நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 30, 2017

மாமன்னன் வாழ்க..

ஆயிரத்து முப்பதாண்டுகளுக்கு முன் - ஒருநாள்..

அன்றைக்கு ஐப்பசி மாதத்தின் சதய நாள்..

அவன் இப்புவியில் பிறந்து தாயின் அருகில் கிடந்தபோது
திருமகள் நெஞ்சம் தித்தித்திருந்தாள்.

அதன் பின் -

அவன் தத்தித் தவழ்ந்து தளர் நடையிட்டபோது
இந்தப் பூமகள் நெஞ்சம் பூத்திருந்தாள்..

குருகுலத்தில் அமர்ந்து கலைகளைக் கற்றபோது
கலைமகள் நெஞ்சம் களித்திருந்தாள்...

தோள்வலி கொண்டு போர்முகங் கண்டு
வாளேந்தி நாற்புறமும் வன்பகை முடித்தபோது
வீரத் திருமகள் ஆரவாரச் சிரிப்புடன்
வெற்றித் திலகமிட்டு வாழ்த்தி நின்றாள்..

அதனால் தானே ஆண்டுகள் பலநூறு கடந்தபோதும்
அவனுடைய சீர் தனை அவனுடைய பேர் தனைப் பேசி நிற்கின்றோம்...

இப்பேர்பட்ட பெருமை இப்பூவுலகில்
எத்துணைப் பேருக்குக் கிடைத்திருக்கின்றது!?..


மாமன்னன் ராஜராஜ சோழன்!..

இப்பேர்தனைக் கேட்கும்போதே
நெஞ்சமும் தோள்களும் விம்மித் திளைக்கின்றனவே!..

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையில்
இப்படி என்றால்!..

அந்த மாமன்னன் வாழ்ந்த காலத்தில்
அவனோடிருந்த மக்களுக்கு எப்படியிருந்திருக்கும்!..

மக்களுடன் மக்களாக
அந்த மாமன்னன் திளைத்திருந்த காரணத்தால் தான்
இரத்தத்தோடு இரத்தமாக கலந்திருக்கின்றது அவனைப் பற்றிய உணர்வு...

வாழையடி வாழையாக - இந்த உணர்வு வருவதால் தான்
மாமன்னனின் பேரைக் கேட்ட மாத்திரத்தில்
உடலும் உள்ளமும் உற்சாகக் கடலில் நீந்திக் களிக்கின்றன..

முன்னோர்க்கும் பின்னோர்க்கும் - என,
பெருமைகளை மலையளவாகச் சேர்த்து வைத்தவன்
மாமன்னன் ராஜராஜசோழன்...


ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்ட பெருந்தகையாளன்!..

காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி!..

வேங்கை நாடும் கங்கைபாடியும்
விழி மூடாது காத்துக் கிடந்தன இவனது காலடிகளில்!..

நுளம்பபாடியும் தடிகை பாடியும் 
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் 
புலம்புதற்கொரு மொழியும் இன்றி
புகழ்ந்து கிடந்தன இவனது திருவடிகளை!..

எண்திசைகளும் இவனைப் பேசித் திரிந்த வேளையில்
ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்..

இவையும் போதாதென்று -

முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரமும்
என்ன புண்ணியம் செய்தனமோ!.. - என்று,
மன்னவனின் பாதங்களைத் தழுவிக் கிடந்தன..
முப்போதும் பன்னீரால் கழுவிக் கிடந்தன!..

நாட்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதில்
இவனே முன்னவனாக முதல்வனாக இருந்தான்..

இதனால் தான்
சோழ வளநாட்டின் மக்கள் மன்னனுக்கு இமையாக இருந்தார்கள்..
மாமன்னனும் தன் மக்களுக்கு இமையாக இருந்தான்..

ஆலயங்களைத் திருத்தி திருவிளக்கேற்றியதில் இவனுக்கு நிகரில்லை...

அதுவரைக்கும் -
அங்குமிங்குமாக காற்றில் தவழ்ந்து கொண்டிருந்த
திருப்பதிகங்களை மீட்டெடுக்க ஆவலுடன் முனைந்தான்...

இனிமையில் இவ்வளவு என்றால் எண்ணிக்கையில் எவ்வளவு!?..

அப்பரும் ஞானசம்பந்தரும் சுந்தரரும் நமக்களித்த
திருப்பதிகங்கள் அத்தனையையும் மீட்டெடுக்க முடியுமா?..

திகைத்து நின்ற வேளையில்
திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் மூலமாக
அந்த அற்புதம் நிகழ்ந்தேறியது..



பொள்ளாப் பிள்ளையாரின் திருவருள் பெற்ற
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களின் மூலமாக
மன்னனின் ஆவல் ஈடேறியது..

தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள்
கறையான்களின் பிடியில் கிடந்த சுவடிகளை மீட்டெடுத்து
தமிழுக்கும் சைவத்திற்கும் புத்துணர்வூட்டிய பெருந்தகை ராஜராஜ சோழன்..

அதனால் தானே அனைவராலும்
சிவபாத சேகரன்!.. - எனக் கொண்டாடப்பட்டான்..

அப்பேர்ப்பட்ட மாமன்னனுக்கு
நாம் எந்த விதத்தில் மரியாதை செய்கின்றோம்?..

மும்முடிச் சோழ மண்டலம் என்பது
ராஜராஜன் ஆட்சி செய்த நிலத்தின் திருப்பெயர்...

ஆனால், இன்றைக்கு மாநில அளவில் கூட
அப்பேரரசனுக்கு மரியாதை செலுத்தவில்லை..

தஞ்சை மாநகர் மட்டும் எப்போதும் போல
மாமன்னனின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றது..

இதற்கிடையில் சமீப காலமாக
எங்கெங்கிருந்தோ - எவர் எவரோ வந்து
எங்க சாதி.. எங்க சாதி!.. - என்று கூக்குரலிட்டு
தஞ்சை நகரைப் பதற்றத்துக்குள்ளாக்குகின்றார்கள்..

ஒருபுறம் மக்கள் பெருமளவில் புழங்கும்
பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை..
இன்னொரு புறம் கடைத்தெருவும் வங்கி வளாகமும்..

இவற்றுக்கு நடுவே - இந்தக் கூச்சலும் கூக்குரலும்
பெரிய கோயிலுக்குச் செல்லும் பக்தர்களைக் கூட விட்டு வைப்பதில்லை...

இந்தப் பதற்றமும் பரபரப்பும் மக்களுக்குப் புதியவை..

பதற்றத்தைத் தணிக்கும் முகமாக -
காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுகின்றனர்...

என்றாலும் -
எந்த நேரத்தில் என்ன நிகழுமோ?.. - என்ற பதற்றம் நிலவுவது உண்மை..


ஆண்டுக்கு ஆண்டு அத்தனையையும் பேசிக் கொண்டிருக்கின்றோம்..
அத்தனை சிறப்புகளும் ஒரே அடையாளத்துக்குள் பொதிந்து கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகளாக அணி கொண்டு விளங்குகின்ற அந்த அடையாளம் -
ராஜராஜேஸ்வரம் எனும் தஞ்சை பெருவுடையார் திருக்கோயில்.

தமிழர் தம் கட்டடக் கலைக்கு -
மாபெரும் எடுத்துக்காட்டு தஞ்சை ராஜராஜேஸ்வரம்..


நேற்றைக்கும் இன்றைக்குமாக (29, 30/10) 
தமிழக அரசு விழா நடத்துகின்றது...

இன்று காலையில் பெருவுடையார்க்கும் பெரியநாயகி அம்மனுக்கும் 
பெருந்திருமுழுக்கு நிகழ்கின்றது.. 

அதனைத் தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நிகழ்கின்றது..

மாலையில் ஐயனும் அம்பிகையும் விடைவாகனத்தில் ஆரோகணித்திருக்க
அம்மையப்பனைத் தரிசித்த வண்ணம் மாமன்னன் திருவீதி எழுந்தருள்கின்றான்...

அம்மையப்பனுடன் சேர்த்து மாமன்னனையும் தரிசிக்க
ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர் தஞ்சை மக்கள்..


விண் கொண்ட பெருமை எல்லாவற்றையும் 
தமிழும் தமிழ் மண்ணும் கொண்டு நிற்கும் வண்ணம் 
வடிவமைத்துத் தந்த பெருந்தகை - சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்..

பார் கொண்ட பெருமையெல்லாம் 
ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மாமன்னன்
சீர் கொண்டு நின்றனன்!..
பெரும்பேர் கொண்டு நின்றனன்!.. 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  

திருவீதி கண்டருளும்
சிவபாத சேகரனின் பெரும்புகழ் ஓங்குக!..
***

சனி, அக்டோபர் 28, 2017

திருக்குடமுழுக்கு

ஸ்ரீ வீரபத்ரகாளி..

தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...


தஞ்சை மாநகரிலுள்ள சிவாலயங்களுள்
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று..

இத்திருக்கோயில் - வடக்கு வாசல் அகழியைக் கடந்து வடக்கு அலங்கம் பகுதியில் ராஜாகோரி மயானத்திற்குச் செல்லும் சாலைக்குக் கிழக்காக பழைய திருவையாறு சாலையில் உள்ளது..

இந்த சாலையை சிரேயஸ் சத்திரம் சாலை என்றும் சொல்வர்..

சிறப்புறும் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பின்புறமாக செல்லும் இந்தச் சாலை வெண்ணாற்றங்கரையில் நெடுஞ்சாலையுடன் இணைந்து விடுகின்றது..

ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து
அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

கறுப்பு நிறத்தில் விளங்குவதால் கரியகாளி என்றும் சொல்வார்கள்..

திருவடியில் அசுரன் கிடப்பதால் மகிஷாசுரமர்த்தனி என்பதும் வழக்கம்...

சென்ற ஆண்டு இக்கோயிலுக்குச் சென்று வந்த பிறகு
இத்திருக்கோயிலின் சிறப்புகளைச் சொல்லியிருந்தேன்..

அவற்றைக் கீழ்க்காணும் இணைப்புகளின் வழியாகக் காணலாம்

ஸ்ரீ வீரபத்ரகாளி 1

ஸ்ரீ வீரபத்ரகாளி 2

இத்திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று
நேற்று வெள்ளிக்கிழமை (27/10) காலையில்
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது..






தொடர்ந்து 
மூலவர் அம்பிகை சந்நிதிகளிலும் ஸ்ரீ வீரபத்ரகாளி சந்நிதியிலும்
மகா அர்ச்சனையும் பெருந்தீப வழிபாடும் நடந்தன..



ஸ்ரீ கேசவதீஸ்வர ஸ்வாமி
ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி


ஸ்ரீ வீரபத்ரகாளியின் சந்நிதி
கும்பாபிஷேக வைபவத்திலும் மகா ஆராதனை நிகழ்வுகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இன்புற்றனர்..

நேற்றிரவு -
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வர ஸ்வாமியும்
ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பிகையும் சிறப்பு அலங்காரங்களுடன்
திருவீதி எழுந்தருளி அருள்பாலித்தனர்..



அந்த நிகழ்வுகளை இன்றைய பதிவினில் 
மகிழ்வுடன் வழங்குகின்றேன்..

FB வழியாக
படங்களை வழங்கியவர்
திரு. ஞானசேகரன் - தஞ்சை..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
***

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்..
***

வியாழன், அக்டோபர் 26, 2017

முருக தரிசனம் 3

தஞ்சை மாநகருக்குள் இலங்கும் முருகன் திருக்கோயில்களைத்
தரிசனம் செய்து கொண்டிருக்கின்றோம்..
மேல அலங்கம், குறிச்சித் தெரு, அரிசிக்காரத் தெரு மற்றும்
ஆட்டுமந்தைத் தெரு ஆகிய நான்கு இடங்களிலுள்ள கோயில்களை
முந்தைய பதிவுகளில் கண்டோம்..

இன்றைய பதிவில் காணும் இரண்டு திருக்கோயில்களுடன்
இந்தத் தொடர் நிறைவடைகின்றது...

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்..
வடக்கு அலங்கம் -  வடக்கு ராஜ வீதி





வடக்கு ராஜவீதி ஸ்ரீகாளி கோயிலின் அருகே பிரியும்
பூக்குளம் சாலையில் அமைந்துள்ளது..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள்
மாலை நேர சூரியனின் கதிர்கள்
மூலவரைத் தழுவிப் படர்கின்றன..

திருக்கோயிலுக்குள் சிவ சந்நிதிகளும் திகழ்கின்றன...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
கொடிமரத்து மூலை பேருந்து நிறுத்தத்தில் 
இறங்கினால் - அரை கி.மீ தொலைவில் கோயில்..
*** 

ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்..
பூக்காரத்தெரு (ஜங்ஷன் அருகில்)






மூலஸ்தானத்தில்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன்
திருமுருகன் திகழ்கின்றனன்..
மூலவருக்கு அருகிலும்
பஞ்சலோக திருமேனிகள் விளங்குகின்றன..

இந்தத் திருமேனிகள் நூறாண்டுகளுக்கு முன் 
திருச்செந்தூரில் பணி புரிந்த தஞ்சைவாசி ஒருவருக்கு
அங்கிருந்த துறவி ஒருவரால் வழங்கப்பட்டது...

அவர் அந்த விக்ரகங்களுடன்
சிறு குடில் ஒன்றினை அமைத்தார்..

காலப்போக்கில் 
அழகான கோயிலாக மலர்ந்து
இன்றைய நாளில் கொடிமரத்துடன்
இரண்டு திருச்சுற்றுகளை உடையதாக
விளங்குகின்றது - திருக்கோயில்...


தஞ்சை மக்களின் செல்லப்பிள்ளையாகத்
திகழ்பவன் பூக்காரத் தெரு முருகன்..

திருக்கோயிலைச் சார்ந்து
பூச்சந்தை அமைந்துள்ளது...
ஏராளமான காய்கறிக்கடைகளும் இருக்கின்றன..
அருகம் புல்லில் இருந்து ஆட்டுக்குட்டி வரைக்கும் வாங்கலாம்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
விளார் செல்லும் பேருந்துகள் 
கோயில் வாசல் வழியாகச் செல்கின்றன..
கான்வென்ட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் 
கோயிலுக்கு வரலாம்...
***
தஞ்சாவூர் திரு. ஞானசேகரன் அவர்கள் - ..
Fb வழியாக வழங்கிய படங்கள்
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றன..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
***

கீழுள்ள படங்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
வழங்கியவை..

அவர் தமக்கும் மனமார்ந்த நன்றி..

சிக்கல் சிங்காரவேலன்
சிக்கல் சிங்காரவேலன்
திருச்செந்தூர்



சுவாமிநாத ஸ்வாமி 
திருப்பரங்குன்றம் 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..(51)
-: கந்தர் அநுபூதி :-

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
கந்தா சரணம் கடம்பா சரணம்..
கார்த்திகை பாலா சரணம்.. சரணம்!..

ஓம்
சுப்ரம்மண்யோம்.. சுப்ரம்மண்யோம்.. 
சுப்ரம்மண்யோம்!..
*** 

புதன், அக்டோபர் 25, 2017

சிக்கலில் வேல் வாங்கி...

மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
தண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமுங் கேட்டதுவே!..(93)


விளங்கு வள்ளிக் காந்தன் வேலெடுத்தான் -  விளையாடுதற்கு..
அதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய நிருதர் குலம் பதுங்கிக் கொண்டது..

ஆணவத்தின் வேரறுக்க வந்த அறுமுகன் அருட்புன்னகை பூத்தான்..
ஈரமற்ற பாறையாய் எழுந்து நின்ற கிரௌஞ்ச மலை துகள் துகளானது..

பேருருவாக நின்ற கிரௌஞ்சம் பொடிப் பொடியாக இற்று விழுந்தது..
அப்போது எழுந்த ஓசையை பதினான்கு உலகங்களும் கேட்டதுவாம்!..

அப்படியெனில் -
பதினான்கு உலகங்களுக்குள் - ஏதேனும் ஒன்றில்
எதுவாகவும் கிடந்து நாமும் கேட்டிருப்போம் தானே!..

கேட்டிருப்போம்.. நிச்சயம் கேட்டிருப்போம்!..

அதனால் தான் - அவன் திருப்பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்கின்றது..
கேட்கக் கேட்கத் தித்திக்கின்றது...


ஐப்பசி மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாள்..

கிரௌஞ்ச மலை மட்டுமல்லாது
மா மரமாக கிளை விரித்து நின்ற சூரபத்மன்
வேலன் எய்த வேலின் நுனி பட்டு அங்கம் பிளவு பட்டு
ஆணவம் அழிவு பட்டு பேரொலியுடன் மண்ணில் வீழ்ந்த நாள்!..

அதுமட்டுமல்ல..

கொடியனாகக் கிடந்த சூரபத்மன்
குமரனுக்கு அடியனாக ஆன நாளும் இதுவே!..

குன்றமெல்லாம் நின்று வளர் குமரப்பெருமான்
கோலமயில் வாகனனாக கோழிக் கொடியுடை காவலனாக
வீறு கொண்டு வேலேந்தி நின்ற நாளும் இதுவே!..

கந்த சஷ்டி!..

தமிழர் தம் திருநாள்!..

திருச்செந்தூரில் இன்று மாலை மிகச் சிறப்பாக
சூரசங்காரம் நிகழ இருக்கின்றது..

திருச்செந்தூரில் மட்டுமல்லாது
மரபுவழி நின்று மாமயிலோனைப் போற்றித் துதிக்கும்
மக்களின் வாழ்விடம் எங்கெங்கும்
கந்த சஷ்டிப் பெருவிழா அனுசரிக்கப்படுகின்றது..

தமிழிலே ஒரு சொல்வழக்குண்டு..

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான்!.. - என்று..

சஷ்டிப் பெருவிழாவின் போது -
ஐந்தாம் நாளன்று அருட்குமரன் அன்னையிடம் வேல் வாங்குகின்றான்..


அந்த நிகழ்வு திருஆரூரை அடுத்துள்ள
சிக்கல் எனும் திருத்தலத்தில் பெருஞ்சிறப்புடன் நடைபெறும்...

அப்போது -
வேலவனின் திருமுகத்தில் வியர்வை பூத்திருக்கும்!.. - என்பார்கள்..

அந்த நிகழ்வினை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்குமோ!..

சிக்கல் கோயிலுக்கு பலமுறை சென்றிருக்கின்றேன்..
கந்த சஷ்டி திருவிழாவின் போது சென்றதில்லை..

ஆயினும் -
ஐயன் முருகனின் திருமுகத்தில் பூத்திருக்கும்
வியர்வைத் துளிகளைக் காட்டும் படங்களைக் கண்டிருக்கின்றேன்...

சிக்கலில் திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது..

நேற்று வேலன் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாள்..

திருமுகத்தில் பூத்த வியர்வைத் துளிகளுடன்
சிக்கல் சிங்காரவேலனின் அருட்காட்சி..



சென்ற ஆண்டு கிடைத்த படத்துடன்
நேற்று கிடைத்த படமும் அத்துடன்
காணொளிகளும் இன்றைய பதிவில்!...


நேற்று கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள்..

செந்தூரில் போர் முடிப்பதற்காக
சிக்கல் எனும் பெரும்பதியில்
ஐயன் வெண்ணைநாதர் அருகிருக்க
அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து
அறுமுகப் பெருமான் வேலினை வாங்கினான்!..

வீர ஆவேசம் திருமேனியெங்கும்!..

ஆனாலும், அதை வெளிக்காட்டாமல்
எழில் முகத்தில் அருட்புன்னகை - வியர்வைத் துளிகளுடன்!..


சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேரஎண்ணி
மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளிமலை எனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே!..(77)  

என் நெஞ்சே!..
சேல் கொண்ட கண்ணியர் சிற்றிடை தேடித் தொலையாமல் 
மால் கொண்டு மங்கையர் பூங்குழல் நோக்கித் திரியாமல்
வேல் வாங்கி நின்ற வீரனின் பூங்கழல் நோக்கு!..

வேல்நெடுங்கண்ணி அம்பிகையிடம்
முருகன் வேல் வாங்காது இருந்திருந்தால்
வெள்ளிமலையெனக் கால் கொண்டு நிற்கும்
ஐராவத ஆனையின் மீதிருக்கும் வானவர்கோன்
மனைவியின் கழுத்து நூல் வாங்கப்பட்டிருக்கும்!..

அப்படியேதும் நேர்ந்து விடாமல்
கந்தன் கடம்பன் கார்த்திகேயன் கார்மயில் வாகனன்
அமராவதியின் காவலனாகி அருட்செயல் புரிந்தான்!..

அறுமுகனாகிய அவனையே நோக்கு...
அருட்திரளாகிய அவனையே வாழ்த்து..
அதுவே நன்று.. சாலநன்று!..

- என்று புகழ்ந்துரைக்கின்றார் அருணகிரி நாதர்..


இந்த நாள் இனிய நாள்..
ஆணவமும் அகங்காரமும் அழிந்த நாள்..
அன்பும் அருளும் தழைத்த நாள்!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒருதாழ்வில்லையே!..(72)

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம் சரணம்!..
* * * 

செவ்வாய், அக்டோபர் 24, 2017

முருக தரிசனம் 2

தஞ்சை மாநகருக்குள் இலங்கும் முருகன் திருக்கோயில்களைப் பற்றி முந்தைய பதிவில் - குறித்திருந்தேன்..
அவற்றுள் -
மேல அலங்கம் மற்றும் குறிச்சித் தெரு கோயில்களை
நேற்றைய பதிவினில் கண்டோம்..

இன்றைய பதிவிலும் இரண்டு திருக்கோயில்கள்...

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்..
அரிசிக்காரத் தெரு - மகர்நோன்புச் சாவடி..









இத் திருக்கோயில் மேற்கு நோக்கியது..
முருகன் தண்டாயுதம் தாங்கித் திகழ்கின்றான்..

இத்திருக்கோயிலில்
முருகனுக்கு யானை வாகனம் பொலிகின்றது..

மற்ற கோயில்களைப் போலவே இங்கும்
திருச்சுற்றில் சிவ சந்நிதிகள் திகழ்கின்றன..

ஸ்ரீ பாலதண்டாயுத ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில்..
ஆட்டு மந்தைத் தெரு - கீழவாசல்..




இத் திருக்கோயிலும் மேற்கு நோக்கி விளங்குகின்றது..
முருகன் தண்டாயுதம் தாங்கித் திகழ்கின்றான்..


பங்குனி உத்திரம்
பெருஞ்சிறப்புடன் நிகழும்..
கந்தசஷ்டிக்கு அடுத்தநாள்
திருக்கல்யாண வைபவம்,,

மற்ற கோயில்களைப் போலவே இங்கும்
திருச்சுற்றில் சிவ சந்நிதிகள் திகழ்கின்றன..

தஞ்சை கீழவாசல் மார்க்கெட்டுக்கு அடுத்துள்ளது
இத்திருக்கோயில்..

பழைய பேருந்து நிலயத்திலிருந்து
நடந்தே வந்து விடலாம்..

தஞ்சாவூர் திரு. ஞானசேகரன் அவர்கள் - ..
Fb வழியாக வழங்கிய படங்கள்
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றன..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
***
கீழுள்ள படங்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
வழங்கியவை..

அவர் தமக்கும் மனமார்ந்த நன்றி..

திருப்பரங்குன்றம்
திருஅண்ணாமலை
சிக்கல் சிங்காரவேலன் 
ஸ்வாமிநாத ஸ்வாமி - சுவாமிமலை
வயலூர்
வைத்தீஸ்வரன்கோயில்
நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றுஎன் செயும் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே..(38)
-: கந்தர் அலங்காரம் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!.. 
* * *