நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 02, 2024

திருமாலை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
சனிக்கிழமை


பச்சை மாமலைபோல் மேனி  பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே.. 873


ஒருவில்லால் ஓங்கு முந்நீர்  அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்  மதில் திரு அரங்கம் என்னா
கருவிலே திருவிலாதீர்  காலத்தைக் கழிக்கின்றீரே.. 882

வண்டினம் முரலும் சோலை  மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணி திரு அரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி நாய்க்கு இடுமின் நீரே..  885

சூதனாய்க் கள்வனாகித்  தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்  வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி  புந்தியுள் புகுந்து தன்பால் 
ஆதரம் பெருக வைத்த  அழகனூர் அரங்கம் அன்றே.. 887

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் 
விதியிலேன் மதியொன்றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென் 
கண்ணினை களிக்குமாறே.. 888

குடதிசை முடியை வைத்துக்  குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை  அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே.. 890

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்  பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன்  கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்  ஏழையேன் ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும்  விரிபொழில்  அரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்தவாறும்  கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும்  ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் காலத்தைக் கழிக்கின்றாயே.. 895


ஊர் இலேன் காணி இல்லை   உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்  பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா  அரங்கமா நகருளானே.. 900
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ரங்கா ரங்கா

ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

உத்திர சேர்த்தி

அன்று - ஆயில்யம்!.. சோழ வளநாட்டின் உறையூருக்கு உலகளந்த நாயகன் வருகின்றான்!..

அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரை கடந்து - இதைத்தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!.. - அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...


பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..   அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!. வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது.

நம்ம வீட்டுக்கே மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!..

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  - அம்மா மண்டபம் வழியாக  காவிரியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார்.

வருகிறார்.. வருகிறார்.. இதோ வந்து விட்டார்!.. வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

'' வாங்க.. மாப்பிள்ள!.. வாங்க!..'' - என்று சிறப்பான வரவேற்பு. ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!..

ஸ்ரீரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது.

ஆயிற்று.. ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!..

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். அன்னம் போல தாயார் வருகிறாள்.. கண்கள் கசிகின்றன காதலால்,

''..நலம்.. நலமறிய ஆவல்..'' என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் .

அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ... நாணம் தடுக்கின்றது!.. பிள்ளைகளின் முன்பாகவா!..

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆனந்தம். அத்துடன் ஆதங்கம்..


''..என்ன இது!.. இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!..''

''.. குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் வலியாக அல்லவா இருக்கின்றது - குண்டுங்குழியுமாக!.. அன்றைக்குக்கூட வழி நடையாய்   ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!.. '' - என்ற ஸ்வாமியை, கமலவல்லி மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்.

மாதவனின் கழுத்திலிருந்த மாலையை மதுசூதனக் காமினி கமலவல்லி அணிந்து கொள்கிறாள்.  அவள் கழுத்திலிருந்த மாலையை அணிந்து கொண்டு அரங்கன் ஆனந்திக்கின்றான்.

யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்,  விரலிலிருந்த கணையாழியைத் தன் அன்பின் அடையாளமாக அணிவிக்கின்றான் அரங்கன்..

கார்மேகனும் கமலவல்லியும்
'' இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட.. '' -  அன்னை இப்படி ஆனந்திக்க,

'' உன் பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?...'' - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய்க் கொண்டிருந்தது.

கண்டு கொள்!.. - எனக் கண்டதால் மனம் நிறைந்தது. உண்டு கொள்!.. -  என உவந்ததால் உயிரும் இனித்தது.

இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்தரைக்கு மேல்!..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி... போய் வரவா!..''

''.. ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!..''

கமலவல்லி மூலஸ்தானத்திற்குத் திரும்ப - ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!..

அதற்கு முன்னரே,  அரங்கன் இருப்பது உறையூரில் என்று - தூபம் இடப்பட்டது -  அரங்கநாயகி சந்நிதியில்!..

எங்கு செல்வது!..  - அழகிய மணவாளனின் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்!..

நேராக கண்ணாடி மண்டம் .. அதுதான் சரி.. அங்கே ஓய்வு!.


அதன்பிறகு,  வையாளியில் ஆரோகணித்து - சித்திரை வீதியில் சுற்றிக் களித்திருந்த போது ,  எதிர் வந்து நின்றது - உத்திரம்!..

ஆஹா!.. அரங்க நாயகியின் திருநட்சத்திரம்!.. அவளைக் காண வேண்டுமே!..

இப்படி நினைத்தாலும்  - அவள் காண வேண்டுமே  - என்பது தான் பிரதான நோக்கம்!..

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!. கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி.. அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. என்ன செய்வது?...

திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..

அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் - ''..நான் கூட பார்த்தேனே!..''

கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து - அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,

அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' என்று!..

பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட பார்க்கவில்லை!..

அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..

''..இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..'' - ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..

''.. ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!..''

''.. பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!.''

''.. ஏன்.. அவங்க வீட்டுப்  பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..''

''.. சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...''

அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றான் இவன்!..  என்னிடமா.. தப்பு!..''

அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது. உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!.. தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!.. என்ன சொல்கின்றாள்.. ஆர்வமாக உற்றுக் கேட்டான்!..

''அதென்ன.. திருக்கழுத்து எங்கும் கீறலாமே!..  திரு அதரங்கள் அதீதமாய் வெளுத்தும் திருநேத்ரங்கள்  சிவந்தும் கிடக்கின்றதாமே!.. கார்மேகனின் கருங் குழற் கற்றைகள் கலைந்து காணச் சகிக்கவில்லையாமே!..''

அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..

உடன் இருக்கும் உளவாளி யார்?..

''..இதெல்லாம் யார் உனக்குச் சொன்னது?..''

''..யாரும் தனியா வந்து சொல்லணுமா?.. அதான் ஊரே பார்த்து ரசிக்கின்றதே!..''

''..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?.. நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. ''

''..எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை.. உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..''

''..உறையூரோ.. மறையூரோ!..  உன் உள்ளம் தானே - நான் உவந்து உறையும் ஊர்!..''

''.. இந்தக் கள்ளம் எல்லாம் வேண்டாம்.. நீர் அங்கேயே போய் இரும்!..''

வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என -   அன்பின் விழுது என -  அரங்கனின் மேல் வந்து விழுந்தன.

நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது.

பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் வீசியது கூட பரவாயில்லை.. திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!.. 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..

அரங்கன் பரிதவித்துப் போனான்!..

அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது.   உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்! அவருக்கு மனசு தாங்கவில்லை.

நம்மாழ்வார்
அண்டபகிரண்டமும் அரற்றியவாறு, அரங்கனைக் காணவேண்டி அல்லவோ - காத்துக் கிடக்கின்றது. அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!.. அரங்கனுக்கா இந்த நிலை!..

விறுவிறு - என நடந்து,  பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

''..ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!.. கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!.. அவளின்றி நீ இல்லை!.. அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?.. இது நியாயமா?.. அம்மா?.."

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. 

கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத்தெரியாதா!..சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால்பழங்கூட கொள்ளாமல், உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்.. 

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் உறங்காமல் மயங்கியிருப்பதைப் பார்!..''

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...

''.. இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலைன்னு!.. கணையாழி போனாப்  போறது!.. நீங்க வாங்க!..''

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கநாயகி  சொன்னாள்,

''..இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்தியம்!..''

அரங்கன் புன்னகைத்தான்!..  அரங்கநாயகி புன்னகைத்தாள்!..

ஆழ்வாரும் புன்னகைத்தார். அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..

அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..

அமிழ்தினும்இனிய அன்பினில் குழைந்த அக்காரஅடிசில் நிவேதனமாகின்றது.

அரங்கனும் அரங்கநாயகியும்
அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப்பந்தலின் கீழ், ''சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

* * *

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று -  18 முறை விடிய விடிய திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள்.


திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம்.  திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. மீண்டும் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள்!..

''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..''

பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம். மங்கல மாவிலைத் தோரணங்கள் ஆடும் சித்திரை வீதியில் திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பொழிகின்றான்.

மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜஅவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

* * * 

அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..

அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!.. அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!.. 

அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும்  அரங்க நாயகி விரலிலும், 
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..

* * * 

இன்று (13/4) பங்குனி உத்திரம். சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது  நிவேதனம் செய்வது மரபு.

சென்ற ஆண்டின் பதிவு இது!.. சில திருத்தங்களுடன் மீண்டும்!..

அரங்கனின் நினைவே ஆனந்தம்!..  
அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..

வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

ஆடி வெள்ளி - 03

முக்கியமாய் பூஜித்தற்குரியவள் பதினெட்டு புஜங்களுடன் கூடியவளும் மஹிஷாஸுர மர்த்தினியுமான மஹாலக்ஷ்மியே ஆவாள். 


அவளே மஹாகாளி.  அவளே ஸரஸ்வதி. ஈஸ்வரியும் ஸர்வலோக மஹேஸ்வரியும் அவளே!.. (24-25/4. வைக்ருதிக ரஹஸ்யம், தேவி மஹாத்மியம்)

ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் கூறப்படும் - மஹாலக்ஷ்மியும் மஹிஷாஸுர மர்த்தினியுமான - தேவியின்  பதினெட்டு புஜங்களிலும் திகழும் ஆயுதங்கள் - 

அக்ஷமாலை, தாமரை, அம்பு, கத்தி, வஜ்ரம், கதை, சக்கரம்,திரிசூலம், கோடரி, சங்கு, மணி, பாசம், வேல், தண்டம், கேடயம்,வில், பானபாத்திரம், கமண்டலம்.

இத்தகைய ஆயுதங்களை ஏந்தியவளாகவும், சகல தேவர்களின் வடிவாக விளங்குபவளும் எல்லாரையும் ஆள்பவளுமான  -

ஸ்ரீமஹாலக்ஷ்மியை பூஜிக்கும் ஒருவன் -  எல்லா நலன்களையும் பெற்று, சர்வ லோகங்களுக்கும்  தேவர்களுக்கும் தலைவன் ஆகின்றான்!..

அப்படிப் பூஜித்தால் - 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி - எல்லா நலன்களையும் வாரி வழங்க வந்து  விடுவாளா?...

இதற்கு,   தெய்வப் புலவர் ஐயன் வள்ளுவர் - நமக்கு வழிகாட்டுகின்றார்.

ஆக்கம் அதர்வினாய்ச்செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.  (594) 


சோர்வில்லாமல் ஊக்கத்துடன் உழைப்பவனிடத்தில், ஆக்கம் எனும் செல்வமானது - தானே, அவன் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து கொண்டு வந்து சேரும். 

ஊக்கத்துடன் கூடிய உழைப்பு.  இதுதான் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் விருப்பம்.
* * *

வழக்கம் போலவே சாபம். இந்திரன் துவண்டு போனான். சுகபோக செளபாக்கியங்கள் வீரபராக்கிரமம் அனைத்தையும் இழந்தான். இந்த முறை சாபம் கொடுத்தவர்   - துர்வாச மகரிஷி. 

அதையே எதிர்பார்த்திருந்த அசுரர், ''..இதோ! வந்து விட்டோம்!..'' - என சண்டைக்குக் கிளம்பினர்.  பரிதவித்த இந்திரன் மகரிஷியின் பாதங்களில் விழுந்தான். மனம் இரங்கிய முனிவர் சாப விமோசனம் சொன்னார்.

''..தப்பித்தோம் பிழைத்தோம்!..'' - என, இந்திரன் தண்டனிட்டுத் தொழுது வணங்கி, தூமலர் தூவி நின்றான் - ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திருவடித் தாமரைகளில். அப்போது அவன் - போற்றித் துதித்த ஸ்தோத்திரம் தான் - 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம். 

இதனை நாளும் சொல்லித் துதித்து, ஊக்கத்துடன் உழைப்பவர் - இல்லத்தில் ''..சகல செளபாக்கியமும் ஐஸ்வர்யமும் பொங்கிப் பெருகும்!..'' என - ஸ்ரீ மஹா லக்ஷ்மியே வாக்கு கொடுத்திருக்கின்றாள். 


நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. 

பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணமாகி, ஞானிகளுடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவளும் ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவளும்  தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளும் கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளும் எல்லா பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

சர்வக்ஞே சர்வ வரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளும் அனைத்து வரங்களும் அளிப்பவளும் எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவளும் மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

முதலும்  முடிவும் அற்ற தேவியானவளும் பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவளும் யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மகோதரே 
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளும் எளிதில் உணரப்பட முடியாதவளும் (பிழைகளைக் காணுங்கால்)  எல்லையற்ற கோபம் உடையவளும் அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!..  உன்னை வணங்குகின்றேன்!.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளும் பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளும் பலவிதமான ஆடை அணி அலங்காரங்களுடன் திகழ்பவளும் பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய - மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்!.

பலஸ்ருதி:-

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: 
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: 

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி  மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் 
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: 
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் 
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. 

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள். 

(ஸ்ரீரங்க நாயகியின் நிழற்படங்களுக்கு நன்றி - திரு. ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்)


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)

இவ்வுலகில் இன்புற்று வாழ நேர்மையான வழியில் பொருளைத் தந்து அதன் மூலம் - ஈதல் இசைபட வாழ்ந்து - அவ்வுலகிற்கான அருளைப் பெற்று உய்யும்படிக்கு அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி அருள்வாளாக!..


இவ்வுலகம் அசைவதும் இசைவதும் அவள் அருளால் தான்!..

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத 
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

ஞாயிறு, ஜூன் 23, 2013

ஆனந்தம் தரும் ஆனி


சூரியன்  - தை முதல் நாளில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தொடங்கிய  உத்ராயண பயணம் நிறைவுறும் இனிய மாதம் ஆனி.

கோடைக் காலத்தின் கடைசி மாதமாகிய ஆனியில்சைவ, வைணவ திருக்கோயில்களில் பற்பல புண்ணிய விசேஷங்கள் நிகழ்கின்றன.


ஆனி மாதத்தில் தான்   தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடவல்லானாகிய எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் நிகழ்வுறுகின்றது

அதே நாளில் திருஆரூரில் தியாகராஜப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்வுறும்

அன்றைய தினம்  - தில்லையில்  நடராஜப்பெருமானும் திருஆரூரில் தியாகராஜப் பெருமானும் தேரில் எழுந்தருளி திருவீதி பவனி வருவர். தில்லையில் ஆனந்த நடனம் எனில் திருஆரூரில் அஜபா நடனம் என்பது திருக்குறிப்பு.


தில்லையை - பொற்கோயில் என்றும் திருஆரூரை - பூங்கோயில் என்றும் சான்றோர் குறிப்பிடுவர்

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில், திருமஞ்சனப் பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. திருமஞ்சனத் திருவிழாவினைத் தரிசிக்கும் கன்னியர்  விரைவில் கல்யாணக் கோலம் கொள்வர் என்பதும் சுமங்கலிகள் மாங்கல்ய பாக்கியம் பெறுவர் என்பதும் ஐதீகம்.

தில்லையிலும் திருஆரூரிலும் போலவே -

எல்லா சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கும்  சிவகாமசுந்தரிக்கும்  திருமஞ்சன வைபவத்தினை சிறப்புடன் நடத்தி அன்பர்கள் மகிழ்கின்றனர்.

மேலும்ஆனி மாதத்தில் கோலக்குமரன் குடிகொண்டுள்ள பழனியில்,   அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.  

கேட்டைநட்சத்திரத்தன்று - மலைக்கோயிலில் உச்சி காலத்தில் உற்சவ மூர்த்திக்கும் , மூல நட்சத்திரத்தன்று  - திருஆவினன்குடியாகிய அடிவாரத் திருக்கோயிலில்  மாலை வேளையில் குழந்தை வேலாயுதப் பெருமானுக்கும்  அன்னாபிஷேகம் நிகழ்கின்றது

பழனியில் - ஜேஷ்டாபிஷேகம் எனும் ஆனித் திருமஞ்சனம் - விசாக நட்சத்திரத்தில் நடைபெறும்

ஆனி மாத பெளர்ணமியை அனுசரித்து - காரைக்காலில் மாங்கனித் திருவிழா வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது.

கையிலாய நாதர் பிட்க்ஷாடனராக வீதியுலா வரும் போது நேர்த்திக் கடனாக மாம்பழங்களை வீசி மக்கள் இன்புறுகின்றனர்.

ஆனி - மக நட்சத்திரத்தன்றுதான் தில்லை நடராஜப் பெருமானுடன் மாணிக்க வாசகர் ஜோதியாக இரண்டறக் கலந்தார். ஆனிமாதத்தின் தேய்பிறை ஏகாதசி அன்று - பெருமாளைத் திரிவிக்ரமப் பெருமானாக வழிபட, குருநிந்தனை செய்ததும், பொய் சாட்சி கூறியதுமான பாவ வினைகள் விலகும் என்பர்

ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் ஆஷாட நவராத்திரி எனப்படும்.  பொதுவாக ஆஷாட நவராத்திரி வடமாநிலங்களில்  கொண்டாடப்படுகின்றது.

தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி வெகு சிறப்பாக அனுசரிக்கப்பெறுகின்றது


ஒன்பது நாட்களும் காலையில் ஸ்ரீவராஹி அம்மனுக்கு  மூல மந்திரத்துடன் யாகசாலை பூஜையும்மாலையில் மகாஅபிஷேகத்துடன் அலங்காரமும் மகாதீப ஆராதனையும் நிகழும்.  

ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்துடன் திகழும் அன்னை வராஹி - பத்தாம் நாள் அன்று,

கோயில்யானை முன் செல்ல, செண்டை வாத்யங்களும் சிவகண கயிலாய வாத்தியங்களும் சேர்ந்திசைக்க - கோலாகலமாக நான்கு ராஜவீதிகளிலும் எழுந்தருள்கின்றாள்

திருச்சி - உறையூரில்,   வெயில், மழை, பனி, காற்று  - என எதுவானாலும் தாங்கிக்கொண்டு வெட்டவெளியில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனுக்கு ஆனி பெளர்ணமியில் மாம்பழ அபிஷேகம் நடத்தப்படுகின்றது


மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானஸ்வாமிக்கும் மட்டுவார்குழலி அம்பிகைக்கும் - நேர்த்திக் கடனாக வாழைத்தார்களை அன்பர்கள் செலுத்துவதும் ஆனி பெளர்ணமியில் தான்

அம்பலமாகிய தில்லையில் ஸ்ரீநடராஜனுக்கு திருமஞ்சனம் என்றால்

அரங்கமாகிய ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனுக்கு ஆனியில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகின்றதுகேட்டை நட்சத்திரமே ஜேஷ்டா எனப்படுவது.

கங்கையினும் புனிதமாய காவிரியிலிருந்து தங்கக்குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மேல் வலம் வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் தைலக்காப்பு நடைபெறும். இவ்வேளைகளில் அரங்கனின் திருமுக தரிசனம் மட்டுமே!. 


அதன்பின் - திருஅரங்கனுக்கு பலவகையான பழவகைகளுடன் தேங்காய்த் துருவலும் நெய்யும் நிவேத்யம் செய்யப்படும். அடுத்த வெள்ளியன்று ஸ்ரீரங்க நாயகிக்கு இதேபோல ஜேஷ்டாபிஷேக வைபவம் சிறப்புடன் நடைபெறும்.

இவ்வண்ணமாக

ஆனி மாதத்தில் மங்கள வைபவங்களைக் கண்டருளும் -

நடராஜனும் ரங்கராஜனும் 

நம் அல்லல்களைத் தீர்த்து வைத்து 

ஆனந்தமான வாழ்வினை அருள்வார்களாக!...