நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 29, 2016

ஸ்ரீ வல்லப விநாயகர் 2

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்போ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..

அதென்ன.. அரிய செய்திகள்!?.. வெள்ளைப் பிள்ளையார் கோயிலைப் பற்றி?..
மற்றவர் அறியாதபடிக்கு.. உனக்கு மட்டும் தான் தெரியுமா?..

இதை வாசிப்பவர்களுக்கு இப்படியெல்லாம் எண்ணங்கள் ஏற்படக்கூடும்...

தற்காலத்தில் - திருத்தலங்கள்,  அவற்றின் தல வரலாறு மற்றும் திருக்கோயில்கள் இவற்றைப் பற்றிய செய்திகளைகளை வெளியிட்டு ஆதாயம் அடைகின்ற செய்தி ஊடகங்கள் பற்பல..

ஒரு சில முக்கிய கட்டுரைகளைத் தவிர்த்து மற்றபடி - வெளியிடப்படும்
துணுக்குச் செய்திகளை வழங்குவோர் பெரும்பாலும் அவற்றின் வாசகர்களே..

சென்ற வாரம் இந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி -
வேறு விதமான ஒப்பனைகளுடன் இந்த வாரம் அந்தப் பத்திரிக்கையில் வெளியாவதைக் கண்டிருக்கின்றேன்..

ஆடி ஆமாவாசையன்று தான் திருக்கடவூரில் அபிராமபட்டர் அபிராமி அந்தாதி எழுதினார்!.. - என்று ஒரு ஊடகத்தில் செய்தி..

என்ன விந்தை!..

எழுதப் பெற்றதாம் - அபிராமி அந்தாதி?..

அடக் கொடுமையே!..

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் என்றால் யாருக்கும் புரியாது..

குரு பகவான் கோயில் என்று கேளுங்கள்!..

பளீர்!.. - என பதில் வரும்..

இன்னும் வைத்தீஸ்வரன் திருக்கோயிலை செவ்வாய் ஸ்தலம் என்றும்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலை சனீஸ்வரன் கோயில் என்றும் எழுதுகின்ற பத்திரிக்கைகளை என்ன செய்வது?..

இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல் திருக்கோயில் நிர்வாகத்தினரே - செவ்வாய் ஸ்தலம் என்றும் சனீஸ்வரன் கோயில் என்றும் எழுதி வைத்து விட்டனர்..

மக்களுக்கும் அவ்வாறாகப் படித்தால் தான் திருப்தியாக இருக்கின்றது..

ஆகையால் -
இப்படிப் புனைந்து எழுதுவோர்க்கு எப்படித் தெரியும் - மற்ற விஷயங்கள்!..

சமீபத்தில் நிகழ்ந்த மகாமகத்தின் போது - ஊடகங்களில் வெளியானவற்றுள்
எத்தனை எத்தனை பிழையான தகவல்கள்!..

இதையெல்லாம் யார் கவனிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணம்!..

ஆதாயத்துக்கு வெளியிடுகின்றார்களே அன்றி
ஆய்ந்து அறிந்து வெளியிடுவதில்லை!..

சரி.. உனக்கென்ன ஆதாயம்.. இதனால்!?..

ஆதாயம் என்றால் -

ஒரு பதிவினைத் திட்டமிடும் போதும்
அந்தப் பதிவினில் இருக்கும் போதும்
நெஞ்சில் இறையுணர்வு ததும்புகின்றதே...

அது போதாதா!..

மேலும், நான் உணர்ந்த விஷயம் - மற்றவர்களுக்கும் ஆகட்டுமே!..

அவ்வளவுதான்!..

நண்பர்கள் இனி வருங்காலத்தில் தஞ்சை மாநகருக்கு வருகின்றபோது அவசியம் வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலுக்கு வாருங்கள்...

இத்திருக்கோயிலின் நுண்ணதிர்வுகளை உள்வாங்கி
வாழுங்காலத்தில் வளமுடனும் நலமுடனும் வாழுங்கள்...

அந்த விருப்பம் ஒன்றிற்காகத் தான் இந்தத் தொடர் பதிவு!..


மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து
ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலுக்குள் நுழையும் போதே
சில படிகள் கீழே இறங்கியாக வேண்டும்..

சந்நிதியை நோக்கி இரண்டாவது வாயிலைக் கடந்தால் - கொடிமரம்..
மேலும் சில படிகள் கீழே இறங்கியாக வேண்டும்..


அர்த்த மண்டபத்தைக் கடந்து சந்நிதி வாசலில் நின்று கொண்டு கிழக்கே நோக்கினால் -

தரை மட்டத்துக்குக் கீழாக ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு அடி தாழ்வாக நின்று கொண்டிருப்பது புரியும்..

ஏன் இப்படி!?..

பல காலங்களுக்கு முன்னால் -
உதயாதி நாழிகையில் சூரிய பூஜை நிகழ்ந்தற்கான சான்று அது!..

அதிகாலையிலோ மாலைப் பொழுதிலோ சூரியனின் கதிர்கள் கருவறையில் மூலமூர்த்தியின் மீது படர்வது அபூர்வமான ஒன்று..

இன்றும் பல திருக்கோயில்களில் இப்படியான சூரிய பூஜை நிகழ்கின்றது..

தஞ்சை வடக்கு அலங்கம் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில்
தஞ்சை - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
ஆகிய திருக்கோயில்களில் இவ்வாறு சூரிய பூஜை நிகழ்கின்றது..

ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் மாலைப் பொழுதிலும் 
கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் காலைப் பொழுதிலும்
சூரிய பூஜை நிகழ்கின்றது..

இந்தக் கோயில்களின் கருவறை சற்றே தாழ்வாக விளங்குகின்றது..

இப்போது - வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் சூரிய பூஜை நிகழ்வதில்லை..

சூரிய பூஜை நிகழ்ந்த கோயில் என்பது கூட எவருக்கும் தெரியாது..

காரணம் -

விவரம் புரியாத மக்களால் சந்நிதி வீதி அப்படியும் இப்படியுமாக மாற்றப்பட்டு உயரமான கட்டுமானங்கள் எழும்பிவிட்டன...

கும்பாபிஷேக கல்வெட்டு 25.1.1948


கண்ணாடிச் சப்பரம்
காலப்போக்கில் விநாயகருக்கு சூரிய பூஜை தடைப்பட்டதால் -
எந்த மாதத்தில் எந்த நாட்களில் நிகழ்ந்தது என்பதே தெரியாமல் போயிற்று..

மாசி அல்லது பங்குனியில் காலை 6.30 மணியளவில் -
சந்நிதியில் சூரிய பூஜை நிகழ்ந்திருக்கக் கூடும்..

தளராத முயற்சி இருப்பின் - சூரியனின் இயக்கத்தைக் கணித்து 
அந்த நாட்களையும் கண்டறிந்து விடலாம்...

அந்த நாட்கள் - எப்போது யாரால் கண்டறியப்படும்!?.. 

இவ்வாறே, தஞ்சையை அடுத்த கண்டியூரில் - பங்குனி மாதத்தின்
மாலைப் பொழுதில் நிகழும் சூரிய பூஜைக்கு இடையூறாக ஆக்ரமிப்புகள்..

இனி அடுத்தடுத்த காலங்களில் எப்படியாகுமோ?.. யாரறியக் கூடும்!..


அடுத்ததாக - 

பெரிய பெரிய வைணவத் திருக்கோயில்களில் கூட காண இயலாத அற்புதம்..

என்னங்க அது?..

முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழையும் போது உட்புறச்சுவரில் இருபுறமும் புடைப்புச் சிற்பமாக கருடனின் திருவடிவம் பதிக்கப் பெற்றுள்ளது....

ஏறக்குறைய மூன்றடி உயரத்துடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தோற்றம்..

இதிலென்ன விசேஷம்!?..

வடபுறம் அமைந்துள்ள கருடன் சிறகை அடக்கி தரை இறங்குவதாகவும் 
தென்புறம் அமைந்துள்ள கருடன் சிறகை விரித்து மேலே ஏறுவதாகவும் 
அமைந்துள்ளதே சிறப்பு!..

தோளில் நாகம் புரள - 
தெற்கு நோக்கிய கருடனின் கரத்தில் மாவிலைகளுடன் கூடிய கலசம்..

அது அமுத கலசம்...


ஒருசமயம் - அமுத கலசத்துடன் தெற்கு நோக்கிச் சென்ற கருடனை -
தஞ்சபுரியின் தலைவாசலில் வீற்றிருந்த தலைமகன் - விநாயகப் பெருமான்
கீழே இறங்குமாறு ஆணையிட்டார்..

கணபதியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட கருடன் தரையிறங்கி பணிந்து நின்றான்..

ஒரு நாழிகைப் பொழுது இத்தலத்தில் இருந்து செல்க!..
- என்று உத்தரவிட்டார் விநாயகப்பெருமான்..

அவ்வாறே, கருடன் ஒரு நாழிகைப் பொழுது இத்தலத்தில் இருந்து சென்றான்..

இந்த நிகழ்வை நினைவு கூர்பவை தான் அந்தச் சிற்பங்கள்...

இவற்றின் மகத்துவம் அறியாமலேயே -
விளக்கேற்றி வைத்து மக்கள் வணங்கிச் செல்கின்றனர்..

அந்த சிற்பங்கள் இரண்டினையும் படம் பிடித்தேன்..

ஆனால், கணினியில் கையாளும் போது
ஒரு படம் - எப்படி தவறியதென்று தெரியவில்லை..

இந்தப் பதிவில் -
கருடனின் ஒரு படம் மட்டுமே தங்கள் பார்வைக்கு!..

விரிந்த சிறகுகளுடன் கருடன்
தஞ்சையம்பதியில் -
பராசர முனிவருக்கும் திருமங்கையாழ்வாருக்கும்
ஸ்ரீ ஹரிபரந்தாமன் கருட வாகனத்தில் திருக்காட்சி நல்கியதால்
தஞ்சபுரி எனும் இத்தலம் கருடபுரி எனவும் வழங்கப்படுகின்றது...

இதனாலேயே பின்னாளில் அமைந்த பெருங்கோட்டைக்கு கருடன் கோட்டை என்று பெயர் சூட்டப்பட்டது...

அதுமட்டுமல்லாமல் - தஞ்சை பெரிய கோட்டை சிறகை விரித்துப் பறக்கும் கருடன் வடிவில் அமைக்கப் பெற்றதாகவும் சொல் வழக்கு..

கருடனின் நிழலுக்கு நல்ல பாம்பு அஞ்சி நடுங்கும் என்பர் ஆன்றோர்..

அதனாலேயே -
இன்றளவும் தஞ்சை எல்லைக்குள் விஷம் தீண்டுவதில்லை!...

தவிரவும்,
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜன் திருவாயிலின் தென்புறமாக அமைந்துள்ள சந்நிதியில் மேற்கு நோக்கியவாறு பிரம்மாண்டமான நாகராஜன் திருமேனி விளங்குவதும் கருத்தில் கொள்ளத்தக்கது..

பின்னாளில், வடவாற்றங்கரையில் -
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் துறவறம் ஏற்றுத் தவம் புரிந்த
புனித இடத்தைத் தேடி அயர்ந்தபோது -

அங்கே ஐந்தலை நாகம் ஒன்று தோன்றி மண்டலமிட்டு
ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தை அடையாளம் காட்டியதாக -
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் வரலாற்றில் கூறப்படுகின்றது...

இன்றும் வடவாற்றங்கரை பிருந்தாவனத்தில் ஐந்தலை அரவு அடையாளம் காட்டிய இடத்தில் விளக்கேற்றி வைத்து அன்பர்கள் தியானம் செய்கின்றனர்..

இப்படி ஐந்தலை அரவு அடங்கிக் கிடப்பதற்குக் காரணம் -
அன்றைக்கு ஐங்கரன் திருவருள் கூட்டி - கருடனை தரையிறங்கச் செய்ததே!..

ஸ்ரீ பாடகச்சேரி மகான்
ஐந்தலை அரவு - ஐம்புலன்கள்..
கருடன் - ஆத்மா..
அமுதம் - ஞானம்..

அவற்றை ஒருங்கு கூட்டி உயர் நிலைக்கு ஏற்றியருள்பவன்
மூலாதார மூர்த்தியாகிய விநாயகப் பெருமான்!..

இதையெல்லாம் 
உள்ளிருந்து உணர்த்தியருளும் ஞானகுரு
பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள்!.. 

கற்றார்க்கும் அற்றார்க்கும்
நன்மையை உணரும் வல்லமையை வழங்குபவர்
ஸ்ரீ வல்லபை சமேத வெள்ளை விநாயகர்..

ஸ்ரீ விநாயகப் பெருமானின் நல்லருள் 
எல்லாருக்கும் ஆவதாக!..

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே!..

ஓம் கம் கணபதயே நம.. 
***

ஞாயிறு, நவம்பர் 27, 2016

ஸ்ரீ வல்லப விநாயகர் 1

எத்தனை எத்தனையோ சிறப்புகளைத் தன்னிடத்தே கொண்டிலங்கும்
தஞ்சை மாநகரில் பற்பல இடங்கள் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றன..

அவற்றுள் ஒன்றுதான் -

வெள்ளப் பிள்ளையார் கோயில்!.. - என்று வழங்கப்படும்

ஸ்ரீ வல்லபை விநாயகர் திருக்கோயில்..

ஸ்ரீ வெள்ளப் பிள்ளையார்
தஞ்சை மாநகரில் பெரிய கோட்டை அகழியின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது - இந்தத் திருக்கோயில்..

திருக்கோயில் அமைந்திருக்கும் பகுதி கீழவாசல் எனப்படும்..

மராட்டிய மன்னர் சரபோஜி பெயரில் பழைமையான பேரங்காடி கீழவாசலில் தான் உள்ளது..

அந்தக் காலத்தில் பல நூறு மாட்டு வண்டிகள் புழங்கிக் கொண்டிருந்த - தொன்மையான சந்தைப் பகுதியாகும் - கீழவாசல்..

சந்தைப் பகுதியில் -
உள்ளூருக்குள் சுமை ஏற்றிச் செல்வதற்கும் வெளியூர்களுக்கு சுமை ஏற்றிச் செல்வதற்குமாக ஏராளமான இரட்டை மாட்டு வண்டிகள்..

அவை தவிர்த்து -
நகருக்குள் அங்குமிங்கும் பயணிக்க சொகுசான ஒற்றை மாட்டு வண்டிகள்..
மேலும் - குறிப்பிடத்தக்க அளவில் குதிரை வண்டிகள் - என

நூற்றுக்கணக்கில் இருந்ததால், அவற்றுக்கென-
வண்டிப்பேட்டை என்று அகழிக் கரையில் தனித்த பகுதியே இருந்தது..

அங்கே - புல், வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை கடைகளுடன் மாடுகளை ஓய்வாகக் கட்டி வைக்க நிழற்கொட்டகைகளும் அமைந்திருந்தன..

சுமை ஏற்றும் வண்டிகளில் எதிர்பாராமல் ஏற்படும் பழுதுகளை சரி செய்திட தச்சர்கள்.. கொல்லர்கள்..

மாடுகளைக் கவனிக்க வைத்தியர்கள்..

மாடுகளுக்கு லாடம் அடித்து சுளுக்கு எடுப்பவர்களும் கூட அங்கிருந்தனர்..

அப்போதெல்லாம் கோட்டையின் அகழி நீர் சுத்தமாக இருந்தது..

அதில் சந்தைக்கு வரும் வெளியூர் மக்கள் குளித்துக் களைப்பாறினர்..

மறுபுறத்தில் ஓரு ஓரமாக மாடுகளையும் குளிப்பாட்டிக் களைப்பு நீக்கிக் கரையேற்றினர்..

மாடுகள் குடிப்பதற்கென நல்ல தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பது சிறப்பம்சம்..

ரோஜா நிறத்தில் மேலே சொல்லப்பட்டவை எவையும் இப்போது கிடையாது..

இன்றைக்கு கீழவாசலில் மாட்டு வண்டிகளைக் காண்பதே அரிது..

ஆயினும், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் அருகில் பழைமையான
மாட்டுக் கொட்டகை மட்டும் காலத்தின் மிச்சமாக இருக்கின்றது..

மிருதுவான மெத்தைகளும் விரிப்புகளும் திரைச் சீலைகளும் வண்ண ஓவியங்களும் - என,  அழகாக விளங்கும் பயணிகளுக்கான வண்டிகள்..

வண்டி ஓட்டத்திற்கேற்ப குலுங்கும் காளைகளின் கழுத்து மணிகள்..
சாலையில் மக்கள் ஓரமாக விலகுவதற்காக - ஜங்..ஜங்.. - என,
ஒலியெழுப்பும் சங்கிலி மணிகள்..

அவற்றையெல்லாம் இந்தத் தலைமுறையினர் முற்றாகவே இழந்து விட்டனர்..

ஆனால்,
அனுபவப்பட்டோர் காதுகளில் ஜல்..ஜல்.. எனும் சலங்கை ஒலி
இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது..

இக்காலத்தில் மாட்டு வண்டிகள் இல்லாமற்போனாலும்
கீழவாசல் சந்தைப் பகுதியானது -

பெரிய மளிகைக் கிடங்குகள், சில்லறைக் கடைகள், எண்ணெய் மண்டிகள், பாத்திரக் கடைகள், இரும்புக் கடைகள், மரப்பட்டறைகள், கல் பட்டறைகள், பித்தளை மற்றும் எவர்சில்வர் பட்டறைகள்

- என, பரபரப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது..

இப்படிப்பட்ட கீழவாசல் பகுதியின் சிறப்புகளில் தலையானது

ஸ்ரீ வெள்ளப் பிள்ளையார் திருக்கோயில்..


இந்தப் பிள்ளையார் அகழியின் - நீரில் - வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதால்,
வெள்ளப் பிள்ளையார்!.. என்று ஒருசாரர் போற்றுகின்றனர்..

இன்னொரு சாரார் - ஸ்ரீ வல்லபை எனும் தேவி விநாயகப்பெருமானுடன் இங்கே அரூபமாக உறைகின்றாள்.. அதனால் தான் வல்லப விநாயகர்!.. - என்று புகழ்கின்றனர்..

தவிரவும், ஸ்வேத விநாயகர் என்னும் திருப்பெயரே - வெள்ளைப் பிள்ளையார் என்றானது என்றும் குறிக்கின்றனர்..

ஸ்வேதம் எனில் வெள்ளை..

எப்படியாயினும் சிறப்பெல்லாம் விநாயகருக்குத் தான்!..

இந்தப் பகுதி வணிகப்பெருமக்களுக்கு கண்கண்ட மூர்த்தி - இவர்தான்..

ஏறத்தாழ அரை கி.மீ தொலைவுக்கு நீண்டிருக்கும் கீழவாசல் சந்தைப் பகுதியின் வடபுறமாக அமைந்துள்ளது கம்பீரமான திருக்கோயில்..

ஊர் முழுக்க - நாடு முழுக்க விநாயகப் பெருமானுக்கு கோயில்கள் விளங்கினாலும் கொடி மரத்துடன் கூடியவை ஒருசில திருக்கோயில்கள் தான்..

அந்த வகையில்,
கொடி மரத்துடன் கூடிய சிறப்பினை உடையது - இந்த திருக்கோயில்..

மூன்று நிலை ராஜகோபுரம்..

ராஜ கோபுரத்தைக் கடந்ததும் தரையில் அழகான பத்ம தளம்..

வடக்குப் புறமாக - தெற்கு நோக்கியவாறு
நடராஜப் பெருமானின் பிரம்மாண்ட சுதை சிற்பம்..

முன்மண்டபம்.. அர்த்த மண்டபம் - என, நடந்து சந்நிதியை அடைகின்றோம்..

கருவறையில் பஞ்ச லோக விமானத்தினுள் ஸ்ரீ வல்லப விநாயகர்..

இங்குதான் ஸ்ரீ வல்லபை தேவி அரூபமாக உறைகின்றனள்..

ஸ்ரீ வல்லபை தேவியுடன் விநாயகர்
எனினும், கருவறையின் இடப்புறம் ஸ்ரீ விநாயகப் பெருமானும் ஸ்ரீ வல்லபை தேவியும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி நல்குகின்றனர்..

சங்கடஹரசதுர்த்தியின் போது எழுந்தருளும் திருக்கோலம் இதுவே...

ஆவணியில் மகா சதுர்த்தி வைபவம் பத்து நாள் விழாவாக இத்திருக்கோயிலில் வெகு சிறப்பாக நிகழ்கின்றது..

சதுர்த்தியின் மறுநாள் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீவல்லபை தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...

இத்திருக்கோயில் நாயக்கர் காலத்தியது என்று அறியப்படுகின்றது..

மிக அழகாக எழுப்பட்டிருக்கும் இந்தத் திருக்கோயிலுக்கு -
பைரவ உபாசகரான பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள்
முன்னின்று திருப்பணி செய்திருக்கின்றார்கள்..

25.1.1948 ல் திருக்குடமுழுக்கு நிகழ்ந்திருக்கின்றது..

திருக்கோயிலுக்கு திருப்பணி செய்வித்த
பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகளின் சுதை சிற்பம் திருக்கோயிலில் விளங்குகின்றது..

தவிரவும் -
விநாயகப் பெருமானுக்கு வலப்புறம் அருட்ஜோதி வள்ளலார் ஸ்வாமிகளும்
இடப்புறம் பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகளும்
விளங்குவது போல - மூன்றாவது நிலையின் மேல் சிற்பங்கள் உள்ளன..

நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம் 
நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம்  
கடந்த 2014 செப்டம்பர் மாதம் 15 அன்று
இத்திருக்கோயிலுக்கு - திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது..

இத்திருக்கோயிலைப் பற்றி -
திருக்குடமுழுக்கின் போது எடுக்கப்பட்ட படங்களுடன்
அன்புக்குரிய முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் அவர்கள் விக்கிபீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்..

அதிலிருந்து சில படங்கள் பதிவினை அலங்கரிக்கின்றன..

படங்களை வழங்கிய
முனைவர் திரு பா. ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

இத்திருக்கோயிலைப் பற்றி விக்கிபீடியாவின் பக்கத்தில் வேறு பல செய்தி இணைப்புகளும் காணப்படுகின்றன..

ஆனால், அவற்றில் முக்கியமான சில செய்திகள் காணப்படவில்லை...

அந்த அரிய செய்திகளையும்
மேலும் சில படங்களையும் 
அடுத்த பதிவினில் வழங்குகின்றேன்.. 
* * *

நவம்பர் இரண்டாம் தேதிக்குப் பின் -
தஞ்சையில் இருந்தபடி புதிய பதிவுகளை வழங்க இயலாமற்போனது..

குவைத் திரும்பிய பின்னர் இரண்டு பதிவுகளை வழங்கிய நிலையில்
கடந்த நான்கு நாட்களாக Blogger அடைத்துக் கொண்டது..

அடைத்துக் கிடந்த Blogger நேற்று தாழ் திறந்து கொண்டாலும் -
இணைய வேகம் ஒத்துழைக்கவில்லை...

இனிமேல் வியாழக்கிழமை வரைக்கும் இணைய வேகம் நன்றாக இருக்கும்..

இனியொரு தடை வாராதபடிக்கு
எல்லாம் வல்ல எம்பெருமானைப் பணிந்து
என் பணியினைத் தொடருகின்றேன்..

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்..
- பழந்தமிழ்ப்பாடல்-

வாழ்க நலம்..
*** 

திங்கள், நவம்பர் 21, 2016

தஞ்சாவூர் கதம்பம்

எப்படியிருக்கின்றீர்கள் ஜி!.. என்னவாயிற்று?.. பதிவுகளைக் காணோம்.. 
மற்ற பதிவுகளிலும் தங்களுடைய வருகையைக் காணோம்.. குவைத்தில் தான் இருக்கின்றீர்களா அல்லது ஊரில் இருக்கின்றீர்களா?..

புன்னை நல்லூர் மாரியம்மன் சந்நிதியை வலம் வந்து கொண்டிருந்தபோது -

தேவகோட்டையாரின் குரல் - அபுதாபியிலிருந்து!..

தவிரவும் மின்னஞ்சலிலும் இதே கேள்வி!.. 


பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று எழுந்த ஆவல்!..

அவசரம்.. சிறு விடுப்பு வேண்டும்!.. - எனக் கேட்டதும் கிடைத்தது..

நவம்பர் மூன்றாம் தேதி விடியற்காலை..

ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 இழுத்துப் பூட்டப்பட்டது..
(நான் தங்கியிருக்கும் அறை தானுங்க!..)

சற்றைக்கெல்லாம் இழுவைப் பெட்டியுடன் கீழே வந்தேன்..

டாக்ஸி காத்திருந்தது...

இரண்டு மாதங்களாகத்தான் -
வரலாறு காணாத புதுமையாக எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து
விமான நிலையத்திற்கு விரைவுப் பேருந்தினை இயக்குகின்றார்கள்..

அந்தப் பேருந்தில் செல்வதென்றால் அடுத்திருக்கும் சாலைக்கு மாறி
அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவிற்கு நடக்க வேண்டும்..

அதெல்லாம் நடக்கின்ற (!) காரியமா!?..

அடுத்த இருபத்தைந்தாவது நிமிடம் - குவைத் விமான நிலையத்தில்!..

ETIHAD  விமான நிறுவனம் (அபுதாபி) வரவேற்பு நல்கியது..

பயணம் குறிக்கப்பட்ட நேரம் காலை 10.10..

மேலெழுந்து வானில் பரவிய வெள்ளிப் பறவை -
அபுதாபியில் தரையிறங்கியபோது பகல் 12.55..

அபுதாபி 
அங்கே இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின் -
சென்னையை நோக்கிப் பறந்தது எண்ணப் பறவை..

இரவு 7.40..

ஐப்பசி மாத இரவிலும் மழை முகம் காணாமல்
வியர்த்துக் கொண்டிருந்தது - சென்னை..

அனைத்து நடைமுறைகளையும் கடந்து வெளியே வந்தபோது
காத்திருந்த அன்பின் முகங்களைக் கண்டு ஆனந்தம்..

அடுத்த சிறிது நேரத்தில் - தாம்பரம்..

இரவு உணவு அங்கேதான்..

உழவனுக்கு மரியாதை இருக்கின்றதோ இல்லையோ..

உழவன் விரைவு ரயிலுக்கு இருந்தது..

நள்ளிரவு 12.05.. பெருங்கூச்சலுடன் ஓடி வந்து நின்றது..

முண்டியடித்துக் கொண்ட மக்களின் ஊடாகப் புகுந்து -
இருக்கையைக் கண்டு சற்றைக்கெல்லாம் கண்ணுறக்கம்..

விழிப்பு வந்தபோது பாபநாசம் கடந்திருந்தது..

பனிவாடையுடன் பொழுது விடிந்து கொண்டிருந்தது...

கார்மேகங்களுக்காகக் காத்திருந்தன கழனிகள்...

இயற்கை இன்னும் கண்கொண்டு நோக்கவில்லை..


ஆயினும்,

ஆங்காங்கே விழுகின்ற சிறு தூறல்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் உளறிக் கொண்டிருந்தன..

இல்லம் திரும்பியதும் - குளித்து முடித்துவிட்டு காலை உணவுக்குப் பின்

மடிகணினியைத் தேடினால் -

அப்பா.. அது கெட்டுப் போய்விட்டது!.. - என்றான் மகன்...

முன்பே சொல்லியிருக்கலாமே.. - என்றேன்..

களைப்பு கண்களைத் தழுவிட சற்றே கண்ணுறக்கம்...

அருகிலுள்ள Browsing Center கள் சொல்லும் தரத்தில் இல்லை..

சரி.. நமது வலைத் தள நண்பர்களைக் கொஞ்ச நாட்களுக்குத் தொல்லைப் படுத்தாமல் இருப்போமே!.. - என்று எண்ணிக் கொண்டேன்..

அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன...

தஞ்சை சட்டமன்றத் தேர்தல்..   எனவே மாநகருக்குள் ஓயாத இரைச்சல்..

கந்த சஷ்டியன்று தஞ்சை பூக்காரத் தெரு ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் சூர சம்ஹாரத் திருவிழா..

கந்த சஷ்டி திருவிழா - தஞ்சை
ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க -
ஆணவ மாயா கன்மம் எனும் மும்மல வடிவான அசுரன் வதம் செய்யப்பட்டான்..

அன்னதானம், சித்ரான்னங்கள், பசும்பால் - என,
அன்பர்களுக்கு வழங்கி தனித்ததோர் அன்புடன் மக்கள் கொண்டாடினர்..

மன்னார்குடி தெப்பக்குளம்
தொடர்ந்த நாட்களில் -
மன்னார்குடிக்குச் சென்று விட்டு அங்கிருந்து
புள்ளிருக்கு வேளூர் எனும் ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயிலில் தரிசனம்..

மயிலாடுதுறையைக் கடக்கும்போது மனம் வலித்தது..

துலா உற்சவங்கள் தொடங்கியிருந்தன..

ஆனால் - காவிரியில் புல்லும் புதரும் மண்டிக் கிடந்தன...நவம்பர் 9.. ஐப்பசி சதய நட்சத்திரம்..

மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா..

அந்த விழாவில் கூட ஆரம்பர ஆரவார கூச்சல்கள் ஏதும் இல்லை..

ஆயினும்,
திருக்கோயிலினுள் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்..

பெருவுடையாருக்குப் பேரபிஷேகம் செய்விக்கப்பட்டு
மகாதீப ஆராதனை சமர்ப்பிப்பதற்கே மதியம் ஒருமணிக்கு மேலாகி விட்டது..

அதன் பின் பெரியநாயகி அம்பிகைக்கு பேரபிஷேகம்..

திருக்கோயிலை வலம் வந்து வணங்கினேன்..

மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து சதய விழாவில் தரிசனம் செய்யும் பேறு..

மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..

திருக்கோயிலுக்கு வெளியேயிருக்கும் - 
ராஜராஜ சோழன் சிலையைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு..

அதனால் வழக்கத்திற்கு மாறாக - சாதீய அமைப்புக்கள் அடக்கி வாசித்தன..

அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன..

நவம்பர் 11..

சிக்கல் அகற்றும் சிக்கல் மற்றும் கேடு நீக்கும் கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களில் தரிசனம்..

நவம்பர் 12..

துலா உற்சவத்தின் ஏழாம் நாளன்று மயிலாடுதுறையில் திருக்கல்யாண வைபவம்..

அன்றைய தினம் திருவையாற்றில் துலா ஸ்நானம்..

காவிரி - திருவையாறு
அந்தப் பக்கமாக புறவழிச் சாலைப் பணிகள் நடைபெறுவதால் காவிரி சிறைப்பட்டிருந்தாள்..

அனைவரது நலனுக்காகவும் வேண்டிக் கொண்டு துலா நீராடி
அருள் தரும் அறம் வளர்த்த நாயகி உடனாகிய அருள்திரு ஐயாறப்பர் தரிசனம்...

நவம்பர் 14.. திங்கட்கிழமை.. ஐப்பசி மாதத்தின் நிறை நிலா நாள்..

ஐப்பசி மாதத்தின் நிறைநிலா
காலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு..

மாலை மயங்கியபின் -
ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயில் பௌர்ணமி தரிசனம் செய்துவிட்டு
தஞ்சை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக தரிசனம்..

இரவு 10.30 மணியளவில் அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. 

அதன்பின் - திருக்கோயில் பணியாளர்களுடன் வெண்ணாற்றுக்குச் சென்று அபிஷேக அன்னத்தைக் கரைத்துவிட்டு கரையேறினேன்..

நவம்பர் 15.. செவ்வாய்க்கிழமை..

தஞ்சை நிசும்பசூதனி திருக்கோயிலில் ஸ்ரீ வடபத்ரகாளி தரிசனம்..

ஸ்ரீ வடபத்ரகாளி திருக்கோயில் - தஞ்சை
மாலைப் பொழுதில் முனைவர் திரு B. ஜம்புலிங்கம் அவர்களுடன் சந்திப்பு..


இனிய பொழுதில் அன்பான உபசரிப்பு.. மனதில் என்றும் நிலைத்திருக்கும்..

நவம்பர் 16.. புதன் கிழமை.. மதியம் 12.30..

சிறப்புமிகு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் மற்றும்
முனைவர் பாலமகி ஆகியோருடன் சந்திப்பு..

எதிர்பாராமல் என்னைக் கண்டதும் அவர்களுக்கெல்லாம் ஆனந்த மகிழ்ச்சி..

வழக்கம் போல நான் தான் பேசிக் கொண்டிருந்தேன்...

பிரிவதற்கு மனமில்லைதான்..

ஆனாலும், அவர்கள் தங்களது பணியினைத் தொடரவேண்டுமே!..

அலைபாயும் மனதை அங்கேயே விட்டு விட்டுப் பிரிந்தேன்...

நவம்பர் 14... வியாழக்கிழமை

வேலைத் தளத்திற்குத் திரும்ப வேண்டிய நாள் நெருங்கி விட்டது

வழித்துணை வந்திடும் திருவுடைக் கோடியம்மனைத் தரிசித்து விட்டு அரியலூர் ரயில் நிலையத்தை நோக்கிப் பயணம்..

வைகையைப் பிடிக்கவேண்டுமே!...

காலை 10.10.. பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்து நின்றது..

முன்பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கைகள்.. ஜன்னலின் அருகில்!..

தாயையும் தாய் மண்ணையும் வணங்கியவாறு பயணம் தொடர்ந்தது..

பகல் 1.55 மணிக்குத் தாம்பரம்... மதிய உணவு.. அதற்குப்பின் சற்று ஓய்வு..

அங்கிருந்து திரிசூலம்.. சென்னை விமான நிலையம்..

அபுதாபி வழியாக குவைத்திற்கு இரவு 9.15 க்கு விமானம்

விமான நிலையத்தில் மாலை 6.00 மணிக்கு Check In..


கலைப் பொருட்கள் - சென்னை விமான நிலையம்
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் குவைத் வான்வெளியில் நுழைந்து ஓடு தளத்தில் இறங்கி ஓடியது - வெள்ளிப் பறவை ...

மீண்டும் ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 திறக்கப்பட்டது..

குறுகிய நாட்கள்.. எனினும் இனிய பயணம்..

வேறு சில செயல் திட்டங்களுடன் தான் தஞ்சைக்கு வந்தேன்..

ஆனால் - நினைப்பவை எல்லாமும் நடந்து விடுவதில்லையே!..

அன்பு தான் இன்ப ஊற்று!.. என்றர்கள்..

எப்படியிருக்கின்றீர்கள்.. நலமா!.. - என்ற வார்த்தைகளே உயிருக்கு ஊட்டம்..

திருமிகு தேவகோட்டையார், 
திருமிகு முனைவர் B. ஜம்புலிங்கம், 
திருமிகு கரந்தை ஜெயக்குமார், 
திருமிகு முனைவர் பாலமகி
ஆகியோரின் அன்பில்
மனமெல்லாம் நிறைந்திருக்கின்றது..

திருமிகு GMB ஐயா அவர்களும் 
திருமிகு கோமதி அரசு அவர்களும் 
புதிய பதிவுகளைக் காணாததால்
அன்புடன் விசாரித்திருந்தனர்..

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.. 
* * *

தஞ்சை பூக்காரத்தெரு சுப்ரமண்ய ஸ்வாமிக்கு
சூர சம்ஹார மகா தீபஆராதனை..


Fb வழியாகக் கிடைத்த நாட்டு நடப்பு.. 


இந்த அளவில்
குறையொன்றும் இல்லை..
கூடும் அன்பினில் கூடுவதே அன்றி 
குறைவதொன்றும் இல்லை..

வாழ்க நலம்.. 
* * * 

சனி, நவம்பர் 19, 2016

இந்திரா பிரியதர்ஷினி

சுதந்திர இந்தியாவின் இணையில்லா பிரதமர்
திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று..

19 நவம்பர் 1917 - 31 அக்டோபர் 1984
மகாத்மா அவர்களுடன் இந்திராநேருஜி அவர்களின் செல்வ மகள் என்பதையும் மீறி மக்களின் அன்பினைப் பெற்றிருந்தவர் - இந்திரா..
ஏறத்தாழ இருபதாண்டுகள் இந்தியாவை தனது ஆளுமையில் வைத்திருந்த இரும்புப் பெண்மணி அவர்..
அரசியல் களத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல்
அண்டை நாடுகள் சிலவற்றுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்..


இந்திராவே இந்தியா..
இந்தியாவே இந்திரா!..

- என்ற கோஷம் அப்போது பிரசித்தம்..

மாறுபட்ட கருத்துக்கள் பற்பல இருப்பினும் போற்றுதலுக்குரியவர் அவர்..

இது இந்திராகாந்தி அவர்களின் நூற்றாண்டு..

என்றென்றும் அவர் புகழ் வாழ்க!.. 
* * *

புதன், நவம்பர் 02, 2016

என் கண்

அழகு.. பேரழகு!..

அதனால்தான்,

அனல் பறந்த போர்முகத்தில் -

அருள் இளங்குமரனைக் கண்டு
ஐயன் அருள்வேல் முருகனைக் கண்டு

அசுரன் சூரபத்மனும் திகைத்து நின்றான்!..அசுரனும் வியந்து நின்ற அந்தப் பேரழகை எல்லாம்
நாமும் கண்டு மகிழவேண்டும் தான்!..

ஆனால் - அது எங்ஙனம் சாத்தியமாகும்!..

அதற்காகத்தான்
தெய்வச் செயல்களாக பல நிகழ்ந்திருக்கின்றன..

அழகெல்லாம் முருகனே!..

அழகென்ற சொல்லுக்கு முருகா!..

- என்றெல்லாம் உருகினார்கள்..

உள்ளம் உருகுதையா!..
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதையா!..

- என்று, பாலமுருகனை வாரி அணைத்திட இரு கைகளையும் நீட்டி நின்றார்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாக - தம்மைப் பெண்ணாக பாவித்துக் கொண்டு,

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்..
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்..
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!..

- என்று, நெக்குருகி நின்றார்கள்...

இன்னும் ஒருபடி மேலே போய் -

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி..
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி..
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!..

- என்று உரங்கொண்டு நின்றார்கள்..


என் மனம் அவனுடைய மயிலாகி விட்டது..
அந்த மயிலும் அவனுக்காகவே காத்துக் கிடக்கின்றது..

அதுவும் எங்கே!..

குகனுடைய ஆலயத்தில்!..

அது எங்கே இருக்கின்றது?..

அது எங்கேயும் இல்லை..
என் மாந்தளிர் மேனியே கோயிலாகி விட்டது..

ஓ!..

நானே.. நானே!.. அதனால் தானே என்குரலும் கோயில் மணியோசையாகி விட்டது!..

ஓஹோ!..

அப்படியிருக்க.. அந்த அழகு வேலன் எங்கே சென்றான்?..

வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி!..
அந்தி மாலைதனில் அவனை வரச் சொல்லடி!..
மலைக்கோயில் குமரேசன் அறியாததா?..
என் மனம் என்ன கதைச் சொல்லத் தெரியாதா!..

அடாடா!...

அங்கே, மாமனுக்காக யமுனைக் கரை என்றால் -

இங்கே மருகனுக்காக -
காடு மலை, ஆறு குளம், வயல் வெளி, கடல் கரை, மனம் மெய் - எல்லாமும்!..

எண்கண் முருகன்
காவிரியின் கருணையால் தழைத்திருக்கும்
சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் ஒன்று -

எண்கண்!..

கண்ணுற்றவர்கள் கண்டு கடைத்தேறுதற்கென எழுந்துள்ள திருத்தலம்!..

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகிய அம்பிகை -
தன் அன்பு மகனைத் தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டாள்..

வெளியே சென்றால் பிறர் கண்பட்டு விடும்!.. - என்று!..

உண்மைதான்.. பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க.. என்றார்களே!..

அந்த அழகை எண்கண் முருகனிடம் காணலாம்..

தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு சாலை வழியே செல்கையில் நீடாமங்கலம் கொரடாச்சேரியை அடுத்துள்ளது முகுந்தனூர்.

இந்த ஊரில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து வடக்காக ஒரு கி.மீ தொலைவில் எண்கண்..

இரயில் வழி என்றால் கொரடாச்சேரியில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்துகளில் செல்லலாம்..

திருவாரூர் - தஞ்சை பேருந்துகள் முகுந்தனூரில் நின்று செல்கின்றன..

பசுமையான கிராமத்தில் அமைந்துள்ளது எண்கண் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்..

உண்மையில் எண்கண் சிவாலயமாகும்..

வயலூர், சிக்கல், கீழ்வேளூர், வைத்தீஸ்வரன்கோயில் - திருத்தலங்களைப் போல இங்கே முருகப்பெருமான் சிறப்புற்று விளங்குகின்றனன்..

முருகன் சிவபெருமானுக்குக் குருவாக அமர்ந்த தலம் - சுவாமிமலை..
முருகன் நான்முகனுக்குக் குருவாக அமர்ந்த தலம் - எண்கண்..

அன்றைக்குக் கயிலைமாமலையில் -
திருமுருகனைத் திரும்பிப் பார்க்காமல் சென்ற நான்முகன் -
தன் பிழைதனை உணர்ந்து மனம் வருந்தினான்..

தன் குற்றம் பொறுத்தருளுமாறு ஈசனை வழிபட்டு நின்றான்..

எம்பெருமானும் நான்முகனின் பிழை பொறுத்தருளி -
பிரணவ உபதேசம் செய்தருளுமாறு செல்வக்குமரனைப் பணித்தருளினார்..

அந்த அளவில் - திருமுருகன் நான்முகனுக்குத் திருக்காட்சி நல்கினான்..

நான்முகனும் எண்கண்களால் எம்பிரானைத் தரிசித்து வழிபட்டு உய்ந்தனன்..

இத்திருத்தலத்தில் - முருகனிடம் நான்முகன் பிரணவப் பொருளின் உபதேசம் பெற்றுக் கொண்டதாகத் திருக்குறிப்பு..

சிக்கல் திருக்கோயிலில் சிங்கார வேலனின் சந்நிதி தெற்கு முகம்..
திருச்செந்தூரில் ஜயந்தி நாதனின் திருச்சந்நிதி தெற்கு முகம்..
சுவாமி மலையில் சிவகுருநாதனின் சந்நிதி தெற்கு முகம்..

அதுபோல, எண்கண்ணிலும் முருகனின் திருச்சந்நிதி தெற்கு முகம்..

பற்பல சிறப்புகளைக் கொண்ட திருத்தலம் என்கண்..

இத்திருத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களிடம்
திருச்செந்தூரில் போர் முடித்த வெற்றிச் செய்தியை - 
எம்பிரான் உரைத்தருளியதாக ஒரு திருக்குறிப்பும் உளது..

எட்டிக்குடி, பரவைச்சேரி (பொறவச்சேரி), எண்கண் - 
எனும் மூன்று தலங்களிலும் உள்ள முருகன் திருமேனிகள் 
ஒரே சிற்பியால் செய்யப் பெற்றவை என்று சொல்லப்படுகின்றது..

எட்டிக்குடியில் முழுத்திறனுடன் சிலை வடித்த சிற்பி தனது வலக்கை கட்டை விரலை இழந்த நிலையில் பொறவச்சேரியில் சிலை வடித்தான்.. ..

அந்தச் சிற்பி பார்வை இழந்த நிலையில் சிலை வடித்த தலம் - எண்கண்..

முதல் சிலை செய்த பின் - இதுபோல வேறொன்று செய்யக்கூடாதென
மன்னன் சிற்பியின் கட்டை விரலை நறுக்கினான்..

விரலை இழந்த சிற்பி  இரண்டாவது சிலையையும் வடித்தான்..

கோபமுற்ற மன்னன் விழியிரண்டையும் பறித்தான்..
இறையருள் துணை கொண்டு சிற்பி மூன்றாவது சிலையையும் செய்து முடித்தான்..

அத்துடன் மீண்டும் பார்வை நலம் பெற்றான் - என்றொரு கதை உண்டு..

அதற்கேற்றாற்போல - 
இத்தலத்தில் குமர தீர்த்தத்தில் நீராடி இறை தரிசனம் செய்து வழிபடுவோர் தம் பார்வைக் குறைபாடுகள் நீங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

எண்கண்


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - குமார தீர்த்தம்.

விநாயகப் பெருமான் நர்த்தனத் திருக்கோலங்கொண்டு விளங்குகின்றார்..

தெற்கு முகமாகத் திகழ்கின்றது குமரகோட்டம்

வள்ளி தெய்வயானையுடன் ஆறு திருமுகங்களும் 
பன்னிரு திருக்கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் திருமுருகன் திருக்காட்சி நல்குகின்றனன்..

பாசம், சக்கரம், வாள், அம்பு, வஜ்ராயுதம் இவற்றுடன்
சூலம், வில், கேடயம், கொடி, கதை ஆகியன திருக்கரங்களில் திகழ்கின்றன..

வலது திருக்கரத்தால் அபயம் அருளும் முருகனின் 
இடது திருக்கரத்தில் தாமரை திகழ்கின்றது..

எண்கண்ணில் அருணகிரிநாதர் வழிபட்டிருக்கின்றார்..


வருடத்தின் எல்லா கார்த்திகை நாட்களும் சிறப்பாக நிகழ்கின்றன.. 

வைகாசி விசாகம் கந்த சஷ்டி ஆகியன திருவிழாக்கோலம்..

தைப் பூசத்தன்று ஆயிரமாக பாற்குடங்கள்.. காவடிகள்..

தஞ்சை வளநாட்டின் தலையாய திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று..

பல ஆண்டுகளுக்கு முன் இத்திருத்தலத்தை தரிசித்துள்ளேன்..
அப்போதெல்லாம் படங்களெடுக்கும் வசதியும் வாய்ப்பும் இல்லை..

இந்தப் பதிவின் படங்கள் இணையத்தில் பெற்றவை..

எண்கண் எம்பிரான் மீண்டும் தரிசனம் தந்தருளல் வேண்டும்..

கந்த சஷ்டி விரத நாட்களில்
எண்கண் திருத்தலத்தைச் சிந்தித்திருந்ததில் மகிழ்ச்சி.. 


சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு - திரடோளுந்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச - மயிலேறித்

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து - க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று - மொழிவாயே!..

அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள் - பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் - மருகோனே..

இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த - குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த - பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
* * *