நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 02, 2024

தவம் என்ன?..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 16
புதன் கிழமை


 மகாத்மா
தோற்றம் 2 - 10 - 1869


லால்பகதூர் சாஸ்திரி
தோற்றம் 2 -10 - 1904


காமராஜர்
மறைவு 2 - 10 - 1975

பெருந்தகையாளர்
இவர்களைத் தலைவர்களாகப் பெறுவதற்கு
தவம் என்ன செய்தோமோ..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
*

ஜெய் ஜெய் பாரத்
***

திங்கள், அக்டோபர் 02, 2023

அஞ்சலி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 15
திங்கட்கிழமை

இன்று 
காந்தி ஜெயந்தி

 ***

ஏழையாய்ப் பிறந்து
ஏழையாகவே வாழ்ந்து
மறைந்த ஏந்தல்
ஸ்ரீமான் லால்பகதூர் சாஸ்திரி




ஏழைகள் ஏற்றமுற  
இனிதே புரிந்து எளிமையில் வாழ்ந்த 
ஏழையிலும் ஏழை





பன்னிரண்டாண்டில் ஒருமுறை மலரும் 
குறிஞ்சி மலர்களைப் போல
தன்னலம் இல்லாத் தலைவர்கள் பிறப்பார் 
ஆயிரத்தில் ஒருநாளே..
-: கவியரசர் :-
*

வாராது வந்த
மா மணி என வந்தோர்
வாழ்க வாழ்க 
***

வியாழன், ஜனவரி 30, 2020

சத்திய தரிசனம்

இன்று காந்திஜி அமரத்வம் எய்திய நாள்..

அண்ணலின் சத்திய சோதனையின் 
இறுதி அத்தியாயத்திலிருந்து 
சில துளிகள்..  
***

என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகின்றேன்..

(ஆனால்) அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படியாகச் செய்திருக்கின்றேனா என்பதை நான் அறியேன்..

உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று மாத்திரமே நான் கூற முடியும்..

எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டு கொண்டேனோ, அதே விதமாக அதை விவரிப்பதே எனது இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கின்றது..


சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரே மாதிரியான அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன..

சத்தியத்தை தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அஹிம்சை தான்!.. - என்பதை,

இந்த (சத்திய சோதனை) அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கங்களும் (வாசகருக்கு) உணர்த்தவில்லை எனில்,

இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட சிரங்கள் எல்லாம் வீணாயின - என்றே கொள்வேன்..


சத்தியத்தின் தோற்றத்தை, நான் அவ்வப்போது கணநேரம் கண்டு கொண்டது மட்டுமே - சத்தியத்தின் விவரிக்க ஒண்ணாத பெருஞ்சோதியைத் தெரிந்து கொண்டதாக ஆகாது..

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய வடிவத்தினை -
நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் -

மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக இருத்தல் வேண்டும்..

ஆசாபாசங்கள் இன்னும் என்னுள்ளத்தினுள்ளே மறைவாக தூங்கிக் கிடக்கின்றன..

அவை இன்னும் என்னிடம் இருக்கின்றன என்பதான எண்ணம் என்னைத் தோலிவியுறச் செய்துவிடவில்லையாயினும் அவமானப்படும்படி செய்கின்றது..

அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெறச் செய்து,
ஆனந்தத்தை அளிக்கின்றன..


ஆனால் -

இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை எனக்கு முன்னால் இருக்கின்றது என்பதனை அறிவேன்..

என்னை நான் அணுவிற்கும் அணுவாக ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்..

தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் கடையனாகத்
தன்னைத் தானே விருப்பத்துடன் ஆக்கிக் கொள்ளாத வரையில்
ஒரு மனிதனுக்கு விமோசனமே கிடையாது என்பதையும் நான் அறிவேன்..
***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் 
பாதக் கமலங்களுக்கு
அஞ்சலி.. 
*** 

ஞாயிறு, மார்ச் 17, 2019

அஞ்சலி..

வலையுலகில் அனைவருக்கும் அறிமுகமான அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் இறைவனுடன் கலந்து விட்டார்..


வலையுலகின் மேன்மைக்குப் பாடுபட்டவர்...
அவரது வலைச்சரத்தில் ஆசிரியப் பணியினை வழங்கி வலைப் பதிவாளர்களை உற்சாகப்படுத்திச் சிறப்பித்தவர்....

தஞ்சையம்பதியையும் அறிந்து வாழ்த்தியதுடன்
எனக்கும் ஆசிரியப் பணி வழங்கி ஊக்கப்படுத்தினார்....

உடல் நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன் தினம் காலமான செய்தியை எங்கள் பிளாக் வழி அறிந்து மிக வருந்தினேன்...

அவர்தம் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்...

அவரது இழப்பினைத் தாங்கிக் கொள்ளும் வகையினை எல்லாம் வல்ல இறைவனே தந்தருளல் வேண்டும்...

தமிழுக்குத் தொண்டாற்றிய அன்பின் ஐயா அவர்கள் இறைநிழலில் இன்புற்றிருக்க பிரார்த்திப்போம்..

ஓம் சாந்தி ஓம்
ஃஃஃ

ஞாயிறு, பிப்ரவரி 17, 2019

வீர வணக்கம்



கோழைகளின் கொடூரத் தாக்குதலினால் 
எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியிருக்கின்றனர்..




மூர்க்கர்களின் வெறியாட்டம் கண்டு - என்றைக்கு இந்தப் படுபாவிகளின் கொட்டம் அடங்குமோ என்று அனல் பட்ட புழுவாகத் துடிக்கின்றனர் -  நல்லோர்கள்..

இந்த கொடூரத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டாடிக் களிக்கும் ஈனர்களைக் காணும் போது நெற்றிக் கண்ணை ஈசன் எப்போது திறப்பான்?... என்றிருக்கின்றது... 

We salute you, brave sons of Mother India': 
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ..
சர்வேசா...
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை...


இம்மண்ணுக்காக
தம்முயிர் துறந்த வீரர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த அஞ்சலி...

பாரதத்தாயின் தீரப் புதல்வர்கள் அனைவரும்
வீர சுவர்க்கம் எய்திட வேண்டி நிற்போம்...

ஜெய்ஹிந்த்
ஃஃஃ 

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

பாரதரத்னா


பாரதரத்னா 
ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய்...
( 25/12/1924 - 16/8/2018)

பாரதத்தின் தவப்புதல்வர்..

நிர்வாகத் திறமை மிக்கவர்..

பிரதமர் பதவி இவரால் சிறப்புற்றது..

மிகச் சிறந்த தலைவராகத் திகழ்ந்தவர்..



தமது ஆட்சிக் காலத்தில்

பாரதத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்..
அதோடு மட்டுமல்லாமல்
அதன் முன்னேற்றத்தைக் கண்களில் கொண்டு 
அதற்கான வழிமுறைகளைக் கண்டவர்...



பொக்ரானில் அணு சக்தி சோதனையை நடாத்தி
அந்நியர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர்...


தேசத்தின் மக்களால் நேசிக்கப்பட்ட திருமகன்..
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெருமகன்..


வையகத்து வாழ்வில் இருந்து
விடை பெற்றுக் கொண்டார்...


கை கூப்பி வணங்குகிறேன்..
சென்று வாருங்கள் ஐயா!..

மீண்டும் 
தங்களை மகனாக - மடி தாங்கக் 
காத்திருக்கின்றாள் பாரதத் தாய்!..
ஃஃஃ

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

அஞ்சலி



நீயே உனக்கு நிகர்..




நெஞ்சிருக்கும் வரை 
நினைவிருக்கும்..
நெஞ்சுக்கு நீதியும் 
நிலைத்திருக்கும்...


கண்ணீருடன்
விடை தருகின்றோம்..

இறைநிழலில்
அமைதி கொள்க..
ஃஃஃ 

புதன், பிப்ரவரி 28, 2018

அஞ்சலி

 

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் பீடாதிபதி 
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
உடல் நலக் குறைவால் 
இன்று காலை 
இறை நிழலை எய்தினார்கள்..

ஆன்மீகப் பணிகளுடன்
ஏழை மக்களுக்கு ஆதரவாக
சமூக நலப் பணிகளையும்
மேற்கொண்டவர்..

83 வயதான பெரியவர்..
ஸ்வாமிகளை சங்கரமடத்தில் தரிசித்து 
ஆசி பெற்ற நாள் நினைவுக்கு வருகின்றது..

எல்லா நிலை மக்களையும்
ஆன்மீகம் சென்றடைய
பாடுபட்டவர்...


கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும்
அனைவராலும் மதிக்கப்பட்டவர்... 

இறை நிழலை எய்திய 
ஸ்வாமிகளுக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலிகள்..


ஓம்
நம சிவாய
ஓம் 
***

சனி, பிப்ரவரி 11, 2017

ஊட்டுவதெல்லாம்...

மனம் வலிக்கின்றது..



ஹாசினி எனும் ஏழு வயதுடைய குழந்தையை
இருபத்திரண்டு வயதுடைய ஈனப் பிறவி ஒன்று 
சிதைத்துக் கொன்று
தீயிட்டு எரித்திருக்கின்றது

நேற்று இரவு தான் அந்த செய்தியை அறிய நேர்ந்தது..

இப்படியும் செய்யக் கூடுமோ?...

இளம் பிஞ்சின் கதறலைக் கேட்டும் 
கலங்கித் துடிக்காத செவிப்பறை குறையோ?..

இளம் பிஞ்சின் கண்ணீரைக் கண்டும் 
கண்ணீர் வடிக்காத விழி வெறுங்குழியோ?..

இளம் பிஞ்சின் அவலத்தைக் கண்டும் 
துன்பத்தில் துடிக்காத இதயமும் கருங்கல்லோ?..

அட.. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டே!..

அது கூட இல்லாமல் -
இதயம் - இறுகிய சதைப் பிண்டமாய்ப் போனதோ!..

பெற்ற வயிறெல்லாம் பற்றித் துடிக்கின்றதே..

இளகித் துடிக்கும் இதயம் என்ற ஒன்றில்லாத 
இழிபிறவி ஒன்றும் இந்த வையகத்தில் இருந்துள்ளதே!..

எப்படியடா மனம் வந்தது?..

மடியிருத்தி ஊட்டுவதெல்லாம் பாலாகுமா!..
மாதகன் உனக்கு எது ஊட்டப்பட்டதோ?..

பள்ளி பயின்றதெல்லாம் பண்பாகுமா?..
நீயடைந்த கல்வி உனக்கு எதை ஊட்டியதோ?..

உன்னை மகன் என்று பெற்றதும்
நீ கல்வி என்று கற்றதும்

இப்படியோர் இழிசெயல் நிகழ்வதற்காகவா?...

இரக்கமில்லா இழிபிறவியின் இதயம் 
ஈக்களுக்கும் புழுக்களுக்கும் இரையாகித் தொலையட்டும்!..


மகளை இழந்த பெற்றோர் 
தம் துயரைக் காலம் மற்றுவதாக!..

ஹாசினி எனும் அரும்பின் ஆன்மா 
சாந்தியடையட்டும்...


***

ஞாயிறு, ஜூன் 26, 2016

நெஞ்சில் உரமுமின்றி...

கடந்த வெள்ளிக்கிழமை (24/6) அன்று காலை 6.30 மணியளவில் பரபரப்பு மிகுந்த சென்னை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் -

ஸ்வாதி எனும் இளம்பெண் 24 வயதுடையவர் - துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்..


ஸ்வாதி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர். செங்கல்பட்டு செல்வதற்காகக் காத்திருந்த வேளையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது..

ரயில் நிலையத்திற்கு அவரது தந்தையுடன் வருவது வழக்கமாம்..

அன்றைக்கும் அப்படித் தான் வந்திருக்கின்றார்..

என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு - அங்கே காத்திருந்தாரோ!..

அருகில் வந்தவன் ஒற்றையாய்த் தனி ஆள்..

கண்ணிமைக்கும் போதில் - வெட்டிச் சாய்த்திருக்கின்றான்..


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி..
***

இந்தக் கொடுமை நடத்தப்பட்டபோது - ரயில் நிலையத்தில் அங்குமிங்குமாக இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்..

ஏதும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு!..
-  என்று நினைத்துக் கொண்டார்களோ - என்னவோ!..

உயிருக்குப் போராடுகின்ற சக பயணிக்கு ஒத்தாசையாக - கூக்குரலிடக் கூட அவர்களுக்கு இயலவில்லை...

அதுமட்டுமல்லாமல் - 

ஸ்வாதியை - இரத்தச் சகதியில் வீழ்த்தி விட்டு கொலைகாரன் நிதானமாக வெளியேறிய பின் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்..

மகாகவி - ஊமை ஜனங்கள் - என்றுரைத்தாரே..

அப்படி ஆயினர் போலும்!..

அல்லது -

தான் ... தன் சுகம்!... - என்று வாளாயிருந்து விட்டனர் போலும்...


சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி..
*** 

அங்கிருந்தோரில் எவருக்கேனும் -
இந்த ஸ்வாதி உடன் பிறப்பாக உற்றாராக இருந்திருந்தால் - 
இப்படி வாய் மூடி வேடிக்கை பார்த்திருக்கக் கூடுமோ?..

கூக்குரலிட்டு களேபரம் செய்வதற்கு - உடன் பிறப்பாக உற்றாராக இருக்கத் தான் வேண்டுமெனில் - அங்கிருந்தோர் எவரும் மனிதரில் சேர்த்தியில்லை..

தன் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதவராக நடைமேடையில் விழுந்த சுவாதி உயிருக்குப் போராடிய கணம் மிகக் கொடுமையானது...

குப்பை மேட்டில் மேய்ந்து திரியும் கோழிக் கூட்டத்துள் வல்லூறு புகுந்து விட்டால் - உடனிருக்கும் மற்ற கோழிகள் பெருங்குரலெடுத்துச் சப்தமிடுவதைக் கிராமங்களில் வசித்தவர்கள் கேட்டிருக்கக் கூடும்..

அந்த கோழிகளுக்கு உள்ள உணர்வுகள் கூட -
அங்கிருந்தவர்களுக்கு இல்லாமல் போனது பெரும் சோகம்...

கொலை செய்து விட்டு நிதானமாகச் சென்ற படுபாவியைத் துரத்திப் பிடிக்கக் கூட அங்கிருந்தோர் முயலவில்லை - எனில் ,

இவர்களைக் குறை கூறுவதற்கு -
உலக மொழிகள் எவற்றிலும் வார்த்தைகள் இல்லை!. - என்பது தான் உண்மை..

பெண் என்றால் பேயும் இரங்கும்!.. - என்பார்கள்..

திட்டமிட்டு வந்தவன் இதயத்தில் அதற்கெல்லாம் இடம் இருக்க நியாயமில்லை தான்!...

ஆனால் - அங்கிருந்தோருடைய இதயங்களிலும் இல்லாமல் போனதே!..

அப்படி எங்கேதான் போய்த் தொலைந்ததோ - இரக்கம்!..


மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே பேணி இருந்தாரடீ..  
***

அந்தோ பரிதாபம்!...

துடிதுடித்து இறந்து போன ஸ்வாதி -
துறுதுறுப்பாக சமூக சேவை ஆற்றுவதில் ஆர்வம் உடையவராம்!..

சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை பெருமழையில் சிக்கிக் கொண்டபோது தன்னார்வமாக - மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கின்றார்..

தன் கைப்பொருளையும் பிறரிடம் வேண்டிப் பெற்ற பொருளையும் -
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி துயர் துடைத்திருக்கின்றார்..

தர்மம் தலை காக்கும்.. தக்க சமயத்தில் உயிர் காக்கும்!..

கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது..

ஆனால் - ஸ்வாதிக்கு அவ்விதம் நடக்கவில்லையே!..

துயருற்றோர் தம் துன்பம் தீர்ப்பதற்குத் தன் கரத்தை நீட்டியிருக்கின்றார்...

ஸ்வாதிக்கு ஆதரவாக ஒரு கரம் கூட நீளவில்லையே..

டேய்.. விடாதே.. பிடி!.. - என்றொரு குரல் கூட எழும்பவில்லையே...

ஓர் உயிரை எடுத்து விட்டு - நிதானமாக நடந்து சென்ற கொலைகாரனைத் துரத்திச் செல்வதற்குக் கூட யாருக்கும் துணிவில்லை... எனும் போது ,

நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது மனிதர்களின் மத்தியில் தானா?.. -என்று ஐயம் எழுகின்றது...

மனிதம் மாண்டு போனதோ!..

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுள் -
ஸ்வாதிக்கு நேர்ந்தது முதலும் அல்ல.. கடைசியும் அல்ல!..

இன்னும் எத்தனையோ - காத்திருக்கின்றன..

என்ன செய்யப் போகின்றோம் - பெண்களின் துயர் துடைக்க!..

மூன்றாண்டுகளுக்கு முன் காரைக்கால் பேருந்து நிலையத்தில் விநோதினி என்ற இளம் பெண் அமில வீச்சுக்கு ஆளானாள்..

கொடூர காயங்களுடன் படாத பாடுபட்டு - அகால மரணத்தைத் தழுவினாள்..

குற்றவாளி நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்..
இன்னும் சில வருடங்களில் விடுதலையாகக் கூடும்..

சென்ற ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் இது...

கிழவன் ஒருவன் பதினைந்து வயதுடைய - தன் பேத்தியை சக கிழவர்களுடன் பகிர்ந்து கொண்டான்..

அந்தப் படுபாவிகள் இன்னும் நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றார்கள்..

வயது குறைந்தவன் இவன் - என்ற நோக்கில் அரசு அவனைப் பரிபாலித்தது..

அவனோ - தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை - வயதுக்கு மூத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வன்புணர்வு செய்தவன்..

குற்றுயிராகக் கிடந்த அந்த இளம் பெண்ணை மீண்டும் அனுபவித்ததோடு கையினால் துழாவி - கம்பி ஒன்றினால் அவளது குறியைக் குத்திக் கிழித்து அவளுடைய மரணத்திற்கு வித்திட்டவன்...

குறைந்த தண்டனைக்குப் பின் அவனது நல்வாழ்விற்கு அரசே பெருந்துணை புரிந்தது...

அவனும் இன்று நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்...

இத்தகைய இழிபிறவிகளுக்காத்தான் இந்தத் திருக்குறள்..

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.. (0550)

வள்ளுவப் பெருமானுக்கு - 
நீருக்கு நடுவே சிலை எழுப்பி வைப்பதெல்லாம் பெருமையே அல்ல!..
நெஞ்சுக்கு நடுவே எழுப்பி வைத்து நீதியைக் காப்பதுதான் பெருமை!..

இதை நினைவில் கொள்ளாவிடில் நமக்குத் தான் சிறுமை!..


கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி..  
***

நம்பிக்கை!..

கொள்வதும் கொடுப்பதும் அந்த ஒன்றுதான்!..
அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்..

நம்பிக்கை கொள்ளவும் இல்லை..
நம்பிக்கை கொடுக்கவும் இல்லை!... எனில்
- என்ன மாதிரியான கட்டமைப்பு இது!..
கேவலம்..
***


பதிவில் உள்ள படங்கள் - இணையத்தில் பெற்றவை...
காணொளி :- தந்தி தொலைக்காட்சி.. அவர்தமக்கு நன்றி..

எல்லாவற்றுக்கும் மேலாக -
இரத்த தானம் செய்வதில் மிகுந்த விருப்புடைய - ஸ்வாதி
தனது நண்பர்களிடம் கூறுவது - இப்படி...

இறைவன் படைத்தது ஒரு பிறப்பு..
அதற்கு இரத்த தானம் கொடுப்பது - மறு பிறப்பு!..

அதன்படியே , 

மண் மகளுக்கும்
 தன் குருதியைக் கொடையாய்க் 
கொடுத்து விட்டு சென்று விட்டார் ..

மனித நேயம் கொண்டு மலர்ந்த மலர்
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது..

ஸ்வாதி 
உன் ஆன்மா அமைதியுறட்டும்!..  
***

புதன், மே 18, 2016

நினைவஞ்சலி

இன்று மே 18..

இதோ - பாதுகாப்புப் பகுதி.. இங்கே ஒளிந்து கொள்ளுங்கள்!..

- என்ற வார்த்தைகளைக் கேட்டு -

குழந்தைகளும் பெண்களும், வயதானவர்களும் - என, ஆயிரக்கணக்கில் நம்பிக்கையுடன் வந்தனர்..

அவர்களுடைய நம்பிக்கை பழுதானது..

வஞ்சகமும் வக்கிரமும் கை கோர்த்துக் கொள்ள -
சிறு பகுதிக்குள் அடைந்து கொண்ட அவர்கள் மீது கொத்து கொத்தாகக் குண்டுகள் பாய்ந்தன..

அங்கே எழுந்த அவலக்குரல் எட்டுத்திக்கையும் அதிர வைத்தது..

மனித நேயம் மண்ணில் வீழ்த்தப்பட்ட நாள் - இன்று..


முள்ளி வாய்க்கால்!..

உலகம் அழியும் வரை - அழியாதிருக்கும் நினைவுகளுள் ஒன்று..

ஏதிலிகளாக உயிர் துறந்த தமிழினத்திற்கு கண்ணீர் அஞ்சலி..









இசைப்பிரியா
மரணத்தின் தலைவாசலில்




மண்ணில் வீழ்ந்த மலராக இசைப்பிரியா
முள்ளி வாய்க்கால் படுகொலை குறித்த 
மேலதிகத் தகவல்களை -  இங்கே காணலாம்..


கீழேயுள்ள படங்கள்
தஞ்சாவூர்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
அமைக்கப்பட்டுள்ள
சிற்பத் தொகுப்புகள்..

முள்ளிவாய்க்கால் முற்றம் 
முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்
முள்ளிவாய்க்கால் முற்றம்

கன்னங்களில் வழிந்தவை
தண்ணீர்த் துளிகள் எனில்
இந்நேரம் காய்ந்திருக்கும்..

அவை -
கண்ணீர்த் துளிகள்..

எக்காலத்தும் இனிமேல்
காய்வதற்கில்லை - மனமும்
ஓய்வதற்கில்லை!.. 
***