நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

மாசிலா மாசி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


மாசிக் கடலாட்டு - என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு..

இன்று மாசி முதல் நாள்.. 

ராசி மண்டலக் கணக்கில் கும்பத்தில் சூர்யன் பிரவேசிக்கின்றான்..

மாசி மாதத்தில் தான் மகாசிவராத்திரி..


திருமயிலையில் சிவநேசஞ்செட்டியாரது திருப்புதல்வி பூம்பாவை விஷம் தீண்டி மாண்டு போன நிலையில் -
சாம்பற்குடத்தில் இருந்து அப்பெண்ணை மீட்டெழுப்பும் போது -

திருமயிலையில் நிகழும் மாசி தீர்த்தவாரி (கடலாட்டு) வைபவத்தைக் காண்பதற்கு வருவாயாக!.. 

- என்று அழைக்கின்றார்..

பூம்பாவையும் சாம்பற்குடத்தில் இருந்து மீண்டு எழுகின்றனள் என்பது தேவாரம் காட்டுகின்ற தெய்வீகம்..

ஆவணியை அடுத்த ஆறாவது மாதம் மாசி..


இன்று மாசியின் வளர்பிறை சதுர்த்தி.. விசேஷமானது.. 
இதற்கு அடுத்தது

அடுத்த வாரம் சனிக்கிழமை 12  (24/2/24) அன்று அமிர்தயோகத்தில் நிறை நிலா.. மக நட்சத்திரம்..

மாசி மகம்.. இதை அனுசரித்தே தமிழகத்தில் பற்பல ஆலயங்களிலும் உற்சவங்கள்.. திருவிழாக்கள்..

மாசி மகோற்சவம் எனப்படுவது இதன் அடிப்படையில் தான்..

மாசிப் பெருந்திருவிழா திருச்செந்தூரின் சிறப்பு..

திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள்
மாசி மகத்தன்று திருமலை ராயன் பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருள்கின்றார்..

காரணம் இவ்வூரில் மீனவ குலத்தில் பிறந்த பத்மினி எனும் நங்கை கண்ணபுரத்துக் கருமணியின் மேல் காதலானாள்.. 

இவள் மீனவ குல மன்னவனான உபரிசிரவஸூவின் மகள்..

வில்லிபுத்தூர் கோதை மாதிரி - கற்பூரம் நாறுமோ.. கமலப்பூ நாறுமோ.. - என்று இவளும் சந்தேகம் கேட்டாளா என்பது தெரியவில்லை..

கண்ணபுரத்துக் கருமணியும் காரிகையுடன் கை கோர்த்துக் கொண்டது..


மீனவர்க்கு மருமகன் என்று ஆனதால் மாசி மகத்தன்று  மாமனார் ஊருக்கு எழுந்தருள்கின்றார் சௌரிராஜன்..

திருமருகல் வரதராஜப் பெருமாள்,
திருமலைராயன் பட்டினம் வரதராஜப் பெருமாள், ரகுநாதப் பெருமாள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் நிரவி கரிய மாணிக்கப் பெருமாள் ஆகிய மூர்த்திகளும் இதே நாளில் தீர்த்தவாரி காண்கின்றனர்..

ஸ்ரீ முஷ்ணம் வராஹ மூர்த்தியும் அங்கிருந்து கடற்கரைக்கு தீர்த்த வாரிக்காக பல்லக்கில் எழுந்தருள்கின்றார்..

இவற்றுள் சிறப்புற நடைபெறுவது கும்பகோணத்தில் மாசி மகப் பெருவிழா.. 


ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ நாகேஸ்வரர், 
ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ அபிமுகேஸ்வரர், 
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர் ஆகிய கோயில்களில் பத்து நாள்கள் பிரம்மோற்சவம்..  நிறைவாக மாசி மக தீர்த்தவாரி..

திருக்குடந்தை திவ்யதேச கோயில்களிலும் மாசிமக திருவிழாவும் தீர்த்தவாரியும் நடைபெறும்..

எல்லாவற்றிலும் தலையாயது  பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை (வியாழ வட்டத்தில்)  நிகழ்வுறும் மகாமகப் பெருவிழா.. 

வியாழன் (குரு) எனும்  கிரகம் தனது ஒரு சுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் பன்னிரண்டு..

வியாழன் சிம்ம ராசியில் இருக்கும் ஆண்டில் கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்க சந்திரன் மக நட்சத்திரத்தில் நிற்கும் நாளே மகாமகப் பெருவிழா.. 

ஆதியில்  இந்நகருக்கு கும்பகோணம் என்று பெயர் வைத்தது யார்?..

இந்த கணக்கீட்டின் அடிப்படையில் இயற்கையாக அமைந்தது தான்!.. 

அண்டவெளியில் கோள்கள் சுழல்கின்ற இப்படியான கணக்கீடுகள் - நமது நாட்டின் கல்வியாலும் 
மேலான ஞானத்தாலும் விளைந்தவையாகும்..

இப்படியிருக்க -
அவனும் இவனும்  கொள்ளையடிப்பதற்காக இந்நாட்டுக்குள் நுழைந்த போது மகாமகக் கணக்கீட்டையா கொண்டு வந்தார்கள்?..

இதை உணராத தற்குறிகள் பலவும் - அவனும் இவனும் தான் இந்நாட்டை கல்வியில் உருவாக்கியதாக ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன..

திருக்குடந்தையில்
கடந்த - மன்மத ஆண்டு மாசி பத்தாம் நாள் திங்கட்கிழமை  அன்று (22.02.2016) மகாமகம் நடந்த நிலையில் அடுத்த மகாமகம் எதிர்வரும் பிலவங்க ஆண்டின் மாசி மாத முதல் வாரத்தில் (2028) நிகழ இருப்பதாகத்  தெரிகின்றது..

ஆக - மகாமகத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன..


அடுத்து கர்ப்ப ஓட்டம்..

அதென்ன கர்ப்ப ஓட்டம்!?..
கர்ப்பத்துக்காக ஓடுவதா!..

உண்மையில் இது மார்கழி பூராட நட்சத்திரத்தினை அனுசரித்தது..

கர்ப்பம் எனில் கரு, சூல்..
பூக்களின் கருக்குழி சூலகம் எனப்படும்.. 

சூல் கொண்ட பெண்ணை சூலி என்பதும் கர்ப்பவதி என்பதும் தமிழ் மரபு.. 

நீர் கொண்டு மழை மேகம் உருவாகித் திகழ்வதை அன்றே மாணிக்கவாசகரும் கோதை நாச்சியாரும் பாடி வைத்து விட்டனர்..


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மை தான் முக்கியமாக இருந்தது....

அப்போது மார்கழியில் மேகங்களின் நகர்வினைக் கண்டு  (மார்கழியின் பத்தாம் மாதம் ஐப்பசி)  

அடுத்து வரும் கார் காலத்தின்  மழையைக்  கணக்கிடுவது மக்கள் எல்லாருக்கும் இயல்பாக இருந்தது..

இப்போது வளரும் தலைமுறைக்கு கையில் இருக்கும் நுணுக்கியைப் பார்ப்பதே பிழைப்பாகிப் போனது.. 

கார்மேகங்களைக் காண்பதற்கும் களிப்பதற்கும் ஏது நேரம்?.. 

அது கிடக்கட்டும்..

மார்கழியில் மழை மேகங்களின் நகர்வு சற்றே தவறினால் (குறைப் பிரசவம் போல) மாசியில் கண்டு கொள்வர்..

கர்ப்ப ஓட்டம் என்பது இந்திய  பஞ்சாங்கத்தில்  குறிப்பிடப்படும் ஒருவித நம்பிக்கை மட்டுமே. இதற்கு அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லை என்று விக்கி சாமார்த்தியமாக நழுவிக் கொள்கின்றது...


விக்கியை வைத்துக் கொண்டா பாரதம் வளர்ந்தது?.. 
நாமெல்லாம் விக்கி இன்றி வளர வில்லையா!?..

விக்கியை எல்லாம் விட்டு விட்டு -
சீர்மிகு மாசி மாதத்தினை வணங்கி வரவேற்று சிறப்புறு வளம் எலாம் பெற்று சீருடன் வாழ்வோம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான விவரங்கள்.  படித்தேன், தெரிந்து கொண்டேன்.  கெர்ப ஓட்டம் 0 மனிதன் தன் விஞ்ஞான வளர்ச்சியால் இயற்கையை எவ்வளவோ சீரழித்திருக்கிறோம். 

  பதிலளிநீக்கு
 2. ஈஸ்வரனின் தரிசனம், மாசிமகம் பற்றிய விவரங்கள் மிக அருமை. உலகமும் நிகழ்வுகளும் எல்லாமே இறைவனின் திருவிளையாடல்கள்தானே.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. மாசி மகத்தைப் பற்றியும், மாசி மாதத்தின் சிறப்புக்களைப் பற்றியும் அழகாக எழுதி உள்ளீர்கள். அழகான படங்கள். இறைவனை தரிசித்துக் கொண்டேன். கர்ப்போட்டம் பற்றிய விபரங்கள் தெளிவாக தந்துள்ளீர்கள். அத்தனையும் படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. மாரிமுத்துவின் சிறப்புகள் பற்றி நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

  மாசிமகச் சிறப்புகள் மகாமகம் கண்டோம்.

  கர்போட்டம் பற்றி முன்பு எங்கள் அம்மாவும் கூறுவார்.

  பதிலளிநீக்கு
 5. மாசி மகம் உற்சவம், கொடியேறுதல்களை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன். மாசி மாத சிறப்புகளை மிக அருமையான சொன்னீர்கள். சூழ் கொண்ட கரு மேகம் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..