நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 30, 2022

வாழ்க சீர்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று 
கார்த்திகை 14
  புதன் கிழமை

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமது இல்லத்தில் பூஜை செய்யும் போது இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பதிகம் பாடுகின்ற அருமையான காணொளி..


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்!..
-: கந்தபுராணம் :-

முருகா.. முருகா..
***

செவ்வாய், நவம்பர் 29, 2022

சித்தப்பா வீடு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 13
  செவ்வாய்க்கிழமை

இன்றொரு சிறுகதை
-: சித்தப்பா வீடு :-
-::-


சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் முதலாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்த போது விடியற் காலை நான்கு மணி.. 

ஸ்டேஷனில் இருந்து புறநகரில் இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்வதற்கு நாலரை ஆகி விட்டது.. 

வீட்டுக்குள் வந்தவுடன் அனைவரும் ஆங்காங்கே தூங்கி விழுந்து கண் விழித்த போது மணி 5:45..

முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்தாள் லதா..

" பல் விளக்கி விட்டு வாம்மா.. காஃபி குடிக்கலாம்.. "  - என்றாள் காமாட்சி..

" சித்தி.. இவ்வளவு சீக்கிரம் காவின் பால் வந்துடுமா..  டோர் டெலிவரியா?..  "

லதா கேட்டாள்..

" டோர் டெலிவரி தான்.. ஆனா இது காவின் பால் இல்லே.. பசும் பால்!.. "

" அதுவும் பசும்பால் தானே.. அம்மா சொல்வாங்க!.. "

" பசும்பால்... நீங்க தான் மெச்சிக்கணும்!.. "

" ஏன்.. சித்தி?.. "

" அது மிஷின்ல சலிச்சு பிரிச்சு லாரி..ல வந்து இறங்குறது.. இது கன்னுக் குட்டி குடிச்ச பால்..  மடி சுரந்து கறந்து வாங்குனது.. "

" ஓ.. fresh milk!.. "

மென்மையாகப் புன்னகைத்தாள் சித்தி..

" ஹையா ... அப்போ நான் பார்க்கணுமே.. கன்னுக்குட்டி எங்கே!.. "  - பரபரப்பானாள் லதா..

" மாடு கன்னுக்குட்டி எல்லாம் அவங்க தோட்டத்துல இருக்கு.. "

" அப்போ பார்க்க முடியாதா?.. "

" ஏன் முடியாது?.. சாயங்காலம் நாம போய் பால் வாங்குவோம். அப்போ பார்க்கலாம்.. "

அதற்குள் பெரியவள் சுதாவும் காமாட்சியின் மகளும் எழுந்து வந்தார்கள்.. 

" ஏய்.. ஓட்ட வாய்!.. காலைல. ய ஆரம்பிச்சுட்டியா?.. "

" சுதா.. நீயும் brush பண்ணிட்டு வாம்மா.. அங்கே போன் பண்ணி சொல்லிட்டீங்களா?.. "

" நெட் வொர்க் இல்லே சித்தி.. அதுவும் இல்லாம அந்த ஏரியாவுல பவர்கட் இருக்கும் போல.. "

குரலில் கவலை தெரிந்தது..

" இங்கே வந்து இறங்குனதுமே மெசேஜ் பண்ணிட்டேன்... அதான் கவலை இல்லாம தூங்குறாங்க.. "

சோபாவில் இருந்தபடி லக்ஷ்மி சொன்னாள்..
இரவு முழுதும் தூங்காமல் பயணித்த களைப்பு முகத்தில் இன்னும் இருந்தது..

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக விடாத மழை..   

மூத்தவருக்கு வேலை மாற்றல் ஆகி சென்னைக்குச் சென்றதும் அங்கே குறைந்த விலைக்கு வருகின்றது என்று வாங்கிப் போட்ட மனைப் பிரிவு - வீட்டைக் கட்டி முடித்து மூன்று வருடங்களுக்குப் பிறகு  தன் சுயரூபத்தைக் காட்டியது.. 

அப்போது மூன்று வருடங்களுக்குப் பின் பெய்த மழையில் அங்கிருந்த அனைத்து வீடுகளும் ஒரு அடி தண்ணீருக்குள்..

பல்லவர் காலத்து ஏரி தூர் வாரப்படாமல் கிடந்து சுதந்திர பூமியில் வீட்டு மனைகளாகி ஏதோ ஒரு நகர் என்றாகி விட்டது.. 

வீட்டை விற்று விடுவதற்கு மழையும் தேங்குகின்ற நீரும் காரணங்கள் என்றால் விற்காமல் இருப்பதற்கு பலப்பல காரணங்கள்..

மழைக் காலத்தில் வீட்டின்  பொருட்களை எல்லாம் மாடி அறைகளுக்கு மாற்றி விடுவதும்  தை மாதம் பிறந்ததும் மேலேயிருந்து கீழே அள்ளிக் கொண்டு வருவதுமாக பத்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.. 

இப்போது தான் முதல் முறையாக மழை வந்ததும் - புதிதாய் தோண்டப் பட்டிருக்கும் பாதாள சாக்கடைப் பள்ளங்களுக்குப் பயந்து கொண்டு மனைவி மக்களை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார் மூத்தவர் - இயல்பு நிலை திரும்பியதும் வந்தால் போதும்!.. என்று

' தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் ' .. - என்று பயமுறுத்திக் கொண்டு இருந்தாலும் இங்கே கனமழையும் இல்லை. தொடர் மழையும் இல்லை. அவ்வப்போது சற்றே பலத்த மழை.. 

இதுவும் இல்லை என்றால் தன்னை மறந்து விடுவார்களே!.. - என்ற நினைப்பில் வானம் பொழிந்து கொண்டிருந்தது..

நேற்று பிற்பகலில் அடித்துக் கொண்டு பெய்ததோடு சரி.. இரவில் இடி முழக்கங்கள் மட்டுமே.. மயிலாடுதுறை சீர்காழிப் பக்கம் அளவுக்கு அதிகமாக ஆட்டம் விட்டுப் போனதாக செய்திகள்..

பொழுது விடிந்தும் கூட
வானம் கரேல் என்று தான் இருக்கின்றது.. 

இங்கே பத்து நாட்களுக்கு அடைத்துக் கொண்டு பெய்தாலும் கவலை இல்லை.. தெருக்களில் தண்ணீர் தேங்காது.. சோழர்கள் ஆட்சி செய்த ஊரல்லவா!.. 

அதுவுமில்லாமல் இந்தப் பகுதி சற்றே மேடு.. 

ஆனாலும் நாங்கள் விடமாட்டோம் என்றிருக்கின்றது இன்றைய சூழ்நிலை..

இதற்கிடையில்
காய்கறிப் பைகளும் வாழை இலைகளுமாக
ஸ்கூட்டியில் வந்து இறங்கினார் சித்தப்பா..

" ஹை.. சித்தப்பா!.. "

ஓடி வந்த பிள்ளைகளிடத்தில் பெரியதொரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார்.. 

அதனுள் கமகம..  வாசத்துடன் சூடாக இருந்தன உளுந்து வடைகள்..

" காலை.. லயே வடையா!.. "

" ஆமா.. ராவ் ஜி போட்டுக்கிட்டு இருந்தான்.. "

பேச்சும் சிரிப்புமாகப் பொழுது நகர்ந்து கொண்டிருந்த வேளையில் பின்பக்கத்தில்,     ' க்ரா.. க்ரா.. '  - என்ற ஒலிகள்..

" அது என்ன சத்தம் சித்தி?.. "

" மயில்.. மா.. "

பிள்ளைகளுக்கு வியப்பு..
பார்ப்பதற்கு ஓடினார்கள்..

" ஓடாதீங்க... பயந்துடும் அதுங்க.. ஜன்னல் வழியா பாருங்க!.. "

ஜன்னலைத் திறந்து பார்த்த  பிள்ளைகளின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன..

ஆணும் பெண்ணுமாக ஆறேழு மயில்கள்... கூடவே அவற்றின் குஞ்சுகள்..

" இதை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடுங்க.. "

சித்தியின் கைகளில் இரண்டு கிண்ணங்கள்.. அவற்றில் முத்துச் சோளமும் நிலக் கடலை பருப்புகளும் இருந்தன..


பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.. அள்ளி வீசினார்கள்..  

மயில்களும் ஜன்னல் வழியே  அள்ளி வீசப்பட்ட தானியங்களை ஒன்று விடாமல் தின்று விட்டு  நீலமும் பச்சையும் சேர்ந்து மினுமினுக்கும் கழுத்தை உயர்த்தி இப்படியும் அப்படியுமாக பார்த்தன.. 

சிறகுகளை விரித்து சிலுப்பிக் கொண்டன.. தலையை ஆட்டியபடி அலகை தீட்டிக் கொண்டன.. ஜன்னலுக்கு அருகாக வந்து பிள்ளைகளை உற்று நோக்கின..  

கண்களில் மகிழ்ச்சி ததும்பியிருந்தது..

" முருகா.. முருகா.. " -  கூச்சலிட்டனர் பிள்ளைகள்..

" கர்ரோக்.. கர்ரோக்.. " - என்று அகவியபடி ஒவ்வொன்றாக மேலெழுந்து பறந்து அந்தப் பக்கமாக இறங்கி நடந்தன...

குஞ்சுகள் பின் தொடர்ந்து ஓடிச் சேர்ந்து கொண்டன..


" நாளைக்கும் வருமா சித்தி?.. "

" தினசரி வரும் டா... "

" இந்த மயிலுங்க எல்லாம் எங்கேருந்து வருது?.. "

எல்லாம் அந்தப் பக்கத்து காடுகள்.. ல இருந்தது தான்.. காடுகள் ஏதோ காரணத்தால அழிஞ்சதும் நம்ம ஊர் பக்கம் வந்துடுச்சுங்க. இப்போ இருக்கிறது அதோ அந்த ஆத்தங்கரை புங்க மரம்.. ரோட்டுப் பக்கத்து புளிய மரம்.. அங்கேருந்து காலார நடந்தே வந்துடுவாங்க.."

சித்தப்பாவின் விளக்கத்துக்கு எதிர் கேள்வி..

" ராத்திரியில எங்க தங்குவாங்க?.. "

" இதுகளுக்கு குறுங்காடுகளும் மலை இடுக்குகளும் தான்  பிடிக்கும். அதெல்லாம் அழிஞ்சு போனதும் சாலை ஓரத்து புளிய மரத்திலயும் தூங்கு மூஞ்சி மரத்திலயும் உக்கார்ந்து இருக்குதுங்க... கூடு கட்டத் தெரியாத  இதுகளுக்கு புதர்கள் தான் அடைக்கலம். புதர்களும் அழியறதுனால இதுகளோட எண்ணிக்கை ரொம்பவும் குறையுதாம்.. "

சித்தப்பாவின்  குரலில் வருத்தம் தெரிந்தது..

மறுநாளும் மயில்கள் வந்தன.. பிள்ளைகளின் புன்னகையிலும் மகிழ்ச்சியிலும் நாட்கள் நகர்ந்திட மழை ஓய்ந்த ஒருநாளில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்..

அடுத்த நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு நாள் - " மயில் எல்லாம் எப்படியிருக்கு சித்தி?.. * - என்ற  நலம் விசாரிப்பு தொலைபேசியில்..

நகர் விரிவாக்கப் பணிகளுக்காக " சாலையோர மரத்தை எல்லாம் அடியோட வெட்டித் தள்ளிட்டாங்க.
மயிலுக்கு எல்லாம் போக்கிடம் இல்லாமப் போச்சு.. - என்ற சேதியை எப்படிச் சொல்வது ?.. "  - எனத் தெரியாமல் தடுமாறினாள் காமாட்சி..
***

வாழ்க நலம்
*

திங்கள், நவம்பர் 28, 2022

பஞ்சபுராணம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
கார்த்திகை 12
  திங்கட்கிழமை
இரண்டாவது சோமவாரம்


சிவாலயங்களில்  
இரண்டாம் வாரத்தின் 
சங்காபிஷேகம்..

பஞ்சபுராணம்


தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே..5/19
-: திருநாவுக்கரசர் :-

திருவாசகம்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகர் :-

திரு இசைப்பா
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9/8
-: கருவூரார் :-

திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.. 9/29
-: சேந்தனார் :-

பெரியபுராணம்
பேறினி யிதன்மேல் உண்டோ 
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்  
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று  
மன்னுபே ரருள்பு ரிந்தார்..12/10
(கண்ணப்ப நாயனார் புராணம்)
-: சேக்கிழார் :-

திருப்புகழ்
மதியால்வித் தகனாகி மனதாலுத் ... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ... பொருளோனே
கதியேசொற் பரவேளே கருவூரிற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கந்தபுராணம்
பன்னிரு கரத்தாய் போற்றி
பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறு
முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக்
கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள்
இருக்குமா மணியே போற்றி"
-: கச்சியப்ப சிவாசாரியார் :-

திருச்சிற்றம்பலம்
***

ஞாயிறு, நவம்பர் 27, 2022

தேடும் பணி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 11
  ஞாயிற்றுக்கிழமை

வேலையில்லாத எல்லாரும் ஏதோ 
ஒன்றைத் தேடுகின்ற வேலையில்!..


சில மாதங்களுக்கு முன்பு புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்றிருந்தபோது கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள்
கீழே உள்ள படங்கள்
புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்..நலமே வாழ்க..
***

சனி, நவம்பர் 26, 2022

நாகத்தி ஐயனார்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 10
  சனிக்கிழமை

ஏதோ ஒன்றைத் தேடும் போது - வேறொரு தளத்தில் இக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.. 

இந்தக் கட்டுரையை ஆக்கியவர் தொல்லியல் அறிஞர் திரு குடவாயில் பாலசுப்ரமணியன் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்..

அதனை, அப்படியே இன்றைய பதிவில்
நெஞ்சார்ந்த நன்றியுடன்
வழங்கியுள்ளேன்..
(படங்கள்: Fb அகில்)

நாகத்தி 
ஸ்ரீ அழகிய வேம்புடைய ஐயனார்..


சோழ வளநாட்டின் தலைநகராம் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன் பேட்டையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைக் குறையாக (ஒரு தீவாக) உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். 

காவிரியின் கிளை நதியான வெட்டாறு இவ்வூருக்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் இவ்வூருக்குக் கிழக்கில் இணைந்து ஒரே ஆறாகப் பயணிப்பதால் இவ்வூர், காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே அமைந்த திருவரங்கம், திருவானைக்கா போன்று ஆற்றிடைக் குறையாகவே விளங்குகின்றது,

வளைந்து நெளிந்து செல்லும் வெட்டாறு பாம்புடல் போன்றும், நாகத்தி என்னும் ஊர் பாம்பின் படமெடுத்த தலை போன்றும் விளங்குவதால் இவ்வூருக்கு நாகத் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இது காலப்போக்கில் நாகத்தி என மருவிவிட்டதாகவும் கூறுவர். 

இயற்கை எழில் சூழ்ந்த இவ்வூரின் கண், ஆழி சூழ்ந்த இவ்வுலகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிக அரிய பல்லவர் கால ஐயனார் திருமேனி ஒன்று விளங்குவதும், மிகப்பழைய சிவாலயம் ஒன்று காலவெள்ளத்தில் கரைந்து அதன் எச்சங்கள் மட்டுமே இன்று ஐயனார் ஆலயத்தில் காட்சி நல்குவதும் சிறப்புக்கு
உரியவையாகும். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வூரின் வரலாற்றுச் சிறப்புகளையும், தனித்தன்மை பெற்ற பூரணையுடன் திகழும் ஐயனார் ஆலயம் இதுவே.

நாகத்தி ஐயனார் ஆலயம் பல்லவப் பேரரசர்கள் காலத்திலேயே (இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே) இங்கு ஐயனார் திருவுருவம் அமைக்கப்பெற்றதால் இங்கு ஒரு தேவி மட்டுமே காணப் பெறுகிறார். 


பீடம் ஒன்றின் மேல் ஐயனார் அமர்ந்திருக்க, அருகே ஒரு தேவி மட்டும் நிற்கும் கோலத்தோடு, ஏறத்தாழ ஆறு அடி உயரமாக விக்ரகம் வடிக்கப் பெற்றுள்ளது


வலது காலை பீடத்தின் மேல் குத்திட்ட நிலையில் அமர்த்தி, இடது காலை தொங்கவிட்டபடி ஐயன் அமர்ந்துள்ளார். 

வலக் கரத்தினை குத்திட்ட முழங்கால் மேல் அமர்த்தி பக்கவாட்டில் நீட்டியுள்ளார்.


இடக்கரமோ பீடத்தின் மேல் ஊன்றப் பெற்றுள்ளது. கிரீட மகுடத்துடன் பரந்த ஜடாபாரம் காணப் பெறுகின்றது. 

வலக் காதில் குழையும், இடக்காதில் பத்ர குண்டலமும் விளங்க, மார்பை கழுத்தணி அலங்கரிக்கிறது. தடித்துத் திரண்ட புரிநூல் தோளிலிருந்து வயிறுவரை காணப் பெறுகிறது.


தொடை வரை இடுப்பாடை விளங்குகிறது. பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய் ஒன்று நின்றிருக்கிறது.

தேவியோ நின்ற கோலத்தில் வலக்கரத்தில் தாமரை ஒன்றினை ஏந்தியவாறு பேரழகோடு காணப் பெறுகின்றார். 

இதனை ஒத்த ஒரு திருவடிவம் வேறு எங்கும் காணமுடியாது. இங்கு நிற்கும் தேவி தாமரையை ஏந்தியுள்ளதால் இவள் பூரணாதேவி என அழைக்கப் பெறுகிறாள்.

எழுத்து:
குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்..

வெகு விரைவில் இத் திருக்கோயிலில் தரிசனம் செய்த பின் மீண்டும் எழுதுகின்றேன்..

அழகிய வேம்புடைய ஐயனார் போற்றி..
***

வெள்ளி, நவம்பர் 25, 2022

கனகசபை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 9
 வெள்ளிக்கிழமை

இன்றொரு திருப்புகழ்


திருத்தலம் கனகசபை
தில்லை திருச்சிற்றம்பலம்

தனதனன தனன தந்தத் ... தனதானா
தனதனன தனன தந்தத் ... தனதானா

இருவினையின் மதிம யங்கித் ... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ... றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட் ... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே..

தெரிதமிழை யுதவு சங்கப் ... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ... கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க் ... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)


நல்வினை, தீவினை என்ற இரண்டினால்
எனது அறிவு மயங்கி அலையாமலும்

ஏழு நரகங்களிலும் உழலக் கூடிய நெஞ்சத்துடன் நான்  திரியாமலும்

பரம குருவாகிய உனது அருளை நினைவில் வைத்து,

ஞானத்தெளிவு பெறுவதற்கு (ஏதுவாக)
உனது தரிசனத்தை எனக்கு நீ என்றைக்கு  அருள்வாய்!.. 

அனைவரும் தமிழைத் தெரிந்து கொண்டு மகிழும்படிக்கு ஆராய்ந்து உதவுதற்காக சங்கத்தில் புலவனாக வந்தவனே..

சிவமூர்த்தி பெற்றருளிய முருகப் பெருமானே..

செம்பொன்னால் ஆன வீரக் கழல்களை அணிந்தவனே..

கருணையுடன் வாழ்வினை அனுசரிக்கும் அன்பர் தமக்கு எளியவனே..

கனகசபையில் வீற்றிருக்கும்
கந்தப் பெருமாளே!..


முருகா சரணம்
சரணம் சரணம்..
***

வியாழன், நவம்பர் 24, 2022

ஸ்ரீ பூதநாதன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 8 
  வியாழக்கிழமை


வாவரன்..

ஸ்ரீ பூத நாதன் - பால மணிகண்டனாக பூமிக்கு வந்தபோது உற்ற துணையாக - 
காவலனாக திருக்கயிலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பூத கணம்..

ஆனால்,
இது இன்றைக்கு வேறு விதம்..

பிற்கால கேரளத்தில்  கொள்ளையிடுவதற்காக  பாரசீகத்திலிருந்து கடல் வழியே வந்தவர் வாவர்.. மாயா ஜாலங்கள் அறிந்தவர்..

அவரது தாக்குதலை சமாளிக்க முடியாத பந்தளப் படைக்கு உதவுவதற்கு ஐயப்பன் மூலஸ்தானத்தில் இருந்து மானிட வடிவம் தாங்கி வந்து வாவரின் மாயா ஜாலத்தை முறியடித்து மக்களைக் காத்தருளினார்.. 

தோல்வியுற்ற வாவர் மனம் வருந்தி பாலனாக வந்திருக்கும் தாங்கள் யார் என்று கேட்க, ஐயப்பன்
தனது மெய்யுருவை வாவருக்கு மட்டும் காட்டியருளினார்..

அதைக் கண்டு மயங்கி விழுந்த வாவருக்கு மூன்று நாட்கள் ஆகியதாம் சுய நினைவு திரும்புவதற்கு ..

இந்த விஷயத்தைக் கேள்வியுற்ற மன்னர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாவரனுடன் மாயப்போர் புரிந்த இளைஞனை விசாரிக்க மன்னனுக்குத் தன்னுரு காட்டி சபரி மலைத் திருமேனியில் ஒன்றினார்..

அதன் பின் கொள்ளையடிப்பதைக் கைவிட்டு விட்டு அற வழியில் திரும்பிய வாவரும் ஐயப்பன் மீது அன்பு கொண்டு மரியாதை செலுத்தி  எருமேலியில் தங்கி - மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வாழ்ந்து முடிந்தார்.. 

இதைத் தான் ஐயப்பனும் வாவரும் ஒன்று என்றாக்கி விட்டார்கள்.. வாவர் மசூதிக்குச் செல்லாமல் மலையேறக் கூடாது என்று கொண்டு வந்து விட்டார்கள்..

ஐயப்ப அவதாரமே மகிஷியை அழிப்பதற்குத் தான்..

அந்த சம்பவம் பல யுகங்களுக்கு முன்பு..

யுகாந்திரங்களுக்கு முந்தைய நிகழ்விற்குள் பிற்காலத்திய வாவர் எங்கிருந்து வந்தார் என்பது புரியவில்லை..

மகிஷி கேட்டிருந்தபடிக்கு ஸ்ரீ ஹரி ஹர மூர்த்திகளின்  ஜோதி ஸ்வரூவத் திருமேனிகளில் இருந்து ஜோதிப் பிழம்பாகத் தோன்றியவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா..

அவர் குழந்தையாய்த் தோன்றிய சில நிமிடங்களிலேயே பன்னிரண்டு வயதினை அடைந்தார்.. பூத நாதனாகப் பட்டம் சூட்டப் பெற்றது அவருக்கு.. 

அதன்பின் அண்டப்பிரபஞ்சமும் கைக்கு வந்த நிலையில் மகிஷி சம்ஹாரம்.. 

மகிஷி வதமானது -
பந்தள மன்னன் தனக்கு மகன்  பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டதால் மீண்டும் பம்பைக் கரையில் அவதரித்து பன்னிரண்டு ஆண்டுகள் வளர்ந்து புலிப்பால் என்ற நாடகத்துக்காக வனத்தினுள் சென்ற போது அங்கிருந்த முனிவர்களுக்காக மீண்டும் நடத்திக் காட்டப்பட்ட சம்பவம்.. 

இப்போதும் இதனுள் வாவர்  வரவில்லை..

பின்னொரு சமயம் எருமேலி பகுதி வணிகர்களிடம் வழிப்பறி செய்வதும் கொள்ளையிடுவதும் காட்டுக்குள் ஓடி உடும் பாறைக் கோட்டையில் 
ஒளிந்து கொள்வதுமாக
இருந்த உதயணன் என்ற கொள்ளைக் காரனையும் அவனது கூட்டத்தார்களை அடக்குவதற்காக வந்த அவதார மூர்த்தியின் வழிபாடுதான் இப்போது நாம் மேற்கொள்கின்ற நடை முறைகள்..

எருமேலியில் இருந்து
உதயணனைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் புறப்பட்டபோது வீரர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடிய நிகழ்வே பேட்டை துள்ளல்..

இங்கே வில்லும் அம்பும் கொண்டு வேடுவராக நின்ற திருக்கோலத்தில் சாஸ்தாவாகிய ஐயப்பன்.. 

இந்த கிராத சாஸ்தா கோயிலுக்குப் பக்கத்தில் தான் ஆதியில் வந்த சிவகணம் வாவரனின் கோட்டம் இருந்திருக்கின்றது.. 

ஏதோ ஒரு கலவரத்தின் போது 
வாவரன் கோஷ்டம்
சேதப்படுத்தப்பட்டது.. 

வாவரனின் விக்ரகம் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அங்கிருந்தே பக்தர்களுக்கு ஆசி நல்குவதாகவும் நம்பப்படுகின்றது..

வாவரன் கோட்டம் மாற்றப்பட்ட - பிறகே வாவர் மசூதி இவை பேசப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது..

எருமேலியில் பேட்டை துள்ளிய மணிகண்டன் வழிநடையில் அந்தந்த இடங்களின் ஆதி மகாத்மியத்தைச் சொல்லியபடியே
அழுதை நதியைக் கடந்து மேலே சென்று காட்டுக்குள் உடும் பாறைக் கோட்டையில் உதயணனைக் கண்டு பிடித்து வெற்றி கொள்கின்றான்.. 

பின்னும் படையினருடன் கரி மலை, பம்பை நதி இவற்றைக் கடந்து 
நீலிமலையில் ஏறும்போது அங்கே ஒரு ஆல மரத்தின் அடியில் 
தனது ஆயுதங்களைக் களைகின்றான் மணிகண்ட மூர்த்தி.. 

அந்த இடமே இன்று சரங்குத்தி..

கூட வந்தவர்களையும் ஆயுதங்களைக் களைந்து விடும்படிச் சொல்ல அனைவரும் வியப்புற்று, ஏன்!.. - என்று கேட்க தன் உருவம் காட்டியபடி  சபரி பீடத்தில் இருந்த ஆதி விக்ரஹத்துடன் ஒளியாக ஒன்றி விடுகின்றான் மணிகண்ட ஸ்வாமி..

இதையறிந்த மன்னர் ஆதியில் அகத்திய மகரிஷி வகுத்துக் கொடுத்திருந்த விரத முறைகளைப் புதுப்பித்துக் கொண்டு மலைக்கு வந்து தரிசனம் செய்கின்றார்.. 

ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் ஜோதி ஸ்வரூபனாக தரிசனம் அளிக்கின்றார்.

ஸ்ரீ ஹரிஹர புத்திர அவதாரம் ஆதியில் மகிஷியை அழித்த பிறகு,

புலிப்பாலுக்காக
பந்தளனின் பிள்ளையாக  வளர்ந்தது ஒரு முறையும், மாயா ஜால வாவரை மடக்குவதற்காக ஒரு முறையும் கொள்ளையன் உதயணன் அழிவுக்காக ஒரு முறையும் நிகழ்ந்திருப்பதாக அறிய முடிகின்றது..

இதையெல்லாம் ஒன்றாகக் கொண்டு இன்றைய வழிபாடு..

ஐயப்பனின் விரத முறைகளை ஸ்ரீ அகத்திய முனிவர் வகுத்துக் கொடுத்ததாகவும்
வியாச மகரிஷி எழுதிய பிரம்மாண்ட புராணத்தில் ஐயப்ப சரிதம் சொல்லப்பட்டு இருப்பதாகவும்
திரு. அரவிந்த சுப்ரமணியம் கூறுகின்றார்..

அந்நிய அடக்கு முறையினால் தான் வாவரன் என்பது  வாவர் வழிபாடு என்ற நடைமுறையானது என்பதும்  சிலரது கருத்து..


ஸ்ரீ ஹரிஹர புத்திர அவதாரத்தின் தொன்மையை உனர்ந்து கொண்டு விட்டால் மற்றதெல்லாம் சாதாரண விஷயம்..
சந்நிதானம்

மகிஷி வதத்தினால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் 
சஹஸ்ராரம், பிரம்மரந்திரம் இவற்றுக்கு மேலாக துவாதசாந்த நிலையில்  ஐயப்பனை வைத்து பூஜித்து மெய்யுருவைக் கண்டு வணங்கினர்.. 

இதுவே இன்றைய பொன்னம்பல மேடு என்று கொண்டாடப்படுவது..

மனித சரீரத்தில் சஹஸ்ராரம் எனப்படுவது மூளையின் உச்சி..  பிரம்மரந்திரம் எனப்படுவது சிசுவின்  உச்சிக் குழி..  

வளர்ந்த மனிதனின் தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில்  துவாதசாந்தம்..

தலைக்கு மேலாக கைகூப்பி வணங்கும்போது  துவாதசாந்தத்தை ஸ்பரிசிப்பதாக ஆன்மார்த்த உணர்வு தோன்றும் அந்நிலையில் கண்களில் நீர் கசியும்.. 

இதையே திருவாசகம்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்..
என்றும்
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க!.. என்றும்  பாடிப் பரவசம் ஆகின்றது..

தஞ்சை தட்சிண மேருவில் பிரம்மரந்திரம் பேசப்படுகின்றது..

சபரி மாமலையில் ஐயப்பனின் யதாஸ்தானம் தான் சஹஸ்ராரம். 

மேலே உள்ள பொன்னம்பல மேடு தான் துவாத சாந்தப் பெருவெளி.. 


ஆனால், 
அன்றைக்கு தேவர்கள் ஐயனை இருத்தி வழிபட்ட பொன்னம்பலம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.. 

அதனை ஒவ்வொரு பக்தனும் தன்னுள் உணர்வதே ஐயப்ப வழிபாடு..

ஒவ்வொரு பக்தனுக்கும் அவனுள் உணர்த்துவதே ஐயப்ப ஸ்வாமியின் அருள்....

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***

புதன், நவம்பர் 23, 2022

சோழ வம்சம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 7
புதன்கிழமை

சோழ வம்சாவளி குறித்த 
பதிவு தொடர்கின்றது..

முதல் பகுதி சோழவம்சம் 1


1. குலோத்துங்கன்.. (1070 - 1120) முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப்  பேரன். 

பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் அதிராஜேந்திர சோழர்..  இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் - மேலைச் சாளுக்கியத்திற்கு சோழர் பெண் கொடுத்த வகையில் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கலிங்கத்துப் பரணி கொண்ட விறலோன் என்பது சிறப்பு பெயர்..

2. விக்கிரமன் (1118 - 1135) முதலாம் குலோத்துங்க சோழனின் மகன். கூத்தன் உலாக் கொண்ட விக்கிரம சோழன் என்ற சிறப்புடையவன்..

3. (இரண்டாம்) குலோத்துங்கன் (1133 - 1150) விக்கிரம சோழனின் மகன்.

அநபாயச் சோழன் என, புகழப்பட்ட மன்னன்..  
இவரது முதலமைச்சரே சேக்கிழார்..

சேக்கிழார் பெரிய புராணம் இயற்றியது இவரது  ஆட்சியில்.. 

அவையில் இருந்த பெரும் புலவர் ஒட்டக்கூத்தர்..

விக்கிரம சோழன் உலா, தக்க யாகப் பரணி - ஆகியவை ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டன..

விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் விளங்கியவர் -  ஒட்டக்கூத்தர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான்
நளவெண்பா பாடிய புலவர் புகழேந்தி..

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் தில்லை மாநகரம்  விரிவுபடுத்தப்பட்டது. கனகசபை கோயிலும் புதுப்பிக்கப்பட்டது..

இச்சமயத்தில் தான்
தில்லை கோவிந்த ராஜர் அப்புறப்படுத்தப் பட்டதாக - தக்க யாகப் பரணியில் கூத்தர் கூறுவதாகச் சொல்கின்றது - விக்கி

4. (இரண்டாம்) ராஜராஜன் (1146 - 1163) இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன்.. தற்காலத்தில் தாராசுரம் எனப்படும் ராஜராஜபுரத்தில் ஐராவதேஸ்வரர் ஆலயத்தை அமைத்த மன்னன் இவரே.. 

5. (இரண்டாம்) இராஜாதிராஜன் (1163 - 1178) இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்.

திருபுவனம் கோயில்
6. (மூன்றாம்) குலோத்துங்கன்.. (1178 - 1218) இரண்டாம் ராஜராஜ சோழனின் மகன். திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஸ்வரர்  கோயிலைக் கட்டிய மன்னன்.. 

மூன்றாம் குலோத்துங்க சோழன் 
காலத்தினைக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்த காலம் என்று கருதுகின்றனர்..

இந்தக் கருத்திலும் மாறுபாடுகள் சொல்லப்படுகின்றன..

ஸ்ரீ சரபேஸ்வரர்
இந்த மன்னனின் ஆட்சியில் தான் சாளுக்கியத்தின் சரபேஸ்வர வழிபாடு சோழ நாட்டில் ஏற்பட்டது..

அத்துடன்,
மூன்றாம் குலோத்துங்கன் திரு ஆரூர் அம்பலத்தில் பொன்னும் வேய்ந்திருக்கின்றான்.

7. (மூன்றாம்) ராஜராஜன் (1216 - 1256) மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகன். இம்மன்னனின் காலத்தில் தான் சோழப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கிற்று..

மதுரையிலிருந்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் ராஜராஜனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான். 

அங்கிருந்த மாட மாளிகைகளையும் மணி மண்டபங்களையும் இடித்துத் தள்ளி தரை மட்டமாக்கினான்.

சோழர்களின் பூர்வீக பூமியாகிய பழையாறையின் அரண்மனையில் மாற வர்மன் சுந்தர பாண்டியன்
வீராபிஷேகம் செய்து கொண்டான். 

போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராஜராஜன் திறை செலுத்துதற்கு ஒப்புக் கொண்டு தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு தனி இடத்தில் தங்கியிருந்தான்..

சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் இராசராசன் திறை செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினங்கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது மீண்டும் ஒரு போர் தொடங்கினான். 

இப்போரில் தோல்வியுற்ற மூன்றாம் ராஜராஜன்  நாட்டை விட்டு வடபுலம் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பல்லவ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த கோப்பெருஞ் சிங்கன் என்பவன் தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்றாம் ராஜராஜனை சிறை செய்து, தனது தலை நகராகிய சேந்த மங்கலம் கோட்டையில் அடைத்து வைத்தான்.

இதே காலகட்டத்தில் போசள நாட்டை வீரநரசிம்மன் (1220 - 1230)  ஆண்டு வந்தான். இவன் தன் மகளை மூன்றாம் ராஜராஜனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான்.  

மூன்றாம் இராஜராஜனை
கோப்பெருஞ்சிங்கன் சிறை வைத்ததை அறிந்து மனம் கொதித்த வீரநரசிம்மன் பெரும்படையுடன் சென்று கோப்பெருஞ்சிங்கனைப் போரில் தோற்கடித்தான். அவன் சிறை வைத்திருந்த மூன்றாம் ராஜராஜனை மீட்டான்..

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படையுடன் வீரநரசிம்மன் சென்று, காவிரியாற்றங்கரை மகேந்திர மங்கலத்தில் 
சுந்தர பாண்டியனோடு போரிட்டு அவனை வென்று, அவன் கைப்பற்றி இருந்த சோழ நாட்டை மீட்டு மீண்டும் மூன்றாம் ராஜராஜனுக்கு வழங்கினான்.

இத்தோல்விக்குப் பின்னர், பாண்டியர் போசளரோடு மண உறவு  கொண்டனர் என்பது தனியான வரலாறு..

தஞ்சையைத் துறந்து 1023 ல் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழருக்குப் பின் வந்த  இரண்டாம் நிலைச் சோழ வம்சம் - மாற வர்மன் சுந்தர பாண்டியனிடம் (1216 - 1239) தோற்று கங்கை கொண்ட சோழ புரத்தையும் இழந்தது..

மூன்றாம் இராஜராஜன் மீண்டும் பழையாறைக்கு வந்து தஞ்சையை தன்னுடன் வைத்துக் கொள்ள சோழப் பேரரசு - சிற்றரசு என்றானது.. 

8. (மூன்றாம்) இராஜேந்திரன். 
(1246  - 1279) மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன். சோழ வம்சத்தின் கடைசி அரசன். மாபெரும் சோழப் பேரரசு வலிமை குன்றி தன்னை இழந்தது..

(இரண்டாம்) மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, கி.பி. 1251 ல் மன்னனாக முடி சூடிக் கொண்ட (முதலாம்) சடைய வர்மன் சுந்தர பாண்டியன் 1257 ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து திறை செலுத்தாதிருந்த மூன்றாம் ராஜேந்திரனை வென்று அவனைத் தனக்குக் கீழ்  ஆக்கினான். 

தனது ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியருக்குத் திறை செலுத்தியே வாழ்ந்த
மூன்றாம் ராஜேந்திரன் சோழப் பேரரசின் கடைசி மன்னன் என்று ஆனான்.. 

அவன் இறந்த பின்னர், சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது..
***

கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தெற்கு எல்லையில் கண்காணிப்பு குறைந்ததும் பரந்து பட்டிருந்த நிலப்பரப்பின் ஆளுமையில் திறமை குன்றியதுமே சோழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றுரைப்பார் எங்கள் வரலாற்று ஆசிரியர் திரு S.R.கோவிந்தராஜன் அவர்கள்..

அறங்களும் ஆலயங்களும் பாதுகாக்கப்பட்டன.. தமிழ் முன்னெடுக்கப்பட்டது.. கலைகள் உச்சம் தொட்டன..

நீர் நிலை வயல் வெளிகளின் மேம்பாட்டினால் சமுதாயத்தின் எல்லா மக்களும் இன்புற்று வாழ்ந்தனர்..

இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்வு பொன்னாக ஆவதற்கு!..

தஞ்சையும் 
ராஜ ராஜேஸ்வரமும் 
அதன் கல்வெட்டுகளும்
இன்னும் பல காலத்திற்கு 
புகழ் ஏந்தியிருக்கும்..

சோழர் தம் புகழ் நீடூழி வாழ்க..
***

செவ்வாய், நவம்பர் 22, 2022

குறுக்குத் தெரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 6
  செவ்வாய்க்கிழமை

இன்றொரு சிறுகதை
-: குறுக்குத் தெரு :-


குறுக்குத் தெருவில்  இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடிக் கொண்டிருப்பதே இந்த மூன்றுக்கும் வேலை..

என்றாலும் -
மொத்தம் நான்கு குட்டிகள்.. 

இவற்றின் மகாத்மியம்
என்னவென்றால் குட்டிகளை ஈன்று கொஞ்சிக் கொண்டிருந்த தாய் திடீரெனக் காணாமல் போய் விட்டது.. 

அதற்கு என்ன ஆயிற்றோ.. ஏது ஆயிற்றோ.. - என்று கவலைப்படுவதற்கு யாரும் இல்லாமல் போனார்கள்..

இங்கே இருப்பவர்கள் எல்லாரும் நவநாகரீகத்தில் பிறந்தவர்கள். சொந்த பந்தங்களை நெருங்க விடாமல் தன்னந் தனியாக இருப்பதே கௌரவம் என்னும் கோட்பாட்டை உடையவர்கள்..

அந்த வீடுகளும் பெரிய பெரிய கம்பிக் கதவுகளுடன் கூடியவை. இரவிலும் பகலிலும் அடைத்தே கிடப்பவை.. 

அப்படியான தெருவில்
அனாதைகளாய்த் திரிந்து கொண்டிருந்த குட்டிகளில் கறுப்புக்கு மட்டும் யோகம் அடித்தது..

கடைசி வீட்டுக்காரர்கள் தூக்கிச் சென்று கழுத்தில் பட்டை ஒன்றைக் கட்டி வீட்டின் உள்ளேயே வைத்துக் கொண்டார்கள். கறுப்பு அந்த வீட்டின் வளர்ப்பாகி விட்டது..

அது முதற்கொண்டு இந்த மூன்றும் ஒன்றுக்குள் ஒன்று என உறுதுணையாகி விட்டன. தம்முள் சண்டை இட்டுக் கொள்வதோ கடித்துக் கொள்வதோ இல்லை..

கூப்பிட்டு ஒரு கை சோறு வைப்பவர் என்று எவரும் இல்லை.. 

ஆனாலும்
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வீடுகளுக்கு வெளியே
புலால் உணவின் மிச்சங்கள் நிறைய வந்து விழும். அன்றைக்கு மட்டுமே இதுகளுக்குக் கொண்டாட்டம்..

காரணம் அந்தப் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாருமே அரசுப் பணி, வங்கிப் பணி என்ற இயந்திரங்களுக்குள் இயந்திரங்களாக இருப்பவர்கள். காலையில் கிளம்பிப் போனால் சூரியன் இறங்கியதற்குப் பிறகே திரும்புவார்கள்..

ஒரு சில வீடுகளில் மட்டுமே இளஞ்சிறார்கள். வயதானவர்கள்..  

அவர்களும் இதுகளிடத்தில் இன்முகம் காட்ட மாட்டார்கள்..

ஆனால் இதுகளுக்கு மனிதர்களுடன் பழகுவதற்கு  ஆசை கிடந்து அடித்துக் கொள்ளும்..  

பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக காலையில்
 - டுடுட்..டுடுட்.. - என்ற சத்தத்துடன் ஆட்டோ வரும் போது இதுகளுக்கும் உற்சாகமாகி விடும்.. முன்னும் பின்னுமாக குதித்துக் கும்மாளம் குதூகலம்.. 

அந்த ஆட்டோக்காரன் கடுப்பாகி கீழே இறங்கி கல்லை எடுத்து எறிவான்... 

ஒருசமயம் குட்டியின் மீது கல் விழுந்ததில் பாவம் துடித்துப் போய் விட்டது.. அதிலிருந்து ஆட்டோ வரும் போது அதன் அருகில் சென்று குதிப்பது பிடிக்காமல் போயிற்று..

மாலை நேரங்களில் பெரியவர் சிலர் வெளியே நடை பழகும் போது அவர்களுக்குத் துணையாய் நடப்பதற்கு மனம் துடிக்கும்...

ஆனால் - 
அவர்களோ கையில் வைத்திருக்கும் தடியை ஓங்கியபடி  ' சூ' என்பார்கள்.. இதுகளுக்கு " சீ " என்றாகி விடும்...

ஒன்றும் பிடிபடாமல் அலுத்துப் போய் மண்டிக் கிடக்கும் புதர்களைப் பிறாண்டும் போது 
உள்ளேயிருந்து விஷ ஜந்துகள் கலைந்து ஓடும்.. 

உற்சாகத்துடன் துரத்திக் கொண்டு ஓடினால் ' புஸ் ' என்ற சத்தத்துடன்  தலையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் வகையறாக்கள் அதெல்லாம்.. அதற்குப் பிறகு ரெண்டு நாளைக்கு காய்ச்சல் தான்.. நடுக்கம் தான்..


இப்படியான நிகழ்வுகளுக்கு இடையே குட்டிகள் மூன்றும் பசங்களாகி விட்டன..  உடல் வாளிப்பாகி குரலும் மாறி விட்டது. மண்ணைப் பிறாண்டும் வேகமும் அதிகமாகி விட்டது..  இருந்த போதும் ஒன்றுக்கு ஒன்று ராசியாகவே இருந்தன..

அங்கிருக்கும் பிள்ளையார் கோயிலும் புங்க மரத்து நிழலும் தான் இருப்பிடம் என்றாகிய நிலையில், ஒருநாள் ஆட்கள் சிலர் வந்தார்கள்..

" தெரு நாய்களுக்கு தின்னக் கொடுத்தால்  தீராத பாவமும் தீருதாம்!.. " -  என்றபடி பிஸ்கட் போட்டார்கள்.. போய் விட்டார்கள்.. 

பிஸ்கட்கள் வாசமாகவும் புதுவித சுவையாகவும் இருந்தன..

சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்கள்.. பிஸ்கட் போட்டார்கள்.. போய் விட்டார்கள்.. 

மறுபடியும் எப்போது வருவார்கள் என்றிருந்தது பசங்களுக்கு..

அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை..  காற்றில் வந்த புலால் வாடை பசங்களுக்குக் கிளுகிளுப்பாக இருந்தது.. வாலைக் குழைத்தபடி  ஓடினார்கள்.. 

சொல்லி வைத்த மாதிரி இந்த வீட்டிலும் அந்த வீட்டிலும் அதற்கடுத்த வீட்டிலும் இலையோடு எலும்புகள் வாசலிலேயே இருந்தன.. சந்தோஷமாக உள்ளே நுழைந்ததும் வாசல் கம்பிக் கதவுகள் சடாரென அடைத்துக் கொள்ள சாம்பல் நிறத்தான் மட்டும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தான்..

விழுந்த வேகத்தில் எழுந்து பிள்ளையார் கோயிலை நோக்கி ஓடினான். அங்கே பிஸ்கட் பாக்கெட்டுடன் சிலர். ஐந்தறிவு ஆனாலும் ஏதோ புரிந்தது. காதுகளை விறைப்பாக்கிக் கொண்டு  அவர்கள் மீது  பாய்ந்தான். கோபத்துடன் விழுந்து பிடுங்கினான்.. 

" ஆழ்ஃப்.. ஆழ்ஃப்.. ஆழ்ஃப்.. "

அவர்களோ கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓடிப் போனார்கள் ..

" இனிமே பிஸ்கட்டும் வேண்டாம்.. எலும்புத் துண்டும் வேண்டாம்.. "

உடன் பிறப்புகளைப் பறி கொடுத்து விட்டு தப்பித்து வந்த சாம்பல் ஏக்கத்துடன் பிள்ளையாரை நிமிர்ந்து பார்த்தபோது - 

அங்கே - 
நாய்களைப் பிடித்து வைத்துக் கொண்ட வீடுகளில் பேசிக் கொண்டிருந்தார்கள்..

" நாய் இல்லாத வீடு.. ன்னு பார்த்து பட்டப் பகல்.. ல கை வச்சிருக்கானுங்க.. இனிமே இது இங்கே குலைச்சிக்கிட்டு கிடக்கும்.. தைரியமா இருக்கலாம்.. என்ன
இதைக் கொஞ்சம் நல்லா கவனிக்கணும்.. அவ்வளோ தான்!.. "

" போலீசுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டியது தானே இந்த மாதிரி திருடிட்டாங்கன்னு!... "

" ஏன்?. வருமானத்துக்கு 
மேல இத்தனை பணமும் பவுனும் வெள்ளியும் எப்படிடா வந்தது..ன்னு நோண்டி நொங்கு எடுக்கறதுக்கா?... "

சிறைப்பட்டு விட்ட ஜீவன் இதைக் கேட்டபடியே சிந்தித்துக் கொண்டிருந்தது..
***

திங்கள், நவம்பர் 21, 2022

பஞ்ச புராணம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 5
   திங்கட் கிழமை
முதற் சோமவாரம்


சிவாலயங்களில் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும் போது பன்னிரு திருமுறைகள் ஓதப்படுவது வழக்கமாகும். 

அவ்வாறு பன்னிரு திருமுறைகளை ஓதுதற்கு இயலாத நேரத்தில்  -  தேவாரம், திருவாசகம், திருஇசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் எனப்படும் பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் எனக் கொண்டு அவைகளில் இருந்து ஐந்து பாடல்களை ஓதும் முறை உருவாக்கப் பெற்றது.. 

இதனையே பஞ்ச புராணம் ஓதுதல் என்பர்..

பிற்காலத்தில் -
இவ்வைந்து பாடல்களுடன் முருகப் பெருமானது
திருப்புகழினையும்  கந்த புராண வாழ்த்துப் பாடலையும் இணைத்து பாடும் வழக்கம் உண்டாயிற்று..

அடுத்து வரும் சோம வாரப் பதிவுகளிலும் பஞ்ச புராணப் பாடல்கள் இடம் பெறும்.


திருச்சிற்றம்பலம்
தேவாரம்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-

திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் 
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் 
பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகர் :-

திரு இசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமா றிசையே.
-: திருமாளிகைத்தேவர் :-

திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் 
பத்தர்கள் வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே 
புகுந்து புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை 
கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த 
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே..
- : சேந்தனார் :-

பெரிய புராணம்
உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
-: சேக்கிழார் :-

திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் .. குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

கந்தபுராணம்
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க 
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் 
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்!..
-: கச்சியப்ப சிவாசாரியார் :-


திருச்சிற்றம்பலம்
***