நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 24, 2026

முத்து

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி 
 வியாழக்கிழமை

2014 ல் பதிவு செய்யப்பட்ட பிள்ளைத் தமிழ் பாடலுக்கு விளக்கம் கேட்டிருந்த  அன்பருக்காக இந்தப் பதிவு


திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில் தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலையுண்டு
தத்துங் கரட விகடதட தந்திப் 
பிறைக் கூன் மருப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
தழைத்து கழுத்து வளைந்த மணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரும் நித்திலம் தனக்குக்
கூறுந்தரமுண்டு உன் கனிவாய்
முத்தம் தனக்கு விலை உண்டோ
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே..
-: பகழிக்கூத்தர் :- 


கடலில் அலையடித்து வலம்புரிச் சங்குகள் கரையில் தவழ்ந்து உமிழும் முத்துக்கு விலை உண்டு.

யானையின் தந்தத்தில் உண்டாகும் முத்துக்கும் விலை உண்டு.

வயலில் தழைத்து விளைந்த  குளிர்ச்சியான நெல் முத்தினுக்கும் மேகங்கள் பொழிந்த நீர் முத்துக்களுக்கும் விலை உண்டு.

 இவையனைத்தும் மதிப்பு மிக்கவை; ஆனால், 

முருகா நீ உந்தன் கனி இதழ்களால் தரும் முத்தமோ விலைமதிப்பற்றது, அதற்கு விலையே இல்லை..

முருகா... முத்தம் தருக..

முத்துக்களைத் சொரிகின்ற திருச்செந்தூரின் முதல்வா.. முத்தம் தருகவே!..

முருகா
முருகா...
***

வியாழன், ஆகஸ்ட் 20, 2026

அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வியாழக்கிழமை





திருவாசல் தோறும்
அருள் வேதம் ஓத
சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசன் என்று
அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா..
குருநாத சுவாமி
குறமாது நாதா
குமரேசர் என்ற பொருளே
மறவாமல் வெற்றி
மயில் மீதிலேறி
வரவேணும் என்றன் அருகே..
-: அவிநாசிப் பத்து :-

முருகா.. முருகா
***

வியாழன், ஜூலை 09, 2026

பிரார்த்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வியாழக்கிழமை


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்!..

முருகா முருகா
***

வெள்ளி, செப்டம்பர் 26, 2025

முசியாமல் இட்டு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


படிக்கின்றிலை பழநித்திரு நாமம் படிப்பவர் தாள்
   முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
      மிடிக்கின்றிலை பர மாநந்த மேற்கொள விம்மி விம்மி
         நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே... 75
கந்தரலங்காரம்
 நன்றி கௌமாரம்


ஏ.. நெஞ்சே, பழநியம்பதியின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தாயில்லை. பழநி முருகனின் திருப்பெயர்களை ஓதுகின்ற அடியார்களது திருவடிகளைப்
பணிகின்றாயில்லை.  
முருகா சரணம்' என்று துதிக்கின்றாயில்லை.  யாசித்து வருவோர்க்கு  முகம் கோணாமல் உணவு வழங்கி -

அதனால், நீ வறுமை அடைந்தாயில்லை. பேரின்பம் மிகுதியாகி முருகனை நினைத்து விம்மி விம்மி அழுகின்றாயில்லை... 

அன்பினால் முருகன் பேர் பாடி ஆடுகின்றாயில்லை..
இப்படியிருக்க நமக்கு ஏது அடைக்கலம் ?..
-: தஞ்சையம்பதி :-

முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை...

இந்த வரிகளினூடாக நாயன்மார்கள் பலர் நினைவுக்கு வருகின்றனர்..
-::-
    
முருகா சரணம்
சிவாய நம
**

வியாழன், நவம்பர் 09, 2023

நோயற்ற வாழ்வு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 23
வியாழக்கிழமை

இன்று
வள்ளல் பெருமான்
அருளிச்செய்த
திரு அருட்பா


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே...


மனம் ஒன்றி உனது திருவடிகளை நினைக்கின்ற 
உத்தமருடைய உறவு வேண்டும் முருகா..

உள்ளொன்றும்  புறம் ஒன்றுமாக இருப்பவருடைய 
உறவு என்னுடன் கலந்து விடாதிருக்க வேண்டும் முருகா..

பெருமையுடைய நினது திருப்புகழை பேசிட வேண்டும்.
பொய் பேசாது இருக்க வேண்டும் முருகா..

பெரியோர் வகுத்தளித்த உயர் நெறியில் நடந்திட வேண்டும் முருகா..

காமம் (ஆசை)
குரோதம் (கோபம்)
லோபம் (சுயநலம்)
மோகம் (மயக்கம்)
மதம் (ஆணவம்)
மாச்சர்யம் (பொறாமை)
எனும் பேய்கள் எனைப் பிடியாதிருக்க வேண்டும் முருகா..

மங்கையைக் கலந்திருக்கும் ஆசையை மறக்க வேண்டும் முருகா..

உனை மறவாது
என்றென்றும் நினைத்திருக்க வேண்டும் முருகா..

கல்வியினால்
உயர்ந்த மதி விளைந்திட 
வேண்டும் முருகா..

நினது கருணையே செல்வமாக  நிறைந்திருக்க வேண்டும் முருகா..

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் முருகா..

தருமம் மிகுந்திருக்கும் சென்னை கந்த கோட்டத்தில்  ஓங்கி வளர்கின்ற முருகனே கந்தவேளே..

களங்கமற்ற நெஞ்சகத்தில்  குளிர்ந்த முகத்துடன் 
தூய மணியாகத் துலங்கும் சைவ மணியே.. 

சண்முகமாய் விளங்கும் தெய்வ மணியே..


முருகா.. முருகா!..
**
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

புதன், ஏப்ரல் 05, 2023

உத்திரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 22
புதன் கிழமை
உத்திரத் திருநாள்

தஞ்சை திருவையாறு சாலையில் வீட்டுக்கு 
அருகில் 3 கி.மீ தொலைவில் உள்ளது   அரசூர் கிராமம்.. ஊரின் எல்லையில் முருகன் கோயில்..

கார்த்திகை, சஷ்டி நாட்களில் திரளான 
மக்கள் வழிபடும் கோயில்..

அரசூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணிஸ்வாமிக்கு 
எளியேன் தொடுத்த கவிமாலை


ஆறுபடை வீட்டின் அழகனே முருகா
ஆனந்த வரம் நல்குவாய்
வேறுதுணை யாரும் விதிவழியில் இல்லை
வினை மாற்றி நலம் காட்டுவாய்

குளிர்மேகம் தேடும் பயிராக வாடினேன்
குமரா உன் அருள் தேடினேன்..
வழிமீது வழியாக விதிவழி ஆடினேன்
நானுமொரு கவி பாடினேன்..

உத்திரத்தின் காவடியில் ஆடி வரும் 
முருகா உன்பாதம் நாடி வந்தேன்
உயிரோடும் உணர்வோடும் ஒன்றாகி 
நின்றவன் உன்னையே பாடி வந்தேன்..

தடி கொண்டு அடித்தாலும் தாங்கியே 
காப்பது கந்தா உன் கையல்லவா..
தாயாகித் தந்தையாய் தமிழாகி நிற்பது
என்றென்றும் நீயல்லவா..

ஈசன் திருமகனே எந்தையே முருகா
என்னோடு நீ நின்றனை 
என்தீவினை கண்டு ஈடேறுவான் என்று
இன்னருளும் தான் தந்தனை..

தண்டாயுதம் கொண்டு தனியாக நின்றவா 
தமிழ் கொண்டு உனைப் போற்றினேன்
தஞ்சமென்று வந்து தலைவா நின் வாசலில் 
நானும் ஒரு சுடர் ஏற்றினேன்..

ஆறுபடை வீட்டின் அருளான முருகா 
அஞ்சாதே எனச் சொல்லுவாய்..
ஆதாரம் நீயென்று ஆலயம் வருவோர்க்கு
அன்போடு வழிகாட்டுவாய்..

கோமகள் குஞ்சரி குறமகள் வள்ளியும்
வரவேணும் வரவேணுமே
வண்ண மயிலாடி வர வளர் சேவல் கூவி வர
வசந்தங்கள் தான் வேண்டுமே..

நான் செய்த பிழையெலாம் இல்லாது 
அகல என் சாமி வழி காட்டுவாய்..
நன்றாகும் நாளில் நல்லதொரு பொழுதில்
நல்ல அருள் நீ காட்டுவாய்..


செந்தூரின் முருகனே சிவமுத்துக் குமரனே
எந்தன் குரல் நீ கேட்டு வா
நானாக நான் செய்த பிழை தன்னை நீக்கியே
நீங்காத நல்லருள் நீ கூட்டுவாய்..

ஐயா உன் அருளின்றி அருமருந் தொன்றில்லை
அருள் கொண்டு நீ ஆற்றுவாய்
அரசூரின் எல்லையில் ஐயா நீ என்றென்றும் 
அன்போடு வழி காட்டுவாய்..

பரங்குன்றம் தன்னிலே பைந்தமிழ்க் குஞ்சரி
குலமகள் ஆகி நின்றாள்
மங்கலம் காணுவார் மனையறம் பாடுவார்
ஆடுவார் ஆடி மகிழ்வார்..

மனம் எலாம் மங்கலம் மனை எலாம் நன்கலம்
 அருள்கின்ற அரசூரிலே  
ஆதரவு நல்குவாய் அன்பு முகங் காட்டுவாய்
அடியவனின் குலம் வாழவே..

சித்தனுக்குச் சித்தன் என்றாகி நிற்கின்ற
செவ்வேளும் நீ அல்லவோ..
தென்பழனி மீதிலே திசையாளும் முருகனே 
பரமனே ஞான மூர்த்தி

தண்டாயு தத்துடன் தவக் கோலம் கொண்டனை 
சிவ குமரன் நீ அல்லவா
குன்றாது குறையாது   அளக்கின்ற குமரனே
அரசூரின் மன்னன் அல்லவா..


எங்கெங்கு நின்றாலும் நினைக்கின்ற 
நெஞ்சிலே நிலை கூட்டும் ஏரகத்தான்..
கதிராடும் வயல் தன்னில் சதிராடி 
நிற்கின்ற காவேரி ஊரகத்தான்..

ஈசனொடு வேதம் பேசுகின்ற ஞானம் 
தான் கொண்ட சீரகத்தான் 
சீராடும் நெஞ்சத்து அடியார்கள் தன்னோடு
அரசூரின் ஆறுமுகத்தான்..

தணிகாசலம் நிற்கும்  தலைவனே 
பணிபவர் பகை தீர்க்கும் செல்வகுமரா
குஞ்சரி தன்னோடு குறமங்கை நின்றாட
கொண்டாடும் கோலக் குமரா..

அருகாக நிற்கும் எனை அரசாக மாற்றுவாய்..
அடியேனும் கை கூப்பினேன்
அரசூரின் நாயகா ஆயுளும் நல்குவாய்
ஆரோக்யம் அருளுவாயே..

மழைமுகில் இழைகின்ற சோலை வளர் 
முருகா பிணி தீர்க்க வருவாயப்பா
முன்வினை தீர்ப்பாய் முகந்தனைப் பார்ப்பாய்
உகந்தெனைக் காப்பாயப்பா..

தமிழ் கூறும் இறைவனே அடியவர்க்
கன்பனே அழகனே தமிழ்க் குமரனே
தண்கழனி அரசென அரசூரில்  நிற்கின்ற
தங்கமே தவச் செல்வனே..

இணங்கி நின்றிரப் போர்க்கும் வணங்கி வழி செல்வோர்க்கும் வாழ்வருள் முருகா போற்றி..
நலிகின்ற நிலை நீக்கி பொலிகின்ற நலம் 
நல்கும்  கந்தனே போற்றி போற்றி..

உயிர் தனில் ஓவியம் என்று நீ வந்தருள்க
வரமெலாம் தந்து அருள்க..
வருகவே வருக என வரவேற்கும் கவி கேட்டு
கந்தனாய் காட்சி தருக..


சிங்கார மயிலோடு கொடிச்சேவல் தன்னோடு
குறையெலாம் தீர்க்க வருக..
குடி கொண்ட அடியார்கள் குறையேதும் பாராமல் கோடானுகோடி தருக..

குஞ்சரி குறமகள் கொண்டாடும் குமரனே
வருகவே வருக வருக
அரசூரின் அழகனே செண்டாடும் வேலனே
வருகவே வருக வருக..

வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா..
***

வெள்ளி, பிப்ரவரி 24, 2023

முருகா..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 12
 வெள்ளிக்கிழமை


முருகன் அடியார்கள் அனைவருமே 
அறிந்திருக்கும் பாடல் - இது..


இதுநாள் வரைக்கும் இந்தப் பாடலை - தனிப்பாடல் என்றே நினைத்திருந்தேன்.. யூடியூப்பில் கண்டதும் தரவிறக்கம் செய்து பதிவில் வழங்கியுள்ளேன்..

அபூர்வ திருடன் (1958) எனும் திரைப்படத்தில்
திரு S.தக்ஷிணாமூர்த்தி அவர்களது இசையில் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்களது பாடல்..

பாடியிருப்போர் -
TM. சௌந்தரராஜன்  குழுவினர்


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா..

முறை கேளாயோ குறை தீராயோ..
மான் மகள் வள்ளியின் மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி 
தான் புகல்வாய்..

அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே…
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்..

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் 
தேடி நின்றோம்..

தவசீலா ஹே.. சிவபாலா..
தவசீலா ஹே.. சிவபாலா..
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா..

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா!..
***

திங்கள், பிப்ரவரி 06, 2023

தைப்பூசத் தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 23
திங்கட்கிழமை

எங்கள் குலதெய்வம் வீற்றிருக்கும் உவரி (
 திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ) ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய நேற்று திருத் தேரோட்டம் சிறப்புற நடைபெற்றது..

 ஸ்ரீ சந்திரசேகரரும் 
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையும்
 திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனர்..

படங்களைப் பதிவேற்றிய 
பக்தப் பேரவையினர்க்கு 
நெஞ்சார்ந்த நன்றி..










திருத்தேர் நிலைக்குத்
திரும்புகின்ற காட்சி..


கோவை - சிரவை ஆதீனம் கௌமார மடாலயத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி சித்திரத் தேர் திருவுலா..


சித்திரத் தேரில்
சிங்கார வேலன்
எழுந்தருளிய காட்சி..


Fb ல் 
வழஙகியவர்க்கு
 நன்றி..

முருகா சரணம்
சரணம்.. சரணம்..
முத்துக்குமரா
சரணம்.. சரணம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வெள்ளி, டிசம்பர் 02, 2022

வருவாய் முருகா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 16
வெள்ளிக்கிழமை

இன்றொரு திருப்புகழ்
-: பொது :-


தத்ததன தானத் ... தனதான

இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே

முத்தமிழை ஓதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே

நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)


இந்தப் புவியில் நான் மீண்டும் பிறவாமலும்
(அப்படிப் பிறப்பினும்) ஏமாற்றுக்காரருடன் கூடிக் கலக்காமலும்

முத்தமிழைப் படித்துத் தளராமலும்
முக்திநிலையை எனக்குத்
தந்தருள்வாயே..

தத்துவப் பொருளாகிய
மெய்ஞ்ஞானத்தை அருளும் குருமூர்த்தியே
(ஓம் எனும்) ஒலியாகத் திகழ்பவனே
புத்தமுதாகப் பொலிபவனே..

தினமும் எனக்கு நன்மைகளைச் செய்பவனே
(நான் பெற்ற) பெருவாழ்வாக இருப்பவனே
ஆடலில் வல்லவனே
உலகின் பேரொளியாய்த் 
திகழ்கின்ற பெருமாளே..
**
முருகா முருகா
வருவாய் அருள்வாய்
***

புதன், நவம்பர் 30, 2022

வாழ்க சீர்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று 
கார்த்திகை 14
  புதன் கிழமை

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமது இல்லத்தில் பூஜை செய்யும் போது இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பதிகம் பாடுகின்ற அருமையான காணொளி..


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்!..
-: கந்தபுராணம் :-

முருகா.. முருகா..
***

புதன், நவம்பர் 16, 2022

விளக்கவுரை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 30 
 புதன்கிழமை


பன்னிரு கரத்தாய் போற்றி!..

எம்பெருமான் முருகனைக் கொண்டாடும் புகழுரைகளில் இதுவும் ஒன்று..

ஆயுதங்களை ஏந்துபவை தான் எனினும், அடியவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளுடன் வாரித் தருவனவும் பன்னிரு திருக்கரங்களே!.. - என்பது சான்றோர் திருவாக்கு..

அறுமுக வேலன் பன்னிரு திருக்கரங்களை உடையவன் என்று கொண்டாடுகின்றோம்..

பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் என்பது புகழ் பெற்ற சொற்றொடர்..

ஆனால், முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் காணப்படுவதில்லை..

வலக்கீழ்க் கரம் அபயம் அளித்தும் இடக்கீழ்க் கரம் அனைத்தும் அளித்தும் திகழ்வன. ஏனைய திருக் கரங்களில் தலத்திற்கும் கோலத்திற்கும் ஏற்றவாறு ஆயுதங்கள் விளங்குகின்றன..

முருகனின் ஆயுதங்கள் என -  பன்னிரண்டுக்கும் மேலானவை காட்டப்படுகின்றன.. அவற்றுள் - ஜபமாலை, கமண்டலம், கொடி, தாமரை, மணி, பாசம் - என்பனவும் வருகின்றன.. 

அவை ஆயுதங்கள் அல்ல.. வேறு சில உச்சாடன பிரயோகங்களுக்கு உரியவை..

வேல், கொடி, பாசம், அங்குசம், வாள், கேடயம், கத்தி, ஏக சூலம், இருதலைச் சூலம், கதை, வஜ்ரம், கரும்பு, மலர், வில், அம்பு, சங்கு, சக்கரம்,
தண்டம், உலக்கை - இவற்றுள் தலத்துக்கு ஏற்றவாறு பத்து மட்டுமே முருகனின் திருக்கரங்களில் அமைந்திருக்கும்..

உலக்கை என்பதை நாமறிவோம்.. 
இங்கே சொல்லப்படுவது குற்றுலக்கை.. இதுவே வடிவங்களில் மாறுபட்டு மாத்தடி  என்றும் சுக்குமாந்தடி என்றும் குறுந்தடி என்றும் சொல்லப் படுகின்றது..

கந்தகுரு கவசத்தில் மாத்தடி என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்கும்..

தண்டு எனும் தண்டம் முருகனுடைய சிறப்புகளில் ஒன்று.. தேக்கு, கருங்காலி மரங்களில் இருந்து சீராகக் கடைந்தெடுக்கப்படுவது தண்டாயுதம்..

தண்டாயுதத்தின் உச்சியில் கிளி ஒன்று இருக்கக் காணலாம்.. அந்தக் கிளி தான் ஸ்ரீ அருணகிரிநாதர் என்பர் ஆன்றோர்..

கோழிக்கொடி - கோழிச் சின்னமாகவும் விளங்கும்..

நான்கு திருக்கரங்களுடன் முருகன் தரிசனம் தரும்போது பின்னிரு கரங்களில்  இருதலைச் சூலம் எனும் சக்தி ஆயுதமும்
வஜ்ரமும் காணக் கிடைக்கின்றன.. 

பதிவின் முதலில் உள்ள படத்தை நோக்கினால் வலப்புறம் இருதலைச் சூலம். இடப்புறம் வஜ்ரம்..

பழநியிலும் சுவாமி மலையிலும் வலப்புறத்தில் திகழ்வது தண்டாயுதமே..


சுவாமிமலையில் பரமகுருவின் வலப் புறத்தில் அணி செய்வது வஜ்ரவேல். இதுவே குலிசாயுதம் என்பர்..

செஞ்சேரி எனும் தென்சேரி
திருத்தலத்தில் வலக் கீழ்க்கரத்தில் நாகத்தையும் இடமேல் கரத்தில் சேவலையும் கொண்டிருக்கின்றான்.

இரண்டு திருக் கரங்களுடன்
திருச்செங்கோட்டு வேலவன்..
வலக்கையில் வேல் இடக்கையில் சேவல் ஏந்திய திருக்கோலம்..

பொதுவாக சக்தி வேலையும் சேவற் கொடியையும் முருகனருகில் சாற்றுவதே மரபு..

கரும்பும் மலரம்புகளும் பாவனையே.. அவற்றைத் தாங்கியுள்ள சிற்ப வடிவங்கள் மிக மிக அரிது..

செந்தில் முருகனின் கரங்களில் சிவமணி மாலையையும் தாமரையையும் காணலாம்..

சங்கு சக்ரதர ஷண்முகன்

அழகாபுத்தூர் ஸ்ரீ படிக்காசு வைத்த நாதர் ஆலயத்தில்
முருகப்பெருமான் சங்கு சக்கரம் தாங்கி அருள்கின்றான்..

எட்டிக்குடி முருகனின் கையில் குறுந்தடி (மாத்தடி) திகழ்கின்றது..

திரு ஐயாறு

திரு ஐயாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமானின் வலக்கையில் அம்பும் இடக்கரத்தில் வில்லும் விளங்குகின்றன..

இதைப் போலவே திருப்பூந்துருத்தி கோயிலில் மண்டபத் தூண் ஒன்றில் வில்லேந்தி விளங்கும் கோலம்..

தஞ்சை கோயிலிலும் இப்படியான சிறு சிற்பம் உள்ளது..

 முருகன் - சாயாவனம்

சாயாவனம் எனப்படும  திருச்சாய்க்காட்டில் முருகப்பெருமான் வில்லேந்திய திருக் கோலத்தில் விளங்குகின்றான்..

தாமரை மலர் ஏந்திய முருகனை ஆவூர் பசுபதீஸ்வரத்திலும்  
திருக்கரத்தில் மாம்பழத்துடன் திகழும் வேலனை திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலும் தரிசிக்கலாம்..

கோடியக்கரை ஸ்ரீ குழகர் கோயிலில் ஒரு திருமுகமும் ஆறு கரங்களுமாகத் திகழும் முருகனின் திருக்கரத்தில் அமிர்த கலசம் விளங்குகின்றது..

இதெல்லாவற்றையும் நீ கண்டாயா?... 
- என்று கேட்டால் -

தஞ்சை, திரு ஐயாறு, திருப்பூந்துருத்தி, பழனி, சுவாமிமலை - இங்கெல்லாம் நேரில் கண்டிருக்கின்றேன்.. 

மற்றவை எல்லாம் சிறு வயதில் இருந்து கேள்வியுற்ற செய்திகள் தான்..

அத்துடன்,
பன்னிரு கையனின் பலவிதமான சித்திரங்களையும் கவனித்திருக்கின்றேன்.. 

அதற்கு மேல்  தற்போது  இணையத்திலும் காண்கின்றேன்.. 

திவ்ய தேசங்களில் திருக்கோலத்தினை  எடுத்துரைத்து பெருமாளை தரிசிக்கச் செய்வது போல சிவாலயங்களில் செய்வதில்லை என்பது ஒரு குறை.. 

இருப்பினும் ஒருசில சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் விசேஷமான திருக்கோலம் இருப்பின் விவரித்துச் சொல்வதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்..

கோயில் தல வரலாறுகள் சிலவற்றில் மட்டுமே முருகனின் வடிவழகைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்..

தெய்வீக ஓவியர்களான
ஸ்ரீ சிற்பி, ஸ்ரீ கொண்டைய ராஜூ சுப்பையா, ஸ்ரீ முருக கனி, ஸ்ரீ ராமலிங்கம் - ஆகியோரது  சித்திரங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து.. 

வாரியார் ஸ்வாமிகள்  உபந்நியாசங்களில் நிறைய கூறுவார்.. 

வேலும் கொடியும் முருகப் பெருமானின் திருச்செவி மடலுக்கு உயர்ந்ததாக இருத்தலாகாது - என்று..

வள்ளி நாச்சியாரின் திருக்கரத்தில் தாமரையும் தேவகுஞ்சரியின் திருக்கரத்தில் நீலோத்பலமும் அமைதலே சிறப்பு  என்றும் விளக்குவார் ஸ்வாமிகள்..

இப்படி சரியாக அமைந்த  சித்திரங்களை இப்போது
காண்பது அரிது.. 

இருபது வருடங்களுக்கு முன்பு
சுவாமிமலை சிற்பக் கூடத்தின் நண்பர் சொன்னார் -  முருகனின் திருமேனி தண்டத்துடன் தான் வடிக்கப்படும்.. வேல் தனியாக சாற்றுமுறை - என்று..

சிற்ப சாஸ்திர நூல்களில் தோற்றப் பொலிவு நுணுக்கங்கள் தெளிவாக சொல்லப் பட்டிருக்கும்.. 

இனி அவற்றைத் தேடிக் கொண்டு எங்கே செல்வது?..

ஆனாலும்,
தற்போது  விருப்பத்திற்கு ஏற்ப சிற்பங்களை வடித்துக் கொள்ளலாம். அதற்கு 
வியாக்கியானமும் சொல்லிக் கொள்ளலாம்.. 

உதாரணத்துக்கு, 
விநாயகரும் ஆஞ்சநேயரும் அர்த்த சரீரமாக விளங்குவது.. ஒரே திருமேனியில் தச அவதார அம்சங்களுடன் விளங்கும் பெருமாள், 
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மடியில் பாலா திரிபுர சுந்தரியை அமர வைப்பது - இன்னும் பலப்பல..

இங்கு சொல்லப்பட்டவை சிறிதளவே... வெவ்வேறு கோலங்கள் அநந்தம்..

தேடுங்கள் முருகனை..
தென்படுவான் கண் முன்னே...

நேற்று நமது தளத்தில் வெளியிடப்பட்ட விரிவுரை எனும் கதையில் -

" பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்.. ன்னு பாடுவான்.. கேக்குறதுக்கு நல்லா இருக்கும்.. அதுக்கு எல்லாம் பேரு என்ன.. ன்னு கேளு!.. ஒன்னுந் தெரியாது.. "

- என்ற வரிகளுக்கான பொதுவான பதில் தான் இந்தப் பதிவு..
*

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணில் இருக்கும் மாமணியே போற்றி!..
-: கந்த புராணம் :-

முருகா சரணம்
சரணம் சரணம்..
***

வெள்ளி, நவம்பர் 11, 2022

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 25
 வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
வழக்கம் போல
திருப்புகழ்


 அருணகிரிநாதர்
அருளிச் செய்த
நோய் தீர்க்கும்
திருஅண்ணாமலைத்
திருப்புகழ்..
*

தத்ததன தனதான தத்ததன
தனதான தத்ததன ... தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி 
வறல்சூலை குட்டமொடு ... குளிர்தாகம்

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன் ... வெகுகோடி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினி ... முடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை ... யருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு 
சுடர்வீசு சக்ரமதை ... யருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் ... முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு ... மழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறை ... பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)


வலி, வாதம், பித்தம், கண்ட மாலை எனும் கழுத்துப் புண், சிலந்தி எனும் குழிப்புண்,

உடல் வறட்சி, வயிற்று உளைச்சல், குஷ்டம், குளிர் சுரம், நா வறட்சி,

மிகுதியான நீரிழிவு, மகோதரம் எனும் உப்புசம், கபம் என சளி, வாந்தி, களைப்பு,

மூத்திரத் தடை இவைகளுடன் கோடிக் கணக்கில்

சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிவது

தெளிந்த அறிவு இல்லாத எனக்கு இனிமேல் இயலாது.

மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை எனது நாவாரப் புகழ்வதற்கு

சிவஞான சித்தியைத்
தந்தருள்வாயாக.

நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழும்படி

ஒப்பற்ற ஒளி வீசும்
சுதர்சன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞான மயமான

பவள நிறச் சடை முடியினை உடைய ஈசன் - புகழ்மிக்க சிவகாமியின் மணாளன் -

பேரின்பப் பெருங்கடல் ஆகிய சித்த மூர்த்தி சிவபிரான் அருளித் தந்த முருகப் பெருமானே..

கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகன்
தாரகாசுரனுடன்

அசுரர்கள் யாவரும் இறந்து ஒழியும்படிச் செய்த அக்கினி வேலாயுதத்தை உடையவனே,

அமுத மயமான பீடத்தினள் ஆகிய வள்ளிக் குற மகளுடனும்,  ஐராவத யானை வளர்த்த மங்கை தேவயானையுடனும்

திருஅண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!..


அண்ணாமலையின்
அழகா சரணம்
அறுபடை வீட்டின்
இறைவா சரணம்..
***

புதன், நவம்பர் 02, 2022

துணைவன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 16
 புதன் கிழமை


இன்றைய பதிவிலுள்ள பாடல் திரைக்காக எழுதப்பட்டது தான்..

இருந்தாலும்,
இந்தப் பாடலைக் கேட்கும் போதே மெய் சிலிர்த்து விடும்.. கண்கள் கசிந்து
நெஞ்சம் நெகிழ்ந்திருக்கும்..

பாடலின் நிறைவில் நம்மையும் மீறிய ஏதோ ஒன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும்.. 

1969 ல் வெளியான துணைவன் எனும் திரைப்படத்திற்காக -

ஒரே பொருளைக் குறித்து - மருதகாசி, கண்ணதாசன் எனும் பெரும் கவிஞர்கள் இருவர் எழுதிக் கொடுத்த பாடல் இது..

திரு K.V. மகாதேவன் அவர்களது இசையில்

T.M. சௌந்தரராஜன் P. சுசீலா பாடியிருக்கும் அருமையான பாடல் இது..

நாம் காணொளியில் காண்பது நடிப்பு தான்.. ஆனால், பாடலும் இசையும் நம்முள் ஏற்படுத்துவது வேறொரு நிலையை!..

மருதமலை முருகன்

முதல் பகுதி
திரு அ.மருதகாசி 
அவர்களது வரிகள்..

மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே!..
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே!..
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே!..
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே!..

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே..
மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே!..
பிள்ளை முகம் பாரு.. - முருகா பிறவிப் பிணி தீரு..
பிள்ளை முகம் பாரு.. - முருகா பிறவிப் பிணி தீரு..
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே!..

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே!..
அன்னை தந்தையுடன் உன்னை சிவன் மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே!..

வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே!..
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே!..

திருமுருகன்பூண்டியில் பரமனருள் வேண்டியே 
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா!..

செஞ்சேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா!..

வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே!..
வற்றாத கருணை மழை நற்றாய் எனப் பொழியும்
வட்டமலைத் தெய்வமே வெற்றி வேலே!..

அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரகோட்ட தவமணியே!..
அன்பன் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருட்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தகோட்ட தமிழ்க் கனியே!..
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே!..

வீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா!..
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா!..

பக்தர்கள் சேரூர் பவவினை தீருர்
உத்தரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே 
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே..
மயிலை ஆடச் செய்தவனே!..

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன் பெற்ற 
முருகனே ஷண்முகா முத்துக் குமாரா!..
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா!..

திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு எண்கண்ணிலே 
சொன்ன சுப்ரமண்யா!.
கந்தன்குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக 
அமர்ந்த புண்யா!..

தக்க தருணத்திலே
பக்தரின பக்கம் துணை இருப்பாய்!..
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜகம் 
புகழ் சிக்கல் சிங்காரவேலா!..

செட்டி மகன் என்னும் இறைவா
செந்தமிழின் தலைவா!..
எட்டிக்குடி தனிலே அகத்தியன் 
ஏற்ற குருவானவா!..

பழகு தமிழ் கொண்டு அருணகிரி 
அன்று திருப்புகழ் பாடிய வயலுரா!..

புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப் 
படை போற்றும் விராலிமலை வீரா!..

கொன்றதும் சூரனைக் கோலமயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா!..

கந்தையா எங்களின் 
கவலையைத் தீரய்யா!..
கழுகுமலையில் வாழும் வேலய்யா!..
கழுகுமலையில் வாழும் வேலய்யா!....

இரண்டாம் பகுதி:
கவியரசர் கண்ணதாசன் 
அவர்களது வரிகள்..

பர்வத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே!..
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே!.

தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா!..
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட  வா வா வா!..

வள்ளியூரிலே குடிகொண்ட 
வள்ளிமணாளா வழிகாட்டு!..
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு!..

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகையா!..
நலம் பெற வேண்டும் மகனையா
நம்பிக்கை தருவாய் கந்தையா!..

தணியாத கோபம் 
தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே!..
கனிந்த முகம் காட்டு 
கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே!..

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப் பொருள் சொன்ன ஸ்வாமி மலை வாழும் குருநாதா!..
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா!..

பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர்சோலைக்கு வந்தவனே!..
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே!..

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே!..
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே!..
வேலவனே!.. வேலவனே!..
***

தலைவா சரணம்
துணைவா சரணம்
அலைவாய் அமரும்
அழகா சரணம்
அறுபடை வீட்டின்
அருளே சரணம்!..
***