நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 03, 2022

கீழ்க்கோட்டம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவின் ஊடாகக் கிடைத்த நேரத்தில் அருகில் இருக்கும் கோயில்களில் தரிசனம்..

அந்த வகையில் இன்று
கும்பகோணம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்..


இன்றைக்கு இந்நகரின் பெயர் - கும்பகோணம்..
இத்தலத்தில்
ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ நாகேஸ்வரர், ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஸ்வரர் என ஐந்து பிரதான கோயில்கள்..

ஆனால்,
அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும் - இத்தலத்தை - குடமூக்கு, குடந்தைக் கீழ்க் கோட்டம், குடந்தைக் காரோணம் என்ற பெயர்களால் போற்றுகின்றனர்..


ஆயினும்,
இந்தத் திருப்பதிகங்களில் குறிப்பிடப்படும் கோயில்கள் எவை என்பதில் இன்னும் நமக்கு தெளிவு கிடைக்கவில்லை..

குடமூக்கு - கும்பேசுவர சுவாமி கோயில்.. கீழ்க்கோட்டம் - நாகேஸ்வரன் கோயில்.. காரோணம் - விஸ்வநாதர் கோயில் - என்று தருமபுர ஆதீனத்தின் வலைத் தளம் ஒரு புறம் வரையறை செய்தாலும், அத்தளத்தின் உள்ளேயே மாறுபட்ட சொற்றொடர்கள் காணக் கிடக்கின்றன..

காரோணம் எனப்படுவது உச்சிப் பிள்ளையார் கோயிலின் அருகில் உள்ள ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் கோயில் தான் என்றும் சிலர் சொல்கின்றனர்..


குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திருப்பதிகத்தில் - 
அப்பர் சுவாமிகள்  குறிப்பிடும் நதிக்கன்னியர் - வாலை வடிவாகத் திகழ்வது மகாமகக் குளத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில்..

அப்பர் ஸ்வாமிகளின் திருப்பாடலை சிரமேற் கொண்டு நாம் - நம் பயணத்தைத் தொடர்வோம்...

ஸ்ரீ காவிரித் தாய்

குடந்தைக் கீழ்க்கோட்டம்

இறைவன்
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
அம்பிகை
ஸ்ரீ விசாலாக்ஷி

தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் மகாமகக் குளம்..


தம்மிடத்தே ஊரார் கழித்த பாவங்களைத் தம்மால் சுமக்க இயலவில்லை.. அவற்றைத் தொலைத்து விட வேண்டும் என்று நதிக்கன்னியர் இறைவனிடம் வேண்டிக் கொண்டபோது ஈசன் அவர்களை அழைத்துக் கொண்டு வந்த தலம் தான் கும்பகோணம்..

மகாமகக் குளத்தின் வடகரையில் மேற்கு முகமாக விளங்குகின்றது கோயில்..


ராஜகோபுரத்தைக் கடந்ததும்
அதிகார நந்தி, பலிபீடம், கொடிமரம்.. கொடிமரத்தின் அருகே நவக்கிரக மேடை.. 
கோயிலின் உள்மண்டபத்தில்
ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவயானை சமேத சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், கஜ லக்ஷ்மி, நடராஜர் சந்நிதிகள் திகழ்கின்றன..

மூலஸ்தானத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர்..  ஸ்வாமியின் வலப்புறத்தில் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகை.. 

நன்றி கூகிள்

மண்டத்தில் தெற்கு முகமாக  நவகன்னியர் சந்நிதி.. காவிரியாள் நடுவிருக்க வலப் புறத்தில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி எனும் நால்வரும் இடப் புறத்தில் கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு எனும் நால்வரும் விளங்குகின்றனர்..
நதிக்கன்னியரைப் படம் எடுக்கக்கூடாது என்கின்றனர்..

ஆனால், இணையத்தில் படங்கள் கிடைக்கின்றன..
கோஷ்ட மூர்த்திகளாக ப்ரம்மா, துர்கை, லிங்கோத்பவர், ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி.. 
உள் திருச்சுற்றில் ஸ்ரீ வைரவர், சூரியன், சனைச்சரன், சப்த கன்னியர்.. ஸ்ரீ க்ஷேத்ர மகாலிங்கம்

வெளித் திருச்சுற்றின் ஈசான்ய மூலையில் வேப்ப மரத்தின் கீழ் க்ஷேத்ர மகாலிங்கம் எனும் பெரிய பாணம் விளங்குகின்றது..
மகாமகக் குளம்ஆரவாரமான கும்பகோணத்திற்குள் அமைதியாகத் திகழ்கின்றது  -   காசி விசுவநாதர் ஆலயம்..


ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.. 6/75
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. தலங்களின் பெருமையை அறிந்து சென்று தரிசிப்பது சிறப்பான செயல். படங்கள் அழகு. ஓம் நமச்சிவாய.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான தரிசனம். பதிவு வழி பகிர்ந்த படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் கோவில் உலா.

  பதிலளிநீக்கு
 3. அழகிய படங்களுடன் விவரங்கள் நன்று ஜி வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 4. கும்பகோணம் காசி விஸ்வநாதர் தரிசனமும் ,மகாமகக்குளமும் கண்டு கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 5. இந்த கோயிலுக்கு நாங்களும் போய் வந்து பதிவு போட்டது நினைவுக்கு வருகிறது.
  பல முறை சென்று இருக்கிறோம்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நண்பர் குடந்தையார் குறும்படம் எடுத்த போது அங்கு சென்றிருந்த போது தரிசித்த நினைவு வருகிறது, படங்களைப் பார்க்கும் போது. நாகேஸ்வரர் கோயிலும் சென்ற நினைவு.

  படங்களும் விவரங்களும் அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. தாங்கள் கோவில் உலா சென்று வருவதில் நாங்களும் அனைத்துக் கோவில்களையும், அதன் சிறப்பாம்சங்களையும் கண்டு களிக்கிறோம். இன்றைய குடந்தை காசி விஸ்வநாதர் கோவிலின் விபரங்களும், தொகுப்பும் படங்களும் கண்களுக்கும் மனதுக்கும் விருந்து. கோபுர தரிசனம் செய்து கொண்டேன். நதி கன்னியரையும், மகாமக குளத்தையும் தரிசித்து கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. கும்பகோணம் போவதும் வருவதுமாய் இருந்தாலும் எல்லாக் கோயில்களுக்கும் போனதில்லை. இந்தப் பெயர் ஆராய்ச்சி நன்றாக இருக்கிறதே! எனக்கும் இவ்வகை விஷயங்களில் ஆர்வம் அதிகம். இப்போது அதிகம் அலைய முடியாததிலும் வெளியே போனால் கால் பிரச்னை அதிகம் ஆவதாலும் இதெல்லாம் அதாகவே நின்று விட்டன! :(

  பதிலளிநீக்கு
 9. கருத்துக் காணாமல் போய் விட்டதே!கும்பகோணத்தில் தங்கினால் அநேகமாய் ராயாஸ் இரண்டு ஓட்டல்களில் ஏதேனும் ஒன்று என்பதால் மகாமகக்குளத்தைப் பார்க்காமல் கடக்க இயலாது.

  பதிலளிநீக்கு