நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 19, 2022

குரங்காடுதுறை 3

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அன்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக இதே காவிரி சோழ மண்டலத்திற்குள்
ஓடி வரும் போது எதையெல்லாம் வாரிக் கொணர்ந்திருக்கின்றாள் என்பதை அறியும் போது பிரமிப்பு தான் ஏற்படுகின்றது..

தேவாரப் பெருந்திருமுறைகளில் ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகங்களில் இயற்கையின் அழகு பொங்கி வழியும்.. அந்த வகையில் தனித்துவமான திருப்பதிகம் இது..

தருமபுர ஆதீனத்தின் பன்னிருதிருமுறை தளத்தில் இருந்து திருப்பதிகமும் கருத்துரையும் பெறப்பட்டுள்ளது.. கருத்துரையை சற்றே எளிதாக்கியுள்ளேன்..

தருமபுர ஆதீனத்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி..
**
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 91

திருத்தலம்
திரு வடகுரங்காடுதுறை

காவிரியின் வடகரையில்
நாற்பத்தொன்பதாவது திருத்தலம்..

ஸ்ரீ குலை வணங்குநாதர்
(நன்றி - கூகுள்)

இறைவன்
ஸ்ரீ தயாநிதீஸ்வரர்
குலை வணங்குநாதர்
அம்பிகை
ஜடாமகுடநாயகி
அழகுச்சடைமுடியாள்

தல விருட்சம் தென்னை
தீர்த்தம் காவிரி

கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
ரிடமென விரும்பினாரே.. 1

கோங்கு, குரவம், செழுமையான மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துப் புரட்டிக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை எம்பெருமான் தமது இருப்பிடமாக விரும்பி ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தருள்கின்றார்.மந்தமாய் இழிமதக் களிற்றிள
மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின்
பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை
யடை குரங்காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் 
தொழுதெழும் இயல்பினாரே.. 2

மத நீர் கசிகின்ற யானைக் கன்றுகள் - ஒன்றோடொன்று விளையாடித் திரியும் போது முறிந்து விழுந்த - இளம் தந்தங்களுடன் தரமான சந்தனம், அகில், சாதிக்காய் மரங்களையும் மோதி வீழ்த்தி  அலைகளுடன் அடித்துப் புரட்டிக் கொண்டு வருகின்ற காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் எந்தையாகிய இறைவன் இமையோர்களால் ஏத்தி வணங்கப்படும் இணையடிகள உடையவன் ஆவான்..


முத்து மாமணியொடு முழைவளர்
ஆரமும் உகந்து நுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி யடிகள் தம்மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே.. 3

முத்து, மணி இப்படியான குகைகளின் அருகில் வளரும் சந்தன மரங்களைப் பெயர்த்துத் தன்னுடன் கொண்டு வந்து கரையினில் மோதித் தள்ளிவிடும் காவிரியின் வடகரையில் உள்ள வட குரங்காடு துறையில் ஊமத்த மலரொடு பிறைச் சந்திரனையும் சடாமுடியில் தரித்தவராக வீற்றிருக்கும் இறைவனின் மீது தமது சித்தத்தை வைத்த அடியவர்கள்  சிவகதியினைப் பெறுவர் என்பது திண்ணம்..

இங்கே சிவகதி எனப்படுவது சர்வ மங்கலங்களும் பொருந்திய இல்வாழ்க்கை..

கறியுமா மிளகொடு கதலியின்
பலங்களுங் கலந்து நுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவும் உள்ளக்
குறியினார் அவர்மிகக் 
கூடுவார் நீடுவா னுலகினூடே.. 4

சுவை மிக்க மிளகுகளோடு வாழைகளையும் தள்ளிக் கொண்டு வரும் காவிரியின் வடகரை குரங்காடுதுறையில் 
மான் கன்று விளையாடும் கையினனாக வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமானின் மலரடிகளைத் தொழுது எழும் உளக் குறிப்பினை
உடையவர்கள் நீள் வானில் தேவர்களோடு கூடியிருப்பர்..


கோடிடைச் சொரிந்ததேன் அதனொடுங்
கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப்
பண்டமுங் கலந்து நுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளார்
இடமெனப் பேணினாரே.. 5

தேனடைகள் விளங்கும் மரக் கிளைகளையும் மேகம் பொழிந்த மழை நீருடன் காட்டில் வசிக்கும் மயிலின் தோகையையும், மலைச் சாரலில் விளைந்திருக்கும் பலவகைப் பண்டங்களையும் உந்தித் தள்ளிக் கொண்டு ஓடி வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தை - கங்கையைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பெருமையை உடைய சடை முடி நாதனாகிய  எம்பெருமான் தான் விரும்பி வீற்றிருக்கும் இடமாகக் கொண்டிருக்கின்றான்..

கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள் வீடே.. 6

அழகிய நறுமலர்களுடன் தூபமும் சந்தனமும் கொண்டு  வானர அரசனாகிய வாலி வணங்கி வழிபட்டதும் தாமே பழுத்து உதிர்ந்த மாங்கனிகளுடன் அசைந்து வரும் காவிரியின் வடகரையில் உள்ளதுமான குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற நீலமணி  கண்டனாகிய எம்பெருமானை மனதார நினைந்து 
போற்றுகின்றவர்களின் வல் தீவினைகள் யாவும் தீரும்..

இத்திருப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல் கிடைக்கப் பெறவில்லை..


நீலமா மணிநிறத்து அரக்கனை
இருபது கரத்தொடு ஒல்க
வாலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலை இல வங்கமே
இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை
யடைகுரங் காடுதுறையே.. 8

நீலமணி போன்ற கருநிற அரக்கனான இராவணனை அடக்கி இருபது கரங்களொடு வாலினாற் இறுகக் கட்டியவனாகிய வாலியினால் வழிபடப் பெற்ற பெருமை உடைய திருத்தலம் ஏலம், பச்சிலை, இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை அள்ளிக் கொண்டு இரைச்சலுடன் ஓடி வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலமாகும்..

பொருந்திறற் பெருங்கைமா உரித்து உமை
அஞ்சவே ஒருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை அநங்கமா
விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத்து இருவரை அல்லல்கண்டு
ஓங்கிய அடிகளாரே.. 9

போர்த்திறன் மிக்க பெரிய துதிக்கையை உடைய யானையின் தோலை, உமாதேவி அஞ்சும்படிக்கு உரித்து வியப்படையும்படிச் செய்தவர் சிவபெருமான்.. அவர் பெருந்திறலுடைய மன்மதனின் அங்கம் அழிந்து அவன் அனங்கன் ஆகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கிய பெருமையுடையவர்..
மிகுந்த வேகத்துடன் ஓடி வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவர்.. இவரே  நான்முகனும், திருமாலும் தம்மைத் தேடிக் காணாமல் துன்புற்ற போது அக்னி மலையாய் ஓங்கி ஒளிர்ந்து நின்றவர் ஆவார்..


கட்டமண் தேரருங் கடுக்கள் தின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமாமே.. 10

கடுக்காய்களைத் 
தின்கின்றவர்களான சமணர்களும் சிவ தர்மத்தில் இருந்து விலகி விட்டவர்களான புத்தர்களும் நெஞ்சில் ஈரமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய மலையில் விளையும் பொருள்களைத் தள்ளிக் கொண்டு பாய்ந்து வரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சீலமிக்க எம்பெருமானின் திருவடிகளைத் தொழுது எழுங்கள்.. சிவகதி பெறுவது திண்ணமாகும்..

தாழிளங் காவிரி வடகரை
யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்
பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார்
நீடுவா னுலகினூடே..11

தாழ்ந்து பணியும் தன்மையுடைய இளங் காவிரியின் வட கரையில் உள்ள குரங்காடுதுறை என்னும் திருத் தலத்தில் பிறைமதி கூடிய சடைமுடியுடன்  புண்ணிய மூர்த்தியாக வீற்றிருந்து அருளும் சிவபெருமானைப் போற்றி சீகாழியில் அவதரித்த அருமறை வல்ல ஞானசம்பந்தன் அருளிச் செய்த இப்பாடல்களை  தெளிந்த பண்ணிசை இன்றி (கோழை மிடறோடு)  அடியவர்கள் பாடி அழைத்தாலும் ஈசன் அருளால் என்றும் அழியாதபடிக்கு தேவரொடும் கூடி வாழ்வார்கள்..

திருச்சிற்றம்பலம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

 1. அருமையான பாடல்கள்.  அருமையான கற்பனை.  இவளவு பொருட்களை அடித்துக் கொண்டு வருமளவு வேகத்துடன் காவிரி வந்திருந்தால் எவ்வளவு வேகமாக, ஆழமாக கரைபுரண்டு ஓடி வந்திருப்பாள்?  நினைக்கும்போதே காட்சி கண்ணில் விரிகிறது.

  பதிலளிநீக்கு
 2. வாலி வணங்கிய தலம் என்பது சிறப்பு.  சமணர்கள், பௌத்தர்களின் பரப்புரையை எதிர்த்து பாடல் புனைந்திருப்பதும் வியப்பு.  சிறப்புகள் பல பெற்றிருக்கும் தலம் இது என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. சிறப்புக்குரிய தலம் வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 4. பல சிறப்புகளை கொண்ட தலத்தின் தேவார பாடல்கள், அதன் விளக்கம் எல்லாம் அருமை. கோயில் படங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான பதிவு. பல முறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். விக்கிப்பீடியாவில் இத்தலைப்பிலுள்ள கட்டுரையில் நான் எடுத்த கோயிலின் நுழைவாயில், விமானம் ஆகிய ஒளிப்படங்களை இணைத்துள்ளேன்.
  ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான பதிவு. அப்பரின் காலத்தில் காவிரி இத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் எனில் தடையே இல்லாமல் வேகமாகக் காவிரி வந்திருக்க வேண்டும். இன்றோ! நினைக்கவே மனதில் வேதனை. படங்கள்/பதிக விளக்கங்கள் எல்லாமே அருமையாக அமைந்து விட்டன. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. காவிரி ஆற்றின் தன்மையை சொல்லுகின்ற வரிகள் அனைத்தையும் ரசித்தேன். எத்தனை சிறப்புடன் விளங்கிய ஆற்றின் இன்றைய நிலை குறித்து என்ன சொல்ல? பாக்களும் அதன் விளக்கங்களும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. காவிரி ஆற்றின் தன்மையை சொல்லுகின்ற வரிகள் அனைத்தையும் ரசித்தேன். எத்தனை சிறப்புடன் விளங்கிய ஆற்றின் இன்றைய நிலை குறித்து என்ன சொல்ல? பாக்களும் அதன் விளக்கங்களும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..