நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆனித் திருமஞ்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனித் திருமஞ்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 12, 2024

திருமஞ்சனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 28  
வெள்ளிக்கிழமை


இன்று
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் 
ஆனித் திருமஞ்சனம்..

ஆனி பத்தொன்பது அன்று 
திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..


இன்று பத்தாம் திருநாள்..
அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் திருமஞ்சனம்..

மகா தீப ஆராதனைக்குப் பின் பிற்பகல் இரண்டு மணியளவில் சிற்சபை பிரவேசமும் நிகழும்..

நாளை ஹஸ்தம்.. இரவு முத்துப் பல்லக்கு..


செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம்  உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழல் ஏத்துஞ் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-


கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம்  அன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..6/1/2
-: திருநாவுக்கரசர் :-


முட்டாத முச்சந்தி மூவா 
யிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் 
பாவமும் வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் 
தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
பெருமானைப் பெற்றா மன்றே..7/90/7
-: சுந்தரர் :-


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 9
-: மாணிக்கவாசகர் :-


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே..9
-: சேந்தனார் திருப்பல்லாண்டு :-


அருட்ஜோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்..
-: அருட்ஜோதி வள்ளலார் :-


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூலை 10, 2016

திருமஞ்சன தரிசனம்

எம்பெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும்,
பஞ்சபூத திருத்தலங்களில் ஆகாயத்தின் அம்சமாகவும்
புகழப்படுவது திருச்சிற்றம்பலம் எனும் தில்லையம்பதி..

இன்றைய நாளில் சிதம்பரம் என வழங்கப்படுவது..

சைவத்தில் கோயில் எனப்படும் திருத்தலம்..

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா இம்மாதம் முதல் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையடுத்து தினமும் தங்க கைலாச வாகனம் பெரிய ரிஷப வாகனம் - என, பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா எழுந்தருளினர்..

நடைபெற்று வந்தது. பின்னர், த்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா எழுந்தருளினார்..

இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன..

ஆனிப் பெருந்திருவிழா - திருப்பெருந்துறையில் வெகு சிறப்பாக நடைபெறும் வேளையில் மாணிக்கவாசகப் பெருமான் முக்தி நலம் எய்திய நாளும் சிறப்பாக நிகழ்ந்தது..

மாணிக்கவாசகர் - மதுரை
திருப்பெருந்துறை
திருப்பெருந்துறை
ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்
நேற்று (ஜூன்/9) காலை விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ ஆனந்த நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையுடன் பெருந்தேரில் எழுந்தருளினார்..
திருநிலை நாயகியாகிய சிவானந்தவல்லி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் - என, ஏனைய உற்ஸவ மூர்த்திகளும் தனித் தனித் தேர்களில் வீதியுலா எழுந்தருளினர்...

சிவானந்த கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துத் திருத்தேரை இழுத்தனர்.  
இரவு எட்டு மணியளவில் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.


இன்று ஜூலை/10 (ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பாக
அதிகாலை நான்கு மணி முதற்கொண்டு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது..
இதையடுத்து காலை பத்து மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜை..

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா..

பின்னர் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

மறுநாள் (ஜூலை/11) பஞ்ச மூர்த்திகளின் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் மங்கலகரமாக நிறைவடைகின்றது..


அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1)
-: அப்பர் பெருமான் :-

பாருருவாய பிறப்பறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்
சீருருவாய சிவபெருமானே செங்கமல மலர்போல்
ஆருருவாய என்னாரமுதே உன்னடியவர் தொகைநடுவே
ஓருருவாய நின்திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே!..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***  

புதன், ஜூன் 24, 2015

எங்கும் சிதம்பரம்

பூஜ்ஜியம்.

எதுவுமில்லை அதற்குள்..
ஆனால், எல்லாமும் இருக்கின்றன - அதற்குள்!...

கணிதவியலும் இறையியலும் ஒன்றிணைந்திருப்பது பூஜ்ஜியத்தில்!..

இரண்டையும் வழங்கிய பெருமை - புண்ணியம் மிகும் பாரத நாட்டிற்குத்தான்!.


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்!..

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்!..

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-



கவியரசருக்கு இன்று பிறந்த நாள்..
மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள்..
* * *

பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் என்பது - வெளி.. வெட்டவெளி!.. ஆகாயம்!..

அங்கேதான்,  ஆனந்த நடனம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது என்றனர் ஆன்றோர்கள்..

அதைக் குறிப்பதே ஞான ஆகாசம் எனப்படும் சித்சபை.

அதுவே திருச்சிற்றம்பலம் என போற்றப்படுவது..

புண்ணிய பாரதத்தில் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருப்பினும் திருச்சிற்றம்பலம் என சிறப்புடன் குறிப்பிடப்படுவது - 

தில்லை எனும் திருத்தலம்.


தில்லைத் திருச்சிற்றம்பலம் என்ற புகழுக்குரிய - சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில் எத்தனையோ வைபவங்கள் நிகழ்வுறுகின்றன.

அவற்றுள் - மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரமும் சிறப்புடையவை.

ஏனெனில் இந்த இரு தினங்களில் மட்டுமே வைகறைப் பொழுதில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பெறும்.

அவ்வண்ணமாக - ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 15/6 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மையப்பன் விளங்கும் சித்சபையின் துவஜ மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - காலை பத்து மணியளவில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது

அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஜூன் 16 அன்று வெள்ளி சந்திர பிரபையிலும்
17 அன்று தங்க சூரிய பிரபையிலும்
18 அன்று வெள்ளி பூதவாகனத்திலும்
19 அன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்)
20 அன்று வெள்ளி யானை வாகனத்திலும்
21 அன்று தங்க கைலாச வாகனத்திலும்

எம்பெருமான் எழுந்தருள - திருவீதி உலா நடைபெற்றது.

22/6 அன்று மாணிக்கவாசகர் குருபூஜையும்
தொடர்ந்து - தங்க ரதத்தில் பிட்சாடனர் திருவீதிஉலாவும் நடைபெற்றது.
நேற்று (ஜூன்/23) செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி திருத்தேரில் எழுந்தருள - தேர்த் திருவிழா சிறப்புடன் நடைபெற்றது.

ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி திரண்டு அழகுத் தேர்களின் வடம் பிடித்து இழுத்து தேரடியில் நிலைப்படுத்தினர்.

இரவு எட்டு மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் -
எம்பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

இன்று சூரியோதயத்திற்கு முன் - அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகமும் ஷோடச உபசாரமும் நடைபெறுகின்றது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜை நிகழ்வுறும்.
பஞ்சமூர்த்தி திருவீதி உலா எழுந்தருளிய பின் - 
பிற்பகல் இரண்டு மணியளவில் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம்.

அலங்கார தரிசனத்திற்குப் பின் - சிவகாமசுந்தரியும் நடராஜப்பெருமானும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபடியே ஞானகாசம் எனும் சித்சபையினுள் எழுந்தருள்வர்.

சித்சபையினுள் எழுந்தருளிய பின் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. 

நாளை (ஜூன்/25) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு திருவீதி உலா. 

அந்த வைபவத்துடன் கொடியிறக்கம்.
உற்சவம் மங்கலகரமாக நிறைவடைகின்றது.


வெட்ட வெளியெனும் ஆகாயத் திருத்தலத்தில் ஆனந்தத் திருத்தாண்டவம் நிகழ்கின்றது என்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும் யோகியரும் சித்தர்களும் சமயக் குரவர்களும் சொல்லி வந்திருக்கின்றனர்.

அந்தத் தாண்டவத்தின் வெளிக்கூறுதான் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் திருக்கோலம்.

தமிழகத்திலுள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிறப்புடன் விளங்குவது ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவடிவ.

இத்திருமேனி - தமிழர்களாகிய நமக்கே சொந்தமானது..

சிவ சமயத்தின் தத்துவம் அழகின் வடிவமாக மெய்ஞானத்தை உணர்த்தியது.

அதையே - இன்றைய மேலை நாடுகளும் ஆமோதிக்கின்றன. 

ஸ்ரீநடராஜ தத்துவத்தை ஆய்ந்தறிவதற்கு முற்பட்டுள்ளன.

அதன் விளைவு -

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - பிரம்மாண்டமாக ஸ்ரீநடராஜரின் திருமேனி விளங்குகின்றது.

(அணுத் துகள் ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் Facebookல் பெற்றவை)

Sri Natarajar - CERN
CERN (The European Organization for Nuclear Research, known as CERN) என்பது ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள - இருபது நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம். 

இங்குதான் - Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூலத் துகள்களை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை செயல்களை ஆராய்கின்றனர்.

CERN விஞ்ஞானிகள் - அணுத் துகள் இயக்கத்தையும் சிவபெருமானின் நடனத்தையும் ஒப்பிட்டுக் கூறி வியக்கின்றனர்.

அந்த வியப்பின் விளைவே - நடராஜர் திருமேனி!..

Sri Natarajar - CERN
எங்கும் திருமேனி - எங்கும் சிதம்பரம்!.. 

- என்று திருமூலர் குறித்த திருமந்திரம் மெய்யாகி விட்டது.

Sri Natarajar - CERN

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - நடராஜர் திருமேனி அமைந்துள்ளதைப் பற்றி, 

On June 18, 2004 - an unusual new landmark was unveiled at CERN - a 2mtr tall statue of the Hindu Creator/ Destroyer deity Shiva. Interesting choice.

- என்று குறிப்பிடப்படுகின்றது.


CERN விஞ்ஞானிகள் அணுத் துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிட்டு உணர்ந்து உலகிற்கு அறிவித்ததை சிறப்பிக்கும் பொருட்டு -

அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் - நடராஜர் திருமேனியை - இந்திய அரசு பெருமையுடன் வழங்கியுள்ளது. 

அணுத் துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாக - நவீன இயற்பியல் கூறுகின்றது. கீழை நாட்டின் ஞானிகள்  உலக இயக்கத்தைப் பற்றி விவரிக்கும் போது குறிப்பிடும் நடராஜரின் நடனம் போலவே இது உள்ளது.

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் அறிய வேண்டும்!..

இப்படிக் கூறுபவர் - இயற்பியலாளர் ஃபிரிட்ஜோப் காப்ரா (Fritjof Capra) .


THE TAO OF PHYSICS 
An Exploration of the Paralles Between Modern Physics and Eastern Mysticism., (Published in 1975)

- எனும் நூலை எழுதியவர்.

அணுவில் உள்ள அசைவை - சிவ நடனத்தில் கண்டு உணர்ந்த காப்ரா -
1977 அக்டோபர் 29 அன்று லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகுக்கு விவரித்தார்.

நவீன கருவிகள் மூலமாக அணுத் துகள்கள் நடனமிடும் அற்புதத்தைப் படம் பிடித்து - அதை சிவநடனத்துடன் ஒப்பிடும் காட்சியைக் கண்ட உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் -
தில்லை நடராஜனின் திருநடனம்!..

கடவுள் துகள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த தெளிவான பதில்தான் நடராஜர் சிலை!..

- இப்படிக் கூறியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள்!..

இதைத்தான் - அன்றே நமக்குச் சுட்டிக் காட்டினர் - ஆன்றோர்கள்.

அற்புதக் கூத்தனை ஆனந்தக் கூத்தனை
அம்மை அப்பனாம் சிற்றம்பலக் கூத்தனைக்
கண்டு உணர்ந்து களிப்பெய்துவோம்..


எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!..
திருமூலர்.

அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத 
நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1) 
திருநாவுக்கரசர்.

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
* * * 

வியாழன், ஜூலை 03, 2014

ஆனந்த தரிசனம்

ஆனித் திருமஞ்சன திருவிழா.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய ஸ்ரீசிதம்பரத்தில் திருத்தேரோட்டம்.

எம்பெருமானாகிய சிற்றம்பலக்கூத்தன் சிவகாமசுந்தரியுடன் திருத்தேரில் எழுந்தருளினன்.

ஸ்ரீதில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஜூன்/25 அன்று துவஜாரோகணத்துடன் ஆனித் திருமஞ்சன உற்சவம் தொடங்கியது.

ஒன்பதாம் நாளான இன்று (ஜூலை/3) தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழாவின் மகுடமாக - வெள்ளிக்கிழமை (ஜூலை/4) அதிகாலையில் மகாபிஷேகம், பிற்பகல் இரண்டு மணிக்கு திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகின்றது.

சித்சபையில் இருந்து பொற்சபைக்கூத்தனும்  சிவகாமவல்லியும் - ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருடன் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.

தேவ உபசார தீபாரதனைகளுக்குப் பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து காலை எட்டு மணி அளவில்  தேர்கள் புறப்பட்டன.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் - பேரானந்த சிவகோஷத்துடன் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

ரத வீதிகளில் - இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், தில்லைத் திருமுறைக் கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தின் சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் ரதவீதிகளில் உழவாரப் பணியுடன் நீர் தெளித்து கோலமிட்டு திருப்பணி மேற்கொண்டனர்.


தேர்களுக்கு முன்பாக திருமிகு எம்.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் ஓதுவார்கள் - தேவார திருவாசக திருமுறைப் பதிகங்களை ஓதியவாறு இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர்.

அன்னை பராசக்தி - மீனவப் பெருங்குலத்தில் கயற்கண்ணியாகப் பிறந்து எம்பெருமானை மணவாளனாக அடைந்தார் என்பது ஐதீகம்.

அதன்படி தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு ஆண்டும்  தேர் திருவிழாவின் போது மீனவப்பெருங்குலத்தினர்  சீர் வரிசை அளிப்பது வழக்கம்.

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் மரபினை ஒட்டி - மீனவப் பெருங் குலத்தைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுத் தலைவர் தலைமையில் -

ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனையுடன் மரியாதை செய்து மகிழ்ந்தனர்.

இந்த மகத்தான வைபவம் மாலை நான்கு மணியளவில்  மேல ரதவீதியில் நிகழ்ந்த பின் - தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தேர்கள் - மாலைப் பொழுதில் தேரடியில் நிலைக்கு வந்தன.

முன்னிரவுப் பொழுதில்  - திருத்தேர்களிலிருந்து  ஸ்ரீநடராஜப் பெருமானும் ஸ்ரீசிவகாமசுந்தரியும் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் செல்வர்.

அங்கு அம்மைக்கும் அப்பனுக்கும் ஏககால லட்சார்ச்சனை நிகழும்.


ஜூலை/4 - வெள்ளிக்கிழமை  சூர்யோதயத்திற்கு முன் - ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில்  ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் மகாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து - புஷ்பாஞ்சலி நிகழும்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரம்.

சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது.

அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா எழுந்தருளல்.

பின்னர் பிற்பகல் 2.00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர்.


ஸ்ரீநடராஜப் பெருமானும் ஸ்ரீசிவகாமசுந்தரியும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தி திருமஞ்சன தரிசன காட்சியளிக்கின்றனர். 

சித்சபா பிரவேசம் ஆகிய பின் மகாதீபாராதனை தரிசனம்.

ஜூலை/5 சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு தரிசனம். திருவீதி உலா.

ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழாவை முன்னிட்டு  தேரோடும் வீதிகளில் தேரோட்டத்திற்கு முன்பு சித்தர் ஸ்ரீசந்துரு சுவாமிகள்  அங்கப் பிரதட்சணம் செய்தார்.

ஸ்ரீசந்துரு சுவாமிகள் மனித நல்லிணக்க ஒற்றுமை வேண்டி ஸ்ரீநடராஜர் திருக் கோயிலின் - உள் பிரகாரம், வெளிப் பிரகாரம் மற்றும் ரத வீதிகளில் 2840 நாட்களை கடந்து தொடர் அங்கப் பிரதட்சணம் மேற்கொண்டுள்ளார்.


நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே!..
(1/80)
திருஞான சம்பந்தப்பெருமான்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1)
திருநாவுக்கரசு சுவாமிகள்


உய்த்தாடித் திரியாதே உள்ளமே 
ஒழிகண்டாய்ஊன்கண் ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் 
பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச் சிற் றம்பலத்தெம் 
பெருமானைப் பெற்றா மன்றே!.. (7/90)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!..
மாணிக்கவாசகப் பெருமான்


கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே!..
திருமூலர் 

அருட்சோதி தெய்வம்எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும்  தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்!..
இராமலிங்க சுவாமிகள்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கேபல்லாண்டு கூறுதுமே!.. 

சேந்தனார்

திருச்சிற்றம்பலம்!..
* * *

வியாழன், ஜூன் 26, 2014

ஆனித் திருமஞ்சனம்

கோயில் என்று  வழங்கினாலே சைவத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலம் ஆகிய  நடராசப் பெருமானின் திருக்கோயிலைத்தான் குறிக்கும். 

திருஊரின் திருப்பெயர் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தபடியால் - தில்லை. 
திருக்கோயிலின் திருப்பெயர் திருச்சிற்றம்பலம். 

இன்று ஊர்ப்பெயராகிய தில்லை வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது.


திருக்கோயிலின் பெயராகிய  திருச்சிற்றம்பலம் - சிற்றம்பலம் - என உருமாறி சிதம்பரம் என்றாகி விட்டது. ஆனால் - 

மூல மூர்த்தியோ அன்று முதல் இன்று வரை என்றும் மாறாத பாங்கினனாக, 

''..என்று வந்தாய்!.. எப்படி இருக்கின்றாய்!..'' - என நலம் விசாரிக்கின்றான். 

இந்த நலம் விசாரிப்பினை அப்பர் பெருமான் - நமக்கு அறிவிக்கின்றார்.

ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்எனும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே!..(4/81/2)

இப்படி அன்புடன் நலம் கேட்டு அறியும் ஐயனின், திருமுகத்தைப் பார்த்துக் கொண்டியிருப்பதற்காக -

காலந்தோறும் மனிதப் பிறவியாக பிறந்து கொண்டேயிருக்கலாம் என்று அப்பர் ஸ்வாமிகள் ஆவலுடன் பாடுவதும் - அதனால் தானே!..

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே!..
(4/81/4)


புவி எங்கிலும் இருக்கும் சிவாலயங்கள் அனைத்திலும் அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் அங்குள்ள சிவகலைகள் அனைத்தும் திருச்சிற்றம்பலத்தின் மூலஸ்தான சிவலிங்கத்தில் ஒடுங்கி - பின் உஷத் காலத்தில் விரிந்து எழுந்து பரவுவதாக ஐதீகம். 

மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம் - எனவும், உருவம், அருவம், உருஅருவம் - எனவும் குறிக்கப்படும் தாவர ஜங்கம நிலை.  அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தும் இதற்குள் அடக்கம். 

அப்படி எனில் - எந்நேரமும் சிவகலைகள் ஒடுங்குவதும் விரிவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது - எனப் பொருள்!.. 

இதன் காரணமாகவே - சிதம்பரம் அநாகத சக்ரம் எனும் இருதய ஸ்தானமாகக் குறிக்கப்படுவது.

மூலாதாரம்  - திருவாரூர்
ஸ்வாதிஷ்டானம் - திருஆனைக்கா
மணிபூரகம் - திருஅண்ணாமலை 
அநாகதம் - சிதம்பரம் (இருதய ஸ்தானம்)
விசுக்தி - திருக்காளத்தி  
ஆக்ஞா - காசி
சஹஸ்ராரம் - திருக்கயிலை
துவாதச சாந்தப்பெருவெளி - மாமதுரை

நுரையீரலின் சுவாசமும் இதயத்தின் துடிப்பும் இரத்த ஓட்டமும்  எப்போதும் இயங்கிக் கொண்டேயிருப்பதன் திருக்குறிப்பு தான் - திருச்சிற்றம்பலம்!.. 

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஈசனின் ஆனந்த நடனம் ஓய்வதே இல்லை!.. என ஆன்றோர்கள் குறிப்பது இதைத்தான்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என நால்வரும் திருப்பதிகம் பாடியருளிய திருத்தலம் சிதம்பரம்.


ஸ்ரீ சிவகாமசுந்தரியுடன்  ஸ்ரீ நடராஜப் பெருமான் அருளும் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நேற்று (ஜூன்/25) காலை பத்து மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அம்பிகையும் ஐயனும் வீற்றிருக்கும்  சித்சபையின் எதிரில் அமைந்துள்ள கொடிமரத்தில் - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - மங்கள வாத்யங்கள் முழங்கிட, ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ கோஷத்துடன் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. 

பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவுடன் - ஆனித் திருமஞ்சனத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும். 

ஜூன்/26 இரவு வெள்ளி சந்திர பிரபையில் பவனி. 
ஜூன்/27 இரவு தங்க சூர்ய பிரபையில் பவனி. 

ஜூன்/28 இரவு வெள்ளி பூத வாகனத்தில் பவனி. 
ஜூன்/29 இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி. 

ஜூன்/30 இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. 
ஜூலை/01 இரவு தங்க கயிலாய வாகனத்தில் பவனி. 

ஜூலை/02 மாலை தங்க ரதத்தில் ஸ்ரீபிக்ஷாடனர் பவனி. 
ஜூலை/02 மகம் - மாணிக்க வாசகர் குருபூஜை

ஜூலை/03 அதிகாலை 4.15 மணிலிருந்து 4.45 மணிக்குள், ஸ்ரீநடராஜப் பெருமான் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் திரு உலா வந்தருளல்.


மாலை 5.30 மணியளவில் தேரிலிருந்து ராஜ சபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளல்.  இரவு ஏக கால லட்சார்ச்சனை நிகழும். 
 
ஜூலை/04 அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னை சிவகாமிக்கும், நடராஜப் பெருமானுக்கும் ஆனி திருமஞ்சனம் (மகா அபிஷேகம்). காலை பத்து மணிக்கு சித்சபையில் பூஜை. 

பஞ்ச மூர்த்தி உலா நிகழ்ந்த பின் - மதியம் 12 மணிக்கு மேல் ஆனந்தத் தாண்டவ தரிசனம். 

ஐயனும் அம்பிகையும் சித்சபை பிரவேசம். மகா தீபாராதனை.

ஜூலை/05 பஞ்ச மூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் மங்கலகரமாக உற்சவம் நிறைவடைகின்றது. 

ஆனி உத்திர நட்சத்திரத்தன்று சகல சிவாலயங்களிலும் சிவகாம சுந்தரிக்கும் நடராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.


செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் 
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற 
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே!..(1/80)
திருஞானசம்பந்தர்.

சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே!..(4/81) திருநாவுக்கரசர்.

தில்லைச் சிற்றம்பலத்துள் நடம் ஆடுதற்கு - ஐயன்  எடுத்திட்ட திருப்பாதம்  அன்றோ நம்மை ஆட்கொண்டது.

குஞ்சித பாதம் என்பது தூக்கிய திருவடி.  

ஐயன் ஆடுதற்கு எடுத்திட்ட திருப்பாதம் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவை அழுத்தும் பாதம் - என்பர் பெரியோர்.

தேவரொ டாடித் திருஅம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் 
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
திருமூலர்

சிவாய திருச்சிற்றம்பலம்
* * *