நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி..
-: பட்டினப்பாலை :-
உழவர் ஓதை மதகு ஓதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!..
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்
தன் வளனே வாழி காவேரி!..
-: இளங்கோவடிகள் :-
தண்ணீரும் காவிரியே
-: கம்பர்:-
கலவ மயிலுங் குயிலும்
பயிலுங் கடல்போற் காவேரி
(1/67)
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் (2/106)
-: திருஞானசம்பந்தர் :-
கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் (5/75)
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி (6/73)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
மாமணிக் கல்லை உந்தி
வளம்பொ ழிந்திழி காவிரி (7/48)
அழகார் திரைக் காவிரி (7/ 77)
-: சுந்தரர் :-
கங்கையிற் புனிதமாய காவிரி
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-
ஏழ்தலம் புகழ் காவேரியால்
விளை சோழ மண்டலம்
-: அருணகிரிநாதர் :-
சென்ற 27/5 ல் கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது..
அப்போது
கும்பகோணத்திற்கு அருகில் இருந்தேன் .. காவிரியாற்றில் நீர் வந்தபோது இரவு நேரம்.. சென்று தரிசிப்பதற்கு இயலவில்லை.. இந்நிலையில் 3/6 அன்று திரு ஐயாற்றில் காவிரி தரிசனம்.. சந்தனம் சாற்றி மலர்கள் தூவி வணங்கி என் அன்பினைத் தெரிவித்துக் கொண்டேன்..
காவிரி காவிரி எனும் போது
என் கண்கள் ஆனந்தக் கடலாட
என் தமிழும் அதனுடன் சேர்ந்தாட
அந்த செங்கரைப் பூக்கள் அசைந்தாட
அங்கு சேலொடு உளுவை புரண்டாட
சிறு குருவிகள் தாமும் மகிழ்ந்தாட
தென்னங்குலைகளும்
வளைந்து கூத்தாட
தென்திசைக் காற்றும்
சேறுடை நாற்றும்
சிலு சிலு என்றே பண்பாட
செக்கர் வானக் கதிரும் சேர்ந்தே
செந்நெல் கதிருடன் நின்றாட
செழுமைகள் எங்கும் குழைந்தாட
கொண்டாடு மனமே
கொண்டாடு..
வாழிய காவிரி வாழியவே!..
***