நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 30, 2015

கல்யாண கோலாகலம்

திருக்கயிலாய மாமலையின் காவல் மூர்த்தியாகிய நந்தியம்பெருமானுக்கும் வியாக்ரபாதரின் அருந்தவப் புதல்வியாகிய சுயம்பிரகாஷினி தேவிக்கும்
திருமழபாடி ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருக்கோயிலில் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தது.

கடந்த (28/3) சனிக்கிழமை அன்று முன்னிரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த திருமணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.


27/3 வெள்ளியன்று காலை - திருஐயாற்றை அடுத்துள்ள அந்தணக்குறிச்சியில் ஸ்ரீநந்திகேஸ்வரரின் திரு அவதாரமும்,  அதை அடுத்து -




திருஐயாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.

மறு நாள் காலை - பங்குனி புனர்பூச நட்சத்திரம்.

ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனின் ஜன்ம நட்சத்திரம் - புனர்பூசம்!..

மங்கலகரமாகிய இந்நாளில் தான் ஆண்டு தோறும் ஸ்ரீ நந்திகேஸ்வரரின் திருக்கல்யாண வைபவமும் நிகழும்.


அதன்படி - திருமழபாடியில் திருமண வைபவங்களை நிகழ்த்துதற்கு - ஐயாற்றில் இருந்து மணமகன் நந்திகேசனுடன் - ஐயாறப்பரும் அறம் வளர்த்த அம்பிகையும் பல்லக்கில் எழுந்தருளினர்.




நந்திகேசன் வெள்ளித் தலைப்பாகை தரித்து செங்கோலுடன் குதிரையில் எழுந்தருளினார்.

ஹர ஹர கோஷங்களுடன் பக்தர்களும் தொடர்ந்து வர -

திருஐயாற்றினைக் கடந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதன் பேட்டை ஆகிய கிராமங்களின் வழியாக பயணித்தனர்.

வழியெங்கும் - கிராம மக்கள் - தங்கள் ஊருக்கு எழுந்தருளிய மூர்த்திகளை உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்ட வண்ணம் வடக்கே பயணித்து -  தென் கரை வழியாக கொள்ளிடத்தில் இறங்கினர்.








ஆற்று மணலின் சூடு தெரியாதபடிக்கு வைக்கோல் கொண்டு நடைபாவாடை விரித்திருந்தனர்.

கொள்ளிடத்தின் எதிர்கரையில் - திருமழபாடி!..

அருள்நிறை சுந்தராம்பிகையுடன் வைத்யநாதஸ்வாமி எதிர் கொண்டழைக்கக் காத்திருந்தார்.

பிறவிப் பெருங்கடலில் இருந்து மக்களைக் கரையேற்றும் - ஐயாறப்பரும் அறம் வளர்த்த அம்பிகையும் - கொள்ளிட ஆற்றைக் கடந்து கரையேறியதும் கோலாகலமாக வரவேற்கப்பட்டனர்.

அன்றைய தினம் மாலையில் சம்பிரதாயப்படி திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின.


ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் - தம் ஸ்வீகார புத்திரரும் சிலாத முனிவரின் திருக் குமாரனும் ஈசனிடம் சகல வரங்களையும் பெற்றவரும் திருக்கயிலாய மாமலையில் அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் ஜபேசன் எனப் புகழப்படுபவருமான  நந்தீசன் எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ சிரேஷ்டரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாதரின் திருக்குமாரத்தியும் உபமன்யுவின் பிரிய சகோதரியும் சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான  சுயம்பிரகாஷினி  எனும் திருநிறைச் செல்வியை -

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி, சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரங் கூடியதான - சுபதினத்தில் சுபயோக  சுபவேளையில் திருமாங்கல்யதாரணம் செய்வது!.. 

- என, ஏக மனதாக நிச்சயித்து இரு தரப்பிலும் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.  

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சீர்வரிசையுடன் - மணமகளாகிய சுயசாம்பிகை தேவி திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயம்பிரகாஷினி தேவிக்கும், சிலாத முனிவரின் புதல்வரான நந்தியம்பெருமானுக்கும், 

ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை மற்றும் யாக வேள்வியுடன் துவங்கி, மஞ்சள், சந்தனம் முதலான பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.



அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன. எட்டுத் திக்கிலும் மங்கல வாத்யங்கள் முழங்கின.

விநாயகனும் வேலவனும் அருகிருக்க,

முப்பத்து முக்கோடிதேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க, 

பஞ்சபூத சாட்சியாக, அக்னி சாட்சியாக -

அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னின்று -

ஸ்ரீநந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைத்து அருளினர். 

பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த ஆனந்த வைபவம் - 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார். 

இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானை வலஞ்செய்து வணங்கினர். 

மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.

ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.


சித்ரா பௌர்ணமியை  அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.

இந்த அளவில் - திருக்கல்யாணத் திருவிழா பக்தி பூர்வமாக நிகழ்ந்தது. 

விழா நிகழ்வுகளை அழகிய படங்களாக வழங்கிய -
தம்பிரான் ஸ்வாமிகளுக்கும், திருவையாறு சிவ சேவா சங்கத்தினருக்கும்
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் - என்றும் உரியன.

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவம்நாறும் வேத்திரப்படை பொறுத்த 
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

ஞாயிறு, மார்ச் 29, 2015

அமரர் லீ குவான் யூ

சிங்கப்பூர்!..

தமிழக - குறிப்பாக தஞ்சை, திருவாரூர் மாவட்ட இளைஞர்களின் கனவு நகர்!..

இன்றும் கனவு நகராக விளங்கும் சிங்கப்பூரை உருவாக்கிய தவப்புதல்வன் -

லீ குவான் யூ அவர்கள்!..

இன்று அவர் நம்மிடையே இல்லை!..


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!..

தனித்துவம் மிக்க செந்தமிழ்க் கவியின் வரிகளுக்கு எடுத்துக்காட்டு -

அமரர் லீ அவர்கள்!..

லஞ்சம் ஊழல் அற்ற நிர்வாகத்தின் - தலைமகன்!..

சிங்கப்பூர் தமிழர்கள் நடத்தும் பல வணிக நிறுவனங்கள் பலவற்றிலும் - தமிழகத்தின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக - மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் - சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் வம்சாவழியாக அங்குள்ளவர்களுடன் உறவுமுறை தொடர்பில் இருந்து வருகின்றார்கள்.

சிங்கப்பூரின் சிராங்கூன் பகுதி - லிட்டில் இந்தியா என்றழைக்கப்படுவது.

இங்கே - உணவகங்கள், பூக்கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றை - தமிழர்கள் சொந்தமாக நடத்தி வருகிறார்கள். 

இவர்கள் எல்லாம் சிங்கப்பூரின் தந்தை என்று புகழப்படும் - முதல் பிரதமர் லீ குவான் யூ காலத்தில் வேலைக்கு சென்றவர்கள். 

அவர் தமிழர்களை வரவேற்று வாழ்வளித்தவர் ஆவார்.


அதனால் தான் - லீ குவான் யூ அவர்களின் மரணம் தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்காங்கே பல கிராமங்களிலும் லீ குவான் யூ அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து துக்கம் கடைப்பிடித்திருக்கின்றனர்.

எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் அமரர் லீ அவர்கள்..

நூறு ஆண்டுகளுக்கு முன் சிராங்கூன் சாலை
தீபாவளி கொண்டாடும் சிராங்கூன் சாலை
சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி - அமரர் லீ அவர்கள்..

சிங்கப்பூரை உலக தரத்திற்கு உயர்த்திய உத்தமர்.

சிங்கப்பூரின் ஏழ்மையை அடியோடு ஒழித்தவர்.

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட - அனைவரும் தரமான வாழ்க்கை வாழ்ந்திடக் காரணமானவர்.

இவரைப் போல மக்கள் தலைவர்கள் பிறப்பது அரிது.

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்குத் தான் - அந்த நாட்டின் மகத்துவம் புரியும்.

எங்கும் சுத்தம். எதிலும் சுத்தம்..

வருடம் முழுதும் மழை பொழிவுள்ள நாடு. மழை பெய்யாத நாளே இல்லை..

எவ்வளவு மழை பெய்தாலும் - மழை ஓய்ந்த அடுத்த நிமிடம் சாலைகளில் மழை நீரைக் காண முடியாது.

அப்படியொரு வடிகால் அமைப்பு!..

லஞ்ச லாவண்யமற்ற - திறமையான, பொறுப்பான - முற்போக்கான சிந்தையுடன் கூடிய ஆட்சியை வழங்கி நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடத்தியவர்.

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து ஏழ்மையுடன் விடுபட்டது சிங்கப்பூர்.

இன்றைக்கு உலக வர்த்தக மையங்களுள் ஒன்று!..

பாதுகாப்பு, பொருளாதாரம், மின்சாரம் - அடிப்படை வசதிகள் அனைத்திலும் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கின்றது.

குடிதண்ணீருக்கு மலேஷியாவை எதிர்நோக்கியிருந்த சிங்கப்பூர் - இப்போது நீர்த்தேக்கங்களை உருவாக்கி தன்னிறைவு பெற்றிருக்கின்றது.

- எனில் அதற்கு முழுக்காரணம் அமரர் லீ அவர்கள்.

அவரது எண்ணங்களின் அடிப்படையினைப் புரிந்து கொண்ட மக்களும் அவருடன் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நின்றார்கள்.


1963ம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா தாக்கியது. அப்போது அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.

இந்த தாக்குதலுக்கு பின்னர்,

பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்த லீ அவர்கள் உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார்.

1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது.

இன்று சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்ட நாடாக விளங்குகின்றது.

அமரர் லீ அவர்கள் சுத்தத்தை அதிகம் விரும்பியவர்.

அவர் பிரதமராக பதவி வகித்தபோது - ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்தார்.

சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணர்ந்தனர்.

அமரர் லீ அவர்கள் தளராத உழைப்பு தான் - இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதற்குக் காரணம்.


சிங்கப்பூரை விட்டு வெளியேறியதும் - பிரிட்டிஷ் குழு ஒன்று அறிக்கை அளித்து, சிங்கப்பூரைக் களங்கப்படுத்தியது - இப்படி!..

உலகின் மிக மோசமான சேரிப் பகுதிகளைக் கொண்டது - சிங்கப்பூர்.

இதைக் கண்டு மனம் பொறாமல் - களங்கத்தைத் துடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டார் அமரர் லீ அவர்கள்..

தான் பிரதமர் ஆனவுடன், கடந்த 1960ம் ஆண்டில், வீடமைப்பு வளர்ச்சி கழகத்தை துவக்கி, ஐந்தே ஆண்டுகளுக்குள் 54 ஆயிரம் குடியிருப்புக்களை உருவாக்கினார். 

இதனால், இன்று சிங்கப்பூரில் வசிக்கும் 82 சதவீத மக்கள் சொந்த அல்லது வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் வசிக்கின்றனர். 

அமரர் லீ அவர்களின் இந்த சாதனை இன்று வரை உலகளவில் மகத்தானது. 


5 ஜூன் 1959-ல் லீ முதல் பிரதமர் ஆனார். 1963-ல் மலேஷிய கூட்டமைப்பில் இணைய பாடுபட்டார்.

1965 ஆகஸ்ட் 7 அன்று மலேஷியாவிலிருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தபோது , கடமை உணர்வுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு , தனது தொலைநோக்குச் சிந்தனையால் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்.

1959 முதல் தொடர்ந்து 1990 வரை உலகின் நீண்ட காலப் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார் .

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியே - அங்கு ஆட்சி புரிந்து வருகிறது.

அமரர் லீ அவர்கள் - தன் வாழ்நாள் முழுதும் நின்றிருந்த தொகுதி - தஞ்சோம் பஹார் என்பதாகும்.

இங்குதான் சிங்கப்பூரின் துறைமுகம் உள்ளது. கப்பல் பட்டறைகள் உள்ளதும் - சிறப்பாக தமிழர்கள் வாழும் பகுதியும் இதுவே தான்!..

தமிழர்களின் மீது பேரன்பு கொண்டவர்.



சீன, மலாய் மொழிகளுடன் செந்தமிழையும் ஆட்சி மொழியாக்கி அழகு பார்த்தவர்.

சீன - மலாய் மொழிகளுக்கு இணையாக தமிழையும் அரவணைத்தார்.

தமிழ் மொழிக்கு - கல்வி நிலையங்களில் முன்னிரிமை அளித்தார்.




தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மரபு வழி கலாச்சாரங்களுக்கும் உற்ற துணையாய் இருந்தார்..


அமரர் லீ அவர்கள் - 16 செப்டம்பர் 1923 அன்று பிறந்தவர்.

இவரது இல்லத்தரசி - குவா ஜியோ சோ. 2010ல் விண்ணுலகு எய்தினார்

அமரர் லீ அவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் லீ சியான் லூங் தான் இன்றைய பிரதமர்.

கடந்த திங்களன்று (23/3) அதிகாலை 3.18 மணிக்கு உடல்நலக் குறைவால் - லீ அவர்கள் உயிரிழந்ததாக சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தொடர்ந்து சீனர்களின் வழக்கப்படி ஒரு வார கால துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இன்று (29/3) அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.



இன்று நமது நாட்டில் -  அமரர் லீ குவான் யூ அவர்களை நினைவு கூர்ந்து தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கின்றது.

நமது பிரதமர் - அவருக்கு அஞ்சலி செலுத்துதற்கு சிங்கப்பூர் சென்றுள்ளார்.

பொது மக்கள் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் -

இன்று மதியம் - (சிங்கப்பூர் நேரப்படி 12.30) அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் ஆகின்றது.


சிறிய பரப்பளவு குறைந்த மக்கள் தொகை - அதனால் அவருக்கு எல்லாம் சாத்தியமாகியது என்று கூறினாலும்,

இப்படித்தான் இந்நாட்டின் மக்கள் வாழ வேண்டும்!..
இங்கு வருவோரும் இப்படித்தான் இருக்க வேண்டும்!..

- என்பதே தாரக மந்திரம் ஆனபடியால் - அந்நாட்டின் மக்களும் பொறுப்பினை உணர்ந்தனர். பிழைப்பு தேடி சென்றோரும் முறையாக நடந்து கொண்டனர்.

சிங்கப்பூரில், எல்லாவற்றுக்கும் - எல்லைக்குட்பட்ட - சுதந்திரம் உண்டு!..


1981 முதல் 1985 வரை எனக்கு வாழ்வளித்தது - சிங்கப்பூர்!..

கிடைக்க இருந்த அரசுப் பணி - அரசியல் சூறாவளியால் - கை நழுவிப் பறந்திட ஏதும் இயலாதவனாக நின்றேன்.

கண்ணெதிரே - தங்கைகளும் தம்பிகளும்!..

தந்தையின் சொற்ப வருமானத்தில் - எதிர்காலம்?...

எங்கள் குடும்பத்திற்கு - உண்மையில் கிழக்கேயிருந்து தான் விடிந்தது..

உழைக்கத் தயாராக இருந்த எனக்கும் - என் போன்றோருக்கும் தலைவாழை இலையில் விருந்து வைத்தது - சிங்கப்பூர்!..

Keppel Shipyard (Tuas Base) தான் - நான் வேலை செய்த தலம்!..

சிறப்பாக வேலை செய்து, நான்கு வருடங்களும் - ஊதிய உயர்வு பெற்றேன்..

சிங்கப்பூரில் இருந்த சமயம் - பொது நிகழ்ச்சி ஒன்றில் - லீ குவான் யூ அவர்களை - அருகிருந்து பார்த்திருக்கின்றேன்..

இன்முகத்துடன் - எளிமைக்கு எளிமையாய் விளங்குவார்.   

அப்போதெல்லாம் - மணமகன் (Camp) சிங்கப்பூர் என்றால் போதும்!..

பெருமை!.. தனிமதிப்பு!..

அந்தப் பெருமையை எனக்கும் வழங்கியது - சிங்கப்பூர்!..

அந்தப் பெருமையை என் போன்ற பலரும் பெற்றிடக் காரணமாகத் திகழ்ந்த சிங்கப்பூரை உருவாக்கியவர் லீ குவான் யூ அவர்கள்..

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்..
* * *

பதிவு வெளியாகிய பின் இணையத்தில் வெளியாகியுள்ள 
செய்தியும் படங்களும்..

புண்ணியம் செய்தாருக்குப் பூவுண்டு நீருண்டு - என்பார் திருமூலர்.

கொட்டும் மழையில் அமரர் லீ அவர்களின் இறுதிப் பயணம்.





மண்ணிலிருந்து அவர் மறையலாம்..
மக்கள் கண்ணிலிருந்தும் அவர் மறையலாம்..


எண்ணிறந்த உள்ளங்களில் இருந்து 
என்றும் அவர் மறைவதேயில்லை..

லீ அவர்களின் புகழ் என்றும் வாழ்க!..  
* * *  

சனி, மார்ச் 28, 2015

ஸ்ரீராம் ஜயராம்

அலைகடல் நடுவண் ஓர் அனந்தன் மிசை
மலைஎன விழிதுயில் வளரும் மாமுகில்
கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை..
(பாலகாண்டம் - கம்பராமாயணம்)


இவ்வண்ணமாக - அமரர்க்கு உரைத்த அன்பின் வாய்மையால், 

பங்குனி மாதம் வளர்பிறை - நவமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் உச்சிப் பகல் பொழுதில் கௌசல்யா தேவியின் திருமகனாக - 

பாற்கடலுள் துயிலும் பரம்பொருள் ஸ்ரீராமனாக திருஅவதாரம் செய்தார்.

இன்று ஸ்ரீராமநவமி!..

வற்றாதப் பெருங்கருணை வையகத்தில் தோன்றிய நன்னாள்!..


மக்கள் நலம் பெறுதற்கு மழலையாய் வந்துதித்த வள்ளல் பெருமானைத் தாலாட்டிக் களிப்பெய்துகின்றார் - குலசேகராழ்வார்.

ஸ்ரீராமன் பிறந்த நாளில் குலசேகராழ்வார் அருளிய தமிழமுதம் பருகுவோம்!..

குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி.
எட்டாம் திருமொழி.

-: நன்றி :-
ஸ்ரீ நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
(diravidaveda.org)
 * * *
ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!..

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்திறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - வடுவூர்
கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!.

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ!..


பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ!..

சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கண்மணியே
சிற்றவைதன் சொற்கொண்ட சீராமா தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - புன்னைநல்லூர், தஞ்சை
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே
வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கண்மணியே
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ!..

மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கண்மணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ!..

ஸ்ரீ கோதண்டராமன் - தில்லைவிளாகம்
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கண்மணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ!..

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கண்மணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ!..


கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொன்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!..


ஸ்ரீராமா!.. நின்னைத் தொழுது நிற்கும் 
அடியவர்கள் அனைவரும் 
ஒரு சொல் - ஒரு இல் - ஒரு வில்
- என விளங்கி நிற்க அருள்வாயாக!..

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதய ஸீதாய பதயே நம:

ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!..
ஓம்  
* * *