நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஐயப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 07, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 22
சனிக்கிழமை


ஐயப்பனை மனதில் கொண்டு மாலை அணிந்து கொள்கின்ற பக்தனும் ஐயப்பன் என்று அழைக்கப்படுவதே ஐயப்ப விரதத்தின் சிறப்பு..

ஐயப்ப விரதத்தின் நெறிமுறைகள் மிகக் கடுமையானவை.. 

ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க,

மற்றவர் விவாதிக்கவேண்டிய அவசியமில்லை

விவாதங்களுக்கு அப்பாற்பட்டது - சபரி மலை..

விவாதங்களை விடுத்து  - எனது குருசாமிகள் எனக்குப் பயிற்றுவித்த - பூஜை முறைகளை மட்டும் ஓரளவுக்கு (நானறிந்தவரை) ப்பதிவில் காண்போம்..

சபரிமலைக்கு விரதம் ஏற்பவர்கள் ஒரு மண்டல காலம் (கேரளக் கணக்கில் நாற்பத்தொரு நாட்கள் நமது கணக்கில் நாற்பத்தெட்டு நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்..

நாற்பத்தொரு நாட்கள் அல்லது 

நாற்பத்தெட்டு நாட்கள் - விரதம் இல்லையெனில் இருமுடி கட்டுவதற்கு மறுக்கப்பட்ட காலமும் இருந்திருக்கின்றது..

கருப்பு, நீலம், பச்சை, காவி  போன்றவற்றில் ஏதாவது ஒன்று என்றாலும் கருப்பு அல்லது நீல நிற உடைகளே ஏற்றவை .. 

கருப்பு வேஷ்டியும்  துண்டும் உடுத்து வெள்ளை அல்லது சந்தன மஞ்சள் நிறங்களில் சட்டை அணியலாம்.. 

கரிய நிறத்தில் மேல் சட்டை அவசியமில்லை..

கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது எனில் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை..

கார்த்திகை முதல் நாளை விட்டு விட்டால் நாள் நட்சத்திரம் அவசியம் பார்க்க வேண்டும்..

பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக மாலை அணிந்து கொள்பவர் கன்னிச் சாமி எனப்படுவார்..

சூரிய உதயத்திற்கு முன்பாக  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி -  நூற்றெட்டு சரணம் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும். இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி நூற்றெட்டு சரணத்துடன் ஐயப்பனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.. 

கன்னிச்சாமி தனியே பூஜை செய்வதற்கு அனுமதி இல்லை..

தனியாக பூஜை அறை இல்லையெனில் பெரியவர்களைக் கலந்து பேசி வீட்டின் தனியிடத்தில் நித்ய வழிபாட்டினைச் செய்தல் வேண்டும்..

பூஜையில் வைப்பதற்கு ஐயப்பனின் சித்திரமே ஏற்றது.. சுதை அல்லது பஞ்சலோக வடிவங்கள் எனில் குருசாமிகளின் அனுமதியும்  மூன்று முறைக்கு மேல் மலைக்குச் சென்று வந்தவர்களது வழிகாட்டுதலும் அவசியம்..

வீட்டில் பூஜைக்கு என - தனியறையோ தனி மாடமோ இருந்தால் மட்டுமே  - பட்ட பந்தனத்துடன் சின்முத்திரை காட்டிய வண்ணம் யோக பீடத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கின்ற சித்திரத்தை வைத்துக் கொள்ளலாம்..

அப்படியான  சூழல் இல்லை எனில் மணிகண்டப் பிரபு  புலியின் மீது  வருகின்ற திருக்கோலத்தினைசித்திரமாக வைப்பது சாலச் சிறந்தது....

தனிப்பட்ட மடங்கள் கோயில்கள் எனில் பதினெட்டுப் படிகளையே விரத காலத்தில் வைத்துக் கொள்ளலாம்..

சமீப காலமாக கிராமங்களில் ஐயனார் கோயில்களில் பதினெட்டுப் படிகளுடன் சுதை சிறபங்களை மக்களுக்காக வடிவமைக்கின்றனர்..

வழிபாட்டிற்கென தனி இடத்தைக் கூட ஒதுக்க இயலாத  - 

சூழ்நிலையில் அருகிலுள்ள கோயில் சந்நிதியில்  நூற்றெட்டு சரணங்களைச் சொல்லி வணங்கலாம்..

முதல் முறையாக மாலை அணிந்திருக்கின்ற கன்னிமார்கள் தனியாக வணங்குவதை விடுத்து கூட்டாக வழிபடுவதே சிறப்பு..

முறையாகச் செய்வதென்றால் மூன்று வேளையுமே பூஜைக்கு உகந்தவை.. 

மூன்று வேளையுமே பூஜை செய்வது உத்தமம்..

காலை மாலை வேளையில் சிறு நிவேதனஙகளுடனும் மதியத்தில் சுத்த அன்னத்துடன் சத்தி பூஜையும் செய்வது ம் குருசாமிகள் பலரது வழக்கம்..

சத்தி பூஜை எனப்படுவது - 

மதிய வேளையில் ஐயப்ப மாலை அணிந்தவர் யாராவது ஒருவரை வீட்டிற்கு அழைத்து அவருக்கு அன்னமிடுதல்..

இத்தகு நிலையில் நித்ய வழிபாட்டில் நமக்கேற்ற எளிய முறைகள் பற்றி சிந்திப்போம்..

வழிபாட்டில் எப்போதும் நறுமணம் மிக்க மலர்களைச் சூட்ட வேண்டும்..

நமது பொருளாதார த்திற்கு ஏற்ப - இதமாகக் காய்ச்சப்பட்ட பால், அவல் சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது பழங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.. 

இத்துடன் தாம்பூலம் அதாவது வெற்றிலை பாக்கு அல்லது சீவல் வைக்க வேண்டும்... 

எக்காரணம் கொண்டும் பாக்குப் பொட்டலங்களை வைக்கக் கூடாது..

விளக்குகளுக்கு சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. 

தீப எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய் என்பது மாதிரியான எவையும் கூடவே கூடாது..

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியும் ஏனைய பரிவார மூர்த்திகளும்  நமது பூஜையில் எழுந்தருளி இருப்பதாக மனதார பாவித்து  ஸ்ரீ கணபதியையும் முருகப் பெருமானையும் வணங்கி ஐயப்பனை நூற்றெட்டு சரணங்களால் துதிக்க வேண்டும்.. 

இயன்றால் நூற்றெட்டு முறை மலர்களைத் தூவியும் வணங்கலாம்..

தூப தீப கற்பூர ஆரத்தியுடன் மங்கலம் பாடி நிறைவு செய்ய வேண்டும்..

கற்பூர ஆரத்தியுடன் மங்கலம் பாடி நிறைவு செய்தல் என்பது இடத்திற்கு இடம் வேறுபடும்...

ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கன்னி ஐயப்பமார்களை அழைத்து அவர்களை வழிபடுதல், சத்தி பூஜை, படி பூஜை, விளக்கு பூஜை, ஆழி பூஜை என -  பல படிநிலைகள் இருக்கின்றன....

இங்கே அவற்றை விவரித்தல் இயலாது.. குருசாமிகளை அணுகி தெரிந்து கொள்ளவும்...

மாலையணிந்து மூன்று வாரங்கள் கழிந்த நிலையில்  ஏனைய ஐயப்பன்மார்கள் சிலருக்காவது மதியத்திலோ மாலைப் பொழுதிலோ உணவு அளித்தல் வேண்டும்...

ஐயப்ப பூஜை, சத்தி பூஜை, அன்னதானம் இவற்றுக்கு என்று எவரிடத்தும் கடன் வாங்கக் கூடாது.. 

கையில் இருக்கின்ற பணத்தைக் கொண்டு எளிமையான முறையில் செய்வதே ஐயப்பனுக்கு மகிழ்ச்சி..

இப்படியாக வழிபாடுகளை  விரத நாட்களில் மேற்கொண்டு ஐயன் அருளால் இருமுடி கட்டுதற்கு ஆயத்தமாக வேண்டும்..

எல்லாவற்றிற்கும் அருகிலுள்ள குருசாமிகளின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்..

1989 ல் நான் கற்றுக் கொண்டவைகளில் ஒரு சிலவற்றைத் -

தெரிந்த வரையில் இங்கே பணிவுடன் சொல்லி இருக்கின்றேன்..

 ஃஃ

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் சிவாய நம ஓம்
***

சனி, நவம்பர் 30, 2024

சரணம் சரணம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை15
சனிக்கிழமை


முழுப் பரிசோதனையாகவே இருக்கட்டும் என்று கடந்த (21/11) வாரம் தஞ்சை அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்றோம்... 

சோதனைகளின் நிறைவில் கண்ணில் புரை ஏற்பாட்டுள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரே கண்ணாடி  அணிவது பலன்  தரும் என்றும் சொல்லி விட்டார்கள்..

அறுவைச் சிகிச்சையில் எனக்கு விருப்பம் இல்லை..

குருவின் மகனுக்குக் கண்ணொளி வழங்கிய வரப்ரசாதம் ஸ்ரீ ஐயப்ப சரிதத்தில் உள்ளதாகும்..

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியில் நின்று -  எனது கண் பிரச்னைகள் தீரட்டும் -  என்று அடியேனும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

வேண்டுதலைச் சொல்லி யாசித்த நிலையில் இந்தப் பதிவினை ஒழுங்கு செய்தது புதன் கிழமை.. 

வியாழக்கிழமை (28/11) அன்று 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
மூலிகைப் பண்ணை உயர்நிலை மருத்துவரிடம் கண் பரிசோதனை அறிக்கையைக் காட்டியபோது, - இது சாதாரணம்.. Reading Glass அணிந்து கொள்ளலாம்.. கவலை வேண்டாம்..  -  என்று ஆறுதலாகச் 
சொல்லி விட்டார்..

எல்லாரும் நலம் பெறுவதற்குப் பிரார்த்தனைகள்..
ஃஃஃ


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

போற்றிய சரணம் கேட்டுளம் மகிழ்ந்தே
காத்தருள் புரிவாய் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சாஸ்தா உந்தன் திருவடிக்கே..

ஏற்றிய தீபம் இருள் வினை தீர்த்து
பொன்னொளி காட்டும் அருள் வழிக்கே..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

வெந்துயர் தீர்க்கும் விழிகள் இரண்டும்
என்துயர் தன்னைத் தீர்க்காதோ..

சந்ததம் காக்கும் அருட்கரம் தானும்  
தண்ணருள் தன்னைச் சேர்க்காதோ..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

வீற்றிருக்கும் திரு மலை தன்னை
விளிப்பவர் தமக்கு அருள்வாயே ..

கூற்றிருக்கும் கொடுவினையை நீக்கி 
குளிர் நலம் என்றும் புரிவாயே..
 
புகலிடம் அறியேன் ஐயப்பா
போற்றித் தொழுதேன்  ஐயப்பா..

புலி வாகனனே ஐயப்பா 
புதுநலம் அருள்வாய் ஐயப்பா

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

கனவிலும் உன்னை மறவாத 
வரந்தனை எனக்கு  அருள்வாயே
கசிந்திடும் மனதில் இசையாக
காலந்தோறும் திகழ்வாயே..

போற்றிடும் மொழியும் புண்ணியம் ஆக
 புதுநலம் அருள்வாய் ஐயப்பா..
நாற்றிசை நாயக நல்மணி கண்டா..
நன்மைகள் தருவாய் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

பந்தளச் செல்வா  ஐயப்பா
பதமலர் பணிந்தேன் ஐயப்பா
வெந்துயர் தீர்ப்பாய் ஐயப்பா
வேதனை தீர்ப்பாய் ஐயப்பா..

வந்துனைக் காண ஐயப்பா
வரங்கள் வழங்கிடும் ஐயப்பா
சந்தனத்திருவடி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

புகலிடம் நீயே புண்ணியம் நீயே 
புன்மை தவிர்ப்பாய் ஐயப்பா
பூத நாதனே  வேத நாதனே 
காத்தருள் புரிவாய் ஐயப்பா 

ஆயிரமாயிரம் அடியார் நடுவே  
அறிவாய் அடியனை ஐயப்பா 
தாயென வருவாய் ஐயப்பா  
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா
 
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, நவம்பர் 23, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 8
முதல் சனிக்கிழமை 

ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம்


லோக வீரம் மஹாபூஜ்யம் 
ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா நந்தம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் .1

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் 
விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 2

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

மத்த மாதங்க கமநம் 
காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் 
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 3

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அஸ்மத் குலேஸ்வரம் தேவம் 
அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.. 4

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ 
நித்யம் சுத்த படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் 
சாஸ்தா வஸதி மாநஸே..  5

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ சாஸ்தா தியான ஸ்லோகம்

பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ  நம:
              
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா..


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சங்கர மைந்தன் திருவடிக்கே..

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

இன்று 
கார்த்திகையின் தேய்பிறை அஷ்டமி


க்ஷேத்ர பாலகர் என விளங்கும்
ஸ்ரீ வைரவ மூர்த்தி தோன்றிய நாள்..

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி, வழுவூர்..

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.. 4/73/6
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரி ஓம் 
ஓம்  சிவாய நம ஓம்
***

சனி, டிசம்பர் 10, 2022

சாமி சரணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 24
 சனிக்கிழமை


இன்றொரு காணொளி.

திரு.G.தேவராஜன் அவர்களது இசையில் வயலார் ராமவர்மா இயற்றிய பாடல்..  
பாடியிருப்பவர் திரு K.J. ஜேசுதாஸ் அவர்கள்..
திரைப்படத்தின் பெயர் அறியமுடியவில்லை..

சகோதரி 
கீதாரங்கன் அவர்கள்  இதுபற்றி மேல் விவரங்கள் அறிந்திருந்தால் வழங்கலாம்..


இன்று அதிகாலை புயல் கரையைக் கடந்துள்ளது.. 

இதனால் சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் கனத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது.. 

இதுவும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்றுதான் எனினும் இதனால் துயருற்றிருக்கும் ஏழை எளிய மக்களுக்காகவும் சிற்றுயிர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்..

ஐயப்பன் அருளால் 
அனைவருடைய 
குறைகளும் குற்றங்களும் தீரட்டும்.
எங்கும் நலமே நிறையட்டும்.

ஓம்
சாமியே சரணம் ஐயப்பா
***

வியாழன், டிசம்பர் 08, 2022

நீயே துணை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 22
 வியாழக்கிழமை


இன்றொரு காணொளி
மனதை உருக்குகின்றது


ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***

சனி, டிசம்பர் 03, 2022

வழிநடை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 17
சனிக்கிழமை


கரிவலந்தோட்டில்
சிறிது ஓய்வுக்குப் பின் இதோ கரிமலையில் பயணம் தொடங்குகின்றது..

கரிமலை:
யானைகளின் சரணாலயம்  கரிமலை. கரிமலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கணபதி கல்லை வணங்கிக் கொள்வர். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதி..



அடிவாரத்திலேயே வன மஹாகாளியின் சாந்நித்யம்..

இங்கே தியானம் செய்பவர்களுக்கு வராஹி தரிசனம் கிடைக்கும்..

நெடிதுயர்ந்து நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின்விரத பலத்தை சோதிப்பது  கரிமலை.. 

அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக் கொணரும் இடமாகவும் இதைக் கருதுவர்.. 



மலையில் மழை


இது சத்திய பீடம். ஆதலால் அனாவசியமான பேச்சு வார்த்தையைத் தவிர்க்க வேண்டும். 

கரிமலையில் வைத்துச் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும் சத்தியமாகும்.. இங்கே குருசாமிகளை வணங்கி அவர்களது ஆசிகளைப்  பெறுதல் நலம்..

கரிமலை நாதனை வணங்கி அங்கிருக்கும் நாழிக் கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி விட்டு கரிமலையில் இருந்து இறங்க வேண்டும்.

கரிமலையின் ஏற்றமும் இறக்கமும் அதுவரை மனம் திறந்து சரணம் சொல்லாதவரையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை உடையவை.

முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி வருபவரிடம் பகவான் ஏதாவதொரு ரூபத்தில் வந்து துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.. அனுபவம். 

சிறியான வட்டம், வலியான வட்டம் – பம்பை:
பம்பை என்று இன்றைக்குச் 
சொல்லப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல.. 

வண்டி வாகனங்கள்  பெருகியதும் பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப் பகுதி..

முந்தைய காலத்தில் வலியான வட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை எனப்பட்டது..

கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பசாமியின் சாந்நித்யம். இங்கே கருப்பசாமியை அழைத்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.



கரிமலையின் அடிவாரம் தான்  வலியானைவட்டம். இவ்விடத்தில் பம்பை தேவகங்கைக்கு சமமானது.
பகவானின் காலடி பட்ட இந்த புண்ணிய பூமிக்கு நிகராக  வேறொன்றும் இல்லை என்பதே உண்மை..

ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் வருகைக்காக  ரிஷிகள் தவமிருந்த இடம். இன்றும்  மகான்களும், ஞானிகளும் கண்ணுக்குப் புலப்படாமல் தவம் செய்கின்ற இடம் தான்  வலியான வட்டம். 

இதனால் தான்  குருமார்கள் பலரும் இங்கே தங்கி பூஜை ஹோமங்கள், அன்னதானம், பம்பா சத்தி, பம்பா விளக்கு என, அனைத்தையும்  செய்கின்றார்கள்..
 
இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பன் ஏதாவதொரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கே செய்யப்படும் அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இங்கே தங்குமிடத்துக்கு (விரி) யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்வர்..  

முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது..

பம்பா நதி
இங்கே பம்பையில் தீர்த்தமாடி குருவுக்கு தட்சணை தந்து வணங்கி கட்டெடுத்துக் கொண்டு யாத்திரையை தொடர வேண்டும்.  

நீலிமலை
பம்பையைக் கடந்தவுடன் முதல் மலையாகிய நீலிமலையில் நடந்து அப்பாச்சி மேடு எனும் இடத்தில் பூத கணங்களுக்காக மாவு உருண்டைகளையும் பொரி உருண்டைகளையும் வீசி விட்டு நடந்தால் சரங்குத்தி ஆலமரம்..

மணிகண்டன் தனது ஆயுதங்களை இங்கே களைந்ததாக ஐதீகம்.

எரிமேலியில் பெறப்பட்ட சரக்கோலை இங்கே விட்டு விடுவது சம்பிரதாயம்,

அங்கிருந்து எதிரில் நோக்கினால் சந்நிதான தரிசனம்..

சரங்குத்தி ஆலமரத்தில் சரத்தினைக் குத்தி விட்டு, விரதத்தின் குற்றம் குறைகளை  மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்..

சரங்குத்திக்கு எதிரில்
சபரி மூதாட்டி வாழ்ந்த இடமாகிய சபரி பீடம்..

இங்கே கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு நடந்தால் சிறிது தூரத்தில் சந்நிதானம். 

சந்நிதானத்தை நெருங்குகையில் பக்தி மேலிட்டு அடியார் கண்களில் நீர் வழியும்..

இதோ - ஐயன் ஐயப்ப ஸ்வாமியின் சத்யமான
பொற்படிகள்..
பக்தர்கள் உணர்வு பூர்வமாக
பதினெட்டாம் படிகளை நெருங்குவர்.. 

சந்நிதானம் மேல்புறம்
கடுத்த சாமியையும் கருப்ப சாமியையும் வணங்கி உத்தரவு பெற்று, 

படித்தேங்காய் உடைத்து சத்யமான  படிகளைத் தொட்டு வணங்கி ஏறுதல் வேண்டும்..


ஓம்
பூதாதிபாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

சந்நிதானத்தில் பகவானைத் தரிசனம் செய்து வணங்கி வலம் வருதல் வேண்டும்..

நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மாளிகைப் புரத்து அம்மனையும் மணி மண்டபத்தில் நவக்ரகங்களையும் நாகர்களையும் தரிசனம் செய்தல் வேண்டும்..

கற்பூர ஆழி

அபிஷேக நெய் பிரசாதம் பெற்று கொண்ட பின்னர் நெய் நிறைத்திருந்த தேங்காயை சரணகோஷத்துடன் கற்பூர ஆழியினுள் இடுதல் வேண்டும்..

சங்கராந்தியன்று மாலைப் பொழுதில் பந்தளத்தில் இருந்து தலைச்சுமையாகக் கொண்டு வரப்படும் ஆபரணங்கள் ஐயனுக்கு அணிவிக்கப்படும்...

அந்திப்பொழுதில்
மலை உச்சியில் ஜோதி தரிசனம் ஆகும்..


தரிசனம் கண்டபின்
குருவுக்கு காணிக்கை கொடுத்து அவர் கையால்  பிரசாதம் பெற்றுக் கொண்டு  இருமுடியைச் சுமந்தபடி கீழ் இறங்க வேண்டும்..

சந்நிதானத்தில் இருந்து புறப்படும் போது மனதிற்குள் எழும் கேள்வி -

ஐயப்பா!.. உன்னை மறுபடியும் எப்போது காண்பது?..

முத்திரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியில் கழற்றலாகாது. பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து,  குருசாமியை மனதார வணங்கி மாலையைக்  கழற்றி விட்டு பிரசாதங்களை தானும் தரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும்..

எனது குருசாமி சொல்லக் கேட்டது - முன்பெல்லாம் ஊரின் எல்லையில் இருந்து கொண்டு ஊருக்குள் தகவல் அனுப்புவார்களாம்.. வீடுகளில் தீண்டல் குற்றம் குறைகளை நீக்கி விட்டு மேள தாளத்துடன் ஊருக்குள் அழைத்துச் செல்வார்களாம்..

யாத்திரை விரதத்தில்  கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம். இதற்கான சடங்கு சம்ப்ரதாயங்களை
வகுத்துத் தந்தவர்
ஸ்ரீ அகத்திய மகரிஷி
என்பது வழிவழியான
நம்பிக்கை.. 

எனது குருசாமிகளிடம் இருந்து கற்றதையும் கேட்டதையும் மனதில் கொண்டு

இரண்டு வருடம் பெரிய பாதையிலும் இரண்டு முறை குமுளி - புல்மேட்டுப் பாதையிலும் 

பலமுறை எருமேலி, நிலக்கல் - பம்பை வழியிலும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்திருக்கின்றேன்.. 

இதையெல்லாம் மனதில் கொண்டும் 

மேலும், 
இன்றைய இணைய தளங்களில் பெரிய பாதை பற்றிய
கூடுதல் தகவல்களை இயன்றவரை தேடித் தொகுத்தும் 
படங்களை இணைத்தும் 

இந்தப் பதிவினை வழங்கியுள்ளேன்..

தகவல்களையும் படங்களையும் இணையத்தில் வைத்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஐயப்பன் பிழைகளைப் பொறுத்து அருள்வானாக!..

ஐயன் அருளுண்டு
என்றும் பயமில்லை
ஐயா சரணம் ஐயா..
ஐந்து மலைகளில் அமர்ந்தவனே எங்கள்
ஆதியே சரணம் ஐயா..

ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...
***

வியாழன், டிசம்பர் 01, 2022

வழி நடை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 15
வியாழக்கிழமை


இருமுடியைத் தலையில் தாங்கியடி - சாமியே சரணம் ஐயப்பா!.. என்று உயிரின் ஆழத்தில் இருந்து குரல் எழுப்பிக் கொண்டு சபரி மலையை நோக்கி நடப்பதற்கு
பெரும்பாலான  பக்தர்களின் முதல் தேர்வு பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியே.. 

வண்டிப் பெரியாறு வழி, மற்றும் சாலக்காயம் வழி - என வேறு இரண்டு வழித்தடங்கள் இருந்தாலும்

இந்த வனத்தின் வழியாகத் தான் ஐயப்பனாகிய மணிகண்டன் நடந்து சென்றான்.. எனவே இவ்வழியே செல்வது தான் யாத்திரை - என்று பலரும் கூறுவர்..

பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறுவது மட்டுமே கணக்கில் சொல்லப்பட்ட காலமும் இருந்திருக்கின்றது.. 

மணிகண்டன் தனது அவதார காலத்தில் பரிவார கணங்களுடன்  தங்கிச் சென்ற பாதை இது. ஆதலால், பெரிய பாதையில் மிக்க மகத்துவம் உண்டு. 

அந்த நாட்களில்  பெரிய பாதையின்  முக்கியமான இடங்களில் இருமுடிகளை இறக்கி வைத்து, அங்கு சாந்நித்யமாகியுள்ள தேவதைகளுக்கும்
பூத கணங்களுக்கும் பூஜைகள் நடத்திய பிறகு புறப்படுவது வழக்கமாம்.. 

இப்போதும் அந்த பூஜை நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன..

வனத்தினுள் ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை எனப்படுகிறது. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு தேவதை  காவல்  பொறுப்பில் இருக்கிறது. 

இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும் என்பது.. 

தேவதைகளின் காவலை மீறிச் சென்றால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே அன்றைய குருசாமிகள் இரவு நேரத்தில் மலை ஏறுவதை  அனுமதிப்பதில்லை. இப்போதும் இரவில் பயணம் செய்வது தகாது..

எருமேலியில் இருந்து சந்நிதானம் வரையான வன வழி 48 கி.மீ என்று சொல்கின்றனர்..

1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6. கல்லிடுங்குன்னு
7. இஞ்சிப்பாற – உடும்பாறக் கோட்டை
8. முக்குழி
9. கரிவலந்தோடு
10. கரிமலை
11. வலியான வட்டம்
12. சிறியான வட்டம்
13. பம்பா நதி
14. நீலிமலை
15. அப்பாச்சி மேடு
16. சரங்குத்தி
17. சபரி பீடம்
18. சந்நிதானம்

எருமேலி:

எருமேலி ஸ்ரீ சாஸ்தா கோயில்
அத்தனை பக்தர்களும் கூடும் இடம். முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்குவர். ஐயப்பன் வனம் புகுந்ததை நினைவு படுத்தும் விதமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது..

அம்பலப்புழா சங்கம்  ஆலங்காட்டுச் சங்கம் ஆகியன எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும்  முக்கிய குழுக்கள்..

ஸ்வாமியின் வாள்
மணிகண்டன் பயன்படுத்திய வாள் எருமேலியில் புத்தன் வீடு எனும் இடத்தில் இன்றும் உள்ளது.. 

எருமேலியின் மேற்கு பகுதியில் கிராத (வேடுவ) சாஸ்தா  விளங்குகின்றார்..  கிராத சாஸ்தாவை தியானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்குவர்..

அதன் பின்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தட்சணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

பூங்காவனம் எனப்படும் கானகத்தினுள் நுழையும் 
முன்பு வாபரனை வணங்கி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.. 

வாபரன் என்பவர்  மணிகண்டனுடன் கயிலாய மலையில் இருந்து வந்த சிவகணம்.. 

எருமேலியில்
இருந்த பழமையான வாபரன் கோட்டம் இப்போது இல்லை..
ஏதோ ஒரு கலவரத்தி ன் போது தகர்க்கப்பட்டு விட்டதாக சொல்கின்றார்கள்..  எனவே கோட்டைப் படியில் - பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே -
மஹா கணபதியையும் சிவ கணமாகிய வாபரனையும் -  மானசீகமாக வணங்கிக் கொண்டு வனத்துக்குள் செல்ல வேண்டும்..

பேரூர் தோடு:
பேரூர் வாய்க்கால். பெரியபாதையின் முதல் தாவளம் – தங்குமிடமும் இதுதான். 


இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

அந்தக் காலத்தில் இங்கே வெளிச்சப்பாடு எனும் அருளாடிகளின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரிய பாதைக்குள் நுழைய முடியும்.. அதெல்லாம
இப்போது இல்லை.. 

வெளிச்சப்பாடு விபூதி ப்ரசாதம் தந்தால் தான் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அதுவன்றி அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டு விட்டால் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டியது தான். 

யாத்திரைக்கு அனுமதியில்லாதவர்கள் - அனுமதி பெற்றுக் கொண்ட ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடை பெற்றுக் கொள்ள வேண்டும் - என்பது தான் அப்போதைய நடைமுறை..

ஐயனின் ஆணைப்படி,
இப்படியான விரத மகிமைக்குக் கட்டுப்பட்டுத் தான்-
பூத கணங்களும், வன தேவதைகளும், துஷ்ட மிருகங்களும் –  பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

காளை கட்டி:
காளைகட்டி ஆஸ்ரமம் என்று பெயர். பலரும் சிவபெருமான் காளையைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவர். ஆனால் அதுவல்ல உண்மை..

காளைகட்டி ஸ்ரீ சிவன்
இந்த இடத்தில் சிவ ஆலயம் உள்ளது. இவ்விடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேஸ்வரன்.  சாஸ்தாவின் கணங்களில் இவரும் ஒருவர்..

எனவே நந்தியம்பெருமானை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

அழுதை நதியும் மலையும்:
அலஸா என்ற நதியே இன்றைய அழுதை நதி.


பம்பையின் கிளை நதியான அழுதையில் குளித்து விட்டு அழுதை மலையைக் கடக்க வேண்டும்.

அழுதையில் மூழ்கும் போது சிறுகல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்..

அழுதையில் குளித்து விட்டு இருமுடியை தலையில் ஏற்கும் முன்பு குருநாதரை வணங்கி தட்சணை கொடுத்து வணங்கிக் கொள்வார்கள். 

கல்லிடுங்குன்னு:
கல்லை இடும் குன்று.. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான்..

அழுதை மலை ஏறி  மேட்டுப் பகுதியில் கல்லை இட வேண்டும். 

கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் இவ்விடத்தில் தான் மணிகண்டன் -
மகிஷியை பூமிக்குள் அழுத்தியதாக ஐதீகம்..

உடும்பாற - இஞ்சிப்பாற கோட்டை:
அழுதை மேட்டைக்  கடந்தால் உடும்பாறைக்கோட்டை .. 

இங்கு சிலர் இரவில் தங்குவது உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் சாந்நித்யம் நிலை பெற்றிருப்பதை நன்றாகவே உணர்ந்து கொள்ளமுடியும்..

பூத கணங்கள் சூழ  வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு அவர் திகழ்கின்றார். 

இரவில் பூதத்தானின் சங்கிலிச் சத்தம் கேட்கும். 

பூதநாதரை வணங்கி பானகம் நிவேத்யம் செய்து அனுமதி பெறுவது வழக்கம்.

சற்றே அருகில்  இஞ்சிப் பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பவள் தேவி. 

முக்குழி:
அழுதாமலை இறக்கம் - அடிவாரம் தான் முக்குழி. இங்கு  பத்ரகாளியின் சாந்நித்யம். 

இங்கு தேவிக்கு குங்கும அர்ச்சனை நடத்துவர்..இங்கே சிறியதொரு மாரியம்மன் கோயில் இருக்கின்றது..

கரிவலந்தோடு:
முக்குழியின் அருகில் ஏற்றமும் இறக்கமும் இல்லாத இடம்.

கரி என்றால் யானை. யானைகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்ற இடம்.. 

யானைகள் தண்ணீர் அருந்துவதற்காகத் திரளுகின்ற பகுதி.. 

புது சேரி ஆற்றின் இந்தப் பகுதி சற்று ஓய்வெடுக்கும் இடம் மட்டுமே..

இங்கிருந்து புறப்பட்டால் கரிமலை அடிவாரம்.கடுமையான மலை ஏற்றத்துக்கு ஆயத்தமாகும் இடம் இது. 

முன்பெல்லாம்  இங்கே இரவில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. இப்போது பலரும் அங்கே தாவளம் போடுகிறார்களாம்..

சிறிது நேரம்
கரிவலந்தோட்டில் தங்கி விட்டு -

கரிமலையில்
பயணத்தைத் தொடர்வோம்..

ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
***

வியாழன், நவம்பர் 17, 2022

ஐயப்ப சரணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல்நாள்
 வியாழக்கிழமை


ஐயப்பனின் அடியார்கள்
மாலையணிந்து 
விரதம் ஏற்கின்ற நன்னாள்..

இன்றைய தினத்தில் 
ஐயப்பனின் திருவடிகளுக்கு
எளியேனின் பாமாலை..


சாட்சியும் நானென்று வருபவனே
சார்ந்தவர்க்கருள் நலம் தருபவனே
ஆட்சியும் நானென்று அருள்பவனே
ஹரிஹரசுதனே சரணம் ஐயா.. 1

ஹரிஹரசுதனே சரணம் ஐயா
சந்நிதி வந்திட அருள் புரிவாய்
சஞ்சலம் தீர்க்கும் சத்குருவே
சரணம் சரணம் சரணம் ஐயா.. 2

சரணம் சரணம் சரணம் ஐயா
சங்கடம் தீர்க்கும் திருமகனே
தணியா தாகம் மிக உண்டு
சந்நிதி அழகைக் காண என்று.. 3

சந்நிதி அழகைக் காண என்று
சந்ததம் ஆவல் இருந்தாலும்
சக்தி கொடுத்திடு மெய்யப்பா
சந்நிதி வந்திட ஐயப்பா.. 4

சந்நிதி வந்திட ஐயப்பா
சரணம் விளிப்பார் பலகோடி
சத்தியக் கோயிலின் கோமகனே
நீயும் வருவாய் மகிழ்ந்தோடி.. 5

நீயும் வருவாய் மகிழ்ந்தோடி
நினைத்தே வருவார் துயர் தீர்க்க..
அன்பில் மூழ்கி வருவோர்க்கு
அருள்முகம் காட்டி ஆதரிக்க.. 6

அருள்முகம்  காட்டி ஆதரிக்க
ஆதரவில்லா மானிடரை..
ஆதரவில்லா மானிடர்க்கு
அடைக்கலம் நீயே ஐயப்பா.. 7


அடைக்கலம் நீயே ஐயப்பா
படைக்கலம் உந்தன் பெயரப்பா
தடைக்கல் உடைப்பாய் ஐயப்பா
நடைகொடு நலங்கொடு ஐயப்பா.. 8

நடைகொடு நலங்கொடு ஐயப்பா
வழிநடைத் துணையே ஐயப்பா
வாழ்வினில் வாழ்ந்திட பேறு கொடு
வளர்நலம் எல்லாம் வாரி இடு.. 9

வளர்நலம் எல்லாம் வாரி இடு
வாழ்வில் வாழ்வாய் வாழ்பவர்க்கு
வருந்துயர் காத்துக் காவல் கொடு
துணையின்றித் துயரில் தாழ்பவர்க்கு.. 10

துணையின்றித் துயரில் தாழ்பவர்க்கு
சங்கரன் மகனே சக்தி கொடு
உனையன்றி உறுதுணை யாருமில்லை
உன்பேர் அதுபோல் வேறு இல்லை.. 11

உன்பேர் அதுபோல் வேறு இல்லை
உன்துணை இருக்கப் பிணி இல்லை..
தவநெறி சார்ந்தார் திரு விளக்கே
காரிருள் தீர்க்கும் மணி விளக்கே.. 12

காரிருள் தீர்க்கும் மணி விளக்கே
சிவநெறி காட்டும் நெய் விளக்கே
ஸ்ரீஹரி புதல்வா வழி காட்டு
தனிவழி அதனில் ஒளி காட்டு.. 13

தனிவழி அதனில் ஒளி காட்டு
தாயாய் நின்றே நலங் காட்டு
தந்தை வடிவாய் வழி காட்டு
தமிழே அமுதே சுவை கூட்டு.. 14


தமிழே அமுதே சுவை கூட்டு
தாள்மலர் பாடிட நலங்கூட்டு
வேதனை ஓடிட விதி மாற்று
விளங்கிடும் மங்கல ஒளியேற்று.. 15

விளங்கிடும் மங்கல ஒளியேற்று
மாமலை வந்திட முகங்காட்டு
மன்னவனாய் நின்று நலங்காட்டு
மாமலை வாசனே அருள் காட்டு.. 16

மாமலை வாசனே அருள் காட்டு
மலரடி நினைந்திடும் எனை வாழ்த்து
என்பிழை எல்லாம் பொறுப்பவனே
என்குலம் வாழ்ந்திட அருள் காட்டு.. 17

என்குலம் வாழ்ந்திட அருள் காட்டு
என் நிலை யாவும் அறிந்தவனே
எளியவர்க் கிரங்கித் திகழ்பவனே
சாட்சியும் நானென்று வருபவனே!.. 18
**

ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
***

சனி, நவம்பர் 17, 2018

பகவான் சரணம்

இன்று கார்த்திகை முதல் நாள்..

கனவிலும் நினைவிலும்

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியையே
தியானம் செய்து கொண்டிருக்கும்
நன்னெஞ்சங்களுக்கொரு பொன்னாள்!..

அந்த நன்னெஞ்சங்களுடன் சேர்ந்து

நாமும் சொல்லிடுவோம் -

ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...


பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..


பகவான் சரணம்.. பகவதி சரணம்..
தேவன் பாதம்.. தேவி பாதம்..
பகவானே... பகவதியே...
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் பாதம்.. தேவி பாதம்...
பகவானே.. பகவதியே...
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...



அகமும் குளிரவே அழைத்திடுவோமே..
சரணம் சரணம் ஐயப்பா..
அகமும் குளிரவே அழைத்திடுவோமே..
சரணம் சரணம் ஐயப்பா..

பகலும் இரவும் உன் நாமமே
ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா..

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா..
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா..

கருத்தினில் வருவாய்.
கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா..

கருத்தினில் வருவாய்.
கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா..


மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா..

மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா..

சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா...
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா...


ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..

ஐயப்பா... ஐயப்பா... ஐயப்பா...

ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..

பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா..
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா..



முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா...
முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா...

கற்பூர தீபம் உனக்கப்பா உந்தன் 
பொற்பதமலர்கள் எனக்கப்பா...
கற்பூர தீபம் உனக்கப்பா உந்தன்
பொற்பதமலர்கள் எனக்கப்பா...

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா...
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா..

நெய்யபிஷேகம் உனக்கப்பா..
உன் திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா மனம் வையப்பா..


பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

பகவான் சரணம் பகவதி சரணம்..
தேவன் பாதம் தேவி பாதம்..
பகவானே... பகவதியே..
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..


சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..

சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..
***
கலைமாமணி ஸ்ரீ K வீரமணி அவர்கள் வழங்கிய
காலத்தை வென்ற பாடல்..



ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
ஃஃஃ