை நினைவு கூரவும்.. 

இப்போதைய 
நவீன கட்டமைப்பில் முன் கூடத்தின் நடுவே பத்ம தள கோலமிட்டு நடுவில் திருவிளக்கு வைப்பது சிறந்தது..

இந்திர திசை (கிழக்கு) பித்ரு திசை (தெற்கு) களில் எச்சில் உமிழ்தல் கூடாது.. வடக்கு முகமாக மலஜலம் கழிப்பதும் தகாது..

அறைகளே இல்லாத குடிசைக்குள் ஏதும் பிரச்னை இல்லை.. ஒன்றிரண்டு அறைகள் அமைத்ததும் வாஸ்து வந்து புகுந்து கொண்டு குழப்பி விடுகின்றது..

இப்படியாக மாதிரி இன்னும் பற்பல நடைமுறைகள்.. 

கிழக்கே இறைவன் இருக்கின்றான்  கால் நீட்டக் கூடாது எனில் இறைவன் இல்லாத திசை எது?..

அப்படி ஒன்றும் இல்லை.. சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும் என்பதே லட்சியம்..

இறைவனை -  பிரபஞ்சத்தை -  மனதுள் மதிக்கின்ற மாண்பு.. அவ்வளவு தான்.. அதுவே அறிவு.. அதுவே தெளிவு..
**

வண்டு அணைந்தன வன்னியுங் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டு போயறும் மேலை வினைகளே.. 5/14/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், பிப்ரவரி 27, 2024

ஆலிவ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 15
செவ்வாய்க்கிழமை


அரபு நாடுகளிலும் மத்திய தரைக் கடல் 
நாடுகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது ஆலிவ்..

அரபு மொழியில் ஜெய்த்தூன் எனப்படுகின்றது..

ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் உலகளவில் முதல் மூன்று இடத்தை வகிக்கின்றன என்று விக்கி சொல்கின்றது..


ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அதிகளவு நன்மை பயக்கும் நுண்மங்களைக் கொண்டுள்ளது..


ஆலிவ் எண்ணெய்  மூளையைப் பாதுகாத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது - என ஆய்வுகள் கூறுகின்றன..


ஆலிவ் எண்ணெய் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து  இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றது.

ஆலிவ் எண்ணெய்  கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றது..இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகவும் இருக்கின்றது..

ஆலிவ் எண்ணெயில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  
மற்றும் வைட்டமின் ஈ  உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது..  

ஆலிவ் எண்ணெய்  செரிமான மண்டலத்தை மேம்படுத்துகின்றது..

மேலும் பல  பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றது..


பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக பணி செய்த எனக்கு ஆலிவ்  பழக்கப்பட்ட ஒன்று..  ஆலிவ் எண்ணெய் மிகவும் பிடித்தமான ஒன்று..


அரபு உணவகங்களில் Salad களை  ஆலிவ் காய்கள் கொண்டு அலங்கரிப்பர்.. Salad களிலும் ஆலிவ் எண்ணெய் Dressing  என்று சேர்க்கப்படும்.. 


காலையில் ரொட்டிக்குத் துணையாகும் ஹூமூஸ் (கொண்டைக்கடலை) சட்னியிலும் Foul Medamus (பீன்ஸ் வகை) சட்னியிலும் ஆலிவ் எண்ணெயின் பங்கு இன்றியமையாதது..

பொதுவாக அங்கே ஆலிவ் எண்ணெய் சூடாக்கப்படுவதில்லை.. 

Cold kitchen எனப்படும் Salad பிரிவில் காய்கறிக் கலவையில் நேரடியாக சேர்க்கப்படுவது.. 

உணவு மேஜையிலும் நேரடிப் பயன்பாட்டிற்கு ஆயத்தமாக இருக்கும்..

இங்கே ஆலிவ் எண்ணெயில் வடை சுட்டு எடுப்பது போலக் காட்டுகின்றனர்..

ஆலிவ் காய்கள் சற்றே கசப்பும் துவர்ப்புமாக இருக்கும்.. பச்சை கறுப்பு என இரண்டு ரகங்கள் தான் அதிக பயன்பாட்டில் உள்ளவை.. வேறு ரகங்களும் இருக்கலாம்..

பச்சை நிற ஆலிவ் காய்களில் உள்ளவை : 
நீர்  78.85%
புரோட்டீன் 1.08% 
கார்போஹைட்ரேட் 4.02% 
நல்ல கொழுப்பு 16.05% 

100 கிராம் ஆலிவ் எண்ணெயில் 
Saturated fat (நல்ல கொழுப்பு) 14 g  70% என்று அறியப்பட்டுள்ளது..

இன்றைய சூழலில் இங்கே கண்ணெதிரே விளைகின்ற பாரம்பரிய எண்ணெய் வித்துகளில் இருந்து எந்த ஒரு நற்பயனும் நமக்கு முறையாகக் கிடைப்பதில்லை.. 

இவ்வித சூழ்நிலையில்
இங்கு  நல்லதொரு தரத்தில் ஆலிவ் எண்ணெய் கிடைக்கின்றது என்பதை அவரவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
***

திங்கள், பிப்ரவரி 26, 2024

மரச் செக்கு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 14
திங்கட்கிழமை


" வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு
- என்றனர் அந்தக் காலத்தில்..

நேர்மை நியாயங்கள் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட அமுத வாக்கு இன்று மீண்டும் நிதர்சனம் ஆகிக் கொண்டிருக்கின்றது..

சுத்தமான கறுப்பு எள்ளுடன் அதற்குத் தக்கபடி கருப்பட்டி/ வெல்லம் சேர்த்து ஆட்டினால் - எள்ளின் தரத்தைப் பொறுத்து  எண்ணெய் கிடைக்கும் ..


இப்படி எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு தான் நாம் அனைவரும் நலமுடன் வளர்ந்தோம் ..

அவ்வப்போது சிறு சிறு குறைபாடுகள்.. 

மனிதனுக்கு ஒரு சில பெருநோய்கள்.. அவையும் ஒழுக்கக் கேட்டினால் விளைந்தவை..

இன்றைக்கு அப்படியில்லை.. ஏதேதோ உருவாகி மக்களைப் பீடிக்கின்றன..

உண்ணுகின்ற உணவுகளே வியாதிகளைக் கொண்டு வருகின்றன ..

இதற்கெல்லாம் முதற்காரணம் நவீன 
வணிகச் சந்தை..

இப்போது நமக்கு முன் இருப்பது எண்ணெய்..

மரச்செக்கில் எண்ணெய் வித்துகள் கண் எதிரே பிழியப்பட்டது ஒருகாலம்..

இப்போது ஆடல் பாடல்  கும்மாளங்களுடன் 
இந்த எண்ணெய்.. அந்த எண்ணெய்.. - என்ற கூச்சல்கள்.. விளம்பரங்கள்..

சரி.. நல்ல எண்ணெய் எது?....

இன்று பரவலாக மரச் செக்கு எண்ணெய் பற்றிப் பேசப்படுகின்றது..
ஏனெனில் -

செக்கில் எண்ணெய் எடுப்பது பண்டைய முறை.. அதற்குள் புகுந்த நவீனம்  இயந்திரத்தின் மூலம் அந்தத் தொழிலை முற்றாக ஒழித்துக் கட்டியது..

இப்போது மீண்டும் அது பற்றிப் பேசப்படுகின்றது..

மரச் செக்கு இயந்திர செக்கு. இரண்டிற்கும் பலப்பல வேறுபாடுகள் ..

மரச் செக்கில் ஆட்டுவதை விட 
இரும்புச் செக்கில் தான் ஆட்டுவதால் அதிகம் எண்ணெய் கிடைக்கின்றது என்றொரு கருத்தும் நிலவுகின்றது..

இரும்புச் செக்கின் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.. 

இரும்புச் செக்கு சற்று சூடேறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இரும்பு /இயந்திரச் செக்கு எண்ணெய் பிழியச் சுழலும் போது, அதன் சுழற்சி வேகத்தால் சூடாகிறது ..

அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்து குறைந்து விடுகின்றது .. 

இதனால் தான், ‘ஒரு தடவை  பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் ’ என்கின்றனர்..

முந்தைய - மரச் செக்குகள் மாடுகள் மூலம்  இயக்கப்பட்டவை.. அதனால், எண்ணெய் வித்துகள் சூடாவதில்லை..


மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் நல்ல மணத்துடன்  அடர்த்தியாக இருக்கும்.. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமலும் இருக்கும்.. 

செக்கு உலக்கை இவை - வாகை, இலுப்பை மரங்களால் வடிவமைக்கப்பட்டு எண்ணெய் பிழியப்பட்டது..

மரச்செக்கில் பிழியப்பட்ட எண்ணெய் ஆரோக்கியமாக இருந்தது.. அதற்கு எவ்வித ஊட்டமும் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இருக்க வில்லை..


இப்போது -
விளம்பரங்கள் சொல்கின்றன எல்லாவித  ஊட்டச் சத்துகளையும் உடையது என்று..

இறைவன் அப்படியான ஒன்றை படைத்திருப்பதாகத் தெரியவில்லை..

இயற்கையாய் பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்யில் எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..

இயந்திரத்தில் ஆட்டி எண்ணெய் எடுக்கப்படும் போது ஏற்படும் சூட்டினால் உயிர்ச் சத்துகள் இழப்பு ஏற்படுகின்றது.. 
அவை மீண்டும் அவரவர் வசதிக்கு ஈடு கட்டப்படுகின்றன.. அவ்வளவு தான்..

இயற்கை கொடுத்ததே கொடை..  அதையும் இதையும் அதில் சேர்ப்பதற்கு எவரும் தேவையில்லை..

இப்போது மீண்டும் செக்கு  மரத்தால் உருவாக்கப்பட்டு இயல்பான வேகத்துடன் இயந்திரத்தால் இயக்கப்படுகின்றன என்கின்றனர்..

மக்களின் விருப்பம் மீண்டும் இயற்கை என்பதாக இருக்கின்றது..


இப்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகின்றது..

நீரிழிவு , உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என - பல வகையிலும் அவதிப்படுகின்ற மக்கள், மீண்டும் இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்..

இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன வணிக நிறுவனங்கள்..

இயற்கையைத் தேடும் மக்களிடையே - வணிகமும் பசுத் தோலைப் போர்த்திக் கொண்டு ஊடுருவி வருகின்றது..

நாம் தான் நமது அறிவைக் கொண்டு தப்பிப் பிழைத்தாக வேண்டும்..

ஆரவார  கூச்சல்களால்
விவசாயம், கால்நடை வளர்ப்பு இயற்கை உணவு இவற்றின் மீது நாட்டம் குறைந்து போனதாலும் மரச் செக்கு எண்ணெயின் மகத்துவம் மறக்கடிக்கப்பட்டதாலும் கேடுகள் பல சூழ்ந்து விட்டன..

வீண் விளம்பரக் கூத்துகளால் வேளாண்மையின்  நற்பேறுகள் அதன் கூறுகள் தெரியாமல் போயின..


நலிந்து போன இயற்கை எண்ணெய் வணிகம் - மரச் செக்குகள் வழியே மீண்டும் தழைக்க
ஆரம்பித்து விட்டது..

நமது எண்ணெய் தேவைக்கு நாமே  நேரடியாகப் பொருள்களை வாங்கிக் கொடுத்து எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆரோக்கியமான சூழல் உருவாகி விட்டது.... 

அது தழைக்க வேண்டும்..

நாம் - நமது நலத்திற்காக சற்று சிரமப்பட்டாலும் பரவாயில்லை..

நமது கைகளில்
நமது ஆரோக்கியம்..
நாளும் வாழ்வோம்
நன்றென வாழ்வோம்..

ஓம் நம சிவாய ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

கொழுப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 13
 ஞாயிற்றுக்கிழமை


கொழுப்பு

ஆரோக்கியமான சருமத்திற்கும் உடல் செல்களின் வளர்ச்சிக்கும் தேவையான அமிலங்களை கொழுப்பு வழங்குகின்றது..

நமது உடலால் உருவாக்க முடியாதது.. இது  உண்ணுகின்ற உணவின் மூலம் பெறப்படுவதாகும்..


மற்ற உணவுகளில் இருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகின்றது..
இயற்கையான நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.. திசுக்கள் வலுவடைகின்றன..

ஒவ்வொருவரும் தங்கள் உணவை கொழுப்பு / எண்ணெய் உடையதாகக் கொண்டிருப்பது அவசியம்..

உடலுக்குத் தேவைப்படும் கொழுப்புகள் மூன்று வகை.. 

நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats),
நிறைவுறா கொழுப்புகள் (Unsaturated Fats) ,
டிரான்ஸ் கொழுப்பு என்பவை..

நிறைவுற்ற கொழுப்பு Saturated Fats கெட்ட கொழுப்பு என்றும் 

நிறைவுறா கொழுப்பு Unsaturated Fats நல்ல கொழுப்பு என்றும் வழங்கப்படுகின்றன.. 

நிறைவுற்ற கொழுப்பு 
(Saturated Fats கெட்ட கொழுப்பு)
இது தமனிகளை அடைத்து, இரத்த ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும்..

நிறைவுற்ற கொழுப்பு உடைய Saturated fat 
(கெட்டகொழுப்பு) சைவ உணவுகள் :
பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி சீஸ்,
தாவர எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய் 
பனை எண்ணெய் - (பாமாயில்)
பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரி கேக்குகள்..

பால், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கெட்ட கொழுப்பு என்று மேலை மருத்துவம் சொன்னாலும் இவை நமக்கு மிகவும் அவசியமானவை..
இவற்றில் கவனம் வேண்டும்..

நிறைவுறா கொழுப்பு Unsaturated Fats (நல்ல கொழுப்பு) உடைய உணவுகள் :
தயிர்,  ஆலிவ் எண்ணெய்

புரோபயாடிக் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ள தயிரை சேர்த்துக் கொள்வது  இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றது..


ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் 
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் E வைட்டமின் K உள்ளன.


முந்திரி, பாதாம், ஆளி விதை இவற்றில் நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள்  நிறைந்துள்ளன, இவை இருதய நோய் மற்றும்  நீரிழிவு (2) நோயைத் தடுக்க உதவுகின்றன.

டிரான்ஸ் கொழுப்புகள் எந்த  நன்மையும்
இல்லாதவை. டிரான்ஸ் கொழுப்புகளின் செறிவு இயற்கையாகவே நிகழ்கிறது,  பதப்படுத்தப்பட்ட சில உணவுகளில் அதிக அளவு உள்ளது..பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, பால் அல்லாத கிரீம் , செயற்கை க்ரீம் கொண்டு தயாரிக்கப்பட்ட பிஸ்கட்கள், துரித உணவு வகைகள் என்று பலவற்றில் இருக்கின்றன..

சைவ உணவுப் பழக்கம் உடையவர்க்கு நெய், இயற்கை எண்ணெய்கள், தேங்காய் இவற்றில் இருந்து கொழுப்பு கிடைத்து விடுவதால் வேறொன்றும் கவலை இல்லை.. 

எனினும் கவனம் தேவை..

வைட்டமின் D, E மற்றும் K ஆகியன கொழுப்பில் கரையக்கூடியவை.. வைட்டமின்கள் உறிஞ்சப்பட்டு
சேமிக்கப்படுவதற்கு கொழுப்பு தான் காரணம்..

கொழுப்பு செல்கள் உடலை உகந்த வெப்பநிலையில் பராமரிக்கின்றன.. நெய் உடலின் செயல்பாடுகளுக்கு உதவுகின்றது..

உணவில் கொழுப்பை அறவே தவிர்ப்பது நல்லதல்ல.

" நெய்யில்லா உண்டி பாழ்.. " என்கின்றார் ஔவையார்..

நெய் இல்லாத உணவு வீண் - என்பது ஔவை மூதாட்டியின் கருத்து..

நெய் நமது உணவில் ஒரு முக்கியமான அங்கம்.. 

இன்றைக்கு 
நெய் என்ற பெயரை உச்சரிக்கவும் அஞ்சுகின்றனர் மக்கள்.. 

காரணம் மக்களிடையே உடல் உழைப்பு குறைந்து போனதே..

இன்று  பால் முதலான உணவுப் பொருட்களுக்கு -
கொழுப்பு குறைக்கப்பட்ட -
என்று ஒரு குறிப்பு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது 

உண்ணத்தக்கவை : 
( கொழுப்பு/ எண்ணெய் வகைகள் ) 
பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய், நெய்.. 


தவிரவும் - எள், நிலக்கடலை, தேங்காய், சோயா, 
சூரியகாந்தி மற்றும் ஆலிவ் எண்ணெய்கள்.. 
மேலும் டால்டா வனஸ்பதி 
ஆகியன..


சிறுதானியங்கள் : காலையில் சிறு தானிய உணவு எடுத்துக் கொண்டால் பசி தாங்கும்.. எனவே உடலில் கெட்ட கொழுப்பு  சேர்வது  குறைக்கப்படுகின்றது..

பீன்ஸ் : நார்ச்சத்தினைக் கொண்டது பீன்ஸ்.. காய்களின் வழி கிடைக்கின்ற நார்ச் சத்து நாம் உண்ணுகின்ற  உணவுகளின் வழியே கிடைக்கின்ற  கொழுப்பின் அளவையும்  கொழுப்பு உறிஞ்சப்படுதலையும் குறைக்கின்றது..

வெந்தயம் : கொழுப்பைக் குறைப்பதில் பெரும் பங்கு இதற்கு உண்டு..

இலவங்கப் பட்டை :
பட்டை தூளுடன் மிளகுத்தூள் சம அளவில் (இரண்டு கிராம்) சேர்த்துக் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில்  வாரத்தில் சில நாட்கள் குடித்து வந்தால் உடலுக்குத் தீங்கு தரும் கெட்ட கொழுப்பு  குறையும்..


இஞ்சி இடுப்பழகி :
அரை டீஸ்பூன்  சுக்குப் பொடியைச் வெந்நீரில் கலந்து ஆறவைத்து தேன் கலந்து பருகினாலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.. 

சிலர் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து கொள்ள  பரிந்துரைக்கின்றனர்..

பூண்டு :
கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தம் உயர்வதைக் தடுக்கின்றது.. மேலும் மாரடைப்பு மற்றும்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகின்றது..
**

இங்கே நம்ம வீட்ல 
பாலுந் தயிரும் 
வெண்ணெயும் நெய்யும் 
இல்லேன்னா 
நப்பின்னை வீட்டுக்குப் 
போய் எடுத்தாய்?..


புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
பற்பநாபா கொட்டாய் சப்பாணி.. 79
-: பெரியாழ்வார் :-


இந்த காலகட்டம் மிகவும் சிக்கலாக இருக்கின்றபடியால் காய்களை சற்று அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது..

கொழுப்பு விஷயத்தில் வேறு வேறு கருத்துகள் பரவலாக இருப்பதால் நல்ல மருத்துவரது ஆலோசனைகளைப் பின்பற்றுவது நலம்..

இருப்பினும் உடல் உழைப்பு குறைந்து விட்ட இக்காலத்தில் நெய் எண்ணெய் வகைகளின் பயன்பாட்டில் கவனமாக இருந்து நலம் பெறுவோம்..
*

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.. 947

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்..

ஒருவன் தனது பசியறிந்து 
உண்ண வேண்டிய நேரத்தில் 
உணவின் அளவு (தன்மை) அறியாமல் 
அதிகம் உண்டானானால், அவனிடத்தில் 
நோய்களும் அளவின்றி  வளரும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
***

சனி, பிப்ரவரி 24, 2024

மாசி மகம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி மகம்
மாசி 12
சனிக்கிழமை


பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்ப ராசியிலும் தேவ குருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும்  நிறைநிலவும் கூடிய நந்நாளே மகாமகத் திருநாள்..

தற்போது குருவின் இருப்பு மேஷ ராசி.. மகாமகத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன..

கும்பகோணம் எனப்படும்
இத்தலத்தில் பல திருக்கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..


அமுதம் சிதறிய மண்ணில்  ஈசனே தன் திருக்கரங்களால் வடித்தெடுத்த மூர்த்தி.. மூல லிங்கம்..

ஐயனின் வடபுறமாக,  வாமபாகத்தில் - கிழக்கு நோக்கிய வண்ணம் அம்பிகையின் சந்நிதி..


மந்திர பீட ஸ்ரீ மங்களேஸ்வரி.. 
பெயருக்கு ஏற்றபடி - (பெரும்பாலான சமயங்களில்) மஞ்சள் பட்டுடன் மங்கலம் பொழிகின்றாள். தயாபரியாகிய தாயின் முகத்தை - நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பசியே தோன்றாது..

அப்படியே பசித்தாலும் -  அவளே வந்து அமுதூட்டுவாள்.. 

பசித்திருந்த வேளையில்
அப்படியொரு அனுபவத்தினை  - எளியேன் பெற்றுள்ளேன்..

வன்னி மரம் தலவிருட்சம்.  மகத் தீர்த்தம் (மகாமகக் குளம்) . இதில் நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - ஐதீகம்..

இங்கே ஆதி விநாயகர்..
திருமுருகப் பெருமான் சூர சம்ஹாரம் செய்யும் முன், இத் திருத்தலத்தில் தாயிடம், மந்த்ரோபதேசம் பெற்றார் - என்பது திருக்குறிப்பு.


கும்பேஸ்வரர் திருக்கோயில்
வடக்குத் திருச்சுற்றில் - ஸ்ரீ கிராத மூர்த்தி ( வேடுவ வடிவம்) சந்நிதி - இத்திருத்தலத்துக்கே உரிய சிறப்பு!..

இவரே அமிர்த கலசத்தை அம்பினால் எய்தவர்.. சிருஷ்டி தொடங்குதற்குக் காரணம் ஆனவர்..

மக நட்சத்திர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் - ஸ்ரீ கிராத மூர்த்தியை வணங்க - பெரும் பிணி, வல்வினைகள், தாரித்ரயங்கள் -  அனைத்தும் அகலும்..

1 ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
2 ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்
3 ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில்
4 ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
5 ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
6 ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
7 ஸ்ரீ பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
8 ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்
9 ஸ்ரீ கௌதமேஸ்வரர் திருக்கோயில்

என்பன நகருக்குள் விளங்கும் இதர சிவாலயங்கள்..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்,
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ வராகப் பெருமாள் திருக்கோயில் -

- என்பன வைணவத் திருக்கோயில்கள்.. 


இன்று நாம் காணும் மகாமகக் குளமும் படித்துறையும் படித்துறைக் கோயில்களும் கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் உருவாக்கப்பட்டவை.. 

தஞ்சையை ஆட்சி செய்தவர்களாகிய -
சேவப்ப நாயக்கர் (1532 - 1580)
அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1614)
அவருடைய மகன் ரகுநாத நாயக்கர் (1600 - 1634) எனும் மூன்று மன்னர்களிடமும் முதன்மை அமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் கோவிந்த தீக்ஷிதர்..  

அரசர்கள் தீக்ஷிதருக்கு அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு - 

இந்தத் திருப்பணியை அவர் மேற்கொண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன..

குடந்தையிலுள்ள வேத பாட சாலையை நிறுவியவரும் இவரே..

இவர் பெயரால் - தஞ்சையில் ஐயன் குளம், ஐயன் கடைத்தெரு என்று விளங்கி வருகின்றன..

தஞ்சையை அடுத்துள்ள ஐயம்பேட்டையும்,
குடந்தையை அடுத்துள்ள கோவிந்தபுரமும் இவர் பெயரால் அமைந்தவையே..

மகாமகக் குளம் - 190

பொற்றாமரைக் குளம் - 1900

தேவாரத்தில் குடந்தைக் காரோணம் குடமூக்கு என்றும் திவ்யப்ரபந்தத்தில் திருக்குடந்தை எனவும் புகழப்பட்ட திருத்தலம்  - அருணகிரிநாதர் காலத்தில் - கும்பகோணம் என்றாகி விட்டது..

கோலமுடன் அன்று சூர்ப்படையின் முன்பு 
கோபமுடன் நின்ற  குமரேசா
கோதைஇரு பங்கின்மேவ வளர் கும்ப
கோண நகர் வந்த  பெருமாளே!..

- என்று அருணகிரிநாதர் போற்றிய திருத்தலம்..

நன்று நோற்கில் என் பட்டினியாகில் என்
குன்றம் ஏறி இருந் தவஞ் செய்யில் என்
சென்று நீரிற் குளித்துத் திரியில் என்
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.. 5/99/8
-: திருநாவுக்கரசர் :-

புறந்தூய்மை நீரால் அமைவதைப் போல
அகந்தூய்மை 
மாசி மக  நீராடலால் அமையட்டும்!..
**

ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்தேற வாங்கி ஆங்கே
கூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்து எங்கூத்தனாரே.. 6/75/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, பிப்ரவரி 23, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
வெள்ளிக்கிழமை


தனன தனதன தனன தனதன
தனன தனதன ... தனதான

குமர குருபர முருக சரவண 
குகசண் முககரி ... பிறகான

குழக சிவசுத சிவய நமவென 
குரவ நருள்குரு ... மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட 
லதென அநுதின ... முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு 
மபய மிடுகுர ... லறியாயோ..

திமிர எழுகட லுலக முறிபட 
திசைகள் பொடிபட ... வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர் 
திறைகொ டமர்பொரு ... மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி நிணைகழல் 
நதிகொள் சடையினர் ... குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு 
நவிலு மறைபுகழ் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


குமரா குருபரா முருகா 
சரவணா குகா சண்முகா

கரிமுகக் கணபதிக்கு இளையவனே 
சிவசக்தி திருமகனே

சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்திற்குரிய 
சிவபெருமான் அருளிய குருமணியே 
என்றெல்லாம்

அமிர்தத்திற்காகக கடலைக்
கடைந்தபோது தேவர்கள் எழுப்பிய 
ஓசையைப் போல

உன்னை நாள்தோறும் வாயாரப் பாடி
ஆரவாரத்துடன் துதிக்கின்ற 
அடியார்கள் தமது

கொடிய வினைகள் நீங்குவதற்காக
அபயம் என்று ஓலமிடும் குரல்
உனக்குக் கேட்கவில்லையோ?..

ஏழு கடல்களும்
உலகங்களும் அழியவும்
 எட்டுத் திசைகளும் பொடி படவும்

போருக்கு வந்த அசுரர் தலையும் 
உடலும் பூமியில் விழுமாறு
அவர்களது உயிரைக் கவர்ந்து போரிட்ட 
வேலனே வீரனே..

யமனின் உயிரை எடுத்த நெருப்பைப் 
போன்ற  திருவடியும்
கங்கையைத் தாங்கிய
சடைமுடியும் உடைய 
சிவபெருமானின் குருநாதனே

எழில்மிகு சுவாமிமலைதனில்  அமர்ந்தவனே
வேதங்கள் புகழ்கின்ற பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய நம ஓம்
***