நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 06, 2014

மாடக்குளம் ஸ்ரீஐயனார்

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி என 
மேவிய ஆறுகள் பல ஓட திருமேனி 
செழித்த தமிழ் நாடு!..

என்று பெருமையுடன் மீசை முறுக்கியவர் - மகாகவி பாரதியார்.

இன்றைக்கு - நாம் அந்த மாதிரி பெருமை கொள்ள முடியுமா!?..

மாமதுரையின் நீர்வளத்தை காப்பாற்றியவை கண்மாய்களும் ஏரிகளும் குளங்களும்.. ஆனால் இன்றைக்கு மதுரையின் நீர்நிலைகள் பல மாயமாகி விட்ட நிலையில்,  விரல் விட்டு எண்ணும் அளவில் மிஞ்சி இருப்பவற்றுள் முக்கியமானது - மாடக்குளம் கண்மாய்!..

மாடக்குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகள் - இன்னும் பராமரிப்பு செய்யப் படாமல் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நிலையிலும்,

கடல் போல காட்சி அளிக்கும் கண்மாயின் பரப்பளவு 379.90 ஏக்கர். 

இந்த கண்மாயின் ஊடாகத்தான், மதுரை - போடி இருப்புப் பாதை செல்கின்றது.

மாடக்குளம் கண்மாய் நிறைந்தால் இதை சுற்றியுள்ள 20 கி.மீ., தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்கிறார்கள்.

மாடக்குளம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கிராமமாகத் திகழ்கின்றது. விவசாயம் உயிர் மூச்சாகத் திகழ -  விளை நிலங்கள் வாழைத் தோட்டங்கள் தென்னந் தோப்புகள் - என பசுமை சூழ்ந்து விளங்கும் வளமான கிராமம்.

பெருமை மிகும் மாடக்குளம் கண்மாய் கரையில் வீற்றிருப்பவர் ஸ்ரீஈடாடி ஐயனார்!..  


காவல் தெய்வங்கள் வீற்றிருக்காத கிராமங்களே தமிழகத்தில் இல்லை எனலாம். 

அந்த வகையில் ஊரின் எல்லையில் ஆற்றங்கரையிலோ - ஏரி மற்றும் கண்மாய் போன்ற நீர்நிலைகளின் காவல் நாயகனாக  - தனிப்பெரும் தலைவனாக - வீற்றிருப்பவர்   ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ரன். 

இவரே ஸ்ரீ ஐயனார். 

இவருக்குப் பிறகு தான் -

ஸ்ரீ கருப்பஸ்வாமி, 
ஸ்ரீ பாலடி காத்தவராயர்
ஸ்ரீ வீர ஸ்வாமி, 
ஸ்ரீ பொம்மியம்மாள் ஸ்ரீ வெள்ளையம்மாள் சமேத ஸ்ரீ மதுரை வீரன் -

மற்றும் பற்பல திருப்பெயர்களின் விளங்கும் ஏனைய பரிவார மூர்த்திகள்.  

பெரும்பாலான ஐயனார் கோயில்களில் கால சூழ்நிலைகளை உத்தேசித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் புரவி எடுத்தல் விழா நடைபெறும்.

புரவி எடுத்தல் என்றால் என்ன!.. 

காவல் தெய்வமான ஸ்ரீ ஐயனாரின் வாகனங்கள் யானையும் குதிரையும்!.


கோயிலின் முன் - யானையும் குதிரையும் பிரம்மாண்டமாக நின்றாலும், அவ்வப்போது சுடுமண் சிற்பமாக குதிரை சிலைகளை வேண்டுதலின் பேரில் வைப்பதுண்டு. இந்த குதிரை சிலை உள்கூடாக இருக்கும்.

ஐயனார் கோயில்களில் புரவி எடுத்தல் விழாவின் போது புதிதாக வைப்பது தவிர பழுதான புரவிகளை அப்புறப்படுத்துவதும் உண்டு. 

நல்லதொரு நாளில் புரவிகள் செய்வதற்கு பிடி மண் கொடுப்பர். 

பாரம்பர்யமாக புரவி வடிக்கும் குலாலர் எனும் குயவர் பெருமக்கள் இதற்கென விரதம் இருந்து பயபக்தியுடன் புரவிகளைச் செய்து மண்பானைகளைச் சுடும் சூளையில் சுட்டு எடுத்து தக்க வர்ணம் தீட்டி கிராம மக்களிடம் ஒப்படைப்பர். 

அவர்களுக்கு தக்க மரியாதைகள் ஊர் பொதுவில் செய்யப்படும்.

காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி - ஊர் பொது இடத்தில்  புரவிகள் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பெறும். பூஜையின் போது சாமியாடி அருள்வாக்கு கூறப்படுவதும் உண்டு. 

ஊர் மக்களின் சார்பாக புரவிகளுக்கு மாலை மரியாதைகள் ஐயனார் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு அங்கே நிலை நிறுத்தப்படும்.

கோயிலில் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் பெரிய அளவில் விருந்து உபசரிப்புகளும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.


அந்த வகையில் - பெருமை மிகும் மாடக்குளம் கண்மாய் கரையில் விளங்கும் ஸ்ரீஈடாடி ஐயனார் திருக்கோயிலில் கடந்த  சனிக்கிழமை (அக்டோபர்/4) அன்று இரவு பத்து மணியளவில் பாரம்பர்ய புரவி எடுத்தலும் ஊர்ப்பொங்கல் விழாவும் வெகு விமரிசையாக நிகழ்ந்துள்ளது.

அனைவரும் வருக!. ஐயன் அருள் பெறுக!. - என, மாடக்குளம் திரு. பிரபாகரன் அவர்கள் Facebook - வழியாக அன்புடன் அழைத்திருந்தார்.

விழாவில்- நண்பர் திரு.குணாஅமுதன் அவர்களும் கலந்து கொள்ள விழாவின் நிகழ்வுகள் அற்புதமாக  - இதோ, உங்கள் பார்வைக்கு!.. 

புரவி எடுப்பு விழா!..

மாடக்குளம் திரு. பிரபாகரன்

 

புரவி எடுப்பு ஊர் பொங்கல் விழா!..
 * * *
அன்பு நண்பர்களே!.. 

மாடக்குளம் புரவி எடுப்புத் திருவிழாவின் ஊடாகப் புகுந்து உற்றார் உறவினர் சூழ  - சாமி தரிசனம் செய்த மாதிரி இருக்கின்றதல்லவா!.. 

அன்புடன் அழைத்திருந்த மாடக்குளம் திரு. பிரபாகரன் அவர்களுக்கு அன்பின் நன்றியும் வணக்கமும்!..

விழாவின் காட்சிகளை மிக அற்புதமாக  - நமது பார்வைக்கு வழங்கிய திரு. குணா அமுதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்!..
 
ஸ்ரீ ஈடாடி ஐயனாரின் திருவருள்
அனைவரையும் வாழ வைப்பதாக!..
* * *

19 கருத்துகள்:

 1. விழாவை நேரில் கண்டது போல இருந்தது
  நிழற்படங்கள்.

  மிகவும் நன்றி.

  ஐயனார் கோவில் உற்சவங்கள் எல்லாமே சிறப்புடைத்து.

  எங்கள் குல தெய்வத்தை நாங்கள் கருப்பு, கருப்பன் என்றும்
  கருப்பசாமி என்றும் கொண்டாடுவோம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!

  உள்ளம் எமது ஊர் நினைவில் சிக்கிக்கொண்டது ஐயா!
  அற்புதமான அழகான படங்கள்!
  அறியாத பல விடயங்கள்! அத்தனையும் சிறப்பு!

  நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இம்மாதிரி புரவி எடுத்தல் போன்ற விழாக்களால் நம் பாரம்பரிய கைவினைக் கலைகள் பாதுகாக்கப் படுகின்றன. காவல் தெய்வமாக இருக்கும்போது ஐயனார் அல்லது ஐயப்பன்,பிரம்மசாரி. பூர்ணகலா புஷ்கலா சமேதராக இருக்கும் போது ஸ்ரீ தர்ம சாஸ்தா. சரிதானே. படங்களுடன் பதிவு அழகு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. விழாவினை நேரில் கண்டு ஓர் உணர்வு ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் காட்சியை கண் முன் நிறுத்துகின்றன
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   காண்பவரைக் கவரும் நிழற்படங்கள்..
   அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. அருமையான விளக்கமும் அழகிய காட்ச்சிப்படம் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஐயனார் கோவிலில் புரவி எடுப்பது எங்கள் பகுதியிலும் உண்டு....
  படங்கள் அனைத்தும் கலக்கல்... படமெடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.
  நல்ல பகிர்வு ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   குமார் தங்களது அனுபவத்தை பதிவிடுங்களேன்!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 7. புரவி எடுப்பு திருவிழா பார்த்தது இல்லை உங்கள் பதிவில் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
  உங்கள் நண்பருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  ஊரில் இல்லை 10 நாட்கள் அதனால் பதிவுகளை தாமதமாக படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.,
   தாங்கள் வெளியூர் சென்றிருக்கக் கூடும் என்று தான் நானும் நினைத்தேன்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. என் சொந்த ஊரை இவ்வளவு அர்புதமாக நான் பார்த்தே இல்லை நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கதிரவன்..

   தங்களுக்கு நல்வரவு..
   அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. நான் இந்த மாடக்குளம் ஐயனார் கோவில் பார்த்தது இல்லை.
  எங்கள் வீட்டுக்கு பக்கம் இருக்கும் பொன்மேனி ஐயனார் கோவில் போகும் வழியில் ஊர்வலம் பார்த்தேன். ஊர்வலத்தில் வந்தவரிடம் எந்த கோவில் என்ற போது மாடக்குளம் சோனயார் திருவிழா என்றார்
  பொன்மேனி ஐயனார் கோவிலில் தான் புரவி எடுப்பு விழா படம் பார்த்தேன் பேப்பரில் வந்த படத்தை பிரேம் செய்து போட்டு இருந்தார்கள்.

  கூடியவிரைவில் மாடக்குள அய்யனார் கோவில் போய் வந்து பதிவு போடுகிறேன்.

  நன்றி உங்கள் சுட்டிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அவசியம் சென்று தரிசனம் செய்து பதிவிடுங்கள்..
   தங்கள் தயவில் நானும் தரிசனம் செய்து கொள்கிறேன்..

   மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. என் குல தெய்வம் பாலடிகாத்தவராயன் அவர்களை பற்றி அறிய நான் ஆவலாக உள்ளேன் யாராவது தெரிந்தவர்கள் கூறவும்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..