நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 09, 2016

ஸ்ரீ வீரபத்ரகாளி 2

தஞ்சை ஸ்ரீ வீரபத்ரகாளியம்மனைப் பற்றிய பதிவு தொடர்கின்றது..

இதன் முதல் பகுதியை - இங்கே வாசிக்கலாம்..

ஸ்ரீ வீரபத்ரகாளி குடியிருக்கும்
ஸ்ரீ கேசவதீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலின் மேற்கு வாசல்..

சிறிய ராஜகோபுரத்துடன் கூடிய மேற்கு வாசல் 
திருப்பணி வேலைகளுக்காக அடைத்துக் கிடக்கின்றது..

மேற்கு வாசலின் வடக்குப் பக்கம் -  மிகப்பெரிய அளவில்..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் தொன்மையான திருவடிவம் 
சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது..


சித்திரத்தின் அருகில் சுடர் வீசுகின்ற பெரிய குத்து விளக்கு..

அங்கு வழிபாடுகள் இயற்றப்படுவதாகத் தெரிகின்றது..

எதிரில் வில்வ மரம் தல விருட்சமாகத் தழைத்திருக்கின்றது .. 
அருகில் புழக்கத்திலுள்ள கிணறு..

கிணற்றின் அருகே சண்டேஸ்வரர் சந்நிதி.. கோட்டத்தில் ஸ்ரீ துர்கை..

கோயிலின் வடக்குச் சுற்றிலும் 
புதிதாக மண்டபத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..

திருப்பணி வேலைகளின் பொருட்டு மண்டபத்தின் சில பகுதிகள் மூடப்பட்டு இருக்கின்றன..

அம்பிகையின் மூலத்தானம்
திருச்சுற்றில் மெல்ல நடந்து - தெற்காகத் திரும்புவதற்கு முன் -
ஈசான்ய மூலையில் பிரமிப்பின் உச்சம்..

திருச்சுற்று மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் -

அழகு என்றால் அழகு.. அதற்குமேல் சொல்லுதற்கு ஏதுமில்லை!..

அழகெல்லாம் ஒருங்கே அமைந்த திருவடிவம் - ஐந்தடி உயரத்தில்!..

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி!..

முருகா.. உனக்குக் குறையும் உளதோ?..
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ!..

ஏனிப்படிக் கோவணத்துடன் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டியானாய்?..

முருகா.. நீ ஏனிப்படிக் கோவணத்துடன் தண்டு 
கொண்டு இங்குற்றோர் ஆண்டி ஆனாய்?..

ஆயிரம் பேர் கூடி நின்று கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டாலும் 
பதில் ஏதும் கூறாதபடிக்கு மெல்லிய புன்னகையுடன்
நின்ற நிலையாய் மௌனத் திருக்கோலம்...

திருமுருகன் தெற்கு முகமாகத் திகழும் சந்நிதிகள் அபூர்வமானவை..

அதிலும் மிகுந்த சிறப்புடையவை..

திருச்செந்தூர், சுவாமிமலை. சிக்கல் - ஆகிய திருத்தலங்கள்..

இங்கெல்லாம் திருமூலத்தானம் கிழக்கு நோக்கியிருந்தாலும்
உபசந்நிதியில் ஸ்ரீ வள்ளி தெய்வயானையுடன்
கல்யாணத் திருக்கோலத்தில் திகழ்கின்றான்..

ஆனால் - 

தஞ்சை ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயிலில் தன்னந்தனியனாக -
தண்டாயுதம் ஏந்தியவனாக திருக்கோலம் கொண்டுள்ளான்..

எம்பெருமான் ஏன் இப்படி தண்டு கொண்டு இங்குற்றான்!?..

இதற்கு முந்தைய பதிவில் -

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் வழிபட்டு சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...

- என்று குறிக்கப்பட்டிருக்கும்...

அசுரர்களை அழித்து ஒழித்த பின்னும்
அடங்காத கோபம் கொண்டு கொதித்திருந்தாளாம் -  ஸ்ரீவீரபத்ரகாளி..

ஆதியில் வம்புலாம் சோலை என்று புகழப்பட்ட - இந்தப் பகுதி,

பராசரர், வசிஷ்டர், ரோம மகரிஷி முதலான முனிவர்களும் 
கொங்கணவர், கோரக்கர், கருவூரார் முதலான சித்தர்களும் 
ஸ்ரீ ராகவேந்திரர், சமர்த்த ராமதாஸர் முதலான மகான்களும் 
காசி பாபா, பஞ்சநத பாவா முதலான சாதுக்களும் 
சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் முதலான உத்தமர்களும் இருந்து இயங்கியதும்
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தரிசித்ததுமான புண்ணிய தலமாகும்..

அதற்கான ஆதாரங்கள் இன்றளவும் இங்கே திகழ்கின்றன...

பழனி மலையின் உச்சியில் விளங்கும் பால தண்டாயுதபாணியின் திருமேனியை - நவபாஷாணம் கொண்டு வடித்தவர் போகர்..

அந்தத் திருமேனியுடன் இன்னும் எட்டு திருமேனிகளை போகர் வடித்ததாக ஆன்றோர் கூறுகின்றனர்...

அவற்றுள் ஒன்று தான் - இங்கே விளங்கும் திருமேனி..

முருகன் திருமேனியை போகரிடம் வேண்டி விரும்பிப் பெற்ற சித்தர்கள் -
அதனை தஞ்சைக்குக் கொணர்ந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.. 

இந்தச் செய்திகளின் நுட்பம் -
சித்தர்களை வழிபாடு செய்வோருக்குப் புலனாகின்றன..

அவ்வப்போது அவை வெளிப்படுகின்றன..

இவை செவிவழிச் செய்திகள் மட்டுமே!.. - என்று கூறுவோரும் உள்ளனர்.... 

இருப்பினும் நம்பிக்கை.. அதுவே மகாசக்தி..


அந்த வகையில் -
தஞ்சை ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயிலில் விளங்கும்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சித்தர்களால் நிறுவப் பெற்றவன்!.. 
- என, கொண்டாடப்படுகின்றான்..

கொதித்திருந்த அம்பிகையைக் குளிர்வித்து 
சித்தர்கள் நிகழ்த்திய வழிபாடுகளில் - 
உற்ற துணையாக முருகப்பெருமான் தானும் நின்றிருக்கின்றான்..

உலக மக்களின் பொருட்டு -

ஞானமும் நல்லருளும் வேண்டி நின்ற சித்தர் பெருமக்களுக்கு 
உபதேச குருவாக திகழ்ந்திருக்கின்றான்..

சித்தர்களின் வேண்டுதலுக்காக -

பால தண்டாயுதபாணி தெற்கு முகமாக எழுந்தருளியதால்
ஞானமூர்த்தி!.. - என, ஆன்றோர்களால் புகழப்படுகின்றான்..

உபாசனா மூர்த்தி உள்நின்று உணர்த்திய பொருள் இதுவே!..


வில்வ மரம்
பழனி முருகனைப் போலத் தோன்றினாலும் -

திருமுகம் சற்றே இடப்பக்கம் சாய்ந்திருக்க
உச்சியில் சிறு கொண்டை விளங்குகின்றது..

காதுகளில் கர்ணப் பூ திகழ்கின்றது..

வலது திருக்கரத்தில் ஸ்ரீ தண்டம் எனும் பிரம்பு..
இடது திருக்கரம் அணைத்துக் காக்கும் பாவனையில்..

திருப்பாதங்களில் வீரத் தண்டைகள்..

அருள் வடிவாகத் திகழ்கின்ற ஐயனைக் காணக் காண
அல்லல்கள் அகன்றோடுவதாக உணர்வு..

உடனிருக்கும் மயில் எங்கு சென்றதோ.. கவனிக்கவில்லை..

தற்போது தஞ்சை பூக்குளம் பகுதியில் மயில்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன.. அவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்...

இத்துடன் திருக்கோயிலின் முன்வாசலுக்கு வந்தாயிற்று..

மாலை மயங்கி இருள் கவிந்து கொண்டிருந்தது..

ஸ்ரீ வயிரவர் திருமேனி மற்றும் நவக்கிரக மண்டலம் காணக் கிடைக்கவில்லை..




தொடரும் திருப்பணிகள் முற்றாக நிறைவுற இன்னும் சில மாதங்களாகலாம்..

மராட்டிய மன்னர் வம்சத்தவரின் நிர்வாகத்தில் உள்ளது - திருக்கோயில்..

இங்கே காணிக்கை உண்டியல் இல்லாதது குறிப்பிடத்தக்கது...

அமைதியான அழகான - திருக்கோயில்..

இன்னும் சிறு பொழுது கோயிலில் இருந்திருக்கலாம்..
அந்தச் சமயத்தில் அதற்கு இயலவில்லை..

இறையன்பர்கள் அவசியம் இங்கே தரிசனம் செய்தல் வேண்டும்...

ஆயினும், பேருந்து வசதிகள் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்..

தஞ்சை நகரின் வடக்குப் பகுதியில் - சற்றே வெளிப்புறமாக இருக்கின்றது..

இருந்தாலும்,
பழைய திருவையாறு சாலையில் திருக்கோயிலை விசாரித்துக் கொண்டு
ஆட்டோக்களிலோ சொந்த வாகனங்களிலோ வந்து சேரலாம்..

சாலை ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது...

ஸ்ரீ வீரபத்ர காளி
மேலே உள்ள படம் விழாக்குழுவினரால் வெளியிடப்பட்டதாகும்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

வீரபத்ர காளி!.. - என்றுதான் எனக்கு அடையாளம் காட்டப்பட்டனள்..

ஆனால், ஸ்ரீ வடபத்ர காளி என்றும் திருக்கோயிலில் எழுதியிருக்கின்றனர்..

குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்ட உறையில்
மகிஷாசுர மர்த்தனி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது..

எப்படி அழைத்தால் என்ன!..
எல்லாப் புகழும் அவளுக்கே உரியது..

அம்பிகையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்...

ஆதியான ஸ்ரீ கோடியம்மனைத் தரிசிக்கும்போது
அம்பிகையின் திருமுடியில் ஸ்ரீ சிவபெருமானின் திருமுகத்தைத் தரிசிக்கலாம்..

இங்கே - வீரபத்ரகாளியின் கருவறையின் இருபுறமும் விளங்கும்
துவார சக்திகளின் திருமுடிகளிலும் திருமுகம் தெரிகின்றது...

அது ஐயனின் திருமுகமா... அம்பிகையின் திருமுகமா...

தெரியவில்லை...

விவரிக்க இயலாததொரு பரவசத்தில் 
நான் இருந்ததால் அங்கிருந்தவர்களைக் 
கேட்கும் மனநிலையில் இல்லை...

அதற்கான விடையையும் காலம் கனியும் போது
அம்பிகை அவளே அருள்வாள்..

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்னியது உன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012)  
-: அபிராமி பட்டர் :-

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்
* * * 

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எங்களது கோயில் உலா பட்டியலில் பார்க்கவேண்டிய கோயில்களில் நீங்கள் கூறும் கோயில்களைச் சேர்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மிகச் சிறப்பான தகவல்களும் படங்களும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பகிர்வை மதியமே வாசித்தேன்... இப்போதுதான் கருத்து இட முடிந்தது... மொபைலில் வாசித்ததால் தமிழ் இல்லாததால் கருத்து இடவில்லை...
    படங்களும் பகிர்வும் அருமை ஐயா...
    வடபத்ரகாளி கோவில் பற்றியும் முருகன் பற்றியும் அறியத் தந்தீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. படங்களும் பதிவும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..