நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 11, 2024

கழிப்பாலை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 28
 திங்கட்கிழமை

ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் சம தளமான நிலப்பரப்பு ..


கல்லணையில் இருந்து  கிழக்கு முகமாக வங்கக் கடல் வரை வடக்கு தெற்காக முக்கோணமாக விரிந்திருக்கின்றது மேடு, மலைகள் அற்ற நிலப்பரப்பு ..

காவிரியாள் கடலுடன் கலப்பதற்கு முன் - சோழ மண்டலத்தில் பல கிளைகளாகப் பிரிந்து
வளமாக்குகின்றாள்..


தான் கொண்டு வந்த 
களிமண், மணல்
மற்றும் வண்டல் 
 அனைத்தையும் விட்டு விட்டு கடலுக்குச் செல்கின்றாள்..

வண்டல் வடிநிலம் எனப்படும் - இப்பகுதி 
நீர் வளம் நிறைந்து இருப்பதால் இங்கு நெல் சாகுபடி அதிகம்.. மற்ற பயிர்களும் செழித்து வளரும்..

வெள்ளையன் வந்து இந்த நிலத்தைப் பார்த்து விட்டு டெல்டா என்றான்..

டெல்டா என்றால் அவனது மொழியில் முக்கோண வடிவ சமதளமான  நிலப்பரப்பு.. ஆற்றின் வடி நிலம்..

வடி நிலத்தின் பெருமையை நம் முன்னோர் அறிந்திருந்தனர்..

அதனால் தானே - ஞான சம்பந்தப் பெருமான் -
காவிரியின் வண்டல் வடிநிலத்தை இப்படியெல்லாம் போற்றுகின்றார்..

வண்டலார் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை.. (2/50/5)
(திரு ஆமாத்தூர்)

வண்டல் அங்கமழ் சோலை மா மறைக்காடு..  (2/91/10)

வண்டல் வாரி மிண்டு நீர் வயற் செந்நெல் (2/101/10) (திரு ஆரூர்)

வண்டல் மணல் கெண்டி மட நாரை 
விளையாடு மயிலாடுதுறையே.. (3/70/9)

 ஆனால் -

வெள்ளையன் வந்து தான் எல்லாருக்கும் கல்வி அறிவு உண்டாயிற்று.. நாடு நலமாயிற்று என்றெல்லாம் இங்கே அடி வருடிக் கிடக்கின்றனர் பலர்..

நாமும் நமது பெருமை மிகு - கழி, கழிமுகம், வண்டல், வடிநிலம் - என்ற சொற்களை விட்டு விட்டு 'டெல்ட்டா' என்று சொல்லிக் கொண்டு திரிகின்றோம்..


தஞ்சை மாவட்டத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே - முக்கோண வடிவ சமதளமான வண்டல் வடி நிலப்பரப்பு விளங்கும்..
 
பழைய தஞ்சை மாவட்டம்
ஆறு கடலில் கலக்குமிடத்தை ஒட்டிய நிலப்பகுதிக்குக் கழி - கழிமுகம் என்று பெயர்.

கழி - கழனி (வயல்) என்பன தொடர்புடைய சொற்கள்..

உப்பங்கழி என்பது கடலைச் சார்ந்துள்ள பகுதி.. இதுவும் தேவாரத்தில் பேசப்படுகின்றது..

திருக்கழிப்பாலை, திரு இடைக்கழி என்றே தலங்கள் இருக்கின்றன.. 


காவிரியின் வடி நிலப்பரப்பைக் குறிக்கும் கழி , கழனி எனும் சொற்கள் மூவர் திருப்பதிகங்களிலும் பல பாடல்களில் காணப்படுகின்றன..

கழனி, கழி, இடைக்கழி, கடைக்கழி, உப்பங்கழி என்று இருந்திருக்கலாம்.. 

நாம்  பலவற்றைத் தொலைத்து விட்டோம்..

காவிரியின் கடைமடை (கடைக்கழி) மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் இருக்கின்றது..

தலம்
திருக்கழிப்பாலை


காவிரி வடகரையின் திருத்தலம்.. 
காமதேனு வழிபட்ட சிறப்பினையுடையது..  


இறைவன் 
ஸ்ரீ பால் வண்ணநாதர்

அம்பிகை 
ஸ்ரீ வேதநாயகி

தீர்த்தம் கொள்ளிடம்
தலவிருட்சம் வில்வம்

மூவராலும் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..


மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே. 3/44/7
-: திருஞானசம்பந்தர் :-

நங்கையைப் பாகம் வைத்தார் 
ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் 
ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் 
தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்பனாரே.. 4/30/1
-: திருநாவுக்கரசர் :-

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும்  உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு  எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.. 7/23/2
-: சுந்தரர் :-

கழி நிலம் வாழ்க
கழிப்பாலை வாழ்க..

நன்றி
திருப்பதிகப்பாடல்கள்
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மார்ச் 05, 2023

அரத்துறை

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 21
  ஞாயிற்றுக்கிழமை

திருவட்டுறை..

திரு நெல்வாயில் அரத்துறை
எனப்பட்ட - தேவாரத் தலத்தின் தற்காலப் பெயர்.. 

திருவட்டுறை கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி  வட்டத்தில் அமைந்துள்ளது..
(படங்கள்: நன்றி விக்கி)


நடு நாட்டில் நிவா நதியின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்..

நடு நாட்டுத் திருத்தலங்களுள் இது முதலாவதாகும்..

மஹாவிஷ்ணு, வால்மீகி, சனைச்சரனுடன் அங்காரகன் வழிபட்டதாக ஐதீகம்..

நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது,  நந்தியம்பெருமான் தலையைச் சற்றே திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக தல வரலாறு..



ஞான சம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகை, மணிக் குடை, பொற் சின்னம் ஆகியன அருளப் பெற்ற திருத்தலம்.

ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ள தலம்..


இறைவன்
அரத்துறைநாதர் 
ஆனந்தீஸ்வரர் 
தீர்த்தபுரீஸ்வரர்


அம்பிகை 
அரத்துறைநாயகி
ஆனந்தநாயகி
திரிபுரசுந்தரி

தீர்த்தம் நிவா நதி, வெள்ளாறு
தலவிருட்சம் ஆலமரம்
(ஸ்வாமி அம்பாள் படங்கள்: நன்றி  அகில்)

சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்திகள் விளங்குகின்றன. 

அருகில் உள்ள திருத்தலம் : திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்).

பெண்ணாகடம் ரயில் நிலையத்தில் இருந்து 6 கிமீ. தூரத்தில் உள்ளது திருவட்டுறை..


எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரை மேல்
அந்தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே..
-: ஞானசம்பந்தர் :-

புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப்பானை அரத்துறை மேவிய
கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே..
-: திருநாவுக்கரசர் :-

கல்வாய் அகிலுங் கதிர்மாமணியுங்
கலந்து உந்திவரு நிவாவின் கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதோர்சூழல் சொல்லே.. 7/3/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, மார்ச் 03, 2023

திருக்கடவூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 19
வெள்ளிக்கிழமை

இன்று 
திருக்கடவூர் தரிசனம்


தலம்
திருக்கடவூர் வீரட்டம்

இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி

தலவிருட்சம் 
வில்வம், பிஞ்சிலம் (ஜாதி முல்லை)
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்


ஆதியில் பிரம்மன் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று..

மார்க்கண்டேயர் வழிபட்ட நூற்றெட்டாவது தலம்..

சிவ பூஜையின் போது மார்க்கண்டேயரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதால் காலன் உதைபட்டு வீழ்ந்தான்.. அதனால் வீரட்டத் தலம்..

நோய் நொடிகள் விலகி ஆயுள் விருத்தியாகவும்
மரண பயம் நீங்கவும் வழிபடப்படுகின்ற திருத்தலம்.. 

இதனை மெய்ப்பிப்பதே அபிராம பட்டருடைய வரலாறு..

கள்ள வாரணப் பெருமான் இத்தலத்தில் சிறப்புடையவர்.  அமிர்த கலசத்தை ஒளித்து வைத்துக் கொண்டு தேவர்களுடன் விளையாடியவர் இவரே..

கிழக்கு நோக்கிய வண்ணம் ஸ்ரீ அபிராமவல்லி..
மகாமண்டபத்தின் தெற்கு நோக்கிய சந்நிதியில் 
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி.. 


கால சம்ஹார மூர்த்தி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். 
வலப்புற மேல் திருக்கரத்தில் மழுவும் கீழ்த் திருக்கரத்தில் சூலமும்  விளங்குகின்றன.. 
இடப்புற மேல் திருக்கரத்தில் பாசமும் கீழ்த் திருக்கரம் திருவடியைச் சுட்டுவதாகவும்  விளங்குகின்றன.. 

இடது திருவடியால் உதையுண்ட யமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.. வீழ்ந்து கிடக்கும் யமனை சிவ பூதம் ஒன்று காலில் கயிற்றைக் கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி 
காணற்கரியது..


கால சம்ஹாரர் சந்நிதிக்கு எதிரில் உயிர் பெற்று எழுந்த யமதர்மன் கூப்பிய கரங்களுடன் ..

காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும்  வாழ்ந்திருந்த திருவூர்.. 

அப்பர் பெருமானும், ஞான சம்பந்த மூர்த்தியும் ஒருசேர இங்கு எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை இவ்வூருக்கு உண்டு..

சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகத்திற்குரிய நீர் - திருக்கடவூர் மயானம் கோயிலில் இருந்து அத்தலத்தின் தீர்த்தமான காசி தீர்த்தம் தனிப்பட்ட வண்டியில் கொண்டு வரப்படுகின்றது..

பங்குனி மாதம் அஸ்வினி அன்று இந்த தீர்த்தக் கிணற்றில் தீர்த்தவாரி..

மூவராலும்  பாடப் பெற்ற திருத்தலம்..

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் விளங்கும் நாற்பத்தேழாவது திருத்தலமாகும்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்.. இங்கே நவக்கிரகங்கள்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ராஜகோபுரத்தில் ஸ்ரீ அதிகார நந்தி தேவியுடன்.. காவல் நாயகமாக  ஸ்ரீ முனீஸ்வரன் ..

சித்திரை மாதம் மக நட்சத்திரத்தை அனுசரித்து நடத்தப்பெறும் பெருந்திருவிழாவில் ஆறாம் நாளன்று ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி  வீதியுலா எழுந்தருள்கின்றார்..

திருக்கடவூருக்கு அருகிலுள்ள சிவாலயங்கள்:
திருக்கடவூர் மயானம் 2 கிமீ 
திருஆக்கூர் 4 கிமீ
திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) 7 கிமீ 
திருக்கடைமுடி (கீழையூர்) 9 கிமீ
திருசாய்க்காடு (சாயாவனம்) 8 கிமீ
மயிலாடுதுறை - தரங்கம்பாடி  வழித்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ.

மார்க்கண்டேயரைப் போல " என்றும் பதினாறு " என்று எவராலும் ஆக  முடியாது.. 

ஆனாலும், 
நாம் எதிர்கொள்ளும்  துன்பங்களும் துயரங்களும் நம்மை வாட்டி வதைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீ அபிராம வல்லியையும் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும் வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்..


தேவாரத்தில் - கால சம்ஹாரம் பல இடங்களில் பேசப்பட்டிருந்தாலும் ,  பெருமக்கள் மூவருமே திருக்கடவூர் திருப்பதிகத்தில் தலபுராணத்தைக் குறித்துத் தமது திருவாக்கினால் சொல்லியிருப்பது சிறப்பு..

அதிலும்,
அப்பர் ஸ்வாமிகள் (4/107) பதிகம் முழுவதிலும் காலசங்காரத்தைப் பாடியருள்கின்றார்..


எரிதரு வார்சடை யானும் வெள்ளை எருதேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றை மாலை புனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்து அரனல்லனே.. 3/8/2
-: திருஞானசம்பந்தர் :-

மருட்டுயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயர்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உதைத் துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.. 4/107/1
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், பிப்ரவரி 14, 2019

வாழ்க வளமுடன்..

திருமருகல்.

சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருவூர்..

சீரும் சிறப்பும் மிக்க அவ்வூரில் பெரும் சிவாலயம் ஒன்று இருந்தது..


இறைவன் - ஸ்ரீ ரத்னேஸ்வரர்
அம்பிகை - வண்டுவார்குழலி
தல விருட்சம் - கல்வாழை
தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம்..

வங்கக் கடல் துறை நோக்கிச் செல்லும் சாலை திருமருகல் வழியே சென்றதனால் - திருக்கோயிலின் அருகே வழிச்செல்வோர் தங்குவதற்கு மடமும் அன்ன சத்திரமும் இருந்தன.

அறமும் மறமும் தழைத்திருந்தது - திருமருகலில்!..

அவனுக்கும் இவளுக்கும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை!.. -  என்று இருந்தாலும், 

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த பண்பாடு தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்த பொற்காலம்!.. 

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டாதிருந்து தான் - 
திருமாங்கல்ய தாரணம் எனும் மங்கலப் பேற்றினை எய்தவேண்டும்.

அப்படியின்றி - மணம் செய்து கொள்ளும் முன்னரே - மனம் தடுமாறி ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டுவது - பெருங்குற்றம் - மகாபாவம் என்பதை அந்த காலத்தின் இளையோர் அறிந்திருந்தனர்..

இப்படியெல்லாம் கட்டுப்பாடும் எல்லாவற்றுக்கும் மேலாக சுய ஒழுக்கமும் மேவியிருந்த காலகட்டம் அது!..

மது உண்டு மயங்கிய வண்டுகளைக் கண்டிருந்தனரே - அன்றி.,
மது உண்டு கிறங்கிய மண்டுகளைக் கண்டதில்லை யாரும்!..

தென்னையும் பனையும் கனத்த குலைகளினால் தவித்திருந்தன!..

இப்படி - மண்ணும் மக்களும் பசுமையுற்றிருந்த நாட்கள் - ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்!.. 

திருமருகலின் அருகில் பெருங்கிராமம். 
அங்கே பெரும் செல்வந்தன் ஒருவன். 
அவனுக்குப் பல ஊர்களிலும் வணிக நிலையங்கள் இருந்தன.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய -  துறைமுகங்களின் வழியாக பல நாடுகளுக்கும்,

வயதாகி இறந்த யானைகளின் தந்தம், 
இயற்கையாக உதிர்ந்த மயில் தோகை,
இயற்கை எருவில் விளைந்த
உயர்ரகச் செந்நெல்,கார் அரிசி, மாப்பிள்ளைச் சம்பா,
தென்பாண்டிச் சீமையின் வெண்முத்து, 
அரசு அனுமதியுடன் பெறப்பட்ட சந்தனம் மற்றும் செம்மரக் கட்டைகள், 
விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து பெறப்பட்ட ஏலக்காய், கிராம்பு 

- என, பலவிதமான பொருட்களை ஏற்றுமதி செய்தான். 

அவ்வண்ணமே பலநாடுகளில் இருந்தும் நல்ல பொருட்களை அரசு அனுமதி பெற்று முறையான சுங்கத் தீர்வைகளைச் செலுத்தி இறக்குமதி செய்தும் பெரும் வணிகம் செய்து வந்தான்..

அதேசமயம் - 

உண்பவர் உயிருக்கு உலைவைக்கும் நச்சுப்பொருட்களால் செய்யப்பட்ட  உணவு வகைகளை மலிந்த விலைக்கு இறக்குமதி செய்ததில்லை.. 

முச்சந்தியில் ஆடல் பாடல் கும்மாளங்களுடன் விளம்பரம் செய்ததில்லை... மாயாஜால வார்த்தைகளால் அப்பாவி மக்களை ஏமாற்றியதும் இல்லை..

கண்டதையும் மக்கள் தலையில் கட்டி - அதன் மூலம் பணப்பெட்டியை நிரப்பிக் கொள்ளும் மாபாதகத்தை ஒருநாளும் செய்ததே இல்லை..

யாராவது நாக்குக்கு அடிமையாகி - சீனத்திலிருந்தும் யவனத்திலிருந்தும் உணவுப் பண்டங்களை வரவழைத்துத் தரும்படியாகச் சொன்னால் - 

இங்கே விளையுது - கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை - அப்படின்னு. அதை வாங்கித் தின்னு நல்லபடியா உடம்பைப் பாத்துக்குங்க!..
அதை விட்டுட்டு.. சீன - யவன சங்கதி எல்லாம் உங்களுக்கெதுக்கு!.. அவன் பாம்பு திங்கின்றான்!.. பல்லி திங்கின்றான்!..

நமக்குக் காளை சாமி சந்நிதியில!...
அவனுக்குக் காளை சமையல் பாத்திரத்தில... 
நாக்குக்கு அடிமையாகி விட்டால்
எதிர்காலத்தில் நாயைக் கூட கொண்டு வருவான்...
அதெல்லாம் உங்களுக்குத் தேவையா!?..

- என்று, இதமாகப் பேசி அனுப்பிவிடுவான்..

அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவன்.. 

ஆனாலும், அந்தஸ்து கௌரவம் - என்பன அவனை ஆட்டிப் படைத்தன.. 

குடும்ப நலத் திட்டங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் வணிகன் ஏழு பெண் மக்களுக்குத் தந்தையாக இருந்தான்..

இத்தகைய செல்வந்தன் - தன்னுடைய பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் சகோதரியின் மகனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாக வாக்களித்து இருந்தான். 

அது பல ஆண்டுகளுக்கு முன்!.. அப்போது வணிகன் - சாதாரணன்!..

இப்போதோ - அவன் வீட்டின் காவல் நாய்க்குக் கூட தங்கச் சங்கிலி!.. 

பட்டு, பொன், வைரம் - என சர்வாலங்காரத்துடன் திகழ்ந்த தன் மகள்களுள் எவரையும் - இன்னும் ஏழையாகவே இருக்கும் தன் சகோதரி மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க அவனுக்கு விருப்பமே இல்லை!..

அதனால், ஒவ்வொரு பெண்ணாக - பொன் பொருளின் வளமை கருதி - பிறருக்கு திருமணம் செய்து வைத்தான். 

வளமை குன்றியதால், இளமை நலம் இருந்தும் உறவினனான மருமகனை மனதிலிருந்தும் உறவு முறையிலிருந்தும் ஒதுக்கி வைத்தான்.

வாக்குத் தவறிய - தகப்பனின் மனப்போக்கினை உணர்ந்தாள் - ஒரு மகள். 

தன் தகப்பன் முன்னரே வாக்கு கொடுத்திருந்தபடிக்கு -  
...மனம் நிறைந்த மாமன் இனியவன்.. இனி அவனே எனக்கு மணாளன்!
- என, மனதில் கொண்டு, பெற்றோர் அறியாதபடி அவனுடன் வீட்டை  விட்டு வெளியேறினாள். 

ஒருவருக்கொருவர் துணையென - நெடுவழிச் செல்லும்போது மாலை மயங்கி இரவாயிற்று. 

திருமருகல் திருக்கோயிலின் அன்ன சத்திரத்தில் இரவு சாப்பாடு. 

பொழுது எப்படி விடியுமோ!.. - என்ற கவலை.. எனினும் வயிறார சாப்பிட்டனர்.

அருகே இருந்த தங்கும் மனையில் இருவரும் தங்கினர்...

தர்ப்பைப் புல் ஒன்றினை நடுவில் அரணாக வைத்து விட்டு இருவரும் ஒருபுறமாகத் துயின்றனர்.

நடந்து வந்த களைப்பில் ஆழ்ந்து தூங்கிய - அந்த இளையோர் நெஞ்சில்...
என்னென்ன கனவுகளோ!.. - யாரறியக்கூடும்!...   

பொழுது புலரும் நேரம்.

சட்டெனத் துடித்து எழுந்தான் அந்த இளைஞன்.. உடன் வந்த காதலாளும் பதறி எழுந்தாள்..

அவனது கால் புறத்தில் - நாகம் ஒன்று படமெடுத்து நின்றிருந்தது - அவனைத் தன் கொடும் பற்களால் தீண்டி விட்டு...

வீறிட்டு அலறினாள் - மங்கை நல்லாள்..

நாகம் தீண்டியதால் -  விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்த வேளையிலும் - தன்னுடன் வந்த காதலிக்கு - ஏதும் துன்பம் நேரக்கூடாது!.. என, பரிதவித்தான் அந்த இளைஞன்... 

அவனது கண்களில் நீர் வழிந்த வேளையில் வாயிலும் நுரை வழிந்தது..

அடுத்த சில நொடிகளில் -
இறைவா!.. - என்ற வார்த்தையுடன் அவனை விட்டு உயிர் பிரிந்தது.

என்ன செய்வாள் - அந்தப் பேதை!.. 

நீயே என் துணை.. - என, உன்னை அழைத்து வந்து - காலனுக்கு கையளித்து விட்டேனே!.. நீயன்றி இனி எனக்கு வாழ்வு தான் ஏது!.. இனியும் இந்தக் கொடுமையைத் தாங்குவேனோ!..

- எனப் பதறினாள்.. துடித்தாள்... கதறினாள்.. கண்ணீர் வடித்தாள்..

ஒருவரை ஒருவர் மனதில் கொண்டோம். வழித்துணையாய் நடந்து வந்தோம். நாங்கள் செய்த பாவந்தான் என்ன!.. ஏதிலியாக ஆனதுவும் முறையோ!..

முன்அறியாத ஊரில், அரவந்தீண்டி மாண்டு கிடக்கும் அன்பனை -ஆரத்தழுவி

அன்பே!.. - என்று அழுவதற்குக்கூட - உரிமை அற்றவளாக 

- திருக்கோயிலினுள் வீற்றிருக்கும் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள்...

அத்தான்,... அத்தான்..
என் அத்தான்.. என்னகத்தான்..
இனி எனக்காகத்தான்.. - என்று நான் இறுமாந்து திளைப்பதற்குள்
மண்ணகந்தான் போதுமென விண்ணகத்தான் ஆயினையே!...

இந்த அபலையின் கதறல்  அவள் செய்திருந்த நல்வினையின் பயனாக -  
அதே இரவில் திருத்தல தரிசனத்திற்காக - திருமருகலுக்கு வந்து, 

அருகிலேயே, வேறொரு திருமடத்தில் அடியார்களுடன் எழுந்தருளியிருந்த அந்த ஞானச்செல்வனின் திருச்செவிகளை எட்டியது.


அந்த ஞானச்செல்வன் - திருஞானசம்பந்தப் பெருமான்!..  

இவளது அழுகை ஒலியால் திருமடம் விழித்துக் கொண்டது...

அவளது ஆற்றாமையும் கதறலும் காதுகளில் விழ - ஞானசம்பந்தப் பெருமான் இரக்கங்கொண்டார். 

உடனிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்றனர். .. வெளியே - நடந்ததை அறிந்து வந்து பெருமானின் திருமுன்பாகக் கூறினர்.

உடனே - தாம் தங்கியிருந்த திருமடத்தினின்று வெளியே வந்தருளினார் ஞானசம்பந்தப் பெருமான். 

ஆற்றாது அழுது கொண்டிருந்த மங்கை நல்லாளின் கண்ணீரைக் கண்டு பெருமான் கழிவிரக்கம் கொண்டார்... 

அதற்குள் ஊர் மக்களும் விஷம் தீண்டிய விஷயம் அறிந்து திரளாகக் கூடிவிட்டனர்...


அஞ்சேல்!.. - என, அபயம் அளித்த பெருமான் - 
திருக்கோயிலைத் திறக்குமாறு அங்கிருந்தோரைப் பணித்தார்...

அந்த அளவில் திருக்கோயிலின் திருக்கதவங்கள் திறக்கப்பட்டன. 


இறைவனின் திருமுன்னிலையில் - மாண்டு கிடந்த  இளைஞனின் உடல் கிடத்தப் பெற்றது.. 

ஒரு கணம் பெருங்கருணையுடன் உற்று நோக்கினார்.. 


ஞானசம்பந்த மூர்த்தியின் திருக்கரங்களில் இருந்த பொற்றாளங்களில் இருந்து நாதமும் பெருமானிடமிருந்து கீதமும் பிறந்தன...

சடையா எனுமால் சரண்நீ எனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே!.. (2/18)

- எனத் தொடங்கி திருப்பதிகம் பாடியருளினார். 

திருக்கடைக்காப்பு அருளுவதற்குள்
மாண்டு கிடந்தவன் மீண்டு எழுந்தான்...

உயிர்த்தெழுந்த அன்பனைக் கண்டு அகமும் முகமும் மலர்ந்தாள் - மங்கை.

பேருவகைப் பெருக்கினால் சம்பந்தப்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்...

ஆற்றாது அழுத கண்ணீர் ஆனந்தக் கண்ணீரானது!..

பொழுது புலர்ந்து கொண்டிருந்த வேளையில்- 
பெருவணிகன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான்...

தன் பிழை தனை உணர்ந்த வணிகன்
தன்னைப் பொறுத்தருளுமாறு - தலை வணங்கி நின்றான்..

அனைவருக்கும் நல்லுரை வழங்கி வாழ்த்திய - ஞானசம்பந்த மூர்த்தி, 
அடுத்து வந்த நல்ல வேளைதனில் நங்கைக்கும் நம்பிக்கும் இறைவன் சந்நிதியில்  திருமணம் செய்வித்து அருளினார்... 


நிலை தவறாதது அன்பு.. அதிலும்
நெறி தவறாதது காதல்...

அத்தகைய காதலை சான்றோரும் ஆன்றோரும் அங்கீகரித்தே வந்துள்ளனர்..
அதற்கு இறைநெறியும் துணையாகவே இருந்திருக்கின்றது..

நெறி தவறாத அன்பினைத்
தெய்வம் நிறைவேற்றித் தரும்!.. 

- என்பதே திருமருகலின் தல வரலாறு நமக்கு உணர்த்தும் திருக்குறிப்பு..

அப்பர் பெருமானும் திருப்பதிகம் செய்தருளிய இத் திருத்தலம் நாகப்பட்டினத்துக்கு அருகில் நன்னிலம் நாகூர் வழித்தடத்தில் உள்ளது...


பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பர மாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.. (5.88)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ