நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 21, 2016

தஞ்சாவூர் கதம்பம்

எப்படியிருக்கின்றீர்கள் ஜி!.. என்னவாயிற்று?.. பதிவுகளைக் காணோம்.. 
மற்ற பதிவுகளிலும் தங்களுடைய வருகையைக் காணோம்.. குவைத்தில் தான் இருக்கின்றீர்களா அல்லது ஊரில் இருக்கின்றீர்களா?..

புன்னை நல்லூர் மாரியம்மன் சந்நிதியை வலம் வந்து கொண்டிருந்தபோது -

தேவகோட்டையாரின் குரல் - அபுதாபியிலிருந்து!..

தவிரவும் மின்னஞ்சலிலும் இதே கேள்வி!.. 


பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்று எழுந்த ஆவல்!..

அவசரம்.. சிறு விடுப்பு வேண்டும்!.. - எனக் கேட்டதும் கிடைத்தது..

நவம்பர் மூன்றாம் தேதி விடியற்காலை..

ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 இழுத்துப் பூட்டப்பட்டது..
(நான் தங்கியிருக்கும் அறை தானுங்க!..)

சற்றைக்கெல்லாம் இழுவைப் பெட்டியுடன் கீழே வந்தேன்..

டாக்ஸி காத்திருந்தது...

இரண்டு மாதங்களாகத்தான் -
வரலாறு காணாத புதுமையாக எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து
விமான நிலையத்திற்கு விரைவுப் பேருந்தினை இயக்குகின்றார்கள்..

அந்தப் பேருந்தில் செல்வதென்றால் அடுத்திருக்கும் சாலைக்கு மாறி
அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவிற்கு நடக்க வேண்டும்..

அதெல்லாம் நடக்கின்ற (!) காரியமா!?..

அடுத்த இருபத்தைந்தாவது நிமிடம் - குவைத் விமான நிலையத்தில்!..

ETIHAD  விமான நிறுவனம் (அபுதாபி) வரவேற்பு நல்கியது..

பயணம் குறிக்கப்பட்ட நேரம் காலை 10.10..

மேலெழுந்து வானில் பரவிய வெள்ளிப் பறவை -
அபுதாபியில் தரையிறங்கியபோது பகல் 12.55..

அபுதாபி 
அங்கே இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின் -
சென்னையை நோக்கிப் பறந்தது எண்ணப் பறவை..

இரவு 7.40..

ஐப்பசி மாத இரவிலும் மழை முகம் காணாமல்
வியர்த்துக் கொண்டிருந்தது - சென்னை..

அனைத்து நடைமுறைகளையும் கடந்து வெளியே வந்தபோது
காத்திருந்த அன்பின் முகங்களைக் கண்டு ஆனந்தம்..

அடுத்த சிறிது நேரத்தில் - தாம்பரம்..

இரவு உணவு அங்கேதான்..

உழவனுக்கு மரியாதை இருக்கின்றதோ இல்லையோ..

உழவன் விரைவு ரயிலுக்கு இருந்தது..

நள்ளிரவு 12.05.. பெருங்கூச்சலுடன் ஓடி வந்து நின்றது..

முண்டியடித்துக் கொண்ட மக்களின் ஊடாகப் புகுந்து -
இருக்கையைக் கண்டு சற்றைக்கெல்லாம் கண்ணுறக்கம்..

விழிப்பு வந்தபோது பாபநாசம் கடந்திருந்தது..

பனிவாடையுடன் பொழுது விடிந்து கொண்டிருந்தது...

கார்மேகங்களுக்காகக் காத்திருந்தன கழனிகள்...

இயற்கை இன்னும் கண்கொண்டு நோக்கவில்லை..


ஆயினும்,

ஆங்காங்கே விழுகின்ற சிறு தூறல்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் உளறிக் கொண்டிருந்தன..

இல்லம் திரும்பியதும் - குளித்து முடித்துவிட்டு காலை உணவுக்குப் பின்

மடிகணினியைத் தேடினால் -

அப்பா.. அது கெட்டுப் போய்விட்டது!.. - என்றான் மகன்...

முன்பே சொல்லியிருக்கலாமே.. - என்றேன்..

களைப்பு கண்களைத் தழுவிட சற்றே கண்ணுறக்கம்...

அருகிலுள்ள Browsing Center கள் சொல்லும் தரத்தில் இல்லை..

சரி.. நமது வலைத் தள நண்பர்களைக் கொஞ்ச நாட்களுக்குத் தொல்லைப் படுத்தாமல் இருப்போமே!.. - என்று எண்ணிக் கொண்டேன்..

அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன...

தஞ்சை சட்டமன்றத் தேர்தல்..   எனவே மாநகருக்குள் ஓயாத இரைச்சல்..

கந்த சஷ்டியன்று தஞ்சை பூக்காரத் தெரு ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் சூர சம்ஹாரத் திருவிழா..

கந்த சஷ்டி திருவிழா - தஞ்சை
ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க -
ஆணவ மாயா கன்மம் எனும் மும்மல வடிவான அசுரன் வதம் செய்யப்பட்டான்..

அன்னதானம், சித்ரான்னங்கள், பசும்பால் - என,
அன்பர்களுக்கு வழங்கி தனித்ததோர் அன்புடன் மக்கள் கொண்டாடினர்..

மன்னார்குடி தெப்பக்குளம்
தொடர்ந்த நாட்களில் -
மன்னார்குடிக்குச் சென்று விட்டு அங்கிருந்து
புள்ளிருக்கு வேளூர் எனும் ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயிலில் தரிசனம்..

மயிலாடுதுறையைக் கடக்கும்போது மனம் வலித்தது..

துலா உற்சவங்கள் தொடங்கியிருந்தன..

ஆனால் - காவிரியில் புல்லும் புதரும் மண்டிக் கிடந்தன...நவம்பர் 9.. ஐப்பசி சதய நட்சத்திரம்..

மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா..

அந்த விழாவில் கூட ஆரம்பர ஆரவார கூச்சல்கள் ஏதும் இல்லை..

ஆயினும்,
திருக்கோயிலினுள் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்..

பெருவுடையாருக்குப் பேரபிஷேகம் செய்விக்கப்பட்டு
மகாதீப ஆராதனை சமர்ப்பிப்பதற்கே மதியம் ஒருமணிக்கு மேலாகி விட்டது..

அதன் பின் பெரியநாயகி அம்பிகைக்கு பேரபிஷேகம்..

திருக்கோயிலை வலம் வந்து வணங்கினேன்..

மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து சதய விழாவில் தரிசனம் செய்யும் பேறு..

மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..

திருக்கோயிலுக்கு வெளியேயிருக்கும் - 
ராஜராஜ சோழன் சிலையைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு..

அதனால் வழக்கத்திற்கு மாறாக - சாதீய அமைப்புக்கள் அடக்கி வாசித்தன..

அடுத்தடுத்த நாட்களில் பயணங்கள் தொடர்ந்தன..

நவம்பர் 11..

சிக்கல் அகற்றும் சிக்கல் மற்றும் கேடு நீக்கும் கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களில் தரிசனம்..

நவம்பர் 12..

துலா உற்சவத்தின் ஏழாம் நாளன்று மயிலாடுதுறையில் திருக்கல்யாண வைபவம்..

அன்றைய தினம் திருவையாற்றில் துலா ஸ்நானம்..

காவிரி - திருவையாறு
அந்தப் பக்கமாக புறவழிச் சாலைப் பணிகள் நடைபெறுவதால் காவிரி சிறைப்பட்டிருந்தாள்..

அனைவரது நலனுக்காகவும் வேண்டிக் கொண்டு துலா நீராடி
அருள் தரும் அறம் வளர்த்த நாயகி உடனாகிய அருள்திரு ஐயாறப்பர் தரிசனம்...

நவம்பர் 14.. திங்கட்கிழமை.. ஐப்பசி மாதத்தின் நிறை நிலா நாள்..

ஐப்பசி மாதத்தின் நிறைநிலா
காலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு..

மாலை மயங்கியபின் -
ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயில் பௌர்ணமி தரிசனம் செய்துவிட்டு
தஞ்சை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக தரிசனம்..

இரவு 10.30 மணியளவில் அன்பர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.. 

அதன்பின் - திருக்கோயில் பணியாளர்களுடன் வெண்ணாற்றுக்குச் சென்று அபிஷேக அன்னத்தைக் கரைத்துவிட்டு கரையேறினேன்..

நவம்பர் 15.. செவ்வாய்க்கிழமை..

தஞ்சை நிசும்பசூதனி திருக்கோயிலில் ஸ்ரீ வடபத்ரகாளி தரிசனம்..

ஸ்ரீ வடபத்ரகாளி திருக்கோயில் - தஞ்சை
மாலைப் பொழுதில் முனைவர் திரு B. ஜம்புலிங்கம் அவர்களுடன் சந்திப்பு..


இனிய பொழுதில் அன்பான உபசரிப்பு.. மனதில் என்றும் நிலைத்திருக்கும்..

நவம்பர் 16.. புதன் கிழமை.. மதியம் 12.30..

சிறப்புமிகு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் மற்றும்
முனைவர் பாலமகி ஆகியோருடன் சந்திப்பு..

எதிர்பாராமல் என்னைக் கண்டதும் அவர்களுக்கெல்லாம் ஆனந்த மகிழ்ச்சி..

வழக்கம் போல நான் தான் பேசிக் கொண்டிருந்தேன்...

பிரிவதற்கு மனமில்லைதான்..

ஆனாலும், அவர்கள் தங்களது பணியினைத் தொடரவேண்டுமே!..

அலைபாயும் மனதை அங்கேயே விட்டு விட்டுப் பிரிந்தேன்...

நவம்பர் 14... வியாழக்கிழமை

வேலைத் தளத்திற்குத் திரும்ப வேண்டிய நாள் நெருங்கி விட்டது

வழித்துணை வந்திடும் திருவுடைக் கோடியம்மனைத் தரிசித்து விட்டு அரியலூர் ரயில் நிலையத்தை நோக்கிப் பயணம்..

வைகையைப் பிடிக்கவேண்டுமே!...

காலை 10.10.. பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்து நின்றது..

முன்பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கைகள்.. ஜன்னலின் அருகில்!..

தாயையும் தாய் மண்ணையும் வணங்கியவாறு பயணம் தொடர்ந்தது..

பகல் 1.55 மணிக்குத் தாம்பரம்... மதிய உணவு.. அதற்குப்பின் சற்று ஓய்வு..

அங்கிருந்து திரிசூலம்.. சென்னை விமான நிலையம்..

அபுதாபி வழியாக குவைத்திற்கு இரவு 9.15 க்கு விமானம்

விமான நிலையத்தில் மாலை 6.00 மணிக்கு Check In..


கலைப் பொருட்கள் - சென்னை விமான நிலையம்
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் குவைத் வான்வெளியில் நுழைந்து ஓடு தளத்தில் இறங்கி ஓடியது - வெள்ளிப் பறவை ...

மீண்டும் ஐந்தாவது தளத்தில் அறை எண் 1/9 திறக்கப்பட்டது..

குறுகிய நாட்கள்.. எனினும் இனிய பயணம்..

வேறு சில செயல் திட்டங்களுடன் தான் தஞ்சைக்கு வந்தேன்..

ஆனால் - நினைப்பவை எல்லாமும் நடந்து விடுவதில்லையே!..

அன்பு தான் இன்ப ஊற்று!.. என்றர்கள்..

எப்படியிருக்கின்றீர்கள்.. நலமா!.. - என்ற வார்த்தைகளே உயிருக்கு ஊட்டம்..

திருமிகு தேவகோட்டையார், 
திருமிகு முனைவர் B. ஜம்புலிங்கம், 
திருமிகு கரந்தை ஜெயக்குமார், 
திருமிகு முனைவர் பாலமகி
ஆகியோரின் அன்பில்
மனமெல்லாம் நிறைந்திருக்கின்றது..

திருமிகு GMB ஐயா அவர்களும் 
திருமிகு கோமதி அரசு அவர்களும் 
புதிய பதிவுகளைக் காணாததால்
அன்புடன் விசாரித்திருந்தனர்..

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.. 
* * *

தஞ்சை பூக்காரத்தெரு சுப்ரமண்ய ஸ்வாமிக்கு
சூர சம்ஹார மகா தீபஆராதனை..


Fb வழியாகக் கிடைத்த நாட்டு நடப்பு.. 


இந்த அளவில்
குறையொன்றும் இல்லை..
கூடும் அன்பினில் கூடுவதே அன்றி 
குறைவதொன்றும் இல்லை..

வாழ்க நலம்.. 
* * * 

18 கருத்துகள்:

 1. உங்களது பயணம் எங்களுக்கு ஓர் இனிமையான அனுபவம். உங்களைக் கண்டதும், உரையாடியதும் என்றும் நினைவில் நிற்கும். நீங்கள் எங்களுடனான சந்திப்பைப் பகிர்ந்தமை கண்டு மகிழ்சசி. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சின்ன இடைவெளி கிடைத்தாலும் தாய்மண்ணுக்கு வரும் ஆவலும் கோவில் தரிசனத்துக்காக நேரம் செலவு செய்யும் உங்களைப் பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் ஜி சிறிய விடுமுறை நலமுடன் கழிந்ததில் மகிழ்ச்சி எமக்கு நமது திட்டப்படி 17.11.2016 அன்று அபுதாபி விமான நிலையத்தின் உள்ளே சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம் உண்டு காலம் ஒருநாள் கைகூடும் வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்களைச் சந்திக்க இயலாதது எனக்கும் வருத்தமே..
   என்ன சூழ்நிலையோ.. என்று நினைத்துக் கொண்டேன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தங்களை திடீரென்று சந்தித்ததில் பெரிதும் மகிழ்ந்துதான் போனேன் ஐயா
  காண்பது கனவா அல்லது நினைவா என்றுகூட சந்தேகம் வந்தது
  தாங்கள் பேசப் பேசக் கேட்டுக் கொண்டிருந்ததிலும் ஓர் ஆனந்தம் இருந்தது ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களையும் முனைவர் பாலமகி அவர்களையும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

   தங்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் நெஞ்சிலிருக்கும்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பயணத்தை விவரித்த விதம் மிகவும் அழகு... ரசித்தேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதிவுகள் இல்லையென்றவுடன் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன். வந்த கொஞ்ச நாளில் நிறைய கோவில்கள் தரிசனம் செய்து வந்து இருக்கிறீர்கள். மயிலாடுதுறைக்கும் போய் இருந்தீர்கள் என்று படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை வருடங்கள் இருந்த ஊர்.

  என் மகன் ஐப்பசி சதயம் அன்று பிறந்தான் அவனிடம் ராஜராஜசோழன் பிறந்த நாளில் நீ பிறந்தாய் என்று சொல்லுவோம்.

  பதிவுலக நண்பர்களை சந்தித்த விவரம் அருமை.

  காணொளிகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   உறவினர்களுடன் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.. அது ரயில் பயணம் என்பதால் நேரம் சரியாக இருந்தது.. மயூரநாதர் திருக்கோயிலுக்குச் செல்ல இயலவில்லை...

   சிவகுடும்பத்தில் சதயத்தில் பிறந்த தங்கள் அன்பு மகனுக்கு நல்வாழ்த்துகள்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. நலம் தானே,
  நலமுடன் தங்கள் பணிக்கு சென்றது அறிந்து மகிழ்ச்சி,, தங்கள் வரவு திடீர் என நிகழ்ந்ததால் என்னால் நம்பவே முடியல,
  போன முறை தாங்கள் வந்தும் சந்திக்க முடியாத நிலையில்,, இம் முறை என்னை எப்படியாவது தேடிஜெயக்குமார் சார் தங்கள் வருகையைச் சொன்னார்.
  மனம் கொள்ளா மகிழ்ச்சி,,
  தாங்கள் பேச பேச இன்னும் நிறைய கேட்கனும் என்று தான் ஆவல் எழுந்தது.
  ஒரே ஒரு குறை தான் பெருங்குறை,, இன்னும் மனம் அமைதிப்பெற மறுக்கிறது.
  குடிக்க தண்ணீர்கூட நான் கொடுக்காமல் அனுப்பியது.
  உணவு நேரத்தில் சாப்பிடுங்கள் என்று சொல்லாமல்,மனம் வலிக்கிறது. அடுத்த முறையாவது இக்குறை நிறையாகனும்,,
  மீசைக்காரரின் விசாரிப்புகளைப் பகிர்ந்ததற்கும் நன்றி,,
  தாங்கள் என்றும் நலமுடன் பணி தொடர்க,,
  நன்றி நன்றி நன்றி,,,

  பதிலளிநீக்கு
 8. அன்புடையீர்..

  தஞ்சையில் தங்களையும் திரு.ஜெயக்குமார் அவர்களையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி..
  நான் அதைப் பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை..

  அன்புடையோர்களுக்கு அப்பாற்பட்டவை - உணவும் நீரும்..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 9. மிக சுவையான, விரிவான பயண விபரங்கள்! பயணத்தில் உங்கள் கூடவே வந்தது போல இருந்தது. கடல் கடந்த பய‌ணங்களை நானும் 40 வருடங்களாக செய்து வருவதால் உங்களின் ஆர்வம், அலைச்சல், பிரிவு, நட்பு, என்று அனைத்தையும் துல்லியமாக உணர்கிறேன். அடுத்த முறை அவசியம் நாம் தஞ்சையில் சந்திக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   குவைத்திலிருந்து புறப்படும்போது இருக்கும் மனநிலையையும்
   தஞ்சையிலிருந்து புறப்படும்போது இருக்கும் மனநிலையையும்
   விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை!..

   நான் சென்ற வருடம் அபுதாபிக்கு வந்தபோது தாங்கள் தஞ்சையில் இருந்தீர்கள்.. நிச்சயம் சந்திப்பதற்கு இறைவன் அருள்வானாக..

   தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. ஐயா வணக்கம்.
  தாங்கள் ஊருக்குச் சென்ற விபரம் எனக்குத் தெரியாது...
  கில்லர்ஜி அண்ணா அறைக்கு வந்த போதுதான் தெரியும்...
  முதல் நாளிரவு தாங்கள் ஊரில் இருந்து திரும்பியதாகச் சொன்னார்.
  என்ன ஐயாவை நம்ம பக்கம் காணோம் என்று நினைத்தேன்.
  உடல் நலமின்மையால் கட்டி வந்து ஹாஸ்பிடலில் போய் கீறி எடுக்க வேண்டிய நிலை... இப்பொதான் புண் ஆறிவருகிறது. யாருக்கும் கருத்து இடவில்லை.
  இதை அன்றே வாசித்தேன்... கருத்து இட முடியாத நிலை... ஒரு கையால் டைப்பும் போது எழுத்துப் பிழை அதிகம் வர... யாருக்குமே கருத்து இடவில்லை..

  ஊரில் அனைவரும் நலம்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்களுக்கு நேர்ந்த சிரமம் கண்டு வருந்துகின்றேன்.. விரைவில் குணமாக வேண்டும்..

   வீட்டிலிருந்த மடி கணினி பழுதானதால் தஞ்சையிலிருந்து பதிவுகள் தர இயலவில்லை.. குவைத் வந்த பின்னர் Blogger பூட்டிக் கொண்டது..

   சில தினங்களாகத் தான் இயங்குகின்றது..

   தவிரவும், தங்கள் தளம் சரிவர திறப்பதில்லை..

   ஊரில் அனைவரும் நலமே..

   தாங்கள் - விரைவில் நலம் பெறவேண்டுகின்றேன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..