நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 21, 2014

இனிய தீபாவளி

அனைவருக்கும் அன்பின் 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

சமுதாயத்தின் பல தரப்பட்ட மக்களும் அன்பினால் இணைந்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நல்ல நாட்களுள் ஒன்று தீபாவளித் திருநாள்!..

எல்லா சமய நூல்களும் - ஈடு இணையற்ற இறைவனை ஒளிமயமானவன் என்றே புகழ்கின்றன.

ஆயினும்,

தீபச்சுடரினுள் இறைவனைக் கண்டு உணர்ந்து ஆராதிப்பது நமக்கே உரிய தனிச்சிறப்பு!..


சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் ஒன்றே  கேதார கௌரி விரதம் எனும் தீபாவளி!..  

- என்பது அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமி அவர்களின் அருளுரை.

தீபாவளி = தீப ஆவளி. 

தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை என்பது பொருள்.

வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து பரம்பொருளை வழிபடுதல்.

அதன் நோக்கம்,

ஒளி விளக்கினைக் கொண்டு புற இருளை விலக்குவது போல,
ஞான விளக்கினைக் கொண்டு அக இருளை அகற்றுவதாகும்!..

காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் - எனும் அறுவகை இருட்பிணிகள் நம்மை வீழ்ச்சிக்குள்ளாக்குவன.

வீழ்ச்சி தரும் இருள் சூழ்ந்த வழியில் செல்லும் நமக்குத் துணையாவதே ஞானம் எனும் கைவிளக்கு.

அந்த கைவிளக்கினைப் பெறுவதே வழிபாடுகளின் உண்மையான நோக்கம்!..

தீபாவளித் திருநாளைக் குறித்த கதைகளுள் பொதிந்திருக்கும் உட்பொருளும் இதுவே!..

அம்பிகை ஐயனின் திருமேனி கொண்ட நாள்!..

எல்லா வேதங்களையும் உணர்ந்தவர் பிருங்கி மகரிஷி. ஆனாலும் அவர் உட்பொருளை உணராதவராக இருந்தார். ஈசனை மட்டுமே வலம் செய்து வணங்கும் பழக்கம் அவரிடம் இருந்தது.

பிருங்கியின் இச்செயலால் அம்பிகை மிகவும் வருந்தினாள்.

அது - அம்பிகையை வலம் செய்து வணங்காததற்கானது என்று உலகிற்கு வெளிப்படையாகத் தோன்றினாலும் பிரபஞ்சத்தில் சிவசக்தி ஐக்கியத்தை அறியாத பிருங்கியின் மடமையைக் குறித்ததே!..


ஒருநாள் - பிருங்கி சிவதரிசனம் செய்ய வந்த போது - ஐயனுடன் நெருங்கி பொருந்தி  நின்றாள் அன்னை. அதைக் கண்ட பிருங்கி அகமகிழ்ந்து துதிக்காமல், குறுமதியுடன் ஒரு வண்டாக உருமாறி இடை புகுந்து ஐயனை மட்டும் வலம் செய்தார்.

அதைக் கண்டு சினம் கொண்ட அம்பிகை பிருங்கியின் சரீரத்தில் இருந்த சக்தியை முழுதுமாக நீக்கினாள். சக்தியிழந்த பிருங்கி நொந்து நூலாகி கீழே விழுந்தார்.

அவரது நிலை கண்டு இரங்கிய ஈசன் மூன்றாவதாக ஒரு காலை வழங்கினார். மூவுலகும் பிருங்கியைக் கண்டு பரிகசித்தது.

அந்த அளவில் அம்பிகை ஈசனின் திருமேனியில் சரிபாதி வேண்டி தவம் இருந்தாள். கௌதம மகரிஷி குருமுகமாக இருந்து உபதேசிக்க அம்பிகை ஏற்ற விரதம் தான் கேதார கௌரி விரதம்!..

அம்பிகையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் - அவளைத் தன் திருமேனியில் சரிபாதியாகக் கொண்ட நாள் - தீபாவளி!..

கங்கை பூமிக்கு வந்த நாள்!..

தனது முன்னோர்களான சகர புத்திரர்கள் மோட்சம் அடைய வேண்டித் தவமிருந்த மன்னன் பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆகாய கங்கை ஆயிர மாமுகங்கள் கொண்டு ஆணவத்துடன் வெளிப்பட்டாள்.

அவளது வேகம் பூவுலகைச் சிதைத்து விடும் என்பதை உணர்ந்திருந்த நான்முகன் - சிவபெருமானை வேண்டி நின்றார். கருணை கொண்ட ஈசன் - கங்கையைத் தாங்கியருள சித்தம் கொண்டார். 

ஆயினும் கங்கை தான் கொண்ட ஆணவத்தால் ஈசனின் ஜடாமகுடத்தினுள் சிறைப்பட்டாள்.

பகீரதன் ஈசனைப் பணிந்து நின்றான்.

பரமேஸ்வரன் தனது ஜடாமகுடத்திலிருந்து மிகச்சிறிய அளவாக கங்கையை விடுத்த வேளை -

துலாமாதத்தின் தேய்பிறைச் சதுர்த்தியின் ப்ரம்ஹ முகூர்த்தம்!..

தூயவளான கங்கை பூமிக்கு வந்த வேளை - தீபாவளி!..

கங்கா தேவியால் பூமகள் புனிதம் அடைந்த வேளையே - தீபாவளி!..

அதனால் தான் தீபாவளி அன்று நீராடுதல் கங்கா ஸ்நானம் எனப்பட்டது!..

ஸ்ரீஜயராமன் அயோத்திக்குத் திரும்பிய நாள்!..


வனவாசத்தை முடித்துக் கொண்டு சீதாதேவியுடன் ஸ்ரீராமசந்திரன் அயோத்தி திரும்பிய நன்னாள் - தீபாவளி!..

அதர்மத்தை அழித்து ஐயன் ஸ்ரீ ராமசந்த்ரமூர்த்தி வைதேகியுடன் அயோத்தி நகர் நுழைந்தபோது,மக்கள் குதூகலத்துடன் வீதியெங்கும் ஏற்றி வைத்த மங்கல தீப வரிசைகளே  - தீபாவளி!..

ஆனாலும், தீபாவளி என்றால் -
மக்கள் எல்லோரும் குறிப்பது நரகாசுரனின் வீழ்ச்சியையே!..

நரகாசுரன்!..

இவன் - ஹரி பரந்தாமன் வராக அவதாரம் செய்த காலத்தில் பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தினால் - ராட்சஷ கோலங்கொண்டு பிறந்தவன்.

தாயின் கரத்தால் தான் மடிய வேண்டும் என வரம் பெற்ற நரகாசுரன் - வழக்கம் போல எல்லாக் கொடுமைகளையும் செய்தான்.


ஜகத் ரட்சகனாகிய ஸ்ரீகிருஷ்ணன் அவனுடைய கொடுமைகளுக்கு முடிவு செய்திட கருட வாகனத்தில் புறப்பட்ட சமயத்தில் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவும் சேர்ந்து கொண்டாள்..

முழுமூச்சுடன் நரகாசுரனின் படைகள் ஸ்ரீகிருஷ்ணனை எதிர்த்துப் போரிட்டு அழிந்தன. 

கடைசியில் நரகாசுரன் பலம் மிகுந்த ஆயுதங்களுடன் எதிர்வந்து நின்று மூர்க்கமாகத் தாக்கினான்.

மாயக்கண்ணன் நரகாசுரனுடைய ஆயுதத்தினால் தாக்குண்டதாக மயங்கிச் சரிந்திட - 

சீற்றங் கொண்ட சத்ய பாமா - வாள் கொண்டு வீசி நரகாசுரனை வீழ்த்தினாள்.

அதர்மமான அரக்கன் வீழ்ந்ததும் - தர்மமாகிய ஐயன் கண் விழித்து எழுந்தான்.

தர்மம் வெல்வதற்கு சில நாடகங்களும் தேவை போலிருக்கின்றது!..


தனது முடிவினை உணர்ந்த அரக்கன், பெருமானை வணங்கி - என்னால் துன்பம் அடைந்த மக்கள் இனி இந்நாளை கொண்டாடி மகிழட்டும்!.. - என்று கேட்டுக் கொண்டான்.

வளருங்காலத்திலிருந்தே கேட்டு மகிழ்ந்த கதை இது!..

மேலும் - 

கலிங்கத்தை வென்ற மாமன்னர் அசோகர் - மனம் வருந்தி புத்த சமயத்தைத் தழுவிய நாள் - தீபாவளி!..

சமணர்களின் தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வர். இவர்களுள் நிறைவாகக் குறிக்கப்படுபவர் வர்த்தமான மகாவீரர் {கி.மு.567}. 

மகாவீரர்  மகாநிர்வாணம் எய்திய நாள் - தீபாவளி!..

சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் - தீபாவளி!.. 

சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர்கோவிந்த் சிங் (1595 - 1644). மதமாற்றத்தை எதிர்த்ததால் ஐம்பத்திரண்டு இந்து அரசர்களுடன் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினார். 

கொடுமைப்படுத்தியவர் முகலாய மன்னர் ஜஹாங்கீர். தமது ஆன்ம பலத்தால் ஜஹாங்கீரின் மனதினை வென்றார்.

மனம் வருந்திய ஜஹாங்கீர் - ஹர்கோவிந்த் சிங் அவர்களை விடுவிக்க முன்வந்த போது, தன்னுடன் சிறையில் வாடிய அனைத்து இந்து அரசர்களின் விடுதலையையும் வற்புறுத்தினார்.

இறுதியில் அன்பே வென்றது. அனைவரையும் ஜஹாங்கீர் கொடுஞ்சிறையில் இருந்து விடுவித்த நாள் 1619 அக்டோபர் 26. அந்த நாள் தீபாவளி!..

அதே சமயம் சோக வரலாறாக - முகலாய அரசுக்கு கப்பம் செலுத்த மறுத்த - பொற்கோயிலின் நிர்வாகி குரு பாயி மணிசிங் லாகூர் கோட்டைச் சிறையில் லாகூர் ஆளுநரான சஹாரியா கான் என்பவனின் சித்ரவதைகளுக்கு (1738) பலியான நாளும் - தீபாவளி!.. 

(சீக்கிய வரலாற்று செய்திகளுக்கு நன்றி - தினமணி)

இத்தகைய தீபாவளித் திருநாளைப் பற்றி - பழந்தமிழ் நூல்களில் எந்தக் குறிப்பினையும் காண இயலாது என்கின்றார்கள்.

உண்மைதான்!..

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் தான் தமிழகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனாலும், ஏழை முதல் செல்வந்தர் வரை அனைவருடைய மனதிலும் ஆனந்த அலைகளை எழுப்புவது - தீபாவளி!..


தமிழகத்தில் - வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடிய நாள் கார்த்திகை விளக்கீடு!..

இதனை திருஞான சம்பந்தப்பெருமான் - திருமயிலையில் பூம்பாவை மீண்டு வருவதற்காக அருளிய திருப்பதிகத்தின் (2/47/3) மூலமாக அறியலாம். 

கங்கையில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று கங்கையில் நீராடுவது மகத்துவம் என்றால் அது எத்தனை பேருக்கு இயலும்?..

அதனால் தான் தீபாவளி கொண்டாடப்படும் துலாமாதம் எனும் ஐப்பசியில் காவிரி முதற்கொண்டு சகல நீர் நிலைகளிலும் கங்கை கலந்து நிற்கின்றாள் என்றனர் ஆன்றோர்.

காவிரியில் நீராடுவதாகக் கொண்டாலும்
கங்கையில் நீராடுவதாகக் கொண்டாலும்
நம் பாவங்கள் தீர்ந்து விடுமா!?..

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்கும ரித்துறை ஆடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே!..(5/99)

என்று திருநாவுக்கரசு சுவாமிகள் உய்யும் வழியினைக் காட்டுகின்றார். 

அவ்வழியினில் -

எங்கும் ஈசன் என்பதை உணர்ந்து சகல உயிர்களையும் வாழ வைத்து,

ஏழை எளியோர்க்கு இயன்ற உதவிகளைச் செய்து - தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

நலங்கள் பெருக வேண்டும்..
நன்மைகள் மலர வேண்டும்!..

அதர்மம் அழிய வேண்டும்..
தர்மம் தழைக்க வேண்டும்!..

அனைவருக்கும் அன்பின் 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
***

25 கருத்துகள்:

  1. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வாழ்க நலம்..
      தங்கள் அன்பின் இனிய நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!.

      நீக்கு
  2. தீபாவளி பற்றி மிக அரிய தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்மா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
      தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  3. தீபாவளியின் சிறப்பை அழகாய் கூறினீர்கள்.
    ஏழை எளியோருக்கு கொடுத்து அதில் இன்பம் காண்போம்.
    நலங்கள் பெருகி நன்மைகள் மலர்ந்து எங்கும் மணம் பரப்பட்டும்.
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. தீபாவளி பற்றிய செய்திகள் அருமை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தீபாவளி பற்றிய சிறப்பான செய்திகள்.....

    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
      தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

  7. தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மது..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  9. தீபாவளிக்கான சிறப்புப் பதிவு அருமை ! இத்தனை கதைகள் உண்டா தீபாவளிக்கு நமக்கு தெரிந்தது எல்லாம் நரகாசுரன் கதை மட்டும் தான்மிக்க நன்றி !
    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  10. தீபாவளியன்றைய நடந்த சிறப்பு அம்சங்களைப் பட்டியல் போட்ட விதம் நன்று !இதுவரையிலும் நான் அறியாத தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி
      தங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  12. திருநாளுக்கேற்ற சிறப்பான பதிவு ஐயா!

    மிக அருமை!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்களுக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  13. பெயரில்லா06 அக்டோபர், 2022 15:54

    தீபாவளி பற்றிய இந்த கட்டுரையை என்னுடைய தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளியிட விரும்புகிறேன். அனுப்பி வைக்க இயலுமா? தாங்கள் விரும்பினால் இரண்டு தினத்திற்குள் thenchittu2020@gmail.com. என்ற இமெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. அன்புடன். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு( தளிர் சுரேஷ்).

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..