நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 04, 2014

குலசேகரன் படி

திருப்பதியாகிய திருமலையில் இன்று சக்ரஸ்நானம் . தீர்த்தவாரி.

இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. 
தவிரவும் - சர்வ ஏகாதசி!.. திருவோண நட்சத்திரம்!.. 

திருப்பதியில் வேங்கடவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாள் -  புரட்டாசி திருவோணம்.

அதனாலேயே, திருவோணம் - வேங்கடவனின் நட்சத்திரம் என்ற சிறப்பைப் பெற்றது. 


பெருமாளின் நட்சத்திரமாகிய புரட்டாசி திருவோணத்தில்  - தீர்த்தவாரி அமைவதாகவே திருப்பதியில் பிரம்மோற்சவ வைபவங்கள் தொடங்கி வெகு சிறப்பாக நிகழ்கின்றன.  

மாடவீதிகளில் லட்சோப லட்சம் அன்பர்கள் பக்திப் பெருக்குடன் காத்திருக்க  - ஸ்வாமி பல்வேறு வாகனங்களில் ஆரோகணித்து சேவை சாதித்தருள்கிறார். 

திருமலையில் திருக்கோயிலைச் சுற்றிலும் மாடவீதிகளை சிறப்புடன் வடிவமைத்து  பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவையை விமரிசையாக நடத்தியவர் - உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்.

காலம் மாறி காட்சிகளும் மாறிய வேளையில் -

வேங்கடேசப்பெருமாளின் பிரம்மோற்சவங்கள் அரசு ஆதரவுடன் தடையின்றி நடப்பதற்கு  - சித்தூர் கலெக்டராக இருந்த ஜார்ஜ் ஸ்ட்ராட்டன் என்பவர் அதிகார பூர்வமாக உத்தரவிட்ட வருடம் - 1803. 

இடையில் சில காலம் (1843, 1933 ஆண்டுகளில்) திருப்பதி கோயில் நிர்வாகம் -  வெங்கடேஸ்வர பெருமாளுடன் தாயம் விளையாடிய  ஹதிராம்ஜி எனும் பக்தரின் மடத்தின் சேர்ந்தவர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டது.

அதன்பின் - அரசு ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்த ஆண்டு 1933. 

அது முதற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தான நிர்வாகத்தினரால் பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகின்றது. 

கடந்த செப்டம்பர்/26  அன்று தொடங்கிய வைபவம் திருமலையின் நான்கு மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. 

பெரிய சிறிய சேஷ வாகனங்கள், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம், முத்துப் பந்தல் -  என முதல் நான்கு நாட்களிலும் வைபவங்கள் நடந்தேறின.


ஐந்தாம் நாள் - காலையில் மோகினி அவதாரம். மாலையில் கருட சேவை. மிகச் சிறப்பான வைபவம். 

கருட சேவையின் போது வேங்கடேசன் சூடிக்கொள்வது - ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகளைத்தான்!.. 

இதற்கெனவே - ஆண்டுதோறும் ஆண்டாள் சூடிக் களைந்த தோள் மாலையும் கிளியும் பட்டு வஸ்திரமும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வருகின்றன. 

ஆண்டாளின் பட்டு வஸ்திரம் மூலவருக்கு சாற்றப்பட்டு மாலையணிவிக்கப் பட்டது.

உற்சவமூர்த்தியும் - ஆண்டாள் மாலையுடன் - மூலவருக்குரிய மகர கண்டி, லக்ஷ்மி ஹாரம் முதலான ஆபரணங்களைத் தரித்தது மூலவராகவே கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் சேவை சாதித்தருளினார்.

அதன் பின் அடுத்து வந்த நாட்களில் ஆஞ்சநேய வாகனம், தங்கத்தேர், யானை வாகனம், சூர்ய பிரபை, சந்திர பிரபை என வைபவம். 

நேற்று காலை ஏழு மணியளவில் திருத்தேரோட்டம். 


ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருள - மாட வீதிகளில்  ஆரவார முழக்கங்களுடன் கோலாகலமாக திருத்தேர் இழுக்கப்பட்டது. 

மாலையில் ஸ்வாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்..

இன்று (அக்/4) பிரம்மோற்சவத் திருவிழா நிறைவு.  

ஸ்ரீசக்ரத்தாழ்வார் ஸ்நானம். சூரிய புஷ்கரணியில்தீர்த்தவாரி.

இன்று காலை, திருமலையின் திருக்குளத்தருகே ஸ்ரீமலையப்பஸ்வாமி உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியருடன்  திருமஞ்சனம் கண்டருள்வார்.

அதன்பின் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடுவர்.

உற்சவம் மங்கலகரமாக நிறைவேறியதன் அடையாளமாக கொடி மரத்தில்  துவஜ அவரோகணம் நிகழும்

இன்றிரவு தங்கப் பல்லக்கில், மலையப்ப சுவாமி மாட வீதிகளில், பக்தர்கள் புடைசூழ வலம் வருகிறார்.


மனம் ஒன்றி  - விரதங்களை அனுசரிப்பதால் வாழ்வு செம்மையாகின்றது. 

ஆயினும் - விரதம் என்ற பேரில் தம்மை வருத்திக் கொள்வது கூடாது. பட்டினி கிடந்து தான் பகவானைத் தரிசிக்க வேண்டும் என்பதில்லை.

புலால் உண்ணும் குடும்பங்கள் கூட புரட்டாசி மாதத்தில் அவற்றை நீக்கி விரதம் அனுசரிக்கின்றனர். அதிலும் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் அனுசரிப்பதை பெரும் பேறாகவே கருதுகின்றனர்.

பொதுவாக விரதங்கள் எளிமையானவை.  எளிய உணவு, இறை சிந்தனை என்பதே நோக்கம்.

காப்பது விரதம்!.. என்றும் நோன்பு என்பது கொன்று உண்ணாமை!.. என்றும் விரதங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

பாரம்பர்யப் பெருமையுடன் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை இல்லத்தில் விமரிசையாக ஆராதிப்பதை வாழ்வின் நோக்கம் எனக் கொண்டுள்ள குடும்பங்கள் லட்சோபலட்சம்!.  

மாவிளக்கு ஏற்றி திருத்தளிகை சமர்ப்பித்து சரணம் சரணம் என்று வணங்கித் துதிப்பவர் சகல சங்கடங்களில் இருந்தும் நீங்கப் பெறுவர் என்பது ஆன்றோர் வாக்கு. 


வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறு நல்லுலகம்!..

பண்டைத் தமிழகத்திற்கு வடஎல்லையாகத் திகழ்ந்த பெருமையை உடையது திருவேங்கடம்.

மகா சிவராத்தியன்று வைர விபூதிப் பட்டையுடன் உற்சவர் எழுந்தருள்வார்.

வெள்ளிக் கிழமைகளில் மட்டும் 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட  பிரத்யேக பட்டுப் பீதாம்பரம் தரித்து அம்பாள் திருக்கோலம் கொள்கின்றார்.

மூவாயிரம் அடி உயரம் கொண்ட திருமலையில் அதிகாலைப் பொழுதில் பெருமாளின் திருமேனி கொதித்திருக்கின்றது . 

பெருமாளின் திருமேனியில் விளங்கும் ஆபரணங்கள்  110 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உஷ்ணமாக இருக்கின்றன என்பன போன்ற அரிய செய்திகளும் அற்புதங்களும் நிறைந்தது திருமலை.

குலசேகர ஆழ்வார் படியாய்க் கிடந்து பகவானின் பவளவாய் காண விரும்பியதால் - வேங்கடவனின் சந்நிதி வாசல் - குலசேகரன் படி எனும் பெயருடையதாயிற்று..

உலகின் பணக்காரக் கோயில் என வர்ணிக்கப்படுவது இந்தத் திருக்கோயில். 


பெருமாள் பூலகில் எழுந்தருளியபோது அன்புடன் ஆதரித்து அரவணைத்து உணவூட்டி மகிழ்ந்தவள் வகுளாதேவி. 

ஸ்ரீநிவாசனை வளர்த்து மணம் செய்வித்த பெருமை வகுளாதேவிக்கு உரியது.  

துவாபர யுகத்தின் யசோதை தான், ஸ்ரீநிவாச வைபவத்தில் வகுளாதேவி!..

திருமலைத் திருக்கோயிலில் ஆனந்த நிலையத்திற்கு வடமேற்கு பகுதியில், தொன்மையான மடைப்பள்ளி அமைந்துள்ளது.

மடைப்பள்ளியில் வகுளாதேவிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதியில்  நிலை கொண்டுள்ள வகுளா தேவியின் திருமேனி தங்கக் கவசத்துடன் திகழ்கின்றது.

மடைப்பள்ளியில் வகுளாதேவியே முன்னின்று - தன் அன்பு மகனுக்கான பிரசாதங்களை மேற்பார்வையிடுவதாக ஐதீகம்.

திருமலையின் மடைப்பள்ளியில் - பலவித பிரசாதங்கள் பெருமாளுக்கென தயாரிக்கப்படுகின்றன. 

ஆனாலும் - 

இந்தத் திருமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு விருப்பமான நிவேத்யம் - தயிர் சோறு!.. 

அந்த தயிர் சோறும் உடைந்த சட்டியில் தான்!.. - என்பது சிந்தனைக்குரியது.

இது பீமையா எனும் ஏழைக் குயவர் காட்டிய அன்பின்பொருட்டு என்கின்றனர். 

அத்தகைய அன்பு ஒன்றே - பெருமாளிடத்தில் நம்மைக் கொண்டு சேர்ப்பது!.. 

 
-: குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி :-
(நான்காம் திருமொழி)

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் 
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால் 
கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து 
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!..

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் 
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!.. 

பின்னிட்ட சடையானும் பிரமன் இந்திரனும் 
துன்னிட்டு புகலரிய வைகுந்த வாசல் 
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் 
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவேன் ஆவேனே!.. 

ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள் 
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு 
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து 
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே!.. 

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் 
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் 
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே!.. 

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும் 
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் 
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் 
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே!.. 

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே!.. 

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் 
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் 
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் 
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே!.. 


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் 
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே!.. 

உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன் 
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும்  
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும்ஆவேனே!.. 

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன் 
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி 
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன 
பன்னியநூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே!..

ஸ்ரீ வேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே!..
ஓம் ஹரி ஓம்!..
* * *

12 கருத்துகள்:

 1. திருப்பதி திருமலையைப் பற்றிய குறிப்பும், ஆழ்வார் திருமொழியும் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. திருமலையில் திருமால் தரிசனம் பலமுறை வாய்க்கப் பெற்றும் விழாக்காலங்களில் சென்றதில்லை. அறியாத தகவல்கள் பல தாங்கியபதிவு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. திருப்பதி சென்று வந்த நிலைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன ஐயா
  அறியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 4. வணக்கம் ஐயா!

  அருமையான படங்கள் அறிந்திராத பல தகவல்கள்!
  அத்தனையும் மிகச் சிறப்பு!
  மொத்தத்தில் புரட்டாதி மாதமே மிகச் சிறப்பு வாய்ந்ததுதான்!

  அழகிய பதிவு ஐயா! நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமையான படங்களுடன் பற்பல அரிய தகவல்கள் அடங்கியப் பதிவு. .
  குலசேகராழ்வாரின் திருவாய் மொழி , படிக்க படிக்க இன்பம். நாமும் அப்படியே வேண்டுவோம். .திருமலையில் படியாகவோ,,மீனாகவோ , கல்லாகவோ,, பிறக்க அந்த மலையப்பன் மனம் இரங்க வேண்டும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் கூறுவது போல பெருமாள் மனம் இரங்க வேண்டும்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பாடல் பகிர்வும், படங்களும், விரத மகிமையும் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.,
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு