நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 29, 2014

கந்த சஷ்டி கவசம்

இன்று கந்த சஷ்டி!..

சிவபாலனாகிய திருமுருகன் - 

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்த நாள்..
ஆறுமுகமான பொருள் வான் மகிழ - நின்ற நாள்.. 
ஆணவ கன்ம மாயா மலங்களை வீழ்த்தியருளிய திருநாள்!..

இந்த நன்னாளில் அவன் திருப்புகழினைப் பாடுவோம்!..

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்!.. 

நூற்பயன் கொண்டு தொடங்கும் அற்புதப் பனுவல்!..
கந்த சஷ்டிக் கவச பாராயணத்தினால் விளையும் நன்மைகளைக்கூறுதற்கு வார்த்தைகளே இல்லை!..

சுமார் முந்நூறு ஆண்டுக்ளுக்கு முன் விளைந்த ஞான நூல்.
கந்த சஷ்டிக் கவசம் சித்தியாகி விட்டால் - கோள்கள் குறித்து அஞ்ச வேண்டியதில்லை. 

ஏனெனில்,

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் !.. - என்பது நூற்குறிப்பு.


நமது கால சூழ்நிலைகளை உத்தேசித்தால் -
நமக்கு கந்த சஷ்டிக் கவசமே காப்பு!.. பாதுகாப்பு!..ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் அருளிய 
கந்த சஷ்டி கவசம்.

துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் 
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் 
கதித்து ஓங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடனஞ்செய்யும் மயில்வாகனனார் 
கையில் வேலால் எனைக் காக்க என்றுவந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென         
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாசா ங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க         
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றென்முன் நித்தம் ஒளிரும்         
சண்முகன் ஸ்ரீயும் தணியொளி ஒவ்வும்
குண்டலி யாம் சிவகுகன் தினம் வருகஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்         
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்         
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண         
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து         
முந்து முந்து முருகவேள் முந்துஎன்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று         
உன்திரு வடியை உறுதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க         
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க         
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்ககன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க         
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க         
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க         
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்கஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க        
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க         
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும் பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க         
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்க         
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்         
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்         
கனபூசை கொள்ளும் காளியோடனை வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிடஆனை அடியினில் அரும்பாவைகளும்         
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்         
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட         
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய         
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்         
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட         
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்         
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்         
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா         
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே         
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாகவேலா யுதனார்        
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்         
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்        
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்       
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்       
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி       
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்       
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி        
திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே        
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.. (238)சரணம் சரணம் சண்முகா சரணம்!..

***

செவ்வாய், அக்டோபர் 28, 2014

வளைகாப்பு

காவிரியின் வடகரை. 

நடுப் பகல் வேளை. மேகங்கள் அற்ற வானத்தின் உச்சியில் கதிரவன். 

அவனது கதிர்களால் பூமி தகித்துக் கொண்டிருந்தது. 

வெப்பம் தாங்க இயலாத கரிக் குருவிகளும் சிட்டுக் குருவிகளும் மரப் பொந்துகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

பாடித் திரிந்த குயில்களும் பைங்கிளிகளும் தொண்டை வறண்டு துவண்டன.


அந்த வேனற்பொழுதில் தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள் காவிரியின் கரையில் கரையில் பயணித்துக் கொண்டிருந்தன. 

தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள்!..

என்ன ஐயா... கதை சொல்கிறீர்கள்!?..

உண்மைதான்!.. 

பயணித்தவர்கள் மூவர்!..ஆனால் தாயும் மகளும் தான்!..

தாய்.. மற்றும் அவளுடைய மகள்!.. மகளோ கர்ப்பிணி!..

இப்போது விளங்கியதா!..

திருவையாற்றில் இருந்து பயணிக்கின்றார்கள்..

செல்ல வேண்டிய தொலைவினை மாட்டு வண்டியில் பயணித்து கடக்கலாம்.

ஆனால்,

தொடரும் தொல்வினையோ வாட்டும் வறுமையாய் முன் நிற்கின்றது..

இன்னும் சற்று தூரம் தான்.. ஆனாலும் களைப்பு மேலிடுகின்றது.

காவிரியின் கரையோரத்தில் பசுமையாக ஒரு தென்னந்தோப்பு...

கடும் வெயிலில் மயங்கிய கண்கள் - அந்த தோப்பினைக் கண்டு மலர்கின்றன.

யாரோ புண்ணியவான் அமைத்திருந்த சுமை தாங்கிக் கல்லும் நடை தாங்கிக் கல்லும்!.. அருகே ஒரு ஆவுரிஞ்சு கல்லும் நடப்பட்டிருந்தது!...

அலுப்பு தீரட்டும் என, நடை தாங்கிக் கல்லில் அமர்ந்தனர் தாயும் மகளும்..

நா வறண்டது. நாவினைப் போலவே நடை மலிந்த காவிரி ஆறும் வறண்டு கிடந்தது.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாளிலும் ஊற்றுப் பெருக்கினால் உலகிற்கு ஊட்டுபவள் காவிரி!..

அவ்வண்ணமே - காவிரிக்குள் ஆங்காங்கே நீர் ஊற்றுகளும் தென்பட்டன.

ஆயினும் அந்த ஊற்றினைச் சென்றடைந்து - நீர் சேந்திக் குடிக்கவும் இயலவில்லை - அந்த தாய்க்கும் மகளுக்கும்!..

தாய் - தன்னுயிர் தாங்கிக் களைத்தவள்!..

மகளோ - தன்னுள் ஒரு உயிர் தாங்கி நடப்பவள்!..

அவர்தம் - மனமும் உடலும் களைத்து ஒரு துளி நீருக்கு ஏங்கின..

யார் உதவக்கூடும் அவர்களுக்கு?..
கரைவழியில் அங்குமிங்கும் செல்வோர்கூட யாருமில்லை அவ்வேளையில்!.

திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை!..
அதன்படி - தெய்வம் மானுடம் தாங்கி - காவிரியின் கரை மீது வந்தது.

வார் கச்சையில் அரிவாள் இலங்க - கையில் நீண்ட பிரம்புடன் காவல் நாயகனாகத் தோன்றினான் - தயாபரன்.

தளர்வுற்றுக் களைத்திருந்த  - தாய் மகளைக் கனிவுடன் நோக்கினான்.

ஒரு துளிநீருக்கு ஏங்கிய விழிகளைக் கண்டு புன்னகைத்த பரமனின் திருவிழிகள் -

திரண்ட குலைகளுடன் தழைத்திருந்த தென்னந்தோப்பினை நோக்கின.


வேலி ஓரத்தில் - விண்ணுயர்ந்து நின்று காற்றில் ஆடிக் கொண்டிருந்த  அந்தத் தென்னை மரம் - பரமனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து -

குலையுடன் தரை நோக்கித் தாழ்ந்து வளைந்து நின்றது.

பரமனின் திருப்பாதங்களில் இளங்காய்களை மலர்களாக உதிர்த்து வணங்கி நின்றது.

இறைவனின் திருவடிகளில் வேதங்கள் மலர்களாகக் கிடக்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு!..

அத்தகைய திருவடிகளில்  இளநீர் எனும் தென்னை இளங்காய்கள் - திரண்டு கிடந்தன.

கண்முன்னே நிகழும் அற்புதங்கண்டு அதிசயித்தனர் - தாயும் மகளும்!..

திரண்ட காய்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கை அரிவாள் கொண்டு சீவி - குடிக்கும் படியாகக் கொடுத்தான் - பரமன்.

இளநீரை வாங்கி ஆவலுடன்  குடித்தார்கள் தாயும் மகளும்..

தாகம் தீர்ந்தது. தவிப்பும் அடங்கியது.

நல்லது செய்தவர்க்கு நன்றி கூற வேண்டுமே!...உலர்ந்த உதடுகள் உயிர்த்தன.

ஆனால் - கண்ணெதிரே நின்று கடுந்தாகம் தீர்த்த காவலனைக் காணவில்லை!..

அப்போது தான் - அறிவுக்கு எட்டியது.

திரண்ட தோள்களுடன் காவல் நாயகனாக வந்ததும்  - கனத்த குலைகளுடன் தென்னை வளைந்து வணங்கி இளங்காய்களை உதிர்த்ததும்!..

நிகழ்ந்த அற்புதம் புரிந்தது..

ஏழைக்கு இரங்கிய தயாநிதி!.. குலைவணங்கு நாதனே!.. - குரல் தழுதழுத்தது.

பஞ்சவாத்தியங்கள் முழங்கின.

கணபதி கந்தன் இருவரும் மடி மீது திகழ, விடை வாகனத்தில் ஐயனும் அம்பிகையும் தரிசனம் அளித்தனர்.

தாயும் மகளும் ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி பெரும்பேறு பெற்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணின் தாகத்தினை தீர்த்து வைத்து அருள் புரிந்த திருத்தலம் - குரங்காடுதுறை.


இறைவன் - தயாநிதீஸ்வரர், குலைவணங்கு நாதர்.
அம்பிகை - ஜடாமகுடேஸ்வரி.

தலவிருட்சம் - தென்னை.
தீர்த்தம் - காவிரி.

திருத்தலப் பெருமை:-

இத் திருத்தலம் - வாலி சிவபூஜை புரிந்த பெருமையினை உடையது.

அதுமட்டுமின்றி, சிட்டுக்குருவி ஒன்று - நாளும் வலம் வந்து இறைவனை வணங்கி நற்பேறடைந்த பெருமையையும் உடையது.

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கபிஸ்தலத்திற்கு முன்னதாக உள்ளது இத்திருத்தலம்.

காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று.

திருவிடை மருதூருக்கு அருகிலும் குரங்காடுதுறை எனும் தலம் பாடல் பெற்றுள்ளது. அது காவிரிக்குத் தென்கரையில் உள்ளது.

இங்கே குறிக்கப்படும் திருத்தலம் - காவிரிக்கு வடகரையில் உள்ளது.

இன்றைக்கு இத்தலம் ஆடுதுறை பெருமாள் கோயில் எனப்படுகின்றது.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

நீலமா மணிநிறத் தரக்கனை இருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலைஇல வங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே!. {3/91/8}

இராவணனைத் தன் வாலினால் கட்டிய வாலி - வணங்கிய தலம் என்பதை ஞானசம்பந்தப்பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்.

இத்திருக்கோயிலில் - இறைவனின்  கருணைக்கு ஆளான கர்ப்பிணியின் சிலை வடிவம் விளங்குகின்றது.

இறைவனின் அருள் வேண்டி - கர்ப்பிணிகள்  இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

ஐயனும் அம்பிகையும் கர்ப்பிணிகளுக்கு அருள் புரிந்த திருக்கருகாவூர், திருச்சிராப்பள்ளி - ஆகிய திருத்தலங்களைப் போலவே சிறந்து விளங்குவது.

ஈசனே - கர்ப்பிணிகளுக்கு இரங்கி அருள்கின்றான் எனில் -

தன்னுள் ஒரு இன்னுயிர் தாங்கி நிற்கும் கர்ப்பிணிப் பெண்களின் பெருமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!..

முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாள் சுமந்து - என்பார் பட்டினத்தடிகள்.

அதனால் தான் - திருவாசகத்தில் - போற்றித் திருஅகவல் பாடும் போது,

யானை முதலாய எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் நூறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்..

- என்று மாணிக்க வாசகப் பெருமான் வியந்து உரைக்கின்றார்.

இப்படிப்பட்ட கர்ப்ப காலத்தில்  - நடத்தப்படும் வளைகாப்பு வைபவத்தினால் -

இளம் தாயின் மகிழ்வுடன் கருவில் இருக்கும் சிசுவும் மகிழ்கின்றது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை..

இருபது வாரங்களைக் கடந்த இளம் சிசு தாயின் கர்ப்பத்திற்கு வெளியே நிகழ்வனவற்றை கிரகித்துக் கொள்கின்றது என்பதும் ஏழாம் மாதத்திலிருந்து புற உலகில் நடக்கும் விஷயங்களில் தன் மனதைச் செலுத்துகின்றது என்பதையும் இன்றைய அறிவியல் விளக்குகின்றது.

ஆனால்,  பல்லாண்டு பல்லாண்டுகளுக்கு முன்னரே -

நாரதர் உபதேசித்த நாராயண மந்திரத்தை - கருவிலிருந்த ஸ்ரீபிரகலாதன் உற்றுக் கேட்டு உணர்ந்ததையும்,

அர்ச்சுனனுக்கு சக்ர வியூகம் அமைப்பதைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணன் விவரித்துக் கொண்டிருநத போது சுபத்ரையின் கர்ப்பத்திலிருந்த அபிமன்யு உற்றுக் கேட்டு உணர்ந்ததையும்

- நமது புராணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பெரும்பாலும் வளைகாப்பு - கருவுற்றிருக்கும் பெண்ணை சிறப்பித்து ஏழாவது மாதத்தில் அவரவர் குல வழக்கப்படி நிகழ்த்தப்படுவது.

பரத கண்டத்தின் ஈடு இணையில்லா கலாச்சாரத்தில் அர்த்தமுள்ள ஒரு சடங்கு தன் வளைகாப்பு.


அம்பிகையின் மங்கலங்களுள் ஒன்று வளையல்கள்!..

சமயத்தின் வழி நின்று குடும்பத்தில் செய்யப்படும் சடங்குகள் சம்பிரதாயங்களுள் ஒருங்கிணைந்து திகழ்வன வளையல்கள்!..

பல ஆயிரம் வருடங்களாக பாரதப் பெண்களின் கரங்களில் கல கல என ஒலித்துக் கொண்டிருப்பன  - வளையல்கள்..

தங்க வளையல், வெள்ளி வளையல், வைர வளையல், முத்து வளையல், சங்கு வளையல் - என்பன கேட்கவே மகிழ்வூட்டுவன.இப்படி பற்பல வளையல்கள் இருந்தாலும் கண்ணாடி வளையல்களுக்கு ஈடு இணை ஏதும் இல்லை..

மாமதுரையில் - சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களுள் வளையல் விற்ற லீலையும் ஒன்று!..

திருக்கரங்கள் நிறைய வளையல்களுடன் திகழும் அம்பிகையை -வளையல்கள் அணிந்த இளங்கன்னியர் சூழ்ந்திருப்பதாக ஐதீகம்.

மஹாலக்ஷ்மியை நம் வீட்டுக்கு அழைத்து வருவது - வளையல்களின் ஓசை.

இளங்கன்னியரும் சுமங்கலிகளும் வளையல்களை அணியாமல் இருக்கக் கூடாது என்பர் பெரியோர்.

ஆடிப்பூர நன்னாளில் அம்பிகையை கர்ப்பிணியாகப் பாவித்து வளையல் சூட்டி மகிழ்கின்றோம்.

இந்த கோலாகலத்தில் இணைந்து நம்முடன் மகிழ்பவள் நெல்லை காந்திமதி!..

நிறை மங்கலம் வேண்டும் மங்கையர்  தோரணங்களாகத் தொங்க விடும் வளையல்களைத் தமிழகத்தின் பற்பல திருக்கோயில்களிலும் நாம் காணலாம்.

முன்பெல்லாம் - வளைகாப்பு நிகழ்ச்சிகளில் வளையல் சூட்டுவதற்கென்றே - வளையல் செட்டியார்கள் மதிப்புக்குரியவர்களாக விளங்குவர்.

அவர்களில் கைராசி மிகுந்தவர்களுக்குத் தனி மரியாதை..

திருமணமாகி பிள்ளைப் பேறு தள்ளிப் போகும் மங்கையரை - வளைகாப்பு நிகழ்ந்த மணையில் இருத்தி அனைத்து சடங்குகளும் செய்யப்படுவது வழக்கம்.

இதனால் சீக்கிரம் மணி வயிறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

இப்படி பற்பல பெருமைகளை உடைய வளையல்களை இருகைகளிலும் சூட்டி அழகு பார்ப்பது மட்டுமல்ல - வளைகாப்பு!..

முதற்குழந்தையைச் சுமந்திருக்கும் இளம்பெண் பேறு காலம் நெருங்க நெருங்க மனம் தளர்கின்றாள்.

அவளை அன்புடன் ஆரவணைத்து ஆறுதலும் தேறுதலும் கூறி சுகப் பிரசவத்திற்கு ஆயத்தப்படுத்துவதே வளைகாப்பு!..

இத்தகைய மங்கலம் கடந்த ஞாயிறு (26/10) அன்று என் அன்பு மகளுக்கு நிகழ்த்தப்பட்டது.

சிவகாசி நகரில் ஏழுகோயில் எனப்படும் அண்ணாமலையார் திருக்கோயில் சங்கத்தின் மன்றத்தில் - உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க பெரு மகிழ்வுடன் நடந்தது.


நிறை மங்கலமாக அலங்காரத்துடன் விளங்கிய பெண்ணுக்கு -  தாய் மாமன் வாழ்த்தி மாலை அணிவித்த பின் - குங்குமம் சூட்டப்பட்டது. சந்தனக்குழம்பு பூசப்பட்டது.

அம்பிகையின் பிரசாதமாக வேப்பிலையைக் கொண்டு செய்யப்படும் காப்பு முதலாவதாக அணிவிக்கப்பட்டது.

அன்பின் மாமியாரும் தொடர்ந்து பெற்றெடுத்த தாயும் வாழ்த்துரைக்க -

தங்க வளையல்களும் வெள்ளிக் காப்பும் கண்ணாடி வளையல்களும் அணிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து - பழுத்த சுமங்கலிகளும் இளங்கன்னியரும் வளையல்களை அணிவித்தனர்.

வளையல்  அணிவித்த அனைவருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் மலர்களும் பழங்களும் காப்பரிசியும் - தாம்பூலத்துடன் வழங்கப்பட்டது.

ஐந்து வகை சித்ரான்னங்களும் கூடுதலாக சிறப்பான விருந்தும் - அன்பின் பரிமாற்றங்களாயின.

இவை அத்தனையும் -

எல்லாம் வல்ல அம்பிகை அபிராமவல்லியின் பேரருளைக் கொண்டும்,

உடன் வரும் முன்னோர்களின் நல்லாசிகளைக் கொண்டும்,

அன்பின் வழி நிற்கும் நல்லோர்களின் நல்வாழ்த்துக்களைக் கொண்டும்,

வலைத் தளத்தின் வழியாக மகிழ்ச்சியில் கூடி நின்ற அன்பு நெஞ்சங்களின் நல்வாழ்த்துக்களைக் கொண்டும் - நிகழ்ந்தது என்பதில் ஐயமே இல்லை..

அனைவருக்கும் நன்றி!.. 

- என்று நாங்கள் அனைவரும் கூறுவதில் ஆறுதல் அடையுமோ நெஞ்சம்!..

அனைவருக்கும் அபிராமவல்லி நல்லருள் பொழிய வேண்டும். 
அனைவருடைய இல்லங்களும் மங்கலங்களால் நிறைய வேண்டும்!..
 -
 என அம்பிகையின் திருவடித் தாமரைகளில் 
தலை வைத்து வணங்குகின்றேன்.

மங்கலம் எங்கும் தங்குக!..
என்றும் தங்குக!..

ஓம் சக்தி!..
***