நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 20, 2021

ஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
ஆனி மாதத்தின்
சித்திரை நட்சத்திரம்..


சக்கரத்தாழ்வார்
என்று போற்றப்படும்
ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி..

சக்கரத்தாழ்வார் திருமேனியும்
அவரது சாந்நித்யமும்
பிரசித்தமானவை..

எதிர்பாராது ஏற்படும்
விபத்துகளிலிருந்து
சுதர்சனர் காத்தருள்வார்
என்பது பக்தர்களின்
நம்பிக்கை..

பெருமானின்
திருவுளப்பாங்கினை அறிந்து
முந்தி வந்து
அடியவர்களைக் காத்தருள்வது
சக்ராயுதம்..


ஆனையைப் பிடித்த
முதலையை வீழ்த்தியது
அவ்வண்ணமே..

பெருமானின் திருக்கரத்திலிருக்கும்
பிரயோகச் சக்கரம்
வெகு பிரசித்தம்..

சக்ராயுதத்தை
சுடராழி என்றுரைப்பார்
அருணகிரிநாதர்..

தமிழில்
ஆழி எனில் கடல் என்றும்
சக்கரம் என்றும் பொருள்
விளங்குகின்றது..

இராமாயணத்தில்
ஸ்ரீ பரதன்
சக்கரத்தாழ்வாரின் அம்சம்..

சலந்தராசுரனைப் பிளந்த
சக்கரத்தை வேண்டி
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
சிவ பெருமானை நோக்கித்
தவமிருந்ததாக
சிவ புராணங்கள் பேசுகின்றன..

சக்கரம் மாற்கீந்தானும்
சலந்தரனைப் பிளந்தானும் ...
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு..

இராவணனை
ஸ்ரீராமபிரான் தனது
கணைகளால் வீழ்த்தினார்
என்று நாமெல்லாம் இருக்க
அப்பர் பெருமானோ -
வீடவே சக்கரத்தால் எறிந்து
பின் அன்பு கொண்டு..
- என்று திருப்பதிகத்தில்
வர்ணிக்கின்றார்..

அத்தகைய
சக்கரத்தினைப் பெற வேண்டி
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
தவமியற்றிய தலம்
திருவீழிமிழலை..


நாளும் ஆயிரம் தாமரைகளால்
வழிபாடு நிகழ்த்துங்கால்
ஒருநாள் ஒரு மலர் குறையவும்
சற்றம் தயங்காமல்
தனது விழியினைத்
தாமரை மலராக அர்ப்பணிக்க
விழியுடன் சக்ராயுதத்தையும்
ஸ்ரீ ஹரி பரந்தாமனிடம்
இறைவன் நல்கியதாக
ஐதீகம்..

அரக்கோணத்திற்கு அருகிலுள்ள
திருமாற்பேறு தலத்திற்கும்
இதுவே தல புராணம்..


நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக்
கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந் திழிச்சும் கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்தனாரே..
-: திருநாவுக்கரசர் :-
***

ஆழிசூழ் இவ்வுலகை
ஆழியே காத்திடுக..
ஆழியே போற்றி போற்றி
வாழியே போற்றி போற்றி..

ஸுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்..

சைவ வைணவ சமயங்களில்
புனிதமானதொரு திருவடிவம்
ஸ்ரீ சக்கரமாகிய சுதர்சனம்..
***

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. காலை வணக்கம் துரை அண்ணா.

  அப்பர் பெருமான் திருப்பதிகத்தில் ராமர் ராவணனை வீழ்த்தியது பற்றி வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு - சொல்லியிருப்பது இப்போதுதான் அறிகிறேன். அருமை..

  எங்கும் நன்மை விளைந்திடட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா அவர்களுக்கு நல்வரவு...

   சக்ராயுதத்தைப் பற்றி இன்னும் சொல்லலாம்... நள்ளிரவு 12:30 மணியளவில் எழுதப்பட்ட பதிவு... விடியற்காலை 3:30 க்கு வேலைக்குப் புறப்பட்டு விட்டேன்...

   இராமேசுவரம் திருப்பதிகத்தில் தான் அப்பர் பெருமான் அவ்விதமாகக் கூறுகின்றார்... முழுப்பாடலையும் வேறொரு சமயத்தில் தருகின்றேன்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
   வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
   தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
   நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.

   இந்தப் பாடல்தானே துரை அண்ணா?

   திருராமேச்சுரம் பற்றி பெருமான் பாடியது?

   உங்களுக்கு நேரம் இருக்கும் போது எழுதுங்கள் துரை அண்ணா...நள்ளிரவு எல்லாம் எழுதறீங்களே. காலையில் வெகு சீக்கிரம் வேலைக்கும் போணுமே. நிதானமாக எழுதுங்க துரை அண்ணா.

   கீதா

   நீக்கு
 2. சக்கரத்தின் பெருமை அளவிட முடியாதது. அப்பர் சொன்னதை இப்போதே அறிந்தேன். திருவீழிமிழலை கருவிலிக்கு அருகேயே இருந்தும் இப்போத் தான் சுமார் பத்து வருஷங்களுக்கு முன்னர் தான் பார்க்கக் கிடைத்தது. திருமால்பூர் போனது இல்லை.

  பதிலளிநீக்கு
 3. நரசிம்ம உபாசகர்களாலேயே சுதர்ஸன சக்கரம் எழுதப்படும் என்பார்கள். அவர்களுக்கும் இந்த மந்திரம் சித்தி அடைந்தாலே எழுத முடியும். எனக்குத் தெரிந்து ஒருவர் எங்கள் குருநாதரின் நண்பர்களில் ஒருவர். அவர் பெயரும் நரசிம்மா தான் எங்கள் குழுவில் இருந்தார். அவருக்கு பரிபூரண சித்தி கிடைத்து ஆன்மிகப் பாதையில் எங்கேயோ போய்விட்டார். என்னோட இளைய நண்பர் அம்பி நரசிம்ம உபாசகர். இப்போது அம்பேரிக்காவின் அட்லான்டாவில் குடும்பத்துடன் இருக்கார். அவர் தம்பி தக்குடு என்பவர் தேவி உபாசகர். கத்தாரில் குடும்பத்துடன் இருக்கார்.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராம், ஶ்ரீசக்கரம் அம்பிகையோடது. ஶ்ரீசக்ரவாஸினி அவள். சுதர்ஸன சக்கரம் பெருமாளுக்கே உரியது. அவர் தேவைப்படும்போது சுதர்ஸன சக்கரப் பிரயோகம் உண்டு. ஶ்ரீசக்கரம் அம்பிகையின் வாசஸ்தலம். இரண்டுக்கும் வேறுபாடுகள் நிறைய. வழிபாட்டு முறைகளிலும் பலவிதமான வேறுபாடுகள். முடிந்தால் பின்னர்!

   நீக்கு
 5. இருங்க அப்போ கமெண்ட்டை நீக்கிடறேன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அருமையான விளக்கங்களுடன் ஸ்ரீ சுதர்சன சக்கர மகிமை பற்றி தெரிந்து கொண்டேன். பதிவை பக்திபூர்வமாக அழகாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு.
  திருவீழிமிழலை போய் இருக்கிறோம்.
  அப்பர் தேவாரம் படித்து வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான பதிவு. சக்கரத்தாழ்வார் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..