நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 30, 2016

படைத்தானே.. படைத்தானே..

தனக்கு முன்னிருந்த ஜீவராசிகளை -
பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டான் - இறைவன்...

ஏற்கனவே -

மண்ணைப் படைத்து அதற்குள் நீர் நெருப்பு காற்று
என்பனவற்றை வைத்து வெட்ட வெளிக்குள் சுழல விட்டாயிற்று..

அப்படி சுற்றுகின்ற மண் உருண்டைக்குள் புழு பூச்சிகளையும் அனுப்பியாயிற்று..


அதன் தொடர்ச்சியாக செடி கொடி மரங்களையும் விதைத்தாயிற்று... அவற்றினூடாக சுற்றித் திரிவதற்கு பறவைகளையும் பறக்க விட்டாயிற்று..


நில வாழ்வன, நீர் வாழ்வன என்று படைத்த பின்னும் -

நீரிலும் நிலத்திலும் வாழ்வன என்றும் படைத்தாயிற்று..




பச்சைப் பசேலெனத் தழைத்திடும் மரங்கள்
அவற்றில் கூடிக் களித்திடும் பறவைகள்
குளத்து நீரில் நீந்திக் குளித்திடும் மீன்கள்
ஊர்ந்து நெளிந்து நிமிர்ந்து எழுந்திடும் பாம்புகள் -

இவற்றையெல்லாம் கண்டு மிகவும் திருப்தி..

இன்னும் பூமியை அழகு செய்வதற்கென்று -
அடுத்த தயாரிப்புகளில் ஆர்வமானான் - இறைவன்..

அந்த பழைய தயாரிப்புகளில் வைக்காத ஒன்றை -

இந்த புதிய தயாரிப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்தான்..

அது தான் - அறிவு..


அறிவுடன் உருவாக்கப் பெற்ற உயிரினங்கள் எல்லாம் பேசும் திறன் பெற்றிருந்தன..


ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரமான குணங்களைக் கொடுத்து - அவைகள் பூமியில் வாழ வேண்டிய விதத்தையும் சொல்லிக் கொண்டிருந்தான்..


ஒவ்வொன்றும் - தம்மில் சில மாற்றங்களையும் விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டன.. அத்துடன் தமக்கு வேண்டாம் என்ற குணங்களை அங்கேயே உதறித் தள்ளி விட்டன..


இப்படியாக ஒரு உயிரைப் படைத்த பின் அதனிடம் சொன்னான் -




நீதான் காளை.. காலையில் இருந்து சாயுங்காலம் வரை வயற்காட்டில் உழைக்கும்படி இருக்கும்.. பெரும் சுமைகளை இழுக்க வேண்டியிருக்கும் சமயத்தில் உலர்ந்த புல்லுக்கும் உயிரை விட வேண்டியிருக்கும்.. பொறுமை என்ற உணர்வுடன் திகழ்வாய்... ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்.. உனக்கு ஆயுள் ஐம்பது வருடம்!..

வேணாம் சாமி வேணாம்!.. அவ்வளவு ஆயுள் வேணாம்.. இருபது வருஷம் போதும்!...

அப்படியா!.. உனக்கென்று ஒதுக்கிய ஆயுளை யாரிடம் தருவது?..

வேற ஜீவராசிகளுக்கு கொடுங்க.. சாமி!..

என்றபடி - காளை விடை பெற்றுக்கொண்டது..


அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்...

நீதான் நாய்.. எந்த ஒரு இலக்கும் இல்லாமல் அங்குமிங்கும் அலைந்து திரிவதில் உனக்கு நிகர் நீயே... உன் இனத்துக்குள்ளேயே அடித்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பாய்.. உனக்கும் ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்..  நன்றி எனும் உணர்வுடன் இருப்பாய்... உனக்கு ஆயுள் முப்பது வருடம்!..

அவ்வளவெல்லாம் வேணாம் சாமி!... அதில் பாதி போதும்!..

என்றபடி - நாய் விடை பெற்றுக்கொண்டது..

அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்...



நீதான் குரங்கு.. மண் தரையில் நடப்பதை விட மரக் கிளைகளில் தாவித் திரிவதிலேயே நாட்டமாக இருப்பாய்... தின்பதற்கு ஏதும் பிரச்னை இருக்காது.. நீ தின்பதை விட அழிப்பதே அதிகமாக இருக்கும்.. நிலையற்ற புத்தி என்பதே உனது அம்சம்.. உனக்கும் ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்.. உனக்கு ஆயுள் இருபது வருடம்!..

அத்தனை வருஷமெல்லாம் வேணாம் சாமி!... பத்து வருஷம் போதும்!..


என்றபடி - குரங்கு விடை பெற்றுக்கொண்டது..

அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்... அதற்கான அறிவையும் கொடுத்தான்... 

கொடுத்தது போக அருகிலிருந்த கிண்ணத்தில் கொஞ்சம் மீதம் இருந்தது..

நீதான் மனிதன்!...

அப்படியா?.. ஒரு வேண்டுகோள்!..

என்ன!..

எனக்கு மேல் வேறொன்றைப் படைக்கக்கூடாது!...

ஆமாம் .. எனக்கும் களைப்பாக இருக்கின்றது.. நல்லவேளை நினைவு படுத்தினாய்.. அதற்காக இதோ என்னுடைய பரிசு!..

கிண்ணம் இப்போது வெறுமையானது... 

என்ன பரிசு அது!..

அறிவு... எல்லாவற்றிற்கும் கொடுத்ததைப் போல உனக்கும் ஐந்து பங்கு தான்.. ஆனால் - உன்னுடைய கேள்வி நன்றாக இருந்தது.. அதனால் இது கொசுறு... ஆக இனிமேல் உனக்கு ஆறறிவு!..

இதனால் என்ன பயன்?..

என்ன பயனா?... என்ன இப்படிக் கேட்டு விட்டாய்!.. இதுவரைக்கும் நான் படைத்த எல்லாவற்றின் மீதும் ஆட்சி செய்வாய்!..

ஓஹோ!..

இவையெல்லாம் குறுக்காக வளர - நீ மட்டும் நெடுக்காக வளர்வாய்!.. உனக்கு ஆயுள் பதினாறு வருடங்கள்!.. 

அப்படியா!.. சிங்கம் புலி கரடி இதற்கெல்லாம் அதிகமாகக் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் பதினாறு வருஷம் தானா?...

அப்படியில்லை!.. பதினாறும் எவ்விதத் துன்பமும் இல்லாத சுதந்திரமான வருஷங்கள்!.. நீ கொண்ட அறிவு அனைத்து உயிர்க்கும் ஆதரவாக இருக்கட்டும்...

இறைவன் தனது கடைசி படைப்பினை வாழ்த்தினான்..


அது சரி!.. எனக்கு ஒன்றும் துணை இல்லையா?..

துணையா?.. இதோ மரங்கள்.. கொடிகள்.. பறவைகள்.. பட்டாம்பூச்சிகள்.. மீன்கள்..  விலங்குகள்.. இதெல்லாம் துணையாகத் தெரியவில்லையா?....

இல்லை.. ஒன்றின் வண்ணம் மற்றொன்றாய் - ஆடிக் களித்திட கூடிக் களித்திட!..

இதைத் தான்.. இதைத் தான் எதிர்பார்த்தேன்!.. இதோ நீ கேட்டபடி!.. 

அந்த விநாடியில் - இறைவனிடம் இருந்து மற்றொன்று வெளிப்பட்டது..

என்ன இது?..

நீதான் வேறொன்றைப் படைக்கக் கூடாது என்றாயே!..
அதனால் என்னிலிருந்து எடுத்தேன்!..

ஆனாலும் எனக்கும் அதற்கும் வித்தியாசம் தெரியவில்லையே!...

வித்தியாசமா!.. இதோ!..

அதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் வெளிப்பட்டன..

அந்த நொடியில் - ஏற்பட்ட ஆர்வக் கோளாறினால் - 
ஒன்றையொன்று உற்றுப் பார்த்துக் கொண்டன...

இறைவன் சிரித்தான்...

இப்போது முதல் நீ ஆண்.. நீ பெண்!..

அப்படியென்றால்!..

விதி ஆரம்பமாவது கண்ணுக்குள்ளே - அது
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே!..

ஒன்றும் புரியவில்லை!..

இனி நீங்களே எல்லாமும்!. நீங்களே ஒளியும் இருளும்!.. வெயிலும் மழையும்!.. நட்பும் பகையும்!..  வாழ்வும் தாழ்வும்!.. ஆக்கமும் ஊக்கமும்!.. ஏற்றமும் இறக்கமும்!.. இன்பமும் துன்பமும்!.. பிறப்பும் இறப்பும்!..

இவ்வளவு தானா?..

இன்னும் இருக்கின்றன.. அவை எல்லாம் போகப் போகப் புரியும்!..
சரி.. பூமிக்குப் புறப்படுங்கள்!..

புறப்படுவதற்கு முன்னதாக தங்களிடம் ஒரு கேள்வி!..

என்ன கேள்வி?..

இங்கே கிடப்பவையெல்லாம் என்ன?...


இவையெல்லாம் மற்ற உயிரினங்கள் வேண்டாம் என்று கழித்துப் போட்ட குணாதிசயங்கள்!... 

உங்களுக்குத் தேவைப்படுமா?..

நீதான் - இனிமேல் தான் வேறொன்றைப் படைக்கக்கூடாது - என்றாயே!..

அப்படியானால் - அவற்றையெல்லாம் நான் எடுத்துக் கொள்ளட்டுமா!... உங்களுக்கு ஒன்றும் இழப்பு இல்லையே?..

இல்லை தான்!.. ஆனாலும் அவை குப்பையாய்க் கிடக்கின்றன.. உனக்குத் தான் சிரமம்!...

குப்பையானால் என்ன!.. நான் எடுத்துக் கொள்கிறேன்!..

சொன்னால் கேள்.. அவையெல்லாம் உனக்கு வேண்டாம்!..

அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கின்றேன்!.. 



என் பேச்சை மீறி அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டாய்!..
இனி உனக்கு என்னவெல்லாம் நேரும் என்று கேட்டுக் கொள்!..

பதினாறு வயது வரைக்கும் சுதந்திரப் பறவை தான்.. அதற்குப் பின் -

யானையைப் போல் மதம் கொண்டு திரிவாய்..
சிங்கத்தைப் போல குரூரம் கொண்டு அலைவாய்!..
வேங்கையைப் போல வெறி கொண்டு கிடப்பாய்!..
நாகத்தைப் போல நஞ்சு கொண்டு இழைவாய்!..


பறவையா விலங்கா - எனத் தடுமாறும் வௌவாலைப் போல்
நல்லவனா கெட்டவனா என்று புரியாமல் திகைப்பாய்!..
நரியைப் போல் தந்திரம் தனைக்கொண்டு பிழைப்பாய்!..
நண்டு போல் பிறருக்குக் குழி தோண்டிக் கெடுப்பாய்!..

காளையைப் போல் கஷ்டப்பட்டு உழைப்பாய்!..
கழுதையைப் போல் சுமைதாங்கிக் களைப்பாய்!..
நாயைப் போல் அலைந்து அவதியில் இளைப்பாய்!..
குரங்கைப் போல் திரிந்து வீதியில் பிழைப்பாய்!..

முடிவொன்று தெரியாமல் அந்தரத்தில் தவிப்பாய்!..

அடடா!.. இவ்வளவு துன்பமா?.. இதெல்லாம் வேண்டாம் எனக்கு!..

மானிடனே!.. உனக்கு வேண்டாதவற்றை நீயே எடுத்துக் கொண்டாய்.. சொல்லியும் கேட்கவில்லை... இனி நீ அவைகளை விட்டாலும் அவைகள் உன்னை விடப்போவதில்லை!...

இல்லை.. இல்லை.. என்னை மன்னித்து விடுங்கள்!..

உன்னிலிருந்து தோன்றக்கூடிய தொல்லைகளைக் கூறுகின்றேன்.. கேள்!..

நல்லவர் குடி கெடும்!.. மது என்ற ஒன்றைக் கண்டு பிடிப்பதால் குடும்பம் குடும்பமாக மடியும்!..

ஆற்றை, குளத்தை, ஏரியை அழித்து உனக்கென்று ஆக்கிக் கொள்வாய்!..
உன்னால் மலையும் மடுவும் காணாமல் போகும்!.. உனது செல்வாக்கு வலு அதிகரித்திருக்கும்...  உயிர் பயத்தால் எதிர்த்துக் கேட்க நாதியிருக்காது!..

ஊராள்வதற்கு என்று - நீ நடத்தும் நாடகங்களுக்கு குறைவே இருக்காது...
ஊழல் என்ற கழிவு நீர் ஊரெல்லாம் ஓடி தேங்கிக் கிடக்கும்!..

கையில் காசு இல்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி!.. - என்று
புதிய கொள்கை உருவாகும்..

அதன்படி எங்கெங்கும் லஞ்சம் என்ற ஒன்று தலைவிரித்தாடும்...



காசை எடுத்து நீட்டினால் தான் வேலையே நடக்கும்...

கல்விக் கூடம் முதல் மயானக் கூடம் வரைக்கும் லஞ்சம்..

மருத்துவமனைகளில் பிள்ளை பெறுவதற்கும் லஞ்சம்!..
பிணத்தைப் பெறுவதற்கும் கூட லஞ்சம்...

உயிரைக் கொடுப்பதற்கும் காசு.. உயிரை எடுப்பதற்கும் காசு.. இடையில் உயிரைக் காப்பதற்கும் காசு!..




பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் லஞ்சத்தின் பிடியில் வந்து விடும்..

ஆடு மாடாகி விடும்.. கழுதை குதிரையாகி விடும்!..
அவ்வளவு ஏன்!.. கட்டெறும்பு கூட கர்ஜிக்கும் சிங்கமாகி விடும்!..

பணம்.. பணம் என்று அலையும் வாழ்க்கையில் எவ்வளவு வந்தாலும் அடங்காது!..
கிரியா ஊக்கி போல லஞ்சம் அனைத்திலும் ஊடாகச் செயல்படும்...

இருப்பதை இல்லை என்று சொல்லி இல்லாததை இருப்பதாகக் காட்டும்...

கடமையைச் செய்வதற்கும் காசு கேட்கப்படும்!.. - என்றால் அதன் தன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்!..

வெட்கமில்லாமல் கை நீட்டப்படுவது காசுக்கு மட்டும்தான்!..


நீ உருவாக்கும் காசு தான் உனக்கு எல்லா சுகங்களையும் அளிக்கும்...
ஆயினும் அதுவே - உனது பண்புகள் அனைத்தையும் அடியோடு அழிக்கும்!..

இந்த காசு பணம் எல்லாமும் உன் கூடவே வரும் என்றா நினைக்கிறாய்?..

உழைத்துச் சேர்த்த காசு கூட உழைத்தவனோடு வராது எனும்போது
ஊரை ஏய்த்துச் சேர்த்த காசு எப்படி வரும்!..


அதை நேருக்கு நேராகப் பார்த்த பின்னும் 
அதன் பின்னால் தான் - மனம் ஓடி ஓடி இளைக்கும்!..

இன்னும் இன்னும் என்று தேடித் தவிக்கும்!..

இத்தனை துன்பமும் எதனால் நேரிட்டது?..

விலங்குகள் கழித்துப் போட்ட குணங்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டாய் அல்லவா!...  அந்த பேராசையினால் விளைந்தவை!.. இன்று முதல் மனித உருவத்துள் விலங்கின் குணங்களே நிரம்பிக் கிடக்கும்!...

நூறு நாய்கள் கூடிக் குரைத்தாலும்
ஆயிரம் காக்கைகள் கூடிக் கரைந்தாலும்
ஒற்றைக் கல்லில் அவை தலை தப்பினால் போதும் என்று ஓடி விடும்...

அவற்றைப் போல் நீயும் ஆகி விடுவாய்!..

விலங்குகளிடம் பாலியல் கொடுமை என்ற ஒன்றே இருக்காது..
ஆனால் நீ வாய்ப்புக்காகக் காத்துக் கிடப்பாய்!..

திருடுவாய்.. பொய் சொல்வாய்.. காட்டிக் கொடுப்பாய் - உனது இலக்கு நிறைவேறுவதற்காக!..

அது நிறைவேறவில்லை எனில் - யாரானாலும் அழிக்க முற்படுவாய்!..

பெற்றவர்கள் தலையில் கல்லைப் போடுவாய்.. உடன்பிறந்தோரை உருத் தெரியாமல் சிதைப்பாய்... நம்பி வந்த மனைவியை நட்டாற்றில் விடுவாய்.. பெற்றெடுத்த செல்வங்களை நடுத் தெருவில் விடுவாய்!..

கேட்கவே கொடுமையாக இருக்கிறதே!...

ஒருதலையாய் உன் பேச்சைக் கேட்காத பெண் பிள்ளைகளை ஆள் வைத்து அழிப்பாய்!... அமிலத்தால் முகத்தைச் சிதைப்பாய்!.. மாய வரைகலையால் மங்கையர் தம் மனதை வதைப்பாய்!..

எதிர்த்துப் போராடினால் அவள் இப்படி.. இவள் அப்படி.. என்று பொய்யாய்ப் புனைந்துரைத்து பூவையரின் வாழ்வை முடிப்பாய்!..

எனக்கே எல்லாமும் விதித்தாயே?... இவளுக்கு என்று ஏதும் இல்லையா?...

அவள் என்னுள்ளிருந்து தோன்றியவள்.. நல்லவள்.. வல்லவள்.. ஆனால் அது உனக்குப் பிடிக்காது.. அவளை அடக்கி ஆள்வதற்கே முற்படுவாய்!.. ஆனாலும் அது உன்னால் முடியாது!.. அந்தத் தோல்வியினாலேயே அவளுக்குத் தொல்லைகள் பல கொடுப்பாய்!..

நல்ல எண்ணங்களால் உயர்ந்த சந்ததிகள் விளைந்தாலும்
கெட்ட அழுக்குகளால் விஷப் பூச்சிகளே பெருகக் காத்திருக்கின்றன..

கெட்ட அழுக்குகளால் பெருகிய விஷப் பூச்சிகளே -
உலக அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகின்றன..


இன்னொரு விஷயம்!.. கேட்பதற்கும் கவனிப்பதற்கும் என்று உனது மூளையின் ஒரு பக்கம் மட்டுமே பயன்படும்!.. ஆனால் பெண்ணுக்கு...

பெண்ணுக்கு?... 



கேட்பதற்கும் கவனிப்பதற்கும் என - பெண்ணின் மூளை இருபக்கமும் செயல்படும்!..

அவளுக்கு மட்டும் ஏன் இப்படி!.. எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?..

ஓர வஞ்சனையெல்லாம் இல்லை!.. அது வேண்டும்.. இது வேண்டும்.. என்று இதுவரையிலும் எதுவும் கேட்காமல் பொறுமையின் சிகரமாக திகழ்கின்றாளே - அதற்காக!..

இனிமேல் அதுவேண்டும்.. இது வேண்டும் என்று என்னிடம் கேட்பாள்.. நல்லவேளை நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்... நான் சிக்கிக் கொண்டேன்...

உன்னிடம் அவள் சிக்கிக் கொண்டாள்.. அவளிடம் நீ சிக்கிக் கொண்டாய்!.. உங்கள் இருவரிடமும் நான் சிக்கிக் கொண்டேன்!..

சரி.. இதற்கெல்லாம் முடிவு!?...

மூட எருமையின் அறிவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு - முடிவைக் கேட்கின்றாயா!...


கோபங்கொண்ட குரூர சிங்கத்தின் மீது கோலக் குமரியாய் அவள் வருவாள்!.. உன்னை உருட்டி உதைத்து உன் தலையின் மீது நின்று நல்ல புத்தியைத் தருவாள்!..


அது எப்போது நடக்கும்?..

அது அவளுக்குத் தான் தெரியும்!..

அது வரைக்கும்?..

ஆடு.. ஆடிக் கொண்டிரு..
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக் கொண்டிரு!..  
***
மூளையின் செயல்பாடு பற்றி 
திரு. தில்லையகத்து துளசிதரன் அவர்களின் 
பதிவிலிருந்து சில வரிகளை வழங்கியுள்ளேன்..
அவர் தமக்கு நன்றி..
***

தீயோரின் வன்கொடுமையினால்
இன்னுயிர் துறந்த விநோதினி, ஜோதிசிங், 
ஸ்வாதி, வினுப்பிரியா மற்றும்
எண்ணற்ற கண்மணிகளுக்கு
இந்தப் பதிவு சமர்ப்பணம்..

அன்னை பராசக்தி
அவர்க்கெல்லாம்
நற்கதியருள்வாளாக!..

ஓம் சக்தி ஓம்!..
***

ஞாயிறு, ஜூன் 26, 2016

நெஞ்சில் உரமுமின்றி...

கடந்த வெள்ளிக்கிழமை (24/6) அன்று காலை 6.30 மணியளவில் பரபரப்பு மிகுந்த சென்னை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் -

ஸ்வாதி எனும் இளம்பெண் 24 வயதுடையவர் - துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்..


ஸ்வாதி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர். செங்கல்பட்டு செல்வதற்காகக் காத்திருந்த வேளையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது..

ரயில் நிலையத்திற்கு அவரது தந்தையுடன் வருவது வழக்கமாம்..

அன்றைக்கும் அப்படித் தான் வந்திருக்கின்றார்..

என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு - அங்கே காத்திருந்தாரோ!..

அருகில் வந்தவன் ஒற்றையாய்த் தனி ஆள்..

கண்ணிமைக்கும் போதில் - வெட்டிச் சாய்த்திருக்கின்றான்..


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி..
***

இந்தக் கொடுமை நடத்தப்பட்டபோது - ரயில் நிலையத்தில் அங்குமிங்குமாக இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்..

ஏதும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு!..
-  என்று நினைத்துக் கொண்டார்களோ - என்னவோ!..

உயிருக்குப் போராடுகின்ற சக பயணிக்கு ஒத்தாசையாக - கூக்குரலிடக் கூட அவர்களுக்கு இயலவில்லை...

அதுமட்டுமல்லாமல் - 

ஸ்வாதியை - இரத்தச் சகதியில் வீழ்த்தி விட்டு கொலைகாரன் நிதானமாக வெளியேறிய பின் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்..

மகாகவி - ஊமை ஜனங்கள் - என்றுரைத்தாரே..

அப்படி ஆயினர் போலும்!..

அல்லது -

தான் ... தன் சுகம்!... - என்று வாளாயிருந்து விட்டனர் போலும்...


சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி..
*** 

அங்கிருந்தோரில் எவருக்கேனும் -
இந்த ஸ்வாதி உடன் பிறப்பாக உற்றாராக இருந்திருந்தால் - 
இப்படி வாய் மூடி வேடிக்கை பார்த்திருக்கக் கூடுமோ?..

கூக்குரலிட்டு களேபரம் செய்வதற்கு - உடன் பிறப்பாக உற்றாராக இருக்கத் தான் வேண்டுமெனில் - அங்கிருந்தோர் எவரும் மனிதரில் சேர்த்தியில்லை..

தன் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதவராக நடைமேடையில் விழுந்த சுவாதி உயிருக்குப் போராடிய கணம் மிகக் கொடுமையானது...

குப்பை மேட்டில் மேய்ந்து திரியும் கோழிக் கூட்டத்துள் வல்லூறு புகுந்து விட்டால் - உடனிருக்கும் மற்ற கோழிகள் பெருங்குரலெடுத்துச் சப்தமிடுவதைக் கிராமங்களில் வசித்தவர்கள் கேட்டிருக்கக் கூடும்..

அந்த கோழிகளுக்கு உள்ள உணர்வுகள் கூட -
அங்கிருந்தவர்களுக்கு இல்லாமல் போனது பெரும் சோகம்...

கொலை செய்து விட்டு நிதானமாகச் சென்ற படுபாவியைத் துரத்திப் பிடிக்கக் கூட அங்கிருந்தோர் முயலவில்லை - எனில் ,

இவர்களைக் குறை கூறுவதற்கு -
உலக மொழிகள் எவற்றிலும் வார்த்தைகள் இல்லை!. - என்பது தான் உண்மை..

பெண் என்றால் பேயும் இரங்கும்!.. - என்பார்கள்..

திட்டமிட்டு வந்தவன் இதயத்தில் அதற்கெல்லாம் இடம் இருக்க நியாயமில்லை தான்!...

ஆனால் - அங்கிருந்தோருடைய இதயங்களிலும் இல்லாமல் போனதே!..

அப்படி எங்கேதான் போய்த் தொலைந்ததோ - இரக்கம்!..


மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே பேணி இருந்தாரடீ..  
***

அந்தோ பரிதாபம்!...

துடிதுடித்து இறந்து போன ஸ்வாதி -
துறுதுறுப்பாக சமூக சேவை ஆற்றுவதில் ஆர்வம் உடையவராம்!..

சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை பெருமழையில் சிக்கிக் கொண்டபோது தன்னார்வமாக - மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கின்றார்..

தன் கைப்பொருளையும் பிறரிடம் வேண்டிப் பெற்ற பொருளையும் -
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி துயர் துடைத்திருக்கின்றார்..

தர்மம் தலை காக்கும்.. தக்க சமயத்தில் உயிர் காக்கும்!..

கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது..

ஆனால் - ஸ்வாதிக்கு அவ்விதம் நடக்கவில்லையே!..

துயருற்றோர் தம் துன்பம் தீர்ப்பதற்குத் தன் கரத்தை நீட்டியிருக்கின்றார்...

ஸ்வாதிக்கு ஆதரவாக ஒரு கரம் கூட நீளவில்லையே..

டேய்.. விடாதே.. பிடி!.. - என்றொரு குரல் கூட எழும்பவில்லையே...

ஓர் உயிரை எடுத்து விட்டு - நிதானமாக நடந்து சென்ற கொலைகாரனைத் துரத்திச் செல்வதற்குக் கூட யாருக்கும் துணிவில்லை... எனும் போது ,

நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது மனிதர்களின் மத்தியில் தானா?.. -என்று ஐயம் எழுகின்றது...

மனிதம் மாண்டு போனதோ!..

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுள் -
ஸ்வாதிக்கு நேர்ந்தது முதலும் அல்ல.. கடைசியும் அல்ல!..

இன்னும் எத்தனையோ - காத்திருக்கின்றன..

என்ன செய்யப் போகின்றோம் - பெண்களின் துயர் துடைக்க!..

மூன்றாண்டுகளுக்கு முன் காரைக்கால் பேருந்து நிலையத்தில் விநோதினி என்ற இளம் பெண் அமில வீச்சுக்கு ஆளானாள்..

கொடூர காயங்களுடன் படாத பாடுபட்டு - அகால மரணத்தைத் தழுவினாள்..

குற்றவாளி நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்..
இன்னும் சில வருடங்களில் விடுதலையாகக் கூடும்..

சென்ற ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் இது...

கிழவன் ஒருவன் பதினைந்து வயதுடைய - தன் பேத்தியை சக கிழவர்களுடன் பகிர்ந்து கொண்டான்..

அந்தப் படுபாவிகள் இன்னும் நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றார்கள்..

வயது குறைந்தவன் இவன் - என்ற நோக்கில் அரசு அவனைப் பரிபாலித்தது..

அவனோ - தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை - வயதுக்கு மூத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வன்புணர்வு செய்தவன்..

குற்றுயிராகக் கிடந்த அந்த இளம் பெண்ணை மீண்டும் அனுபவித்ததோடு கையினால் துழாவி - கம்பி ஒன்றினால் அவளது குறியைக் குத்திக் கிழித்து அவளுடைய மரணத்திற்கு வித்திட்டவன்...

குறைந்த தண்டனைக்குப் பின் அவனது நல்வாழ்விற்கு அரசே பெருந்துணை புரிந்தது...

அவனும் இன்று நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்...

இத்தகைய இழிபிறவிகளுக்காத்தான் இந்தத் திருக்குறள்..

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.. (0550)

வள்ளுவப் பெருமானுக்கு - 
நீருக்கு நடுவே சிலை எழுப்பி வைப்பதெல்லாம் பெருமையே அல்ல!..
நெஞ்சுக்கு நடுவே எழுப்பி வைத்து நீதியைக் காப்பதுதான் பெருமை!..

இதை நினைவில் கொள்ளாவிடில் நமக்குத் தான் சிறுமை!..


கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி..  
***

நம்பிக்கை!..

கொள்வதும் கொடுப்பதும் அந்த ஒன்றுதான்!..
அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்..

நம்பிக்கை கொள்ளவும் இல்லை..
நம்பிக்கை கொடுக்கவும் இல்லை!... எனில்
- என்ன மாதிரியான கட்டமைப்பு இது!..
கேவலம்..
***


பதிவில் உள்ள படங்கள் - இணையத்தில் பெற்றவை...
காணொளி :- தந்தி தொலைக்காட்சி.. அவர்தமக்கு நன்றி..

எல்லாவற்றுக்கும் மேலாக -
இரத்த தானம் செய்வதில் மிகுந்த விருப்புடைய - ஸ்வாதி
தனது நண்பர்களிடம் கூறுவது - இப்படி...

இறைவன் படைத்தது ஒரு பிறப்பு..
அதற்கு இரத்த தானம் கொடுப்பது - மறு பிறப்பு!..

அதன்படியே , 

மண் மகளுக்கும்
 தன் குருதியைக் கொடையாய்க் 
கொடுத்து விட்டு சென்று விட்டார் ..

மனித நேயம் கொண்டு மலர்ந்த மலர்
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது..

ஸ்வாதி 
உன் ஆன்மா அமைதியுறட்டும்!..  
***

சனி, ஜூன் 25, 2016

தாழையாம் பூ முடித்து

தந்ததன.. தானனனா..  ஆஆ...

- என, தொலை தூரத்துத் தெம்மாங்கு சத்தம்...

அந்தத் தெம்மாங்கு - அது ஒன்றே - நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

நன்றி - ஓவியர் திரு. மாதவன்
தெம்மாங்கினைத் தொடர்ந்து -
தென்னங்கனி பிளந்தாற்போல,
காளை ஒருவனின் கம்பீரமான குரல்..
அவனருகில் இளங்கன்னி ஒருத்தி!..

இருந்தும் -  சிறிது சோகமும் கூட!..

ஏன்!.. எதற்கு?..

தொடர்ந்து கேட்போம் வாருங்கள்..

ஒட்டுக் கேட்பது தவறில்லையா?..

வீட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்பது தான் தவறு.. பெருந்தவறு!..
இங்கே வெட்டவெளியில் காற்றலையில் அல்லவா தெம்மாங்கு தவழுகின்றது... கேட்டு மகிழ்வதில் தவறே இல்லை!..

தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அதென்னங்க தாழையாம் பூ முடிச்சி?...

இருங்க... இந்தப் பையனோட பாட்டுக்கு அந்தப் பொண்ணும் இசைப்பாட்டு பாடுது.. முதல்ல பாட்டைக் கேட்போம்.. அப்புறமா.. அர்த்தத்தைப் பார்ப்போம்!..

பாளை போல் சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு..
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா...
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா!..

ஆகா!...

தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா.. அது
மானாபிமானங்களைக் காக்குமா?..
மானாபிமானங்களைக் காக்குமா?..

மானமே ஆடைகளாம் மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..

அடடா!...

அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா?. வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..

மண்பார்த்து விளைவதில்லை.. மரம் பார்த்து படர்வதில்லை..
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா... அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...


தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?..

அற்புதம்.. அற்புதம்!.. ஆனா.. அவங்க ரெண்டு பேரும் அப்படியே மாடு கன்றை ஓட்டிக்கிட்டு போறாங்களே?..

ஆமாம்.. சாயங்காலப் பொழுதாச்சே... வயக்காட்டு வேலைய முடிஞ்சது.. வீட்டுக்குப் போக வேணாமா?... கம்புக்கு களை எடுத்தாச்சு.. தம்பிக்கும் பொண்ணு பார்த்தாச்சு.. அப்படிங்கற மாதிரி... வரப்போட வரப்பா வேலையும் பார்த்தாச்சு.. வருங்காலத்துக்கு பேசவேண்டியதையும் பேசியாச்சு!..

அப்போ - ரெண்டு பேருக்கும் காதல் தானே!..

காதல் தான்... ஆனா, அதுக்கும் மேலே!... அதனால தான் - தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து.. ந்னு வார்த்தை வந்தது!...

அதுக்கு என்னங்க அர்த்தம்?...

மல்லிகை முல்லை - இந்த மாதிரி பூவெல்லாம் ரெண்டு நாள்ல வாடிப் போனா -  வாசமும் சேர்ந்து காணாப் போயிடும்.. ஆனா, இந்த தாழம்பூ இருக்கே - அது ஒரு தனி ரகம்.. நாளாக நாளாகத் தான் அதனோட மடல்கள்..ல இருந்து வாசம் வீசும்...

அது சரி!... 

அந்தக் காலத்தில சின்ன பெண்ணுங்களுக்கு சடை அப்படின்னாலே - தாழம்பூ சடை தான்.. குஞ்சம் தான்!.. போற பக்கமெல்லாம் வாசம் கமகம...ன்னு!..

சரி.. அதுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம்?..

இருக்கே!... தாழையாம் பூ முடிச்சி.. அதுக்கப்புறம்?...

தடம் பார்த்து நடை நடந்து!...

அப்படின்னா.... பாதையைப் பார்த்து நடக்கிறது... கிராமங்கள்..ல சொல்வாங்க... வயக்காட்டுத் தடம்... ஒத்தையடித் தடம்... வண்டித் தடம்..

ஆமாங்க... நானும் படிச்சிருக்கேன்... ரயில் தடம் புரண்டது.. அப்படின்னு போடுவானுங்க... அதுக்கு இது தானா அர்த்தம்!... நல்லாயிருக்கே!...

பாதையைப் பார்த்து நடக்கிறது..ன்னா.. எல்லா பாதையும் பாதையில்லை... நல்லவங்க நடந்த தடம்.. அந்தத் தடம் பார்த்து நடப்பது தான் வாழ்க்கை!...

அடடா!.. நீங்க என்னா தமிழ் வாத்தியாருக்குப் படிச்சீங்களா?...

படிக்கலாம்..ன்னு தான் போனேன்... லஞ்சம் அதிகமா கேட்டானுங்க..கொடுக்க முடியலே.. அதனாலே படிக்க முடியாமப் போச்சு!...

அப்பவே.. லஞ்சமெல்லாம் உண்டா?...

அப்ப ஆரம்பிச்ச வியாதி தானே!... இன்னைக்குப் புரையோடிப் போய் நாறிக் கிடக்குது...

சரி.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. அப்படின்னா!..

பொன்னம்மா..ன்றது அந்தப் பொண்ணோட பேரு.. பொன் - தங்கம்..ன்னு தெரியும்.. அதோட பெருமையும் புரியும்... அப்படி குணமுடைய பொண்ணு வாழையில போல வந்தாளாம்!...

அது தான் எப்படி..ங்கறேன்!..



பச்சைப் பசுந்தளிரா வாழைக் குருந்து மேல வந்து - அப்படியே மயில் தோகை மாதிரி விரிஞ்சும் விரியாம ரொம்பவும் மென்மையா இருக்கும்.. தொட்டாலே கிழிஞ்சு போயிடும்.. இதுக்கு தான் தலை வாழை இலை..ன்னு பேரு...

அடடா!..

இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம முன்னவங்க போன தடம் பார்த்து காய்ந்தாலும் காயாத தாழம்பூவை சூடிக்கிட்டு வர்றவளே!... என் வாசலுக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்தாய்?... அப்படின்னு கேக்கிறான்!... புரிஞ்சுதா!...

இதுக்கும் மேல புரியாம இருக்குமா!...

அதுக்குத் தான் அந்தப் பொண்ணு சொல்லுது... தென்னம்பாளையைப் போல சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு.. ஆளழகும் சேர்ந்திருக்கு... இதுக்கு மேல என்ன வேணும் - ஏழையாப் பொறந்த எங்களுக்கு!...

ஆகா!... என்னா ரசனை!... ஒருத்தரோட மனசு அவரோட சிரிப்பில தெரியும்.. அப்படி..ன்னு சொல்லுவாங்க.. அதுபோல கன்னையோட மனசு அவனோட தென்னம்பாளைச் சிரிப்பில தெரியுது... இல்லீங்களா!..

அதுல பாருங்க!... பொன்னும் பொருளும் பூந்தட்டு சீதனமும் ஒரு மானம் மரியாதையான வாழ்க்கைக்கு போதுமா!.. அப்படின்னு.. கேக்குறதுக்கு - அந்தப் பொண்ணு சொல்லுது -

தன் மானம் தான் இடுப்புச் சேலை... சுயமரியாதை தான் என்னோட நகைநட்டு.. என்னோட வழித்துணை பரம்பரையா வர்ற நாணம்!.. இதெல்லாம் இருந்த போதுமே.. எங்களோட குலப்பெருமை எட்டுத் திசையும் கொடி கட்டித் தோன்றுமே!... - அப்படின்னு!... என்ன அருமையா இருக்கு!..

அந்த நாணம் இல்லாதது தான் - நாட்டுல நடக்கிற எல்லா தப்புக்கும் காரணம்!..  நாணம் இருக்கிற எவருமே ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாங்க!.. கழிவறைக்கு வெளியே ஒன்னுக்கு போறதில இருந்து அடுத்தவன் பொண்டாட்டிய புள்ளை குட்டிகளோட இழுத்துக்கிட்டு ஓடறது வரைக்கும் - வெட்கம் கெட்டவங்க செய்யிற வேலை தானே!..

சரியாச் சொன்னீங்க!.. இருந்தாலும் கன்னையனுக்குச் சந்தேகம் வருது.. பொன்னம்மா நம்மைப் பார்த்து ஆளழகு ..ன்னு சொல்லிடிச்சு.. அதுக்கு நாம தகுதியா?.. நமக்குத் தான் ஒரு கையும் காலும் வெளங்காதே!.. அவளை எப்படி நாம காப்பாத்த போறோம்!... அதனால அவனே கேட்கிறான்...

கைகால் விளங்காதவன் மேல யார் இஷ்டப்படுவாங்க!.. நீ என்ன தான் எம்மேலெ இஷ்டப்பட்டாலும் உங்க வீட்டில சம்மதிப்பாங்களா!... முடவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படறது யாருக்குத் தான் சந்தோஷமா இருக்கும்?..

மனக்குறை இருக்கும் தானே!...

அதுக்கு பொன்னம்மா சொல்லுது பாருங்க... மண்ணைப் பார்த்தா பயிர் வளருது?.. மரத்தைப் பார்த்தா கொடி படருது?. அந்தப் பயிர்லயும் கொடியிலயும் குத்தம் குறை உண்டா?..

என்னோட கண்ணு ரெண்டையும் பாருங்க... அதுல ஒரு களங்கமும் உண்டா.. சொல்லுங்க!.. என்னைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா?...

பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கிறதே - ஒரு புண்ணியம்!..

அதுக்கு மேல கன்னையனுக்கு கேள்வி ஏதும் இல்லை!.. நாம காப்பாற்றலே.. ன்னாலும் அவ நம்மளைக் காப்பாற்றிடுவா... ன்னு நம்பிக்கை பிறக்குது... அப்புறம் என்ன!... கள்ளச் சிரிப்பு தான்.. குறும்புப் பார்வைதான்!...

இந்தப் பாட்டுல - களங்கமில்லாத அன்பு தான்.. வாழ்க்கைக்கு அடிப்படை.. ன்னு சொல்றாங்க..

இப்படியெல்லாம் தான் அன்றைக்கு வாழ்ந்தாங்க... ஆனா இன்னிக்கு நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டா...

ரத்தம் கொதிக்குது... வேணாம்!... அந்தப் பேச்சை விடுங்க... ஏதோ இன்னைக்கு சாயங்காலப் பொழுது நல்லபடியா ஆனது... இன்னொரு சமயம் சந்திப்போம்!...

நல்லது.. மறுபடியும் பார்ப்போம்!..
* * *


ஜூன் 24..

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களுக்கும் - பிறந்த நாள்..


கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்களுள் -
மண் மணக்கும் பாடல் ஒன்றினை - என்னளவில் வழங்கியுள்ளேன்..

காலத்தை வென்று நிற்கும் - தாழையாம் பூ முடித்து - எனும் இனிய பாடலை
இங்கே - கேட்டு மகிழுங்கள்..

மெல்லிசை மன்னரின் இசையில் பாடியவர்கள் -
T.M. சௌந்தரராஜன், P. லீலா..

நடித்து வண்ணம் கூட்டியவர்கள் -
சிவாஜி கணேசன், சரோஜாதேவி..

இந்தப் பாடல் பெரும் சிறப்பு எய்துவதற்குக் காரணமான - 
மகத்தான கலைஞர்களையும் நினைவு கூர்தல் மகிழ்ச்சி..



நேற்றே இந்தப் பதிவினை வழங்கியிருக்க வேண்டும்..

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று 18 மணி நேர வேலை..
ஆறு மணி நேர ஓய்வில் மீண்டும் சனிக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும்..

தவிரவும் இணைய இணைப்பு சொல்லும்படியாக இல்லை..

எனவே தான் தாமதம் ஆகிவிட்டது..

மேலும் - அவர்கள் இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அவர்கள் வழங்கிய இனிய பாடல்களுடன் தான் நாளும் பொழுதும் விடிகின்றது..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
அந்த மாபெரும் வித்தகர்களை 

நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

வியாழன், ஜூன் 23, 2016

மண்ணில் வீழ்ந்த மகராஜ்

எந்த நேரத்தில் Mission Madukkarai Maharaj என்று பேர் வைத்து அந்த யானையைப் பிடித்தார்களோ?..

தெரியவில்லை...

மண்ணில் இவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டுமா!.. 

- என்று, மனம் வெதும்பிய யானை -
மகாராஜனைப் போல் மானத்துடன் தன்னுயிரைத் துறந்திருக்கின்றது...


மதுக்கரையில் பிடிக்கப்பட்ட யானை
கடந்த ஞாயிறன்று கோவை மதுக்கரை வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானையை கும்கி எனும் அடிமை யானையாக மாற்றுவதற்காக - டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றதாக நாளிதழ் செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளமுடிகின்றது..

யானை இறந்ததை விட - அந்த யானையை கும்கியாக மாற்றும் ஆசை பறி போனதற்கு வருந்துகின்றது வனத்துறை..

கடந்த ஆறு மாத காலத்தில் - இந்த யானை மற்றும் இதன் கூட்டாளிகளினால் பெரும் இடர்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன..

யானையின் தாக்குதலினால் இரண்டு பேர் இறந்திருக்கின்றனர்..

எனவே - இந்த யானையை பிடிப்பதற்கு திட்டம் உருவானது..

அதன் பெயரே - மிஷன் மதுக்கரை மகராஜ்!..


திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது -
அந்த யானையுடன் மேலும் இரு யானைகள் இருக்க - அவற்றுள் அந்த முரட்டு யானையை மட்டும் பிடிக்க முடிவு செய்து குறிவைக்கப்பட்டது..

ஞாயிறன்று அதிகாலை கோவை மதுக்கரை ராணுவ முகாம் அருகே காட்டுக்குள் இருந்த யானை வெளியே வரும் தருணத்திற்காக -

எழுபதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நான்கு கும்கி யானைகளுடன் காத்திருந்தது வனத்துறை..

கும்கி யானைகள் - யானை பிடிப்பதற்கெனெ பழக்கப்பட்டவை..

எதிர்பார்த்தபடி -  காட்டுக்குள்ளிருந்து யானை வெளியே வந்தது..

அப்போது நேரம் 4.15.. சற்றும் தாமதிக்காமல் -
யானையின் மீது துப்பாக்கி மூலமாக மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது..

இளங்காலைப் பொழுதில் - இதனை எதிர்பாராத யானை அச்சமுற்றது..

பெருங்குரலெடுத்துப் பிளிறிக் கொண்டே ஓடிய யானை சற்று நேரத்தில் தள்ளாடியது..

அதற்காக காத்திருந்த வனத்துறையினர் - கும்கி யானைகளுடன் சென்று சுற்றி வளைத்து மடக்கினர்..





பிடிபட்ட யானை - ஐந்து மணி நேரம் கடுமையாகப் போராடியிருக்கின்றது -

தன்னை விடுவித்துக்கொள்வதற்காக - மடக்கிப் பிடித்த கும்கிகளான கலீம் மற்றும் விஜய் ஆகியோருடன் மோதியிருக்கின்றது..

ஆனாலும் பயனில்லை.. கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டது... கடும் முயற்சிக்குப் பின் லாரியில் ஏற்றப்பட்டது..

டாப்சிலிப் எனும் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது - என்ற அளவில் அந்த வட்டார மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை விவரித்தவாறே செய்திகள் முடிவடைந்திருந்தன..

யானை பிடிபட்ட சம்பவம் ஊடகங்களால் காணொளியாக்கப்பட்டு
யூ டியூப்பில் காணக் கிடைக்கின்றது..

அந்தக் காட்சியையும் சில தினங்களுக்கு முன்பாகக் கண்டேன்..

லாரியில் ஏற்றும்போது - கும்கி யானை முரட்டுத் தனமாக முட்டித் தள்ளுவதைக் கண்டு மனம் பதறியது...

யானைகள் ஊர்ப் பகுதிக்குள் வந்து செய்யும், அட்டகாசங்களையும் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பதால் -

எப்படியோ இந்த அளவில் ஓரளவுக்காவது பிரச்னை தீர்ந்தால் நல்லது என்றே இருந்தது...

ஆனாலும் -

பிடிபட்ட யானை லாரியில் ஏறுவதற்கு மறுத்து முரண்டு பிடிப்பதும்

அதற்கு இடம் கொடாமல் - கலீம் எனும் கும்கி பின்புறமாக பலமாக முட்டி மோதித் தள்ளி லாரிக்குள் திணிப்பதும்

அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ஆரவாரக் கூச்சலுடன் ரசிப்பதும்

யானையின் சாதனை மற்றும் வேதனை இவற்றை மகிழ்ச்சியுடன் படம் பிடிப்பதும்

- மனதைக் குடைந்து கொண்டேயிருந்தன...

சம்பவ இடத்திலேயே - பிடிக்கப்பட்ட யானை கும்கியாகப் போகின்றது - என்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள் - பதறியிருக்கின்றனர்..

வனத்துறையினரின் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் செய்திகள் கூறுகின்றன...

மக்கள் அடைந்த சிரமங்களைத் தீர்ப்பது என்ற நிலைப்பாடு மாறி -
வனத்துறையின் கும்கி யானைக்கான தேவைக்கானது - என்றாகியிருக்கின்றது...

பிடிக்கப்பட்ட அந்த யானை 20 வயதுடையது.. கம்பீரமாக திடகாத்திரமாக விளங்கியது.. பல ஆண்டுகளாக அந்தப் பகுதிக்கு வந்து போகும் பழக்கத்தை உடையது..

ஆனாலும் -
செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் வீரியம், கும்கிகளின் கொடூரத் தாக்குதல் இவற்றால் சோர்வடைந்த யானை - அன்றைய தினம் இரவும் பொழுதில் டாப்சிலி கொண்டு சேர்க்கப்பட்டது..

மறுநாள் - கட்டுக் கூண்டுக்குள் சற்றே மயக்கம் தெளிந்த நிலையில் -
மீண்டும் ரகளையைத் தொடங்கியிருக்கின்றது..

அடங்க மறுக்கும் யானைகளை - பட்டினி போட்டு தங்கள் வழிக்குக் கொண்டு வருவது தான் வழக்கமாம்...

ஆனாலும் - இந்த யானையின் கொட்டத்தை அடக்குவதற்காக மீண்டும் மீண்டும் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தினைச் செலுத்தியிருக்கின்றனர்..

அதன் விளைவாக - செவ்வாய்க் கிழமை மாலை 4.15 மணியளவில்
பிடிக்கப்பட்ட மகராஜ் மண்ணில் வீழ்ந்து தன்னுயிரைத் துறந்தது...

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து தான் யானையின் மரணத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்..

யானையின் எடைக்கு ஏற்ற அளவுதான் மயக்க மருந்து தான் செலுத்தப்பட வேண்டும் என்ற மருத்துவ விதிகள் எல்லாம் இருக்கின்றனவாம்..

மேலும் இதைப் போல் ஒரு சம்பவம் முன்பே நடந்திருக்கின்றது என்றும் அறியமுடிகின்றது..

பிடிக்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது - என்ற செய்தியை அறிந்து
அதிர்ச்சியுற்ற மனம் - இன்னும் பரிதவிக்கின்றது..

தங்கள் பகுதியில் வளைத்துப் பிடிக்கப்பட்ட யானை -
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததை அறிந்து
பதறிய மக்கள் - போஸ்டர் அடித்து அஞ்சலி செய்திருக்கின்றனர்..

அந்தப் பகுதியே மௌனமாகிக் கிடக்கின்றதாம்...

நன்றி - விகடன் 
இந்தப் பதிவு - 
இணையச்செய்திகளைக் கொண்டு தொகுக்கப்பட்டது..
தினமணி மற்றும் விகடன் தளங்களுக்கு நன்றி..
* * *

ஊடகங்கள் சொல்கின்றபடி -
மயக்க மருந்தா யானையைக் கொன்றது!?...

யானை - அது கொண்ட மானம் தான் அதைக் கொன்றிருக்க வேண்டும்..

இந்த வனமெல்லாம் நமக்கே சொந்தம் என்ற நினைப்பில் -
காலகாலமாக - சுற்றித் திரிந்திருந்த காட்டிற்குள்ளிருந்து
கதறக் கதற கட்டியிழுத்துச் செல்லப்பட்ட 
வேதனை தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்..

தன் இனத்தாலேயே - பின்புறமாகக் குத்தித் தாக்கப்பட்ட 
அவமானம் தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்...

தன்னைக் கண்டு அஞ்சி ஓடிய மனிதர்கள் எல்லாம்
தன்னுடைய கையறு நிலை கண்டு எள்ளி நகையாடி குதுகலித்த 
கேவலம் தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்..

இன்றும் பெரியோர்கள் சொல்வார்கள் - 

அவன் அந்த ஊர்க்காரன் அல்லவா!.. அப்படித்தான் இருப்பான்!..

அவள் குடிச்சதெல்லாம் காவேரித் தண்ணி!.. இப்படித்தான் பேசுவாள்!..

மண்ணும் நீரும் சிலவகையான குணாதிசயங்களை நிர்ணயிக்கவல்லவை..

மண்ணுக்கும் நீருக்கும் - இவற்றுடன் தொடர்புடைய உணவுக்கும் பல்வேறு சிறப்பியல்புகள் உள்ளன..

அந்த சிறப்பியல்புகள் - மனிதர்களுக்கு மட்டுமல்லாது
விலங்குகளுக்கும் பொருந்தி வரக்கூடுமோ!...

சற்றே சிந்தித்தால் - வரலாற்றில் ஓர் ஏடு கண் முன்னே வருகின்றது..

கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னன் -
சோழனுடன் போரிட்ட போது அவனால் சிறை பிடிக்கப்பட்டு குடவாயிற்கோட்டத்தில் காவலில் அடைக்கப்படுகின்றான்..

சிறையினுள் - கடும் தாகத்தில் தவித்து காவலாளியிடம் தண்ணீர் கேட்கிறான் - மன்னன்..

அடைபட்டுக் கிடப்பவன் ஆயினும் அவனும் ஒரு அரசன் என்ற உணர்வற்ற - காவலாளி தாமதமாக நீர் கொண்டு வந்து அலட்சியமாகத் தருகின்றான்...

தன்மானத்தால் உந்தப்பட்ட இரும்பொறை தாங்கொணாத மனத்தினனாக -
தாமதிக்கப்பட்ட தண்ணீரையும் - தன்னுயிரையும் ஒருசேர துறக்கின்றான்..

அரசனின் அத்தகைய மாண்பு - அந்த யானைக்கும் இருந்திருக்குமோ!..

நமக்கு வேண்டியதெல்லாம் - உணவும் நீரும் தானே!..
அங்கே வனத்தில் கிடைத்தால் என்ன?..
இங்கே கொட்டடியில் கிடைத்தால் என்ன?..

- என்ற நினைப்புடன் அந்த யானையால் இருக்க முடியவில்லை..

நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் அடங்குவதில்லை!..

- என்று அறிந்திருக்கின்றேன்..

அந்த வார்த்தைகளை இப்போது தேடினேன்..

மலையாளக் கவிஞர் K.  சச்சிதானந்தன் என்பவருடையது என்றறிந்தேன்..

நூற்றுக்கு நூறு உண்மையான சொல் - யானையின் மனதைக் காட்டுகின்றது...


சென்ற திங்களன்று - மதுக்கரை அருகே நள்ளிரவுப் பொழுதில் (1.30)தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை ஒன்று - பெங்களூர் - கொச்சுவேளி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் மற்றொரு வேதனை..

2009 ல் இதே வழித் தடத்தில் இதே மாதிரி ரயிலில் அடிபட்டு நான்கு யானைகள் உயிரிழந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..

யானையின் வழித்தடம் முற்றாக ஆக்ரமிக்கப்பட்டிருக்கின்றது என்பது நிதர்சனம்..

கண்ணிருந்தும் கண்டு கொள்ள மறுக்கின்றது மனித சமுதாயம்..

இயற்கைச் சங்கிலியைக் காக்கும் பொறுப்பு தமக்கும் உண்டு என்பதை யானையும் மற்ற உயிரினங்களும் அறிந்தே இருக்கின்றன..

அதனை மறந்தவன் - மறுப்பவன் மனிதன் மட்டுமே!..

அன்றொரு நாள் நீர் வாழ் முதலையிடமிருந்து
யானைக்குக் கிடைத்த மோட்சம்

இன்று இந்த நாள் நிலம் வாழ் முதலைகளிடம் சிக்கி
உயிரிழந்த யானைகளுக்கும் கிடைக்கட்டும்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***