நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 24, 2026

கருப்பன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் 
எங்கள் பிளாக் தளத்தில் வெளியான எனது சிறுகதை

கருப்பன்
**

" டிங்டிங் டிடிங்.. டிங்டிங் டிடிங்.. "

சொசைட்டிக்கு பால் கறக்கணும்... மூனே முக்கால் ஆச்சு.. செவலையை அவிழ்த்து அதன் முதுகிலேயே கயிற்றைப் போட்டாள் காவேரி.. 

அது நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது - கன்றைக் காணோமே!.. என்று..

அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..

உம் புள்ளய ஒன்னும் செஞ்சிட மாட்டோம் தாயி!.. - என்றபடி கன்றை அவிழ்த்து விட்டாள்.. 

துள்ளிக் குதித்த கன்றைப் பார்த்துக் கொண்டே நடந்தது பசு.. 

கையில் பால் குவளையையும் விளக்கெண்ணெய் சிமிழையும் எடுத்துக் கொண்டு நடந்த காவேரியின் கண்கள் எதிரில் தேடின - இப்போதாவது கருப்பன் வருகின்றானா!.. என்று...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கருப்பனைத் தவிர மற்றெல்லாமும் தென்பட்டன..

எதிரில் வருபவர் யாராவது கருப்பனைப் பற்றி சொல்லுவார்கள் - என்று பார்த்தால் அவரவரும் அவரவர் வேலையோடு போய்க் கொண்டு இருக்கின்றார்கள்..

கருப்பன்.. கருப்பன்!..
யாரவன் கருப்பன்?.. - என்றால் 

அந்தக் காலத்து ஆடு.. அலமேலுவோட ஆடு ஞாபகத்துக்கு வருதா?.. அது மாதிரி.. அந்த ஆட்டைப் போல எழுதப் படிக்கத் தெரியாதே தவிர கருப்பனுக்கு  மற்றதெல்லாம் தெரியும்..

விடியற்காலை கட்டுத் தறியில் இருந்து அவிழ்த்து விட்டால் போதும்.. அக்கம் பக்கத்து குரால்களைக் கொஞ்ச நேரம் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு விட்டு மெதுவாக நடையைக் கட்டுவான்.. மந்தையில் மத்தியானம் வரைக்கும் நாட்டாமை.. ஒரு யோசனை வந்து விட்டால் வடக்கே ரயில்வே டேசனுக்குப் போவான்..  அங்கே சுற்றித் திரிந்து விட்டு நடுப் பகலில் திரும்புவான்..

" எங்கேடா ஊர் சுற்றப் போனாய்!.. " - என்று காவேரி அதட்டினால் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அப்பாவியாக நிற்பான்..

ஒரு வாளி நிறைய கடலைப் புண்ணாக்கை கரைத்து வைத்திருப்பாள் காவேரி - இது மாதிரி ஊர் சுற்றும் பயல் உடம்புக்கு இது தான் நல்லது என்று... 

மூச்சு முட்ட அதைக் குடித்து விட்டு திண்ணையில் ஏறிப் படுத்தான் என்றால் அது தான் அவனுக்கு சொர்க்கம்..

இப்படியாகப்பட்டவன் சாயங்காலத்துக்கு மேலும் வீட்டுக்குத் திரும்பவில்லையே.. என்ற கவலை காவேரிக்கு..

புளியந்தோப்பில் வைத்து செவலையிடம் ரெண்டு லிட்டர் கறந்து சொசைட்டியில் ஊற்றி விட்டு  அட்டையிலும் பதிவு செய்து விட்டு வீட்டுக்கும் திரும்பியாயிற்று.. கருப்பன் வீடு திரும்பவில்லை..

காவேரியின் கண்களில் நீர் கோர்த்தது..

கருப்பனுக்கு என்று ஊறவைத்த கடலைப் புண்ணாக்கு நுரைக்க ஆரம்பித்திருந்தது..

தோட்டத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியாயிற்று..  பள்ளிக்கூடம் விட்டு தம்பியும் வந்து விட்டான்... 

விஷயம் தெரிந்ததும்
எல்லாரும் ஏகமனதாகச் சொன்னார்கள் - " எங்கே போயிடப் போறான்... வருவான்.. வருவான்!.. "

ஆனால் வரவில்லை..

அதோ - ஏழு தெருக்களையும் தபால் கட்டுடன் சைக்கிளில் சுற்றி வரும் போஸ்ட் ஆபீஸ் மாமா ..
இங்கிருந்தபடியே கத்தினாள்..

" மாமா.. கருப்பனப் பார்த்தீங்களா?.. '
சைக்கிளை நிறுத்தி காலை ஊன்றியவர் - 
" இல்லையே.. ம்மா!.. " - என்றபடி வீட்டை நோக்கி மெதுவாக நகர்ந்தார்..

கருப்பனைப் பற்றி அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும்...

முனீஸ்வர சாமிக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தான்..

அது பெரிய கதை.. பன்னிரண்டு மைல் சுற்றளவுக்கு விசேசம் இந்த ஊர் குருதி  பூசை.. அதுவும் மூனு வருசத்துக்கு ஒரு தரம் தான்.. அந்தக் கெரகம் இந்த வருசம் பார்த்து வருது.. மற்ற படையல் பள்ளயம் எல்லாம் வருசா வருசம் வழக்கம் போல..

தை முதல் செவ்வாய் அன்னைக்கு குருதி பூசை.. 

இலுப்பைத் தோப்பு முனீஸ்வரன் கோயில்ல பரிவார சாமிகளுக்கு எண்ணெய்க் காப்பு.. புது வேஷ்டி சாத்தி அசைவ படையல்..
இதுல முனீஸ்வரன் ஒதுங்கியே இருப்பார்.. 

அவருக்கு தை முதல் வெள்ளியன்னிக்கு அமுது படையல்..  சுழியம், அதிரசம், இளநீர், பானகம், பஞ்சாமிர்தம், தயிர் பள்ளயம், பாயாசம்..

கடை வெள்ளிக்கு  முனீஸ்வரன் அழைப்பு.. வாண வேடிக்கை.. ஊர் கோலம்..
கடை செவ்வாய் அன்னிக்கு விடையாற்றி.. மஞ்சத் தண்ணி விளையாட்டு..

முனீஸ்வர சாமிக்கு.. ன்னு
கிடாக்கள் நேர்ந்து விடுறது .. படையல் மட்டும் பரிவார சாமிகளுக்கு!..

ஊர்ல பதினைஞ்சு கிடா குட்டிகள் குருதிப் பூசைக்காகவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. இருந்தாலும் காவேரியோட கருப்பனுக்குத் தான் முதல் மரியாதை.. பூசை..

இந்த நேர்ச்சை ஆடுகளோட அடையாளம் - சிவப்பு நிற கழுத்துக் கயிறும் அதுல சூலாயுத முத்திரையோட ஒரு தகடும் தான்.. 

முனி ஐயா கிடாக்களக் கண்டாலே போதும்.. 
களவாணிப் பயலுகளுக்கு பேதியாயிடும்..  ஒருத்தனும்  கிட்ட நெருங்க மாட்டான்...  கிடாக்கள் வெள்ளாமையில  இறங்கிட்டா கூட ஜனங்க கோவிச்சுக்க மாட்டாங்க.. 

" சேதாரம் ஆகிடாம பாத்துக்குங்க ஐயா.. " - ங்கற ஒரே பேச்சு தான்.. 

அந்த வருசம் அந்த வயல்ல மகசூல் அமோகமா இருக்கும்..  கல்லு எதையும் எடுத்து வீசினா - அவ்வளவு தான்..

காத்து வாக்குல சேதி ஊருக்குள்ள போயி - நாலு எட்டா சனங்க வந்து விட்டார்கள்..

" இருவது கிலோவுக்கு மேல தேருமே!.. "

" இந்தக் கிடாக்களை வச்சி பண்ணையம் பண்றதே பெரிய பாடு.. "

" எனக்கென்னமோ சந்தேகமாத் தான் இருக்கு.. "

" நாளைக்கு முனியன் கடுப்பாகி கெளம்பிட்டா யாரு தாங்குறது?.. "

ஆளுக்கு ஆள் பேசி விட்டுப் போனார்கள்...

" எலே.. தம்பி... வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் ஒரு சுத்து பார்த்துட்டு வர்றியா?.. " 

காவேரியின் அப்பாவுக்கு உண்மையிலேயே கவலை..

" ராத்திரியில அந்த அண்ணன் சைக்கிள் தர மாட்டார் அப்பா!.. " 

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முனியன் கெடாய ஒருத்தன் தொட முடியுமா.. ன்னேன்.. ஏதாவது கொரால் பின்னால போயிருப்பான்... காலைல வருவான் பாருங்க... ஏ.. பாப்பா.. எதுக்கும் நீ கவலப்படாம  ஒரு ரூவா துட்டை எடுத்து முடிஞ்சு வை!.. " - என்று ஆறுதலாகப் பேசியபடி காவிரியின் தலையை வருடி விட்டாள் தாய்..

ராத்திரி சோறு ஒருவருக்கும் இறங்கவில்லை.. திண்ணை காலியாகக் கிடந்தது.. 

கையில் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வேலிப் படல் வரைக்கும் சென்று பார்த்து விட்டு வந்தாள் காவேரி..

ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை..  வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது..
கண்களைத் துடைத்தபடி தூங்கிப் போன காவேரி விடிவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்கு ஓடினாள்...

கருப்பனைக் காணோம்..
சொசைட்டியில் பால் கறக்க வேண்டும்... 

" ஏ... பாப்பா... பேசாம இரு.. அது கோயில் கெடா... அந்தக் கவலை முனியனுக்குத் தான்!.. " - என்றாள் அம்மா செவலையை அவிழ்த்துக் கொண்டே..

பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.. கருப்பன் காணாமல் போனது குரால்களுக்குத் தெரி ந்திருக்கும் போல.. எல்லாமே ஒரு மாதிரி மசங்கலாக இருந்தன...

அம்மா சொன்ன மாதிரி ஒரு ரூபாயை எடுத்து விளக்கு மாடத்தில் வைத்த காவேரி வாளியில் கடலைப் புண்ணாக்கைப் போட்டு தண்ணீர் எடுத்து ஊற்றினாள் - கருப்பன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன்..

யார் யாரோ வாசலுக்கு வந்தார்கள்.. ஏதேதோ பேசி விட்டுப் போனார்கள்..

" கருப்பன் காணாமப் போய்ட்டான்.. முனியனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!..
நல்லா மாட்டிக்கிட்டான் நல்ல தம்பி!.. " 

உள்ளூர சந்தோஷம் சிலருக்கு..

" போலீஸ்ல சொல்லுவமா?.. "

" எதுக்கு!.  போற போக்குல  பொங்க வைக்கிறதுக்கா?.. "

" ஏ.. நல்லதம்பி..  கருப்பன் காணாப் போனதுக்காக வருத்தப் படாதே.. கைக்கு கிடச்சதும் வர்ற கார்த்திகையில பாய்ச்சல் விட்டு குருதி பூச வச்சிடுவோம்.. இல்லேன்னா வேற கிடாக் குட்டி வாங்கி விட்டுடுவோம்.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. காணாப் போன கருப்பன் வரலை.. ன்னா சாமி குத்தம் ஆகிடும்.. ன்னு பயப்படாதே "

வாத்தியார் தாத்தா பேசினார்.. 

" அதுவும் சரிதான்.." - என்ற பேச்சும் கூடவே எழுந்தது,.

காவேரி எழுந்து முன்னால் வந்தாள்..

" தாத்தா மன்னிக்கணும்... நான் முனி ஐயாவுக்கு நிறை காணிக்கை நேர்ந்திருக்கேன்!... "

வாசலில் கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி...

" நெற காணிக்கையா!..  குருதி பூசைக்கு நேர்ந்துகிட்ட கிடா தானே கருப்பன்!.. "

" ஆமா.. ஆனாலும் நான் நேத்து மறு மாப்பு  கேட்டு வேண்டிக்கிட்டேன்.. "

எல்லார் முகத்திலும் இருள் - கறி சோறு போச்சே!.. - என்று..

நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து முடிந்ததும்  அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..

" யோசிச்சு தான் சொல்றியா காவேரி?.. "

" ஆமாங்க.. தாத்தா!.. "

" அப்போ நேர்ந்து விட்டுருக்கும் மத்த கிடாக்களை எல்லாம் என்ன பண்றது?...

திடீரென ஆவேசம் வந்து ஆடினான் கோவிந்தன் மகன்.. பதினைஞ்சு வயசுதான் அவனுக்கு..

" அவுத்து விட்டுடுங்கடா.. "

" அப்போ குருதி பூச?.. "

" கூஷ்மாண்டத்தை வெட்டிப் போடுங்க!.. "

" கூஸ்மாண்டமா.. அப்படி.. ன்னா!?.. "

" பூசனிக்காய்.. டா.. பூசனிக்காய்!.. "

" அது மட்டும் போதுமா!... "

" போதும்.. பள்ளயத்தை மட்டும் மாத்தக் கூடாது.. புரிஞ்சதா!.. "

" புரிஞ்சதுங்க சாமி!.. "

" ஊர்ல.. நாட்ல.. அநியாயம் அக்கிரமம் பெருகிப் போச்சு.. அயோக்கியன ஆக்கினை பண்ணனும்.. களவாணிய களை எடுக்கணும்.. எம் பரிவாரம் பூராவும் அங்கே பூந்து வெளையாடுவாங்க.. "

" எதுவும் குத்தம் குறை இல்லையே.. கோப தாபம் இல்லையே!.. " 

" அதான் சொல்லிட்டேனே.. நல்ல சனங்க  நிம்மதியா இருப்பாங்க.. ன்னு!.. "

விபூதி சம்படம் வந்தது.. விபூதியை அள்ளி மேலே வீசிய சாமி பெரிய சத்தத்துடன் மலையேறியது.. 

சிறுவன் மயங்கி விழுந்தான்..

" அடடே... கருப்பன் எங்கே... ன்னு கேக்கறதுக்கு  மறந்துட்டமே!.. "

கூட்டம் வருத்தப்பட்ட வேளையில் -
வேலிப் படலை முட்டித் தள்ளி விட்டு கருப்பன் வந்து கொண்டிருந்தான்..

காவேரி பொங்கி எழுந்து ஓடி கட்டிக் கொண்டாள்..

" எங்கே சாமி போயிருந்தே!.. "

" நான் இங்கே தானே இருக்கேன்!.. " - என்கிற மாதிரி காவேரியின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டான் கருப்பன்..
***

ஞாயிறு, அக்டோபர் 19, 2025

கருத்துகள்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை


கண்ணாடி சரியாக அமையாததாலும் 
வேறு சில அடிப்படை பிரச்னைகளாலும்
எழுத்துப் பணியில் சற்றே தளர்வு..

சின்னச் சின்ன பதிவுகளைத் தவிர்த்து
சிறுகதைகளையோ சமையல் குறிப்புகளையோ தருவதற்கு இயலவில்லை..

எப்போது பிரச்னைகள் தீரும்?
தெரியவில்லை..

இந்நிலையில்
நெஞ்சை நெகிழ்வித்த அன்பின் கருத்துரைகள்
இன்று..

கமலாஹரிஹரன்
(சில மாதங்களுக்கு முன்பு எபி யில் வழங்கிய கருத்து)

வணக்கம் சகோதரரே .

/நான் எபியில் படத்திற்கு கதை என்பதாக அப்பாவின் மகள் என்றொரு கதை எழுதியிருக்கின்றேன்../

மீள் வருகை தந்து தந்த தங்களின் அன்பான தகவல்களுக்கு நன்றி. நீங்கள்தான் எ. பியில் அருமையான பல குடும்பக் கதைகள், அறிவார்ந்த யதார்த்தமான பல கதைகள், பக்தியும், வாய்மையும் நிச்சயம் ஒருநாள் வெற்றியை சந்திக்கும் என்னும்படியான கதைகள் என நிறைய கதைகள் எழுதியிருக்கிறீர்களே..! எல்லாமே நாங்கள் மிக விரும்பி படித்திருக்கிறோம்.

உங்கள் கதைகளை ஆர்வத்துடன் படித்து உங்கள் எழுத்துகளை கண்டு வியக்கும் ஒரு வாசக, வாசகிகளில் நானும் ஒருத்தி. . . இப்போது நீங்கள் குறிப்பிட்ட கதையையும் நான் படித்திருப்பேன். முதல் பாராவை பார்த்தால் நினைவு வந்து விடும். இப்போது உங்களின் கண் பார்வை குறையினால் நீங்கள் அதிகம் எழுதவில்லை. உங்கள் திறமை மிகுந்த எழுத்துக்களை நாங்களும் மிகவும் மிஸ் செய்கிறோம். கூடிய விரைவில் தங்கள் கண்கள் நலமடைந்து பல கதைகளை தாருங்கள் படித்து ரசிக்க காத்திருக்கிறோம். உண்மையில் எங்களுக்கு அதுதான் பொற்காலம். விரைவில் அக்காலம் திரும்பட்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலாஹரிஹரன்.

அன்பின் ஸ்ரீராம் அவர்களது பதிவில் எழுதிய கருத்து..

துரை செல்வராஜூ
16/10/25 3:05 PM

நகைச்சுவை துணுக்குகளை தவிர்த்து விட்டேன்...
கண்ணாடியின் தடுமாற்றத்தில்
கைத்தல பேசியில் இவ்வளவு தான் முடிகின்றது..
பதிலளிநீக்கு

பதில்கள்
ஸ்ரீராம்.
16/10/25 3:09 PM

பரவாயில்லை.  'கண்பார்வை கோளாறை சரி செய்து விட்டேன்' என்னும் உங்கள் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

நெல்லைத் தமிழன்
16/10/25 3:38 PM

விரைவில் சரியாகி விடும் துரை செல்வராஜு சார்..
-::-
இப்படியான அன்பின் வார்த்தைகள் 
நெருக்கடியான சூழ்நிலையில் 
ஆறுதலாக இருக்கின்றன..

அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றியும் 
வணக்கமும் என்றும் உரியன..

வாழ்க நலம் 

சிவாய நம ஓம்
**

செவ்வாய், அக்டோபர் 14, 2025

சந்தனம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை

 எங்கள் பிளாக் தளத்தில் 
முன்பு எழுதிய கதைகளுள் ன்று இன்றைய பதிவில்..

சின்னச் சின்ன பிழை 
திருத்தங்களுடன்!..

சந்தனம்..
***********

விடியற்காலை.. 
சுப முகூர்த்தம்.. 

ஹோமப்  புகையின் ஊடாக பசுவும் கன்றும் மங்கலகரமாக புது வீட்டுக்குள் வந்தன.. வந்த நேரத்துக்கு ஒன்றுக்கு இரண்டாகச் செய்ததும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.. 

" வீட்டுக்குள்ள பசு சாணி போடறது நல்ல சகுனமாச்சே!.. "

சந்தன பாண்டியன்.. சின்ன வயது தான்.. ஆனால் எல்லாருக்கும் அண்ணாச்சி..

அண்ணாச்சி அவரது மனைவி ரெண்டு பிள்ளைகள் - கழுத்தில் மாலைகளுடன் ஹோம குண்டத்தின் முன்பாக விழுந்து வணங்கினார்கள்..

பெரியவர்கள் அட்சதை தூவினார்கள்.. பெண்கள் குலவையிட்டனர்..

பக்கத்தில் ஆறேழு வருடங்களாக சும்மா கிடந்த மனை.. திடுதிப்பென்று முகூர்த்தம்.. மஞ்சள் குங்குமத்துடன் அஸ்திவாரக் கல்.. விறுவிறு.. என்று வேலைகள் நடந்தன.. இன்றைக்கு மாவிலைத் தோரணங்களுடன்  வண்ண வண்ண விளக்கொளியில் குளித்துக் கொண்டிருந்தது வீடு..

சந்தன பாண்டியன் அண்ணாச்சிக்கு  மார்க்கெட்டில் பெரிய மளிகை.. நாணயம் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற கடைகளில் அண்ணாச்சியின் மளிகையும் ஒன்று.. கடும் உழைப்பாளி.. நேர்மையான மனுஷன்..  வாடிக்கையாளர்கள் எல்லாருக்குமே அழைப்பிதழ்..
குடும்பத்தினருடன் வாசலில் நின்று கொண்டு அன்பான  வரவேற்பு.. நெல்லை மண்ணின் வாசம்..

சொந்தமும் நட்பும் விடியற் காலையில் இருந்தே குழுமியிருக்க - வண்ணத் துணிப் பந்தலின் கீழ் விருந்து உபசாரம்..

பழைமை பாரம்பர்யம், கலை கலாச்சாரம் - என்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆணோ பெண்ணோ வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை என்றாகிப் போன கால சூழ்நிலையில் முகம் பார்த்து உபசரிப்பதற்கான உறவு முறை என்ற வட்டம் இல்லாமல் போனதே அதற்கு எந்த ஒரு விடையும் இல்லைம ..

மிச்சம் மீதி இருந்ததையும்  சூறைத் தேங்காய் போல சிதற அடித்தாயிற்று..

இது போக வேறொரு பிரச்னை..
முன்பெல்லாம் தெருக்களில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் சரி.. உறவுமுறை வீடுகளிலும் சரி.. விசேஷங்கள் என்றால் -
எல்லாரும் எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக் கொண்டு எந்த பேதமும் இன்றி செய்வார்கள்.. இப்போது அப்படி இல்லை..

" என் மகளை வாசல்ல நிக்க வச்சி சந்தனம் கொடுக்க சொன்னீங்களாமே?.. "

" எம் பிள்ளையக் கூப்பிட்டு தண்ணீர் கொடுக்கச் சொன்னீர்களாமே.. அவன் கிரேடு என்னான்னு தெரியுமா?.. "

இப்படி வித விதமான வில்லங்கங்கள் வீட்டுக்குள் புகுந்து புயலைக் கிளப்பும் போது நல்ல மனங்கள் தளர்ந்தே விடுகின்றன..

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவர்களுள் அண்ணாச்சி சந்தன பாண்டியனும் ஒருவர்..

பந்தல், சமையல்,  பரிமாறுதல்  என்று எல்லாவற்றையும் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டார்..

அவர்கள் அது அதற்கும் அதற்கேற்ற கட்டணம்  வைத்திருக்கின்றார்கள்.. கொடுத்து விட்டால் போதும்.. எல்லாம் கச்சிதமாக முடிந்து விடுகின்றன.. 

பன்னீர் தெளித்து சந்தனமும் ரோஜாப்பூவும் கொடுப்பதற்கு
அளவெடுத்துச் செய்த மாதிரி
ஆறு பெண் பிள்ளைகள்..
கிருஷ்ணனோடு ஆடும் கோகுலத்துக் கிளிகளைப் போல் அழகு.. பளபளப்பான பாவாடையும் தாவணியும் அழகின் அழகு ..

லட்சணமான பசங்கள் பத்து பேர்... இலையிடவும் தண்ணீர் வைக்கவும் பரிமாறவுமாக..
எல்லாரும் வட நாட்டில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்..

பந்தி உபசரிப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பரபரப்பு..

இரண்டாவது பந்தியில் அசோகா வைத்துக் கொண்டிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டான்..

" ஆம்புலன்ஸ்.. ஆம்புலன்ஸ்.. "

எல்லாரும் சத்தம் போட்டார்கள் மயங்கி விழுந்தவனைத் தூக்கிக் கொண்டு சிலர் வாசலுக்கு ஓடினார்கள்..

" எங்கேடா... அந்த ஏஜெண்டு?.. "

" அவந்தான் அப்பவே ஓடிட்டானே!.. "

விருந்துக்கு வந்திருந்தவர் அனைவரையும் பயம் பிடித்துக் கொண்டது.. நானும் எழுந்து ஓடினேன்...

என்ன மொழி?.. ஹிந்தி எனப் புரிந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது..  

" நல்ல நேரத்தில் இது என்ன.. " - என்று எல்லாரிடத்தும் கலக்கம்.. பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் குழப்பம்... அவர்களை ஆசுவாசப் படுத்தியபடி பரிமாறத் தொடங்கினேன்...

சிறிது நேரத்தில் - " பையன் நல்லா இருக்கின்றான்... பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை!.. "
என்றபடி,  பந்தலுக்குள் வந்த அண்ணாச்சி என்னை நெருங்கி - " கொஞ்சம் வாங்களேன் சாமிநாதன்.." - என்றார்..

அவருடன் சென்றபோது அங்கே மருள மருள விழித்துக் கொண்டிருந்தாள் - வரவேற்பு மேஜையில் ரோஜாப்பூ கொடுத்த பெண்..
 
" சாமிநாதன்.. உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே.. என்ன.. ன்னு கேளுங்க!.. "

வளைகுடா நாட்டில் கற்றுக் கொண்ட பேச்சு வழக்கு பெரும் துணையாக இருந்தது..

விழிகளால் " என்ன?.. " - என்றேன்..

" ஜீ!.. ஆஜ் உஸ்கீ பெஹன் கே ஷாதி.. சிஸ்டர் கலியாணம்.. இஸ்லியே.. "

அண்ணாச்சியிடம் விவரித்தேன்..

அவரது முகம் மாறியது.. என்னை இழுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்..

அங்கே கட்டிலில் சோர்வாக படுத்திருந்தான் அந்தப் பையன்.. அவனுக்குத் துணையாக இன்னொருவன்..

" விவரம் கேளுங்க சாமிநாதன்!.. "
கேட்டேன்... சொன்னான்..

" பெயர் ராம் சரண்..  கூட ஒரு தங்கை.. அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள்.. அம்மாவுக்கு கிருஷ்ண மந்திர் கோசாலையில் சாணம் அள்ளுகிற வேலை.. மூன்று வேளையும் சாப்பாடு.. சம்பளமாக சொற்ப தொகை.. இத்துடன் கோசாலைக்கு வருபவர்கள் கொடுக்கும் தானம்... இவ்வளவு தான்.. இங்கே வந்த பிறகுதான் வீட்டு விளக்கு ஓரளவு நன்றாக எரிகின்றதாம்.. இப்போ கூட தங்கச்சிக்கு கன்யா தானம் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் தான் செய்யுதாம்...
கொசுறாக வேறொன்றும் வேண்டுகோள்.. "

" வேலை நேரத்துல மயக்கம் போட்டு விழுந்ததுக்காக சம்பளத்தைக் குறைச்சிடாதீங்க.. மகராஜ்!.. "

அண்ணாச்சியின் கண்கள் கலங்கி விட்டன..

இந்தப் பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் சுப முகூர்த்த மாதங்கள் தான் கொண்டாட்டம்.. மற்ற மாதங்கள் பிரச்னையானவை..
ஊருக்குப் பணம் அனுப்பணும்.. சமைக்கணும்.. சாப்பிடணும்.. மற்ற தேவைகளும் இருக்கு.. இச்சமயங்களில் துப்புரவு வேலைகள் தான் கைக்கு வரும்..

" இப்போ ஊருக்குப் போய் தங்கச்சியப் பார்க்கிறானா?.. கேளுங்க!.. "

கேட்டேன்...

" ராம்.. ராம்!.." - என்றபடி, அண்ணாச்சியையும் என்னையும் தொட்டுத் தொட்டு கும்பிட்டான்.. விஷயத்தைப் புரிந்து கொண்ட மற்றவனும் கையெடுத்துக் கும்பிட்டான்..

" ஜீ.. ஜீ!.."  - என்றான்..

" இது மளிகைக் கடை வேலைடா.. கஷ்டமா இருக்கும்!.. "

" செய்றேங்க மகராஜ்.. இன்னிக்கே வந்து சேர்ந்துக்கறேன்!.. "

அண்ணாச்சி உருகி விட்டார்..
கஷ்டங்களை அனுபவித்தவர் அல்லவா!..

ராம் சரணுக்கு ரயிலில் டிக்கெட் போடும்படி அண்ணாச்சியின் செல்போனில் இருந்து செய்தி பறந்தது..

" ராம் சரணுக்கு வேற என்ன தெரியும்?.. "

" கம்ப்யூட்டர்.. ல கணக்கு வழக்கு எழுதத் தெரியும்.. "

" ஊருக்குப் போய்ட்டு வந்து என்னைப் பார்!.. "

ராம் சரண் - எனது கைகளைப் பற்றிக் கொண்டு காதருகில் பேசினான்..

" என்னவாம்?.. " 
- அண்ணாச்சியின் கேள்வி..
அவரிடம் தயங்கியபடி சொன்னேன்...

" ரோஜாப்பூ கொடுத்தாளே அந்த சிவத்த பொண்ணு... அவ மேல இவனுக்கு ஒரு இதுவாம்... அவளுக்கும் மகராஜ் இரக்கம் காட்டுங்க!... ன்னு சொல்றான்!.. "

அண்ணாச்சி பலமாகச் சிரித்தார்.. 

அன்பும் இரக்கமும் சந்தனமாகக் கமழ்ந்தன..
***

வாழ்க வையகம்
**

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

இது தான்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை


' ஊ ஊ... ஊவ்.. "

எஞ்சினின் நீண்ட சத்தத்தினால் ரயிலடி வாசல் பரபரப்பானது.. 

திருச்சிராப்பள்ளி வண்டி வந்து விட்டது.. அந்தப் பக்கம் நாகூர் வண்டியும் ஸ்டேஷனுக்கு உள்ளே வந்து விட்டது.. ரெண்டு பாசஞ்சரும் பதினைஞ்சு நிமிசம் லேட்.. 


வண்டி மாடுகள் இன்னும் உறக்கம் கலையாது இருக்க வண்டிக்காரர்களிடம் இருந்து ' ஹை.. ஹை.. ' - என்ற சத்தம்..

ஜட்கா வண்டிகளில் பூட்டப்படிருந்த குதிரைகள் வடக்கு ராஜ வீதி பக்கமாகப் பாய்வதற்குத் துடியாய் இருந்தன..

திபு திபு  - என ஜனங்கள்..  அக்கம் பக்கம் பார்த்தபடி அவரவர் பிரச்னைகளை  பேசிக் கொண்டு ஸ்டேசனில் இருந்து வந்தார்கள்.. 

ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒரு பரபரப்பு.. என்ன என்று புரியவில்லை..

இதற்கிடையே -

" வெண்ணாற்றங்கரை மாமணிக் கோயிலுக்குப் போகணும்.. எவ்வளவு கேட்கிறீர்?.. "

"  மூனு மைல்  தூரம் வாயில்லா ஜீவன் ஓடணும்.. ரெண்டு ரூபாய் கொடுங்க சாமீ!.. "

"ரெண்டு ரூபாயா.. ஜாஸ்தியா.. ன்னா இருக்கு?.. "

" சீரங்கத்துல இருந்து எங்க ஊருக்கு வர்றீங்க..ன்னு தெரியுது.. பெருமாள் புண்ணியம் எல்லோருக்கும் ஆகட்டுமே!.. நாலணா குறைச்சுக்கங்க சாமி...  வண்டிலே ஏறி உட்காரும்மா குழந்தே!.. " - என்றபடி, வண்டிக்குள் கிடந்த வைக்கோல் மெத்தையைக் கைகளால் தட்டி சமப்படுத்தி விட்டு - அந்த இளைஞனின் கையில் வைத்திருந்த டிரங்கு பெட்டியை வாங்கி வண்டியின்  முன் பக்கம் வைத்தார் வண்டிக்காரர்..

நெற்றிச்சுட்டி, காதோர குஞ்சஙகள், கண் அடைப்பு, கடிவாளம் இன்னபிற அலங்காரங்களுடன் நின்றிருந்த குதிரை  தலையை சிலுப்பிக் கொண்டது..

" ஏறிக்கோ.. பார்கவி!.. "

நெற்றியில் சூரணம் மினுமினுக்க நின்றிருந்த அந்தப் பெண் வண்டியின் பின்புற பாதப் படியில் கால் வைத்து வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.. 
தொடர்ந்து அந்த இளைஞன் ஏறிக் கொண்டதும் வண்டியின் முன்புறம் சுருட்டி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலையை இறக்கி விட்ட வண்டிக்காரர் மிக்ஸர் கடை மாரியப்பனைப் பார்த்து கை காட்டினார்..

" திரைச் சீலை வேணாம் பெரியவரே!.. இப்போ தான் ஜென்மாவில் முதல் தரமா தஞ்சாவூர் திவ்ய தேசத்துக்கு வந்திருக்கோம்.. க்ஷேத்ர லாவண்யத்தை எல்லாம் நன்னா பார்த்துண்டு வர்றோமே!.. "

" ஓ.. நல்லா பாருங்க சாமீ!.. " - என்றபடி திரைச்சீலையை மீண்டும் சுருட்டிக் கட்டிய வண்டிக்காரர் லகானை உதறியபடி குதிரையை உசுப்பி விட - அது    கனைத்தபடி நகர்ந்தது.. 

" பெரியவங்க நீங்க.. என்னை ஏன் சாமி.. சாமி.. ன்றேள்... மனசு கஷ்டப்படறது..  "

" அப்படியே பழகிப் போச்சு.. அது ஒரு பிரியத்துல தான்..  பெத்த பிள்ளைகளை ஐயா..ன்னும் அப்பா.. ன்னும் கூப்பிடறோமே.. அது மாதிரி!.. " - என்றார் வண்டிக்காரர்..

" எம்பேரு வரதன் ஆராவமுதன்.. எப்படி இஷ்டமோ அப்படிக் கூப்பிடுங்கோ.. "

" என்னவோ உங்களப் போல ஒரு சில பேர் தான் இந்த மாதிரி பெருந்தன்மையா இருக்காங்க.. "

" இந்த லோகம் - வஸூதைவ குடும்பகம்.. ன்னு வேதோபநிஷத் ல சொல்லியிருக்கா.. "

" அப்படீன்னா?.. "

" இந்தப் பூவுலகமே என்னோட குடும்பம்.. ன்றது அர்த்தம்.. இதுவே தான் நம்ம தமிழ் லயும் சொல்லப்பட்டிருக்கு.. யாதும் ஊரே.. யாவரும் கேளிர்.. ன்னு.. "

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்..

" ஆனாலும் அந்த மாதிரி இருக்கறதுக்கு எல்லா நேரத்திலயும் முடியறதில்லையே!.. துஷ்டனைக் கண்டா தூர விலகு.. ன்னும் சொல்லி இருக்காங்களே!.. "

பெரியவரின் ஆதங்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டது..

" உயர்ந்த சிந்தனைக்கு நம்ம மனஸ் இடமாயிடுத்துன்னா துஷ்டங்கள் தன்னால விலகிப் போய்டும் ன்றதும் தாத்பர்யம்.. "

" நல்லா விவரமாத் தான் பேசறீங்க.. கோயில் யாத்திரையா வந்திருக்கீங்களா?.. "

" விவாஹம் ஆகி ரெண்டு மாசம் தான் ஆகறது.. மாமனாரோட தம்பி அகத்துக்கு வந்திருக்றோம் பெரியவரே!.. "

மெல்லிய புன்னகையுடன் நாணம் சேர்ந்து கொள்ள அந்தப் பெண் பார்கவியின் கண்களும் கை விரல்களும் பேசாமல் பேசின  - ' வண்டிக்காரர் கேட்டபடியே  ரூபாயைக் கொடுத்துடுங்கோ!.. '  

' ஓ.. கொடுத்துடலாமே!.. ' - இங்கிருந்தும் கண்கள் பேசின..

" அப்போ எங்க ஊருக்கு விருந்தாளியா வந்திருக்கீங்க...  " வண்டிக்காரர் சிரித்தார்..

' டொக்.. டொக்..டொக்.. டொக்.. '
குளம்புகளின் சீரான சத்தம்...
வண்டி ஓட்டத்துக்கு வெள்ளைக்காரன் போட்டு வைத்திருந்த அகலமான  சிமெண்ட் சாலை இதமாக இருந்தது.. 

நடைபாதையில் குடை விதித்திருந்த வாத நாராயண மரங்களில் குருவிகளின் கூச்சல அதிகமாக இருக்க - 

" இதோ.. இதுதான் முனிசிபல் ஆபீஸ்.. " - வண்டிக்காரர் கை காட்டினார்..

வண்டிக்குள்ளிருந்த
இருவரும்  ஆர்வத்துடன் வெளியே நோக்கினர்... 

குதிரையின் ஓட்டம் சற்றே வேகமாகியிருந்தது.. 

" இதோ போறதே... இந்த ரோட்ல தான் கலெக்டர் ஆபீஸ்.. எதிர்த்தாற்போல கோர்ட் கச்சேரி.. "
:
" ம்ம்.. " 

" இது என்ன காவேரி ஆறா?.. "

" காவேரி ஓடறது திருவையாத்திலே... இதுக்குப் பேரு புது ஆறு.. கல்லணையில இருந்து பிரிஞ்சு வர்றது.. " 

" ஓஹோ!.. "


" தோ பாருங்க.. மணிக் கூண்டு..  ராஜா காலத்ல கட்னது.. எவ்ளோ ஒசரம்!.. அதோ அதுதான் சுதர்சன சபா!.. இதுல வந்து நாடகம் 
போடாதவங்களே கிடையாது.. கச்சேரி பாடாதவங்களே கிடையாது!.. " 

" பெரிய கோயில்.. பெரிய கோயில்.. ன்னு சொல்றாளே.. அது எங்கே இருக்கு?.."

" இதுக்குப் பக்கத்து ரோட்ல  இருக்கு பெரிய கோயில்!.. " மேற்கு திசையில் கை காட்டினார் வண்டிக்காரர்..

"  பெரிய கோயிலுக்கு ஒரு நாள் போகலாமா.. ன்னா!. "

அந்தப் பெண் பார்கவியின் ஆவலான கேள்வி..

" சிவன் கோயில் போறதுக்கு மாமா ஒத்துப்பாரா தெரியலையே.. " 

" ஏன்.. இப்டி சொல்றேள்?.. அந்த பேதம் எல்லாம் இங்கேயும் இருக்றதா!..  "

" அப்படி இருக்றதா தெரியலை.. இருந்தாலும்.. அவங்க சம்ப்ரதாயத்லே.. "

" ஈஸ்வரனும் பெருமாளும் வேற வேற சாமிகளா?.. " -
குறுக்கிட்ட வண்டிக்காரருக்கு வியப்பு..

" தெய்வம்.. ங்கறது  ஒன்னுதான்.. எது.. ங்கறது தான் பிரச்னை.. "

மதுரை செல்லும் பேருந்து -
' பாம்.. பாம்.. ' என்ற சத்தத்துடன்   பஸ்டாண்டில் இருந்து வெளியே வந்து விரைந்தது..  

வழியெங்கும் காஃபி மணம்..  ராஜவீதி, அரண்மனை - என்று கடந்த குதிரை -  பரபரப்பு குறைந்திருந்த சாலையில்
வேகமெடுத்து ஓடியது..

" அப்போ... ஆளுக்கு ஒரு சாமின்னு இருக்குதுங்களா.. " 

" அப்படியெல்லாம் இல்லை.. ஏதேதோ சம்ப்ரதாயங்கள்.. சடங்குகள்.. எல்லாமே அவங்க அவங்க க்ஷேமத்துக்காகத் தான்.. "

" அப்போ இந்த லோகத்துக்குன்னு 
உபதேசம் உபசாரம் ஒன்னும் கிடையாதா?.. "

" ஏன் இல்லாம.. எத்தனையோ பெரியவங்க - மனுஷாள் யோக்யாம்சமா வாழறதுக்கு எவ்வளவோ உபதேசம் செஞ்சு வெச்சுருக்கா..  "

" மனுச செம்மம் தான் நல்லதைக் கேக்கறது இல்லையே!.. " 

" அவா அவாளும் பெரியவா சொல்லியிருக்றதக் கேட்டு நடந்தா பிரச்னை இல்லாம இருக்கலாம்.. பிரச்னை இல்லாம க்ஷேமமா இருந்தா ஊருக்கு நல்லது.. ஊர் ஒன்னொன்னும் க்ஷேமமா இருந்தா லோகத்துக்கு நல்லது தானே!.. "

" கேட்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க சம்பிரதாயம் தான பெருசா இருக்கு!.. "
- வண்டிக்காரர் சிரித்தார்..

" ஞானிகளுக்குப் பேதம்.. ன்றது கிடையாது.. தர்க்க ரீதியா வர்றவாளுக்குத் தான் அவங்க அவங்க சம்ப்ரதாயம் - நியாயம் பெரிசாப்படறது.. " 

கேட்டுக் கொண்டிந்த பார்கவி 
கண்களை மலர்த்தி - வலக் கையின் சுட்டு விரலைப் பெரு விரலுடன் சேர்த்து  -  ' நன்று ' என - அபிநயித்தாள்..

"  ரூபாய் நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு தானே!.. "

புன்னகையுடன் இளைஞனின் கேள்வி..

" ஒரு ரூபாய்க்கு என்ன.. எல்லா காசுக்கும் தான் ரெண்டு பக்கம் இருக்கு..
ரெண்டு பக்கம் இல்லாம உலகத்துல எந்த விசயமும் கிடையாதே!.. " - வண்டிக்காரரின் ஆச்சர்யம்..

" மனுஷாளுக்கு - சொல்றது
 அதாவது  பேசறது சக்தி.. ன்னா ஒரு நாணயத்துக்கு செல்றது அதாவது செல்லுபடியாகறது சக்தி.. இல்லையா!.. "

இளைஞனின் கேள்வி..

" கையில இருக்குற காசு செல்லுபடியாகலை.. ன்னா யாருக்கு என்ன பிரயோசனம்?.. "

" இது தான் தத்வம்.. கையில இருக்குற காச செல்லுபடியாக்கறது தான் சக்தி..  இது தான் தத்வம்!.. "

" எனக்கொன்னும் புரியலையே.. " - வண்டிக்காரர் குழம்பினார்..

"  ஒவ்வொரு காசுக்கும் பூ.. ன்னும்  தலை.. ன்னும் ரெண்டு பக்கம் இருக்றது.. பூ இல்லாம தலை இல்லை.. தலை இல்லாம பூ இல்லை.. சரியா?.. "

" சரி.. "

" அதுல ஒரு பக்கம் ஹரி அதாவது பெருமாள்.. மறு பக்கம் ஹரன் அதாவது சிவன்.. னு வச்சுக்கிட்டா அதோட பெறுமானம் தான் சக்தி.. மஹாலக்ஷ்மி..   "

" அடடே!.. "

" பூ , தலை.. ரெண்டு பக்கம் இல்லாத காசுன்னு எதுவும் கிடையாது.. ரெண்டு பக்கமும் ஒன்னா இருக்கறப்போ செல்லுபடிங்கற சக்தியும் தன்னால வந்துடுது..
புரிறதா தத்வம்!.. இப்போ ஹரி..ன்றது எது?.. ஹரன்..றது எது?.. "

இளைஞனின் முகத்தில் மந்தகாசம்..

" சரி தான்.. ஒரு காசு ன்னா ரெண்டு பக்கம்.. அதுக்கு செல்லுபடியாகற சக்தி...
இப்படி இருக்கறப்ப பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம் ஏது?..
எது எதுக்குப் பெருசு?.. "

வண்டிக்காரர் முகத்தில் புன்னகை அரும்பியபோது குதிரை வண்டி திவ்ய தேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது..
***


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2025

காபி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 
செவ்வாய்க்கிழமை

இந்தச் சிறுகதை முன்பே எங்கள் தளத்தில் வெளியாகியிருக்கின்றது..

" காபி "



" காபி.. "

செய்தித்தாளில் இருந்து முகம் திருப்பிய சுந்தரத்தின் கண்களில் இளந்தேவதை தெரிந்தாள்...

அந்தத் தேவதையின் பெயர் காமாட்சி..

வெள்ளித்தட்டு.. அதில் ஒரு வெள்ளிக்குவளை..  அதில் நுரையும் மணமுமாக இருந்தது டிகிரி காஃபி..

காஃபிக்குள் காஃபி என்றால்
 தஞ்சாவூர் டிகிரி காஃபி தான்..
.
காமாட்சியின் கைகளில் இருந்து காஃபியை வாங்காமல் கண்களால் அளவெடுத்தான் சுந்தரம்...

நேற்று விடியற்காலை சுபமுகூர்த்தத்தில் மாங்கல்யதாரணம்...

அனைத்தும் சுபமங்கலமாக நிகழ்ந்து மதியத்திற்கு மேல் முதல் அழைப்பு முடிந்து இங்கே மணமகள் இல்லத்தில் திருப்பள்ளி.. 

அங்கிருந்து பெரிய அக்காவும் வேறு சில உறவினரும் பேச்சுத் துணைக்கு வந்திருக்கின்றனர்..

யார் பேச்சுக்கு யார் துணை!..

விடியும் முன் தலை குளித்தது.. உலரட்டும் என்று தளர்வாகப் பின்னப்பட்ட  கூந்தலில் கமகம என்று மல்லிகைச் சரங்கள்..  எல்லாம் பெரிய அக்காவின் வேலையாகத் தான் இருக்கும்..  

நேற்று இரவு அணிந்திருந்ததை விட நகைகள் அதிகம்.. 

நெற்றிக்கு மேல் இருபுறமும் சூரிய சந்திர வில்லைகள்.. வகிட்டில் நெற்றிச்சுட்டி..
காதுகளில் வேறு விதமான தொங்கல்கள்.. கழுத்தில் சிவப்புக் கல் அட்டிகையும் வேறு சில சங்கிலிகளும்..

ராத்திரி சத்தமில்லாது இருந்த கொலுசுகள் இப்போது  சலசலக்கின்றன..

எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சள் இழையில் திருமாங்கல்யம் மின்னிக் கொண்டிருந்தது..

கவனமாக காமாட்சியின் முன் கையைப் பற்றினான் சுந்தரம்... 

காபித் தம்ளர் இருந்த வெள்ளித் தட்டு நடுங்கியது.. கையில் கூடுதலாக இருந்த வளையல்களும் சிலுசிலுத்தன.. 

இதென்னடா வம்பாப் போச்சு.. என்று நினைத்துக் கொண்ட சுந்தரம் - காமாட்சியின் கைகளில் இருந்த தட்டை வாங்கி அருகிருந்த சிறு பலகையில் வைத்து விட்டு காமாட்சியை பக்கத்தில் நெருக்கமாக அமர்த்திக் கொண்டான்..

கைகளில் தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களும் இருந்தன.. 

பகல் பொழுது  கலகலத்துக் கொண்டிருக்கட்டுமே - என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்!.. 

விரல்களில் மருதாணிச் சிவப்பு.. இடது சுட்டு விரல் பெரு விரல்களைத் தவிர்த்து மற்ற விரல்களில் மோதிரங்கள்..

சிவந்திருக்கும் விரல்களைப் பற்றியபடியே காமாட்சியின் முகத்தை நோக்கினான் சுந்தரம்.. 

அந்தக் காலைப் பொழுதிலும்
முகத்தில் மேலுதட்டில் சற்றே வியர்த்திருந்தது.. தனது கைப்பிடிக்குள் இருந்த அவளது கை விரல்களைக் காட்டி கண்களால் கேட்டான்..

" எட்டு மோதிரம் போட்டுக்கக் கூடாதாம்.. நீங்க காபி குடிங்க.. "

" நீ குடிச்சியா?.. "

காமாட்சியின் முகத்தில் வெட்கம்..

வெள்ளித் தம்ளரை எடுத்து காபியை அருந்தியதும் சுந்தரத்தின் முகம் மாறியது..

" காஃபி நல்லா இருக்கு... அருமை அருமை!.. "

காமாட்சியின் முகத் தாமரை மலர்ந்தது.. இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!..

மேல் விழிகளால் காமாட்சியின் வேல் விழிகளை விழுங்கிக் கொண்டே சுந்தரம் காஃபியை அருந்த - மெல்லிய புன்னகை காமாட்சியிடம்..

இதற்குள் -
கூடத்தில் பேச்சு சத்தம்..

" வாங்க.. வாங்க.. நமஸ்காரம்.. "

" நேத்து தான்  மாயவரத்து ல மச்சினர் மகனுக்கும் முகூர்த்தம்... "

" அதான் ரெண்டு நாளைக்கு முன்னால வந்து விஷயம் சொன்னீங்களே!.. "

" வீட்ல யும் புள்ளைங்களும் மாயவரத்து ல தான் இருக்காங்க.. நான்  போட் மெயிலப் புடிச்சி விடியக் 
காலயில வந்தேன்.. மளியக் கடை மாடு கன்னு ன்னு இருக்கு.. நாமளும் உஷாரா இருக்க வேண்டியதா இருக்கே.. "

கீழத் தெரு மளிகைக் கடைக்காரர் கல்யாணம் விசாரிப்பதற்காக வந்திருக்கின்றார்..

" ஆமா.. ஆமா.. இங்கேயும் அப்படித்தான்.. எல்லாம் நேத்து சாயங்காலமே கிளம்பிட்டாங்க..  நேத்து அழைப்புக்கு வந்த சொந்தங்க  மட்டுந்தான் இப்போ வீட்ல.. நம்ம காலம் மாதிரி ஒரு வாரத்து கலியாணம் எல்லாம் இப்போ ஏது?.. " - ஆமோதித்தவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார்..

" யார் வந்திருக்காங்க பாருங்க.. சந்தனம் எடுத்து வாங்க.. பட்சணமும் தாம்பூலமும் கொண்டு வாங்க.. " 

சுந்தரமும் காமாட்சியும் உள் அறையில் இருந்து கூடத்துக்கு வந்தபோது - சமையல் கூடத்தில் இருந்து
காமாட்சியின் அம்மாவும் பெரிய அக்காவும் வெள்ளித் தட்டுகளுடன் வெளிப்பட்டனர்..

ஒன்றில் ஜிலேபி, பால்கோவா, முறுக்கு, சோமாசா என பட்சணங்கள்.. மற்றொன்றில் சந்தனமும் விபூதி மடலுடன் குங்குமமும் இருந்தன..

புதுமணத் தம்பதியினர்
இருவரும்  வந்திருந்த பெரியவரை கை கூப்பி வணங்கியபடி தண்டனிட்டு எழுந்தனர்..

" பெத்தவங்க பெரியவங்க மனச குளுர வைக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணா இருக்கணும்..  மகமாயி என்னிக்கும் துணை இருப்பா!.. " - என்றபடி மடலில் இருந்து விபூதி குங்குமம் எடுத்து மணமக்களுக்குப் பூசி வாழ்த்தினார்..

இடுப்புப் பட்டையில் இருந்து மோதிரம் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் விரலில் அணிவித்து விட்டு மீண்டும் ஒன்றை எடுத்து சுந்தரத்தின் கையில் கொடுத்து காமாட்சிக்கு அணிவிக்கச் சொன்னார்..  

" பத்து மணியப் போல சம்பந்தி புரம் ரெண்டாம் அழைப்புக்கு வர்றாங்க.. மத்தியானம் எல்லாருக்கும் விருந்து.. அவசியம் வந்து கௌரவிக்க வேணும்.. " காமாட்சியின் அப்பா விண்ணப்பித்துக் கொண்டார்..

" அதுக்கென்ன வந்துடுவோம்.. ஆனா ரெண்டு மணியாகுமே.. "

 தட்டில் இருந்து ஜிலேபி ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டார்..

" அதனால என்ன.. நாங்க எல்லாம் காத்திருக்கோம்.. "

பெரிய அக்கா உள்ளே சென்று காஃபியும் தாம்பூலமும் எடுத்து வந்தாள்..

" சிவ சிவா.. அப்படியெல்லாம் இருக்க வேணாம்.. சின்னஞ்சிறுசுங்க.. அதுங்கள முதல் ல சாப்பிட வெச்சுடுங்க.. நீங்களும் காலத்துல சாப்பிட்டுடுங்க.. எங்கூட இருந்து சாப்பிட ஒருத்தர் போதும்..  ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடறேன்.. அப்போ நா புறப்படுறேன்.. நாலு நாள் ஆச்சு கடை திறந்து.. "

- என்றபடி காஃபியை அருந்தியவர் தாம்பூலம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்..

அவர் சென்றதும் -  " பெரியவங்க  பெரியவங்க தான்.. " என்ற பெரிய அக்கா தொடர்ந்தாள்..

" மாமாவுக்கு காபி?.. " 

காமாட்சியின் அப்பா பெரிய அக்காவுக்கு மாமா முறை தானே.. 

பெரிய அக்கா இப்படி உரிமையுடன் கேட்டதும் அவளது அன்பினையும் பண்பினையும் கண்டு அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி..

" இப்பதானே இட்லி சாப்பிட்டாங்க.. உங்க மாமா!.. " - காமாட்சியின் அம்மா பதில் கூறவும் - 

" அப்பா.. "  - காமாட்சி மற்றொரு காஃபியுடன் வந்தாள்..

"  மாப்பிள்ளைக்குக் காபி கொடுத்தீங்களா!?.. "

அவருக்கு வீட்டுக்குள்  நடக்கின்ற எல்லாம் தெரியும்.. இருந்தாலும் அன்பின் விசாரிப்பு..

" ம்ம்.."  புன்னகை ததும்ப காமாட்சி உள் அறைக்குள் சென்றாள்... பின்னாலேயே சுந்தரமும் சென்றான்.. அறைக்குள் சென்ற காமாட்சி அந்த வெள்ளித் தம்ளரை நோக்கினாள்..

சுந்தரம் அருந்தியது போக மீதம் அரை தம்ளர் காஃபி  இருந்தது.. சற்றும் யோசிக்காத காமாட்சி அதை எடுத்து மெல்ல அருந்தினாள்..

பின்னால் வந்த சுந்தரம் அப்படியே காமாட்சியை 
சிறைப்படுத்திக் கொண்டு காது மடலின் அருகாக சுவாசித்தான்.. காதலின் கவிதை வாசித்தான்..

" காமாட்சி.. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.. "

வெளியில் இருந்து பெரிய அக்காவின் குரல்..

" நல்லவேளை நான் தப்பிச்சேன்.. " காமாட்சியின் முகத்தில் புன்னகை..

சுந்தரத்திற்கோ ஏமாற்ற்ம்..

இர்ண்டாம் மூன்றாம் அழைப்புகளுக்குப் பின் சுந்தரம் காமாட்சி தம்பதியர்க்கிடையே தொடர்ந்த கோலாகலத்தில் ஆர்த்தியும் அருணும்.. 

ஆர்த்தி பெங்களூரில் குடியேறி விட அருண் - கைக்கு அருகில்..

பெரிய அக்காவும் சின்ன அக்காவும் பூர்வீக சொத்து வேண்டாம் என்று சொல்லி விட தங்கை மட்டும்.. 

அடுத்த சில மாதங்களில் அவளும் நல்ல விதமாக கரையேறி விட அடுத்த ஓராண்டில் சுந்தரத்திற்கு வங்கியில் வேலையும் கிடைத்து விட்டது.. 

காமாட்சி வீட்டுக்கு வந்த யோகம் தான்  எல்லாம் - 
என்று பேசிக் கொண்டனர்..

பூர்வீக சொத்தும் வங்கி வேலையும் சுந்தர - காமாட்சி குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அடித்தளம் ஆகின..

சில மாதங்களுக்கு முன் அருணுக்கும் நித்யா வந்து சேர்ந்திட சுந்தர - காமாட்சி தம்பதியருக்கு நிம்மதிக்கு மேல் நிம்மதி.. 

இப்போது அறுபதைக் கடந்து விட்டார் சுந்தரம்.. காதுகளின் பக்கமாக நரை..

" காபி.. இந்தாங்க.. "

ஊஞ்சலில் அமர்ந்திருந்த சுந்தரம் வாங்கிக் கொள்ள - காமாட்சியம்மாள் அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்..

" காஃபி நல்லா இருக்கு... அருமை.. அருமை!.. "

காமாட்சியம்மாளின் முகத்தாமரை மலர வேறென்ன வேண்டும்!..

" அன்னைக்கு காதுக்குள்ள
கவிதை ஒன்னு சொன்னீங்களே.. "

" என்னைக்கு?.."

" அதான் அன்னைக்கு!.. "

மஞ்சள் முகத்துத் 
தாமரையே
மங்கலம் ஆகிய 
பூ மழையே
சுந்தரன் நெஞ்சினில் 
காமாட்சியே
சூழ்ந்திடும் நலங்கள் 
தேனாட்சியே!..

சுந்தரன் தோளில் 
இளங்கிளியே
புதுமலர் பூத்திடும் 
பூங்கொடியே
வசந்த மலர் என
வரும் நிலவே
வரம் எனக் கிடைத்த 
வடிவழகே!..

காஃபியும் அன்றைக்கு மாதிரியே இருக்க கவிதையும்  அன்றைக்கு மாதிரியே இருந்தது..

கணவரின் தோளில் புன்னகையுடன் சாய்ந்து கொண்டார் காமாட்சியம்மாள்...
***


ஓம் சிவாய நம ஓம்
**

செவ்வாய், மே 20, 2025

கண்ணாத்தா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
செவ்வாய்க்கிழமை

 கை வண்ணம்..  


ஒளிமயமான சர விளக்குகள்.. அவற்றில் இருந்து எங்கும் பிரகாசம்..  புற்று முகத்தில் பூ முகம் காட்டி மஞ்சள் குங்குமத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..

இப்போது சின்னதாக முன் மண்டபமும் நீளமான ஆள் நடையும்.. அதற்கு முன்பு கீற்றுக் கொட்டகை தான்.. அதற்கும் முன் அதுவும் இல்லை.. புன்னை மரம்..
அதன் கீழாக புற்று.. அவ்வளவு தான் கோயில்..

மாடு மேய்ச்ச பையன் தான் முதல்.. ல பார்த்தது.. சின்னப் பொண்ணு ஒன்னு பூ மாலை எல்லாம் போட்டுக்கிட்டு இந்தப் புற்றுக்குள்ள எறங்கிப் போனதை..

ராசாவுக்கு சேதி சொல்லி விட்டாங்க.. அவுரு யானை மேல வந்து பார்த்துட்டு சீர் வைச்சு கொடுத்ததும்  நாடு முழுக்க பரவிடுச்சு..

அதற்கு அப்புறம் ஜனங்கள் வர போக..ன்னு ஆகி மூட்டை மூட்டையா நெல்லும் அரிசியும் அம்பாரம் அம்பாரமா இளநியும் தேங்காயும் ..  காணிக்கை..ன்னு கொண்டாந்து ஜனங்க சேர்த்துட்டாங்க.. பெரிய சாமியார் ஒருத்தர் வந்து புற்று மண்ணக் குழைச்சு அம்பாள் ரூபமா செஞ்சு வெச்சார்.. இத்தோட தங்கக் கிரீடம் , நெத்திப் பட்டம், திரு நேத்திரம், செவிப்பூ, முத்து புல்லாக்கு.. ன்னு செஞ்சு வைச்சு அம்பாளோட முகத்தை எடுத்துக் காட்டுனதும் ஜனங்க மத்தியில அம்மா.. அம்மா.. ன்னு  ஆனந்த கோஷம்... அந்த அம்பாளும் குழந்தை மாதிரி ஓடி வந்து இந்த ஜனங்களோட ஒட்டிக்கிட்டா..

அதுக்கு அப்புறம் ஊர்ப் பெரியவங்க ஒன்னா கூடி அம்பாள் பேர்ல கோயில் கட்றதுக்கு உத்தரவு கேட்டாங்க..
ராசாவும் ரெண்டு கிராமத்தை மானியமாக் கொடுத்தாரு .. எல்லாருமா சேர்ந்து கோயிலைக் கட்டுனாங்க..  

அதெல்லாம் ரொம்ப  வருசத்துக்கு முன்னே.. இப்போ நாடு வெள்ளக்காரன் கையில இருக்கு.. கோயிலுக்கு உள்ளே நுழைற வாசல்.. ல கோட்டும் சூட்டுமா கால் மேல கால் போட்டுக் கிட்டு உக்கார்ந்திருக்கான் துரை.. நாலடி தள்ளி ஜமக்காளம் விரிச்சு மணியக்காரரும் கோயில் கணக்கரும்.. பக்கத்துல வெள்ளிச் செம்புல தண்ணீர்..
கூடவே நாலு தடியனுங்க.. அம்பாள்கிட்ட இருக்கிற காணிக்கை குடம் நெறைஞ்சதும் தூக்கிக்கிட்டு வந்து வெள்ளைக்காரன் கிட்ட ஒப்படைக்கிறதுக்குன்னு..  அதனால இவனுங்களோட பேரு குடந்தூக்கி .. ஆனா ஜனங்க சொல்றதோ சொம்பு தூக்கி - அப்படி.. ன்னு..

அன்னைக்கு வெள்ளிக் கிழமை.. ஏராளமான ஜனங்க..  பால்குடம், கரகம், மாவிளக்கு.. ன்னு ஒரே ஆரவாரம்..

கோயிலுக்கு உள்ளே போன சனங்க திரும்பி வந்தபாடு இல்லை.. அம்பாளப் பார்த்த மனசுக்கு வேற என்ன வேணும்?.. பசி மயக்கம் இல்லாம - கிறங்கிக் கெடக்குது சனம்..
இருந்தாலும் கோயிலுக்கு வர்ற சனங்க.. அவங்களும் உள்ளே போய்த் தரிசனம் செய்யத் தானே வேணும்..  முடியலை.. நெரிசல்.. ஆ.. ஊ.. ன்னு சத்தம்.. தொரை கடுப்பாகிட்டான்..

" Nonsense... Why they are shouting?.. "

 அவம் பாஷையில கத்தி விட்டு - " Go Man..  போய்ப் பார்!.. " - என்று குடந்தூக்கி ஒருவனைப் பார்த்து சத்தம் போட்டான்..

அவனுக்கு அப்போது பிடித்தது ஏழரை..

கைப்பிரம்பால் தட்டிக் கொண்டே வந்தவன் காரை மண்டபத்தின் வாசலில் புற்று முகத்தின் முன் நின்று கொண்டு பெரிதாக சத்தம் போட்டான்.. 

" ஐயரே... எதுக்கு இவுங்கள இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க.. விறுவிறு.. ன்னு வெளியே அனுப்புங்க.. அங்கே தொரை கத்துறார் கேக்கலையா?.. "

" இதோ.. ஆச்சு.. இவாள்.. எல்லாம் வெகு தூரத்துல இருந்து வண்டி கட்டிண்டு வந்திருக்கா... கண் குளிர நின்னு பார்த்துட்டுப் போகட்டுமே... அவாள போ.. போ.. ன்னு விரட்டியடிக்கிறது பாவம் இல்லையா?.. "

" ஐயரே.. இங்கே பாவ புண்ணியம் எல்லாம் பார்க்காம காணிக்கை.. ய மட்டும் பாருங்க..
உமக்கு நேரம் சரி இல்லே.. ன்னு... நெனைக்கிறேன்.. இல்லேன்னா தொர வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசுவீரா?... " 
- என்றபடி காணிக்கைக் குடத்தைக் கையால் அசைத்துப் பார்த்தான்.. அது இன்னும் நெறையலை..

" சிவ சிவா!.. நா ஒன்னும் தப்பா பேசலையே!.. "

" தெரியும் ஐய்ரே... நீர் பொம்பளைப் புள்ளைகள ஈரத் துணியோட வரச் சொல்றதும்.. கையத் தொட்டு எலுமிச்சம்பழம் தர்ற தும்.. நெத்தியில குங்குமம் வச்சி விடறதும்!.. " 

" அபச்சாரம்... அபச்சாரம்... இதுவரைக்கும் அம்பாள் சந்நிதியில் எந்தக் குத்தமும் செஞ்சதில்லயே.. சந்நதியில ஆவேசம் வந்து குழந்தைகள்  ஆடறச்சே விபூதி போடாம வேற என்ன தான் செய்றது?.."

இதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்.. 

" யோவ்.. சொம்பு தூக்கி.. இதனால ஒனக்கு என்னா பிரச்னை?.. போ யா அந்தப் பக்கம்!.. "

ஜனங்களிடையே பரபரப்பு..

" யார் என்னா சொல்றது?.. நீங்க அம்பாள வேண்டிக்கிட்டு எம் மகளுக்கு திந்நீறு போட்டு விடுங்க சாமீ!.. "

நடுத்தர வயதுடைய பெண் தன் மகளுடன்  முன்னே வந்தாள்..

" ஆட்டு மந்தை சனங்களுக்கு இவ்வளவு ஆங்காரமாப் போச்சா!.. " - என்று கொக்கரித்த குடந்தூக்கி,

" இந்த மாதிரி குளிச்ச ஈரத்தோட நனைஞ்ச சேலயோட பொண்ணுங்க வந்தா ஐய்ரு ஏன் நிறுத்தி வைக்க மாட்டார்!?.. "
- வக்கரித்தான்...

" டேய்.. என்னடா சொன்னே!.. "
முன்னால் நின்றிருந்த இளம் பெண் ஆவேசமானாள்.. விழிகளில் தீப்பொறி பறந்தது... 

நீதி கேட்க அம்பாள் வந்து விட்டாள் என்று எல்லாரும் பரவசமான நேரத்தில் - தாம்பாளத்தில் இருந்த தேங்காயை எடுத்தாள்.. அதை அந்த முரடனின் மண்டையில் அடித்தாள்.. உடைத்தாள்.. மலையேறி விட்டாள்...

முன் மண்டபம் எங்கும்  சிவப்பாகி விட்டது..
நடந்ததைப் பார்த்த  துரைக்கு கடுங்கோபம்.. பெரிய கோர்ட் வரைக்கும் போனான்... ஆனால் உள்ளூர் பஞ்சாயத்தார்களும் கண்ணால் கண்ட சாட்சிகளும் பலமாக இருந்ததால் பிராது
தள்ளுபடியாகி விட்டது ..

அது நடந்த வருசம் 1800..

இன்றைக்கு 1950..
 தாத்தாவின் தாத்தாவுடைய வாழ்க்கையில் அன்றைக்கு
நடந்த சம்பவம் இன்றைக்கு  மீண்டும் நடந்திருப்பதை நினைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் சுப்பு குருக்கள்..

அதே மாதிரி அச்சு அசலா இன்று காலையில் நடந்தது தான் அவருக்கு ஆச்சர்யம்..

சந்நிதி மத்தியில கம்பித் தடுப்பு.. அந்தப் பக்கம் ஆண்களும் இந்தப் பக்கம்  பெண்களும்.. நடுவால பத்தடி தூரத்துக்கு நடந்து நடந்து கற்பூரம் கொடுப்பார்.. எலுமிச்ச மாலை, ரோஜா மாலை, கதம்ப சரம், புது சேலை.. ன்னு யார் கொடுத்தாலும் அவங்க கண்ணு முன்னாலயே அம்பாளுக்கு சாத்தி கற்பூர தரிசனம் காட்டி கையில எலுமிச்சம்பழம் கொடுப்பார்..
கற்பூரத் தட்டுல நாலணா போட்டாலும் சரி.. ஒரு ரூபா துட்டு வைச்சாலும் சரி.. எல்லாருக்கும் அன்புதான்..  
எல்லாருக்கும் மரியாதை தான் .. அந்த குணம் வாழையடி வாழையா  வர்றது..

இதுக்கு சோதனையா வந்து சேர்ந்தான் கங்காணி.. எல்லாம் சரியா நடக்குதா..
ன்னு கண்காணிக்கிறது தான் அவன் வேலை..
பெரிய எடத்து சிபாரிசு.. அதனால சத்தமும் ஜாஸ்தி..

" குருக்களே.. ஒவ்வொரு மாலைக்கும் நடையா நடந்து நேரத்தை வீணாக்காதீங்க... ஒரு எடத்துல நின்னு மாலை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு விபூதி கொடுத்து ஜனங்கள வெளியே அனுப்புங்க.. கூட்டம் கூட்டாதீங்க.. மாலை எல்லாம் அப்புறமா போட்டுக்கலாம்.."

" ஐயா.. கொண்டு வர்ற மாலைய அம்பாளுக்கு சாத்துறத கண்ணால பார்த்தா தானுங்களே எங்க மனசுக்கு நிம்மதி!.. " - கூட்டத்தினுள் இருந்து ஒரு குரல்..

" உங்க மாலையத் தூக்கிக் கிட்டு ஓடிட மாட்டோம்... அவ்வளவு வக்கணை.. ன்னா கூட்டம் இல்லாத கோய்லுக்குப் போகணும்!.. " 

கங்காணியிடம் எகத்தாளம்..

" குருக்களே.. கறாரா சொல்லிட்டேன்.. இன்னும் ஒரு நாழி.. ல கூட்டம் கலையணும்.. இல்லேன்னா தர்மகர்த்தா ஐயாக்கிட்ட சொல்லி உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.."

கடூரமாக இருந்தது அவன் குரல்..

' அம்பாளைத் தேடி வர்றவங்களை என்ன சொல்லி நிறுத்துறது?.. ' 

உச்சிக் காலம் முடிந்து நடை அடைப்பதற்கு நேரமாகி விட்டது.. சொன்னபடிக்கு எதுவும் நடக்காததால் அங்கே உறுமிக் கொண்டிருந்தான் கங்காணி ..
சாயங்காலப் பொழுது எப்படி போகப் போகின்றதோ என்ற நினைவுடன் வீட்டுக்கு வந்து பேருக்கு ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு  திண்ணையில் உட்கார்ந்தவர் தான்..

மனசு இன்னும் ஆறாத நிலையில் பசுபதியைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டார்.. சந்நிதியில் சுப்பு குருக்களுக்கு ஒத்தாசையாக இருப்பவன் பசுபதி..

" அண்ணா..  சேதி தெரியுமோ!.. "

" என்னடா அது?.."

" காலைல உங்ககிட்டே வந்து கரைச்சல் பண்ணினானே கங்காணி..  அவன போலீஸ் காரங்க வந்து பிடிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க!... "

" ஏண்டா?.. " - சுப்பு குருக்களுக்கு ஆச்சர்யம்..

" அவன் ரொம்பவும் மோசமான பேர்வழியாம்.. ஏகப்பட்ட சனங்கள ஏமாத்தி இருக்கானாம்.. நாலு ஊர் பஞ்சாயத்தார் போலீஸுக்குப் போனதில எல்லாம் ருசு ஆகிட்டதாம்.. ஜீப்புல வந்து அள்ளிக்கிட்டுப் போய்ட்டாங்க.. இன்னும் பத்து வருசத்துக்கு ஜெயில் சாப்பாடுதானாம்!.. "

" மகமாயி!.. "

" பிறத்தியார் பேச்சைக் கேட்டு அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்ததுல என் பேர் கெட்டுப் போய்ட்டதே.. ன்னு தர்மகர்த்தா தலையில அடிச்சுக்கறார்.. "

"  கௌரீ.. அந்தத் திறவு கோலை எடுத்துண்டு வா!.. "

" ஏன்னா.. சாயரட்சைக்குத் தான் இன்னும் நாழி இருக்கறதே!.. "

" தெப்பக்குளத்துல மூழ்கிட்டு அப்படியே ஈரத்தோட அம்பாள தரிசனம் செய்யணும்..டி!.. "

" அண்ணா பார்த்தேளா.. உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.. னான்!.. அவன் சீட்டே கிழிஞ்சு போய்டுத்து!.. "

சிரித்துக் கொண்டான்  பசுபதி..

"  அம்பா கண்ணத் தொறந்துட்டாள் அண்ணா!.."

" அம்பாள் என்னைக்கு.. டா கண்ணை மூடிண்டு இருந்தாள்?.. "
***
ஓம்  சக்தி ஓம் 
**

செவ்வாய், மே 06, 2025

சிறுகதை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
செவ்வாய்க்கிழமை

இன்றைய பதிவில் பழங்கதை ஒன்று - ஒரு சில வார்த்தை திருத்தங்களுடன்.

அன்பின் ஸ்ரீராம் அவர்களது எங்கள் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிடப்பட்டிருக்கின்றது..

அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளுடன் எழுதப் பெற்ற கதை இது..

எத்தனை பேர் தலையில் அடித்துக் கொண்டார்களோ!..

தரிசனம்


" நடை திறந்ததும் கற்பகாம்பாள தரிசனம் செய்துட்டு புறப்படறோம்.. "
 
அபயாம்பிகா டிராவல்ஸின் அட்டெண்டர் வைத்திநாதன் விவரிக்க ஆரம்பித்தான்..

அந்தப் பக்கம் கணினியுடன் ஒரு இளம் பெண்.. வேலையா விளையாட்டா.. தெரிய வில்லை..

" ஷார்ப்பா ஆறு மணி நேரத்துல பெரம்பலூர் அரியலூர் வழியா திருவையாறு போயிடலாம்...
நைட் கல்யாண சத்திரத்தில தங்கி.. "

அம்பி எனப்படும் வைத்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியின் இடைமறிப்பு..

" ஏன்.. லாட்ஜ் ஏதும் கிடைக்கலையா?.. "

" இது பட்ஜெட் டூர்.. சர்வீஸ் காசு கம்மி.. கல்யாண சத்திரந்தான்.. சத்திரமே தான்..  மாமி இப்பவே நன்னா கேட்டுக்கோங்க..  அங்க வந்து ப்ரச்னை பண்ணக் கூடாது!.. "

" இல்லேடா அம்பி.. நீ மேல சொல்லு!.. "

" சத்ரத்தில நன்னா தூங்கிட்டு காலைல ஸ்நானம் முடிஞ்சதும்.. "

" எங்கே காவேரி..லயா!.. "

" மாமி..  நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க.. காவேரி காஞ்சு போய் ரெண்டு மாசம் ஆகறது.. "

 " அப்போ புரோக்ஷணம்  கூட செஞ்சுக்க முடியாதா?.. "

" ம்.. ஹூம்.. "

" எல்லாம் கலியாயிடுத்து.. மேல சொல்லு... "

" கறந்த பால் காஃபியோட காலை டிபன்.. நேரா ஐயாறப்பர் கோயில்.. அங்கே ஆயிரக் கணக்..ல ஜனங்க கூடியிருப்பாங்க.. ஸ்வாமி பல்லாக்கு நந்தி பல்லாக்கு ரெண்டும்  புஷ்ய மண்டபத்துக்குப் புறப்பட்டு போனதுக்கப்புறம் தான் கோயிலுக்குள்ள போய் ஸ்வாமி தரிசனம் செய்ய. முடியும்.. "

" நீங்க தானே அழச்சிண்டுப் போவேள்?.. "

" மூலஸ்தானத்தில் சேவிக்கறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்லை.. உச்சிக் காலம் ஆயிடும்.. நாம திருப்பழனம் வேற போயாகணும்.. அவா அவாளும் சாமார்த்தியம் பண்ணி ஸ்வாமி பார்த்துட்டு ராஜ கோபுரத்தாண்ட வந்துடணும்!.. இங்கே புறப்படறச்சே ஒரு பேட்ஜ் கொடுத்துடுவோம்.. அத கழுத்துல மாட்டிக்கிடணும்.. அதுல எல்லா டீடெய்ல்ஸூம் இருக்கு.. மிஸ்ஸிங் பார்ட்டி
டிராவல்ஸ் நம்பருக்கு மெசேஜ் பண்ணா நாங்க வந்து அழச்சுக்குவோம்.. அதுக்காக நந்தியாண்ட வந்து நின்னுக்கிட்டு வழி தெரியலைன்னு புலம்பக் கூடாது.. வடக்கு எது தெக்கு எதுன்னு கேக்கப்படாது!.. "

" நெஜத்துல டாம்பீகமா வர்றா. வடக்கு எது.. தெக்கு எதுன்னு கேட்டா சொல்லத் தெரியலை!.
நேக்கு நெஜமாலுமே திருவையாத்து கோயில்ல வடக்கு தெக்கு தெரியாதுடா அம்பி!.. "

" அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல.. கூட மாமா வருவார் தானே... அவாரோட கைய மட்டும் விடாம புடிச்சுக்கோங்க.. எல்லாம் சரியாய்டும்!.. "

"  சரி.. பகவான் பார்த்துப்பார்.. திருப்பழனம் போறது.. ன்னாயே.. மேல சொல்லு!.. "

" கோபி அண்ணாவோட தம்பி அங்கே டிராவல்ஸ் நடத்றார்.. திருவையாறு ல இருந்து திருப்பழனத்துக்கு  ஏசி வேன் ஏற்பாடு ஆகியிருக்கு.. அது  தான் அங்கே சரியா வரும்... "

" அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணுவாளே!.. "

" அப்படியெல்லாம் இல்லை.. அதுக்கான சார்ஜ் இந்தப் பேக்கேஜ்லயே வந்துடுது.. கவலப்படாதேள்!.. " - வைத்தி சிரித்தான்..

" சரி.. அதுக்கு அப்புறம் எந்த ஊர்?.. "

" திருப்பழனம் பார்த்துட்டு திரும்பி திருவையாறு வந்து கண்டியூர் வழியா திருச் சோற்றுத்துறை.. திருவேதிக்குடி.. "

" ஏன் அப்படி?.. "

" அதுதான் வழி.. குறுக்கால ரெண்டு ஆறு.. காவேரி, இன்னொன்னு குடமுருட்டி..
ரெண்டுக்குமே பாலம் இல்ல..
ஆத்துல இறங்கி நடக்கணும்.. இல்லேன்னா ஊர சுத்திண்டு தான் வரணும்.. ரூரல் ஏரியா.. புஷ் பேக் எல்லாம் ஊருக்கு உள்ளே போக முடியாது.. "

" அது சரி.. நாழியாயிடுத்து ன்னு கோயில் நடை அடைச்சுட மாட்டாளா... "

" பல்லாக்கு வந்துட்டுப் போறது வரைக்கும் அந்தந்தக் கோயிலும் தெறந்தே தான் இருக்கும்..இப்படியே மத்த மூணு கோயிலும் சேவிச்சுட்டு.. "

இன்னும் ஏதேதோ கேள்விகள் மாமியிடம் இருந்து வந்தன.. எல்லாவற்றுக்கும் தெளிவான பதில்கள் இருந்தன
வைத்தியிடம் ..

" ஏண்டா அம்பி.. இவ்ளோ தூரம் கூட்டிண்டு போறாய்..  ரெண்டு ராப்பொழுது தங்கணும்.. ன்றாய்!..  சாப்பாடு  வசதி எல்லாம் எப்டி?.. அங்கே ஏதோ அன்ன தானம் போடுவாள்.. ன்னு சொல்றாளே!..  அதுல கொண்டு போய் ஒக்கார்த்தி வெச்சுட மாட்டியே!.. "

மினுமினுக்கிய கண்ணாடியை சுட்டு விரலால் ஏற்றி விட்டுக் கொண்ட மாமியிடம் இருந்து மறுபடியும் கேள்வி..

அம்பியாகிய வைத்தி ஏறிட்டு நோக்கினான்..

மாமியின் கூர்மையான விழிகள் இவன் என்ன சொல்லப் போகின்றான் என்ற ஆவலுடன் இருந்தன..

" அந்த அன்னதானம் எல்லாம் சாப்பிடறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும் மாமி.. வர்றதில அம்பாள் யார்.. ஐயாறப்பன் யார்.. ன்னு யாருக்கும் தெரியாது.. முப்பத்து முக்கோடி தேவர்களும் எண்ணாயிரம் ரிஷிமார்களும் ஏதாவது ஒரு ரூபத்துல வந்து தரிசனம் பண்றதா ஐதீகம்!.. நீங்க என்னடான்னா... "

 " இல்லேடா அம்பி.. மாமாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதில இருந்து எங்கேயும் கை நனைக்கிறது இல்லே!.. அதுக்காகத்தான் கேட்டேன்.. "

" தர்மசம்வர்த்தனி எதுக்கு இருக்கறா?.. தைரியமா வாங்கோ.. அவ பார்த்துப்பா!..  "

" நன்னாத் தான் பேசறே!... "

" தேங்க் யூ மாமி.. ஸீட் புக் பண்ணிடலாமா?.. "

" சித்த நாழி பொறு.. இன்னொரு ரிக்வெஸ்ட்..."

" சொல்லுங்கோ.. "

" இவ்ளோ தூரம் திருவையாறு வரைக்கும் போறமே.. அங்கேருந்து இருபது நிமிஷம் தஞ்சாவூர்.. "

" தஞ்சாவூர் ல யாரப் பார்க்கணும்?.. "

" என்னடா இப்படிக் கேட்டுட்டே... அங்க தான காமாக்ஷி இருக்கா!.. "

" யார்.. உங்க சித்தி பொண்ணா?.. " வைத்தியின் வார்த்தைகளில் குறும்பு..

" லோக மாதா.. ஷாட்சாத் காஞ்சி காமாக்ஷி அம்பா!.. அவளத் தெரிஞ்சுக்காம என்ன டூர் நடத்தறே நீ?.. "

" ஓ!.. அந்த கோயிலுக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணச் சொல்றேளா!.. "

" ஆமா!.. "

" நேக்குத் தெரியாது.. அதெல்லாம் ஆர்கனைசர் கிட்ட பேசிக்கோங்க.. " 
கையை விரித்தான் வைத்தி..

" எங்கே அவர்!.. "

" அவர் திருப்பதி போயிருக்கார்.. ரெண்டு நாளாகும் வர்றதுக்கு.. "

" மே மாசம் டுவல்த்  திருவையாறு சப்தஸ்தானம.. லெவன்த் எர்லி மானிங் இங்கே இருந்து புறப்படறோம்.. மார்ச் லேருந்து புக்கிங்... நடந்துண்டு இருக்கு..  இப்போ வந்து தஞ்சாவூர்க்கும்  போறோம்.. இன்னுங் கொஞ்சம் அமௌண்ட் ஜாஸ்தியாகும் ன்னு சொல்ல முடியுமா?.. இல்லே உங்களுக்குத் தான் சிங்கிள் சார்ஜ் பண்ணிட்டு திருவையாத்துல இறக்கி விட்டுட்டு வர முடியுமா?.. அதெல்லாம் சரியா வராது மாமி.. "

" சரி.. நான் எங்க குரூப் மெம்பர்ஸ் கிட்ட சொல்லிடறேன்.. " மாமியின் கண்கள் கைத்தொலை பேசியில் பதிந்தன..

" இவ்ளோ நாள் டூர் போட்ருக்கோம்.. இந்த மாதிரியான.. "

வைத்தி சொல்லிக் கொண்டிருந்த போது தொலைபேசி கிணுகிணுத்தது..

" ஒரு நிமிஷம்.. ஆர்கனைசர்  பேசறார்.. ' - என்ற வைத்தி - 
" ம்ம்.. ம்ம்.. அப்படியா!.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..  ஆகா.. அப்படியா!.. ம்ம்.. ம்ம்.. உங்க குல தெய்வம் எங்கே இருக்கு?.. தஞ்சாவூர்.. ல யா!..  சரி.. சரி.. வாங்க... வந்து பேசிக்கலாம்.. சரிங்க ண்ணா!.. " 
-  முகம் மலர்ந்த புன்னகையுடன் எழுந்து நின்று மாமியை நமஸ்கரித்தான்..

" க்ஷேமமா இருடா அம்பி.. எதுக்கு இந்த நமஸ்காரம்!.. " - மாமிக்கு வியப்பு..

" உங்கள அழச்சுட்டு வரச் சொல்லி அந்த அம்பாளே சொல்லிட்டா.. திருவையாறு பேக்கேஜ் ல வர்ற எல்லாருக்கும் தஞ்சாவூர் டிரிப்  போனஸ்!.. ஆர்கனைசரையே சொல்ல வச்சிட்டா!.. " 

" ஏன்.. என்ன ஆச்சு?.. ஆர்கனைசர் என்ன சொன்னார்!?... " - மாமியிடம் பரபரப்பு..

" பெஸ்ட் டிராவல் சர்வீஸ்... அப்டி.. ன்னு எங்களுக்கு சர்க்கார்ல இருந்து சர்ட்டிபிகேட்.. அத்தோட ஒரு லட்ச ரூபாய் கேஷ் அவார்டும் கிடைச்சிருக்கு.. அதைத்தான் ஆர்கனைசர் திருப்பதியில இருந்து சொன்னார்.. "

" அப்படியா!.. ரொம்ப சந்தோஷம்.. " - மாமியிடமும் மகிழ்ச்சி..

 " அத்தோட திருப்பதி ல இருந்து திரும்பி வந்ததும் இந்த திருவையாறு பேக்கேஜ் கெஸ்ட்களோட தஞ்சாவூர்  குலதெய்வம் கோயிலுக்குப் போய்ட்டு வரப் போறதாகவும் சொன்னார்!.. "

" காமாக்ஷி!.. " - மாமியின் கண்கள் கலங்கின..

" தஞ்சாவூர் ல  மாரியம்மன் கோயிலுக்குப் போறார்... அவங்க குல தெய்வம்...
நீங்க கூட கேட்டீங்களே.. தஞ்சாவூர் போகணும்.. ன்னு.. சிக்ஸர் அடிச்சுட்டேள்.. சக்சஸ் ஆயிடுத்து மாமி.. நல்ல மனசு தெய்வாம்சம்.. அதான் உங்கள நமஸ்காரம் பண்ணினேன்.. "

" பங்காரு காமாக்ஷி ய பார்க்கனும்..ன்னு  ஆசைப்பட்டேன்.. வர்றது தான் 
வர்றே..  இங்கேயும் வந்து பார் டி.. ன்னு  மகமாயி
கூப்பிட்டுட்டா!.. "
மாமியின் குரலில் நெகிழ்ச்சி..

" பிரஹந்நாயகி ய விட்டுட்டீங்களே.. மாமி!.. "

" பிரஹந்நாயகி வராஹி.. கொங்கணேச ஞானாம்பிகா.. இவாள எல்லாம் மறக்க முடியுமாடா அம்பி.. "

கண்ணாடியைக் கழற்றி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்ட மாமியின் குரல் தொலைபேசியில் தீர்க்கமாக இருந்தது.. 

" ஆமாம்..  நமக்கு போனஸ்.. ன்னு அவர் சொல்லிட்டாலும்.. தஞ்சாவூர் போய்ட்டு வர்ற அமௌண்டை நாம  அப்படியே அன்னதான நிதிக்கு கொடுத்துடுவோம்!.. 
" அதுதான் நியாயம்!.. "

வைத்தி உற்சாகமானான்..

" மாமி.. உங்க பேர் சொல்லுங்கோ.. சீட் ரிசர்வ் பண்ணிடறேன்.. "

மாமி சொன்னாள்..
" கற்பகாம்பாள் சந்திரசேகர்!.. "
***

எதிர் வருகின்ற 
சித்திரை 29 (12/5) திங்களன்று சப்தஸ்தான உலா..
திரு ஐயாற்றில் இருந்து  பல்லக்குகள் புறப்படுகின்றன..

சப்தஸ்தானம் காண்பதற்கு வருக வருக..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**