நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 26, 2024

மரச் செக்கு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 14
திங்கட்கிழமை


" வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு
- என்றனர் அந்தக் காலத்தில்..

நேர்மை நியாயங்கள் நிறைந்திருந்த அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட அமுத வாக்கு இன்று மீண்டும் நிதர்சனம் ஆகிக் கொண்டிருக்கின்றது..

சுத்தமான கறுப்பு எள்ளுடன் அதற்குத் தக்கபடி கருப்பட்டி/ வெல்லம் சேர்த்து ஆட்டினால் - எள்ளின் தரத்தைப் பொறுத்து  எண்ணெய் கிடைக்கும் ..


இப்படி எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு தான் நாம் அனைவரும் நலமுடன் வளர்ந்தோம் ..

அவ்வப்போது சிறு சிறு குறைபாடுகள்.. 

மனிதனுக்கு ஒரு சில பெருநோய்கள்.. அவையும் ஒழுக்கக் கேட்டினால் விளைந்தவை..

இன்றைக்கு அப்படியில்லை.. ஏதேதோ உருவாகி மக்களைப் பீடிக்கின்றன..

உண்ணுகின்ற உணவுகளே வியாதிகளைக் கொண்டு வருகின்றன ..

இதற்கெல்லாம் முதற்காரணம் நவீன 
வணிகச் சந்தை..

இப்போது நமக்கு முன் இருப்பது எண்ணெய்..

மரச்செக்கில் எண்ணெய் வித்துகள் கண் எதிரே பிழியப்பட்டது ஒருகாலம்..

இப்போது ஆடல் பாடல்  கும்மாளங்களுடன் 
இந்த எண்ணெய்.. அந்த எண்ணெய்.. - என்ற கூச்சல்கள்.. விளம்பரங்கள்..

சரி.. நல்ல எண்ணெய் எது?....

இன்று பரவலாக மரச் செக்கு எண்ணெய் பற்றிப் பேசப்படுகின்றது..
ஏனெனில் -

செக்கில் எண்ணெய் எடுப்பது பண்டைய முறை.. அதற்குள் புகுந்த நவீனம்  இயந்திரத்தின் மூலம் அந்தத் தொழிலை முற்றாக ஒழித்துக் கட்டியது..

இப்போது மீண்டும் அது பற்றிப் பேசப்படுகின்றது..

மரச் செக்கு இயந்திர செக்கு. இரண்டிற்கும் பலப்பல வேறுபாடுகள் ..

மரச் செக்கில் ஆட்டுவதை விட 
இரும்புச் செக்கில் தான் ஆட்டுவதால் அதிகம் எண்ணெய் கிடைக்கின்றது என்றொரு கருத்தும் நிலவுகின்றது..

இரும்புச் செக்கின் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.. 

இரும்புச் செக்கு சற்று சூடேறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

இரும்பு /இயந்திரச் செக்கு எண்ணெய் பிழியச் சுழலும் போது, அதன் சுழற்சி வேகத்தால் சூடாகிறது ..

அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்து குறைந்து விடுகின்றது .. 

இதனால் தான், ‘ஒரு தடவை  பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் ’ என்கின்றனர்..

முந்தைய - மரச் செக்குகள் மாடுகள் மூலம்  இயக்கப்பட்டவை.. அதனால், எண்ணெய் வித்துகள் சூடாவதில்லை..


மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் நல்ல மணத்துடன்  அடர்த்தியாக இருக்கும்.. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமலும் இருக்கும்.. 

செக்கு உலக்கை இவை - வாகை, இலுப்பை மரங்களால் வடிவமைக்கப்பட்டு எண்ணெய் பிழியப்பட்டது..

மரச்செக்கில் பிழியப்பட்ட எண்ணெய் ஆரோக்கியமாக இருந்தது.. அதற்கு எவ்வித ஊட்டமும் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இருக்க வில்லை..


இப்போது -
விளம்பரங்கள் சொல்கின்றன எல்லாவித  ஊட்டச் சத்துகளையும் உடையது என்று..

இறைவன் அப்படியான ஒன்றை படைத்திருப்பதாகத் தெரியவில்லை..

இயற்கையாய் பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்யில் எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..

இயந்திரத்தில் ஆட்டி எண்ணெய் எடுக்கப்படும் போது ஏற்படும் சூட்டினால் உயிர்ச் சத்துகள் இழப்பு ஏற்படுகின்றது.. 
அவை மீண்டும் அவரவர் வசதிக்கு ஈடு கட்டப்படுகின்றன.. அவ்வளவு தான்..

இயற்கை கொடுத்ததே கொடை..  அதையும் இதையும் அதில் சேர்ப்பதற்கு எவரும் தேவையில்லை..

இப்போது மீண்டும் செக்கு  மரத்தால் உருவாக்கப்பட்டு இயல்பான வேகத்துடன் இயந்திரத்தால் இயக்கப்படுகின்றன என்கின்றனர்..

மக்களின் விருப்பம் மீண்டும் இயற்கை என்பதாக இருக்கின்றது..


இப்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகின்றது..

நீரிழிவு , உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என - பல வகையிலும் அவதிப்படுகின்ற மக்கள், மீண்டும் இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்..

இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன வணிக நிறுவனங்கள்..

இயற்கையைத் தேடும் மக்களிடையே - வணிகமும் பசுத் தோலைப் போர்த்திக் கொண்டு ஊடுருவி வருகின்றது..

நாம் தான் நமது அறிவைக் கொண்டு தப்பிப் பிழைத்தாக வேண்டும்..

ஆரவார  கூச்சல்களால்
விவசாயம், கால்நடை வளர்ப்பு இயற்கை உணவு இவற்றின் மீது நாட்டம் குறைந்து போனதாலும் மரச் செக்கு எண்ணெயின் மகத்துவம் மறக்கடிக்கப்பட்டதாலும் கேடுகள் பல சூழ்ந்து விட்டன..

வீண் விளம்பரக் கூத்துகளால் வேளாண்மையின்  நற்பேறுகள் அதன் கூறுகள் தெரியாமல் போயின..


நலிந்து போன இயற்கை எண்ணெய் வணிகம் - மரச் செக்குகள் வழியே மீண்டும் தழைக்க
ஆரம்பித்து விட்டது..

நமது எண்ணெய் தேவைக்கு நாமே  நேரடியாகப் பொருள்களை வாங்கிக் கொடுத்து எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆரோக்கியமான சூழல் உருவாகி விட்டது.... 

அது தழைக்க வேண்டும்..

நாம் - நமது நலத்திற்காக சற்று சிரமப்பட்டாலும் பரவாயில்லை..

நமது கைகளில்
நமது ஆரோக்கியம்..
நாளும் வாழ்வோம்
நன்றென வாழ்வோம்..

ஓம் நம சிவாய ஓம்
***

10 கருத்துகள்:

  1. விஞ்ஞான வசதிகள் இயற்கையைக் கெடுத்து விடுகின்றன.  இப்போது வரும் செக்கு எண்ணெய்களே எந்த அளவு உண்மை என்பது தெரிய மாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.

    மரச்செக்கு எண்ணெய் எங்கும் இப்போது வியாபாரத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. கருப்பட்டி போட்டு ஆட்டபட்டது, வெல்லம் போட்டு ஆட்டப்பட்டது என்று. எல்லாவற்றிலும் எது நல்ல எண்ணெய் எது கலப்படம் என்று தெரியாது.

    பல வருட பாரபரிய மரச்செக்கு எண்ணெய் என்பதை வாங்கி உபயோகப்படுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்லெண்ணையின் மகத்துவம் பற்றியும், இயற்கை உணவு முறையின் சிறப்பு பற்றியும் எடுத்துக் காட்டி உள்ளீர்கள்.

    சிறுது காலத்துக்கு முன்பு கூட மாடுகள் இழுக்கும் செக்கு வீடுகள் இருந்தன. இப்பொழுது அவைகள் காணாமல் போய்விட்டன.

    பதிலளிநீக்கு
  4. விஞ்ஞான வளர்ச்சி என்றுமே மனித வாழ்வுக்கு இடையூறுதான்.

    இதை மக்கள் ஏற்பதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.பதிவை சார்ந்த படங்கள் அழகு. செக்கு எண்ணெய்யின் மகத்துவத்தைப்பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள். அம்மா வீட்டில் இருந்தவரை செக்கு எண்ணெய்தான் தினசரி உபயோகம். வாரந்தோறும் எண்ணெய் குளியலுக்கும் அதுவேதான். மாறி வந்த வாழ்க்கையிலும் தேடித் தேடி நல்ல எண்ணெய்யின் பயன்பாடு ஒரளவு இருந்தது. இப்பொது எங்கு போய் விசாரிப்பது எனத் தெரியவில்லை. அந்தக்கால செக்கு எண்ணெய்யின் மணம் இன்னமும் நாசியில் உள்ளது. எள்ளுப் புண்ணாக்கை மறக்க முடியாது. பழைய நினைவுகளை தங்கள் பதிவு தந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. செக்கு எண்ணை மிகவும் நல்லதுதான். ஆனால் செக்கு எண்ணை என்று கடையில் விற்பவை விலை ரொம்பவும் கூடுதலாக இருக்கிறது. வணிகமாக.

    நாம் கொண்டு கொடுத்தால் எண்ணை எடுத்து தரும் மரச் செக்குகள் சென்னையில் இருக்கின்றன. ஆனால் இங்கு இல்லை. கடையில் செக்கு எண்ணை என்று விற்பவற்றை எவ்வளவு தூரம் நம்பலாம் என்று தெரியவில்லை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. என் பாட்டி தாத்தா திருக்குறுங்குடியில் இருந்தப்ப நான் தான் போய் செக்கு ஆட்டுபவரிடம் நல்லெண்ணையை தூக்கில் வாங்கி வருவேன். இப்பவும் இருக்கிறதாகக் கேள்விப்படுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணை தான் பெரும்பாலும். தென்னந்தோப்பு இருப்பதால் தேங்காய் பறித்து வீட்டிற்குக் கொண்டு வந்து உரித்து, உலர்ந்த தேங்காய்களைத் தனியாக உரித்து காய வைத்து எண்ணை ஆட்டிக் கொண்டுவருவதுதான் இதுவரை நடக்கின்றது. எனவே கடையில் வாங்கிப் பழக்கமில்லை.

    நல்ல தகவல்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..