நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், மே 24, 2017

அதோ அந்த ஆப்பிள்..

இன்று காலையில் GMB ஐயா அவர்களின்
இது ஒரு புதுக் கதம்பம் எனும் பதிவினில் -

An Apple a Day keeps the Doctor away..  
ஆனால், An Apple a Day Coasts Rs.1000/- a Month..
டாக்டருக்கு அதை விடக் குறைவாகச் செலவாகலாம்.. 
பிராக்டிகலாகச் சிந்திக்க வேண்டும்...

- என்ற வரிகளைப் படித்ததும் -
எனது மனம் பள்ளி நாட்களின் நினைவுகளுக்குள் புகுந்து கொண்டது...

காஷ்மீர் ஆப்பிள்
பத்தாம் வகுப்பு..

முற்பகலில் இடைவேளை முடிந்ததும் முதல் பாடவேளை...

பொது அறிவியல்...

ஆப்பிளைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்
எங்கள் வகுப்பாசிரியர் திரு K.குஞ்சிதபாதம் B.Sc.,B.Ed.,(Sci) அவர்கள்..

சுருக்கமாக - திரு K.K. சார்!.. 
காலையில் முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர்..


ஏடன் தோட்டத்தில் சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்திருந்த
ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சந்தோஷமும்
அன்றோடு தொலைந்து போவதற்குக் காரணமாக இருந்தது 
ஆப்பிள் கனி தான்!.. - என்றும்

அதனால் -
பைபிளில் Forbidden Fruit என்று ஆப்பிள் குறிக்கப்படுவதாகவும்

முன்னொரு காலத்தில் ஆப்பிள் காதலின் குறியீடாகத் திகழ்ந்ததாகவும்
பாடத்தை - சுவையுடன் நடத்திக் கொண்டிருந்தார்..

தொடர்ந்து -
மனிதனின் தொண்டைக் குழாயில் குரல்வளையின் குருத்தெலும்பு
ஆடம்ஸ் ஆப்பிள் ( Adams Apple) என்று சொல்லப்படுவதையும்

ஆப்பிள் பழம் தருகின்ற ஆரோக்கியத்தைப் பற்றியும் -
மேலை நாட்டவர் அதிகமாக ஆப்பிள் சாப்பிடுவதைப் பற்றியும் சொல்லி விட்டு,

An Apple a Day keeps the Doctor away!.. 

- என்று குறிப்பிட்டார்..

அந்தவேளையில், நான் சும்மா என்று இருக்காமல் -

சார்.. அப்படியானால் மேலை நாட்டில் நோய் நொடி ஏதும் வராதா?.. ஆஸ்பத்திரி எல்லாம் கிடையாதா?..

- என்று கேட்டேன்..

உடனே அருகில் இருந்தவன் - அவன் பெயர் ஞானசேகரன்.. - எழுந்தான்!..

அன்றைக்கு அந்த ஆப்பிளைத் திங்காமல் இருந்திருந்தால் -
இன்றைக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருந்திருக்காது!..
முக்கியமா துணி துவைக்கிற கஷ்டம்!..

- என்றான், மிகவும் வருத்தத்துடன்...

ஏனென்றால், பள்ளி நாட்களில் சீருடை
வெள்ளை மேல் சட்டையும்
அழுத்தமான காக்கி கால் சட்டையும்!..

உடனே, பெண் பிள்ளைகள் எல்லாரும்,
கலகல!.. - என்று சிரித்தார்கள்...

சிரிக்கும் அளவிற்கு அதில் என்ன நகைச்சுவையைக் கண்டார்கள் என்பது இன்றுவரை புரியவில்லை..

ஏன்டா.. எருமைகளா!.. 
உங்களுக்கு மட்டும் எங்கே இருந்துடா இந்த மாதிரி சந்தேகமெல்லாம் வருது!?..

- என்றவாறு சிரித்தார்...

மீண்டும், அந்தப் பெண் பிள்ளைகள் எல்லாரும் -
கலகல!.. - என்று வெகு நேரத்திற்குச் சிரித்தார்கள்...

எங்களை எருமைகள் என்று, 
சொல்லக் கேட்டதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்!..


அந்த நாட்களில் அவ்வளவாக ஆப்பிள் தின்றதில்லை..
அதற்கான வாய்ப்புகளும் ஏதுமில்லை!...

இங்கே குவைத்திற்கு வந்த பிறகு தான்
விதவிதமான ஆப்பிள் பழங்கள் காணக் கிடைத்தன...

சர்வ சாதாரணமாக ஒரு நாளைக்கு மதியம் இரவு என,
இரண்டு வேளைகளிலும் இரண்டாயிரம் ஆப்பிள் பழங்கள் கையாளப்படும்..

ஏனெனில், Catering நிறுவனத்தில் வேலை அல்லவா!..

சிலி, கலிபோர்னியா, பிரான்ஸ், நியூஸிலாந்து, ஈரான் - என,
பல நாட்டின் பழங்களையும் உண்டு மகிழ்ந்திருக்கிறேன்..

ஆனால், நாளாக நாளாக ஆப்பிளின் மீதிருந்த ஈர்ப்பு குறைந்து போயிற்று...

அதன் புளிப்பு பிடிக்கவில்லை.. குறிப்பாக பச்சை நிற ஆப்பிள்...

தவிரவும், இப்போதெல்லாம் மெழுகுப் பூசப்பட்டு வருகின்ற ஆப்பிள்கள்..

அந்த மெழுகு நல்லதல்ல.. உடலுக்குக் கேடு!.. - என்பதான செய்திகள்...

இன்னும் கூட சந்தேகம் தான்..

An Apple a Day keeps the Doctor away!.. 

அப்படியானால் -
ஆப்பிளை பலவகையிலும் உண்ணுகின்ற மேலை நாட்டினருக்கு நோய்கள் வருவதில்லையா!..

பெரும்பாலான பழங்களும் காய்களும் மரபணு மாற்றப்பட்டு விட்ட நிலை...

முளைப்புத் திறன் அற்ற விதைகளுடன் கூடிய பழங்களும் காய்களும்
எந்த வகையில் மனிதனுக்கு நன்மை விளைவிக்கக் கூடும்?...

அது ஒருபுறம் இருந்தாலும் ஆப்பிளின் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகு?...

விடை தேடினேன்...

http://foodwatch.com.au

- எனும் தளத்தில் கிடைத்த செய்திகள் - இதோ தங்களுக்காக!.....

Are waxed Apples harmful to eat?..

Q. Can you tell me if the wax on the skin of apples is bad for me?..
A. Not as far as I know.
Apples are a fruit with a high water content. However they naturally produce their own wax which coats the fruit, reduces moisture loss, and keeps them fresher for longer. After the apples are picked, growers wash the apples to remove leaf litter and any field dirt.
Of course some of the wax is also washed away so they reapply a small amount (around 2 drops per apple) of a natural wax to make up for it.
The most commonly used wax is Carnauba wax (code number 903) which is sourced from the leaves of a Brazilian palm tree Copernicia prunifera. This is a wax that has been widely used in fruits, vegetables, sweets, pastries and other foods since the 1920s - and it is safe to eat. 
In Australia, growers are also permitted to use four other approved waxes:
1.     Beeswax 901
2.    Shellac 904
3.    White mineral oil 905a or
4.    Petroleum jelly 905b.

But Carnauba is the main one used.
Due to its low allergenicity and great shine, Carnauba has been exported from Brazil in huge quantities and is also used in many non-food products 

eg: In skincare products, sunscreens, lipsticks, lip gloss, mascara, as well as a glossy coating for many tablets to help people swallow them. 

It is the main wax used to surfboards.. So it's not just apples that you'd have to avoid if you wished to avoid the wax.
Alternatives
If you don't wish to eat any wax, you can buy unwaxed apples (often at farmers' markets or direct from the grower when the apple season is in swing). Or you can simply peel a waxed apple and discard the peel.  

Of course, you will be discarding most of the fibre and some of the vitamins and minerals too which is a shame.

Written by Catherine Saxelby on Friday, 04 April 2014.. 

வேறொரு கருத்தும் சொல்லப்படுகின்றது..

Carnauba எனப்படும் பனை இனத்திலிருந்து பெறப்படும்
(தாவர) மெழுகு வயிற்றில் செரிப்பதில்லையாம்!..

Carnauba or Shellac wax that are completely safe to consume and are not harmful. 
This edible wax is not digested, but is passed out through the digestive system.. 

மெழுகு வெளியே போய்விட்டால் சரி!..
போக மாட்டேன்!.. - என்று அடம் பிடித்தால்?... 

ஒழுங்காகப் படித்துப் பட்டம் வாங்கிய டாக்டரிடம் போக வேண்டியதுதான்!..

(இருந்தாலும் சும்மா ஒரு பேச்சுக்கு!..)

ஆனால்,
இதற்கு Edible wax க்கு மாறாக Petroleum wax பூசப்பட்டிருந்தால் -
ஆபத்து தான்!..

ஈரான் ஆப்பிள்
நம்முடைய வாழைப் பழத்தினைப் போல
எல்லாக் காலங்களிலும் ஆப்பிள் கிடைக்கின்றது..

இன்றைய நாட்களில் மிகுந்த அளவில் ஆப்பிள்கள் இறக்குமதியாகி அங்காடிகளை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன..

பற்பல வண்ணங்களில் மேலும் செறிவூட்டப்பட்டு
பளபளப்பாகக் கண்களைக் கவர்கின்றன..

ஆனாலும், மேற்பூச்சு இல்லாமல் ஆப்பிள்கள் வருவதில்லை..

உண்ணும் பொருட்களின் மீது - கடுமையான தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளின் வரிசையில் நம் நாடு இல்லை!.. 
- என்பது சிந்திக்கத்தக்கது...

இயற்கையைக் கொடுத்தவன் இறைவன்..
அதை அடுத்துக் கெடுத்தவன் மனிதன்!..

என்றாலும்,
நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்
நமக்குத் தான் மிகுந்த கவனம் வேண்டும்!..

ஆப்பிளின் மேற்பூச்சு மெழுகினைப் 
பற்றிய தகவல்கள் 
அடுத்த பதிவிலும் தொடரும்...

இந்தப் பதிவிற்கான வித்து
திருமிகு GMB ஐயாஅவர்களுடைய
பதிவில் இருந்து கிடைத்தது..
அவர்தமக்கு மனமார்ந்த நன்றி..

ஆயிரம் தான் இருந்தாலும், நம்முடைய - 
மாங்கனி, நாவற்பழம், இலந்தைப்பழம், 
நெல்லிக்கனி, விளாம்பழம் இவற்றுக்கு 
ஈடாக வேறொன்றில்லை என்பதே எண்ணம்!..

நலம் நம் கையில்..
வாழ்க நலம்!.. 
***

திங்கள், மே 22, 2017

பல்லுயிர் ஓம்புக..

இன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

1993 ல் இருந்து வருடந்தோறும் மே மாதத்தின் இருபத்து இரண்டாம் நாள்
இப்புவியின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான நாளாக அனுசரிக்கப்படுகின்றது..

International Day for Biological Diversity

-என்றும்,

World Biodiversity Day

- என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்..


மனித சமுதாயம் - தான் மட்டுமே வாழ்தற்பொருட்டு
இயற்கை வளங்களின் மீதும் இதனைச் சார்ந்துள்ள
பல்வேறு உயிரினங்களின் மீதும் நடத்திய தாக்குதலுக்கு
பரிகாரம் செய்வதைப் போல இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது..

புவி வெப்பமயமாவதற்கு மனித சமுதாயம் அன்றி
வேறொரு காரணமும் இல்லை...

எல்லாவகையான ஆடம்பரங்களும் வேண்டும் என்பதற்காக
இயற்கையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் கால சூழ்நிலை மாறியது

இயற்கையை மட்டும் சார்ந்திருந்த பிற உயிர்கள் இடர்ப்பட்டு நிற்கின்றன..

நிலைகுலைந்திருக்கின்றது இயற்கை...

அழிவின் விளிம்பில் பிற உயிர்கள்...

என்றாலும், தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டது மனித சமுதாயமே!..


1992 ல் ரியோடி ஜெனிரோவில் ஒன்று கூடிய உலக நாடுகள்
பல்லுயிர்களையும் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன...

அதன் விளைவாக - நம் நாட்டில் 2002 ல் பல்லுயிர் பரவல் சட்டம் உருவானது..

பல்லுயிர்களையும் பாதுகாத்து அவற்றின் பெருக்கத்தை மேம்படுத்துதல் - என்பதே இதன் சிறப்பு அம்சம்...

இதன்படி ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தத்தமது எல்லைக்குள் பல்லுயிர்ப் பாதுகாப்பினையும் அவற்றின் வாழ்விடங்களைப் பராமரித்தலையும் உறுதி செய்திட நிர்வாகக் குழு ஒன்றினை அமைத்திட வேண்டும்..

இதற்கான நிதி உதவியினை தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் வழங்குகின்றது...

இந்தக் குழு -
அந்த வட்டாரத்தில் விளையும் பயிர் வகைகள்,  மூலிகைகள் முதலான தாவரங்கள்  மற்றும் பாரம்பரிய உயிரினங்கள் அனைத்தையும் பல்லுயிர்ப் பதிவேட்டில் பதிவு செய்து ஆவணப்படுத்தவேண்டும்...

இதன்படி,

தென்னகத்தில் கர்நாடக மாநிலத்தின் நல்லூர் எனும் கிராமத்தில் உள்ள புளியந் தோப்பு பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த அறிவிப்பினை -
பல்லுயிர் நிர்வாகக் குழு மற்றும் கர்நாடக மாநில பல்லுயிர் பரவல் வாரியம் ஆகியவற்றின் பரிந்துரையின்படி -

தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் அறிவித்துள்ளது...

கேரளத்திலும் ஆந்திர மாநிலத்திலும் பல்லுயிர் பாதுகாப்பு நிர்வாகக் குழுக்கள் இயங்கி வருகின்றன என்று அறிய முடிகின்றது..

அப்படியானால் - தமிழகத்தில்!?...

பல்லுயிர் பாதுகாப்பு நிர்வாகக் குழு ஒன்று கூட இல்லை!.. - என்பதே செய்தி..


காக்கை குருவி எங்கள் ஜாதி!..

மகாகவியின் ஆனந்த ஆரவாரத்தினைக் காற்றோடு போக விட்டோம்..


காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் 
கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா!..
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!..

- என்று,

பார்க்கும் இடங்களை எல்லாம் பரந்தாமனாகப் பார்த்து விட்டால்
இந்தப் பாருலகிற்கு பங்கம் செய்யும் எண்ணம் தோன்றாது..

இப்படியான உயர்வான எண்ணங்கொண்டு பாடிய மகாகவி தான்,

கொத்தித் திரியும் அந்தக் கோழி - அதைக் 
கூட்டி விளையாடு பாப்பா!..
எத்தித் திருடும் அந்தக் காக்கை - அதற்கு 
இரக்கப்பட வேணுமடி பாப்பா!..

பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப் 
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா!..

- என்று,
குழந்தைகளுக்கு இயற்கையின் மாண்பினை அறிமுகம் செய்து வைத்தார்..

பாரதத் திருநாட்டின் பல்வேறு வகைப்பட்ட மக்களின்
ஒற்றுமையைக் குறிக்கும்போது கூட,

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை 
அவை பேருக்கொரு நிறமாகும்..

சாம்பல் நிறத்தொரு குட்டி - கருஞ் 
சாந்தின் நிறமொருகுட்டி
பாம்பின் நிறமொரு குட்டி - வெள்ளைப் 
பாலின் நிறமொரு குட்டி..

எந்த நிறம் இருந்தாலும் - அவை
யாவும் ஒரே தரம் அன்றோ..
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்றம் என்றும் சொல்ல லாமோ?..

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை இல்லை..
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!..

- என்று அஃறிணைகளான பூனைகளின் நிறத்தைக் கொண்டு முழங்குகின்றார்..

ஆனால் -
இன்றைக்கு நாம்!?..

இயற்கை நலன்கள் எல்லாவற்றையும் அழித்து ஒழித்த நிலையில்,

பாலை நிலத்தைக் கூட அல்ல -

பாழ் நிலத்தை அல்லவா நம் பிள்ளைகளிடம் விட்டுச் செல்ல இருக்கின்றோம்!..


ஒரு குளத்தையும் அதன் அருகே சில மரங்களையும் பாதுகாத்தால் -
நூற்றுக்கணக்கான உயிர்களை வாழவைத்த பெருமை உண்டாகின்றது...

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில்மூன் றெரித்தீர் என்றிரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்துஎமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்..
-: திருநீலகண்டத் திருப்பதிகம் :-

- என்று, குளங்களையும் சோலைகளையும் பாதுகாத்து பராமரித்தலைப் பற்றி உபதேசிக்கின்றார் திருஞானசம்பந்தர்...

புவி வெப்பமடைவதனால் விளையும் பயங்கரங்கள் 
கண் முன்னே காணக் கிடைக்கின்றன...

இதற்கு மேல் என்ன செய்வது!?.. 

எல்லாருமாகக் கூடி 
இயன்ற அளவில் பூமிக்கு நல்லதைச் செய்வோம்...

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
*** 

ஞாயிறு, மே 21, 2017

வெற்றி வீரன்

பரந்தாமன்
பார்த்தனுக்கு அளித்த அருளுரை!..
-: Fb ல் வந்த செய்தி :-
***


மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், 
நிலை குலைந்து போகச் செய்யும் சூழ்நிலைகள்,
நயவஞ்சகங்கள், நம்பிக்கைத் துரோகங்கள்,
செய்யும் காரியத்தில் லாபங்கள்,
அதைப் போல நஷ்டங்கள்,
மாயப் புன்னகை வலை விரிப்புகள், எதிர்ப்புகள்,
உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகள்,
அன்பின் வரவுகள், இழப்புகள்,
சுகங்கள், துக்கங்கள்..

- இவையெல்லாம் 
மானிட வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்..


இவற்றையெல்லாம் -
மன உறுதியுடனும் துணிச்சலுடனும்
பொறுமையுடனும் நிதானத்துடனும்
எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ
அவனே - வீரன்!..

மிகச் சிறந்த வெற்றி வீரன்!..
***

பரந்தாமனின் அருளுரை 
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றது..


வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சானூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்..

ஓம் ஹரி ஓம்..
*** 

புதன், மே 17, 2017

நீ அங்கு சுகமா?..அடுத்தவர் விஷயத்துக்குள் தலையிடுவதே தவறு..

அதிலும் -
கடிதம் என்றால்!?..

பரவாயில்லை... நம்ம முருகேசன் தானே!..

1991... 

முருகேசனின் ஊர் தாமரைக் குளம்..
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள அழகான கிராமம்...

திருமணமாகி ஏழு மாதங்கள் தான்..
பாரம்பர்ய விவசாயம் மாடு கன்று - இவற்றை விட்டு விட்டு
இங்கே பாலை நிலத்தில் பாடுபடுவதற்கு என வந்து விட்டான்..

அப்போது அவன் மனைவி கனகவல்லி ஐந்து மாதம்...
பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளாகப் போகின்றது..
இன்னும் ஊருக்குப் போக முடியவில்லை...

அன்பு மனைவியின் நினைவை விட -
செல்ல மகளின் நினைவு பாடாகப்படுத்துகின்றது...

மகள் பிறந்த ஒரு வருடம் கழித்து அவளுடைய படம் தபாலில் வந்திருந்தது...

ஓ!.. - என்று அழுகை.. ஆற்றாமை.. அவனை அடக்கமுடியவில்லை யாராலும்..

காலம் மெல்ல நகர்ந்தது..

இந்நிலையில் -
இங்கிருந்து ஒரு கடிதம் ஊருக்குச் செல்கின்றது..

அது - இது தான்... படித்துப் பாருங்கள்...

அன்புள்ள கனகவல்லிக்கு,

எல்லாரும் நலமா.. பாப்பா நன்றாக நடக்கின்றாளா.. ஓடுகிறாளா..
அதெல்லாம் பார்த்து விளையாட கொடுத்து வைக்கவில்லை..
போட்டோ எடுத்து அனுப்பவும்.. நான் அனுப்பிய பார்சல் கிடைத்ததா?..

அம்மாவுக்கு வாங்கிய தைலம் இங்கேயே இருக்கு.. அடுத்த மாதம்
அனுப்புகிறேன்.. அப்பாவை கவனித்துக் கொள்ளவும்.. தங்கச்சிகிட்ட
கொஞ்சம் ராசியா இருந்துக்க.. வேற வீட்டுக்குப் போறவ...

நேரா நேரத்துக்கு சாப்பிடவும்.. இங்கே இன்னும் குளிர் முடியலை.. வெயில் வந்தா கஷ்டம் தான்.. என்னைப் பத்தி கவலைப்படாம நல்லபடியா இருக்கவும்..

உன் தம்பிக்கு இங்கே ஒரு வேலை பார்த்திருக்கேன்.. உடம்பு வளைஞ்சு செய்றதா இருந்தா சொல்லு.. ரெண்டு மூனு வருஷம் இருந்து பார்க்கட்டும்.. நான் இங்கே வந்து பொங்கலோட மூனு வருஷம் ஆகப் போவுது.. 

படுத்தா கண்ணு மூட முடியலை.. எப்பவும் உன் நெனைப்பு தான்..

முத்து மாரியம்மன் கோயிலுக்கு உண்டியல் பணம் கொடுக்கவும்..
ரெண்டு மாசமா சம்பளம் வரலை.. வந்துடும்..

எங்க அம்மா கோபப்படாம நடந்துக்க.. நான் மறுபடியும் எழுதுறேன்.. 
இப்போ இங்கே ராத்திரி மூனு மணி.. பொழுது விடியப்போகுது.. வேலைக்கு போகணும்..

பொங்கல் நல்லபடியா கொண்டாடுங்க.. சந்தோஷமா இருக்கவும்..
எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லவும்..

இது உனக்கு...

இப்படிக்கு,
முருகேசன்..
10.12.1991..இந்தக் கடிதம் அங்கே சென்று சேர்வதற்குள்
அங்கேயிருந்து ஒரு கடிதம் இங்கே வந்து கொண்டிருக்கின்றது...

முருகேசனின் மனைவி கனகவல்லி எழுதிய மடல்..
அந்தக் கடிதத்தையும் சற்றே காண்க!..

என்னங்க.. சௌக்கியமா இருக்கீங்களா..

நீங்க அனுப்புன பார்சல் கிடைத்தது.. பாப்பா கவுன் நல்லா இருக்கு..
உங்க அம்மாவுக்கு தைலம் அனுப்பலையா.. கோவமா இருக்காங்க..

நேரா நேரத்துக்கு சாப்புடுங்க.. ஏற்கனவே கறுப்பு.. அதனால வெயில்ல அலையாதீங்க.. எங்களப் பத்தி கவலைப்படாம நல்லபடியா வேலைய பாருங்க.. மாமா நல்லா இருக்காங்க.. கால் வலி தேவலாம்..

உங்க தங்கச்சிக்கு மூனு பவுன்ல வளையல் வேணுமாம்.. வாங்குறதா இருந்தா எனக்கும் ஒரு செட் சேர்த்து வாங்கவும்.. பின்னால பாப்பாவுக்கு உதவும்..

மூனு வருசம் ஆச்சு.. எப்போ வர்றீங்க.. நல்லபடியா நீங்க வந்ததும் முத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கணும்..

உங்க அம்மா களத்து மேட்டுக்கு கூப்புடுறாங்க..நான் மறுபடிக்கு எழுதுறேன்..
பொங்கல் வாழ்த்துகள்.. சந்தோஷமா இருக்கவும்..

அன்புடன்....

இப்படிக்கு,
கனகவல்லி..


1996...

இப்போதெல்லாம் -
முருகேசன் அதிகமாகக் கடிதம் எழுதுவதில்லை.. 
காரணம் வீட்டுக்கருகில் அஞ்சலகம் வந்து விட்டது..
அஞ்சலகத்தில் தொலைபேசி இருக்கின்றது...

அஞ்சலகத்தில் கனகவல்லி காத்திருக்க 
சரியான நேரத்திற்கு முருகேசன் பேசுகின்றான்..2001...

இப்போதெல்லாம் கனகவல்லி அதிகமாக
அஞ்சலகத்திற்குச் செல்வதில்லை...
காரணம் புது வீட்டில் தொலைபேசி வைத்தாயிற்று...

என்ன ஒரு இடைஞ்சல்... கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டும்!..
அடுத்த தெருவுக்கெல்லாம் கேட்கும்... அவ்வளவு தான்!..


மூன்றாவது வீட்டு அஞ்சலை அக்கா வந்து விடுவார்கள்..

தம்பி தான் பணம் அனுப்பி இருக்கிறதாமே!..
கை மாத்தாக ஐயாயிரம் ரூபாய் கொடு...
அடுத்த மாதம் திருப்பிக் கொடுத்து விடுகின்றேன்!..

- என்று.. கனகவல்லிக்கு தர்ம சங்கடமாக இருக்கும்...

அதற்கு சில ஆண்டுகளில் - இது வந்து சேர்ந்தது..


கையில் எடுத்துக்கொண்டு கிணற்றடியில் நின்று பேசிக்கொள்வதற்கு வசதியாயிற்று..

எல்லாவற்றையும் விட -
முருகேசனின் மகள் சுந்தரிக்கு மிகவும் பிடித்திருந்தது..

2005...

இப்போதெல்லாம் வீட்டுத் தொலைபேசி முடங்கிப் போயிற்று..
அதனை யாரும் உபயோகிப்பதில்லை....

என்ன காரணமாம்!?...

இதோ இது தான் காரணம்...


இதையும் ஓரங்கட்டுவதற்கு இது வந்து சேர்ந்தது...


கனகவல்லியிடம் இதைக் கொடுப்பதேயில்லை - சுந்தரி...

2010...

இப்போதெல்லாம் சுந்தரி-
அப்பாவுடன் உரையாடுவது இதில் தான்..
முகம் பார்த்துப் பேசும் வசதி இருக்கின்றது...


ஆனால், மேசை முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கின்றது..

நம் ஊர் மின்சாரம் திடீரென்று போய்த் தொலைந்து விட்டால்
வேறு கோளாறுகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன...

என்ன ஒரு பிரச்னை என்றால்.. 
அடிக்கடி இடைஞ்சலும் இடையூறும் கோடு கோடுகளாக அலைக்கழிக்கும்...

கூடவே செய்திகள் மற்றும் படங்களை அச்சிட்டுக் கொள்ளும் வசதியும் வந்தது..
இங்கேயிருந்து அங்கும்..
அங்கேயிருந்து இங்கும் - ஆனந்தம் அலை பாய்ந்த நாட்கள் அவை....

அதற்கடுத்த சில வருடங்களில் இது வந்து சேர்ந்தது..


அவ்வளவு தான்.. ஒரு பூனைக்குட்டி போல சுந்தரியுடன் ஒட்டிக்கொண்டது...

இது வந்த வேளை பழைய சமாச்சாரம் பரணிக்குப் போய்விட்டது.. 

2017...

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதே மறந்து போயிற்று..
தொலைபேசியருகில் காத்துக் கிடந்த நாளெல்லாம் கனவாய்ப் போயிற்று...

ஹலோ!.. கொஞ்சம் சத்தமா பேசுங்க!.. சே.. ஒரே தலைவலி இதோடு!.. 

இந்த வார்த்தையெல்லாம் எங்கே போயிற்று?..
- என்று யாருக்கும் தெரியவில்லை..

கிணுங்.. கிணுங்!..

கைக்குள்ளேயே இது.. இதற்குள்ளேயே கை!..


விரல் நுனியால் வருடினால் -
எதிர்முனையில் பேத்தி - புன்னகையுடன்..

இன்னும் பல் முளைக்கவில்லை.. 
அரவணைத்துக் கொண்டிருப்பவள் - கனகவல்லி..
பொன் வண்ணக் கண்ணாடி அணிந்தவளாக.. 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரைமுடிகள்..

கனகவல்லி கேட்கின்றாள் - முருகேசனிடம்...

ஏன்.. இன்னும் குளிக்கலையா?.. 
முதல்ல சவரம் பண்ணுங்க..
நரைச்ச முடி.. பார்க்க நல்லா இல்லை!...

ஏன்... கனகு!.. 
அப்போ எல்லாம் உங்க முகத்தைப் பார்த்தே மூனு வருசம் ஆச்சு..ன்னு அன்பு மடல் எழுதுவே!.. இப்போ.. அந்த முகம் நல்லாவே இல்லே..ன்னு சொல்றே!..

நான் அப்படியா சொன்னேன்!.. என் ராசா முகம் எனக்கு என்னைக்கும் அழகு தான் பேரழகு தான்!.. நல்லா ஸ்மார்ட்டா இருங்க..ன்னு சொன்னேன்!..

ஏன்!.. இன்னொரு கல்யாணமா?..

ஆசை தான்!.. கிழவனுக்கு!.. - சிரிக்கின்றாள் கனகவல்லி...

ஏதும் புரியாமல் புன்னகைப் பூ ஆகின்றாள் - பேத்தி..
***


இன்று மே 17
உலகத் தொலைத் தொடர்பு மற்றும் 
தகவல் தொடர்பு தினம்

நாளுக்கு நாள் அறிவியல் தொழில் நுட்பம் 
முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் -
இதனுள் நன்மைகளும் தீமைகளும் விரவியே கிடக்கின்றன...


நல்லனவற்றை அள்ளிக்கொள்ளவும் 
அல்லாதனவற்றைப் புறந்தள்ளவும்
இன்றைய சமுதாயம் முன்நிற்கவேண்டும்..

உள்ளங்கைக்குள் உலகம் என்றானது...
அதனை ஆக்கித் தந்தது அறிவியல் தொலை நுட்பம்..

இதனை நல்வழியில் கொண்டு நடப்பது 
நம் ஒவ்வொருவருடைய கடமை..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
*** 

செவ்வாய், மே 16, 2017

அருள் மழையில் மக்கள்

சுந்தரராஜன்..

அது தான் அவனுடைய பெயர்... திருப்பெயர்!..

ஆனாலும்,
அந்தப் பெயர் கொண்டு அவனை அறிந்திருப்போர் வெகு சிலரே!..

அழகன்.. அழகர்!..

கள்ளழகர்!..

இப்படிச் சொன்னால் கருவில் இருக்கும்
உயிர் கூட - உவகை கொண்டு கை கூப்புகின்றது!...


அவன் ஒருவன் தானே -
வழி நடையாய் வாஞ்சையுடன் நடந்து வருபவன்!..
வாட்டம் தீர்ந்து வாழ்க!.. - என, வாழ்வு தருபவன்!..

ஏறத்தாழ 25 கி.மீ தொலைவு..

அழகர் மலைக்கும் மதுரைக்கும்!..

அங்கேயிருந்து இங்கே வந்து விட்டு திரும்பிச் செல்வதென்றால் 50 கி.மீ..

ஆனந்தக் கும்மாளத்துடன் அழகர் வருகின்ற அழகுதான் என்ன!..
மக்களிடம் விடைபெற்றுச் செல்கின்ற போது நடையில் தளர்வு தான் என்ன!..

மக்கள் வெள்ளத்தில் நீந்திக் களிப்பதற்கென ஓடி வரும் கள்ளழகர் -
தன்னைக் காணும் மக்களின் கவலைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கின்றார்...

மக்களுக்கு ஆசை - கள்ளழகர் இங்கேயே இருந்து விடக்கூடாதா!..

அழகனுக்கும் ஆசை தான் - இந்த மக்களுடனேயே இருந்து விடலாகாதா!..

ஆனாலும் - இந்த இரண்டுக்கும் இடையில் எத்தனை எத்தனையோ விஷயங்கள்!...

கடந்த 8/5 அன்று திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் -
10/5 அன்று அதிகாலையில் வைகையில் இறங்கினார்..

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆனந்த மயமாகின.. -

வேண்டுவார் வேண்டுவதே வழங்கிய வண்ணம்
விருப்புற்றோர் தம்முடைய அன்பு மழையில் நனைந்தார்...

காலமும் நேரமும் செல்லச் செல்ல
கள்ளழகர் மலைக்குத் திரும்ப வேண்டிய நாளும் வந்தது..

கடந்த 13/5 அன்று அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட்ட அழகர் -
14/5 அன்று முற்பகல் 11.30 மணியளவில் பதினெட்டாம்படி கருப்பசாமி வாசலை அடைந்தார்..

அங்கே கோலாகலமாக வரவேற்பு வழங்கப்பட்டது..

பெண்கள் குலவையிட்ட வண்ணம் பதினெட்டு பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்...

நேற்று (15/5) காலை சம்பிரதாய பூஜைகளுடன் உற்சவ சாந்தி நிகழ்ந்தது...

இனி அழகர் எப்போது வருவார்?.. - என,
இப்போதே நாட்களை எண்ணத் தொடங்கி விட்டனர் மக்கள்...

கடந்த ஏப்ரல் மாதம் (28/4) மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருக்கொடியேற்றம் ஆனதிலிருந்து மக்கள் மனமெல்லாம் பரவசம்..

வீட்டுக்கு வீடு திருவிழாவின் உற்சாகம்...

எந்த ஒரு பேதமும் இல்லாமல் எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்..

நாம் நேரில் பார்க்கக் கூடவில்லையே தவிர -
அவற்றுக்கெல்லாம் கண்கண்ட சாட்சிகளாக இதோ இந்தப் படங்கள்!...

தேனூர் கிராமத்தின் வைகைக் கரையில் நடந்து கொண்டிருந்த திருவிழாவை மதுரை மாநகரில் நிகழும்படிக்கு மாற்றியமைத்தவர் -மன்னர் திருமலை நாயக்கர்..
அத்துடன் மாசியில் நிகழ்ந்த மீனாட்சி வைபவத்தை சித்திரைக்கு மாற்றி அதனுடன் அழகர் திருவிழாவினையும் இணைத்தவர் திருமலை நாயக்கர்..

அந்த வகையில் -
இப்படியொரு பெருவிழாவினை நமக்கு வழங்கிய 
மன்னர் திருமலை நாயக்கர் அவர்களுக்கு நன்றி கூறுதற்குக் 
கடமைப்பட்டிருக்கின்றது - தமிழ் கூறும் நல்லுலகு!..அழகிய படங்களை வழங்கிய 
குணா அமுதன், ஸ்டாலின், அருண் மற்றும்
அனைத்து நண்பர்களுக்கும்
மீண்டும் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்..


மாநகரை ஆளுகின்ற மீனாளின் திருவிழா என்று சொல்வதா!..
மாமலையிலிருந்து வரும் மாலவனின் திருவிழா என்று சொல்வதா!..

மண்ணும் விண்ணும் புகழும்படிக்கு நடந்தது
மக்களின் திருவிழா என்பதே உண்மை!..

நாட்களை எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்தாலும்
என்றும் தேயாதது இதயத்தில் கொண்ட அன்பு!..

இதோ - அடுத்த சித்திரைக்கு
வெகு சில நாட்களே!..

கள்ளழகர் திருவடிகள் போற்றி..
மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***