நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 24, 2026

கருப்பன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் 
எங்கள் பிளாக் தளத்தில் வெளியான எனது சிறுகதை

கருப்பன்
**

" டிங்டிங் டிடிங்.. டிங்டிங் டிடிங்.. "
சொசைட்டிக்கு பால் கறக்கணும்... மூனே முக்கால் ஆச்சு.. செவலையை அவிழ்த்து அதன் முதுகிலேயே கயிற்றைப் போட்டாள் காவேரி.. அது நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது - கன்றைக் காணோமே!.. என்று..
அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..
உம் புள்ளய ஒன்னும் செஞ்சிட மாட்டோம் தாயி!.. - என்றபடி கன்றை அவிழ்த்து விட்டாள்.. 
துள்ளிக் குதித்த கன்றைப் பார்த்துக் கொண்டே நடந்தது பசு.. கையில் பால் குவளையையும் விளக்கெண்ணெய் சிமிழையும் எடுத்துக் கொண்டு நடந்த காவேரியின் கண்கள் எதிரில் தேடின - இப்போதாவது கருப்பன் வருகின்றானா!.. என்று...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கருப்பனைத் தவிர மற்றெல்லாமும் தென்பட்டன..

எதிரில் வருபவர் யாராவது கருப்பனைப் பற்றி சொல்லுவார்கள் - என்று பார்த்தால் அவரவரும் அவரவர் வேலையோடு போய்க் கொண்டு இருக்கின்றார்கள்..

கருப்பன்.. கருப்பன்!..
யாரவன் கருப்பன்?.. - என்றால் 

அந்தக் காலத்து ஆடு.. அலமேலுவோட ஆடு ஞாபகத்துக்கு வருதா?.. அது மாதிரி.. அந்த ஆட்டைப் போல எழுதப் படிக்கத் தெரியாதே தவிர கருப்பனுக்கு  மற்றதெல்லாம் தெரியும்..

விடியற்காலை கட்டுத் தறியில் இருந்து அவிழ்த்து விட்டால் போதும்.. அக்கம் பக்கத்து குரால்களைக் கொஞ்ச நேரம் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு விட்டு மெதுவாக நடையைக் கட்டுவான்.. மந்தையில் மத்தியானம் வரைக்கும் நாட்டாமை.. ஒரு யோசனை வந்து விட்டால் வடக்கே ரயில்வே டேசனுக்குப் போவான்..  அங்கே சுற்றித் திரிந்து விட்டு நடுப் பகலில் திரும்புவான்..
" எங்கேடா ஊர் சுற்றப் போனாய்!.. " - என்று காவேரி அதட்டினால் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அப்பாவியாக நிற்பான்..

ஒரு வாளி நிறைய கடலைப் புண்ணாக்கை கரைத்து வைத்திருப்பாள் காவேரி - இது மாதிரி ஊர் சுற்றும் பயல் உடம்புக்கு இது தான் நல்லது என்று... 

மூச்சு முட்ட அதைக் குடித்து விட்டு திண்ணையில் ஏறிப் படுத்தான் என்றால் அது தான் அவனுக்கு சொர்க்கம்..

இப்படியாகப்பட்டவன் சாயங்காலத்துக்கு மேலும் வீட்டுக்குத் திரும்பவில்லையே.. என்ற கவலை காவேரிக்கு..

புளியந்தோப்பில் வைத்து செவலையிடம் ரெண்டு லிட்டர் கறந்து சொசைட்டியில் ஊற்றி விட்டு  அட்டையிலும் பதிவு செய்து விட்டு வீட்டுக்கும் திரும்பியாயிற்று.. கருப்பன் வீடு திரும்பவில்லை..

காவேரியின் கண்களில் நீர் கோர்த்தது..

கருப்பனுக்கு என்று ஊறவைத்த கடலைப் புண்ணாக்கு நுரைக்க ஆரம்பித்திருந்தது..

தோட்டத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியாயிற்று..  பள்ளிக்கூடம் விட்டு தம்பியும் வந்து விட்டான்... 

விஷயம் தெரிந்ததும்
எல்லாரும் ஏகமனதாகச் சொன்னார்கள் - " எங்கே போயிடப் போறான்... வருவான்.. வருவான்!.. "

ஆனால் வரவில்லை..

அதோ - ஏழு தெருக்களையும் தபால் கட்டுடன் சைக்கிளில் சுற்றி வரும் போஸ்ட் ஆபீஸ் மாமா ..
இங்கிருந்தபடியே கத்தினாள்..
" மாமா.. கருப்பனப் பார்த்தீங்களா?.. '
சைக்கிளை நிறுத்தி காலை ஊன்றியவர் - 
" இல்லையே.. ம்மா!.. " - என்றபடி வீட்டை நோக்கி மெதுவாக நகர்ந்தார்..

கருப்பனைப் பற்றி அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும்...

முனீஸ்வர சாமிக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தான்..

அது பெரிய கதை.. பன்னிரண்டு மைல் சுற்றளவுக்கு விசேசம் இந்த ஊர் குருதி  பூசை.. அதுவும் மூனு வருசத்துக்கு ஒரு தரம் தான்.. அந்தக் கெரகம் இந்த வருசம் பார்த்து வருது.. மற்ற படையல் பள்ளயம் எல்லாம் வருசா வருசம் வழக்கம் போல..

தை முதல் செவ்வாய் அன்னைக்கு குருதி பூசை.. இலுப்பைத் தோப்பு முனீஸ்வரன் கோயில்ல பரிவார சாமிகளுக்கு எண்ணெய்க் காப்பு.. புது வேஷ்டி சாத்தி அசைவ படையல்..
இதுல முனீஸ்வரன் ஒதுங்கியே இருப்பார்.. 
அவருக்கு தை முதல் வெள்ளியன்னிக்கு அமுது படையல்..  சுழியம், அதிரசம், இளநீர், பானகம், பஞ்சாமிர்தம், தயிர் பள்ளயம், பாயாசம்..

கடை வெள்ளிக்கு  முனீஸ்வரன் அழைப்பு.. வாண வேடிக்கை.. ஊர் கோலம்..
கடை செவ்வாய் அன்னிக்கு விடையாற்றி.. மஞ்சத் தண்ணி விளையாட்டு..

முனீஸ்வர சாமிக்கு.. ன்னு
கிடாக்கள் நேர்ந்து விடுறது .. படையல் மட்டும் பரிவார சாமிகளுக்கு!..

ஊர்ல பதினைஞ்சு கிடா குட்டிகள் குருதிப் பூசைக்காகவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. இருந்தாலும் காவேரியோட கருப்பனுக்குத் தான் முதல் மரியாதை.. பூசை..

இந்த நேர்ச்சை ஆடுகளோட அடையாளம் - சிவப்பு நிற கழுத்துக் கயிறும் அதுல சூலாயுத முத்திரையோட ஒரு தகடும் தான்.. 

முனி ஐயா கிடாக்களக் கண்டாலே போதும்.. 
களவாணிப் பயலுகளுக்கு பேதியாயிடும்..  ஒருத்தனும்  கிட்ட நெருங்க மாட்டான்...  கிடாக்கள் வெள்ளாமையில  இறங்கிட்டா கூட ஜனங்க கோவிச்சுக்க மாட்டாங்க.. 
" சேதாரம் ஆகிடாம பாத்துக்குங்க ஐயா.. " - ங்கற ஒரே பேச்சு தான்.. 
அந்த வருசம் அந்த வயல்ல மகசூல் அமோகமா இருக்கும்..  கல்லு எதையும் எடுத்து வீசினா - அவ்வளவு தான்..

காத்து வாக்குல சேதி ஊருக்குள்ள போயி - நாலு எட்டா சனங்க வந்து விட்டார்கள்..
" இருவது கிலோவுக்கு மேல தேருமே!.. "

" இந்தக் கிடாக்களை வச்சி பண்ணையம் பண்றதே பெரிய பாடு.. "

" எனக்கென்னமோ சந்தேகமாத் தான் இருக்கு.. "

" நாளைக்கு முனியன் கடுப்பாகி கெளம்பிட்டா யாரு தாங்குறது?.. "

ஆளுக்கு ஆள் பேசி விட்டுப் போனார்கள்...

" எலே.. தம்பி... வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போய் ஒரு சுத்து பார்த்துட்டு வர்றியா?.. " 

காவேரியின் அப்பாவுக்கு உண்மையிலேயே கவலை..

" ராத்திரியில அந்த அண்ணன் சைக்கிள் தர மாட்டார் அப்பா!.. " 

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முனியன் கெடாய ஒருத்தன் தொட முடியுமா.. ன்னேன்.. ஏதாவது கொரால் பின்னால போயிருப்பான்... காலைல வருவான் பாருங்க... ஏ.. பாப்பா.. எதுக்கும் நீ கவலப்படாம  ஒரு ரூவா துட்டை எடுத்து முடிஞ்சு வை!.. " - என்று ஆறுதலாகப் பேசியபடி காவிரியின் தலையை வருடி விட்டாள் தாய்..

ராத்திரி சோறு ஒருவருக்கும் இறங்கவில்லை.. திண்ணை காலியாகக் கிடந்தது.. கையில் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வேலிப் படல் வரைக்கும் சென்று பார்த்து விட்டு வந்தாள் காவேரி..

ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை..  வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது..
கண்களைத் துடைத்தபடி தூங்கிப் போன காவேரி விடிவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்கு ஓடினாள்...
கருப்பனைக் காணோம்..
சொசைட்டியில் பால் கறக்க வேண்டும்... 

" ஏ... பாப்பா... பேசாம இரு.. அது கோயில் கெடா... அந்தக் கவலை முனியனுக்குத் தான்!.. " - என்றாள் அம்மா செவலையை அவிழ்த்துக் கொண்டே..

பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.. கருப்பன் காணாமல் போனது குரால்களுக்குத் தெரி ந்திருக்கும் போல.. எல்லாமே ஒரு மாதிரி மசங்கலாக இருந்தன...

அம்மா சொன்ன மாதிரி ஒரு ரூபாயை எடுத்து விளக்கு மாடத்தில் வைத்த காவேரி வாளியில் கடலைப் புண்ணாக்கைப் போட்டு தண்ணீர் எடுத்து ஊற்றினாள் - கருப்பன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன்..

யார் யாரோ வாசலுக்கு வந்தார்கள்.. ஏதேதோ பேசி விட்டுப் போனார்கள்..

" கருப்பன் காணாமப் போய்ட்டான்.. முனியனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!..
நல்லா மாட்டிக்கிட்டான் நல்ல தம்பி!.. " 

உள்ளூர சந்தோஷம் சிலருக்கு..

" போலீஸ்ல சொல்லுவமா?.. "

" எதுக்கு!.  போற போக்குல     பொங்க வைக்கிறதுக்கா?.. "

" ஏ.. நல்லதம்பி..  கருப்பன் காணாப் போனதுக்காக வருத்தப் படாதே.. கைக்கு கிடச்சதும் வர்ற கார்த்திகையில பாய்ச்சல் விட்டு குருதி பூச வச்சிடுவோம்.. இல்லேன்னா வேற கிடாக் குட்டி வாங்கி விட்டுடுவோம்.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. காணாப் போன கருப்பன் வரலை.. ன்னா சாமி குத்தம் ஆகிடும்.. ன்னு பயப்படாதே "

வாத்தியார் தாத்தா பேசினார்.. 

" அதுவும் சரிதான்.." - என்ற பேச்சும் கூடவே எழுந்தது,.

காவேரி எழுந்து முன்னால் வந்தாள்..

" தாத்தா மன்னிக்கணும்... நான் முனி ஐயாவுக்கு நிறை காணிக்கை நேர்ந்திருக்கேன்!... "

வாசலில் கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி...

" நெற காணிக்கையா!..  குருதி பூசைக்கு நேர்ந்துகிட்ட கிடா தானே கருப்பன்!.. "

" ஆமா.. ஆனாலும் நான் நேத்து மறு மாப்பு  கேட்டு வேண்டிக்கிட்டேன்.. "

எல்லார் முகத்திலும் இருள் - கறி சோறு போச்சே!.. - என்று..

நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து முடிந்ததும்  அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..

" யோசிச்சு தான் சொல்றியா காவேரி?.. "

" ஆமாங்க.. தாத்தா!.. "

" அப்போ நேர்ந்து விட்டுருக்கும் மத்த கிடாக்களை எல்லாம் என்ன பண்றது?...

திடீரென ஆவேசம் வந்து ஆடினான் கோவிந்தன் மகன்.. பதினைஞ்சு வயசுதான் அவனுக்கு..

" அவுத்து விட்டுடுங்கடா.. "

" அப்போ குருதி பூச?.. "

" கூஷ்மாண்டத்தை வெட்டிப் போடுங்க!.. "

" கூஸ்மாண்டமா.. அப்படி.. ன்னா!?.. "

" பூசனிக்காய்.. டா.. பூசனிக்காய்!.. "

" அது மட்டும் போதுமா!... "

" போதும்.. பள்ளயத்தை மட்டும் மாத்தக் கூடாது.. புரிஞ்சதா!.. "

" புரிஞ்சதுங்க சாமி!.. "

" ஊர்ல.. நாட்ல.. அநியாயம் அக்கிரமம் பெருகிப் போச்சு.. அயோக்கியன ஆக்கினை பண்ணனும்.. களவாணிய களை எடுக்கணும்.. எம் பரிவாரம் பூராவும் அங்கே பூந்து வெளையாடுவாங்க.. "

" எதுவும் குத்தம் குறை இல்லையே.. கோப தாபம் இல்லையே!.. " 

" அதான் சொல்லிட்டேனே.. நல்ல சனங்க  நிம்மதியா இருப்பாங்க.. ன்னு!.. "

விபூதி சம்படம் வந்தது.. விபூதியை அள்ளி மேலே வீசிய சாமி பெரிய சத்தத்துடன் மலையேறியது.. சிறுவன் மயங்கி விழுந்தான்..

" அடடே... கருப்பன் எங்கேன்னு கேக்கறதுக்கு  மறந்துட்டமே!.. "

கூட்டம் வருத்தப்பட்ட வேளையில் -
வேலிப் படலை முட்டித் தள்ளி விட்டு கருப்பன் வந்து கொண்டிருந்தான்..
காவேரி பொங்கி எழுந்து ஓடி கட்டிக் கொண்டாள்..

" எங்கே சாமி போயிருந்தே!.. "

" நான் இங்கே தானே இருக்கேன்!.. " - என்கிற மாதிரி காவேரியின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டான் கருப்பன்..
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..