நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சப்தஸ்தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சப்தஸ்தானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 06, 2019

ஏழூர் தரிசனம் 10

ஏழூர் தரிசனத்தில் எங்களுடன் பயணித்த
அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஒவ்வொரு பதிவினிலும் அன்புடன் வழங்கிய கருத்துரைகளுக்கு
தக்க சமயத்தில் பதில் அளிக்க தவறியிருக்கின்றேன்..

அதற்காக பொறுத்தருள்க...
இங்குள்ள சூழல் அப்படியாக அமைந்து விடுகின்றது!..



சென்ற வருட சப்த ஸ்தான தரிசனம் நல்லபடியாக அமைந்ததற்கு
அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பனின் திருவருளே காரணம்...

திருச்சோற்றுத்துறையை தரிசனம் செய்து திரும்புவோம்!.. - என்று, எண்ணியிருந்த என்னை - 

என் மகன் வாயிலாக எல்லாத் தலங்களுக்கும் அழைத்து தரிசனம் காட்டிய அன்பினை என்னவென்று சொல்லுவேன்!...

ஆக, திருச்சோற்றுத்துறையிலிருந்து தான் 
எங்களது சப்த ஸ்தான தரிசனம் தொடங்கியது...

ஆனாலும் முறையான தரிசனம் என்பது -

திருஐயாற்றில் தொடங்கி திருப்பழனம் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -மீண்டும் திருஐயாறு என்று முடிவது...

அப்போதெல்லாம் திருஐயாற்றிலிருந்தே பல்லக்குகளுடன் பலநூறு மக்கள் நடந்திருக்கின்றனர்...

ஆனால் இப்போது அந்த நடைமுறை பெரும்பாலும் மாறி விட்டது...

திருப்பழனத்திலிருந்து பல்லக்குகள் புறப்பட்டு திருச்சோற்றுத்துறையை அடையும் முன்பாகவே மக்கள் திருநெய்த்தானத்தை அடைந்து விடுகின்றனர்...

சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதிலேயே ஏழூர்களுக்கும் பயனிக்கின்றனர்..

மூத்த குடிமக்கள் ஆட்டோக்களில் வலம் வருகின்றனர்..

இதைத் தவறென்று சொல்வதா.. சரியென்று சொல்வதா.. தெரியவில்லை..

இந்த வலைக்குள் நானும் அகப்பட்டேனே!...

இதெல்லாம் அவரவர் சூழ்நிலை - என்று வைத்துக் கொண்டாலும்
சம்பிரதாயம் என்ற ஒன்று இருக்கின்றதே!..

இதனை நாம் தானே காப்பாற்றியாக வேண்டும்...

ஆனாலும் அனைத்துப் பல்லக்குகளும் திருஐயாற்றை அடையும் போது
ஆயிரக்கணக்கான மக்களால் திரு ஐயாறு திணறித்தான் போகின்றது..




பண்டரங்கக் கூத்துடன் ஐயாறப்பர் யாதாஸ்தானம் ஏகிய பின்னர்
பலமணி நேரம் ஆகின்றது கூட்டம் கலைவதற்கு!...

பாரம்பர்யத்தை விட்டுக் கொடுக்காமல் தான் இருக்கின்றனர் - என்பதில் 
மனமும் மகிழ்ச்சியில் துள்ளுகின்றது...





ஆயினும் - இன்னொருமுறை
திருஐயாற்றில் இருந்து பல்லக்குகளைத் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று மனம் வேண்டிக் கொள்கின்றது..

அப்போது தான் ஆங்காங்கே திருக்கோயில்களில் நடைபெறும் சம்பிரதாயங்களைக் கவனிக்க இயலும்..

ஆயுளையும் ஆரோக்யத்தையும் நல்கி அம்பிகையும் ஐயனும் தான் அருள்புரிய வேண்டும்...






இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் 
முந்தைய ஆண்டின் சப்தஸ்தான நிகழ்வுகள்...
படங்களை வழங்கிய சிவனடியார் திருக்கூட்டத்தினர்க்கு நன்றி...

இத்தனை பதிவுகளையும் மனமுவந்து வாசித்து 
கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி..

இவ்வேளையில் -
நேற்றைய பதிவுக்குக் கருத்துரை வழங்கிய
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் நினைவுப் பேழையை மீட்டி விட்டார்கள்..

அறம் வளர்க்கும் அம்மா!.. - என்றபாடல் நினைவுக்கு வந்தாக சொல்லியிருந்தார்கள்..

1968/69 என்று நினைவு..

திருச்சி வானொலியில் காலை ஆறு மணியிலிருந்து ஆறரை மணி வரைக்கும் ஒலிபரப்பும் பக்திப் பாடல்களின் ஊடாக இந்தப் பாடலை முதன் முறையாகக் கேட்டேன்..

அடுத்தடுத்து கேட்டதும் மனதில் அப்படியே பதிந்து விட்டது..

வரவேண்டும்.. வரவேண்டும் தாயே!.. - என்னும் இப்பாடலைப் பாடியவர்கள் தேரழுந்தூர் சகோதரிகள் ...

இந்தப் பாடலைப் பற்றித் தேடியபோது -
அனுவின் தேன் துளிகள் தளத்தில் அன்பின் ஸ்ரீராம் அவர்கள் மூலமாக - இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் திரு. வரதராஜன் .. என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்...

இசை குன்னக்குடியார் என்பதாக நினைவு...

மங்களகரமான அந்தப் பாடல் இன்றைய பதிவில்!...

ஸ்ரீ தர்மசம்வர்த்தனி..
வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
வரவேண்டும் வரவேண்டும் தாயே!...

அறம் வளர்க்கும் அம்மா...
அறம் வளர்க்கும் அம்மா பர்வத வர்த்தனி 
அறம் வளர்க்கும் அம்மா பர்வத வர்த்தனி - திரு
ஐயாறு தனில் மேவும் தர்மசம்வர்த்தனி!..

வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
 


தானெனும் அகந்தை தலைக்கு ஏறாமல்
தாழ்ந்த நிலையிலும் தர்மம் மாறாமல்
வான்புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே!..

வரவேண்டும்.. வரவேண்டும் தாயே..
வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
***


தானலாது உலகம் இல்லை சகமலாது அடிமையில்லை
கானலாது ஆடல் இல்லை கருதுவார் தங்களுக்கு
வானலாது அருளும் இல்லை வார்குழல் மங்கையோடும்
ஆனலாது ஊர்வதில்லை ஐயன் ஐயாறனார்க்கே..(4/40)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 05, 2019

ஏழூர் தரிசனம் 9

திருப்பழனத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்கெல்லாம் திருஐயாற்றுக்கு வந்து சேர்ந்து விட்டோம்...

எப்போதும் தெற்கு வாசல் வழியாகத்தான் திருக்கோயிலுக்குள் நுழையும் வழக்கம்...

ஏனெனில் தெற்கு வாசலில் 1300 ஆண்டுகளுக்கு மேலாக - திருநாவுக்கரசர் காலத்திலிருந்து புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தில் குங்கிலியம் இட்டு ராஜகோபுரத்தின் மேற்புறம் ஸ்ரீ ஆட்கொண்டார் என விளங்கும் துவார பாலகரை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைவது..

இது தான் இங்கு சம்பிரதாயம்...


ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி  
ஸ்ரீ ஆட்கொண்டார் - யம பயம் நீக்குபவர்...
துவாரபாலகர் .. எனினும் சிவாம்சம் பெற்றவர்..
அதனால் தான் இவருக்கு முன்பாக நந்தி விளங்குகின்றது..


காவிரியின் பூசப் படித்துறை 
தெற்கு வாசலுக்கு நேராக 200 மீட்டர் தூரத்தில் காவிரி..
புஷ்ய மண்டபம் எனப்படும் பூசப் படித்துறை..

காசிக்குச் சமமான திரு ஐயாற்றின் காவிரியில்
நீத்தார் கடன்கள் நிறைவேற்றப்படும் இடம் இது தான்...


கிழக்கு ராஜகோபுரம் 
குங்கிலியக் குண்டம்.. தாள்களையும் உள்ளே போடுவதால் பற்றிக் கொண்டு எரிகின்றது
1300 ஆண்டுகளுக்கு மேலாக - புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தை அமைத்தவர் குங்கிலியக் கலய நாயனார்...

இவர் திருக்கடவூரைச் சேர்ந்தவர்...
சிவனடியார்களுக்கு அமுது செய்விப்பதுடன் திருக்கோயில்களில் குங்கிலியத் தூபம் இடும் திருப்பணியையும் செய்தவர்...

அதனால் பெருஞ்செல்வத்தை இழந்து வறுமையுற்றவர்...

குடந்தையிலிருந்து அணைக்கரை செல்லும் வழியிலுள்ள
திருப்பனந்தாள் எனும் திருத்தலத்தில் -

தடாதகை என்னும் சிறுபெண் சிவபூஜை செய்து சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கும்போது ஆடை நழுவ பரிதவித்துப் போனாள்...

கையில் எடுத்த மாலையைக் கீழே வைப்பதா?.. அபசாரமாயிற்றே!..

கண் இமைக்கும் பொழுதில் ஈசன் எம்பெருமான் சிரம் தாழ்த்தி
அந்தப் பெண்ணின் கையிலிருந்த மாலையை ஏற்றுக் கொண்டான்..

அப்போது சரிந்த பாணம் அதன் பிறகு நிமிரவில்லை...
நிமிர்த்த முயன்றோரெல்லாம் தோற்றுப் போயினர்...

செய்தியறிந்த குங்கிலியக் கலயர் கோயிலுக்கு வந்து பட்டு நூலின் ஒரு முனையை சிவலிங்கத்தின் பாணத்திலும் மறுமுனையை தன் கழுத்திலும் கட்டிக் கொண்டு இழுக்க பாணம் பழைய நிலையை அடைந்தது...

அத்தகைய சிறப்புடையவர் குங்கிலியக் கலயர்...

திருப்பூந்துருத்தியைப் போலவே திருக்கடவூரிலும்
அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும் ஒருங்கே தரிசனம் செய்துள்ளனர்...

அப்போது - அப்பெருமக்கள் இருவருக்கும் குங்கிலியக் கலயர்
அமுது செய்வித்திருக்கின்றார் என்பது இன்னொரு சிறப்பு...

இத்தன்மையராகிய குங்கிலியக் கலயர் அமைத்தது தான்
திரு ஐயாறு கோயில் வாசலில் உள்ள குண்டம்...

மழைக்காலத்தில் குண்டத்தின் மீதாக கீற்றுப் பந்தல் அமைத்திருப்பர்..

சாரல் தூறல் விழுந்தாலும் குண்டம் புகைந்து கொண்டு தான் இருக்கும்...

அத்தகைய தெற்கு வாசல் சாலையை தற்காலிக ஒரு வழிப் பாதையாக காவல் துறையினர் ஒழுங்கு செய்திருந்தனர்...

திருநெய்த்தானத்திலிருந்து வரும்போதே இதைக் கவனித்திருந்ததால்
நேராக கீழைக் கோபுர வாசலுக்குச் சென்று விட்டோம்...

ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி விட்டு
பஞ்சநதீஸ்வரத்துள் புகுந்தோம்...

வெளியூர் பக்தர்களால் நிறைந்திருந்தது திருக்கோயில்...

ஆங்காங்கே சித்ரான்னமும் குடிநீரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்..

தேவார பாராயணங்களும் சிவகண வாத்திய முழக்கங்களும்
மெய்மறக்க செய்து கொண்டிருந்தன...

பெண்கள் பலரும் திருக்கோயில் வளாகத்தைத் துப்புரவு செய்து கொண்டிருந்தனர்...

பெருந்திரளாக மக்கள் இருந்தாலும் ஸ்வாமி தரிசனம் செய்வதில் தாமதம் இல்லை...



மேல்தள அமைப்புடன் கூடிய திருமாளிகைப் பத்தி  
ஐயாறப்பர் மூலஸ்தானம் - சண்டேசர் சந்நிதி - மேலை ராஜகோபுரம்  
செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரை வணங்கி - திருச்சுற்றில் வலம் வந்தோம்..

குடும்பம் குடும்பமாக - ஏராளமான சிவ தொண்டர்கள்...
இந்த சப்தஸ்தான விழாவினைத் தரிசிப்பதற்காகவே வந்தவர்கள்...

இவர்கள் எல்லாம் மறு நாள் காலையில் அனைத்துப் பல்லாக்குகளும்
இங்கு கூடுவதைக் கண்டு களிப்பதற்காக காத்திருக்கின்றார்கள்...

மக்களின் விழா என்பது இது தான்!.. - என்று மனதில் தோன்றியது..

அப்படியே வெளியே வந்து கிழக்கு முகமாக எழுந்தருளியிருக்கும்
அன்னை அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்தோம்...

கொடி மரத்தடியில் வீழ்ந்து வணங்கி விட்டு இல்லம் நோக்கிப் புறப்பட்டோம்...

குடமுருட்டியைக் கடந்து வரும் பல்லக்குகள்  
இன்றைய பதிவில் முன்பொருமுறை நான் எடுத்த படங்களுடன்
சிவனடியார் திருக்கூட்டத்தினர் வழங்கிய படங்களும் இடம் பெற்றுள்ளன...

இது வரையிலும் ஏழூர்களுக்கு எங்களுடன் பயணித்த
அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஒவ்வொரு பதிவினிலும் அன்புடன் வழங்கிய கருத்துரைகளுக்கு
தக்க சமயத்தில் பதில் அளிக்க தவறியிருக்கின்றேன்..

அதற்காக பொறுத்தருள்க...
இங்குள்ள சூழல் அப்படியாக அமைந்து விடுகின்றது!..



இதோ... மாலை மயங்கி விட்டது...
திருக்கோயில் வளாகத்தில் பிரகாசமான மின் விளக்குகள் ஒளிர்ந்தன...
அந்த வேளையில் திருக்கோயிலில் படமெடுக்க இயலவில்லை...

ஏழூர் மக்களும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரு திருவிழா...
இந்தக் கோலாகலங்களைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்தும் மக்கள்..
ஒருவரையொருவர் பார்த்திராவிட்டாலும் பாசம் தவமும் முகங்கள்..
அன்பின் உபசரிப்புகள்.. அன்னதான விசேஷங்கள்...

இத்தனைக்கும் காரணம் நந்தீசன் சுயம்பிரகாஷிணி திருமணம்..

இதனை திருநெய்த்தானத்து திருப்பதிகத்தில்
நந்திக்கு அருள் செய்தாய் நீயே!.. - என்று அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்...

சப்தஸ்தான திருத்தலங்கள் அனைத்தையும்
அப்பர் பெருமான் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்...


வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம மலர்க்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே!.. (1/30)
-: திருஞான சம்பந்தர் :-

ஞான சம்பந்தப்பெருமான் தமது திருப்பதிகம் முழுதும்
காவிரியையும் அதன் வளங்களையும் மக்களின் நலன்களையும்
புகழ்ந்து பாடியருள்கின்றார்..

இந்த நலங்களும் வளங்களும் நிலைக்க வேண்டும்
என்பதற்காகத் தான் ஐயாறப்பரும் அறம்வளர்த்த நாயகியும்
நந்தீசன் - சுயம்பிரகாஷிணியை அழைத்துக் கொண்டு 
ஊர் சுற்றி வருகின்றார்களோ!..  
  ***

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ..(6/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

வியாழன், ஏப்ரல் 04, 2019

ஏழூர் தரிசனம் 8

காவிரி ஆற்றில் சிவதரிசனம் செய்தபின்
திருப்பழனம் திருக்கோயிலை நோக்கிப் புறப்பட்டோம்...

திருநெய்த்தானத்தை அடுத்த ஊர் திருஐயாறு.. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் திருப்பழனம்...

திரு ஐயாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திங்களூருக்கு முன்பாக திருப்பழனம்...

சாலையின் அருகிலேயே திருக்கோயில்...

சப்தஸ்தானத்தில் இரண்டாவது தலம்...
சந்திரன் வழிபட்ட தலங்களுள் ஒன்று..


கோபுர சுதை சிற்பத்தில்
திருநாவுக்கரசர்
திருப்பழனத்தின் சிறப்புகளுள் ஒன்று அப்பூதியடிகளின் தண்ணீர்ப் பந்தல்..

அந்தக் காலத்தில் - பாழாய்ப் போன அரசியல் வியாதிகள் இல்லாததால்
காவிரியாள் வருடம் முழுதும் கரை புரண்டு ஓடியிருப்பாளே!..

அப்படியே இயற்கையின் இடர் ஏற்பட்டு
வான் பொய்த்திருப்பினும் - தான் பொய்யாது
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டியிருப்பாளே!...

அத்தகைய காவிரியின் கரை தானே பெருவழிச் சாலை...

நீரோடும் வழியை ஒட்டி தண்ணீர்ப் பந்தல் எதற்கு?...

அது வெறும் தண்ணீர் வழங்கும் பந்தலாக மட்டும் இருக்கவில்லை!...

திங்களூரைச் சேர்ந்த அப்பூதியடிகள் - தான் பெற்ற நலங்களை
தான் தனது குருவாக ஏற்றுக் கொண்ட திருநாவுக்கரசர் பெயரால் -
ஏழை எளியோருடன் பகிர்ந்து கொள்ளும் பந்தலாகவும் இருந்திருக்கிறது...

தண்ணீர்ப் பந்தல் வைத்ததோடு மட்டுமல்லாமல்
சாலைகளும் சோலைகளும் கல்விச்சாலைகளும்
அன்னதான சத்திரங்களும் - என, முடிவிலா அறங்களைப் புரிந்தார்...

அத்தனையும் திருநாவுக்கரசர் பெயரிலேயே!...

அவரது இல்லத்துக்கும் திருநாவுக்கரசு..
அவரது மகன்களுக்கும் திருநாவுக்கரசு.. - என்றால்,
யார் தான் வியப்படைய மாட்டார்கள்?...

திருப்பழனத்தில் இதனைக் கண்ணுற்ற திருநாவுக்கரசர்
இப்படிச் செய்பவர் யார்!.. - என்று வியப்புடன் வினவ,
தண்ணீர்ப் பந்தலின் பணியாட்கள் அளித்த தகவலின்படி
அப்பூதியடிகளைத் தேடிச் செல்ல -

அங்கே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான் இறைவன்...

திருப்பூந்துருத்தியைப் போலவே - இவ்வூரிலும் சில காலம் தங்கியிருந்து மக்கள் தொண்டாற்றியிருக்கின்றார் - அப்பர் பெருமான்...

அஞ்சிப் போய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி!...

கலிபுருஷன் அஞ்சி நடுங்கி தலைமறைவாகக் காரணம் -
அப்பூதியடிகள் நல்லறங்களுடன் யாகவேள்விகளை நிகழ்த்துவதுதான்!..

- என்று, தமது திருப்பதிகத்தில் அப்பூதியடிகளைச் சிறப்பிக்கின்றார் அப்பர் பெருமான்...

அத்தகைய பழம்பெருமையுடையது - திருப்பழனம்...




திருக்கோயில் அளவில் பெரியதாக இருந்தாலும்
மற்ற கோயில்களைப் போலவே பராமரிப்பு இன்றி இருக்கின்றது...

கோயிலில் இருந்து பல்லக்குகள் புறப்பட்டு விட்டதால்
கூட்டம் அதிகமில்லாமல் இருந்தது...

பசுபதீஸ்வர ஸ்வாமியை வணங்கியவராக திருநாவுக்கரசர் 
திருநாவுக்கரசர்
பராந்தக சோழருடைய திருப்பணி என்கின்றார்கள்...

ஆனாலும்,
இதில் கவனம் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்...

ஊரில் குடியிருப்பவர்களால் பெரிதாக என்ன செய்து முடியும்!...


திருவிழா என்று பெரிய பந்தலும் பக்தர்களுக்கு ஓரளவுக்கு வசதியும் செய்திருக்கின்றார்கள்..

கோடைக் காலம் என்பதால் சூடு தெரியாமல் இருப்பதற்காக
கோயில் முழுதும் வைக்கோல் பரப்பி வைத்திருக்கின்றார்கள்...

காலுக்கு இதமாக இருக்கிறது..
அந்த வகையில் மக்கள் பாராட்டுக்குரியவர்களே....




பின்னமடைந்த நந்தியுடன்
சிவலிங்கம் (பிரகாரத்தில்)
 
பழமையான திருக்கோயில்...

திருவையாற்றைப் போலவே -
இங்கும் அம்பிகை கிழக்கு முகமாக விளங்குகின்றாள்...

சப்த ஸ்தானத்தை முன்னிட்டு எல்லா சந்நிதிகளிலும் சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தனர்...

அம்பிகையின் திருக்கோயில் 
ஆனாலும் திருக்கோயில் பராமரிப்பு இன்றி இருப்பதைக் காணும்போது
மனம் கலங்குகின்றது...


திருப்பழனம் அமர்ந்த ஐயன் ஸ்ரீ ஆபத்சகாயரும்
அம்பிகை பிரஹன் நாயகியும் தான் திருவுளம் கொள்ளவேண்டும்...


ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லாம் நுண்பொருளாகி நின்று
காலின்கீழ்க் காலன்தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யும் ஆனார் பழனத்தென் பரமனாரே...(4/36)
-: திருநாவுக்கரசர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

புதன், ஏப்ரல் 03, 2019

ஏழூர் தரிசனம் 7

திருநெய்த்தானத்தில் சிவதரிசனம் செய்தபின்
திருப்பழனத்தை நோக்கிப் புறப்பட்டோம்...

திருநெய்த்தானத்தை அடுத்த ஊர் திருஐயாறு.. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் திருப்பழனம்...

திருப்பழனத்தை நெருங்கும் முன்பாகவே பெருத்த ஆரவாரம்...

வானவெடிகளின் பெருஞ்சத்தமும் கேட்டது....

என்னவென்று விசாரித்தால் பல்லக்கு புறப்பட்டு காவிரியில் இறங்குகின்றது என்றார்கள்...

ஸ்கூட்டியை அங்கேயே ஓரமாக நிறுத்தி விட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்துள் புகுந்து விரைந்தோம்...

ஐயாறப்பர் பல்லக்கு ஆற்றில் இறங்கியதும் இயல்பாக ஆற்று மணலில் அழுந்தி விட்டது...

கூடியிருந்த மக்கள் உந்தித் தள்ளிவிட டிராக்டரும் சேர்ந்து இழுத்த நிலையில் பல்லக்கு இருந்த வண்டி மெல்ல ஆற்று மணலில் நகர்ந்தது...



ஆற்று மணலில் இலகுவாக செல்லும்படிக்கு உலர்ந்த கரும்புத் தோகையை பரப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...

கூட்டத்தோடு சேர்ந்து நானும் என் மகனும் பல்லக்கினை சிறிது தூரம் நகர்த்திக் கொடுத்து விட்டு ஸ்வாமி தரிசனம் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்...

முன்பெல்லாம் -
ஐயாறப்பர் பல்லக்குடன் தனியானதொரு பல்லக்கில் நந்தியம்பெருமானும் சுயம்பிரகாஷிணியும் ஆரோகணித்திருப்பர்...

இப்போது ஒரே பல்லக்கில் எழுந்தருளப் பண்ணியிருந்தனர்..

என்ன காரணம் என்று தெரியவில்லை...
பொருளாதார சூழ்நிலையாக இருக்கலாம்...

சென்ற ஆண்டில் நல்ல மழை பெய்தும் காவிரியில் தண்ணீர் இல்லை...

காவிரி ஆற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்...








மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ..(4/12)
-: திருநாவுக்கரசர் :-





பல்லக்குகள் திருச்சோற்றுத்துறையை நோக்கி நகர்ந்த போது மாலை மணி ஐந்து..

பல்லக்குகளில் ஸ்வாமி தரிசனம் செய்தபின்
ஆற்றிலிருந்து கரையேறி திருப்பழனம் திருக்கோயிலுக்குச் சென்றோம்..

ஆடினார் ஒருவர் போலும் மலர்கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே..(4/36)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ