நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 09, 2021

அழைப்பவர் குரலுக்கு

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்...

இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருளால் கடந்த நிலையில் அதனை  இங்கே பதிவு செய்திருக்கின்றேன்..

நேற்று காலை ஏழு மணியளவில் திடீரென தலை சுற்றலும் வாந்தி மயக்கமும் ஏற்பட்டு நிலை குலைந்து விட்டேன்..

தற்போது ஒரு மாதமாக காலை ஐந்து மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விடியல் 3:30 அளவில் எழுந்திருப்பது வழக்கம்..

நேற்றும் இப்படித்தான்... என்ன ஒரு வித்தியாசம் என்றால் வழக்கத்தில் இல்லாதபடிக்கு  பாட்டிலில் அடைக்கப்பட்ட சோயா பீன்ஸ் பால்  அருந்தியது தான்.. வாரம் ஒரு முறை சோயா பால் குடிப்பது என்றாலும் விடியற்காலையில் வெறும் வயிற்றில் என்பது இதுவே முதல் முறை..

தலை சுற்றல் ஏற்பட்டாலும் நினைவு தடுமாறவில்லை.. கந்தர் அலஙகாரப் பாடலுடன், முருகா.. முருகா!.. - என்றிருந்தது மனம்..

மயக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்தே அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் செல்ல முடிந்தது.. ஆனாலும் அங்கே அனுமதிக்கப்பட வில்லை.. காரணம் எனது Civil Id  முன்பிருந்த முகவரியிலேயே உள்ளது.. அதன்படி அந்த மாவட்ட மருத்துவ மனைக்குத் தான் செல்ல வேண்டும்... இது தான் இங்கு நடைமுறை.. நம்ம ஊர் மாதிரி வேறு கூச்சல்களுக்கு இடமில்லை..

அதன்படி செல்ல வேண்டிய மருத்துவமனை ஏறத்தாழ 40 கிமீ.. அதிகப்படியான வெயிலில் அவ்வளவு தூரத்துக்கு தனியொருவனாக செல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை..

இக்கட்டான சூழ்நிலையில் - நீயே கதி ஈஸ்வரி!.. என்று வாடகைக் கார் மூலம் அறைக்குத் திரும்பி படுத்து விட்டேன்...

மூன்று மணி நேரம் கழித்து விழித்தேன்.. தளர்ச்சியாக இருந்தது.. தலை சுற்றல் இல்லை.. அசுத்தமாகி விட்ட உடைகளைத் துவைத்துப் போட்டு விட்டு கொஞ்சமாக கஞ்சி வைத்தேன் - கிருத்திகை சேர்ந்திருக்கும் செவ்வாய் ஆயிற்றே!..

இதற்கிடையில் இவ்விஷயத்தை வீட்டுக்கும் இங்கே நண்பர் கணேச மூர்த்திக்கும் தெரிவித்தேன்...

அதெல்லாம் ஒன்றுமில்லை.. பயப்பட வேண்டாம்.. இன்று சந்திராஷ்டமம்.. இங்கே இவனுக்கும் ராத்திரியெல்லாம் பிரச்னை.. எல்லாம் சரியாகி விடும்!.. - என்றார்கள் வீட்டிலிருந்து..

கணேச மூர்த்தி -  உடனே புறப்பட்டு வருகின்றேன்!.. - என்றார்...

அவர் வேலை செய்யும் இடத்துக்கும் நான் இருக்கும் இடத்துக்கும் ஐம்பது கி.மீ தூரம்...

அந்த அன்பு உள்ளத்துக்கு பதில் சொல்லி விட்டு மாலை ஆறு மணியளவில் சற்று தொலைவிலுள்ள தனியார் மருத்துவ மனைக்குச் சென்றேன்..

அங்கே விவரம் சொல்லி பணம் செலுத்திய பிறகு இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்கள்..

சில விநாடிகள் கழித்து அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்..

என்னை அழைத்து - உங்களுக்கு மிகவும் அதிக அளவில் இரத்த அழுத்தம் உள்ளது.. அரசு மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்.. இங்கே அனுமதிக்க முடியாது!.. - என்று சொல்லி வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள்..

அங்கிருந்து கணேச மூர்த்தி அறைக்குச் சென்றேன்.. வழக்கமான உபசரிப்பு...

நண்பர் கணேச மூர்த்தி புன்னகையுடன் சொன்னார் - இது வெறும் பித்த மயக்கம்.. வேறொன்றுமில்லை!.. - என்று..

புள்ளிருக்குவேளூர் ஸ்ரீ வைத்திய நாதரின் திருச்சாந்து உருண்டையும் திரு நீறும் கொடுத்தார்...

இது நீங்கள் எனக்குக் கொடுத்தது தான்!.. - என்று சொல்லிக் கொண்டே..

என்னிடம் இருந்தவை சென்ற ஆண்டு கொரானா தாக்கிய போது நடத்திய எதிர் தாக்குதலில் தீர்ந்து போயிருந்தது..

இரவு அப்பளம், கொத்தமல்லிச் சட்னியுடன் சாப்பாடு.. நல்ல தூக்கம்..

காலைப் பொழுது கலகலப்பாக விடிந்துள்ளது.. வீட்டிற்கு நலம் குறித்துச் சொன்னேன்... நேற்று இரவே நல்ல சகுனங்கள் தென்பட்டதாக சொன்னார்கள்.. இருந்தாலும் உள்ளுக்குள் தவிப்பு தான்...

இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது.. கழுத்து தோள்களில் லேசான அழுத்தம் தெரிகிறதேயன்றி வேறு எவ்வித சங்கடமும் இல்லை..

நேற்று எபியில் எனது ஆக்கம் வெளியாகி இருந்த நிலையில் கருத்துரைகளுக்கு நன்றி சொல்ல இயலவில்லை.. ஆனாலும் அவ்வப்போது எபிக்குச் சென்று கதைக்கான வரவேற்பினைக் கண்டு என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன்...

சற்று முன் உணவகத்திற்குச் சென்று இட்லி சாப்பிட்டு வந்தேன்..

எனக்காக மதியத்துக்கு சோறு ஆக்கி குழம்பும் வைத்து விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார் கணேச மூர்த்தி.. மாலை திரும்பியதும் வேறொரு மருத்துவ மனைக்குச் சென்று மேலதிக ஆலோசனை பெறலாம் என்று திட்டம்...

எல்லாம் வல்ல இறைவனின் அருட்கதிர்கள் அன்பு கொண்ட நெஞ்சங்களின் கரங்களாகி உதவி செய்கின்றன...
கால்களாகி நம்முடன் நடக்கின்றன...


அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்..

ஹரி ஓம் நமோ நாராயணாய..
***

கொரோனா எனும்தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

செவ்வாய், ஜூன் 08, 2021

தூரிகை வண்ணம்

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அனைவராலும் அறியப்பெற்ற
ஓவியர் திரு. இளையராஜா (43)
அவர்கள் நேற்று
கொரானா தீநுண்மியால்
பாதிக்கப்பட்ட நிலையில்
இறைவனடி சேர்ந்தார் என்கிற
செய்தியறிந்து
கலங்காத நெஞ்சமில்லை..

இன்றைய பதிவில்
திரு. இளையராஜா அவர்களது
தூரிகை வண்ணத்தில்
காரிகை வண்ணம்..

தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தை அடுத்த
செம்பியன் வரம்பு எனும்
ஊரைச் சேர்ந்தவர்..


தனது தூரிகையால்
பெண்ணோவியங்களைப்
பொன்னோவியங்கள்
ஆக்கியவர்..


அவரது
கைவண்ணத்தில் உருவாகிய
சித்திரப்பாவை ஒருத்தி
சகுந்தலா எனும் பெயரில்
எனது கதைக்குள்ளும்
உலவித் திரிந்தாள்..

எனது பதிவுகள்
வேறு சிலவற்றிலும்
ஓவியர் இளையராஜா
அவர்களது சித்திரங்கள்
இடம் பெற்றிருக்கின்றன..

அவரை என்றென்றும்
என் நெஞ்சம்
நினைத்திருக்கும்..

அவரது பிரிவால்
துயருற்றிருக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
ஆறுதலையும் தேறுதலையும்
எல்லாம் வல்ல இறைவன்
அருள்வானாக...


ஓவியர் திரு. இளையராஜா
அவர்களது ஆன்மா
தனது திருவடி நிழலில்
கலந்திருக்க
இறைவன் அருள் புரிவானாக..
 ஃஃஃ

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

ஞாயிறு, ஜூன் 06, 2021

ஆனந்த ஒளி

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி நகருக்கு அருகில் இருக்கின்ற
இருக்கன்குடி  திருத்தலத்தில்
கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ  மாரியம்மனைத் துதித்து இரண்டு மாதங்களுக்கு
முன்பு எழுதப் பெற்ற பாடல்
இன்றைய பதிவில்... 


பிறக்கும் உயிர்க்குப் பெருந்துணையே குணம்
சிறக்கும் மனிதர்க்கு வருந்துணையே
வெறுக்கும் வினைதனைச் செய்திடினும் மனம்
பொறுக்கும் தாயே மகமாயி...1 

இருக்கன்குடி என்னும் தலத்தினளே அருள்
சுரக்கும் கற்பகத் திருவினளே..
இருகை ஏந்தி உன்னிடம் நின்றேன் 
திருக்கண் நோக்கிப் பொழிந்திடுவாய்.. 2


நேர்வழி யதனில் நின்றறியேன் நித்தம்
நின்முகம் பார்த்துப் பணிந்த றியேன்..
சீர்கொண்டு உன்புகழ் பாடுதற்கு நல்ல
தென்தமிழ்ச் சொல்லும் நானறியேன்.. 3

அன்புடன் என்னையும் சிந்தை செய்து
அருள் தர அழைத்த  அன்னையளே
உன்முக தரிசனம் முழு மதியாய் நன்மை
தந்திடக் கூடும் பெரு நிதியாய்.. 4

உறும் துயர் தீர்த்திட வரும் வகையாய்
நறுங் குழல் நாயகி என எழுந்தாய்..
கோமதி சங்கரி நாரணியாய்
குறை தீர்த்திட வரும் எழில் பூரணியாய்.. 5

இடுக்கண் தீர்க்கும் தன்மையளே
இருக்கன் குடியின் மகமாயி..
கடுக்கும் வேதனை தனைத் தீர்த்து
கொடுக்கும் கரங்களில் நலம் காட்டு.. 6


வலம் வந்து வணங்கிட நலம் தருவாய்
நலம் தந்து வளம் தந்து துணை வருவாய்
தவம் என்று அறியா மட மனதில்
சிவம் எனும் மங்கலம் தான் அருள்வாய்..7

உடற்பிணி யதுவும் நீங்கிடவே எந்தன்
உளம் உந்தன் வாசலில் தொழுதிடவே 
வலி கொண்ட நெஞ்சுக்கு வழிகாட்டு எந்தன்
விழி தனில் ஆனந்த ஒளி கூட்டு.. 8
***
அனைவரது இல்லத்திலும்
நலம் ஓங்கிடுவதற்கு
அன்னை அருள் புரிவாளாக..

ஓம் சக்தி ஓம்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

வியாழன், ஜூன் 03, 2021

உயிர்வளி சூழ்கவே

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உணவே மருந்து எனும்
அமுதமொழி நம்முடையது...

நம்மைச் சூழ்ந்திருக்கும்
இயற்கையே நம்மைப்
பாதுகாக்க வல்லது..

இயற்கையை நாம் பாதுகாத்தால்
இயற்கை நம்மைப் பாதுகாக்கும்..

இன்றைய பதிவில்
தினமலர் நாளிதழில்
வெளியிடப்பட்டுள்ள
விழிப்புணர்வுக் கட்டுரை..


கட்டுரையை வழங்கியுள்ள
தினமலர் நாளிதழுக்கும்
மருத்துவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..


-: கட்டுரையாக்கம் :-
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், சென்னை
***

நம்  உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.


ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம்.அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும்.


துளசிச் செடியை சுற்றி வரும் போது தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்.  பத்து இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர்.


இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது.

இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது.
பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
***


கொரானா எனும் தீநுண்மியால்
ஏற்பட்டிருக்கும்
இந்த கொடுமையான காலகட்டம்
விரைவில் தொலைவதற்கு
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

காக்க காக்க கனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியினில் நோக்க..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..
ஃஃஃ