நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 23, 2023

வணக்கம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 9
  வியாழக்கிழமை


வணக்கம்!..

பாரதத்தின் உன்னதமான உயர்ந்ததொரு பண்பாடு..

வணங்குவதும் வாழ்த்துவதும் 
இறையுணர்வில் பூத்திருக்கும்
மங்கலத்தின் அடையாளங்கள்..

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!.. 
- என்றது தமிழ்..

மாணிக்க வாசகர் அருளிய திருவாக்கு இது..

மேலும்,
கரமலர் மொட்டித்து,
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்.. - என்றெல்லாம் இறையடியார்களைக் குறிக்கின்றார் மாணிக்கவாசகர்..

மருகலானடி வாழ்த்தி வணங்கிடே!.. - என்று அன்புக் கட்டளையிடுபவர் திருநாவுக்கரசர்..

இரு கரங்களையும் கூப்பி வணக்கம் என்று செல்லும்போதே மனம் நெகிழ்ந்து விடும்.. 

வணக்கம் சொல்லும் முறையை இடத்துக்கு இடம் வேறுபடுத்தி வகுத்திருக்கின்றனர்.. 
 
வறண்ட மனதுடன் சாதாரணமாக இரு கைகளையும் கூப்புவதோ தலைக்கு மேலே தூக்குவதோ  வணக்கத்தில் சேராது.. முகமும் மனமும் ஒருசேர மலர்ந்திருக்க வேண்டும்.. 

இரு கரங்களையும்  நெஞ்சுக்கு நேராகக் கூப்பி வணக்கம் என்று  சொல்வது ஒருவரை  நாம் மனதார வரவேற்கின்றோம்.. வரவேற்பதில் மகிழ்கின்றோம் - என்பதற்கான அடையாளம்..  

நெஞ்சுக்கு நேராக கை கூப்பி வணக்கம் சொல்வது எல்லாருக்குமானதல்ல..

பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வகுத்தது.. 

தாய் தந்தை உறவு முறை உடையவர்களுக்கும் வயதில் மூத்தோருக்கும் முகத்திற்கு நேராக இரு கரங்களையும் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள் என்றால் நெஞ்சுக்கு நேராக கரங்களைக்  கூப்பி வரவேற்க வேண்டும்..


கல்வி கற்பித்த  ஆசிரியருக்கு - நெற்றிக்கு நேராக  கரங்களைக் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். 

நன்றாக நம்மைப் படைத்து உண்ணவும் உடுக்கவும் உழைக்கவும் உறங்கவும் ஆகியவற்றில் நமக்கு நல்ல சூழலை அமைத்துக் கொடுத்த இறைவன் எல்லாவற்றிற்கும் மேலானவர். 

மனிதன் வகுத்து வைத்திருக்கும் அனைத்தையும் கடந்து உயர்ந்தவர் என்பதால், இரு கரங்களையும் கூப்பி - தலை மேல் வைத்து வணங்குகிறோம்..

கூப்பிய கரங்களை தலையின் மேலே வைத்து வணக்கம் சொல்வதற்கு திரியங்க நமஸ்காரம் என்று பெயர்..

திரியங்க நமஸ்காரத்தில்
உச்சந்தலையில் உள்ள (துரியம்) சஹஸ்ரார கமலத்துடன் கைகளாகிய கமலத்துக்கு ஸ்பரிசம் விளைகிறது..
சஹஸ்ரார கமலமும் கர  கமலமும் தீண்டிக் கொள்வதால்  ஹ்ருதய கமலமாகிய ( அநாகத சக்கரம்) நெஞ்சகத்தில் பேரானந்தம் பெருக்கெடுக்கின்றது..

இதற்கு அடுத்த நிலையாக இரு கரங்களையும் கூப்பி
தலைக்கு மேல் உயர்த்தி வணங்குகிறோம்..

இந்நிலை துவாதசாந்த நமஸ்காரம் எனப்படும்..

கரங்குவிவார் உள்மகிழுங் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க.. -
என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்வது இந்த நிலைகளைத் தான்..


கரங்குவிவார் உள்மகிழுங் கோன் .. - என்பதற்கு இதயக்கமலத்தில் வசிக்கின்ற இறைவன் என்றும் பெரியோர்கள் பொருள் சொல்கின்றார்கள்..

அதுவும் ஏற்புடையதே..
அநாகதம் எனும் இதயக் கமலத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்து விட்டால் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் எல்லாம் தானே நடக்கும் என்பர்..

தலைக்கு மேல் கூப்பி இறைவனை வணங்குவது பாரதப் பண்பாடு.. இந்த மண்ணிற்கே உரியது.. இந்த அன்பும் அன்பின் அடையாளமும் வந்தேறிய எவராலும் சொல்லித் தரப்பட்டதில்லை..

இதற்கு வேறு யாரும் உரிமை கொண்டாடவே முடியாது..

பிறந்த குழந்தைக்கு உச்சந்தலையில் சிறு குழி எலும்பினால் மூடப்படாமல் தோலினால் மூடப்பட்டிருக்கும்.. இதை பிரம்மரந்திரக் குழி என்பர்..

இந்த பிரம்மரந்திரம் என்பது தக்ஷிணமேரு எனப்படும் தஞ்சை பெரியகோயில்  ஸ்ரீ விமானத்துடன் பேசப்படுவது.. வேறு எந்தக் கோயிலிலும் பிரம்மரந்திரம் பேசப்படுவதில்லை..

நான் இருக்கின்றேன்!. - என்று,  ஒவ்வொரு மனிதனுக்கும் ஈசன் உணர்த்தும் இடம் தான் பிரம்மரந்திரம்..


கர்ப்பப்பையில் - காத்திருக்கும் கரு முட்டையை துளைத்துக் கொண்டு நுழைந்த நுண்ணியதோர் உயிரணுவை பத்து மாதங்களில் சிசுவாக ஆக்கத் தெரிந்த இறைவனுக்கு - அந்த சிசுவின் உச்சந் தலையை எலும்பினால் மூடத் தெரியாதா?..

தெரியும்!..

உச்சந்தலைக் குழியைத் தோலால் மூடி அனுப்பி வைக்கின்ற ஈசனின் விளையாட்டு அங்கிருந்து தான் தொடங்குகின்றது...

இதற்கு மேற்கத்திய விஞ்சானம் (விஞ்ஞானம்) பல வித விளக்கங்களைத் தருகின்றது என்றாலும் நம்முடைய மெய்ஞ்ஞானம் வேறு!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், மார்ச் 22, 2023

நவகோள் மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 8
 புதன்கிழமை

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 
எழுதிய நவக்கிரக மாலை எங்கு சென்றதோ என்று - கடந்த ஞாயிறன்று வெளியான ஏழாங்கிழமை  பதிவில் சொல்லியிருந்தேன்..

அன்பின் சகோதரி கீதாரங்கன் அவர்களும் 
அன்பின் கோமதிஅரசு அவர்களும் புதிதாக எழுதுதற்கு ஊக்கமளித்தனர்.. அவர்கள் இருவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றி..

அதன்படி
திங்களன்று முழுவதையும் எழுதி விட்டேன்.. அன்று நள்ளிரவில் மேலும் சில வரிகள் கிடைத்தன.. 

நேற்று அனைத்தையும் ஒழுங்கு செய்து இறைவனின் நல்லாசியுடன் இதோ இன்றைய பதிவில்  - 
நவகோள் மாலை..


கோள்வினை தீர்க்கும் குணமிகு வேழம்
தாள்மலர் வாழ்த்த நலந்தரும் காலம்..
நவகோள் பணிந்து புகழ்வதும் உனையே
நானும் வந்தேன் காத்திடு எனையே..
நவகோள் துதிக்கும் திருவடி போற்றி
நலந்தரும் நாயகன் மலரடி போற்றி
கலங்கா மனந்தரு கணபதி போற்றி
ஆபத்துதவிடும் ஐங்கர போற்றி..


சோதிப் பிழம்பே சுந்தர வடிவே
நீதிக்கரசே நின் தாள் போற்றி
ஆதவன் என்றே அகிலம் போற்றும் 
ஆனந்த மூர்த்தி மலரடி போற்றி
சுற்றும் வையகம் நின் திருக்கோயில் 
சூழ்வளம் எல்லாம் நின்றன் வரங்கள்
வணங்கிடும் எம்மை வாழ்த்திடுவாயே
உஷையின் நாயக பதமலர் போற்றி..

திங்கள் ஊரில் திருமிகு கலையாய் 
திகழும் செல்வத் திருவடி போற்றி..
எங்கும் மங்கலம் தங்கிட வருவாய் 
மங்கல நாயக சந்திர போற்றி..
நிறை நிலவாகி பங்குனி நாளில் 
பரமனைத் தொழுதிடும் சுந்தர போற்றி
சூழ்புவி எங்கும்  மகிழ்வாய் நிறைவாய் 
நிறைவாய் திகழ்வாய்  போற்றி போற்றி..

வைத்தீஸ் வரனின் கோயிலிலே 
வளர் தையல் நாயகி ஆட்சியிலே
செவ்வேளுடனே சேர்ந்தருள் புரியும் 
செவ்வாய் அழகன் போற்றி போற்றி..
மனையுறு மங்கலம் மாண்புடன் திகழ 
மகிழ்ந்தருள் புரிவாய் மலரடி போற்றி..
செம்மலர் ஏந்தி செவ்வழி காட்டும் 
அங்காரகனே அடிமலர் போற்றி..

முக்குளம் உடைய வெண்கா டதனில்
பிரம்ம வித்யா நாயகி வாழ்த்த
நல்லருள் புரியும் புதனே போற்றி
நன்றாம் அறிவை நல்குவை போற்றி
வரும் பிணி எல்லாம் தீர்ப்பாய் போற்றி..
வரந்தர வருகின்ற வானவன் போற்றி
கல்வியும் செல்வமும் சீர்பட அருளும்
நாயகன் போற்றி போற்றி போற்றி..

மாமுனி வசிட்டர் வணங்கிய வாசல்
வளர்குழல் நாயகி வாழ்ந்திடும் வாசல்
வகையறியாத வருத்தம் தீர்த்து
வாழ்வினை அருளும் வள்ளலின் வாசல்
வயிரவர் தென்திசை நோக்கிடும் வாசல்
வளந்தரு வியாழ குருவின் வாசல்
வாழ்க வாழ்க தென்குடித் திட்டை 
வாழ்க வாழ்கவே குருவின் வாசல்..

கஞ்சனூர் உடைய கற்பகக் கோனை 
கை தொழும் சுக்கிரன் மலரடி போற்றி
வந்தார் வாழ்ந்திட வரந்தரு வெள்ளி
வருக வருக என வாழ்த்திடும் அள்ளி 
அயரா அன்புடன் தொழுதிடும் தூயோர் 
துயரம் தீர்க்கும் திருவே போற்றி 
பொன் பொருள் போகம் புகழுடன் பொருந்த
நன்மலர் கொண்டு நவின்றோம் போற்றி..

தவமிகு தர்ப்பை வனத்தினில் வந்து 
வரந்தர நின்ற வாழ்வே போற்றி
சிவமிகு செம்மை நல்கிடும் நாயக 
சனைச்சர நின்றன் பதமே போற்றி
நல்லார் ஆயினும் இல்லார் ஆயினும்   
நடுவாய் நிற்கும் நாயக போற்றி
எள்முனை அளவாய் நன்மையைக் கொண்டு
நானும் வந்தேன்  திருவடி போற்றி..

வண்டார் குழலி பதமலர் போற்றி 
திருப்பாம் புரத்தில் சந்நிதி கொண்டாய்
சாயா கிரகம் என்றே சுழன்று 
சூரியன் வழியில் நின்றாய் போற்றி
நாடிடும் அன்பர் நலங் கொள 
அருளும் ராகு வாழி வாழியவே 
சிவனருள் தேடும் அடியார் வாழ்வில் 
சீர்மிக அருளும் அரவே வாழி வாழியவே..

வேணுவனத்தில் நாகநாதரை
போற்றி வணங்கிடும் கேது போற்றி
சஞ்சலம் தீர்க்கும் நிழல் நாயகனே 
சந்திரனுக் கொரு எதிர் வீரியனே
சங்கடம் தீர்ந்திட கை தொழுதேன்
கரதலம் கண்டு வரம் பல தருக 
வேண்டிய நலங்கள் நல்கிடும் 
ஞான காரகன் வாழிய வாழியவே!..
(வேணுவனம் என்பது மேலப்பெரும்பள்ளம்)


சிறியேன் கடையேன் செய்வது அறியேன்
செய்யத் தக்கன செய்தவன் அல்லேன்
ஆகாதனவும் தொலைத்தேன் அல்லேன்
ஏதினி தென்று என்மனம் திகைத்தேன்
இதமுறு நிழலாய் ஆலயம் அடைந்தேன்
அருந்தமிழ்ச் சொல்லை அழகுற எடுத்தேன்
 அன்புடன் அடியேன் அதனைத் தொடுத்தேன்..
வினைகள் தொலைந்திட வீழ்ந்து துதித்தேன்..

நவகோள் மகிழ்ந்து நலமுறக் காக்க
ஞாயிறும் திங்களும் திடமுடன்  காக்க
செவ்வாய் புதனும் சீருடன் காக்க
வியாழன் வெள்ளி பொலிவுடன் காக்க
சனைச்சரன் என்னை சந்ததம் காக்க
இருகோள் அரவும் இருந்தெனைக் காக்க
இன்முகம் பூத்து என்னுயிர் காக்க 
என்றும் இனிதே இருந்திடக் காக்க..

அகமும் புறமும் பொலிந்திடக் காக்க
மனையும் மகவும் மகிழ்ந்திடக் காக்க
சந்ததி நன்றாய் வாழ்ந்திடக் காக்க
ஊரும் உறவும் உயர்வுறக் காக்க
உற்றார் மற்றார் உவந்திடக் காக்க
உலகின் உயர்வு உயர்ந்திடக் காக்க
நாடும் காக்க நற்றமிழ் காக்க
நற்குல மாந்தர் பொற்பினை காக்க..

குறையென நானும் குறுகா வண்ணம் 
குறையா நலனைக் குளிர்ந்தே  அருள்க..
கல்லா மனதைக் கனியாய் கொண்டு 
காலம் முழுதும் கனிவாய் அருள்க..
பிழையேன் புரிந்த பிழைகளைப் பொறுத்து 
நயந்தே நல்லருள் நாளும் பொழிக..
நல்லறம் வாழ்க நல்லோர் வாழ்க 
நவகோள் நல்கும் நலங்கள் வாழ்க!..

வாழ்கவே வாழ்க வாழ்க..
வாழ்கவே வாழ்க வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், மார்ச் 21, 2023

கண்ணாடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 7
செவ்வாய்க்கிழமை

கல்வியின்
தரத்தைக்
கண்ணாடியாகக்
காட்டுகின்ற காணொளி..

காணொளியாளருக்கு
நன்றி..


சிந்தாது சிதறாது
சீர்கொண்ட தேசத்தில்
தீப்பட்ட வானரம்
உதறிய முட்டையாய்
சிதறியே போனது
கல்வி - கல்வி
கல்லடி பட்ட 
கண்ணாடி ஆனது..


கலையாத கல்வியும்
பிழையாகிப் போனது
விலையான கல்வியும்
விபரீதம் ஆனது..
விளையாத கதிர்போல
பதராகிப் போனது
 களையாகிக் கனவாகி
 கருகித்தான் போனது..

இளமையில் கல் என்ரான
இளமையே கல்லானது
காலையிலே படி என்றான்
இருள் ஒன்றே இருப்பானது
தாய்மொழியும் அறியாத
தற்குறிகள் தன் கையில்
தாய் நிலமும் வீழுமோ
தன்னிலையில் தாழுமோ!..

வகையறியா இருள் வந்து 
வாழ்வு தனில் சூழுமோ..
**

இறைவா கல்விதனைக்
காப்பாற்று!..
***

திங்கள், மார்ச் 20, 2023

காட்டுக்குயில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 6
  திங்கட்கிழமை


அன்பும்
அர்ப்பணிப்பும்
விநாயகருக்கு
உகந்தவை..


கருங்குயில் பாட்டும் திருச்செவி  கேட்கும்
கரிமுகம் கண்மலர்ந் தருளுடன் வாழ்த்தும்
ஔவைத் தமிழை தந்தது ஐங்கரம்
அன்புடன் வாழிய நற்றமிழ் குஞ்சரம்..

வாழ்த்திட வாழ்ந்திட வரந்தரும் தமிழே..
தமிழின் மற்றைப் பெயரும் அமிழ்தே!..
காலங்கள் தோறும் வளர்ந்தது தமிழே
வாழ்வில் வாழ்வாய் மலர்ந்ததும் தமிழே.. 

அன்பும் தமிழே அழகும் தமிழே
அறிவும் தமிழே அறிவதும் தமிழே
ஐங்கரன் அடியினை தமிழுடன் போற்றி
தகவுடன் வாழ்வோம் திருவிளக் கேற்றி..

தமிழே வாழ்க தாய்மொழி வாழ்க..
தவமே வாழ்க சிவமே வாழ்க..
கரியே வாழ்க கணபதி வாழ்க..
காலடி பணிந்தோர் யாவரும் வாழ்க..
**
காணொளியாளருக்கு
நன்றி..
நல்வாழ்த்துகள்..

வாழ்க வளமுடன்
ஓம் கம் கணபதயே நம:
***

ஞாயிறு, மார்ச் 19, 2023

ஏழாம் கிழமை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 5
   ஞாயிற்றுக்கிழமை

ஏழாம் கிழமை  - என, எங்கோன் முருகனுக்கு  
தொடுக்கப்பட்ட பாமாலை இது..

ஆறு கிரகங்களை ஆறுதலங்களுடன் வைத்து ஏழாவது கிழமையில் சனைச்சரனுடன் இருகோள் அரவு என ராகுவையும் கேதுவையும் வைத்துள்ளேன்..

நிறைவாக கொடி முதல் குடி வரை 
போற்றியுள்ளேன்..

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு 
முன்னர் நவக்ரக மாலை ஒன்றை எழுதி
வைத்திருந்தேன்..
  
கணினி மாற்றத்தில்
நூற்றுக்கணக்கான கோப்புகள் 
எங்கு சென்றனவோ தெரியவில்லை..


ஏழாம் கிழமை என் கவிக்குள்ளே
எழிலாய்த் திகழ எனக்கருள் புரிவாய்
தாளாம் தண்மலர்த் தாமரை தொழுதேன்
விழிகொண் டருளும் விநாயக வருக..
வாழும் நாளும் வளரும் நாளும்
வழித்துணை என்று வந்தவன் வாழ்க.
சூழும் நல்வினைக் காரணன் வருக..
வலஞ்சுழி வாரணன் வருக வருக..


செங்கதிர் செல்வன் தானெத் திகழும் 
சிவ சண்முகனே சரணம் சரணம்..
செஞ்சுடர் வேலுடன் செந்தூர் திகழும் 
சேந்தன் திருவடி சரணம் சரணம்..
எந்தையும் தாயும் தானென நிற்கும் 
சண்முகவேலா சரணம் சரணம்..
கரிமுகன் சோதர சரணம் சரணம் 
கதிர்வே லவனே சரணம் சரணம்!..


திங்கட் கலையாய் திகழும் தெய்வத் 
தென்பரங் குன்றத் திறைவா போற்றி
எங்கள் பிழைகள் எல்லாம் பொறுத்துப் 
புண்ணியம் அருளும் அரசே போற்றி
வெஞ்சினத் தோர்தனை வீழ்த்திய 
வேலா யுதனே போற்றி போற்றி போற்றி
குஞ்சரி கைத்தலம் பற்றிய குகனே 
குமரா உந்தன் திருவடி போற்றி!..


மங்கலம் யாவும் மாண்புறு வண்ணம் 
மாமலை நின்றவன் மலரடி போற்றி
செங்கரந் தன்னில் சீர்தரும் செல்வப் 
பழனியின் செல்வன் சேவடி போற்றி 
மங்கல மனையுறு மங்களன் போற்றி 
தண்மலர்த் தாமரைத் திருவடி போற்றி
எந்தன் தலைதனில் தாள்மலர் வைப்பாய் 
தண்டா யுதனே தலைவா போற்றி!..


இதமுறு நெஞ்சில் பதமுறு வண்ணம் 
நிதமும் நல்லருள் நல்குவை போற்றி
புதனொடு பூத்திடும் நல்லறி வெல்லாம் 
தமிழொடு நாவில் புரிகுவை போற்றி
ஏரகச் செல்வ என்றன் தலைவா
இணையடி மலர்கள் என்றும் போற்றி
நீரகக் காவிரிக் காவல போற்றி 
செந்தமிழ் சிவகுரு மணியே போற்றி!..


குருமணி போற்றி குகமணி போற்றி 
சேவற் கொடியுடை சிவமணி போற்றி
குஞ்சரி யுடனொரு கோலக்  கொடியாய் 
குறமகள் கொண்ட தவமணி போற்றி
திருவளர் தணிகா சலனே  போற்றி 
கருவளர் உயிருள் தமிழே போற்றி
நெஞ்சகந் தன்னுள் நிலையாய் நிற்கும் 
நின்மலர் அடிகள் போற்றி போற்றி..


அள்ளி அணைத்திடும் அன்னையின் மேலாய் 
அன்பினைக் காட்டும் அரசே போற்றி
குஞ்சரி தன்னொடு குறமகள் கூடி 
சோலைமலை தனில் வாழ்வே போற்றி
வெள்ளி முளைத்திடும் விடியற் பொழுதென 
புண்ணிய நல்கும் திருவடி போற்றி 
அஞ்சிடும் நெஞ்சில் அருள்மழை பொழியும் 
அறுமுக வேலன் அடிமலர் போற்றி!..


உனைச் சரண் புகுந்தேன் உயிரினில் ஏற்றி 
அறுபடை வீட்டின் தலைவா  போற்றி 
கரியன் என்னைக் கடையா வண்ணம் 
அரசே அருள்வாய் அழகா போற்றி
இருகோள் அரவம் வாராது அகல 
மயில் வாகனனே மலரடி போற்றி
எனைக்காத் தருள்வாய் எம்பெருமானே 
பன்னிரு கரத்தாய் பதமலர் போற்றி!..


நாளுடன் நாளாய் நலமுடன் வாழ்க
நலஞ்செய் தமிழின் எந்தாய் வாழ்க
நாவினில் தமிழாய் வந்தாய் வாழ்க
மலையுறு மன்னவ மலரடி வாழ்க
மணிவேல் வாழ்க மாமயில் வாழ்க
மாமலைச் சேவற் கொடியும் வாழ்க
 குஞ்சரி வாழ்க குறமகள் வாழ்க
குலவிடும் அன்பின் குவலயம் வாழ்க..


தண்முகத் தாமரை கணபதி வாழ்க
மண்ணும் வாழ்க விண்ணும் வாழ்க
விளங்கிடும் விண்கோள் யாவையும் வாழ்க
நான்முகன் வாழ்க நாரணன் வாழ்க
வண்டார் குழலி குமரியள் வாழ்க
கொண்டார் மனந்தனில் குழகன் வாழ்க
நன்றாய் நந்தி நற்றாள் வாழ்க
சீராய் சிவகணம் வாழ்கவே வாழ்க..

முருகா.. முருகா
முருகா.. முருகா
***

சனி, மார்ச் 18, 2023

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 4
சனிக்கிழமை


இன்று
Fb ல் வந்த காணொளி
 நன்றி. நன்றி..


தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, மார்ச் 17, 2023

தில்லை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 3
வெள்ளிக்கிழமை


தில்லை எனும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் தில்லை வனம்.

தில்லை திருச்சிற்றம்பலம் என்று வழங்குதல் மரபு..

சிற்றம்பலம் - சித் - அம்பரம் சித் - அறிவு, அம்பரம் - வெட்ட வெளி.

சித் - அம்பரம் .. இதுவே சிதம்பரம் என ஆயிற்று..


சோழ மன்னர்கள் பொற்கூரை வேய்ந்து அழகு பார்த்த திருக்கோயில்.. 

பஞ்ச பூதங்களுள் ஆகாயத் தலம்.. 
சைவத்தில் கோயில் எனக் குறிக்கப்படும் திருத்தலம்..

இத்தலத்தை ஞானாசிரியர்களாகிய நால்வருடன்  அருளாளர் பலரும் பாடிப் பரவியுள்ளனர்..

" தில்லை வாழ் அந்தணர் " - என்று திரு ஆரூரில் தியாகேசன் சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள்புரிய - திருத்தொண்டத் தொகை புராணம் உருவானது.. 

அதனை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெருமான் பாடுதற்கு உலகெலாம் " -  என, அம்பலத்தரசன் அடியெடுத்துக் கொடுக்க திருத் தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் உருவானது..

தில்லைப் பெருந்தேரை நகர்வதற்கு விடாமல் திருவிளையாடல் செய்து " தேர் நகர்வதற்கு பல்லாண்டு பாடுக!.. " என்று சேந்தனாருக்கும் அருள் புரிந்தனன்..
(பதிகப்பாடல்கள் : நன்றி பன்னிருதிருமுறை)

திருப்பாற்கடலில் திருமாலைத் தாங்கியுள்ள ஆதிசேடன் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி பெருமாளின் அனுமதியுடன்
இத்திருத்தலத்திற்கு வந்து ஈசனின் திருநடனம் கண்டு வணங்கி வைகுந்தம் திரும்பியதாக வைணவம் பேசுகின்றது..

இத்திருத்தலத்தில் கிழக்கு நோக்கிய சயனத் திருக் கோலமாகப் பெருமாள் குடி கொண்டுள்ளார்..


அருள்மிகு உமையாம்பிகை  
உடனுறை 
ஆதிமூலநாதர் 

அருள்மிகு சிவகாமவல்லி
உடனுறை 
ஆனந்த நடராஜ மூர்த்தி

தல விருட்சம் தில்லை மரம்
தீர்த்தம் சிவகங்கை


கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே..1/80/1

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் ன்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 4/23/1

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுள் திகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.. 4/23/2
-: திருநாவுக்கரசர் :-

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும் போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே..7/90/1

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்கணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.. 7/90/6
-: சுந்தரர் :-


இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனல் தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.. 1

வணங்கத் தலைவைத்து
வார்கழல் வாய் வாழ்த்த வைத்து
இணங்கத் தன் சீரடியார்
கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.. 7
-: மாணிக்கவாசகர் :-

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே..
(பொற்பதிக்கூத்து)

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள்ளே கண்டு தீர்ந்தற்ற வாறே..
(பொற் தில்லைக்கூத்து)
-: திருமூலர் :-


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்..
-: சேக்கிழார் :-

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
-: வள்ளலார் :-


கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ  ஏழ் உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை  ஒருத்தி நிலமகள்
மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே.. 1176
-: திருமங்கையாழ்வார் :-
திருச்சிற்றம்பலம்

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், மார்ச் 16, 2023

குருவி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 2
வியாழக்கிழமை
 
Fb ல் வந்த 
காணொளி..
நன்றி.. நன்றி..


பறவைகளின் 
அன்புதனைச்
சொல்லுதற்கு
மொழியில்லை
வெல்லுதற்கும்
வழியில்லையே..

பண்பற்ற வாழ்வதுவும்
 பயனற்ற பதராகி
காற்றோடு கலந்தோடும்
பழியன்றி ஏதுமில்லை
இனிதாவதொன்றுமில்லையே..

பாசத்தில் நேசத்தில்
நம்மை விட மேலுண்டு
பரிவுடன் வாழ்வதில்
பண்பாடு நலமுண்டு
பாதகம் ஏதுமில்லையே..


ஓய்ந்து விட்ட பறவைக்கும்
ஊட்டுதற்கு உறவுண்டு
உணர்வற்றுப் போகவில்லை
உயர்வின்றி தாழ்வில்லை
உலகினில் குறையில்லையே..

பசுந்தழையும் பழுத்து விடும்
என்று ஒரு சொல்லுண்டு
உள்ளத்தால் உணர்ந்திங்கு
உயிராக வாழ்ந்து விடுவோம்
 நமக்கொரு பழுதில்லையே..
 **
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
***

புதன், மார்ச் 15, 2023

பங்குனி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
புதன்கிழமை
பங்குனி மாதப்பிறப்பு

இவ்வருடத்தின் நிறைவான மாதம் பங்குனி..

சுப முகூர்த்தங்கள் கூடி வரும் பங்குனி மாதம் மிகவும் சிறப்பானது.. 


ஒரு வில், ஒரு சொல், ஒரு வில் - எனக் காட்டிய ஸ்ரீராமனின் திரு அவதாரம் பங்குனியில் தான்..


ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் பங்குனி உத்தரத்தில் தான்..

பங்குனியில் பிறந்ததால் தான் அர்ச்சுனனுக்கு பால்குணன் என்றொரு பெயர்..


தஞ்சை மாவட்டத்தின் தொன்மையான விழாவாகிய ஸ்ரீ நந்தி திருக்கல்யாணம் இம்மாத புனர்பூச நன்னாளில் தான்..

காவடி பால்குடம் பாதயாத்திரை - என,
எண்ணற்ற பக்தர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானை பழனியில் தரிசிப்பதும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திரப் பெருவிழாவில் தான்.    

ஸ்ரீ ராஜமாதங்கி
பங்குனி மாத அமாவாசையை அடுத்து வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள்
ஸ்ரீராஜ மாதங்கியை
நாயகியாகக் கொண்டு
வசந்த நவராத்திரியும் காரடையான் நோன்பும் பங்குனியை மேலும் சிறப்பாக்குகிறன..


சிவபெருமான் – பார்வதி திருக்கல்யாணமும், 


முருகன் – தெய்வயானை திருக்கல்யாணமும் உத்திரத்தில் தான் நடைபெற்றன..


திருஅரங்கத்தில் சேர்த்தி வைபவம் நிகழ்வது உத்திரத்தில் தான்..


காரைக்கால் அம்மையார் குருபூஜையும் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் தான்.. 

மாசி மகோத்ஸவங்களைத் தொடர்ந்து பற்பல கோயில்களிலும் பங்குனிப் பெருவிழாக்கள் நடப்பதும் குதிப்பிடத்தக்கது..

விருதுநகர் மாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழா என்பது தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருவிழா
விருதுநகரில் பிறந்தவர்கள் எங்கே வாழ்ந்தாலும் ஊருக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது..


வசந்த ருதுவின் தொடக்கமான பங்குனி தொட்டு அனைவரது வாழ்விலும் புதியதாக வசந்தம் மலரட்டும்..

வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், மார்ச் 14, 2023

நலம் வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 30
செவ்வாய்க்கிழமை


நம் நாட்டில்  முக்கிய உணவாக இருந்ததும்  இருப்பதும்  அரிசி..

உடல் உழைப்பே வாழ்க்கையாக இருந்த அந்தக் காலத்தில் உடலுக்கு மாறுபாடு இல்லாததாக இருந்தது அரிசி.. 

இன்றைக்கு அப்படியில்லை.. 

வாழ்க்கையின் தரமும் அரிசியின் தரமும் அடியோடு மாறி விட்டன..

வியர்வை வழிய வழிய உழைத்த மனிதனுக்கு அரிசிச்  சோறு அமிர்தமாக இருந்து உடலையும் உயிரையும் காத்தது..

இன்றைக்கு வெள்ளைச் சட்டை வேலையில் மனிதன் நோயாளியானது தான் மிச்சம்.. 

உயர்ந்த வகை உணவுகள் என்ற பெயரில் வருபவை எதுவும் உடல் நலனுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.. ஊறு விளைவிக்கின்றன.. 

ஒன்றிலிருந்து ஒன்று என உடல் உபாதைகள்..


உடல் நோய்க்கு மருந்து தின்பதிலேயே உருக்குலைந்து போகின்றான் மனிதன்.. 

அதிலும் நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாட்டை முற்றாகத் தீர்த்துக் கொள்ளும் வகையறியாது திகைத்து நிற்கின்றான்..

இரசாயன உரங்களால் விளைந்த நெல் அரிசிக்கு மாற்றாக - அன்றைக்கு மருத்துவ குணங்களுடன் மக்களுக்கு உறுதுணையாக இருந்த அரிசி வகைகள் 

இன்றைக்கு மீண்டும் சந்தைக்கு வந்தாலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது..

தற்காலத்தில் நடை முறையில் இருக்கும் பட்டை தீட்டப்பட்ட  அரிசியில் வெறும் கார்போஹேட்ரேட் மட்டும் தான் இருக்கிறது. 

இப்படி அரிசியில்  எந்தவித புரதங்களும் நார்ச் சத்துக்களும் பிற ஊட்டச் சத்துக்களும் கிடையாது  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் விட இந்த வெள்ளை அரிசியால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கிடுகிடுவென அதிகரிக்கின்றது என்கின்றனர்..

வெள்ளை அரிசியை முதலில் குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்துவது தான் நல்லது..


அதற்கு மாற்றாக கைக்குத்தல் அரிசி அல்லது சிவப்பு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.. 

சிறு தானியங்களையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்..

பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை விட  அதிக புரதத்தைப் பெற முடியும். மறுபுறம் நமது உணவில் கீரை, காய்கறிகளின் அளவு அதிகமாவது அவசியம்.. 

சரி.. 
இவற்றில் மட்டும் இரசாயன உரங்களின் பாதிப்பு இல்லையா?.. - என்றால்,

காய்களைத் தவிர்த்த சில வகைக் கீரைகள்  இரசாயன உரங்களால் கருகி பயனற்றுப் போய் விடும்..

சிறு தானியங்களிலும் இப்படியானவை இருக்கின்றன..

எனவே அப்படியான கீரைகள் காய்கறிகள் சிறு தானியங்களைப் 
பயன்படுத்தலாம்..

கீரைகள் காய்கறிகள் சிறு தானியங்களில் குறைந்த கலோரியும்  நார்ச் சத்துக்களும் அதிகமாக உள்ளன..

மாவு மட்டுமே கொண்ட அரிசி, கோதுமை மற்றும் மைதா இவற்றுக்கு மாற்றாக  ஊட்டச் சத்துக்களுடன் கூடிய கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மைதா மாவினை ஆதாரமாகக் கொண்ட Bread, Sandwich வகையறாக்களை உண்பதற்கு நிறைய பேர்க்கு மிகவும் பிடிக்கின்றது..  

காலை உணவாக Bread இருப்பது மிகவும் பெருமை..

Bread உடம்புக்கு நல்லது என்ற நினைவுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்போர்க்கு அதில் எவ்வித ஊட்டச் சத்தும் இல்லை என்பது தெரியுமோ தெரியாதோ.. 

அதுமட்டுமின்றி Bread  ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது..

உண்மையில்,
மைதாவும் செய்யப்படும்
பரோட்டாவும் பெயர் தெரியாத எண்ணெயில் செய்யப்படும் தின்பண்டங்களும் ஆபத்தானவையே!..

சர்க்கரை குறைபாட்டிற்கு
வெள்ளை இனிப்பின் பங்களிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

இன்றைய நாட்களில் புலால் உணவுகளும் ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சென்ற ஆண்டில் - தரமற்ற -  இறைச்சி உணவுகளை உண்டவர்கள் பலரும்  
பாதிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதை யாரும் மறந்திருக்க முடியாது..

இந்நிலையில், தரமற்ற உணவு வகை எதுவானாலும் புறந்தள்ள வேண்டும்..

யோகா தியானம், ஓரளவுக்கு உடலுழைப்பு, எளிய உடற்பயிற்சிகள் 
இவற்றை மேற்கொள்வதோடு

மாவுச்சத்து நிறைந்த அரிசி, கோதுமையை குறைத்து உருளைக் கிழங்கு எண்ணெய், ஜீனி, மைதா மாவு இவற்றையும் நீக்கி விட்டு,


பசுமையான கீரை, காய் வகைகளை ஓரளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டு 

நமக்கான நல்வாழ்வை நாமே வகுத்துக் கொள்வோம்..

வாழ்க நலம்..
***