நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 28, 2024

எண் திசை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 16
புதன்கிழமை


கங்கையைச் சடையுள் வைத்தார் 
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் 
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் 
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் 
ஐயன் ஐயாறனாரே.. 4/38/1
-: திருநாவுக்கரசர் :-
**
மனதின் நினைவு அடுக்கில் இருந்து 
இந்தப் பதிவைத் தருவதில் மகிழ்ச்சி..

திசைகள் என்று குறிக்கப்பட்டவை அண்டப் பிரபஞ்ச வெளியின் ஆச்சர்யம்..

அதைப் பற்றிய ஞானம் நம்மவர்களுக்கு இயல்பாகவே இருந்தது.. 

அண்டப்பெருவெளி பற்றிய அறிவினை யாரோ வந்து தான் சொல்லித் தந்ததாக - இன்றைக்கு ஒரு பக்கத்தில்  உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்..

எட்டுத் திசைகளுக்கும் பெயர் சூட்டி அங்கே அதிபதிகளை நியமித்த மரபு நம்முடையதே..

நேர் வடக்கில் இருக்கின்றது துருவ நட்சத்திரம்..

வானில் என்றும் அழியாத துருவ நட்சத்திரமாகத் திகழ்பவர்  துருவ மகராஜன்.. அவரது கதை தெரியும் தானே!..

அக்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்வோர்  துருவ நட்சத்திரத்தைக் கொண்டே இரவில் திசையறிந்தனர்.. 

வட புலத்தின் காந்த சக்தியை நம்மவர்கள் அறிந்திருந்தனர்.. இதன் அடிப்படையில் தான் - திசை காட்டும் கருவி உருவாகியது..

நமது காரியங்கள் ஒவ்வொன்றும் திசைகளைக் கொண்டு தான்..


மாயனாய் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய்த்
தேயமாய்த் திசை எட்டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்ற
காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் தோளி பாகர் இலங்கு மேல் தளியனாரே.. 4/43/6
-: திருநாவுக்கரசர் :-

காலையில் எழுந்ததும் முகம் துலக்கிய பின் வணங்க வேண்டிய திசை கிழக்கு.. கிழக்கில் சூர்யோதயத்தை நமஸ்கரித்தால் தெய்வசக்திகளையும்  வணங்கியதாக அர்த்தம்..

பெற்றோர்களையும் பெரியோர்களையும்  கிழக்கு முகமாக நிறுத்தி நாம் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.. அல்லது மேற்கு முகமாக மண்டியிட்டு வணங்க வேண்டும்.. கிழக்கே கால் நீட்டக் கூடாது..

மாங்கல்ய தாரணத்தின் திசை கிழக்கு.. மங்கல மணவறை அமைப்பதிலும் பற்பல நியதிகள்.. மணமேடையில் காலணிகளுக்கு அனுமதியில்லை.. இன்றைக்கு அப்படி இல்லை..

மஞ்சள் முகமே வருக..
மங்கல விளக்கே வ்ருக.. -
என்றது தமிழ்.. ஆனால்,

மணமகளே -  மஞ்சள் முகத்துடன் வருவதில்லை..
மணமகனும் முகத்தை மழிப்பதில்லை..  ஏதோ போய்க் கொண்டே இருக்கின்றது.. 

இதிலே
நீ வேற ஏண்டா உளறிக் கொண்டு இருக்கின்றாய்!.. - என்கின்றீர்களா.. அதுவும் சரி தான்..


குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை  அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே!.. 890
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

மேற்கே அமர்ந்து கிழக்கு முகமாகப் படிப்பதும் வடக்கு முகமாகத் தியானிப்பதும் சாலச் சிறந்தது..

இந்திர திசையில் மாக்கோலமிட்டு மலரிட்டு விளக்கேற்றி பொழுதினை வரவேற்பது இந்துக்களின் மரபு..

வேளாண்மையில் நாற்றங்கால் முதலான பணிகளையும் மகசூல் அறுவடையையும் ஈசானியம் எனும் தென்மேற்கில் இருந்து ஆரம்பிப்பர்.. 

மனையில் ஈசானிய திசையில் குப்பை கூளம் சேராமல் பார்த்துக் கொள்வர்..

வீட்டுக்குள் சமையலறை ஆக்னேயம் எனும் தென் கிழக்கில் அடுப்பு அமைத்து கிழக்கு முகமாக நின்றோ இருந்தோ சமைப்பர்..

நெற்குதிர், பணப்பெட்டி இவைகளை நிருதி எனும் வடமேற்கில் அமைத்து மூல முதல்வன் கல்விக்கும் செல்வத்திற்கும் அதிபதியாகிய கணபதியை அங்கே விளங்கச் செய்வர்..

இந்திர திசைக்கு நேர் எதிரே மேற்கில் வருண திசையில் நீர்ப்பிடிப்பை நிறுத்தி - வட மேற்கு எனும் வாயு மூலையில்  மற்ற  குப்பைகளுக்காக ஒதுக்குவர்.. 


குபேர திசை எனும் வடக்கில் பண விவரங்களைப் பொதிந்து ஈசானியம் நோக்கி பிரார்த்திக்க செல்வங்களை அடையலாம்..

எண்திசைகளின் குவியமான பிரம்மரந்திரத்தில் (நடு வீட்டில்) நிறை விளக்கு ஏற்றி வைப்பது தொன்மரபு..  

பழைய வீடுகளில் பிரம்மரந்திரம் எனும் நடு வீட்டில் முற்றம் அமைத்திருப்பர் என்பதை நினைவு கூரவும்.. 

இப்போதைய 
நவீன கட்டமைப்பில் முன் கூடத்தின் நடுவே பத்ம தள கோலமிட்டு நடுவில் திருவிளக்கு வைப்பது சிறந்தது..

இந்திர திசை (கிழக்கு) பித்ரு திசை (தெற்கு) களில் எச்சில் உமிழ்தல் கூடாது.. வடக்கு முகமாக மலஜலம் கழிப்பதும் தகாது..

அறைகளே இல்லாத குடிசைக்குள் ஏதும் பிரச்னை இல்லை.. ஒன்றிரண்டு அறைகள் அமைத்ததும் வாஸ்து வந்து புகுந்து கொண்டு குழப்பி விடுகின்றது..

இப்படியாக மாதிரி இன்னும் பற்பல நடைமுறைகள்.. 

கிழக்கே இறைவன் இருக்கின்றான்  கால் நீட்டக் கூடாது எனில் இறைவன் இல்லாத திசை எது?..

அப்படி ஒன்றும் இல்லை.. சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும் என்பதே லட்சியம்..

இறைவனை -  பிரபஞ்சத்தை -  மனதுள் மதிக்கின்ற மாண்பு.. அவ்வளவு தான்.. அதுவே அறிவு.. அதுவே தெளிவு..
**

வண்டு அணைந்தன வன்னியுங் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்
எண் திசைக்கும் இடைமருதா என
விண்டு போயறும் மேலை வினைகளே.. 5/14/5
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  2. திசைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட் ..

      நீக்கு
  3. எண் திசையும் அவற்றின் நடைமுறைகளும் பற்றி விரிவாக தந்துள்ளீர்கள்.

    'கங்கையைச் சடையுள் வைத்தார்"......சற்று மறந்திருந்தேன் இப்பொழுது பாடிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தேவாரத்தை நினைவுபடுத்திக் கொண்டமைக்கு மகிழ்ச்சி..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  4. எண் திசைகள்பற்றி அருமையான பதிவு.
    அப்பர் பாடல், தொண்டரடி பொடியாழவார் பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. கிழக்கிலே கால் நீட்டாக கூடாது என்பது புதிய செய்தி.  கிழக்கில் பெரியவர்களை நிறுத்தி மேற்கு முகமாக கால் நீட்டித்தான் வணங்குவது வழக்கம் என்றாலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழக்கு எனும் இந்திர திசையில் கால் நீட்டக்கூடாது..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  6. இன்றைய அபார்ட்மெண்ட் யுகத்தில் திசைகள் பற்றிய கோட்பாடுகளை சரியாக பின்பற்ற முடியாதது வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிளாட்டில் ஒருபுற்ம் குறித்து வைத்துக் கொள்ளலாம்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..