நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 07, 2018

திருமலை தரிசனம் 5

ஸ்வாமி தரிசனம் செய்த பின் திருச்சுற்றில் வலம் வந்தோம்...

இந்தப் பக்கம் கயிறு கட்டி -
மடைப்பள்ளி வரைக்கும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர்...

கிழக்குப் பக்கமிருக்கும் ஸ்ரீ வரதராஜர் சந்நிதிக்குச் செல்லமுடியவில்லை..

மடைப்பள்ளியில் ஸ்ரீமதி வகுளாதேவி... .
அடுத்து ஸ்ரீவிஷ்வக்சேனர் தரிசனம்... தீர்த்தப் பிரசாதம் சடாரி... 

வடக்கு திருச்சுற்றில் ஸ்ரீ விமான வேங்கடேசர் தரிசனம்...
மற்றும் ஸ்ரீ உடையவர், ஸ்ரீ யோக நரசிம்மர் சந்நிதிகள்...

காணிக்கை செலுத்தி விட்டு வணங்கினோம்..

இந்தப் பக்கம் புளியோதரை பிரசாதம் வழங்கினார்கள்...

பெருங்கூட்டமாகத் திரண்டிருந்த வட மாநிலத்தவர்க்கு
புளியோதரை பிடித்ததோ இல்லையோ..
நமக்கு திவ்யமாக இருந்தது...

ஆனாலும் - பிரசாதம் வழங்கிய இடம் முழுதும்
புளியோதரையை சிதற அடித்திருந்தார்கள் - மக்கள்...

உண்டும் உண்ணாமலும் பிரசாதத் தொன்னைகளை
அங்குமிங்குமாகப் போட்டிருந்தனர்...

அவ்வப்போது தண்ணீர் அடித்து சுத்தம் செய்வதுண்டாம்..
என்றாலும் - புளியோதரையின் மீதே நடக்க வேண்டியிருந்தது..

மற்ற நாட்களில் எப்படியோ.... தெரியவில்லை...

பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு
திருக்கோயிலிலிருந்து வெளியே வந்தோம்...


அனல் தகித்தது... மாட வீதியின் ஓரத்தில் தேங்காய் நாரில் பின்னப்பட்ட நடைவிரிப்பினை போட்டிருந்தார்கள்.. 

அவை தானியங்கி நீர்க்குழாய்கள் மூலமாக நனைந்தே இருந்தன...
என்றாலும், மற்ற சாலைகள் கால்களைப் பதம் பார்த்தே அனுப்பின...

அங்கிருந்து நேராகச் சென்ற இடம் - அன்னப் பிரசாத கூடம்....

ஸ்ரீ வேங்கடேசப் பெருமானின் அதி தீவிர பக்தையாகி
ஏராளமான கீர்த்தனைகளையும் நூல்களையும் இயற்றிய
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா என்பவரின் திருப்பெயரால்
அமைக்கப்பட்டுள்ளது....

கேசரி, சாம்பார் சாதம், இருவகையான கூட்டு - இவற்றுடன் மதிய உணவு...

அந்த அளவில் வயிறு நிரம்பியதும் - நேராக தங்குமிடத்துக்கு வந்தோம்...
பெரிதாக எங்கும் ஓய்வு இல்லாத நிலையில் தூக்கம் கண்களைத் தழுவியது..

இரவு எட்டரை மணியளவில் விழித்தெழுந்து சிறிது உணவு...
மறுபடியும் தூக்கம்...


திருக்கோனேரித் தீர்த்தம் - ஸ்வாமி புஷ்கரணி..
ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறு ஏழ்வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!..{0676} 
-: குலசேகராழ்வார் :-
***

மங்கலகரமாக விடிந்தது -
பயணத்தின் மூன்றாவது நாள்.. 
திருமலையில் இரண்டாவது நாள்..

திருமலையில் சிறப்புற்று திகழ்வது - ஸ்வாமி புஷ்கரணி...
இது தான் திருக்கோனேரித் தீர்த்தம் என்றும் புகழப்படுவது...

திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் அமைந்திருக்கின்றது...

திருக்குளத்தில் தீர்த்தமாடினோம்...
திருக்குளக்கரையில் உள்ள ஸ்ரீ வராஹமூர்த்தியை தரிசனம் செய்தோம்...


இங்கே திருமலையில் -
ஸ்ரீ வராஹமூர்த்தியைத் தான் முதலில் தரிசனம் செய்ய வேண்டுமாம்!..

ஆனால் - சொல்வதோடு சரி...
வந்த வேகத்துக்குள் கூண்டுகளுக்குள் அடைக்கலமாகி விடுகின்றோம்!...

முதலில் ஸ்ரீ வராஹமூர்த்தியை வணங்கும்படியாக
திட்டமிட்டுக் கொள்ள இயலுமா - தெரியவில்லை....

பின்புறத்தில் அரச மரத்தின் கீழாக - சிவலிங்கம்...
அங்கே சாது ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்தார்...

ஸ்ரீ வராஹமூர்த்தியின் திருக்கோயிலுக்கு எதிரே
ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவர் திருக்கோயில்....

அதற்கு அந்தப் பக்கமாக இன்னுமொரு பெருமாள் கோயில்...


இங்கெல்லாம் பெருந்திரளாக மக்கள் கூடி இருந்ததால் 
படங்கள் எடுக்க முடியவில்லை...

கலையரங்கம் 
ஸ்ரீ வராஹமூர்த்தியைத் தரிசனம் செய்தவேளையில்
மாட வீதியில் ஆச்சார்யார் திருவீதி வலம் நிகழ்ந்தது....

தரிசனம் செய்து கொண்டோம்...

காலை உணவை முடித்துக் கொண்டு 
திருமலை வனத்துக்குள் காணவேண்டிய இடங்களான
ஸ்ரீ ஸ்வாமி பாதம். சிலாதோரணம், சக்ர தீர்த்த அருவி,
ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி திருக்கோயில், ஆகாச கங்கை, பாபவிநாச தீர்த்தம் - ஆகியவற்றைக் காண்பதற்குப் புறப்பட்டோம்...

திருமலையில் எடுக்கப்பட்ட படங்கள் - இன்றைய பதிவில்..
எப்படியிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள்!... 
***


உண்டாய் உறிமேல் நறுநெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே!..{1041}
-: திருமங்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்.
நமோ நாராயணாய.. 
ஃஃஃ

41 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  காலையில் அழகிய தரிசனம். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி..

   நீக்கு
 2. காலை வணக்கம் துரை ஸார்.

  ஆஹா... புளியோதரை! எந்தெந்த சுற்றில் என்னென்ன தரிசனம் என்று சொல்லியிருப்பது சிறப்பு. அதெல்லாம் நினைவிலேயே இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் - நான் பெரும்பாலும் நம் லக்கைப் பொறுத்தே பிரசாதம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்வேன். சிறிய தொன்னையில் இலவச பிரசாதம். பெரும்பாலும் எனக்கு திருமலையில் சிறிய லட்டோ அல்லது சர்க்கரைப் பொங்கலோதான் கிடைத்திருக்கிறது, கீழ்த் திருப்பதியில் பெரும்பாலும் தயிர்சாதம்.

   அவர்களால், இலவசமாகக் கொடுப்பதாலும், பக்தர்களின் எண்ணிக்கையாலும், குவாலிட்டியை மெயிண்டெயின் செய்யமுடியவில்லை என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் பிரசாதம்தானே.

   பெரும்பாலும், வெள்ளி வாசலைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டால் முன்பு கடுமையான தள்ளுமுள்ளுவில்தான் தங்க வாசலுக்குள் செல்லணும். அதனால் பிராகாரத்தில் இருக்கும் வரதராஜர் (நுழையும்போது இடதுபுறம்), வலது புறத்தில் யோக நரசிம்ஹர் சன்னிதி போன்றவை சேவிக்க முடிவதில்லை, கவனத்திலும் இருப்பதில்லை.

   நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
   புளியோதரை சுவையோ சுவை....
   ஆனாலும் வடநாட்டவர்க்கு பிடிப்பதில்லை....

   பிரசாதம் வழங்கப்படும் இடத்தை
   அசோக வனம் போல ஆக்கி விடுகின்றார்கள்....

   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

   நீக்கு
  3. அன்பின் நெ.த.,

   இன்றைய பதிவில் மடை திறந்த வெள்ளம் போல தங்களது கருத்துரைகள்....

   அடுத்து வரும் பதிவுகளில் இவற்றை சொல்ல இருந்தேன்...

   தங்களுக்கு நன்றி... மகிழ்ச்சி..

   நீக்கு
 3. படங்கள் அழகு.

  சனிக்கிழமை காலை பெருமாள் தரிசனம்
  சிறப்பு,
  மகிழ்ச்சி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்.,
   தங்கள் மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இந்தத் திவ்ய தரிசனங்களுக்கு மிகவும் நன்றி.
  ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நினைவைக் கிளறுகின்றது. எத்தனை தடவை வெங்கடேசப் பெருமாள் நின்று அருள் செய்திருக்கிறார்.
  இன்று உங்கள் எழுத்தின் வழி மீண்டும் வந்து சேர்கிறார்.
  மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.அந்த யானைகள், பெருமாள் வீதிகளில் தரிசனம் கொடுக்க விரைந்து வருவது,திருமலையில் எப்பொழுதும் பொங்கி வழியும் உற்சாகம் எல்லாம்
  மனதில் தங்கின.

  நன்றி திரு.துரை ராஜு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   பெருமாளின் அருளின்றி ஆவது ஒன்றுமில்லை...

   தங்கள் கருத்துரை கண்டு என் மனதிலும் உற்சாகம்.. மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. மிக அழகிய தரிசனம்..

  படங்கள் அழகு..

  பதிலளிநீக்கு
 6. திருமலையில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  சனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஆச்சு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 7. திருமலை தரிசனம் ஆயிற்று.

  அங்கேயே இரு நாள் தங்கியதால் கேமராவை உபயோகப்படுத்தி இடங்களில் படம் எடுத்திருக்கிறீர்கள். இல்லையென்றால், கேமராவை வாங்கிக்கொண்டு இந்த இடங்களில் எல்லாம் மீண்டும் நடக்கவேண்டும்.

  கோவிலிலிருந்து அன்னதானக் கூடம் நடக்கும் தொலைவில் இல்லை. ஒவ்வொரு இடத்துக்கும் நடந்துசெல்வதே மிகக் கடினமாக இருக்கும். அன்னதானக் கூடத்தில் 1-2 ஹால், பஃப்ஃபே எனப்படும், நமக்குத் தேவையானவற்றை வாங்கிச் சாப்பிடும்படியாக (சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், பப்படம், தயிர் சாதம் போன்று) அமைத்துள்ளார்கள். மற்ற ஹால்களில் அவர்களே வரிசையாக செர்வ் செய்வார்கள்.

  என்னதான் வசதிகள் செய்திருந்தாலும், நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. மிகக் குறைவான மக்கள் தரிசனமே 30,000ஐத் தாண்டும். இதை ஆர்கனைஸ் செய்து, தரிசனத்தை ஒழுங்குபடுத்துவது மிக மிகக் கடினமான வேலை.

  இங்கும், நம் ஆசையினால், ஊழல் நடக்கிறது. (முடிந்த அளவு குறைப்பதற்காக எல்லா இடங்களிலும் காமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. 20 வருடங்களுக்கு முன்னால், கோவிலில் பிரசாதம் கொடுக்கும்போது சிலருக்கு அதிகமாகக் கொடுப்பார்கள். அதையெல்லாம் இப்போது காமெரா கண்காணிப்பு மூலம் சரிசெய்துள்ளார்கள். எக்ஸ்டிரா லட்டு தருவதை இன்னும் சரிசெய்யலாம். இப்போதுள்ள நடைமுறை பரவாயில்லைதான்.

  குறைந்த அவகாசம், தங்குமிடம் கிடைப்பதில் சிரமம் போன்றவற்றால் (உங்களுக்கு தங்குமிடம் எப்படிக் கிடைத்தது? ஆன்லைனில் எப்போதும் இல்லை என்றே வரும்), முறைப்படி தரிசனம் செய்ய முடிவதில்லை. திருப்பதி வராஹ ஷேத்திரம். முதலில் வராஹரை வணங்கிவிட்டுத்தான் கோவிலுக்குச் செல்லவேண்டும். நான் ஓரிரு முறை முயற்சித்துவிட்டு அங்கும் கூட்டம் இருந்ததால் தவிர்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த.,

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   நான் கேமரா எடுத்துச் செல்ல வில்லை... Samsung J2 தான்...

   தங்களது விரிவான தகவல்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி...

   நீக்கு
 8. படங்கள் மிக மிக அழகாக வந்திருக்கின்றன ஐயா/ துரை அண்ணா. தரிசனமும் மிக நன்றாக அமைந்து புளியோதரையுடன் வெகு அருமை.

  கீதா: அன்னதானக் கூடம் முன்பெல்லாம் பரிமாறப்படும் இப்போது நாமே எடுத்துச் சாப்பிடுவதும் உள்ளது. நாங்களும் பாபவிநாச தீர்த்தம், அருவி, எல்லாம் காணச் சென்றோம். எனக்கு இந்த இடங்கள் தான் பிடித்தது. ஆனால் அருவியில் தண்ணீரே இல்லை நீங்கள் சென்ற போது இருந்ததா அறிய ஆவல்.

  புளியோதரை பிரசாதம் கொடிமரம் தாண்டி வெளியில் வந்ததும் இடது புறம் சென்றால் வழங்கப்படும் இடம் தானே...அங்கு நீங்கள் சொல்லியிருப்பது போல் தான் எல்லாம் கிடக்கும். எண்னையும், நெய்யும் கலந்து தரையில் வழுக்குவது போலத்தான் இருக்கும். கவனமாக நடக்க வேண்டும் அந்த இடத்தில். என்னவோ இத்தனை வசதிகள் செய்தும் மக்கள் திருந்துவதே இல்லை. இன்னும் அந்த இடத்தில் கண்டிப்பு இருந்தால் நன்றாக இருக்குமோ என்றும் தோன்றியது.

  எல்லாம் சரி ஆனால் திருமலை கூட்டம்தான் என்னை பயமுறுத்தும். வராகர் சன்னதியில் கூட கூட்டம் தான் எப்போதும். அலர்ஜி.

  நீங்கள் சென்ற இடங்களின் படங்கள் வருமல்லவா இப்போது எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஆர்வம். கபில தீர்த்தம் முன்பு சென்றிருக்கிறோம் ஒரே ஒரு முறை. அருமையான குளியல் இப்போது தண்ணீர் இருக்காது என்று நினைக்கிறேன்...  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன் - ஒரு வகையில், 'மக்கள் திருந்துவதில்லை' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரிதான். ஆனால், சன்னிதிகளில் குங்குமம் (அதிலும் அந்த மாதிரி நிறம் எங்கேயிருந்துதான் கிடைக்கிறதோ.. கை முழுவதும் அரக்குக் கலராகிவிடுகிறது, எங்கே சட்டை/வேஷ்டியில் பட்டு முழுக்க ஹோலி பண்டிகை போலாகிவிடுமோ என்று பயம் வரும்) கையில் கொடுக்கிறார்கள். அப்போ, துளி இட்டுக்கொண்டபின்பு மீதியை தூண்களில்தான் போடவேண்டியுள்ளது. இது விபூதிக்கும் பொருந்தும். அபூர்வமாக ஒரு சில சன்னிதிகளில் இப்போல்லாம் ஒரு அகலப் பாத்திரத்தில் மஞ்சள், குங்குமம் வைத்திருக்கிறார்கள். அப்போ தேவையான அளவு எடுத்து இட்டுக்கொண்டால் போதுமானது. பெரும்பாலும் குங்குமம் கையில் கொடுக்கும்போதுதான் பிரச்சனை.

   கோவில்களில் பிரசாதம் கொடுத்தால், சாப்பிட்டுவிட்டு நாம் கை அலம்பும் இடத்துக்குச் சென்று கையை அலம்பிக்கொள்ளவேண்டும். இதற்கு பெரும்பாலான கோவில்களில் வசதி உண்டு. தி.அல்லிக்கேணி பார்த்தசாரதி, திருப்பதி முதலான. ஆனால் நிறையபேர், நடப்பதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு, அருகில் உள்ள தூணிலேயே கையைத் துடைத்துக்கொள்கின்றனர்.

   நீங்க கீழ்த்திருப்பதி அலர்மேல் மங்காபுரம் கோவிலில், பிராகாரத்தில் நடக்கும்போது, அதுவும் இடது பக்க பிராகாரம், மிகவும் வழுக்கலாக இருக்கும். எல்லாம் பிரசாத மகிமைதான்.

   நீக்கு
  2. அன்பின் கீதா.,

   மக்கள் திருந்த மாட்டார்கள்.. அது உறுதி...

   தங்களது விரிவான கருத்துரைக்கு பின்னொரு பதிவில் பதில் கூறுகிறேன்....

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  3. அன்பின் நெ.த.,

   தங்களது விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி...

   இதற்கு பின்னொரு பதிவில் பதில் கூறுகிறேன்... நன்றி..

   நீக்கு
  4. நெ த குங்குமம் ஆமாம் ஆமாம். குங்குமம் நல்ல குங்குமம் இல்லையே....என்னவோ கலக்குகிறார்கள். அதனால் நான் அதை எடுத்து பிரசாகம் என்ற நம்பிக்கையில் ஜஸ்ட் கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டு விடுவேன். நெற்றியில் இட்டுக் கொள்வதில்லை. சும்மா தொடுவது போல் தொட்டு அவ்வளவே. நம் இறை நம்பிக்கை என்பது இறவனுடன் ஒன்றிப் போவது அல்லாமல் வெளிப் பொருட்களில் அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பெரியவங்க இந்தக் குயந்தையை மன்னிச்சுக்கோங்க இந்தக் கருத்துக்கு....!!!!

   கீதா

   நீக்கு
  5. கீதா ரங்கன் - ஆன்மீகம் நம் மன உணர்வு சம்பந்தப்பட்டதுதான். பிறர் சொல்லும் சட்டங்களில் இல்லை என்று நானும் நம்புகிறேன். நான் எப்போதும் சுவையை டெஸ்ட் செய்யாமல் இறைவனுக்குப் படைப்பதில்லை. பெரியவர்கள் பலர் இது தவறு என்று சொல்லியிருக்காங்க, ஆனாலும் நான் தொடர்கிறேன்.

   வெளிப்பொருட்கள் எல்லாமே சாதாரணம்தான். இல்லை என்று யாரும் மறுக்கமுடியாது. (கோவில்ல, பெரிய மாலையையோ அல்லது இறைவனின் பூச்சரத்தையோ அல்லது கை நிறைய துளசிச் செடியையோ-செடிதான், இலைகள் மட்டும் தர்றதில்லை, நிறைய காம்புகளோடு தந்துடறாங்க, நமக்குக் கொடுத்தால், அந்த இடத்தில் பணிவுடன் பெற்றுக்கொண்டு, வெளியில் வந்ததும் அதை வீணாக்கவேண்டியிருக்கிறது. இது, பல கடவுள் படங்கள் வைத்திருப்பதற்கும் பொருந்தும்)

   நீக்கு
 9. நாங்க ஒரே ஒரு முறை தான் வராஹரை எல்லாம் தரிசித்துவிட்டு நிம்மதியாக ஏழுமலையானைப் பார்த்திருக்கோம். மற்ற நேரங்களில் சென்றதில்லை. அதே போல் மேலுள்ள சக்ரதீர்த்தம், ஆகாச கங்கை போன்ற தீர்த்தங்களுக்கும் ஒரு முறை தான் சென்றோம். மற்ற நேரங்கள் எல்லாம் தங்காமல் அன்றே தரிசித்து அன்றே கீழிறங்கி விடுவதால் பார்க்க முடிவதில்லை. ஆனால் கீழே கோவிந்தராஜர், பத்மாவதித் தாயார், ஶ்ரீநிவாச மங்காபுரம் போகாமல் வந்ததில்லை. நேரம் இருக்கையில் காளஹஸ்தியும் போய் விடுவோம். ஆனால் கடைசியாக வைச்சுப்போம். காளஹஸ்தி போயிட்டு வேறே எங்கேயும் போகக் கூடாது என்பதால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா.S அவர்களுக்கு நல்வரவு....

   விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  2. நெல்லை என்னிடமும் கேட்டிருந்தார். அன்னதானக் கூடம் போனீங்களானு? அது எந்தத் திசைனு கூடத் தெரியாது! போனதில்லை. லட்டு வாங்கச் செல்லும்போது லட்டு செய்யும் இடத்தைப்பார்ப்போம்.

   நீக்கு
  3. ஸ்ரீ வராஹப்பெருமாள் கோயிலுக்கு எதிர் வரிசையில் சற்று தூரத்தில் இருக்கிறது. 200 மீட்டர் இருக்கலாம்..

   லட்டு செய்வதைப் பார்க்கலாமா!...
   புதிய தகவல்....

   அடுத்த முறை வாய்க்கும் போது பார்க்கலாம்....

   நீக்கு
 10. வழக்கம்போல உங்கள் பாணியில் எங்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவந்துவிட்டீர்கள். உடன் வந்ததைப் போன்ற உணர்வு இருந்தது. புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. ஒன்றையொன்று விஞ்சும் அளவு அனைத்துமே சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. திருந்தாத மக்கள் - திருவரங்கத்திலும் இப்படியான காட்சிகள் பார்க்கும்போது - அதுவும் உணவினை வீண் செய்வதைப் பார்க்கும்போது மனது கலங்கும். பிடிக்கவில்லை என அப்படியே குப்பையில் போடுவார்கள். சாலையெங்கும் இப்படி வீசி கால்களில் அன்னம் பட்டு வீணாவதைப் பார்க்கும்போது அப்படியானவர்களைத் திட்டத் தோன்றும். ஒவ்வொரு தேரோட்டத்தின் போதும் இப்படியான காட்சிகள் மனதை நோகடிக்கும்.

  சிறப்பான படங்களுடன் திவ்ய தரிசனம்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   கொஞ்சம் கூட பக்குவம் இல்லாத மனிதர்கள்....

   கோயிலுக்கு வருவோரெல்லாம் பக்தர் ஆகிவிட முடியாது என்பதற்கு இவர்களே உதாரணம்....

   அன்னத்தை வீணாக்குவது சகித்துக் கொள்ள முடியாதது...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. துரை செல்வராஜு சார்

  http://thanjavur14.blogspot.com/2018/06/blog-post21-Thanjavur-.html

  கூட்டம் அதிகமில்லை. ஆனாலும் மக்களைப் படாத பாடுபடுத்திக்கொண்டிருந்தனர் - என்று எழுதியிருக்கீங்களே... நான் அங்கு செல்லும் வாய்ப்பு இருக்கு (ஒரு 1-2 மணி நேரத்துக்கு). தரிசனம் செய்வது கடினமா இல்லை Middle Men problemஆ?

  அங்கு சாப்பிட நல்ல இடம் இருக்கா? நெல்லைக்காரனானாலும் இதுவரை திருச்செந்தூர் சென்றதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த., அவர்களுக்கு..

   நல்லவிதமாக தரிசனம் செய்யலாம்.. கவலை வேண்டாம்...

   சந்நிதிக்கு அருகே - கட்டண வரிசையில் ஆட்கள் இல்லையெனில்
   இந்தப் பக்கம் உள்ளவர்களை மடை மாற்றி விடுகின்றார்கள்..

   வரிசைத் தடுப்புகள் மிகவும் குறுகலானவை...

   கட்டணம் கொடுப்போர் கருவறை வாசலில்...
   காசு இன்றி வருவோர் வாகன மண்டபத்துக்கு அருகில்...

   நல்லபடியாக தரிசனம் கிடைக்கும்..
   ஆனாலும் இரக்கமில்லாமல் விரட்டுகின்றனர்..

   திருச்செந்தூர் பொது பேருந்து நிலையத்துக்கு அருகில்
   ஓரளவுக்கு நல்ல உணவகங்கள் இருக்கின்றன..

   செந்தில் நாதனின் தரிசனம் நல்லவிதமாகக் கிடைக்க பெருமானை வேண்டிக் கொள்கின்றேன்...

   வாழ்க நலம்...

   நீக்கு
  2. தரிசனம் விரைவாகவும் நல்லவிதமாகவும் நடந்தது. வார நாள் என்பதினால் இருக்கலாம். டாக்ஸி ஓட்டுநர், அங்கு, அர்ச்சனை செய்பவர்கள் வெளியிலேயே நின்றுகொண்டு இருப்பார்கள், ஒருவருக்கு 100-200 கொடுத்தால் நேரே சன்னிதிக்கே கூட்டிக்கொண்டு சென்று நிதானமாக தரிசனம் செய்துவைப்பார்கள் என்று கூறினார். ஆனால் அங்கு அப்படி இல்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டிருக்கிறதாம். எனக்கு கோவிலைப் பற்றி முழு புரிதல் இல்லை (படித்தது ஞாபகம் இல்லை). அதனால் குழப்பமாக இருந்தது, முருகன் சன்னிதி, பிறகு அந்தப்பகுதியில் சண்முகர் சன்னிதி என்று. ஆனாலும் விரைந்த தரிசனம் அருமை.

   நீக்கு
 13. படங்கள் அனைத்தும் அருமை ஐயா... சிறப்பான தரிசனம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. நடுநடுவே பாசுர வரிகளோடு திருமலை தரிசனம் அற்புதம்.

  அவ்வளவு மக்கள் வந்தும் திருப்பதி கோவில் சிறப்பாகவே பராமரிக்கப் படுகிறது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் கூட கிடையாது. ஒரு முறை திருப்பதி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு, பிரசாதம் பெற்றுக்கொண்டு கைய் அலம்பும் இடத்தின் அருகே, ஒருவர் தன் குழந்தையின் டயாபரை அவிழ்த்து சிறுநீர் கழிக்க விட்டார். இன்னும் பத்து தப்படி நடந்தால் வெளியே சென்று விடலாம்.

  சென்ற வருடம் வைகுண்ட ஏகாதசியின் பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு ஜி.ஆர்.டி. நிறுவனம் ஸ்வீட், மிக்ஸர் இவைகளை தண்ணீர் பாட்டிலோடு ஒரு பையில் போட்டு கொடுத்தார்கள். பெரும்பான்மையோர் அவைகளை அங்கேயே சாப்பிட்டு விட்டு, காலி பாக்கெட்டுகளையும், தண்ணீர் பாட்டிலையும் அப்படியே கீழே போட்டு விட்டு சென்று விட்டார்கள். அந்த பையிலேயே போட்டுக் கொண்டிருக்கலாம்.
  'திருடனா பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போலத்தான் இந்த மனப்பான்மையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுக்கு நல்வரவு...

   இப்படியும் சில விஷயங்கள் நடக்கத் தான் செய்கின்றன...

   யாது சொல்வது?...

   எம்பெருமானே.. என,
   அவனைச் சரணடைய வேண்டியது தான்...

   தங்களது வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. வந்தேன் உள்ளே. ஆனந்த நிலையம். அதி ரசம். பரவசம். பாக்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்களுக்கு நல்வரவு....

   தங்கள் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  2. ஏகாந்தன் அண்ணா தரிசனம் மட்டும் பார்த்துட்டு ஐக்கியமாகி ஓடிப் போயிட்டார். நார்மலா ஏகாந்தன் அண்ணாதான் சுற்றி நடப்பதை ஒரு கை பார்த்துட்டு போவார்...(அட்டூழியங்களை) ஆனா உங்கள் பதிவில் பாசுரங்களில் அண்ணா லயித்து பரவசமாகி வெங்கு வை மற்றும் ஆனந்திட்துட்டு போய்ட்டார்....பதிவின் மகிமை!!!!

   கீதா

   நீக்கு
 16. எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை அவதிப்பட்டாலும் போகவேணாம்ன்னு மறுக்க முடியாத கோவில். ஐ லவ் வெங்கி

  பதிலளிநீக்கு